World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: ஆசியா :
இலங்கை
Sri Lankan LSSP offers its services to big business as an advocate of peace இலங்கை லங்கா சமசமாஜக் கட்சி சமாதானத்தின் வக்கீல்களாக தமது சேவையை பெரும் வியாபாரிகளுக்கு அர்ப்பணித்துள்ளதுBy Nanda Wickremasinghe and Desmond Perera இலங்கையில் நீண்ட உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமாதான முன்னெடுப்புகளின் தற்போதைய நகர்வுகள் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) அரசியல் சீரழிவை மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்டியுள்ளது. லங்கா சமசமாஜக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தின் அடிப்படையில் முன்னொருபோது தீவின் மிகப்பெரும் தொழிலாளர் வர்க்கக் கட்சியாக இருந்து வந்துள்ளது. 1964இன் பின்வாங்கலின் ஒரு நீண்ட காலப்பகுதியை அடுத்து, ல.ச.ச.கட்சி சோசலிச அனைத்துலக வாதத்தின் அடிப்படைகளை கைவிட்டதோடு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்துகொண்டது. அவ்வாறு செய்ததன் மூலம், அது கொழும்பில் உள்ள ஆளும் கும்பலுக்கு உற்சாகமூட்டிய சிங்களப் பேரினவாதத்தை வெளிப்படையாகவே தழுவிக் கொண்டது. ல.ச.ச.கட்சியின் காட்டிக்கொடுப்பும் பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கத்தில் அது அங்கம் வகித்தமையும் இனவாதப் போக்குகளுக்கு நேரடியாகவே உதவியளித்ததோடு, விரக்தியடைந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு மத்தியில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் (LTTE), கிராமப்புற தென்பிரதேசத்தில் வேலையற்ற சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் மக்கள் விடுதலை முன்னணியையும் (JVP) ஸ்தாபிப்பதற்கு வழியமைத்தது. கொழும்பு அரசாங்கம் அவநம்பிக்கையான பேரினவாத உணர்வுகளை பயன்படுத்தி வந்தமை, முடிவில் 1983 இல் ஒரு உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு வழியமைத்தது. இது தொழிலாளர் வர்க்கத்துக்கு அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு குறைந்த பட்சம் 60,000 பேர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் மற்றும் அகதிகளாகவும் உள்ளனர். இன்று, எவ்வாறெனினும், பெரு வர்த்தகர்களின் அக்கறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த யுத்தம் பொருளாதாரத்துக்கான முக்கியத்துவத்தையும் அனைத்துலக மூலதனத்தை கவர்வதற்கான சாதகங்களையும் நாசம் செய்தது. நாடு தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்தமுடியாத நிலையில் இருப்பதோடு, கடந்த வருட பொருளாதார வளர்ச்சி பாதகமானதாக இருக்கின்றது. இலங்கை இராணுவம் கடந்த மூன்று வருடங்களாக ஒரு தொடர்ச்சியான பெரும் தோல்விகளை கண்டதன் பேரில் ஒரு இராணுவ தீர்வை அடைவதும் சாத்தியமற்றதாகியது. இதன் பெறுபேறாக வர்த்தக கூட்டுத்தாபனங்களின் தேவைகள் அதிகளவிலும், கட்டாயமாகவும் யுத்தத்துக்கு ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்காக அழுத்தம் கொடுத்து வருகின்றது. பெரு வல்லரசுகள் தீவில் தொடரும் ஸ்திரமற்ற நிலைமை, கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்த விளிம்பில் இருந்து கொண்டுள்ள தெற்காசியாவில் மேலும் பதட்ட நிலைமைகளை அதிகரிக்கும் என்பதையிட்டு அக்கறை கொண்டுள்ளார்கள். மீண்டும் மீண்டும் தலையீடு செய்யும் அமெரிக்க ஐரோப்பிய உயர்மட்ட உத்தியோகத்தர்கள் விடுதலைப் புலிகள் தீவின் வடக்கிலும் கிழக்கிழும் ஒரு தனித் தமிழ் அரசுக்கான தமது கோரிக்கையை கைவிட்டு கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு செல்லவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி வந்துள்ளனர். மே மாதத்தில் தாய்லாந்தில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளமாக இருசாராரும் கடந்த பெப்பிரவரியில் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். பேச்சுவார்த்தைகளுக்காக உத்தேசிக்கப்பட்ட திகதி தொடர்ச்சியாக பின்போடப்பட்டு வருகிறது. உண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணியும் (UNF), யுத்தத்திற்கு முடிவு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்த ஏனைய அரசாங்கங்களைப் போலவே அதே அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. யுத்தத்தைத் தூண்டிவிட்டதோடு பேரினவாத உணர்வுகளை ஊட்டி வளர்த்த ஆளும் வர்க்கம், பெளத்த பிக்குகள், இராணுவம், அரச அதிகாரத்துவம் மற்றும் யுத்தத்தில் இலாபமடைந்த வியாபாரிகள் போன்ற பிரிவுகளின் தலைமையில் சக்திவாய்ந்த பேரினவாத குழுக்களையும் உருவாக்கி வந்துள்ளன. இது பெரும் சிங்களக் கட்சிகளான விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் (SLFP) குறிப்பிடத்தக்களவு செல்வாக்குச் செலுத்துகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னர், குமாரதுங்க பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமிடுவதன் பேரில் பாராளுமன்றத்தின் ஊடாக அரசியல்யாப்பு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்தார். அவர் இந்தத் திட்டங்களை ஒரு காட்டிக் கொடுப்பு எனக் கண்டனம் செய்துவந்த பெளத்த பெரும் தலைவர்கள் மற்றும் பலவித சிங்களத் தீவிரவாத கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு அடிபணிந்து போன யூ.என்.பி.யால் இடைநிறுத்தப்பட்டார். இன்று சப்பாத்து அடுத்த காலில் உள்ளது. விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளுக்கு செல்ல முயற்சிக்கும் அதேவேளை, அரசாங்கம் நாட்டை விடுதலைப் புலிகளுக்கு விற்கப்போவதாகவும் தீவை பிரிக்கத் திட்டமிடுவதாகவும் குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணியான பொதுஜன முன்னணியும் ஜே.வி.பி.யும் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலைமையில், பொதுஜன முன்னணியின் கூட்டணிப் பங்காளியான ல.ச.ச.கட்சி யுத்தத்துக்கு முடிவு தேடும் பெரும் வர்த்தகர்களில் மிகவும் சக்திவாய்ந்த பிரிவினருக்கு மிகவும் அக்கறைக்குரிய வக்கீலாக முன்னணிக்கு வந்துள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் உடனடியாக அரசாங்கத்தை உற்சாகப்படுத்திய ல.ச.ச.கட்சி: "ஒரு பிரதமர் என்ற வகையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சமாதானத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட திரு. ரணில் விக்கிரமசிங்க நிலைமையை முன்னெடுப்பதில் தோல்வி காணவில்லை. இந்த விடயத்தில் அவர் காலம் தாழ்த்துபவராக இருக்க முடியாது," எனப் பிரகடனம் செய்தது. ல.ச.ச.கட்சியின் தலைவர் பட்டி வீரக்கோன், எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணியால் புரிந்துணர்வு உடன்படிக்கையை நிராகரிக்க முடியாத அதேவேளை, "முன்பு இடம்பெற்றதைப் போலவே தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் விடயத்துக்கு அக்கறை செலுத்த வேண்டிய கடமையையும் கொண்டுள்ளது" என சுட்டிக் காட்டினார். ல.ச.ச.கட்சி புரிந்துணர்வு உடன்படிக்கையின் அம்சங்களை எதிர்ப்பதற்காக குமாரதுங்கவை கண்டித்தது. அது "உடன்படிக்கை பற்றிய ஒரு கலந்துரையாடலில் ஒழுங்குமுறை மற்றும் செயல்முறை விடயங்கள் பெரும் அக்கறைக்குரியனவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடி அவசியமாகியிருப்பது, ஒரு தகுந்த கலந்துரையாடலும் மதிப்பீடும் முன்னேற்பாடுகளும் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை தகுந்த முறையில் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கடமையில் அவர்களின் தார்ப்பரியமுமாகும்..." எனச் சுட்டிக்காட்டியது. தேசிய ஐக்கியத்துக்கான ஒரு அழைப்பு வீரக்கோனும் ல.ச.ச.கட்சியின் தலைவர்களும் பேச்சுவார்த்தைகளுக்கான அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு ஆதரவளிப்பதன் பேரில் ஒரு "முற்போக்கான மேடைக்கு" சம்பிரதாய பூர்வமாக அழைப்புவிடுக்கின்றனர். எவ்வாறெனினும், அதனது பிரதான சேவை, ஒரு சமாதானத் தீர்வுக்காக பிரதான கட்சிகளுக்கிடையில் ஒரு கூட்டை உருவாக்குவதற்கு அழைப்புவிடுக்கும் பெரு வர்த்தகர்களின் பிரதான கோரிக்கைக்கு குரல் கொடுப்பதாக இருந்து வந்துள்ளது. ஆளும் கும்பலின் மிகவும் மதிநுட்பமான உறுப்பினர்கள், சிங்கள தீவிரவாதத்தின் செல்வாக்கைத் தனிமைப்படுத்துவதன் பேரில் ஒரு "தேசிய ஐக்கியத்தைப்" பற்றி ஆராய்கின்றார்கள். ஐக்கிய தேசிய முன்னணியும், பொதுஜன முன்னணியும் "இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இருகட்சிகளும் சார்ந்த விடயமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்ட வீரக்கோன், "ல.ச.ச.கட்சி இந்த நோக்கில் உறுதியுடன் இருப்பதாக" வலியுறுத்தியுள்ளார். 1998ன் பின்னரான காலப்பகுதியில், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் ஒரு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த வர்த்தகக் கைத்தொழில் சம்மேளனம், பகைமையைத் தவிர்த்து ஒரு பொதுவான அணுகுமுறையில் செயற்படக் கோரியது. ல.ச.ச.கட்சி அந்தக் கூட்டத்தில் பங்குபற்றியது மட்டுமல்லாமல் கூட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் ஒழுங்கு செய்து அதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டதை அடுத்து விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதிய வீரக்கோன், யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்காக ஒரு அனைத்துக் கட்சி குழுவை ஸ்தாபிக்குமாறு வெறுமனே கேட்டுகொண்ட போதிலும், உண்மையில் அது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான பின்னணியை வழங்குவதாகும். பிரதமர் அதை முதலில் வரவேற்று பின்னர் நிராகரித்ததையடுத்து, வீரக்கோன் "பாராளுமன்றத்தையும் சிவில் சமூகத்தையும்" சமாதான முன்னெடுப்புகளில் சேர்த்துக்கொள்ளுமாறு கோரி அரசாங்கத்துக்கு மேலும் ஒரு அழைப்பு விடுத்தார். பழமைவாத யூ.என்.பி. தலைவருக்கு சமாதான முன்னெடுப்புகளில் பங்கேற்குமாறு கோரும் அவரது பரிதாபமான வேண்டுகோள்கள், வீரக்கோனதும் ல.ச.ச.கட்சியினதும் தலைவிதியில் இருந்து மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும். இந்தக் கட்சி அதிகாரத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதோடு ஒரு தொழிற்சங்கக் கருவியாகவும் உள்ளது. இதற்குதொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு மதிப்போ அல்லது ஆதரவோ கிடையாது. 2001 பொதுத் தேர்தலின் போது, ல.ச.ச.கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒரு பெளத்த பிக்கு மாத்திரமே வெற்றி பெற்றார். எனவே ல.ச.ச.கட்சியின் இருப்பில் ஒரு பயன்பாடற்ற நிலைமையைக் கண்ட குமாரதுங்க, பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து வீரக்கோனின் பெயரை அழித்து விட்டதோடு அதன் மூலம் அவரது பாராளுமன்ற ஆசனத்திலிருந்தும் அவரை வெளியேற்றினார். "சமாதானத்துக்கான" ல.ச.ச.கட்சியின் அழைப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளைக் காப்பதற்கோ அல்லது பிற்போக்கு யுத்தத்துக்கு எதிராக அவர்களை அணிதிரட்டுவதற்கோ எதனையும் செய்யவில்லை. இந்தக் கட்சி, இலங்கையின் முதலாளித்துவ அரசை பாதுகாப்பதோடு பிராந்தியங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்கும் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு காண்பதற்காக முயற்சித்து வரும் ஆளும் வர்க்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றது. இந்தத் திட்டங்கள், தொழிலாளர் வர்க்கத்தை கூட்டாகச் சுரண்டுவதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் கும்பல்களுக்கிடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு தயாரிப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மேலும் இனரீதியான பிளவுகளுக்கு வழிவகுப்பதோடு பதட்ட நிலையினதும் முரண்பாடுகளினதும் ஒரு புதிய சுற்றுக்கு வழியமைக்கும். ல.ச.ச.கட்சி அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றபோதும், அது இலங்கை அரசையும் ஆயுதப் படைகளையும் பாதுகாக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. வீரக்கோன், பிரதமருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையானது விடுதலைப் புலிகளின் இராணுவ விநியோகங்களை தடுக்கும் நடவடிக்கையில் இருந்தோ அல்லது அதன் "கொள்ளைகளையும் கடத்தல்களையும்" பரிசோதனை செய்வதில் இருந்தோ இராணுவத்தை தடுக்கக் கூடாது என சுட்டிக்காட்டியிருந்தார். "இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்துக்குள் விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபாடங்களை நகர்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக எதிர் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆயுதப் படைக்கு அதிகாரமளிக்க வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். ல.ச.ச.கட்சி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் ஆரம்பிப்பதற்கு பிரதான தடையாக இருந்து கொண்டுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்குவதற்கு ஆதரவளிக்கிறது. தடையை விலக்குவதை எதிர்ப்பதே சிங்களத் தீவிரவாதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் பிரதான இலக்காகவுள்ளது. தடை விலக்கலானது "தவிர்க்க முடியாததாக" இல்லாத போதிலும், அது பேச்சுவார்த்தைகளுக்கான பாதையில் குறுக்கே நிற்கக்கூடாது எனப் பிரகடனம் செய்யும் அதேவேளை, ல.ச.ச.கட்சி அது விடுதலைப் புலிகள் "பயங்கரவாதத்தை" கைவிடுவதோடு இணைந்ததாக அமையவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது -இது விடுதலைப் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இந்தக் கட்சி, எந்தவொரு தீர்வும் "வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகம் ஒரு ஆயுதம் தரித்த விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படுவதை" உள்ளடக்கியிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளது. ல.ச.ச.கட்சி சோசலிச அனைத்துலக வாதத்தின் அடிப்படைகளை காட்டிக்கொடுத்து கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களின் பின்னரும், பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தினுள் நுளைந்த பின்னரும், அது தம்மை முதலாளித்துவ அரசியலின் வரம்புக்குள் முழுமையாகத் திணித்துக்கொண்டது. 1964ல் "வளர்ந்துவரும்" ஸ்ரீ.ல.சு.கட்சியுடனான தமது கூட்டணி வலதுசாரி யூ.என்.பி. ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு அத்தியாவசியமானது என ல.ச.ச.கட்சி வாதிட்டது. இன்று ல.ச.ச.கட்சியின் தலைவர்கள் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் யூ.என்.பி.யின் "முற்போக்கான" பாத்திரத்துக்காக அதை கவனமாகப் பாராட்டுகின்றனர். 1970களில் ல.ச.ச.கட்சி உள்நாட்டு யுத்தத்தை தோற்றுவித்த நாட்டின் வேறுபாடுகள்
நிறைந்த அரசியல் யாப்பை அமைப்பதிலும் ஏனைய தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கும் கருவியாக செயற்பட்டு வந்தது.
1994ல் ல.ச.ச.கட்சித் தலைவர்கள் யுத்தத்துக்கு முடிவுகட்டுவதாக வாக்குறுதியளித்த போதிலும் அதை உக்கிரமாக்கிய
குமாரதுங்கவின் நிர்வாகத்தில் அமைச்சர் பதவி வகித்துவந்தனர். இப்போது தனது சீரழிவிலிருந்து மீள்வதன் பேரில்,
இம்முறை "சமாதானத்தின்" வக்கீல்களாக மீண்டும் ஒருமுறை தமது சேவையை ஆளும் வர்க்கத்துக்கு அர்ப்பணித்துள்ளது. |