World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany and Albania sign deportation agreement

ஜேர்மனியும் அல்பானியாவும் அகதிகளை நாடுகடத்தும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன

By Elisabeth Zimmermann
4 December 2002

Back to screen version

நவம்பர் 18 அன்று ஜேர்மனியின் உள்நாட்டமைச்சர் ஒட்டோ ஷிலியும் (Otto Schily ஜேர்மன் சமூக ஜனநாய கட்சி - SPD) அல்பானிய உள்துறை அமைச்சர் லுவான் ராமாவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தமானது அல்பானியர்களையும் மற்றும் சட்டப்பூர்வ குடியிருப்பு அனுமதி இல்லாமல் அல்பானியா வழியாக ஜேர்மனியில் நுழைந்தவர்களையும் நாடுகடத்த வழி செய்கிறது.

தற்போது இந்த உடன்படிக்கையால் ஜேர்மனியில் வாழும் சுமார் 1,700 பேர் பாதிக்கப்படுவதுடன், உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள். அல்பானியா ஐரோப்பாவில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் ஒன்று, கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து வருகின்ற அகதிகளுக்கு இடையிலுள்ள தரைமார்க்கமாகவும் அல்பானியா உள்ளது. எனவே இந்த உடன்படிக்கையால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுவர்.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு அவர்கள் வியாபாரப் பொருளாக ஆக்கப்படுவதை தடுப்பதற்காக இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டடதாக காரணம் கற்பிக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில், எல்லைகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டிருப்பதால், ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி அகதிகள் புகமுடியாத நிலைமை தோன்றியுள்ளது. எனவேதான் அகதிகள், கடத்தல் பொருள்களாக கடத்தப்படுகின்ற நிலைமை ஐரோப்பிய நாடுகளில் நிலவுகின்றது.

''இவ் உடன்பாட்டின் மூலம் பால்கன் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உட்புகுவதை தடுப்பதற்கு முக்கிய பங்களிக்கும்'' என உள்நாட்டு அமைச்சர் ஷில்லி குறிப்பிட்டார். இது வெறும் சட்டமல்ல இதை நடைமுறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்திய அவர் ''நாட்டுக்குள் இருப்பிடம் தேடுவோரை தடுப்பதற்கான நடைமுறைகளை எடுக்ககூடிய நிலைமையில் நாம் இருக்கவேண்டும்'' என குறிப்பிட்டார்.

இந்த உடன்பாடு உருவாகுவதற்கு முன்னர் செப்டம்பர் 16 இல் ஜேர்மனியின் தேர்தல்களுக்கு முன்னர் யூகோஸ்லாவியாவுடன் இவ்வாறான ஒரு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அன்றைய ஸ்லோபோடன் மிலோஷிவிக்கின் அரசு மீது விதித்த தடையின் காரணமாக 1996ம் ஆண்டு யூகோஸ்லாவியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

யூகோஸ்லாவியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, மூன்றாவது நாடுகளின் பிரைஜைகளையும், நாடற்ற மக்களையும் பாதிக்கின்றது. இந்த உடன்படிக்கைப்படி இத்தகைய மக்களை (மூன்றாவது நாடுகளின் பிரைஜைகளையும், நாடற்ற மக்களையும்) யூகோஸ்லாவியா ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது அவர்கள் கட்டாயமாக பிற நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த உடன்பாடு கொசவோ அகதிகளை மட்டுமல்லாது, நீண்ட கால வசிப்பிட அனுமதியுடன் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுமார் 50,000 சேர்பியர்கள் மற்றும் மொன்டநீக்ரோ மக்களையும் பாதிக்கின்றது.

பல்லாயிரக்கணக்கான ரோமானிய மற்றும் சிந்தி மக்களும் (Sinti and Romany) இதர இனங்களைச் சேர்ந்த சிறுபான்மை மக்களும் இந்த உடன்படிக்கையால் பாதிக்கப்படுவர். இவர்களில் பலர் பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து ஜேர்மன் பாடசாலைகளில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பால்கன் நாடுகளில் அண்மையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக ரோமா மற்றும் சிந்தி இனங்களைச் சார்ந்த மக்களது வாழ்வு மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இது சமூகப் பிரச்சனைகளை அதிகரிக்க செய்ததோடு ஏழ்மையுயும் ஆதிகரிக்கச் செய்துள்ளது.

கோடைகால ஆரம்பத்தில் முதலாவது நாடு கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பித்ததிலிருந்து நோர்த் ரைன் வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) மாநிலத்தில் அதற்கு எதிராக, மாநிலத்தின் பிரதான நகரான டுஸ்சுல்டோர்வ் உட்பட பல நகரங்களில் நூற்றுக்கணக்கான ரோமானிய இனத்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர். செப்டம்பரில் ஜேர்மன் நாட்டு தேர்தல்கள் முடிந்த பின்னர் பிறேமன் நகரத்திலும் பேர்லின் நகரத்திலும் பசுமைக்கட்சி மற்றும் சமூக ஜனநாயகட்சி நடத்தும் மாநாட்டிற்கு சென்று தம்மை நிரந்தரமாக வசிக்கவிடக் கோரியும் நாடுகடத்தலை நிறுத்தும்படியும் தங்களது கண்டனத்தை தெரிவிக்க திட்டமிட்டனர். ஜேர்மன் போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தற்போதைய அகதிகள் தொடர்பான சட்டங்களின்படி, நோர்த் ரைன் வெஸ்ட்பாலினிலிருந்து வேறு இடங்களுக்கு அகதிகள் செல்லக்கூடாது என்று கூறி பொலிஸார் தமது நடவடிக்கையை நியாயப்படுத்தனர்.

பசுமைக்கட்சியினதும் சமூக ஜனநாயகட்சியினதும் கூட்டஅரசு அறிமுகப்படுத்திய புதிய அகதிகள் கட்டுப்பாடு கொள்கைகள் காரணமாகவும், முந்தைய ஹெல்மட் கோல் இன் பழைமைவாத அரசு கொண்டு வந்த நடவடிக்கைகளின் காரணமாகவும், ஜேர்மனியில் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. அரசியல் ஒடுக்குமுறை, பழி வாங்கும் போக்கு, போர்கள், உள்நாட்டுப் போர் மற்றும் கொடிய வறுமையின் காரணமாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக ஜேர்மனியில் தஞ்சம்புக வருகின்ற எண்ணிக்கை அதிகரித்துவிட்டாலும், அத்தகைய அகதிகள் பயணம் செய்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் நுழைவதற்கும், மனுச் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் அகதிகள் நிவாரண அமைப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜேர்மனியில் தஞ்சம்புக விரும்பும் அகதிகளின் எண்ணிக்கை சராசரி எண்ணிக்கையைவிட குறைந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறது. 2002 இன் முதல் ஆறு மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் தஞ்சம்புக விரும்பிய அகதிகளின் மனுக்களை, 2001 இன் கடைசி ஆறு மாதங்களில் வந்த மனுக்களோடு ஒப்பிடும்போது 9% குறைந்துவிட்டது. இதே காலத்தில் ஜேர்மனியில் அகதிகள் அந்தஸ்து கோரி வரும் மனுக்களின் எண்ணிக்கை, 24% குறைந்துவிட்டது. 2002 இன் ஜனவரிக்கும், ஜூன் மாதத்திற்கும் இடையில் ஜேர்மனியில் அகதிகளாக தஞ்சம்புகுவதற்கு 36,000 மக்கள் மனுச் செய்தனர். இது முந்தைய ஆறு மாதங்களில் வந்த அகதிகளைவிட 11,000 குறைவானதாகும்.

அகதிகளாக தஞ்சம்புக வந்தவர்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மக்களது எண்ணிக்கை மேலும் அதிக அளவில் குறைந்துவிட்டது. அகதிகள் முகாம் அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி அக்டோபர் மாதத்தில் ஜேர்மனியில் அகதிகளாக புக விரும்பும் மக்களது எண்ணிக்கை கடுமையாக, குறைந்துவிட்டது. 2001ம் ஆண்டில், 20% மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2002 இன் முதல் எட்டு மாதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 6% ஆக வீழ்ச்சியடைந்துவிட்டது.

இப்படிப்பட்ட கடுமையான வீழ்ச்சிக்கு காரணம், ஜேர்மன் அரசு மேற்கொண்ட அரசியல் முடிவுகள்தான். அதுமட்டுமல்ல குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர், அகதிகள் மீது ஏவிய நிர்ப்பந்தங்களும் காரணமாகும். இதற்கு வெளியுறவு அமைச்சராக பணியாற்றி வரும் பசுமை கட்சியை சேர்ந்த ஜோஸ்கா பிஸ்ஸர் வெளியிட்ட அறிக்கைகளும் காரணமாகும். அவரது முடிவின்படி அகதிகளாக இடம்பெயர விரும்புவோருக்குக்கான வாழ்வதற்கான பகுதிகள், இடங்கள் தமது சொந்தநாடுகளிலேயே இருப்பதாக ஜேர்மனிய அமைச்சர் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

உதாரணமாக, ஈராக்குடன் போர் புரிவதற்கு அமெரிக்க அரசு மிக மும்முரமாக முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும், ஜேர்மன் நாட்டின் உள்துறையும், வெளியுறவுத்துறையும், தஞ்சம்புகுவதற்கு ஈராக் மக்களுக்கு ஈராக்கிற்கு உள்ளேயே இடம் இருப்பதாக கருதுகின்றன. (உதாரணமாக ஈராக்கிய குர்திஸ் மக்கள் வட ஈராக்கில் இருக்கலாம் என கூறுகின்றனர்) ஈராக்கிலிருந்து வரும் அகதிகள் ஜேர்மனியில் குடியேறுவதற்கு முதல் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 910 ஈராக் மக்கள் தஞ்சம் தரக்கோரி மனுச் செய்தனர். அவர்களது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு எதுவுமில்லை.

ஈராக்கில் இருந்து வந்த அகதிகளை நாடுகடத்துவது தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் துருக்கி தன் நாட்டு எல்லை வழியாக அகதிகள் திரும்ப அனுப்பப்படுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது. ஈராக் உடனான போர் பல மாதங்கள் நீடிக்கும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதிகளிலும், ஜேர்மனியிலும் மேலும் அகதிகள் வந்து குவியாமல் தடுப்பதற்கு வகை செய்ய அப்பகுதிகளிலேயே முகாம்களை அமைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved