WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா :
இலங்கை
New Sri Lankan goverment calls for peace talk
with the LTTE
இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கின்றது
By K.Ratnayake
3 January 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
இலங்கையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி
(UNP) அரசாங்கம்
நாட்டின் 18 வருட கால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் புதிய நிகழ்வாக
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE)
சமாதானப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் 12ம் திகதி தமது
அமைச்சரவையை நியமனம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின்படி சம்பிரதாயப் பூர்வமான பேச்சுவார்த்தைகள்
மார்ச் மாதத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்ததன் பிரதிபலிப்பாக
இரண்டு நாட்களின் பின்னர், யூ.என்.பி.யும் டிசம்பர் 24ம் திகதி முதல் அமுலுக்கு வரும் ஒரு மாதகால யுத்த
நிறுத்தத்தை டிசம்பர் 21ம் திகதி அறிவித்தது. இரு சாராரும் யுத்த நிறுத்தத்தை ஜனவரி 24ம் திகதிக்கும் மேலாக
நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்தோடு அரசாங்கமும் பிஸ்கட், டின் மீன் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும்
சில மருந்துகள், மண்ணெண்ணெய் போன்ற அடிப்படைப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிப்பதன் பேரில் விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் மீதான பொருளாதாரத் தடையை தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
விக்கிரமசிங்கா சில நாட்களின் பின்னர் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக
புது டில்லிக்குப் பறந்தார். அவர் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைச் சந்தித்த பின்னர் விடுத்த கூட்டறிக்கையில்
"இலங்கைப் பிரதமரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக" சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அது நாட்டின் வடக்கு கிழக்கில் ஒரு தனித் தமிழ் அரசுக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு ஆதரவளிக்க மறுத்ததோடு
இலங்கையின் "இறைமைக்கும் ஐக்கியத்துக்குமான" இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தியது.
அதேநேரம் இந்த முரண்பாட்டில் இந்தியா உத்தியோகபூர்வ மத்தியஸ்தராக கடமையாற்றாது
எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் வடக்குக் கிழக்கு
பகுதிக்கு விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதையும் இந்தப் பிரதேசங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பரவலாக்கத்தையும்
மேற்பார்வை செய்வதற்காக அமைதி காக்கும்படை எனும் பெயரில் 100,000 இந்திய இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த ஒப்பந்தம் இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டை மூண்டதை அடுத்து குழம்பிப்
போனது. 1990ல் இலங்கை அரசாங்கம் இந்திய இராணுவத்தை வாபஸ்பெறுமாறு வற்புறுத்தியது.
யூ.என்.பி. அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஒரு இணக்கப்பாட்டுக்காக கட்டாயப்படுத்துவதன்
பேரில், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதம் மீதான பூகோள யுத்தத்தை" சுரண்டிக்கொள்ள தெளிவாக காத்திருக்கின்றது.
விக்கிரமசிங்கா புதுடில்லியில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றும்போது, அவர் அமெரிக்காவில்
செப்டம்பர் 11 தாக்குதலை தொடர்ந்து உருவான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு இருந்த பூகோள அழுத்தத்தைப்
போல் தாமும் வெற்றிகரமான எதிர்பார்ப்பில் இருப்பதாகத் தெரிவித்தார். முந்நாள் பொதுஜன முன்னணி அரசாங்கம்
விடுதலைப் புலிகளுக்கு அனைத்துலக ரீதியில் கிடைத்து வரும் நிதி வளம் மற்றும் அரசியல் ஆதரவை இல்லாமல் செய்வதற்காக
அதை ஒரு "பயங்கரவாத இயக்கமாக" முத்திரை குத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கடந்த வருடம்
இடம்பெயர்ந்துள்ள தமிழர்களை பெருமளவில் கொண்டுள்ள கனடாவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதில்
அமெரிக்காவுடன் இணைந்து கொண்டன.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பி இரண்டு நாட்களின் பின்னர், நோர்வே பிரதமர்
கஜெல் மக்னே பொன்டெவிக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விக்கிரமசிங்கா எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும்
நோர்வே மத்தியஸ்தம் செய்வதைப் பற்றி ஆராயுமாறு கேட்டுக் கொண்டார். நோர்வே வெளியுறவு அமைச்சு
"பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அடிப்படைகள் ஏதும் உள்ளனவா என்பதை அறிய தமது நாடு இரு
தரப்புடனும் தொடர்பு கொள்ளும் என உறுதியளித்தது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய வல்லரசுகளின் ஆதரவுடன் முன்னைய பொதுஜன
முன்னணி அரசாங்கத்தை விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தள்ளும் தொடர்ச்சியான முயற்சிக்கு
நோர்வேயும் இந்தியாவும் மத்தியஸ்தம் வகித்தன. கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா நோர்வேயின்
விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெயிம் விடுதலைப் புலிகளுக்கு பக்கச் சார்பானவராக இருந்ததாக குற்றம் சாட்டியதை
அடுத்து நோர்வேயின் மத்தியஸ்த்த முயற்சிகள் தடைப்பட்டன.
டிசம்பர் 5ம் திகதி தேர்தலில் விக்கிரமசிங்கா விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு
அழைப்பு விடுத்தமை ஒரு பிரதான விடயமாகியது. குமாரதுங்காவும் பொதுஜன முன்னணியும் அவர்களது அரசியல் பங்காளியான
மக்கள் விடுதலை முன்னணியுடன் (JVP)
சேர்ந்து, விடுதலைப் புலிகள் தமது தனிநாட்டுக்கான கோரிக்கையை அடைவதற்காக புலிகளுடன் இரகசிய உறவு வைத்துக்
கொண்டுள்ளதாக யூ.என்.பி.யை குற்றம் சாட்டினர். இந்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் தமது நிலைப்பாட்டை தூக்கிப்பிடிப்பதற்காக
தமிழர் விரோத பேரினவாதத்துக்கு அழைப்பு விடுக்கும் அரசாங்கத்தின் ஒரு சீரழிந்த முயற்சியாக விளங்கியது. எவ்வாறெனினும்
இந்தத் தந்திரம் தோற்றுப்போன அதேவேளை யூ.என்.பி.யும் அதன் தேர்தல் கூட்டும் ஒரு குறுகிய ஆசனப்
பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டன. யூ.என்.பி, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து
கொண்டிருக்கும் வரை தமிழ் கட்சி கூட்டமைப்பின் ஆதரவில் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க முடியும்.
பொதுஜன முன்னணி 1994ல் சில சாதாரண காரணங்களில் அதிகாரத்துக்கு வந்தது. யுத்தத்தை
ஆரம்பித்து அதை தொடர்ச்சியாக முன்னெடுத்தமைக்கு நேரடி பொறுப்பாளியான பழமைவாத யூ.என்.பி.யின்
பதிவுகளை சுட்டிக்காட்டிய குமாரதுங்கா, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையின் ஊடாக யுத்தத்துக்கு முடிவு
கட்டுவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அவரது முயற்சிகள் தற்போது விக்கிரமசிங்காவின்
முன்நிலையில் இருந்து கொண்டுள்ள அதே அரசியல் தடைகளால் மூழ்கிப் போனது. பல தசாப்தங்களாக யூ.என்.பி.யும்
பொதுஜன முன்னணியும் தமது அடிப்படை ஆதரவுக்கு முண்டு கொடுப்பதன் பேரிலும் தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும்
சிங்கள பேரினவாதத்தோடு அணிதிரண்டு கொண்டுள்ளன. சிங்களப் பேரினவாதத்துக்கு எண்ணெய் வார்த்து வந்த இரு
கட்சிகளும் இப்போது நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு சலுகை வழங்குவதற்கான எந்த ஒரு சமிக்கையும், அவர்களது
சொந்த பிரிவுகளுக்குள்ளேயிருந்தும் கூட பேரினவாத பின்னணியை கிளப்பிவிடும் நிலைமைக்கு முகம் கொடுக்கின்றன.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான யூ.என்.பி.யின் அழைப்புக்கு பின்னால் பிரதான
உத்வேகமாக இருந்துகொண்டிருப்பவை பெரு வர்த்தகர்களின் பலம் வாய்ந்த பகுதியினரின் கோரிக்கைகளாகும்.
1983ல் யுத்தத்துக்கு ஆதரவளித்த கூட்டுத்தாபனத் தலைவர்கள் வெளிநாட்டு முதலீட்டைக் கவர்வதற்காகவும் ஆழம்
கண்டுவரும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சமாதானத்துக்காக நெருக்கி
வருகின்றார்கள். கடந்த ஆண்டின் மூன்றாவது கால் பகுதியில் மொத்த தேசிய உற்பத்தி முன்னொருபோதும் இல்லாத
வகையில் 3.7 சதவீதம் வரையிலான பின்னடைவை எட்டியது. கடந்த ஆண்டில் அரசாங்க வருமானத்திலான வீழ்ச்சி
30,458 (358 அமெரிக்க டாலர்கள்) மில்லியன் ரூபாவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2000ம் ஆண்டு தேர்தலில் பொதுஜன முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது
தொடக்கம், பெரு வர்த்தகர்கள் குமாரதுங்காவை யூ.என்.பி.யுடன் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்காக
நெருக்கி வந்தனர். இந்தப் பிரச்சாரம் அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்
கட்சி ஆசனத்துக்கு மாறி பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கச் செய்ததையடுத்து தீவிரமடைந்தது.
ஆனால், தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகளை அடுத்து பொதுஜன முன்னணி யூ.என்.பி.யுடன் இணக்கப்பாடொன்றை
ஏற்படுத்தத் தவறியதோடு, அதற்குப் பதிலாக பேரினவாத ஜே.வி.பி.யின் பக்கம் திரும்பிய போது பெரு வர்த்தகக்
குழுவினர் தமது ஆதரவை விலக்கிக் கொண்டனர். பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு குழுவினர்
அரசாங்கத்திலிருந்து வெளியேறியமை ஒரு புதிய தேர்தலுக்கான தாக்கத்தை உக்கிரமாக்கியது.
பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
மிலிந்த மொரகொடவுடன் சேர்ந்து யூ.என்.பி.யின் சமாதான ஆரம்பிப்புகளுக்கு ஒத்துழைப்பதாக குற்றம் சாட்டப்பட்டார்.
பீரிஸ், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கான பொதுஜன முன்னணியின் திட்டங்களுக்கு அடிப்படையை வழங்கியதாக
சொல்லப்பட்ட அரசியல் யாப்பு மாற்றத்தின் சிற்பியாகும். இந்தத் திட்டம் 1999ல் அரசியல் பொதி பாராளுமன்றத்தின்
முன் சமர்பிக்கப்பட்டபோது தோல்வியடைந்தது. யூ.என்.பி, ஜே.வி.பி.யினராலும் பெளத்த பெரும் தலைவர்களாலும்
மற்றும் ஏனையத் தீவிரவாதக் கழுக்களாலும் தூண்டிவிடப்பட்ட பேரினவாத போக்கின் அடிப்படையில் தமது ஆதரவை விலக்கிக்
கொண்டதோடு, மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையுடன் அரசியல் அமைப்பு மாற்றத்தினை செய்வதற்கான வாய்ப்பை
குமாரதுங்கவுக்கு இல்லாமல் செய்தது.
இலங்கையில் "சமாதான ஆரம்பிப்புகளின் இடைஞ்சல்களும் அநுகூலங்களும் நிறைந்த வரலாற்றுப்
பார்வையில், விக்கிரமசிங்கவின் புதிய நகர்வுகளும் அதே அரசியல் அழுத்தங்களுக்குள் அவஸ்தைப்படும் என்பதையிட்டு
ஆளும் வட்டாரங்களுக்குள் சந்தேகத்துக்கு இடமற்ற விதத்திலான அக்கறை இருந்து கொண்டுள்ளது. யூ.என்.பி. தேர்தலில்
வெற்றி பெற்று பாராளுமன்ற ஆசனங்களில் பெரும்பான்மையை கொண்டுள்ள அதேவேளை குமாரதுங்க இன்னமும் சக்திவாய்ந்த
ஜனாதிபதிப் பதவியில் இருந்துகொண்டுள்ளதோடு அரசாங்கத்தின் திட்டங்களுக்கு குழிபறிக்கும் நிலைப்பாட்டிலும் இருந்து
கொண்டுள்ளார். இன்னமும் பொதுஜன முன்னணி யூ.என்.பி.யின் திட்டங்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
குமாரதுங்க இந்த ஆண்டு சமாதானத்தின் ஆண்டாக விளங்கும் என தமது "எண்ணத்தை" வெளிப்படுத்திய போதிலும் விபரமான
கருத்துக்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.
திரைக்குப் பின்னால் பெரு வியாபாரிகள் குமாரதுங்காவையும் பொதுஜன முன்னணியையும்
பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்குமாறு நெருக்கி வருகின்றார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. பேச்சுவார்த்தைகளுக்கு
நகர்த்திக் கொண்டிருக்கும் வர்த்தகர் குழுக்களின் ஒரு கூட்டமைப்பான ஸ்ரீலங்கா பெஸ்ட் இயக்கத்தின் தலைவர் ஜகத்
பெர்னான்டோ, தொடர்புசாதனங்களுக்கு பேசுகையில்: "அரசாங்கம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வை
நிறைவேற்றுவதற்கான முன்நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஒரு மக்கள் ஆணையை வெற்றி கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான அறிகுறிகள் தொடர்பான வர்த்தக வட்டாரங்களின் திட நம்பிக்கை டிசம்பர் 5ம்
திகதி முதல் டிசம்பர் 24ம் திகதிக்குள் 526 புள்ளிகளில் இருந்து 621 புள்ளிகள் வரை, 20 சதவீதம் உயர்ந்த
பங்குச் சந்தை சுட்டென்களில் பிரதிபலித்தது.
ஆனால் யூ.என்.பி. பொதுஜன முன்னணி இரண்டும் சிங்களத் தீவிரவாதிகளின் தொடர்ச்சியான
எதிர்ப்புக்கு முகம் கொடுக்கின்றன. சிங்கள உறுமய கட்சி அரசாங்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பை கண்டனம் செய்துள்ளது.
"அது நிச்சயமாக விடுதலைப் புலிகளின் நகர்வுகளுக்கு அனுகூலமான முறையில் பிரதிபலிக்கும் ஒரு மடைத்தனமான செயலாகும்"
என அது குறிப்பிட்டிருந்தது. ஜே.வி.பி, விடுதலைப் புலிகள் அரசாங்கத்தின் கைகளில் சரணடையும் வரையும், தனித்
தமிழ் அரசுக்கான கோரிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிடும் வரையும் அவர்கள் மீதான தடையை தொடரவேண்டும்
எனக் கோரி ஒரு அறிக்கையை விநியோகித்தது. இந்தக் கட்சி, அரசாங்கம் "நாட்டைப் பிரிப்பதற்காக" பேச்சுவார்த்தை
நடத்துவதாக குற்றம் சாட்டி ஒரு பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள், தன் பங்கிற்கு அனைத்துலக அழுத்தங்களின் கீழ் யூ.என்.பி. அரசாங்கத்துடனான
பேச்சுவார்த்தைக்கு சமூகமளிக்க ஆவலை வெளிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 19ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் அது தேர்தல்
பெறுபேறுகளை ஒரு "சமாதானத்துக்கான மக்கள் ஆணையாக" வரவேற்றதோடு தனது ஒருதலைப் பட்சமான யுத்த
நிறுத்தம் "சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்குமான ஒரு உண்மையான விருப்பத்தின்" வெளிப்பாடாக
நோக்கப்பட வேண்டும் என அறிவித்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒரு சுதந்திர தமிழ் ஈழத்துக்கு
குறைந்த ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாரானவராக இருப்பதாக சுட்டிக் காட்டினார். விடுதலைப் புலிகளின் ஒரு
தனியான முதலாளித்துவ அரசுக்கான கோரிக்கையானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.
மாறாக தீவின் வடக்கையும் கிழக்கையும் முதலீட்டாளர்களுக்கான குறைந்த கூலி மேடையாக மாற்றும் தமிழ் முதலாளித்துவவாதிகளின்
குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
விக்கிரமசிங்கா தனக்கு முன்னால் உள்ள அரசியல் படுகுழிகளையிட்டு நன்கு உணர்ந்து
கொண்டுள்ளார். அவர் புதுடில்லியில் "அங்கு முறிவுகள் இருக்கக் கூடும், தடைகளும் ஒரு தொகை சிறமங்களும் இருக்கக்
கூடும்" எனக் குறிப்பிட்டார். யூ.என்.பி. தாம் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு முன்வைத்தவற்றின்
அடிப்படையை இன்னமும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அது 1999ல் குமாரதுங்கவினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட
அதிகாரப் பரவலாக்கல் பொதியின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பிரதியாகவே இருக்கக்கூடும். குமாரதுங்கவை போல் விக்கிரமசிங்கவுக்கும்
எந்த ஒரு அரசியலமைப்பு மாற்றத்தையும் நடைமுறைக்கிட குறைந்த பட்சம் சில எதிர்க் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்களின் ஆதரவையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
விக்கிரமசிங்காவின் திட்டங்களின் இறுதி வடிவம் என்னவாக இருந்த போதிலும், அவர்கள்
தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சுரண்டலை தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்க சிங்களம்,
தமிழ், மற்றும் முஸ்லிம் ஆளும் கும்பல்களுக்கிடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்குகளுக்கிடையில் ஒரு தீர்வை
உருவாக்கிக் கொள்வதை குறிக்கோளாகக் கொண்டிருந்த குமாரதுங்காவின் அதிகாரப் பரவலாக்கள் பொதியை
விரும்புவார்கள். இவ்வாறான ஒரு ஒழுங்கு இன மற்றும் மதப் பிரிவினைகளுக்கு வழிவகுப்பதோடு மேலும் பதட்டநிலையையும்
முரண்பாடுகளையும் உருவாக்கும்.
|