World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

The Geneva Convention and the US massacre of POWs in Afghanistan

ஜெனிவா உடன்படிக்கையும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானிலான போர்க் கைதிகளின் படுகொலையும்

Statement of the WSWS Editorial Board
7 December 2001

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் முதல் தேதி மஸார்-இ-ஷரீப் (Mazar-I-Sherif) வெளியிலுள்ள கலா-இ-ஜங்கி (Qala-I-Jangi) சிறை கோட்டையிலிருந்து அமெரிக்க-பிரிட்டிஷ் வடக்கு கூட்டணி தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த 80 கைதிகள் தாங்கள் பாதுகாப்பாக பதுங்கியிருந்த நிலத்தின் கீழேயிருந்து வெளிவந்து தங்களை தாக்கியவர்களிடமே சரணடைந்தனர். நவம்பர் 25 ஞாயிறு முதல் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சிறப்பு படைகள், தளபதி ரஷீத் டொஸ்டும் (Rashid Dostum) தலைமைதாங்கும் வடக்கு கூட்டணிக்கு ஆதரவான படைகளுடன் சேர்ந்தன. இப்படைகள் முந்திய தினம் Kunduz (குண்டூஸ்) நகரத்தில் சரணடைந்த 400 முதல் 800 ஆப்கனல்லாத தலிபான் மீது ஒரு முகமானதும் பயங்கரமானதுமான தாக்குதல் நடத்தின. இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட அமெரிக்க போர் விமான தாக்குதலால் கொல்லப்பட்ட தலிபான் சிறைக் கைதிகள் ஒரு புரட்சி செய்தனர் என்று அமெரிக்க, பிரிட்டன் மற்றம் வடக்கு கூட்டணி கூறிற்று.

ஆனால் அமெரிக்க மற்றும் வடக்கு கூட்டணி படைகள், கோட்டை கொத்தளங்களிலிருந்து சிறைக் கைதிகள் மீது நடத்திய தாக்குதலினால் இறந்துபோனவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் காட்டிய செய்திகள் இப்படுகொலைக்கு சாட்சியானது. அவர்கள் உயிர் பிழைத்தவர்களையும் ஒழித்துக்கட்டினர். மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புக்கள் ஜெனிவா உடன்படிக்கையையும் மற்ற சர்வதேச போர் ஒப்பந்தங்களையும் மீறிய இந்த செயல்களை விசாரிக்க கோரிக்கை விடுத்தன.

கலா-இ-ஜங்கி கோட்டையில் நடைபெற்ற படுகொலைகளை விசாரிக்கக்கோரி சர்வதேச மன்னிப்பு சபையும் (Amnesty International) மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கமும் (Human Rights Watch) அறைகூவல் விடுத்தன. ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் கமிஷனரான மேரி ரொபின்ஸன் (Mary Robinson) இவ்வாறே அறைகூவல் விடுத்தார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கண்ட எல்லா கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டன. அமெரிக்க தொலைத்தொடர்பு சாதனங்கள் இந்த பயங்கர நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளவேயில்லை.

ஆனால் மஸார்-இ-ஷரீப் சிறைக்கு வெளியே செய்யப்பட்ட படுகொலையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. பிரிட்டிஷ் பத்திரிகையான கார்டியன் பின்வருமாறு கூறுகிறது: எந்த வகையான போரிலும் ஒரே ஒரு பயங்கர சம்பவம் அந்த போருக்கே ஒரு திருப்புமுனையாக அமையும்; கலா-இ-ஜங்கி கோட்டை படுகொலைகள் அவ்வாறு திருப்புமுனையாக அமையாதா என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உதவி நிறுவனங்களை சேர்ந்தவர்களால் வடக்கு கூட்டணி படையாலும், அமெரிக்காவின் குண்டுவீச்சாலும் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை சேகரித்தை பற்றிய படங்கள் உலகெங்கிலும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன''.

நூற்றுக்கணக்கான சிறைக் கைதிகளை கொன்ற கொடூரமான சம்பவத்தைப்போல வேறெந்த போர்க் குற்றமும் இவ்வளவு தெளிவாக அமெரிக்க ராணுவத்தால் நிகழ்த்தப்படவில்லை. வியட்னாமில் மைலாய் (Mylai) பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு காரணகர்த்தாவாக ராணுவம் மற்றும் அதிகாரிகள் காரணம் கற்பிக்கமுயன்றது கடினமானது. அதற்கு பொறுப்பான வில்லியம் காலி (William Calley) அமெரிக்க நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

இம்முறை, இந்த படுகொலையின் முன்னரும் பின்னரும் அமெரிக்க ராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அறிக்கைகளும், செயல்பாடுகளும் இச்செயலானது ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்காவின் கொள்கைவகுப்பாளர்களின் நேரடித்தலையீடு என்பதனை, கிடைத்துள்ள கூடுதலான சாட்சியங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது ஒரு பாரியளவாலான குற்றமும், அது அமெரிக்க ஆளும் தட்டினரை ஊசலாடச்செய்யும். இந்த கலா-இ-ஜங்கி கோட்டை படுகொலையினால், புஷ் நிர்வாகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்.

நிகழ்வுகளின் தொடர்ச்சி

இந்த படுகொலை பற்றிய முழுவிவரமும் தெரியவில்லை. ஆனால் சில அடிப்படை உண்மைகள் தெட்டத்தெளிவாக உள்ளன. குண்டூஸில் (Kunduz) தலிபான் படைகள் நவம்பர் 23-24-ல் சரணடைந்தபோது ஆப்கான் தலிபான் தத்தம் கிராமங்களுக்கு திரும்ப செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உஷ்பெக்கிஸ்தானியர்கள், சேச்சினியர்கள், அராபியர்கள் போன்ற வெளிநாட்டு தலிபான்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இது அமெரிக்க பாதுகாப்பு செயலர் டோனால்ட் ரும்ஸ்பெல்ட் (Donald Rumsfeld) மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் கூற்றுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. குண்டூஸில் சரணடைந்த வெளிநாட்டு தலிபான்களை நாட்டைவிட்டு பாதுகாப்பாக வெளியேற்ற வடக்கு கூட்டணி தளபதிகளுக்கும் தலிபான் அதிகாரிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளை அவர்கள் தடுத்தனர்.

600 வெளிநாட்டு தலிபான் படைகள் குண்டூஸ் நகரத்திலிருந்து மஸார்-இ-ஷரீப் நகரத்திற்கு சுமார் 400 இலிருந்து 800 வரை மதிப்பிடக்கூடிய வெளிநாட்டை சேர்ந்த தலிபான்கள் லாரிகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜெனரல் டோஸ்ரும் (General Dostums) இன் இராணுவ தலைமையிடமாக செயல்பட்ட கலா-இ-ஜங்கி கோட்டைக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பத்திரிகை செய்திகளின் கூற்றுப்படி இந்த சிறைக் கைதிகள் தாங்கள் விடுதலை செய்யபடுவோம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களை சிறைப்படுத்தியப்போது அவர்கள் அதிர்ச்சியுற்றனர். டிசம்பர் 1FèF கார்டியன் பத்திரிகையில், அமீர்ஜான் என்பவர் பின்வருமாறு கூறினார்; "வடக்குக் கூட்டணியில் சரணடைந்தவுடன் தங்களை விடுதலை செய்வார்கள் என்றும், தங்களை சிறைப்படுத்த மாட்டார்கள்" என்றும் இந்த வெளிநாட்டவர் கருதினர். முற்கூறியபடி வடக்குக் கூட்டணி மஸார்-இ-ஷரீப் அருகிலுள்ள விமான நிலையத்தில் அடைத்து வைப்பதாக இருந்தபோதும் அமெரிக்க ஆலோசர்கள்தான் கலா-இ-ஜங்கி கோட்டையில் கைதிகளை அடைத்துவைக்க தீர்மானித்ததாகவும்'' அவர் கூறினர்.

நவம்பர் 24ந் தேதி அன்று இரவில் சோதனையிடப்பட்ட ஒரு தலிபான் கைதி, ஒரு மறைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடியினால் தன்னையும் Dostum என்னும் படைத்தளபதியின் உதவியாளர்கள் இரண்டு பேரையும் கொன்று விட்டார். மற்றும் சில சிறைக் கைதிகளும் கண்ணி வெடிகளினால் தங்களை மாய்த்துக் கொண்டனர்.

மறுநாள் நவம்பர் 25ந் தேதியன்று வடக்குக் கூட்டணியினர் சிறைக் கைதிகளின் கைகளை பின்புறம் கட்டினர். இரண்டு அமெரிக்க உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் (CIA) கைதிகளை கோட்டைக்குள் குறுக்கு விசாரணை செய்தனர். இதற்குள் ஏறத்தாழ 250 கைதிகளின் கைகள் கட்டப்பட்டன. அமெரிக்கர்களுடைய குறுக்கீடுதான் கலவரம் வெடித்ததற்குக் காரணமாகும்.

"சிறைக் கைதிகள் தாங்கள் கொலைசெய்யப்படப் போகின்றோம் என பயந்தனர்" என்று அமீர் ஜான் கூறினர். CIA அதிகாரி ஜொனி ஸ்பான் (Johnny Spann) என்பவருக்கும் ஒரு சிறைக் கைதிக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் ஸ்பான் கொல்லப்பட்டார். நவம்பர் 28 அன்று வெளியான லண்டனின் டைம்ஸ் நாளேடு Spann நால்வரை சுட்டுக் கொன்றதாகவும், அதற்குள் மற்ற சிறைக் கைதிகள் அவரை தரையில் கிடத்திக் கொன்றுவிட்டதாகவும் செய்தி வெளியிட்டது. சிறைக் கைதிகள் வடக்குக் கூட்டணி சிறைக் காவலாளிகளை தாக்கி அவர்கள் ஆயுதத்தைக் கைப்பற்றினர்.

இரண்டாம் CIA உளவாளி விரைந்தோடி அமெரிக்க அதிகாரிகளை செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமெரிக்க படைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். உடனடியாக அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் கோட்டைக்கு வெளியில் வந்து இறங்கின. உள்ளே இருந்த கைதிகள் மீது குண்டு வீச்சுகளின் மூலம் பயங்கர தாக்குதல் நிகழ்ந்தன.

அடுத்த நாட்களில் அமெரிக்க விஷேடபடைகள் பல சிறைக் கைதிகளில் பெரும்பாலானோரை கொன்று குவிப்பதை மேற்பார்வை செய்தனர். பூமிக்கடியில் ஒளிந்திருந்த சிறைக் கைதிகள் மீது டீசல் ஊற்றி, பிறகு தீயிட்டு கொன்றுவிடுமாறு இப்படைகள் வடக்குக் கூட்டணிப் படைகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு அசோசியேட் பிரஸ் பத்திரிகை புகைப்படக்காரர் கோட்டைக்குள் இருந்த ஒரு மைதானத்தில் சுமார் 50 தலிபான் கைதிகளின் சடலங்கள் கைகள் பிணைக்கப்பட்டு கிடந்ததை தான் கண்டதாக கூறினார். மற்ற பிரிட்டிஷ் செய்தி அறிக்கைகளும் வடக்குக் கூட்டணிப் படைகள் கோட்டையிலிருந்து தப்பி ஓடிய மற்றைய தலிபான் கைதிகளை கொன்றுவிட்டதாக கூறுகின்றன.

நவம்பர் 29 அன்று BBC ஒரு ஒலிப்பரப்பில் அமெரிக்கப் படைகளின் நேரடி பங்கு பற்றி குறிப்பிட்டது. அது 6 அமெரிக்கப் படையினர் சிறையின் வெளிச்சுவர்களிலிருந்து கைதிகளை சுட்டதாக கூறிற்று. London Times பத்திரிகை நவம்பர் 28-ல் "நன்கு பயிற்சி பெற்ற போர் வீரர்களே இந்த தாக்குதலில் பங்கு பற்றினர் என நன்றாக தெரிகிறது என்று சாட்சியம் கூறினர். அவர்கள் மேலும் கூறியதாவது, வடக்குக் கூட்டணியின் இயந்திர துப்பாக்கித் தாக்குதல் சற்று நேரத்திற்குப் பிறகு குறிவைத்து சுடும் துப்பாக்கியால் மாற்றீடு செய்யப்பட்டது" என்றனர்.

மேலும் Times பத்திரிகை: கூட்டணிப் படைகள் சிறைக் கைதிகளிடமிருந்து 30 பீரங்கிகள், இரண்டு டாங்கிகளை தகர்க்கும் ஆயுதங்கள் மற்றும் இரண்டு கிரனைட்டுக்களை ஏவும் ஆயுதங்களையும் கைப்பற்றியதாக கூறிற்று.

பொய் பித்தலாட்டங்களும் குதர்க்க வாதமாகும்

அமெரிக்க அரசும் தொலைத்தொடர்பு சாதனங்களும் தலிபான் கைதிகளை படுகொலை செய்ததை நியாயப்படுத்துகின்றன. மேலும் அவை அமெரிக்க படைகள் போர் குற்றங்களை புரிந்ததை மறுக்கின்றன. இவை ஆதாரமற்றதுடன், ஜெனிவா உடன்படிக்கையையும் (Geneva Convention) மீறுகின்றன.

அவர்கள் பின்வரும் கூற்றுக்களை முன்வைக்கின்றனர்,

கூற்று 1: படுகொலைக்கு கைதிகளே காரணம்; ஏனெனில் அவர்களே ஒரு காரணமற்ற எழுச்சியை மேற்கொண்டனர்.

அமெரிக்க செய்தித்தாள்களில் மேற்கூறிய செய்தியே காணப்படுகிறது. முக்கியமாக New york Times இதழில் வெளியான கட்டுரைகள் நடுநிலைமையானவை என்று அந்நாளிதழ் கூறிக்கொள்கிறது. இக்கட்டுரைகள் அமெரிக்கா ஏதும் தவறிழைக்கவில்லை என்பதையே நாசுக்காகவும் சூசகமாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

நவம்பர் 29 அன்று கார்லோட்டா கால் (Carlotta Gall) என்பவர் Times நாளிதழில் சிறை முற்றுகை பற்றிய தனது கட்டுரையில் சிறைக் கைதிகள் ஒரு எழுச்சியில் ஈடுபட்டதாகவும் மேலும் அவர்கள் மரணத் தறுவாய் வரை போராடியதாகவும் கூறிப்பிட்டார். Gall அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைகள் வடக்குக் கூட்டணிக்கு, கோட்டை பாதுகாப்பிற்கு உதவியாக குறிப்பிட்டார்.

டிசம்பர் 2 அன்று Gall வெளிநாட்டு பத்திரிகைகளில் சமீபத்தில் வெளிவந்த செய்திகளை கண்டு கொள்ளவேயில்லை. இச்செய்திகள் அமெரிக்க மற்றும் வடக்குக் கூட்டணி படைகளை குறை கூறின. Gall ''இந்த கைதிகளின் எழுச்சியும் சிறைக்கைதிகள் காவலாளர்களை தாக்கி அவர்கள் ஆயுதங்களை கைப்பற்றியதுமே படுகொலைக்கு காரணமானது என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர் கூறுவதாவது CIA தலைவரான George Tenet, ஒரு CIA அதிகாரியை, தேசிய தலைவர் என வருணித்தார். அவர் மேலும் சிறை எழுச்சி ஒரு கொலை முயற்சி என்றும் அது பல உயிர்களை பலிகொண்டது என்றும் மற்றும் CIA அதிகாரி ஒரு வீரமுள்ள அமெரிக்க இளைஞன் என்றும் குறிப்பிட்டார்.

மேற்கூறிய பத்திரிகை செய்திகள் சிறைக் கைதிகள் ஒரு மாபெரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், தங்கள் காவலாளிகளையும் தங்களையும் பலி கொள்ள முயன்றதாகவும் கூறின. நவம்பர் 27 Washington Post இதழ் தனது தலையங்கத்தில், ''ஆப்கானல்லாத அல்கொய்தா மற்றும் தலிபான் சிறைக் கைதிகள் தங்கள் அருகில் உள்ள சிறைக் காவலாளிகளை கொல்வதற்காக தங்கள் மீதே கண்ணி வெடிகளை பிரயோகித்தனர் நேற்று தாங்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சிறைக்குள்ளேயே ஒரு தற்கொலை போரை நிகழ்த்தினர்'' என வெளிப்படையாகவே கூறியது.

முதலாவதாக இந்த கூற்றுக்கள் உண்மைக்கு புறம்பாகவும் நம்பத்தகாதவாறும் உள்ளன. இரண்டாவது அவை நிஜமாகவே உண்மையாக இருந்தாலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் போர்ப்படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை தார்மீக அடிப்படையிலோ மற்றும் நீதி அடிப்படையிலோ எள்ளளவும் நியாயப்படுத்த முடியாது. சர்வதேச சட்டப்படி சிறைக் கைதிகள் எழுச்சிக்கு எதிரான தாக்குதல் விகிதாசார முறைப்படி பொருத்தமாக இருக்க வேண்டும். கைகளை பின்புறமாக கட்டப்பட்ட கைதிகளை குண்டுகளை வீசிகொன்றது இதனை தெளிவாக மீறுவதாகும்.

சிறைக் கைதிகள் ''மரணத்திற்கான போராட்டத்தை'' தவிர்த்துக் கொள்ள எதிரிகளின் முன் சரணடைந்தனர். அவர்கள் கொலை முயற்சியிலோ தற்கொலை முயற்சியிலோ ஈடுபட்டனர் என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு முரண்பாடானதாகும். ஜெனரல் Dostum இனது படைகள் மஸார்-இ-ஷரிப் கோட்டையை கைப்பற்றியபோதும், Kunduz ஐ கைப்பற்றியபோதும் பல கொடுமைகளை இரண்டு வாரங்களுக்கு முன்புதான் செய்ததிலிருந்து இக்கைதிகள் தாம் பொறியில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம் எனவும் ஒன்றிணைந்த மரண தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பயப்பட்டதில் நியாயம் உண்டு.

கூற்று 2: தலிபான் சிறைக் கைதிகள் தங்களுடைய சிறையதிகாரிகளை எதிர்த்து போராடியதால் தங்களுடைய சட்ட உரிமைகளை இழந்தார்கள்.

நவம்பர் 26 அன்று அமெரிக்க இராணுவ தரப்பின் பேச்சாளரான Kennon Keith, சிறைக் கைதிகள் ''எதிர்ப்பு நடவடிக்கையில்'' ஈடுபட்டதால் அவர்களுக்கு ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள அந்தஸ்து கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

ஆனால் சிறைக் கைதிகளின் எழுச்சி முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என்றும் எந்தவித தூண்டுதலின் அடிப்படையில் அல்ல என்றும் நிரூபிக்கப்பட்டால்தான் சர்வதேச சட்டத்தின்படி இந்த கூற்று ஒப்புக்கொள்ளப்படும். ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. ஆனால் சட்ட ரீதியாகப் பார்க்கும்போதும் அவர்கள் போர்க் கைதிகளாக இல்லாவிட்டாலும் அவர்களை மனிதர்களாக கருத வேண்டும். சர்வதேச யுத்த விதிகள், வன்முறையை குறைக்கவும் ரத்தம் ஓடுவதையும் குறைக்கவுமே வகுக்கப்பட்டுள்ளன. உண்மையாகவே 1977 ஜெனிவா உடன்படிக்கை விதி ஒன்று ''ஒருவரும் தப்பயிருக்க முடியாது'' என்பதற்காக இதை தடை செய்கிறது.

கூற்று 3: ஆப்கானிஸ்தான் போர் ஓர் உள்நாட்டுப்போர். இது இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றதல்ல எனவே கைப்பற்றப்பட்ட போர்க் கைதிகள் ஜெனிவா உடன்படிக்கையின் கீழ் எந்தவித பாதுகாப்பும் பெற இயலாததோடு, சர்வதேச சட்ட வரம்புகளுக்குள் சட்ட பாதுகாப்பு பெறமுடியாதவர்களும் ஆவர்.

டிசம்பர் 2ம் திகதி New york Times நாளேடு மீண்டும் வடக்கு கூட்டணியின் படைகளால் கைது செய்யப்பட்ட ஆப்கான் அல்லாத கைதிகள் ''உள்நாட்டு யுத்தத்தில் வெளிநாட்டு படையினராகும், அவர்களின் உரிமைகள் உறுதியற்றன'' என குறிப்பிட்டது. அதேபத்திரிகை நவம்பர் 30 நாளேட்டின், நிருபர் Serge Schememann பின்வருமாறு கூறுகிறார், ''கலா-இ-ஜங்கி படுகொலைகள் ஜெனிவா உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டதா என்பது தொடர்பாக தெளிவானதாக இல்லை. சர்வதேச போர்களுக்கு எழுதப்பட்ட ஜெனிவா உடன்படிக்கை விதிமுறைகள் வித்தியாசமானவை. இதன் கீழ் அமெரிக்கா, யுத்தக் கைதிகளை நடாத்துவது தொடர்பாகவும், உள்நாட்டு யுத்தத்திற்கும் நேரடி பொறுப்பேற்க வேண்டும். ஆப்கானிய போர் சட்ட ரீதியாக சிக்கலானதாகும், சர்வதேச மயமாக்கப்பட்ட உள்நாட்டு போராகும்.

ஜெனிவா உடன்படிக்கை உள்நாட்டு போர்களுக்கு செல்லுப்படியாகாது என்பது தவறான வாதம். ஆகஸ்ட் 12, 1949-ல் நிறைவேற்றப்பட்ட இந்த உடன்படிக்கையின் மூன்றாவது பந்தியின்படி சர்வதேச தன்மை கொண்டிராத (ஆசிரியரால் அடையாளப்படுத்தப்பட்டது) உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பிரதேசத்திலுள்ள இரு பிரிவினரும் ஆகக்குறைந்தளவிற்காவது இவ் உடன்படிக்கையை பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இந்த பந்தி மேலும் கூறுவதாவது: சிறைக் கைதிகள் அன்பாக நடத்தப்பட வேண்டும் (A) கொலை, கொடூரமான அணுகுமுறை, கை கால்களை வெட்டுதல், கொடுமைப்படுத்தல், (B) பிணைக் கைதிகளை பிடித்து வைத்தல் (C) மனிதர்களை மனிதாபிமானம் இன்றி மிருகத்தனமாக நடத்துவது, (D) ஒரு முறையான நீதிமன்றத்தின் முன்னரான விசாரணை இல்லாமலும், சாதாரண மக்களுக்கு அளிக்கப்படும் மேன்முறையீடு செய்வது உள்ளடங்கலான எல்லாவித மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் வழங்காது தண்டித்தலும், மரணதண்டனை வழங்குதலும் தவறாகும்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் 1949 ஜெனிவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. எனவே மேற்கூறிய நாடுகள் இந்த உடன்படிக்கையின் சட்ட திட்டத்திற்கு உடன்பட்டவை.

ஜெனிவா உடன்படிக்கை ஆப்கான் போருக்கு செல்லும்படி ஆகும் என உலக சோசலிச வலைத் தளம் மட்டுமல்லாது இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்த உரிமை பெற்ற அமைப்பான International Committee of the Red Cross (ICRC) உம் கருதுகிறது. கலா-இ-ஜங்கி படுகொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குண்டூசில் தலிபான் படையினர் சரணடைந்தபோது ICRC இன் சட்ட ஆலோசகரான Catharine Deman ''இப்பிரதேசத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் வடக்கு கூட்டணி, தலிபான், அல் கொய்தாவினருக்கும் 3ம் சரத்து செல்லுபடியாகும். ஆப்கானின் மலைப்பகுதியும், ருவாண்டாவையோ அல்லது ஈராக்கையோ போன்றதே. அமெரிக்கா இவ்வுடன்படிக்கையை முழுதாக கடைப்பிடிக்க கடமைப்பட்டுள்ளது'' என தெரிவித்தார். சர்வதேச மன்னிப்பு சபையும் இதே மாதிரியான அறிக்கை ஒன்றில் ''அமெரிக்காவாலோ அல்லது பிரித்தானியாவாலோ கைது செய்யப்பட்ட எந்தவொரு தலிபான் போராளியோ அல்லது ஒசாமா பின் லேடனினது அல் கொய்தா அமைப்பின் உறுப்பினரோ யுத்தக்கைதிகள் என்ற வகையில் பாதுகாக்கப்படவேண்டும்'' என தெரிவித்தது.

Human Rights Watch அமைப்பின் டிசம்பர் 1ம் திகதியின் அறிக்கையில் இதே மாதிரியான கருத்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அது கலா-இ-ஜங்கி ''படுகொலையை'' விசாரிக்க அழைப்புவிட்டது. அவ்வமைப்பு, ''மோதலில் ஈடுபடாதவர்களும், தடுத்துவைக்கப்பட்டவர்கள் அல்லது சரணடைந்த எதிர்த் தரப்பு படையாட்கள் மனிதாபிமானமாக நடாத்தப்படவேண்டும் என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் (யுத்த சட்டத்தின்) அடிப்படை கொள்கையாகும். இது சர்வதேச அல்லது உள்நாட்டு ஆயுத மோதல் என்றாலும் சகல நிலைமையினுள்ளும் மதிப்பளிக்கப்பட வேண்டும். மற்றும் இது ஆயுதப்படைகள், யுத்தக்கைதிகள், யுத்தக்கைதி அந்தஸ்து அற்ற போராளிகள், தடுத்துவைக்கப்பட்ட சாதாரண மக்கள் அனைவருக்கும் சாதகமாக பிரயோகிக்கப்படவேண்டும்'' என குறிப்பிட்டது.

ஆப்கானிஸ்தான் யுத்தம் ஒரு உள்நாட்டு யுத்தம் என்பதை வலியுறுத்துகையில், புஷ் நிர்வாகத்தினரினதும் அமெரிக்க இராணுவத்தினதும் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான'' யுத்தத்தை கண்டுபிடித்ததை அவதானித்தது ஆச்சரியப்படக் கூடியதாக இருந்ததுடன், அதனை புஷ் செப்டம்பர் 20ம் திகதி காங்கிரஸில் தனது மிகுந்த ஆரவாரத்துடன் அறிவித்ததுடன், உண்மையிலேயே ஒரு உள்நாட்டு ஆப்கான் பிரச்சனையில் எச்சரிக்கை விடுத்து அமெரிக்காவானது தாக்க தயாராக இருப்பதாக அச்சுறுத்தியது. ஒரு சில கிழமைகளின் பின்னர் அமெரிக்க பத்திரிகைகள் தலிபான் அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு வடக்கு கூட்டணியை ஒரு துணைப்படையாக பாவிக்கும் அமெரிக்கவின் திட்டத்தின் சாத்தியப்பாடு குறித்து விவாதித்தன. இப்போது இதே பத்திரிகைகள் அமெரிக்கா உள்நாட்டு யுத்தத்தில் ஆலோசனை வழங்கும் பங்கு வகிக்கின்றது என எம்மை நம்பவைக்க முனைகின்றன.

கூற்று 4: தலிபான் அரசாங்கம் உலக சமூகத்தால் ஒரு ஒரு சட்டபூர்வமான அரசாங்கமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, எனவே ஜெனிவா உடன்படிக்கையை பிரயோகிக்கமுடியாது.

இவ்வகைப்படுத்தல், அமெரிக்காவின் அதிகாரிகளிடமிருந்து வந்தது. இது 1949 ஆம் ஆண்டின் கடிதம் ஒன்றினால் முழுதாக நிராகரிக்கப்படுகின்றது. 4ஆம் பந்தியில் ''யுத்தக் கைதிகள்'' என்பது வரையறுக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு சொந்தமான வழமையான ஆயுதப் படையினரும் அல்லது தடுத்துவைக்கும் அதிகாரமற்ற ஒரு அதிகாரத்தில் உள்ளவர்களும் இதனுள் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என தனது வரையறையில் குறிப்பிட்டது.

கூற்று 5: வெளிநாட்டு தலிபான் வீரர்கள் உண்மையான போர் வீரர்கள் அல்லர். ஒசாமா பின் லேடனின் அல்கொய்தாவின் அமைப்பை சேர்ந்த கொடூரமான கொலையாளிகள், பயங்கரவாதிகள், குற்றவாளிகள் ஆவர்.

New york Times நாளேடு டிசம்பர் 2 சிறைப்படுகொலை பற்றிய கட்டுரையில் ''கலா-இ-ஜங்கி போராளிகளின் எதிர்ப்பு அவர்கள் குற்றவாளிகள் என்பதை நிரூபிக்கிறது எனவும், சென்ற வாரம் அமெரிக்க உளவுப்படையின் அதிகாரியை கொன்றபோதும், கிளர்ச்சிசெய்தபோதும் அயல்நாட்டு தலிபான்கள் மத்தியிலே கொடூரமான குற்றவாளிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது" எனவும் கூறிப்பிட்டது.

புஷ் இன் தீர்மானமான சிறைப்படுத்தப்பட்ட அல் கொய்தா போராளிகளை ரகசிய ராணுவ நீதிமன்றங்களின் முன்பு விசாரிக்கவேண்டும் என்பதை வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர் Alberto.R.Gozales வழி மொழிந்தார். போர் சட்டங்களின்படி அவர்கள் நாடற்ற, சட்டத்திற்கு உட்படாத போராளிகள் என்றும் ஜெனிவா உடன்படிக்கை அவர்கள் விஷயத்தில் செல்லுபடி ஆகாது என்றும் எடுத்துரைத்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரும்ஸ்வெல்ட் திரும்ப திரும்ப அல் கொய்தாவுடனும், பின் லேடனுடனும் வெளிநாட்டு ஆப்கான் தீவிரவாதிகளை ஒப்பிட்டார். சென்ற ஞாயிற்று கிழமைக்கூட அவர் "Meet The Press" நிகழ்ச்சியில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி வழங்குகையில் சிறைப் படுகொலையிலிருந்து தப்பி பிழைத்தவர்களை தீவிரமான அல் கொய்தா போராளிகள் என்றே குறிப்பிட்டார்.

இவ்வாறு அயல்நாட்டு தலிபான் போராளிகளை, அல் கொய்தா போராளிகளுடன் ஒப்புநோக்கல் தவறானது. உண்மையாகவே கூறப்போனால் சிறைப் படுகொலையிலிருந்து தப்பி வந்த போராளிகளுடன் பேசுகையில், அவர்கள் மிகவும் இளமையான, போர் அனுபவமில்லாத, பின் லேடனுடன் தொடர்பில்லாததுடன் ஆப்கானை சேர்ந்த போராளிகளும் அல்லர். பலர் பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாம் மதத்தவர்கள். பலர் அமெரிக்கா ஆப்கான் மீது விமான குண்டு வீச்சு தாக்குதலுக்கு பின்னரே ஆப்கானிஸ்தானுக்கு வந்திருந்தனர்.

சிறைக் கோட்டையின் மீது அமெரிக்க தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், உலக சோசலிச வலைத்தளம் ஒரு கட்டுரையில் "எல்லா வெளிநாட்டு தலிபான்களையும் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவதன் நோக்கம் மிகவும் தெள்ளத் தெளிவானது", இது முன்கூட்டியே குண்டூஸ் அல்லது வேறு எங்கேயாவது நடைபெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவது ஆகும்'' என குறிப்பிட்டது.

அமெரிக்காவின் கொள்கையான வெளிநாட்டு தலிபான் படைகளை மிகவும் கடுமையாக கொடுமைப்படுத்தி, முறைப்படி கூட்டப்படாத நீதிமன்றங்களின் முன் ஆஜர்படுத்துவது அத்துமீறிய, ஜனநாயகத்திற்கு விரோதமான, அதர்மமான காரியம் ஆகும். மேலும் அது ஜெனிவா உடன்படிக்கைக்கு நேர் எதிர்மாறானது. ஜெனிவா உடன்படிக்கையின் 3வது ஷரத்து கூறுவதாவது "போரில் பங்கு கொள்ளாதவர்களையும், போரில் சரணடைந்தவர்களையும், வேறு பல காரணங்களாலினால் போரிட முடியாதவர்களையும் இன, நிற, மத, ஜாதி, பால், பிறப்பு அல்லது இதேபோன்ற வேறு பாகுபாட்டில்லாமல் எவ்விதமான நிலைமையின் கீழும் மனிதாபிமானமாக நடத்தப்படவேண்டும்.'' (ஆசிரியரால் வலியுறுத்தப்பட்டது)

மேலும், இந்த உடன்படிக்கையின் கீழ், போர்க் கைதிகள் சட்ட விரோத கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கூட அவர்கள் போர்க் கைதிகள் போல் நடாத்தப்படவேண்டும். அவர்களின் தகமைக்குட்பட்ட சட்ட உரிமைகள் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் ஒரு இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பகிரங்க தண்டனை வழங்கப்படும்வரை அவர்களுக்கு மேல்முறையீடு செய்யும் உரிமை வழங்கப்படவேண்டும். ஜெனிவா உடன்படிக்கை ஷரத்துகள் 5, 84, 106 இனை பார்க்கவும் (http:www.yale.edu/lawweb/avalon/lawofwav/geneve03.htm). புஷ் இன் இரகசிய இராணுவ நீதிமன்றங்கள் தெளிவாக மேற்பட்ட ஷரத்துகளை மீறி செயல்படுபவையே.

கூற்று 6: வடக்குக் கூட்டணி, கைப்பற்றிய தலிபான்களை அவர்கள் நடாத்தும் விதம் பற்றி அமெரிக்க அரசுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எனவே கலா-இ-ஜங்கி முற்றுகையில் நிகழ்ந்த சட்ட மீறிய சம்பவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் அமெரிக்க அரசு பொறுப்பல்ல.

அமெரிக்க அதிகாரிகள் எந்தவிதமான குற்றவுணர்வு இல்லாமல் மேற்கூறியவாறு கூறலாம். தொலைத்தொடர்பு சாதனங்கள்கூட அப்படியே இதை ஆதரிக்கலாம். ஆனால் இவை அமெரிக்க அரசின் ஆணவத்தையும், மனிதப்பண்பற்ற தன்மையை காட்டுகிறது. மேலும் இத் தீய செயல்கள் சர்வதேச மக்கள் கருத்தை அவமதிப்பதாக இருப்பதுடன், அமெரிக்கா எத்தகைய கொடிய செயல்களையும் எவ்வித தண்டனைக்கும் உள்ளாகாமல் செய்யக்கூடும் என்பதையே இது வலியுறுத்துகிறது.

நவம்பர் 29 அன்று பென்டகனை சார்ந்த அமெரிக்க அதிகாரி விக்டோரியா கிளார்க் (Victoria Clarck) பத்திரிகை நிருபர்களிடம், "எதிர் குழுக்களால் செய்யப்படும் என்பவற்றை அமெரிக்க அரசால் கட்டுப்படுத்த முடியும் என கூறுவது ஒரு மிகைமதிப்பீடாகும். எங்களால் அவ்வாறு செய்யமுடியாது" என கூறியுள்ளார்.

மேலும் ஒரு பாதுகாப்பு படை அதிகாரி ''கைப்பற்றப்பட்ட தலிபான் கைதிகளை வாஷிங்டன் நடாத்தும் விதத்தைப் பற்றி கேட்பது பிரான்ஸ் நாட்டில் கைதிகள் என்ன நிலைமையின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என என்னை கேட்பது போலாகும்'' என குறிப்பிட்டார்.

இவை பொய்க் கூற்றுகள். இவை அவர்களின் முகத்திற்கு எதிராக திரும்புகின்றன. உண்மை என்னவென்றால், அந்த சிறைக் கோட்டையில் அமெரிக்க துருப்புகள் நேரடியாகவே போர்க் கைதிகளை கொன்று குவித்தன என்பதேயாகும். அமெரிக்க விஷேட படைகள் எந்த பாதுகாப்பும் இல்லாத சிறைக் கைதிகள் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தின. கோட்டைக்கு உள்ளிருந்த அமெரிக்க CIA உளவாளிகளே இந்த கலவரத்திற்கு தூண்டுகோலாக அமைந்தனர். அமெரிக்க குண்டுகளும் ஏவுகணைகளும் பல சிறைக் கைதிகளை கொன்று குவித்தன.

அமெரிக்க அரசின் மேல்மட்ட அதிகாரிகளின் கொள்கையே இதற்கு காரணம். குண்டூஸ் தலிபான் வீரர்கள் சரணடைவதற்கு முன்பாக பாதுகாப்பு துறை செயலர் ரும்ஸ்வெல்ட் வாஷிங்கடன்தான் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். வெளிநாட்டு தலிபான் விடுதலை செய்யப்பட்டு செல்ல ஏற்படுத்தப்பட்ட பல ஒப்பந்தங்களை ரும்ஸ்வெல்ட் பலமுறை நிராகரித்தார். அவருக்கு வடக்கு கூட்டணியின் படைகள் மஸார்-இ-ஷரீபில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு கூட்டு படுகொலையை செய்திருந்ததை நன்கு அறிந்திருந்தார்.

ரும்ஸ்வெல்ட் மேலும் கூறியதாவது: அமெரிக்க படைகளின் நோக்கமே எல்லா வெளிநாட்டு தலிபான் வீரர்களை கொல்வதான் விருப்பமானது என்பதை தெளிவாக்கினார். அவர் பத்திரிகை நிருபர்களிடம் Qala-I-Jangi கோட்டையைக் கைப்பற்றுவதற்கு முதல்வாரம் அமெரிக்கா ''சரணடைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த'' தாயராக இல்லை என்றும் மேலும் அல் கொய்தா படைகளை கொல்வதிலும் சரணடைய செய்வதிலுந்தான் முனைப்பாக செயல்படும் என்றார்.

நவம்பர் 21 அன்று ரும்ஸ்வெல்ட் மேலும் தெளிவாக கூறியதாவது: CBS (Columkbia Broadcasting System) தொலைக் காட்சியின் 60 நிமிட நிகழ்ச்சியில் ஒசாமா பின் லேடன் உயிருடன் பிடிபடுவதைவிட கொலை செய்யப்படுவதையே தான் விரும்புவதாகவும், ''நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பந்தயம் கட்டுகின்றீர்கள் '' எனவும் கூறினர்.

நவம்பர் 20 அன்று ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க படைகளுக்கான அதிகாரி கென்டன் கீத் (Kenton Keith) குண்டூஸ் நகரத்தில் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வு காண்பதை எதிர்க்கிறது என்றார். எதிர்காலங்களில் வரக்கூடிய ஒரு படுகொலைக்கு அமெரிக்கா பொறுப்பாகாது என்றார். வடக்குக் கூட்டணி, கைதிகளை பொருத்தமாக நடத்துமாறு பிரிட்டிஷ் அமெரிக்க கூட்டமைப்பு கூறியதாகவும், ஆனால் அது குறித்து எந்த வாக்குறுதியைத் தாம் தர தயாராயில்லை என்றும் கூறினார்.

ரும்ஸ்வெல்ட் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகளின் சொற்களும் செயல்களும் அமெரிக்காவின் கொள்கையை தெளிவுப்படுத்துகின்றன. நவம்பர் 23 அன்று Washington Post செய்தி, ''மத்திய கிழக்கு பத்திரிகைகள் ரும்ஸ்வெல்ட்டின் கூற்று, ஆப்கான் அரபு போர் வீரர்களை அமெரிக்க வீரர்கள் கொலைசெய்ய ''பச்சை விளக்கு'' காட்டியதாக கூறின. வடக்குக் கூட்டணியை, கைப்பற்றப்பட்ட ஆப்கானிய வீரர்களை கொலை செய்ய, அமெரிக்கா ஊக்குவிப்பதாக இன்னொரு அரபு பத்திரிகையாளர் கூறினார்'' என தெரிவித்தது.

கலா-இ-ஜங்கி படுகொலைக்குப் பின்னர், சில மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் விமர்சகர்களும், சர்வதேச பத்திரிகைகளில் அமெரிக்க அரசு படுகொலைக்கு உடந்தையாக இருக்கிறது என்பதையே ரும்ஸ்வெல்ட்டின் கூற்று சுட்டிக்காட்டுகின்றது என்று கூறுகின்றனர்.

டிசம்பர் 2 அன்று பிரிட்டிஷ் பத்திரிகையான Observer "இரத்தக்கறை படிந்த புஷ்" என்ற தலையங்கத்தில் மஸார்-இ-ஷரீப் இல் நடந்த படுகொலையை ஒரு சர்வதேச மட்டத்தில் விசாரிக்க வேண்டும் என்று கூறிற்று. மேலும் இந்தப் பத்திரிகை இந்தப் "படுகொலைக்கான காரணமும் சூழ்நிலைமைகளும்" ஆய்வு செய்யப்படாவிட்டால், "அமெரிக்க அரசு விசாரணையின்றியே மரண தண்டனையை நிறைவேற்றுகின்றது என்ற சந்தேகத்திற்கு ஆளாக நேரிடும்" என்று எச்சரித்தது.

மற்றொரு பாதுகாப்புத் துறையின் பத்திரம் சிறையெடுக்கப்பட்ட வீரர்களைப் பற்றி கூறுவதாவது "ஒரு பிணைக் கைதியின் அந்தஸ்து குறித்து ஏதேனும் ஐயப்பாடு இருக்குமானால் அவரை ஜெனிவா உடன்படிக்கை விதிமுறைகளின்ப்படி காப்பாற்ற வேண்டும். மேலும் ஒரு தகுதிவாய்ந்த நீதிமன்றம் அமெரிக்க கொள்கைப்படி கைதியைப் பற்றி முடிவெடுக்கும்.

அமெரிக்க சிறப்புப் படைகளும் CIA அதிகாரிகளும் கைப்பற்றப்பட்ட தலிபான் கைதிகளை புலன் விசாரணை செய்ததை அமெரிக்க அரசு மறுக்கவில்லை. கலா-இ-ஜங்கி கோட்டை முற்றுகைக்கு பின்னர் ரும்ஸ்வெல்ட், கண்டஹாரில் தலிபான் படைகள் சரணடவதை அமெரிக்க அரசு வன்மையாக எதிர்ப்பதாக கூறினார். மேலும் தலிபான் பாசறையாகிய Kandahar இல் வெளிநாட்டு தலிபான் படைகளும் மற்ற அல் கொய்தா படைகளும் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றார். மேலும் கைப்பற்றப்பட்ட தலிபான் தலைவர்களை அமெரிக்க அரசிடம் புலன் விசாரணைக்காகவும் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கவும் ஒப்படைக்க அமெரிக்க அரசு கோரியுள்ளது என்றார்.

அமெரிக்க அரசின் இச்செயல் ஜெனிவா உடன்படிக்கையின் மற்றொரு முக்கிய ஷரத்தை மீறுகிறது. ஒரு சிறைக் கைதி தனது பெயர், தரம், பிறந்த தேதி மற்றும் தொடர்ச்சி இலக்கம் தவிர இதர விவரங்களை தன்னை சிறைப் பிடிப்பவர்க்கு தெரிவிக்க வேண்டி கட்டாயப்படுத்தக்கூடாது என 17வது ஷரத்து கூறுகிறது. இந்த ஜீவாதார உரிமை மிகவும் தெளிவாக பின்வருமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. ''கைதியை எந்த விதமான உடல், மன கொடுமையோ செய்து அவரிடமிருந்து எந்தவிதமான தகவலையும் பெறக்கூடாது. ஒரு சிறைக் கைதி மேற்படி கேள்விகளுக்கு பதில் தரமறுத்தால் அவரை பயமுறுத்துவதோ, அவமதிப்பதோ அல்லது மற்ற எந்த கொடுமையையுமோ செய்யக்கூடாது''.

குறிப்பாக அமெரிக்க விஷேட படையினரின் விசாரணைக்குள்ளானவர்கள் உட்பட தலிபான் கைதிகள் சித்திரவதைப்படுத்தப்படுகின்றார்கள் என்பதை பென்டகன் அதிகாரிகள் மறுக்கவில்லை. நவம்பர் 30 Washington Post செய்திப்படி ''ஒரு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த ஒரு "உயர் அதிகாரி" கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார்'' என குறிப்பிட்டது.

போர்க் குற்றங்களைப் பற்றி வாஷிங்டனின் இரட்டை அளவுகோல்

மேற்கூறிய ஆய்வுப்படி சிறைக் கோட்டையில் தடை செய்திருந்த சிறைக் கைதிகளை கொலை செய்வது, சித்திரவதை செய்வது, அல்லது மனிதாபிமானமற்ற அணுகுதல் மூலம் அமெரிக்காவின் நடைமுறைகள் ஜெனிவா உடன்படிக்கையை மீறியிருந்தன. மேலும் ஆப்கான் சிறைக் கைதிகள் கொடூரமாக நடத்தப்படும் விதம் ஜெனிவா உடன்படிக்கையில் மற்ற ஷரத்துகளை மீறுவதாக உள்ளது.

மேலும், இது ஜெனிவா உடன்படிக்கையுடன் இணைந்த அமெரிக்க பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை சொல்லிலும் செயலிலும் மீறுவதாக அமைந்துள்ளது. 1994-ல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட கொள்கை கீழ்வருமாறு.

அறிக்கை கூறுவதாவது: (1) அமெரிக்க இராணுவம் சர்வதேச போர் விதிமுறைகளை சொல்லிலும் செயலிலும், மேலும் நடைமுறையிலும் ஜெனிவா உடன்படிக்கைகளை ஒத்து செயல்படவேண்டும். மேலும் அது கூறுவதாவது: (III) சர்வதேச சட்டப்படி சிறைப்பிடிக்கப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்ட கைதிகள் சட்டத்தின் பார்வையில் தகுந்த அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்". மேலும் "யாராவது சர்வதேச சட்டத்தை மீறினால் தகுந்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்" என்பதாகும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் இன்னுமொரு அறிக்கை, ''கைது செய்யப்பட்டவர்களின் நிலை தொடர்பாக யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்களை ஜெனிவா உடன்படிக்கையின் கீழ் பாதுகாக்கவும், அமெரிக்க கொள்கைகளுக்கு பொருத்தமான நீதிமன்றம் அவரின் நிலை தொடர்பாக தீர்மானிக்கும்'' என குறிப்பிட்டது.

1949 ஜெனிவா உடன்படிக்கை, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உறுப்பு நாடுகளை தேவைப்பட்ட சட்டங்களை இயற்றுமாறு கூறுகிறது. மேலும் உடன்படிக்கை அத்துமீறல்களை புரிபவர்களையும் அதற்கு உத்திரவிடுபவர்களையும் தக்கபடி தண்டிக்க கோருகிறது. ஷரத்து 129 மேலும் கூறுவதாவது "குற்றம் செய்தவர்களையும், குற்றம் செய்ய கட்டளையிட்டவர்களையும் அவர்களின் தேசிய அடையாளத்தை கருத்தில் கொள்ளாது ஒவ்வொரு நாடும் இந்த விதிகளை பாவித்து தங்கள் சட்டமன்றங்களில் தண்டிக்க முடியும்" .

130 ஷரத்து பின்வருபவை: வேண்டுமென்றே கொலை செய்தல், கொடுமைப்படுத்துதல், உயிரியல் பரிசோதனைகள், வேண்டுமென்றே அதிக துன்பத்தையும், உடலுக்கோ, உடல் நலத்துக்கோ அதிக ஆபத்து விளைவிப்பதோ, பகை நாட்டு இராணுவத்தில் பணி புரியுமாறு தூண்டுவது அல்லது உடன்படிக்கையின் கீழ் கூறப்பட்டவாறு சிறைக் கைதிக்கு தகுந்த சட்ட பாதுகாப்பு அளிக்காமல் இருத்தல் என்பன அத்துமீறல்கள் என கூறுகிறது.

"கலா-இ-ஜங்கி" கோட்டையில் பல நூறு தலிபான் போர்க் கைதிகளின் படுகொலையானது, ஜெனிவா உடன்படிக்கை அத்துமீறல்கள் பற்றிய சட்ட வரையறைக்குள் அடங்கும். அமெரிக்காவும், மற்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளும் சட்டப்படி இந்த குற்றம் புரிந்தோரை தண்டிக்க வேண்டும்.

போர்க் கைதிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் குற்றங்களையும் புரியும் அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளை தண்டிக்க ஒரு வரலாற்று முன்னுதாரணம் இருக்கிறது. Nuremberg போர் குற்ற நீதிமன்றம் 2ம் உலக யுத்தத்தின் பின்னர் போர்க் கைதிகளை கொடுமைப்படுத்தியதற்காக ஜேர்மன் அதிகாரிகளை குற்றம்சாட்டி தண்டித்தது.

அமெரிக்க அரசு, தனது நடவடிக்கைகளை கண்டிக்கும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதை எதிர்க்கின்றது. மேலும் கடந்தகாலங்களில் ஹாக் (Hague) ல் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மிறீ நடந்துள்ளது. உதாரணமாக 1984-ல் நிகாராகுவா துறைமுகங்களில் கண்ணி வெடி வைத்ததை சர்வதேச நீதிமன்றம் கண்டித்தும் அமெரிக்கா அந்த தீர்ப்பை மதிக்கவில்லை. ஆனால் அமெரிக்க அரசோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அகில உலக சொத்துக்களுக்கு நேர் எதிராக செயல்படும் அரசு அதிபர்களை போர் குற்றங்களுக்காக தண்டிக்குமாறு உரத்துக்குரல் கொடுக்கிறது.

யூகோஸ்லாவிய அதிபர் சுலோபடன் மிலோசிவிக் -ஐ தண்டிக்குமாறு அமெரிக்க அரசு வற்புறுத்தியது. முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை, தன்னுடைய சேர்பிய போர் எதிர்ப்பு நடவடிக்கைக்காக ஆமோதித்தது.

சேர்பிய இராணுவமும் துணை ராணுவப் படைகளும் ஒரு நான்கு மாத காலக் கட்டத்தில் 346 கொசோவா அல்பானியர்களை கொன்றதாக உண்மையான குற்றச்சாட்டு சுட்டிக் காட்டுகின்ற போதிலும் தீர்ப்பில் 6 படுகொலைகளை மட்டுமே சுட்டிகாட்ட கூடியதாக இருந்தது.

சேர்பிய படையினரும் கொசோவா விடுதலை இராணுவத்தினரும் ஐயத்திற்கு இடமின்றி கொடுமைகளை புரிந்திருந்ததாக ஹாக் நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. ஆனால் Qala-I-Jangi கோட்டையில் நடந்த தாக்குதலால் ஏற்பட்ட இரத்தக்களரியும், பல படுகொலைகளும், குண்டு வீச்சுகளும் மிகவும் அதிகமாகும்.

ஹாக் நீதிமன்றம், கொசோவா கொலைகளுக்காக மிலோசிவிக்கின் நேரடியான பங்கிற்கான சாட்சிகளாக அவருடைய அலுவலக குறிப்புகள், தொலை நகல்கள், கட்டளைகள், பகிரங்க அறிக்கைகள் போன்றவற்றை முன்வைக்கவில்லை. அவர் அரசாங்கத்தின் தலைவராக இருந்தபடியால் அவரே பொறுப்பு என தண்டிக்கப்பட்டார். ஏனென்றால் மிலோசிவிக் ஜனாதிபதி என்றபடியால் அவரே பொறுப்பு என கூறப்பட்டது.

தற்போதைய நிகழ்ச்சியில், நவம்பரில் மஸார் -இ-ஷரீப் இல் நடந்த படுகொலைகள் அமெரிக்க அரசு மற்றும் இராணுவ கொள்கைகளின் விளைவே என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. உண்மையாகவே, பாதுகாப்பு செயலர் ரும்ஸ்வெல்டின் பகிரங்க அறிவிப்புகள் அவரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்கவேண்டும். மேலும் புஷ் நிர்வாகத்தின் பேச்சாளர்களும், ஜனாதிபதியும் ரும்ஸ்வெல்டின் அறிவிப்புகளை திரும்ப கூறியதாலும், அல்லது கைதுசெய்யப்பட்ட தலிபான் கைதிகள் தொடர்பாக அமெரிக்க கொள்கைக்கு ஏதும் மறுப்பு தெரிவிக்காததால் அமெரிக்க அரசும், அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்.

சரித்திரம் எதையும் மறப்பதில்லை, அரசியலில் நிறைய புதுமைகளும் நடக்கின்றன. உலக மக்கள் கருத்தும், அமெரிக்க மக்களினதும் கருத்தும்கூட, இப்போதுள்ளமாதிரி எப்போதும் ஒன்றுமே தெரியாது நிலையில் இருக்கப்போவதில்லை. பல பத்திரிகை நிருபர்களும் தொலைத்தொடர்பு வல்லுநர்களும் அமெரிக்க அரசு அதிகாரிகளின் போர்க் குற்றங்களை மூடிமறைத்து புகழ்ந்து பேசுகிறார்கள். எதிர்வரும் காலங்களில் இதே பத்திரிகை நிருபர்கள் ஆப்கானில் நடந்த இரத்தக்களரியைப் பற்றி தாம் எழுதியது பற்றி விளங்கப்படுத்த பிரச்சனைக்குள்ளாவார்கள். இப்போதோ அல்லது பின்னரோ நடந்த நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான அமெரிக்க அரச நிர்வாகிகள் போர் குற்றங்களுக்காக தகுந்த சட்ட மன்றங்களில் பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

பார்க்க:

தலிபான் போர்க் கைதிகள் மீது அமெரிக்கக் கொடுமை: ஜெனிவா உடன்படிக்கை என்னவாயிற்று?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் யுத்தக் குற்றங்கள்: மஸார்- இ- ஷரீபில் நூற்றுக்கணக்கான யுத்தக் கைதிகள் கொலைசெய்யப்பட்டனர்