World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கOnce again on the US "free press" Fox News chief doubled as political adviser to Bush மீண்டும் அமெரிக்க "சுதந்திரமான பத்திரிகைத் துறை" பற்றி: By David Walsh சென்ற வருடம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்க்கு அரசியல் ஆலோசனை தர முன்வருவதாக ஃபொக்ஸ் செய்திப் பிரிவின் தலைவர் ரொஜே எய்ல்ஸ் இரகசிய குறிப்பு அனுப்பியதாக வெளியான செய்தி, அமெரிக்க அரசியல் வாழ்வின் அடிப்படை உண்மைகளில் ஒன்றை -- மக்கள் தொடர்பு சாதனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே நிலவும் முற்றிலும் நேர்மையற்ற, அந்தரங்கமான அரசியல் தொடர்பை-- விளக்கிக் காட்டுகின்றது. பொப் வூட்வார்ட்ஸின் போர் முனையில் புஷ் என்ற புதிய புத்தகத்தில் மேற்கோள்காட்டிய குறிப்புத்தான் எய்ல்ஸ்---புஷ் விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. செப்டம்பர் 11 அன்று விமான கடத்தல் மற்றும் மோதல் நடந்தபின் முதல் நூறு நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களை, புஷ்ஷின் வெள்ளை மாளிகையில் பணிபுரிவோர் தந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டதே அந்த புத்தகம். அக்டோபர் 7, 2001 அன்று புஷ்ஷின் தலைமை அரசியல் ஆலோசகர் கார்ல் ரோவ், எய்ல்ஸிடமிருந்து ஒரு "இரகசிய செய்தித் தொடர்பை" ப் பெற்று ஜனாதிபதிக்கு அதை வழங்கினாரென்று வூட்வார்ட் விவரிக்கிறார். வூட்வார்ட் மேலும் தொடர்கையில், "மிகுந்த ஆடம்பரமிக்க, மதிப்பிழந்த எய்ல்ஸ், ஒரு மக்கள் தொடர்பு சாதனத்தின் செயல் அலுவலராக இருக்கும் அவர், தற்சமயம் ஃபாக்ஸ் செய்திப்பிரிவின் தலைவராகவும் திகழ்பவர். பழமைவாத அதிகம் மக்கள் விரும்பிப்பார்க்கும் தொலைக்காட்சி கேபிள் வலைப்பின்னல்தான் அந்த ஃபொக்ஸ்." இந்த நிலையில், எய்ல்ஸ் அரசியல் ஆலோசனை வழங்கக்கூடாது என்பது கருத்தாக இருந்தமையால், அது மிகுந்த இரகசியமானதாகவே வைக்கப்பட்டிருந்தது. அவரது மறைமுக செய்தியாவது, "தீவிரவாதிகள் மீது புஷ் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என்று நம்பும்வரை, அமெரிக்க பொதுமக்கள் மிகுந்த சகிப்புத்தன்மையோடு காத்திருப்பார்கள். புஷ் அவ்வாறு கடுமையாக நடந்துகொள்ள தவறினால் மக்கள் ஆதரவு குறைந்துவிடும்" என்பதுதான். இவ்வாறாக நாட்டின் பிரதான செய்தி வெளியிடும் பிரிவுகளின் ஒன்றின் தலைவர் ஜனாதிபதிக்கு சிறந்த முறையில் எப்படி பொதுமக்களின் கருத்தைக் கணிக்க வேண்டும் என்று கற்பித்துள்ளார். இவ்வாறு செய்கையில், எய்ல்ஸ் தன் உயர்மட்ட அரசியல் தொடர்புகள் மூலம் ஃபாக்ஸ் செய்தியாளர்களும், வர்ணனையாளர்களும் செய்கின்ற தினசரி வேலையையும் செய்தார் - அதாவது பொய்களைத் திரித்து, முழு உண்மைச் செய்திகளைத் தராமல், அரசாங்க கைப்பிரசுரங்களை செய்தியாக்கி பொதுமக்களுக்கு தவறான தகவல்களைத் தந்து ஏமாற்றி வருகிறார். போர் முனையில் புஷ் என்ற புத்தக வெளியீட்டுக்குப்பின், எய்ல்ஸ் ஒரு அறிக்கையை அளித்தார். அதில், தான் "ஒரு சாதாரண அமெரிக்க பிரஜையாக, வெள்ளை மாளிகையின் அலுவலருக்கு நாட்டில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலைக் கண்டித்து அனுப்பிய ஒரு அந்தரங்க கடிதம், அது தன் அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது" என்றார். இருப்பினும் பொதுமக்களுக்கு அக்கடிதத்திலுள்ள செய்தியினை வெளியிட மறுத்துவிட்டார். எய்ல்ஸ், தானும் வூட்வார்ட்டும் இது குறித்து பேசியது ஒரு "பெரிதுபடுத்தும் விவகாரமே அல்ல" என்கிறார். எய்ல்ஸின் இரகசிய கடிதக்குறிப்பும், அவருடைய நடத்தைக்கு வெட்கமின்றி தற்காத்துக் கொண்டதற்கும், செய்தி ஸ்தாபனங்களின் மத்தியில் எதிர்ப்பானது சிறு முணுமுணுப்பாகவே நிலவியது. "ஒரு செய்தி ஸ்தாபனத்தின் உயர் செயல் அலுவலரான அவருக்கு (எய்ல்சுக்கு), புஷ்க்கு அந்தரங்க ஆலோசனை தருவதைக்காட்டிலும் மேலும் தெரிந்திருக்கவேண்டும்" என்கிறது நியூயார்க் டைம்ஸ். டைம்ஸ் பத்திரிகையும், இன்னபிற பத்திரிகை ஸ்தாபனங்களும், எய்ல்ஸின் இந்த அப்பட்டமான ஆதரவையும், முரண்பாடான நலன்கள் பற்றியும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதற்கு நல்ல காரணம் உண்டு. முர்டொக்குக்கு (Murdoch) சொந்தமான ஃபொக்ஸ் செய்தியகமானது, மக்கள் தொடர்பு ஸ்தாபனத்திற்கும், அமெரிக்க அரசிற்கும் உள்ள வெட்கங்கெட்ட ஊழல் தொடர்பையும் எளிதாய் சிடுமூஞ்சித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. ஃபொக்ஸ் -க்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், முர்டொக்கின் செய்தி நிறுவனமானது இரண்டு பெரிய முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றான குடியரசு கட்சியோடு வெளிப்படையான பிணைப்பைக்கொண்டும், பாரபட்சத்தோடும் நடந்து கொள்கிறது. எய்ல்ஸின் சுயசரிதையே ஒரு சுவாரஸ்யமானது. 1960 களின் இறுதியில் ரிச்சார்ட் நிக்ஸனுக்கு பொதுஜன தொடர்பு ஸ்தாபன ஆலோசகராகவும், பின்னாளில் மீண்டும் அரசியலில் எழுந்த பெருமை எய்ல்ஸையே சாரும். 1984 வால்டர் மன்டேலுடன் சேர்ந்து, ரொனால்ட் ரீகனுக்கு இரண்டாம் விவாத உரையை எழுதிக்கொடுத்தார். பின்னர் கிண்டல் நிறைந்த வில்லி ஹார்டன் விளம்பரத்தை மூத்த ஜோர்ஜ் புஷ்க்கு 1988 தேர்தலின் போது உருவாக்கி கொடுத்தார் (இதில் ஒரு கறுப்பர் கொலை குற்றம் சாட்டப்பட்டும், புஷ்ஷின் ஜனநாயக கட்சி எதிர்ப்பாளரான, மசாஷுசெட்ஸ் மாகாண ஆளுநர் மைக்கேல் டுக்காகிஸ், அந்த கறுப்பரை பரோலில் எடுத்தபிறகு கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தலுக்காக கைது செய்யப்படுவதை சித்தரிக்கிறது அந்த விளம்பரம்). 1992ல் எய்ல்ஸ், தன் அரசியல் பிரவேசம் முடிந்ததாகவும், குறுகிய கால ரஷ் லிம்பக் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் தன்னை அரசியல் ஆலோசனை கொடுப்பதை தடுத்தது என்றார். இருந்தபோதும், நியூயோர்க் டெய்லி நியூஸின் வர்த்தகப் பகுதி பத்திரிகையாளர் போல் கொல்ஃபோர்டு, "எய்ல்ஸ், புஷ்ஷின் மறுதேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியும், குடியரசு கட்சி மாநாட்டில் ஜனாதிபதிக்கு ஏற்புரை தயார் செய்து கொடுத்து உதவி புரிந்தார்" என்கிறார். இப்படியாக, எய்ல்ஸ் தன் செய்தி நிறுவன தயாரிப்பு மூலமும், ஆலோசனை மையம் மூலமும் பெரும்பொருள் ஈட்டினார். 1996ஆம் ஆண்டு முதல் அவரே ஃபாக்ஸ் செய்திப் பிரிவின் தலைவராகவும், தலைமை செயல் அலுவலராகவும் அதன் தெடாக்கத்திலிருந்து இருக்கிறார். ஃபொக்ஸ் கேபிள் தடமானது (channel) வலதுசாரி கொள்கைகளுக்கு நாற்றங்காலாகத் திகழ்கின்றது. இது தொலைக்காட்சி பேட்டியாளரும், உணர்ச்சிபூர்வமான கருத்துக்களால் மக்களை கவர்ந்த அரசியல் பேச்சாளருமான பில்ஓரெய்லிக்கும் (அதிவலதுசாரி WorldNetDaily.com), பிரிட் ஹ்யூம் (அமெரிக்கன் ஸ்பெக்டேடர் (American Spectator) மற்றும் முர்டாக் வீக்லி ஸ்டான்டர்ட்க்கு கட்டுரை அளிப்பவர்), டேவிட் ஆஸ்மன் (வால்ஸ்ட்ரீட் இதழின் தலையங்க பக்க ஆசிரியர்), டோனி ஸ்னோ (முதன்முறையில் புஷ் ஆட்சியில் இருந்த முன்னாள் உரை எழுத்தாளர்), சீன் ஹானிட்டி (வானொலி பேட்டியாளர்), ஃபெரட் பார்ன்ஸ் (வீக்லி ஸ்டான்டர்ட்-ன் ஆசிரியர்) மற்றும் பலருக்கு இது உற்பத்திக்கூடமாக திகழ்கிறது. ஃபொக்ஸ் மற்றும் புஷ் நிர்வாகத்தின் இணைப்பானது, எய்ல்ஸ் - புஷ் இவர்களின் இரகசிய தொடர்புகளைப்போல் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுள்ளது. 2000 தேர்தல் நாள் அன்று, ஜோன் எல்லிஸ் என்ற புஷ்ஷின் ஒன்றுவிட்ட சகோதரர், ஃபொக்ஸின் "முடிவெடுக்கும் பிரிவின்" ("decision desk.") தலைவரானார். புஷ்ஷின், டெக்ஸாஸ் தலைமையகத்துடன், பல நீண்ட தொலைபேசி உரையாடல்களுக்குப் பின்னர், ஃப்ளோரிடாவில் புஷ் வெற்றி பெற்றதாக நவம்பர் 8, புதன்கிழமை அதிகாலையில் அவர் தெரிவித்தார். இந்த தகலைத் தெரிவிக்க பல வலைபின்னல்களும் தொலைபேசியில் அலைமோதின. புஷ் மக்கள் வாக்குகளை தேர்தலில் இழந்திருந்தாலும், புளோரிடாவில் புஷ் வெற்றி பெற்றது, ஜனாதிபதி பதவியை உத்தரவாதம் செய்வதற்கு தேவையான தேர்தல் தொகுதி வாக்குகளை குடியரசுக் கட்சி வேட்பாளருக்குப் பெற்றுதந்தது. புளோரிடாவில் இதைத் தொடர்ந்து, பல வலைப்பின்னல்களும் புஷ் வெற்றி பெற்றது செல்லாது என்று பிரச்சனையைக் கிளப்ப, இரண்டு மாத காலம் நடந்த வழக்கின் முடிவில் உச்சநீதிமன்றம் வெள்ளை மாளிகையை புஷ்-க்கு ஒப்படைத்து தீர்ப்பு வழங்கியது. ஃபொக்ஸ் தன் கருத்தாய்வில், ஜனாதிபதிக்கான தேர்தலில் புஷ் வென்றுவிட்டார் என்பதை மக்கள் மத்தியில் நம்பச் செய்து, பின்வரும் செயல்களில் அதையே சட்டபூர்வமாய் ஏற்றுக்கொண்டு நடந்து, தேர்தலில் திடமான பங்கு வகித்து, வெற்றிகரமான பிரசாரம் மூலம் டெக்ஸாஸ் மாகாண ஆளுநரான புஷ்ஷை வெள்ளை மாளிகையில் அமரச் செய்தது. செய்திகளை அரசு சூழ்ச்சியுடன் கையாளுதல், ஃபொக்ஸ்-க்கே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒன்றல்ல. ஒவ்வொரு தொலைக்காட்சி வலைப்பின்னல் குழுவும் தங்களை முழுவதுமாய் அதில் ஈடுபடுத்திக்கொண்டன. சென்ற இலையுதிர்காலத்தின்போது அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் போரில், சிஎன்என் செய்திப் பிரிவு தன் செய்தியாளர்களிடம், அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும், அமெரிக்கப்படை தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தையும் எடுக்காதவாறு பணித்தது. ஏனென்றால் படையெடுப்புக்கு கிடைத்த பெருவாரியான ஆதரவு அச்செய்திகளால் பலவீனப்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டது. சிஎன்என் தலைவர் வால்டர் ஐசக்ஸன் (Walter Isaacson), வாஷிங்டன் போஸ்ட்க்கு அளித்த பேட்டியில், "ஆப்கானிஸ்தானில் பொருட்சேதங்களையும், உயிர்ச்சேதங்களையும் அளவுக்கு அதிகமாய் குவிமையப்படுத்திக் காட்டுவது சரியல்ல" என்றார். "நாம் காலப்பகுதியுள் பிரவேசிக்கின்றோம், தலிபான் அடக்கியாண்ட ஆப்கானிஸ்தானிலிருந்து மேலும் திரட்டப்பட்ட செய்தி மற்றும் படத்தொகுப்புகளும் வரவுள்ளன" என்று சொல்லும் ஐசக்ஸன், "அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதலினால் பாதிப்படைந்த எண்ணற்றவர்களின் நிலையைத்தான் அங்குள்ள அப்பாவி மக்களும் படுகிறார்கள் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்ளும் வகையில், கட்டாயம் நாம் உணர்த்தவேண்டும்" என்றார். சிஎன்என்-ஐப் பொறுத்தவரை அதன் திருப்புமுனை, ``டெய்ல்வின்ட்`` செயல்திட்டத்தின்போது, இராணுவம் மற்றும் வலதுசாரி அமைப்புகளிடம் அதன் அடிபணிதலில் இருந்தது. 1998ல் கேபிள் செய்திப்பிரிவின் ஒளிபரப்பில், லாவோஸில் 1970ல் நடந்த போரில் அமெரிக்கா இரசாயன ஆயுதங்களை உபயோகித்ததாக, சரின் உனும் ஒரு உயிர்க்கொல்லி வாயுவை ``டெய்ல்வின்ட்`` செயல்திட்டத்தில் பயன்படுத்தியதற்கு போதுமான ஆதாரத்தையும் அதில் காட்டியது. முன்னாள் இராணுவ அதிகாரிகளும், இராணுவத்தைச் சாராதவர்களும், ஹென்ரி கிசிங்கர், கொலின் பவல் மற்றும் பலர் இந்த செய்தியை மறுத்தபோது, அவர்களிடம் சிஎன்என் அதிகாரிகள் நிபந்தனையில்லாமல் அடிபணிந்தனர். ரெட் ரேர்னர் மீண்டும் மீண்டும் மன்னிப்புக்கோர, அச்செய்தி நிறுவனம் தன் இரண்டு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை வேலை நீக்கம் செய்தது. இதுகாறும், மற்ற அரசியல் உயர்மட்ட குழுக்களைப்போல் இருந்த அமெரிக்க செய்தி
நிறுவனம், கடந்த சில பத்தாண்டுகளாக பக்குவப்பட்டு, பென்டகன் தரும் இடர்பயக்கும் தகவல்களையும், பொய்களையும்
வெளியிடும் ஒரு கவசக்குழாயாக செயல்பட்டு வருகிறது. ஈராக் மீது நடக்கவிருக்கும் படையெடுப்பிலும் காலனித்துவ பாணியிலான
ஆக்கிரமிப்பிலும், ஃபொக்ஸ், சிஎன்என் மற்றும் பெரிய செய்தி ஸ்தாபனங்கள் இதில் முக்கிய பங்காற்ற விருப்பமாய் உள்ளன. |