World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

EU summit in Copenhagen

Eastward expansion intensifies social antagonisms in European Union

கோபன்ஹாகனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் சமுதாய மோதல்களைத் தீவிரமாக்குகிறது

By Peter Schwarz
13 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

கோபன்ஹாகனில் டிசம்பர் 12,13 இரு தினங்களிலும் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு மேலும் 10 நாடுகளை உறுப்பினர்களாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில், புதிய உறுப்பினர்கள் சேர்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பூர்த்தியாகிவிடும். 2004 மேயில் புதிய உறுப்பினர்கள் ஐரோப்பிய யூனியனில் சேர்ந்துகொள்வார்கள்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 15ல் இருந்து 25 ஆக உயரும். இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் விரிவாக்கங்களின் விளைவாக, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் எல்லை வரை பரவிக்கிடக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாகிவிடும். அத்துடன், மத்திய தரைக்கடல் தீவு நாடுகளான, மால்டாவும், சைப்ரசும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாகின்றன. மேற்கு ஐரோப்பாவில் நோர்வேயும், சுவிட்சர்லாந்தும் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாகவில்லை. கிழக்குப் பகுதியில், யூகோஸ்லாவியாவில் இருந்து உருவாகிய நாடுகளும் (ஸ்லோவேனியா நீங்கலாக) அல்பானியாவும், ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் உள்ளன. ருமேனியாவும் பல்கேரியாவும் 2007 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிருக்கின்றன.

கோபன்ஹாகன் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள புதிய நாடுகளில், முன்னாள் சோவியத் யூனியனைச் சார்ந்த பால்டிக் பகுதியைச் சார்ந்த எஸ்தோனியா, லிதுவானியா, லட்வியா ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை 7.5 கோடியில் இருந்து அதிகரித்து 45.1 கோடியாகும். ஐரோப்பிய ஒன்றித்தின் மொத்த தேசிய உற்பத்தியின் அளவு (G.D.P) 9,200 பில்லியன் ஈரோக்களாக இருக்கும். இது அமெரிக்காவிற்கு இணையான, பொருள்கள் உற்பத்தி அளவாகும். மேலும் கோபன்ஹாகன் உச்சி மாநாடு, துருக்கியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டவட்டமான திகதியை துருக்கி அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆக்குறைந்தது 10 ஆண்டுகளில் துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதியாக உறுப்பினராக அனுமதிக்கப்படும்.

பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஐரோப்பிய ஒன்றியத்தை கிழக்கு நோக்கி விரிவாக்குவதற்கான இவ் உச்சிமாநாடு அதை முறையாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி இருந்தும் இந்த நிகழ்ச்சியில் விழாக்கால உணர்வுகளோ, கொண்டாட்டமோ இல்லை. மாறாக, அரசியல் கொந்தளிப்பு, அற்ப தகராறுகள், நிதி ஒதுக்கீடு தொடர்பான பேரங்கள் நிரம்பிக்கிடந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம் ஒரு அமைதி நிலவும் ஒன்றுபட்ட ஐரோப்பா கண்டத்தை உருவாக்காது. அதற்கு நேர்மாறாக, அரசியல் நெருக்கடிகளுக்குத் தூபம் போடுவதுடன், ஐரோப்பா முழுவதிலும் நிலவும், சமுதாய மோதல்கள் மேலும் அதிகரிப்பதுடன், கூர்மையடையும்.

பொருளாதார நலன்கள்

கிழக்கு நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைவதற்கு, பிரதான ஆதரவாளர்கள் குறிப்பாக ஜேர்மனியைச் சேர்ந்தவர்களான பெரிய ஐரோப்பிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளாவர். ''கிழக்கு நோக்கி விரிவாகும் ஒப்பந்தத்திற்கு உச்சிமாநாடு ஒப்புதல் அளித்ததும், ஜேர்மனியின் பெரு வர்த்தகம் அதைக் கொண்டாடும்'' என ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் குறைந்த கூலிக்கு கிடைப்பதால் அந்நாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஜேர்மன் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த நடைமுறையை அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் ஜேர்மன் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் வர்த்தகமும், நேரடி முதலீடுகளும் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிதாகச் சேரவிருக்கும் நாடுகள் ஜேர்மனின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 10 சதவீதம் பங்குபெறுகின்றன. இது அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்குச் சமமாகும். புதிய உறுப்பினர்களாகச் சேரவிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த வர்த்தகத்தில் 40% ஜேர்மனி நடத்தி வருகின்றது.

கிழக்கு ஐரோப்பிய ஜேர்மனியின் அக்கறைக்கு முக்கிய காரணம் ஜேர்மன் அரசியல்வாதி குந்தர் வெர்ஹூகன் (Günter Verheugen -சமூக ஜனநாயகக் கட்சி) ஐரோப்பிய ஒன்றித்தின் ஆணையாளராக விரிவாக்கத்திற்குப் பொறுப்பு ஏற்றிருப்பதில் இருந்து வெளிப்படுகின்றது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஜேர்மன் நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளன. சென்ற ஆண்டு மட்டும் 3.6 பில்லியன் யூரோக்களை ஜேர்மன் நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்துள்ளன. இந்தப் புள்ளி விபரத்தில் மீள்முதலீடு செய்யப்பட்ட லாபம் சேர்க்கப்படவில்லை. இதையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்த முதலீடு மிக அதிகமாக இருக்கும்.

போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி, முதலிய நாடுகளில் ஜேர்மன் நிறுவனங்கள் 350,000 பேருக்கு வேலை வாய்ப்புகளைத் தந்திருக்கின்றன. இலத்திரனியல் (எலெக்ட்ரானிக்ஸ்), மின்சார உபகரணங்கள் தொடர்புடைய தொழில்துறைகளில் முன்னணியில் உள்ளன. சீமன்ஸ் (Siemens) நிறுவனத்திற்கு மட்டும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 95 உபநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணியாற்றும் ஊழியர் எண்ணிக்கை 25,000. ஜேர்மனியின் வொல்க்ஸ் வாகன் (Volkswagen) நிறுவனம், செக் நாட்டு (Czech) கார் தயாரிப்பு நிறுவனம் ஸ்கோடாவை (Skoda) விலைக்கு வாங்கிய பின்னர் உற்பத்தியை மும்மடங்காக உயர்த்தியுள்ளது. இது ஐரோப்பிய சந்தை முழுவதற்கும் தற்போது ஆண்டிற்கு 5 இலட்சம் வாகனங்களைத் தயாரித்து வருகின்றது.

''இந்த முதலீடுகள் தரமான பொருட்கள் உற்பத்திக்கு உறுதி செய்து தருகின்றன. பொருட்களின் தரம், நமது நாட்டுப் பொருட்களுக்கு இணையானவை. அதே நேரத்தில் ஊதிய விகிதங்கள் நமது தொழிலாளர்களோடு ஒப்பிட முடியாத அளவிற்கு குறைவாகவே உள்ளன'' என்று ஜேர்மன் செய்தி பத்திரிகை Der Spiegel அண்மையில் விமர்சனக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. ''இதன் விளைவாக, மேற்குப் பகுதியைவிட கிழக்குப் பகுதி நாடுகளில் செயல்படும் நமது நிறுவனங்களின் இலாப வரம்புகள் மிக அதிகமாக உள்ளன.'' ஜேர்மனியில் தொழில்நுட்பத் திறமையுள்ள சீமென்ஸ் (Siemens) ஊழியர் ஒருவருக்கு, புதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் செயல்படும் சீமன்ஸ் (Siemens) நிறுவன தொழிலாளர் சகாவைவிட பத்து மடங்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகின்றது. ஜேர்மன் தொழில் வர்த்தக சபை (IHK) 'இயந்திர தொழில்நுட்ப பொறியியல் தொழில்கள் மற்றும் தொழிற்கூட கட்டுமான தொழில்களில் உற்பத்திச் செலவு ஜேர்மனியைவிட போலந்து நாட்டில் 20% குறைவாக உள்ளது. அதே நேரத்தில் தரம் ஏறத்தாழ ஒன்றுதான்' என இன்னொரு உதாரணத்தை தந்திருக்கின்றது.

IHK தனது ஜேர்மன் தொழிற்துறை உறுப்பினர்களிடையே ஓர் ஆய்வை நடாத்தியது. 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள ஜேர்மன் கம்பெனிகள், ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாவதை பொதுவாக ஆதரிக்கின்றன. அதே நேரத்தில் 50 ஊழியர்களுக்கு குறைவாக உள்ள சிறிய வர்த்தக நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாவது ஆபத்து என்று கருதுகின்றன. ஏனென்றால், கிழக்குப் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை வினியோகம் செய்யும்போது அந்த போட்டியை சமாளிக்க முடியாது என்பதால்தான்.

ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைவதால் ஏற்படும் சமூக விளைவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு, பெரிய தொழில்கள் மட்டும் நிதி நிறுவனங்களின் நலன்களை காப்பதற்காக இந்த அமைப்பு விசுவாசத்தோடு செயல்பட்டு வருகின்றது. அளவற்ற அளவுகோல்கள், நிபந்தனைகள், மற்றும் விதிமுறைகள் மூலம் ஐரோப்பிய கிழக்கு மண்டல நாடுகளில் சாதகமான பொருளாதார போட்டிச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இதை தெளிவாக சொல்வதென்றால், சமூக நலத்திட்ட செலவுகள் பெருமளவிற்கு குறைக்கப்படுகின்றன, பெரிய நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன மற்றும் இலாபம் தராதவை எனக் கருதப்படும் விவசாய மற்றும் தொழில்துறையின் பெரும் பகுதி நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன.

இதனால் பெரும்பாலான மக்களுக்கு பேரழிவுதான் ஏற்படுகிறது. சில நகரங்களில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியங்கள் மூலமாக செல்வம் மிக்க சிறிய மையங்களை உருவாக்குதால் சமுதாயத்தின் மிகச் சிறிய மேல்தட்டினர் நல்ல வருமானம் பெறுகின்றனர். மற்றைய பிரிவினர் துன்பத்தில் மூழ்கி எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை எதுவும் இல்லாமல் தவிக்கின்றனர். இது குறிப்பாக, போலந்து நாட்டில் தெளிவாக தெரிகின்றது. அந்நாட்டில் 3.9 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். புதிதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் இதர 9 நாடுகளின் மக்கள் தொகையைவிட போலந்து மக்கள் தொகை அதிகமாகும்.

போலந்து விவசாய பண்ணைகள் 2 இலட்சம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றில் 1 இலட்சம் பண்ணைகள்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்று நீடித்திருக்க முடியும். மேற்குப் பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகளுக்கு வழங்குகின்ற மானியத் தொகையில் 40% தான் போலந்து விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்தப் பணமும் அதிக வசதியாக பணக்கார உழவர்களுக்கு சென்று சேரும், அல்லது போலந்து எல்லையில் காத்திருக்கும் விவசாய நிறுவனங்களுக்கு கிடைக்கும். அந்த நிறுவனங்கள் ஏற்கனவே நவீன தொழில்நுட்ப முறைகளில் போலந்து விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக எல்லையில் அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் போலந்து எல்லைகள் திறந்துவிடப்படுமானால் மேற்குப் பகுதிகளிலிருந்து மலிவான உணவுப் பொருட்கள் போலந்திற்குள் புகுந்துவிடும்.

போலந்து நாட்டு விவசாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், சிறிய அளவில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் புழு, பூச்சிகளைப்போல் நசுக்கப்பட்டுவிடுவார்கள். அந்நாட்டில் நிகர உள்நாட்டு பொருட்கள் உற்பத்தியில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் 3.4% மட்டுமே. ஆனால், அந்நாட்டு தொழிலாளர்களில் 1/5 பகுதியினர் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். 37 இலட்சம் மக்கள் விவசாயத்தொழிலை நம்பியிருக்கின்றன. இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வாழ்க்கையின் அடிப்படையை இழந்துவிடுவார்கள். அவர்களுக்கு மாற்று வேலைகள் கிடைப்பதற்கு மிகக்குறைந்த வாய்ப்புகளே உள்ளன. உத்தியோகபூர்வமான வேலையில்லாதவர் எண்ணிக்கை 18.4% என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பெரிய தொழில் என்று எடுத்துக்கொண்டால், அவற்றிலும் மிகப்பெரும்பாலான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பிற்கு அச்சுறுத்தல் உருவாகி உள்ளன. போலந்து நாட்டு எஃகுத் தொழிலில் இன்றைக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அத்தொழில் காலாவதியான திருத்தமுடியாத தொழில்நுட்ப முறைகளைக் கொண்டு நடாத்தப்படுவதால், மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளோடு இந்த வகையில் போலந்து போட்டியிட முடியாது. நிலக்கரி மற்றும் எரிபொருள் உற்பத்தி தொழில்களிலும் இதே நிலைதான் காணப்படுகின்றது. இத்தகைய தொழிற்சாலைகளை மூடிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியுடன் பின்பற்ற போலந்து அரசு தயங்கிக்கொண்டிருப்பதால், அந்நாடு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது, என்றாலும் போலந்து அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழுவின் நிர்பந்தத்திற்கும் பணிந்துவிடுமானால், உள்நாட்டில் மிகப்பெரிய சமூகப் புரட்சி வெடிக்கும். சைலேஸ்சியா (Silesia) நிலசுரங்க மண்டலத்தில் அரசு திட்டமிட்டபடி சுரங்கங்களை மூடுவதை எதிர்த்து பல மாதங்களாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இதேபோன்ற நிலைதான் இதர, புதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளிலும் நிலவுகின்றது. வேலையில்லா திண்டாட்டம் அதிகம், தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவு, எனவே, வாழ்க்கைத்தரம் ஏழ்மை நிலையில் உள்ளது. புதிதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிருக்கும் 10 நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியின் அளவுக்கு இணையாக ஒல்லாந்து நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி உள்ளது. கிழக்கு நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் விரிவாவதால் யூனியனின் மக்கள் தொகை 28% உயரும். ஆனால், புதிய நாடுகளின் பொருளாதார வலிமை, அவற்றின் மொத்த மொத்த தேசிய உற்பத்தியின் அளவைக்கொண்டு கணக்கிட்டால் 5% மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

கிழக்கு நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைவதை அடிக்கடி ஆதரிப்பவர்கள் தெற்கு ஐரோப்பா மற்றும் அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்காட்டுகின்றன. முன்னைய ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளின் செல்வச் செழிப்பிற்கும், புதிய நாடுகளின் வறுமைக்கும் இடையிலான இடைவெளி புதிய நாடுகள் சேர்ந்ததும் குறைந்துவிட்டது. ஆனால், இப்போது கிழக்கு நோக்கி, ஐரோப்பிய ஒன்றியம் விரிவாவது முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. முன்னைய அங்கத்தவ நாடுகளில் பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஜேர்மனியில் இந்த நிலவரம் உள்ளது. எனவே, தற்போது எதிர்மாறான பொருளாதார வளர்ச்சிப்போக்குதான் உருவாகும். செல்வமிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாழ்க்கைத்தரம் புதிய ஏழை நாடுகளின் வாழ்க்கைத் தரத்தின் அளவிற்கு வீழ்ச்சியடையும்.

வர்த்தகம் முழுவதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றப்படும். அதன் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப்போல், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஊதிய விகிதங்கள் குறையும். ''சாதாரண தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும், உற்பத்தித் தொழில்களின் போட்டி நிர்பந்தங்கள் அதிகரித்து கொண்டு வருகிறது'' என்று ஜேர்மன் நாட்டு தொழில் மற்றும் வர்த்தக சபை ''அப்படியென்றால், குறைந்த ஊதிய விகிதங்கள், அடிப்படையில் செயல்படுகின்ற நிறுவனங்களின் தொழிலாளர்களை பணிகளுக்கு அமர்த்துவதற்கான, விதிமுறைகளை தளர்த்தவேண்டும். அப்போதுதான், அளவிற்கு அதிகமான உயர்ந்த ஊதியங்கள் வழங்கப்படுவதால் ஏற்படும் தொழிற்போட்டி இழப்புக்களை சரிகட்ட முடியும்.'' என கூறியுள்ளது.

இதுதவிர கிழக்கு நாடுகளில் நிலவும் ஏழ்மையின் பிடியிலிருந்து தப்புவதற்காக மேற்கு நாடுகளில் குடியேறும் தொழிலாளர்கள் குறைந்த ஊதிய தொழில்களை ஏற்றுக்கொள்வார்கள். கிழக்கு நாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதிகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்டுமானத் தொழில்களில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.

இந்தப் போக்குகளை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அங்கத்துவ நாடுகளின் மக்களுக்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. ஏழு ஆண்டுகளுக்கு அவர்கள் சுதந்திரமாக ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நடமாட முடியாது. இந்த நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் ஆதரித்திருக்கின்றன. அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்தவர்களாகயிருந்தாலும், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் விரும்புகின்ற நாடுகளில் வாழ்வதற்கோ பணியாற்றுவதற்கோ அனுமதிக்கபடமாட்டார்கள். குடியேறுபவர்களில் யாரை ஏற்றுக்கொள்வது, என்பதை முடிவு செய்யும் உரிமை பழைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றிற்கும் தனியாக வழங்கப்பட்டிருக்கின்றது. சில குறிப்பிட்ட தொழில்களுக்கு சிறப்பு விதிமுறைகள் உருவாக்கப்படும்.

முதலீடு சுதந்திரமாக செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படும்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவார்கள். இது மேற்கு நாடுகளில் அந்நாடுகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் கூறுவதைப்போல் ஊதிய விகிதங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைக்காது. அதற்கு நேர்மாறாக, ஊதிய விகிதங்களில் சில வேறுபாடுகள் நிலைநாட்டப்படும். அது மேற்குநாடுகளின் உயர் ஊதியத்திற்கு எதிரான ஒரு கருவியாக பயன்படுத்தப்படும்.

மேற்கு ஐரோப்பாவின் ஏழ்மையான பகுதி ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கலால் பெருமளவிற்கு பாதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்திய நிதியில் இருந்துதான், புதிய அங்கத்துவ நாடுகளுக்கான மானியத் தொகையின் கணிசமான பகுதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒன்றியத்தின் சராசரி நபர் வருமானத்தில் 75% இற்கு குறைவாக உள்ள பிராந்தியங்களுக்கு உதவுவதற்காக இந்த நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு நோக்கி ஒன்றியம் விரிவாகும்போது வாழ்க்கைத்தரம் மேலும் வீழ்ச்சியடையும். அந்நேரத்தில் போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் கிழக்கு ஜேர்மனி போன்றவற்றிற்கு இந்த நிதி உதவி தொடர்ந்தும் கிடைக்காது.

அப்படியிருந்தும் 3 வருடங்களுக்கு புதிய அங்கத்துவ நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவித் தொகையாக செலவிட கருதியுள்ள 40பில்லியன் யூரோக்கள் சமுத்திரத்தில் ஒரு துளி நீர் போன்றதுதான். 1991ம் ஆண்டு கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது. ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு கிழக்குப் பகுதிக்கு மானியமாக 50 பில்லியன் யூரோக்கள் வரை வழங்கியுள்ளது. அப்படியிருந்தும், கிழக்குப் பகுதியின் பொருளதார மற்றும் சமுதாய சரிவுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

மானியத்தொகைகள் வழங்குவது தொடர்பாக, காரசாரமாக தகராறுகள் முற்றி வருகின்றன. விரிவாக்கமே நடக்க முடியாத அளவிற்குக்கூட இந்தத் தகராறுகள் வளரக்கூடும். டென்மார்க் நாடு தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கி சமரச பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. புதிய நாடுகளுக்கு 42-பில்லியன் யூரோக்களை மானியமாக வழங்குவதாக, டென்மார்க் உறதியளித்துள்ளது. அக்டோபரில் ஐரோப்பிய ஒன்றியம் ்39.3 பில்லியன் யூரோக்களை வழங்கியது. 2.7 பில்லியன் யூரோக்கள் சிறிய அளவிலான வேறுபாடுதான். இந்த தொகை செலுத்தப்படுமா, அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகளே தோல்வியடைந்துவிடுமா என்பது ஜேர்மனியுடன் உருவாகும் உடன்பாட்டை பொறுத்தே அமையும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவிகளில் மிகப்பெரும் தொகையை வழங்கும் நாடு ஜேர்மனியாகும்.

அத்லாந்திற்கு இடையிலான கொந்தளிப்புகளின் அதிகரிப்பு

அதிகரித்துவரும் அத்லாந்திற்கு இடையிலான கொந்தளிப்பு பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பல்வேறு வர்த்தக தகராறுகள் இன்னும் முடிவிற்கு வராமலேயே உள்ளன. ஈராக்கிற்கு எதிரான போர்த்திட்டங்களில் ஜேர்மனி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்த இரண்டுவிதமான போட்டி வல்லரசுகளின் படைகளுக்கு இடையிலான, உறவில் அடிப்படை மோதல்களால் இந்த பிளவுகள் தோன்றியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் விரிவாகி வளர்ந்து மிகப்பெரிய பொருளாதார வலிமைபெறுவது, அமெரிக்காவின் ஆதிக்க நிலைக்கு சவாலாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அரசின் செல்வாக்குமிக்க தரப்பினர் கருதுகின்றனர்.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய விவகாரங்களில் சமரசம் செய்து வைக்கின்ற பணியை மேற்கொண்டிருந்த அமெரிக்காவுடன், தற்போது மோதல் உருவாகியுள்ளது. பழைய உலக அமைப்பின் நாடுகளுக்குள் நிலவுகின்ற உறவுகள் தற்போது கேள்விக் குறியாகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாவதால் ஜேர்மனிதான் மிகப்பெருமளவிற்கு லாபம் அடையும். இப்படி ஜேர்மனியின் செல்வாக்கு வளர்ந்து கொண்டுவருவதை பல ஐரோப்பிய அரசுகள் பயத்துடன் நோக்குகின்றன.

எனவேதான், ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைவது நீண்ட நாட்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. விவசாய மானியங்கள் வழங்குவது தொடர்பாக பிரான்சிற்கும், ஜேர்மனிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றி விரிவாக்கம் தடைப்பட்டது. பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் தன் நாட்டு விவசாயிகளை மனநிறைவு அடையச் செய்வதற்காக மானியத்தொகை உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜேர்மனி அதிபர் ஷ்ரோடர் தனது வரவுசெலவுத்திட்டத்தை சரிகட்டுவதற்காக விவசாய மானியத்தை குறைக்கவேண்டுமென்று விரும்பினார். இந்த தகராறு பின்னர் ஷ்ரோடர் விட்டுக்கொடுத்த பின்னர்தான் ஒரு முடிவிற்கு வந்தது. இப்படி முடிவு ஏற்பட்டது தொடர்பாக, பிரிட்டன் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. பிரிட்டனும் விவசயத்திற்கான மானியத்தை குறைக்கவே விரும்பியது.

துருக்கி, ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அரசியல் கொந்தளிப்புகள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்சனையில் பல்வேறு வகையான நலன்களும், வெறுப்பு உணர்வுகளும் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு இணைந்துள்ளன.

துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா கணிசமான அளவிற்கு நிர்பந்தங்களை பிரயோகித்து வருகின்றது. ஏனெனில் நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ்உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது. ஏனெனில் இது மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் மிக முக்கியமான நட்பு நாடான துருக்கியை இது பலப்படுத்தும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் மிக அண்மையில் கிரேக்க நாடு ஆகியவை ஆதரிக்கின்றன.

ஜேர்மனியும், பிரான்சும், துருக்கி இணைவது தொடர்பாக கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றன. துருக்கியின் மக்கட்தொகை 7 கோடியாகும். ஜேர்மனி தவிர மற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தனித்தனி அங்கத்துவ நாடுகளைவிட, துருக்கி அதிக அளவில் மக்கட்தொகையை கொண்ட நாடு. எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் நிர்வாக அமைப்புக்கள் அனைத்திலும், துருக்கிக்கு பெருமளவிற்கு அரசியல் பிரதிநிதித்துவமும், செல்வாக்கும் உருவாகும். ஆனால், பொருளாதார வலிமையை பொறுத்தவரை, துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நிலையின் சராசரியில் 25% இற்கு குறைவாகவே உள்ளது. மேலும் கிழக்கு ஐரோப்பாவைவிட, பொருளாதார நிலையில் துருக்கி தாழ்வாகவே உள்ளது. துருக்கியை உறுப்பினராக சேர்க்கக்கூடாது என்று கூறுபவர்கள், அந்நாடு சேர்க்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியமே முடக்கப்பட்டுவிடும் எனவும், மேலும் அரசியல் ஒன்றியம் என்பது வெறும் சுதந்திர வர்த்தக வலையமாகும் ஆகிவிடுமென்று கூறுகின்றனர். அதே நேரத்தில், பிற்போக்கு வலதுசாரி பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் கிறிஸ்தவ நாடுகளின் பகுதி என விவாதித்தனர். இவர்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக உள்ள ஓர் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று விவாதிக்கின்றனர்.

ஆனால் பிரான்சும், ஜேர்மனியும் துருக்கி அரசுடன் தங்களுக்குள்ள செல்வாக்கை இழந்துவிடத் தயாராக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேரக்கூடாது என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டால் அந்நாட்டில் தங்களுக்குள்ள செல்வாக்கை இழந்துவிடக்கூடுமென்று இரு நாடுகளும் அஞ்சுவதால், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அதிபர்கள் ஒரு சமரச உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றனர். அதை கோபன்ஹாகன் உச்சிமாநாட்டில் தாக்கல் செய்ய கருதியிருக்கின்றனர். இவர்கள் அடுத்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தேதியை நிர்ணயித்து, துருக்கி உறுப்பினர் ஆவது தொடர்பான சமரச பேச்சை தொடங்கலாம் என்று ஆலோசனை கூறியிருக்கின்றனர். இதற்கிடையில் துருக்கி தொடர்பாக இன்னொரு ஆய்வு நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி நிரலின்படி 2005ம் ஆண்டில் துருக்கி உறுப்பினர் ஆவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும். 2013 அளவில்தான் துருக்கி உறுப்பினராக முடியும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் பிரச்சனை கோபன்ஹாகனில் பெரும் முரண்பாடுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

See Also :

அமெரிக்காவின் அழுத்தம் ஐரோப்பிய யூனியனில் பிளவுகளை உருவாக்குகின்றது

''பிராக் நேட்டோ'' உச்சி மாநாடு: வெடிப்புறும் அளவிற்கு உள்ளுக்குள் பதட்டங்கள்

பிராக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் ஈராக் மீதான போர் மேலாதிக்கம் செய்கிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு அகதிகள், வெளிநாட்டவர்களுக்கு மேலான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது

Top of page