WSWS :செய்திகள்
& ஆய்வுகள்:
ஆசியா
: ஆப்கானிஸ்தான்
Thousands of POWs held in appalling conditions in Afghanistan
ஆயிரக்கணக்கான யுத்தக் கைதிகள் ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியூட்டும் சூழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்
By PeterSymonds
8 January 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தானில் தற்காலிக
சிறை முகாம்களிலும் சிறைகளிலும் மோசமான சூழ்நிலைமைகளில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில்
பெரும்பாலோர் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து நடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் ஆவர். யுத்தக் கைதிகளை
எவரும் சந்திப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அளவுக்கு அதிகமான கூட்ட நெருக்கடி மற்றும் சுகாதார வசதி
இன்மை, போதிய உணவு மற்றும் மருத்துவ வசதி இன்மை மற்றும் சித்திரவதையைப் பயன்படுத்தல் பற்றிய செய்திகள் வெளிப்பட்டிருக்கின்றன.
பாக்கிஸ்தானில் உள்ள அமெரிக்க பேச்சாளர் ஒருவரின்படி, டிசம்பர் இறுதிவாக்கில்
7000 தலிபான் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறைச்சாலைகளைப் பார்க்க வாய்ப்புக்
கிடைத்த வேளையில், யுத்தக் கைதிகளில் ஏதோ 4000 பேர்களை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. வட ஆப்கானிஸ்தானில்
உள்ள ஷிபர்கான் சிறையில் கடந்த மாதம் ஒரு சிறைக் கைதி நோய்வாய்ப்பட்டு இறந்த பின்னர், தடுப்புக் காவல்
சூழ்நிலைகள் பற்றி இவ்வமைப்பானது கவலைகளைத் தெரிவித்துள்ளது.
800 கைதிகளை வைப்பதற்காகக் கட்டப்பட்ட சிறையில் கிட்டத்தட்ட 3,500 யுத்தக்
கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். டஜன்கள் கணக்கில் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு செய்தியின் படி, "வலியால் கத்திக் கொண்டிருந்தஒருவர் உட்பட, நடக்கமுடியாத அளவு பலவீனமாக உள்ள அரைடஜன்
ஆட்கள், சொட்டுச் சொட்டாக மருந்தை நரம்பூடாகச் செலுத்தும் வசதி உள்ள மருத்துவ அறைக்கு, சிறை அறைகளில்
இருந்து கொண்டு செல்லப்பட்டனர்". ஒரு மாதத்திற்கு முன்னர் சிறைகளுக்கு மாற்றப்பட்டதில் பலர் காயம்பட்டிருந்தனர்.
அமெரிக்க அதிகாரிகள் கைதிகள் பெறும் மருத்துவ சிகிச்சைக்கு தாங்கள் பொறுப்பல்ல
என்று கூறுகின்ற அதேவேளை, யுத்தக் கைதிகள் வாஷிங்டனின் கட்டளையின் பேரிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.
நவம்பரில் தலிபான் ஆட்சி வீழ்ந்து கொண்டிருந்தபோது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்
"பேச்சுவார்தைப் பேரம் இல்லை" என்றும் குறிப்பாக வெளிநாட்டு தலிபான்கள் "ஒன்றில் கொல்லப்படுவர் அல்லது கைதிகளாக
நடத்தப்படுவர்" என்றும் திரும்பத்திரும்ப வலியுறுத்தினார்.
பெரிய ஷிபர்கான் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் குண்டுஸ் நகர் வீழ்ச்சிக்குப்
பின்னர் கைதிகளானவர்கள். அவர்களில் கடந்த நவம்பரில் மஸார்-இ-ஷெரிப் அருகே உள்ள குவாலா-இ-ஜாங்கி
சிறைச்சாலையில் அமெரிக்கா தலைமையில் நூற்றுக் கணக்கான யுத்தக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதில் தப்பிப்
பிழைத்தவர்களும் அடங்குவர். குண்டுஸ் நகரில் சரணடைந்ததற்கும் பிடிபட்ட ஆயிரக்கணக்கான தலிபான்களுக்கும் பொறுப்பாளராக
இருந்த இழிபுகழ் பெற்ற உஸ்பெக் யுத்த பிரபு ஜெனரல் அப்துல் ரஷீத் தோஸ்துமிற்கு அது தளம் ஆகும்.
பலகைதிகள் ஷிபர்கானுக்கு மூடி முத்திரையிடப்பட்ட உலோக பெட்டகங்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்ட சாட்சி படி, மஸார்-இ-ஷெரிப் நகருக்கு வெளியே
குவாலா ஜெய்னாவில் பயணப் பாதுகாப்பு நிறுத்தப்பட்ட போது, துருப்புக்கள் சில பெட்டகங்களின் மீது துப்பாக்கிச்
சூடு நடத்தினர். அவர், "குண்டுகள் துளைத்த மூன்று அல்லது நான்கு பெட்டகங்களையும் அவற்றிலிருந்து இரத்தம் வழிந்தோடியதையும்
கண்டதாக" அத்தகவல் கூறியது. தோஸ்தும்மின் சொந்த உளவுத்துறை தலைவர் உஸ்மான்கான், வழியில் 43 கைதிகள்
மூச்சுத்திணறலாலோ அல்லது காயத்தாலோ இறந்தனர் என்று ஒப்புக் கொண்டார்.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகளின் படி, யுத்தக் கைதிகளை விடுதலை செய்வதில் ஏதாவது
தாமதம் இருக்குமானால் அது கைதிகளை விசாரணை செய்ய அமெரிக்கா கோருவதால் தான். ஆப்கானிஸ்தானில்
பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான தலிபான் கைதிகளை சி.ஐ.ஏ, எப்.பி.ஐ மற்றும் அமெரிக்க அதிகாரிகள்
கொண்ட குழுக்கள் குறுக்கு விசாரணை செய்தன மற்றும் மேலும் விசாரணை செய்யப்பட வேண்டியவர்கள் யாவர் என்று
இனம்காட்டுமாறு பாக்கிஸ்தானைக் கூட கேட்டுக் கொண்டு அதில் படிப்படியாக ஈடுபட்டனர். நடத்தப்பட்ட முறைகள்
யுத்தக் கைதிகள் பற்றிய ஜெனிவா விதிமுறைகளை அப்பட்டமாக அவமதித்தன. அவ்விதிகள் யுத்தக் கைதிகள் தங்களின்
பெயர், வகிக்கும் பதவி, பிறந்த தேதி மற்றும் எண் இவற்றை மட்டுமே கொடுக்க கடப்பாடுடையவர்கள் என்று குறிப்பிடுகின்றன.
புஷ் நிர்வாகமானது யுத்தக் கைதிகளை "பிடித்து வைக்கப்பட்டவர்கள்" தானேயொழிய
"யுத்தக் கைதிகள் அல்லர்" என்று குறித்ததன் மூலம் சர்வதேச விதிமுறை மீறல்களை மெளனமாக ஒப்புக் கொண்டது.
யுத்தக் கைதிகள் ஜெனிவா விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட உரிமைகளுக்கு உரியவர்கள். இருப்பினும், அந்த வார்த்தை,
பின்வரும் சரியான கேள்வியை மட்டும் எழுப்புகிறது-- "பிடித்துவைக்கப்பட்டவர்கள்" ஜெனிவா விதிமுறைகளின் கீழ் வைக்கப்படவில்லை
எனில் பின் அவர்கள் எந்த அடிப்படையில் சிறை வைக்கப்பட்டனர்?
புஷ் நிர்வாகமானது தலிபானுக்கும் பின் லேடனின் அல்கொய்தா வலைப்பின்னலுக்கும் இடையிலான
எந்தவித வேறுபாட்டையும் வேண்டுமென்றே அழிக்கின்றது. அனைத்து யுத்தக் கைதிகளையும் "பயங்கரவாதிகள்" என
பொருள் தொக்கி நிற்குமாறு முத்திரை குத்துவதன் மூலம், வாஷிங்டன் ஜெனிவா விதிமுறைகளின் கீழ் யுத்தக் கைதிகளுக்கு
வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளைக் கூட வழக்கொழித்ததை நியாயப்படுத்த முனைகிறது. ஆனால் பிடித்து
வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தலிபான்களில் பலரை, நியூயோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட, ஷிபர்கானில் கைதிகளுடன்
நடத்தப்பட்ட வரிசையான நேர்காணல்களின்படி அல்கொய்தா உறுப்பினர்கள் என்று கூறுவது கடினமானது.
* 22 வயதுடைய முகம்மது இப்றாஹீம் எனும் மொரோக்கன் அவரது குடும்பத்துடன்
இத்தாலியில் வசித்து வந்தார். அவரது நண்பரின் ஆலோசனைப்படி அவர் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானுக்கு
வந்தார். குண்டுஸ் நகருக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் அவர் காபூலில் ஒரு மாதம் செலவழித்தார். "நான் முன்னனியில்
வெறுமனே உட்கார்ந்திருந்தேன்-மூன்று மாதங்களாக நான் சண்டையிடவில்லை. அங்கு செய்வதற்கு அதிகமாய் எதுவும்
இல்லை. எனது குடும்பத்துடன் உள்ள பிரச்சினை காரணமாகவே நான் இங்கு வந்தேன். அங்கு தலிபான் பற்றி சொல்வதற்கு
ஒன்றும் இல்லை. முடிவில் அவர்கள் பெரும் அழிவினை அடைந்தனர்."
* செளதி அரேபியாவில் ஒரு கடையில் வேலை செய்து வந்த, 17 வயதுடைய அப்துல்
சலாம் என்பவர் புனிதப் போரில் பங்கெடுத்துக் கொள்வதற்காக தமது நண்பருடன் ஆப்கானிஸ்தானுக்கு வந்தார்.
"நான் இங்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்தேன், ஒரு மாதம் காபூலில் மற்றும் ஒரு மாதம் குண்டுஸில்" என
அவர் குறிப்பிட்டார். தான் பிடிபடுவதற்கு முன்னர் உண்மையான சண்டை எதிலும் ஒருபோதும் தான் பங்கேற்கவில்லை
என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
* டுர்சாம் எனும் 30 வயது நிரம்பிய, சின்ஜியாங் மாகாணத்திலிருந்து வந்த உய்குர்
இன முஸ்லிம், தாம் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு வந்ததாகவும் உஸ்பெக்கிஸ்தானிலிருந்து வந்த போராளிகள் குழுவில்
சேரும்படி பலவந்தப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். "நான் இங்கு சண்டையிடுவதற்கு வரவில்லை ஆனால் தலிபான்கள்
எங்களை குண்டுஸில் சண்டையிடுவதற்கு கூட்டிச் சென்றனர்... அவர்கள் என்னைச் சிறைப்பிடித்த பொழுது, படைவீரர்கள்
நான் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவேன் என்று கூறினர். சீனாவில் என்னை அவர்கள் சுட்டுக் கொல்வார்கள்.
நான் என்ன செய்வது?"
சித்திரவதையைப் பயன்படுத்தல்
யுத்தக் கைதிகளிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக சித்திரவதையைப் பயன்படுத்தவில்லை
என அமெரிக்கா மறுக்கிறது. ஆனால் அமெரிக்க விசாரணை அதிகாரிகள், மனச்சான்றின் குத்தல்கள் எதுவும் இல்லாத
அவர்களின் ஆப்கானிய கூட்டாளிகளுடன் இணைந்து வேலை செய்கின்றனர். காபூலின் 22 தடுப்புக் காவல் மையங்களுள்
ஒன்றினது ஆளுநர், அப்துல் குவாயும் ஒளிவு மறைவு இன்றி கார்டியன் பத்திரிகையிடம் குறிப்பிட்டார்: "அவர்கள்
மன்னிப்பு வேண்டி மனம் திறப்பதற்கு முதலில் அவர்களிடம் (கைதிகளிடம்) நாங்கள் இஸ்லாமிய மற்றும் மனிதாபிமான
நடத்தையைக் காட்டுவோம், அது வேலை செய்யவில்லை என்றால் பின்னர் நாம் சரீர ரீதியான பலத்தைப்
பயன்படுத்துவோம்." அவர்கள் அல்கொய்தா உறுப்பினர்கள் என்பதற்கு கடவுச் சீட்டுக்களையோ அல்லது அடையாள
அட்டைகளையோ கொண்டிருக்கவில்லை, துப்பாக்கிகளைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களது குற்றத்தை
நெருங்கிப் பிடிப்பதற்கு மனம் திறந்து மன்னிப்புக் கோருவது தேவைப்படுகிறது என்று குவாயும் கூறினார்.
காபூலின் வட புறநகர்ப்பகுதியில் சோதனைச்சாவடியில் பொறுப்பாளராக இருக்கும்,
வடக்கு கூட்டணி படைவீரர் அகை குல், ஒரு சிறைக் கைதியை ஒரு உலோகப் பெட்டகத்தில் நான்கு வாரங்களாக அடைத்து
வைத்திருந்தார். 40 வயதான முகம்மது ரஹீம் என்பவர், தலிபான்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,
தலைநகரில் கைது செய்யப்பட்டு, உதைக்கப்பட்டார், குத்துவிடப்பட்டார் மற்றும் பிரம்பால் அடிக்கப்பட்டார். "அவர்கள்
என்னை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் அளவுக்கு அடித்தனர். இன்னும் நான் உடல் நலமற்று இருக்கிறேன் ஆனால்
அவர்கள் மருத்துவரை அழைத்துவர மாட்டார்கள்" என்றார் அவர். குல் வன்முறையைப் பயன்படுத்தியதாக வெளிப்படையாகக்
கூறினார்." நாங்கள் அவரை அடித்தோந்தான்; சிலவேளைகளில் அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க அதுதான்
ஒரே வழி."
அமெரிக்க அதிகாரிகளும் சரி ஆப்கான் அதிகாரிகளும் சரி யுத்தக் கைதிகளின் தலைவிதி
என்னவாக இருக்கும் என்பது பற்றி ஒன்றும் கூறமாட்டார்கள். இதுநாள்வரை, 339 யுத்தக் கைதிகள் தனிமைப்படுத்தவிட்டு
அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இராணுவம் காந்தஹார் விமான நிலையம் அருகே உள்ள தற்காலிக
சிறையில் அவர்களில் பெரும்பாலானோரை வைத்திருந்தது. பெண்டகனின் படி, 100 கைதிகளைக் கொண்ட முதலாவது
குழு கியூபாவில் உள்ள குவாண்டனாமோ குடாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் கொண்டு செல்லப்பட
இருக்கின்றது. அங்கு அவர்கள் முழுமையான தனிமைப்படலில் வைக்கப்பட இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட
குற்றம் சாட்டப்படவில்லை.
இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களின் நிலை நிச்சயம் இல்லாததாய் இருக்கிறது. கைதிகள்
குற்றங்களைச் செய்தார்களா என்று தான் தீர்மானிக்கும் வரை ஷிபர்கான் சிறையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
தலிபான் சிறைக் கைதிகள் எவரையும் தான் விடுவிக்கப் போவதில்லை என்று ஜெனரல் தோஸ்தும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்கானிப்புக் குழுவானது, ரஷ்யா,
சீனா, எகிப்து மற்றும் செளதி அரேபியா போன்ற நாடுகளுக்குத் திரும்பும் இஸ்லாமிய போராளிகள் சித்திரவதையையும்
மரணதண்டனைக்கான சாத்தியத்தையும் எதிர் கொள்வர் என்று ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஐக்கிய
அரசுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சித்திரவதைக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
சிறப்பாக அவ்வுடன்பாடு, சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று நம்புதற்கு கணிசமான அளவு ஆதாரங்கள்
இருக்கும் ஒரு நாட்டுக்கு அவர்கள் அனுப்பப்படுவதிலிருந்து தடுக்கிறது.
ஜெனரல் தோஸ்தும் ஏற்கனவே குறைந்தது 10 உஸ்பெக் கைதிகளை உஸ்பெக்கிஸ்தான்
ஜனாதிபதி இஸ்லாம் கரிமோவ் வற்புறுத்தலின் பேரில் அந்நாட்டுக்கு பலவந்தமாக அனுப்பி இருக்கிறார். தடை செய்யப்பட்ட
உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகின்ற அக்கைதிகள் கரிமோவின் கைகளில் தாங்கள்
இறக்கப்போவது உறுதி என்றும் தாங்கள் ஆப்கானிஸ்தானிலேயே அரசியல் அடைக்கலம் கோர விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
தோஸ்தும், காபூலில் உள்ள இடைக்கால அரசாங்கத்துடன் கலந்தாலோசிப்பதை இட்டுக் கவலைப்படாத அதேவேளை,
அவரது முடிவானது, கைதிகளை விசாரணை செய்ய வந்திருக்கும் அமெரிக்க இராணுவத்தின் அங்கீகாரத்தை கொண்டிருக்கவில்லை
என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.
|