US pressure provokes fissures in European Union
அமெரிக்காவின் அழுத்தம் ஐரோப்பிய யூனியனில் பிளவுகளை உருவாக்குகின்றது
By Alex Lefebvre
19 November 2002
Back
to screen version
உலக பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக்கம் மற்றும் ஐரோப்பிய
ஒன்றியம் அரசு நிர்வாக அமைப்புக்களில் மாற்றங்கள் ஆகியவை, ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அரசியல் நிலைப்பாட்டில்
பெரிய மாற்றங்களை உருவாக்கி வருவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல்
நெருக்கடிகள் உருவாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் கருத்து வேறுபாடுகளுக்கு காரணம், ஐரோப்பிய ஒருங்கிணைப்பு
தொடர்பாக, அமெரிக்காவின் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்புக்களேயாகும். அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளிலும்,
வெளிநாட்டு கொள்கைகளிலும் தன்னிச்சையாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால், குளிர்யுத்தகாலத்தில் ஐரோப்பிய
நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை விரும்பியதை போலல்லாது ஐரோப்பிய நாடுகளுக்கிடையே கொந்தளிப்புகளை
உருவாக்குகின்றது. அண்மையில் விவசாய துறைக்காகான மானியத் தொகைகள் வழங்குவது தொடர்பாக பிரெஞ்சு ஜனாதிபதி
ஜாக் சிராக்கிற்கும், பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயருக்கும் இடையே கடுமையான மோதல்களும் கருத்து வேறுபாடுகளும்
உருவாயின. இவை, ஐரோப்பிய ஒன்றியத்தினுள் உருவாகும் முரண்பாடுகளையும், ஐரோப்பிய - அமெரிக்க உறவுகளுக்கும்
இடையில் நிலவும் தீர்க்கமுடியாத முரண்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவடையும் திட்டத்திற்கு பிரதான தடைக்கற்களில்
ஒன்று பொது விவசாயக் கொள்கையாகும் (CAP).
இந்த விவசாய மானியம் வழங்கும் திட்டத்தால் ஆண்டிற்கு சுமார் 40 பில்லியன் யூரோக்கள் செலவாகின்றன. இது
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் 40% ஆகும். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய பண்ணைகளுக்கு இந்த
மானியத்திட்டம் முழுமையாக விரிவுப்படுத்தப்படுமானால் அதற்கு அதிகம் செலவாகும். பொது விவசாயக் கொள்கைத் திட்டத்தை
விரிவுபடுத்துவதில் எப்பொழுதுமே பயன்பெறும் நாடுகளுக்கும் (பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி) நிகர தொகையை
வழங்குகின்ற நாடுகளுக்கும் (ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் டென்மார்க்) இடையே மோதல்கள் உருவாகி வருகின்றன.
சிராக்கிற்கும் ஜேர்மனி அதிபர் ஷ்ரோடருக்கும் இடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம்
தொடர்பாக நடைபெற்ற உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளில் வியப்பளிக்கும் வகையில் ஓர் உடன்பாடு உருவாகியுள்ளது.
அதன்படி, பிரான்ஸ் நாட்டு நிலைப்பாட்டை இருவரும் ஏற்றுக்கொண்டனர். பொது விவசாயக் கொள்கை 2006 வரை
நீடிக்கும். அதற்குப்பின்னர் படிப்படியாக குறைந்துகொண்டே வரும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வழக்கமான
ஐரோப்பிய ஒன்றிய உதவித் தொகைகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கிடைக்கும், (இந்த தொகை 25% ஆரம்பித்து,
பொது விவசாயக் கொள்கை இல்லாமல் செல்லும் காலத்தில் மற்றைய நாடுகளுடன் சமநிலைக்கு வந்துவிடும்) பிரான்சிற்கும்
ஜேர்மனிக்கும் இடையில் ஏற்பட்ட இந்த உடன்பாடு பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில்
நடைபெற்ற, பேச்சுவாத்தைகளில் கணிசமான அளவிற்கு மாற்றப்படாததுடன், விரிவாக்கத்திட்டத்தை விரைவுபடுத்த உதவுவதாகவும்
இல்லை.
பிரான்ஸ் நாட்டு அரசின் போக்கை பிரித்தானிய பிரதமர் பகிரங்கமாக கண்டித்தார்.
ஆபிரிக்காவிற்கு, உதவுவதாக பேசுகின்ற பிரான்ஸ் அரசாங்கம் ஐரோப்பிய சந்தையிலிருந்து ஆபிரிக்க உழவர்களை
துண்டிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றது என்று பிளேயர் கடுமையாக கண்டித்தார். இதற்கு பதிலளிக்கின்ற வகையில்
Le Touquet
இல் டிசம்பர்-3-ல் நடைபெறுவதாகயிருந்த பிரான்ஸ், பிரித்தானிய உச்சி மாநாட்டை சிராக் ரத்து செய்தார்.
பொது விவசாயக் கொள்கை தொடர்பாக, பிரான்ஸும், ஜேர்மனியும் செய்துள்ள முடிவுகள்
பிரிட்டன் அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றது. இத்தாலியிலும் ஸ்பெயினிலும் செயல்பட்டு
வரும் கன்சர்வேட்டிவ் அரசுகளோடு நட்பு பாராட்ட பிரிட்டன் முயன்று வருகிறது. அந்த முயற்சிக்கு, முழுமையான வெற்றி
கிடைக்கவில்லை. அந்த இரண்டு நாடுகளும் முக்கியமாக செவில் உச்சி மாநாட்டின் (Seville
summit) பின்னர் கடுமையான குடியேற்ற சட்டங்களை கொண்டுவர முயற்சித்தன.
அதற்கு பிரான்ஸும், ஸ்வீடனும், எதிர்ப்பு தெரிவித்தன. இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸும் ஜேர்மனியும்
சேர்ந்து மீண்டும் மேலாதிக்கம் செலுத்தும் நிலை உருவாகிவிடுமோ என்று பிரிட்டன் பத்திரிகைகள் கவலை தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் ஜேர்மனி அதிபர்கள் யூரோ -நாணயத்தை அறிமுகப்படுத்தி பிரிட்டன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை
உருவாக்கினர். எதிர்வரும் ஆண்டுகளில் பொது விவசாயக் கொள்கையின் வரவுசெலவு திட்டம் 1% தான் உயரும் என்பதும்,
அது பணவீக்க விகிதத்தைவிட குறைவாகயிருக்கும் என்பதும் பிளேயருக்கு சொற்ப ஆறுதலை தருகின்ற அம்சமாகும்.
பிரான்ஸ் நாட்டு இராஜதந்திர உறவுகளில் ஜேர்மனிக்கு எதிரான உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுவிட்டதாக பிரான்சிற்கான ஐரோப்பிய விவகார அமைச்சர் நோயல் லுநுவார் (Noëlle
Lenoir) அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது இராஜதந்திர
பிரதிநிதிகள் தங்களது நோக்கங்களை நட்பு நாடுகளின் விருப்பத்தை அறிந்து அதற்கு எல்லாம் மேலாக ஜேர்மனியின்
விருப்பத்தை கருத்தில் கொண்டு, நீக்குப்போக்குடன் அல்லது விட்டுக்கொடுத்து நடந்துகொள்ள வேண்டுமென பிரான்ஸ் அரசு
கட்டளையிட்டிருக்கின்றது. ஜேர்மனியும், பிரான்ஸும், இப்படி இணைந்து செயல்படுவது ஒரு வகையில் வியப்பளிப்பதாக உள்ளது.
ஏனென்றால் பிரான்ஸ் அதிபருக்கும், ஜேர்மன் அதிபருக்கும் இடையில் உறவுகள் சரியாக இல்லை. ஜேர்மனியில் தேர்தல்
பிரச்சாரம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும்போது, பிரான்ஸ் அதிபர் சிராக் ஜேர்மன் அதிபர் ஷ்ரோடரின் எதிரியான
ஸ்டொய்பருக்கு பிரான்ஸ் நாட்டின் உயர் விருதை (Légion
d'Honneur) வழங்கி கெளரவித்தார்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நிலைப்பாடுகளில் ஒற்றுமை உணர்வுகள் கணிசமான அளவிற்கு காணப்படுவதற்கு
பல்வேறு வகையான அரசியல், மற்றும் பொருளாதார காரணங்கள் அடிப்படையாக உள்ளன. இரண்டு அரசுகளும்
பற்றாக்குறை வரவுசெலவு திட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இது சம்மந்தமான ஐரோப்பிய ஸ்திரத்தன்மை உடன்பாட்டில்
விதிக்கப்பட்டுள்ள 3% சதவிகித பற்றாக்குறை வரையறையையும் கடந்து பற்றாக்குறை இரு நாடுகளிலும் அதிகரிக்கலாம்,
பொருளாதார நெருக்கடியின்போது இந்த வரம்பை தளர்த்தலாம் என்ற நிலைமையை இரு நாடுகளும் ஆதரவு தெரிவிக்கும்
என்று கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது. இதில் உள்ள பூகோள அரசியல் முடிவுகள் தவறாக எடுக்ககூடியவையல்ல. யூரோ
மண்டல நாடுகள் வரவுசெலவு திட்டத்தின் பற்றாக்குறை மூலம், தங்களது இராணுவ வலிமையை பெருக்கிக்கொள்வதற்கு
நடவடிக்கை எடுக்கலாம், அதற்கு ஏற்ற வகையில் உடன்பாட்டில் திருத்தம் செய்யவேண்டுமென்று இதற்கு முன்னர் பிரான்ஸ்
அரசு விவாதித்து வந்தது.
பிரித்தானிய பத்திரிகைகள் தற்போது ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு முன்னிலை வகிக்கும்
நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா ஈராக்குடன் போர் புரிவது தொடர்பாக
பெரும் ஐயப்பாடுகளை எழுப்பி வருவதை கவனித்துள்ளன. அதுமட்டுமல்ல, ஈராக் தொடர்பாக அமைதிவாத அணுகுமுறையை
கடைபிடிப்பது என்ற அடிப்படையில்தான் ஜேர்மனின் அதிபராக ஷ்ரோடர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஷிங்டனின்
முடிவிற்கு தலையெடுப்பதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் மிக நீண்ட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்
என்று பிரான்ஸ் நாடு வலியுறுத்தி வருகின்றது. பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை இது பிளேருக்கு சிம்ம சொப்பன நிகழ்ச்சிதான்
உருவாகும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் போர்த்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு தருவதால், பிளேயர்
ஐரோப்பாவில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார் என்று கார்டியன் பத்திரிகை எழுதியுள்ளது.
இது பிரான்சிற்கும், ஜேர்மனிக்கும் இடையே தற்போது கருத்து ஒற்றுமை உருவாகி வருவதற்கான
அடித்தளம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இது ஐரோப்பிய சக்திகளின் பூகோள அரசியல் நோக்கமாகும். ஆனால்
இந்த உடன்பாடு நீடிக்கும் என்பதற்கான உறுதிப்பாடு இல்லை. ஏனென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பல உறுப்பு நாடுகள்
குறிப்பாக, இத்தாலிய அரசு சில அம்சங்களில் பிரான்ஸ்-ஜேர்மனி அணிக்கு ஆதரவாகவும் இதர அம்சங்களில் பிரிட்டனின்
அமெரிக்க ஆதரவுபோக்கை ஏற்றுக்கொள்வதாகவும் செயல்பட்டு வருகின்றன.
வாஷிங்டனது கட்டளைகளுக்கு அப்படியே கட்டுப்படாத ஐரோப்பிய அரசியல் கொள்கை,
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் சமரசம் செய்து வைக்கும் தரகர் என்கிற தனது நடுத்தரநிலையை
பாதிக்கும் என்று பிரிட்டிஷ் அரசு அஞ்சுகிறது. எனவேதான் பொது விவசாயக் கொள்கை தொடர்பாக, பிரான்சிற்கும்,
ஜேர்மனிக்கும் உடன்பாடு ஏற்பட்டவுடன், எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்தின் நகல் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
என்று பிரிட்டன் அறிவித்தது. இந்த நகலை பிரான்சின் முன்னாள் அதிபர் வலறி கிஸ்கார்ட் (Valérie
Giscard d'Estaing) உருவாக்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நகல் அரசியல் சாசனத்தில் மத்திய அரசு அதிகாரத்தை
உருவாக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஐரோப்பிய மக்களுக்கு ஐரோப்பிய, தேசிய நாடாளுமன்றம் ஒன்றும்,
ஐரோப்பிய ஆட்சித் தலைவர்களின் சபைக்கு ஒரு தலைவர் இருப்பார். விவசாயம் , போக்குவரத்து முதலிய துறைகள் ஒவ்வொன்றிற்கும்
அமைச்சர்கள் சபைக்கும் ஒரு தலைவரும் இருப்பார். இதுவரை தேசிய அரசுகள் வசமிருந்த பலவித அதிகாரங்கள்
ஐரோப்பிய சபைக்கு மாற்றப்படும் என்ற ஆலோசனைக்கு ஒருமனதாக ஆதரவு கிடைக்கவில்லை. உத்தேசிக்கப்பட்டுள்ள
எல்லா அமைப்புக்களையும் தான் ஆதரிக்கவில்லை என்றாலும், ஐரோப்பா என்றால் அது வலறி கிஸ்கார்ட் உருவாக்கிய
நகலாகத்தான் இருக்கவேண்டும், மற்றும் ''விரிவான சமரச பேச்சுவார்த்தைகள்'' இல்லாமல் அந்த அரசியல் சாசனத்தை
அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் என்று ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஸ்ஷர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சாசனம் தொடர்பாக பொதுவான ஒரு நிலையை
அறிவிப்பதற்காக பிரான்ஸசும், ஜேர்மனியும் ஒரு உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றனர். பிரான்ஸ் அதிபர்
சிராக் ''பரஸ்பர உதவி உத்தரவாதத்திற்கு'' ஒரு பிரிவை அரசியல் சாசனத்தில், சேர்ப்பதற்கு வலியுறுத்தவார் என்று
அந்நாட்டு பத்திரிகைகள் தெளிவுப்படுத்தியுள்ளன. சர்வதேச பாதுகாப்பு தொடர்பாகவும், ஐரோப்பிய இராணுவ
போக்குவரத்து விமானம் (A-400M)
உருவாக்கம் திட்டத்தில் ஜேர்மனியில் நிதி ஒதுக்கீட்டை வற்புறுத்தவேண்டும் என்றும், பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கைகள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் நேட்டோ ஒப்பந்தத்திற்கு அப்பால், சுதந்திர ஐரோப்பிய இராணுவ வலிமையை உருவாக்குவதற்கான
பூர்வாங்க திட்டம்தான் ஐரோப்பாவிற்கு பொதுவான இராணுவ போக்குவரத்து விமானத்தை உருவாக்கும் திட்டமாகும்.
அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் மோதல்கள் உருவாகாது தடுக்கும்
பிரிட்டன் தீவிர முயற்சியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்திகளில் தனது அழுத்ததை பிரயோகிக்கவில்லை. வாஷிங்டன்,
துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் ஆக்குவதற்கு தொடர்ந்து இடைவிடாது முயற்சிகளை மேற்கொண்டு
இருக்கின்றது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உள் விவகாரங்ளில் அமெரிக்கா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள மேற்கொள்ளும்
முயற்சி என்று கருதப்படுகிறது. துருக்கியின் மக்கள் தொகை 6 கோடி. எனவே, மிக பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய
அமைப்புகளை துருக்கி தனது மக்கள் தொகை அடிப்படையில் பெரும் அளவிற்கு உறுப்பினர்களை தேர்ந்து எடுத்துக்கொள்ள
முடியும். துருக்கி மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும்.
வழக்கமாக வாஷிங்டனுக்கு நெருக்கமாக செயல்பட்டு வரும் பிரிட்டன் மற்றும் இத்தாலிய
அரசுகள் துருக்கி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் ஆவதற்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன. துருக்கி ஐரோப்பிய
ஒன்றியத்தின் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டால், ''அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சாவுமணி அடித்துவிடும்'' என்றும்
நவம்பர் 9ந்தேதி பிரான்சுடனான கலாச்சார வேறுபாடுகளையும் துருக்கியின் வளர்ந்துவரும் மக்கள் தொகையையும் கருத்தில்
கொண்டு துருக்கியை ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக அனுமதிக்கக்கூடாது என்பது வலறி கிஸ்கார்ட் இன் கருத்து. அவர்
தனது பதவி பொறுப்பு காரணமாக மதம் மற்றும் கலாச்சார பிரச்சனைகளை பெரிதுபடுத்தக்கூடாது என்பதற்காக
ஐரோப்பாவிற்கும், அருகில் உள்ள மத்திய கிழக்கு மண்டலங்களுக்கும் பொதுவான ஒரு சந்தையை உருவாக்கலாம்.
ஐரோப்பிய யூனியனுக்கும் துருக்கிக்கும் இடையில் ''கூட்டு உடன்படிக்கை'' ("partnership
pact") செய்து கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சமநிலையில் துருக்கி உறுப்பினராவதால் ஏற்படும் தாக்கம் மட்டுமே வலறி கிஸ்கார்டுக்கு
கவலைதரும் அம்சம்.
தேசிய நாடாளுமன்ற தூதுக்குழுவின் பெரும்பான்மை பிரதிநிதிகளது தலைவரான ஜாக்குயிஷ்
பரோட் (Jacques Barrot)
இதே கவலைகளை வெளியிட்டார். லஸ்சம்பர்கின் தலைவரான ஜோன்-குளோட் யுங்கர்
(Jean-Claude Juncker)
துருக்கியை உறுப்பினராக சேர்த்துக்கொள்வது தொடர்பான கூட்டங்களுக்கு திகதி
குறிப்பதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். ஜேர்மனி அதிபர் (ஷ்ரோட்டர்) நவம்பர்11 ஆம் திகதி துருக்கி உறுப்பினர்
பதவி குறித்து எதுவும் பேசாமல் துருக்கியும் ஐரோப்பிய யூனியனும் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
அவர் குறிப்பாக துருக்கியின் ''பூகோளஅரசியல் திசை'' குறித்து வினா எழுப்பினார். ஐரோப்பிய யூனியனில் எல்லை பிரதேசங்களுக்கு
இடைப்பட்ட நிலையிலான அங்கத்தவர் பதவியை தரலாம் என்பது குறித்து தாம் தீவிரமாக சிந்தித்து வருவதாக ஜேர்மனியின்
கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் (CDU)
ஐரோப்பிய பிரதிநிதி எல்மார் புரோக் (Elmar Brok)
குறிப்பிட்டார். இந்நிலையில் துருக்கி உறுப்பினராவது தொடர்பான விவாதத்திற்கு
நாள் குறிப்பது தொடர்பாக டிசம்பரில் நடக்கவிருக்கும் விவாதங்கள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நெருக்கடிகளை உருவாக்கும் பொதுவான புள்ளி, அமெரிக்கா-
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையின் வளர்ச்சி தொடர்பாக ஐரோப்பிய
ஆளும் வர்க்கங்கள் கொண்டுள்ள கவலையாகும். பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களுக்கிடையிலான உறவுகளை
அமெரிக்கா தொடர்பாக தங்களது கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்கின்றன. தற்போது அதிகரித்துவரும்
வாஷிங்டனினது தன்னிச்சையானதும், ஒருதலைப்பட்சமானதும் மற்றும் இராணுவ கொள்கை ஐரோப்பிய ஒன்றயத்தினுள் பெரும்
அளவிற்கு அரசியல் நெருக்கடியை உருவாக்குவது தவிர்க்க முடியாதது.
|