World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
பாகிஸ்தான்
இரண்டு பாகிஸ்தானிய மாகாணங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆட்சிக்கு வருகை By Vilani Peiris பாகிஸ்தானில் அக்டோபர் மாதத்தில் நடந்த தேசிய தேர்தல்களைப் பின்தொடர்ந்து, இஸ்லாமிய அடிப்படைக் கட்சிகளின் இணைப்பான முக்தகிதா-மாஜிலிஸ்-இ-அமால் (MMA), வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில், கடந்த முப்பதாண்டுகளில், முதன்முறையாக ஆட்சியைப்பிடித்துள்ளது. அண்டையிலுள்ள பலூச்சிஸ்தான் மாகாணத்தில் கூட்டரசாங்கம் அமைத்திட, MMA கட்சி, பாகிஸ்தானின் இராணுவ பலவானான பர்வேஸ் முஷாரப்பின், முஸ்லீம் லீக் க்வேய்த்-இ-அசாம் (PML-QA) கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தானில் அதனுடைய தாக்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அமெரிக்காவிற்கு எதிரான போக்கினைப் பயன்படுத்திக்கொண்டு, நடந்த தேர்தல்களில் MMA கட்சி கணிசமான அளவில் அதிக வாக்குகளைப் பெற முடிந்தது. வாஷிங்டனின் வற்புறுத்தலினால், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக, முஷாரப் கடுமையான நடவடிக்கை எடுத்தார், அவர் மேலும் பாகிஸ்தானிய நிலைகளை அமெரிக்க இராணுவம் உபயோகித்துக்கொள்ள அனுமதியளித்ததுடன், CIA, FBI மற்றும் அமெரிக்காவின் சிறப்பு படைகள், நாட்டினுள் உலவும் சந்தேகப்படக்கூடிய அல் காய்தா மற்றும் தலிபான் உறுப்பினர்களை வேட்டையாடவும் ஒத்துக்கொண்டார். வடமேற்கு எல்லைப் புற மாகாண மக்களும் ஆப்கானிஸ்தானின் எல்லையோர பலுகிஸ்தான் மக்களும், ஆப்கானியர்களுடன் நெருக்கமான மலைவாழ் இன மற்றும் இனக்குழு சார்ந்த பிணைப்பைக் கொண்டிருந்தனர். இரண்டு மாகாணங்களின் பழங்குடி பிராந்தியங்களில் அமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை பிரதிநிதிகள் தீவிரமாக செயல்படுவதற்கு எதிராக மிகப்பரவலான கோபத்தைத் தூண்டியுள்ளது. MMA கட்சி, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்ப அழைத்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய தேர்தல்களில் 60 இடங்களை வென்ற MMA கட்சி, PML-QA மற்றும் முன்னாள் பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (PPP) அடுத்ததாக மூன்றாவது இடத்திலுள்ளது. 124 உறுப்பினர்களைக் கொண்ட NWFP மாகாண சபையில், இக்கூட்டு, பெரும்பான்மையாக 68 இடங்களையும், பலூச்சிஸ்தானில் 65 இடங்களில் 18 இடங்களையும் வென்றுள்ளது. MMA கூட்டுக் கட்சியின் ஓர் அங்கமான ஜமாயித் உல்மா இஸ்லாம் (JUI) கட்சியின் தலைவர், அக்ராம் கான் துரானி (Akram Khan Durani), நவம்பர் 29ம் தேதி, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் புதிய முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-73ம் ஆண்டில் NWFP பிராந்தியத்தினை, 9 மாதங்கள் ஆண்ட மெளலானா முப்தி முகமதுவிற்கு அடுத்து, JUI யின் இரண்டாவது முதல் அமைச்சர் இவர் ஒருவரே. மாநிலம் முழுவதும் பிற்போக்கான இஸ்லாமியச் சட்டங்களை செயலாக்கிடுவதே தன்னுடைய முதல் நடவடிக்கையாக இருக்கும் என்று துரானி குறிப்பாகத் தெரிவித்துள்ளார். சூதாட்டம் மற்றும் மது விற்பனையினைத் தடுத்து நிறுத்திட முழுமையான தடை உத்தரவினை கட்டாயமாக்கிட, பிராந்திய நிர்வாகத்தினைக் கோரியுள்ளார். மேலும் அவர் பொதுஜன போக்குவரத்து உரிமையாளர்களை, இசை மற்றும் திரைப்படங்கள் இயக்கத்தை நிறுத்தவும், ஒவ்வொரு நாளும் ஐந்து முறை முஸ்லிம் வழிபாடு செய்திட, பேருந்துகளை நிறுத்தி வைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 30ம் தேதி, MMA கட்சியின் ஜமால் ஷா, முதல் அமைச்சர் மற்றும் துணை அவைத்தலைவராகப் பதவியேற்றுள்ள PML-QA கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால்தான் பலூச்சசிஸ்தானின் மாநில சபையின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மற்றய சிறுபான்மைக் கட்சி ஆதரவுடன், அரசினை அமைத்திட வேண்டுகோள் விடுத்த MMA கட்சி, பிரதம மந்திரி ஜபாருல்லா ஜமாலியின் (Zafarullah Jamali) தலையீட்டால் கடைசி நிமிடத்தில் திடீரென மாற்றிக்கொண்டது. போலி ஆவணம் தயாரித்தலுக்காக ஒருவரும் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக மற்றொருவருமாக, 2000ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு முன்னாள் MMA பிராந்திய அமைச்சர்களின் விடுதலை, அரசு அமைத்திட செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு விதியாக இருந்தது. பலூச்சிஸ்தானின் முதல் அமைச்சர் ஜாம் யூசுப் (Jam Yousaf), அவர்களையும், மற்றும் ஜனவரி மாதத்தில் முஷாரப்பினால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைக் குழுக்களின் உறுப்பினர்களையும் விடுவிக்க, டிசம்பர் 6ம் தேதி ஆணையிட்டார். 12 அம்சங்களைக் கொண்ட கூட்டரசாங்கத்திற்கான ஒப்பந்தத்தில், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் வாழும் பிராந்தியங்களில் மது விற்பனையைக் கட்டாயமாகத் தடுத்திடலும், பிராந்தியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தலும், ஆழ்நிலை துறைமுகம் ஒன்றைக் கட்டுமானம் செய்திடலும், முக்கிய சோதனை சாவடிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளைத் திரும்பி அழைத்திடலும் சேர்க்கப்பட்டுள்ளது. வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில், MMA கட்சி, முஷாரப் மற்றும் PML-QA கட்சியுடன் இணைந்து பணியாற்றிடவும் விருப்பம் தெரிவித்துள்ளது. NWFP முதல் அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதம மந்திரி ஜமாலி, ``அங்கே அவர்கள் எங்களுடைய பங்காளிகள். மைய அரசிலிருந்து யாராவது அவர்களை தொந்தரவு செய்திடவோ, அங்கிருக்கும் MMA அரசிற்கு எந்த நடவடிக்கையோ எடுத்திடக்கூடும் என்ற அச்சம் யாருக்கும் தேவையில்லை`` என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். தேர்தலுக்குப் பின்பு, MMA கட்சி குறிப்பிடத்தக்க வகையில் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கு எதிரான தங்களது சுதியைக் குறைத்துள்ளது. MMA கட்சியின் துணைத்தலைவர் க்வாஸி ஹுசேன் அகமத் சென்ற மாதம் பின்வருமாறு அறிவித்தார்: ``நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. மேற்கு உலகத்துடன் பாலமாக செயல்படவே விரும்புகின்றோம்.`` அதிகாரபூர்வமாக பதவியேற்ற பின்பு, புதிய NWFP முதல் அமைச்சர் அக்ரம் கான் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தனது அரசாங்கம், தங்களது அதிகார எல்லைக்கு அப்பால் நடந்திடும் அமெரிக்காவின் இராணுவ செயல்பாடுகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்காது என்றார். ``FBI யின் செயல்பாடுகள், பிராந்திய அரசின் எல்லைகளுக்குள் வராத பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே நடந்திட வரையறுக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் சட்ட உரிமைகளை அமெரிக்கா மதிக்கும் என எண்ணுகின்றேன்`` என்று கூறியுள்ளார். தேசிய அளவில் ஒரு கூட்டமைப்பு உருவாகிடுவதற்கான முயற்சிகளின் தொடர்பாகவே, பலூச்சிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப் புற மாகாணம் ஆகியவற்றிலுள்ள MMA கட்சி மற்றும் PML-QA கட்சி ஆகியவற்றுக்குள் இருக்கும் ஒத்துழைப்புத் தெரிகின்றது. பல வாரங்களாக நடந்த சச்சரவுகளுக்கு பின்பு கடந்த மாதம் குறைந்த பெரும்பான்மையுடன் முஷாரப்பின் கட்சி அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் ஒரு வாரத்திற்குள், கூட்டமைப்பின் ஒரு பங்காளரான முத்தாகிதா குவாமி இயக்கம் (MQM), அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போகும் விதத்தில் கூட்டமைப்பிலிருந்து விலகியது. அன்றிலிருந்து பிரதம மந்திரி ஜமாலி, மெளலானா பாஸ்லுர் ரஹ்மான் மற்றும் க்வாசி ஹுசைன் அகமது உட்பட, MMA தலைவர்களை வசப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். MMA கட்சியும் அதற்கு மறுமொழி கூறியுள்ளது. டிசம்பர் 5ம் தேதி, MMA அரசியல்வாதி லியாக்வாத் பாலுக் (Liequat Baloch) பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ``இந்த அரசாங்கத்தினைக் கைப்பற்றிடவோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை அதற்கு எதிராக உபயோகிக்கவோ அல்லது கூட்டாக எதிர்ப்பினை தெரிவித்திடவோ நாங்கள் இப்போது அவசரப்படவில்லை`` என்றார். சென்ற வாரப் பேச்சு வார்த்தைகளை ``நம்பிக்கையூட்டுவதாகவே`` MMA தலைவர் ரஹ்மான் விவரித்துள்ளார். இதற்கு முன்பு MMA கட்சி, அக்டோபர் மாத தேர்தலுக்கு முன்பு, ஜனாதிபதியின் ஆணைப்படி செய்யப்பட்ட, முஷாரப்பின் ஜனநாயகத்திற்கு எதிரான அரசியலமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களை முழுமையாக திரும்பப் பெற்றுக்கொள்ள வற்புறுத்தியது. இத்தகைய நடவடிக்கைகள், முக்கியமாக அரசாங்கத்தைக் கலைத்திட, இராணுவ தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள், நீதிபதிகள் மற்றும் நிர்வாகத்திலிருப்பவர்களை மாற்றும் அதிகாரம், மிகப்பெரிய அளவில் ஜனாதிபதியின் கைகளில் மையங்கொள்ள உதவியது. இப்பொழுது MMA ஆனது, முஷாரப்பை ஆயுதப்படைகளின் தலைவர் பொறுப்பை கைவிடுமாறும் குடிமக்களாட்சிக்கு எதிர்காலத்தில் மாறுதல் தொடர்பாக நேர்மையைக் காட்டுமாறும் சாதாரணமாகக் கேட்டுக் கொள்கிறது. ஆனால் எந்தவொரு பேரத்திற்கும், இராணுவம் மற்றும் அதைச் சார்ந்த கட்சியின் அனுமதியை
மட்டுமல்ல, அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவிற்காக முஷாரப் சார்ந்திருக்கும் வாஷிங்டனின் அனுமதியும் தேவை
என்பதை MMA
கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது. அதனால் தான், MMA
தலைவர்கள் அனைவரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் காட்டிய அமெரிக்காவிற்கு எதிரான வாய்ச்சவடால்களை
மாற்றிக்கொண்டு, தங்களது எதிர்ப்பினை அமெரிக்க இராணுவத்திற்கு கீழ்ப்படியச் செய்த்துடன், வாஷிங்டனுடன் ஒத்துழைக்கத்
தயாராகி வருகின்றனர். |