World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Former UN weapons inspector denounces Bush war plans against Iraq

Scott Ritter speaks at Oakland University in Michigan

ஈராக்கிற்கு எதிரான, புஷ், போர்த்திட்டங்களை,ஐ.நா. வின் முன்னாள், ஆயுத ஆய்வாளர் கண்டிக்கிறார்

மிச்சிகன், ஒக்லாந்து பல்கலைக்கழகத்தில், ஸ்கொட் ரிட்டரின் உரை

By Jerry Isaacs
9 December 2002

Back to screen version

சென்ற வாரம், டெட்ரோய்ட் பகுதியில், பொது மக்களிடையே உரையாற்றிய, ஐ.நா.வின் முன்னாள், தலைமை ஆயுத ஆய்வாளர், ஸ்கொட் ரிட்டர், ஈராக்கிற்கு, எதிராக, புஷ் நிர்வாகம், மேற்கொண்டு வரும் போர்த் தயாரிப்புக்களைக் கண்டித்தார். மிச்சிகனில், பொன்டியாக், அருகில் உள்ள ஒக்லாந்து பல்கலைக்கழகத்தில், 300 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிறர் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

ரிட்டர், அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர். அமெரிக்க உளவு அமைப்பில் (சிஐஏ) பணியாற்றிய அதிகாரி. 1991 முதல் 1998 வரை, ஈராக்கில் ஆயுதங்கள் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை, ஈராக் வைத்திருப்பதாக, புஷ் நிர்வாகம், கூறி வரும், பொய்களை அம்பலப்படுத்தும் தகுதி வாய்ந்தவர். இரசாயன, உயிரியல், மற்றும் இராணுவ ஆயுதங்கள் ஈராக் வசம் உள்ளதாக அமெரிக்கா கூறி வரும் குற்றச்சாட்டுகள் அடிப்படை எதுவும் இல்லாதவை என்று ரிட்டர் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்கள் குழுவிலிருந்து, 1998ம் ஆண்டு ரிட்டர் விலகினார். பின்னர், ஆயுத ஆய்வாளர்கள் மூலம் சதாம் ஹூசேனையும் மற்ற ஈராக் தலைவர்களையும், அமெரிக்கா வேவு பார்த்து வருவதாக அதவர் குற்றம் சாட்டினார். 1998-டிசம்பரில் அமெரிக்கா ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டுமென்று கட்டளையிட்டது, 24-மணி நேரத்திற்குள் ஈராக் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல்களை நடாத்தியது. சதாம் ஹூசேனின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை ஆயுத ஆய்வாளர்கள் திரட்டியிருந்தனர். அவற்றைப் பயன்படுத்தி சதாம் ஹூசேனை குறி வைத்து தாக்குவதற்காக அந்த தகவல்களை அமெரிக்கா பயன்படுத்தியது.

ஆய்வாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ரிட்டர் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பகிரங்கமாக எதிர்க்கத் துவங்கினார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், ஈராக் நாசமாகிவிட்டதாக அவர் விமர்சனம் செய்தார். அந்நாட்டில் அமெரிக்காவின் இராணுவ தலையீட்டிற்கு எதிரியாக தன்னை மாற்றிக்கொண்டார். பல ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் அவர் இது சம்மந்தமாக, உரையாற்றியுள்ளார். செப்டம்பர் மாதம் லண்டனில் போருக்கு எதிரான ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்ட கண்டன பேரணியில் ரிட்டர் உரையாற்றினார். அக்டோபரில் அமெரிக்காவின் பல மாநிலங்களில் அவர் சுற்றுப் பயணம் செய்தார். ஈராக்கிற்கு எதிராக, போர் புரிவதற்கு புஷ்ஷுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் வழங்க வாக்களித்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

இப்படி அவர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையை கொண்டிருப்பதால், ரிட்டரின் பொதுக்கூட்ட உரைகள் பெரும்பாலும் செய்தி ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டன. புஷ்ஷின் போர் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற குரல்களை தணிக்கை செய்யும் கொள்கைப்போக்கை செய்தி ஊடகங்கள் நிலைநாட்டி வருகின்றன. ரிட்டர் டிசம்பர்-2-ந்தேதி ஒக்லந்து பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை பெரும்பாலான செய்தி ஊடகங்கள் புறக்கணித்தன.

அங்கு உரையாற்றும்போது, கிறிஸ்துமஸ் வாக்கில் ஈராக்குடன் அமெரிக்கா போர் தொடுக்கும் என்று, தொலைநோக்கோடு கூறினார். "ஈராக்கில் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதாக கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கின்ற வகையில் புஷ் நிர்வாகம் எந்தவிதமான ஆதாரத்தையும் தரவில்லை" என்ற போதிலும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் ஈராக்கியரையும் பலியாக்கும் போர் தொடுக்கப்படும் என்பதை ரிட்டர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அக்டோபர் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு போர் புரிவதற்கான அதிகாரம் வழங்குவது தொடர்பாக காங்கிரசில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்திலேயே அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரொனால்ட் ரம்ஸ்பீல்ட்டும் இதர நிர்வாக அதிகாரிகளும் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பேட்டிகளில், ஈராக், அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிரட்டலை பிரதிநித்துவம் செய்கிறது என்று சுட்டிக்காட்ட விரும்பினர், என்ற விபரத்தை ரிட்டர் பல்கலைக்கழக உரையில் குறிப்பிட்டார். "அவர்கள் புகைப்படங்களை, நிருபர்களுக்கு தந்தனர், அவை ராக்கெட் சோதனை தளங்கள் என்று கூறினார். அங்கு ஈராக் நீண்ட தூரம் சென்று தாக்குகின்ற ராக்கெட்டுகளை சோதித்து வருவதாக கூறினர். மீண்டும் கட்டப்பட்ட ஒரு தொழிற்கூடத்தை காட்டினர். அங்கு உயிரியல் ஆயுதங்களை ஈராக் தயாரித்து வருவதாக குறிப்பிட்டனர். நாசர் அரசு நிறுவனத்தில் ஈராக் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான கருவிகளை (சென்ட்ரிபியூஜிகளை) உருவாக்கி வருவதாகவும், இதுபோன்று பல்வேறு காரணங்களை அவர்கள் கூறினர்."

"மீண்டும் ஈராக்கிற்கு ஆயுத ஆய்வாளர்கள் சென்று ஒரு வாரத்திற்கு பின்னர் அவர்கள் அந்தத் தளங்கள் ஒவ்வொன்றையும் நேரடியாக சோதனையிட்டனர். அங்கு எதையும் அவர்கள் காணவில்லை." "அப்படி என்றால் ஈராக்கியர் அவற்றை அப்புறப்படுத்திவிட்டார்கள் என்று பொருள் அல்ல, அந்தத்தளங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லையென்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்" என்று மேலும் அவர் கூறினார். "ஈராக் நாட்டின் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக, ரம்ஸ்பீல்ட்டிற்கு தகவல் ஏதாவது இருக்குமானால் அங்கு நேரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களிடம், அவர் ஏன் அந்தத் தகவலை தரவில்லை?" என்று ரிட்டர் கேட்டார்.

"ஜனாதிபதிகள் அமெரிக்க மக்களிடம் பொய் சொல்லுகிறார்கள்`` - என்று ரிட்டர் குறிப்பிட்டார். 1964- டோங்கின் வளைகுடா நிகழ்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு வியட்நாம், தாக்குதல் நடத்தியதாக தவறான தகவலை அன்றைய ஜனாதிபதி லின்டன் ஜோன்சன் கூறி நாடாளுமன்றத்தில் போருக்கான அதிகாரத்தை பெற்றுக்கொண்டார். "அது பத்து ஆண்டுகள் சிம்ம சொப்பனமான வியட்நாம் போருக்கு வழிவகுத்தது, 58,000 -அமெரிக்கர்கள் பலியானார்கள். 20-லட்சம் வியட்நாம் மக்கள் பலியானார்கள்" என்று ரிட்டர் குறிப்பிட்டார்.

உண்மையில், 1991-வளைகுடாப்போரில் ஈராக் நாட்டின் ஆயுதங்களின் திறன் அனைத்தும் அழிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகள் ஆயுத ஆய்வாளர்கள் நேரடி சோதனை செய்து பயங்கர ஆயுதங்கள் எதுவும் ஈராக்கிடம் இல்லை என்று உத்திரவாதம் செய்து கொண்டனர். இவற்றிற்கு அப்பால் ஏதாவது உயிரியல் ஊக்கிகள் இருந்திருக்குமானால் அவற்றின் உயிரோட்டம் சில ஆண்டுகளிலேயே முடிவிற்கு வந்திருக்கும். எனவே, இனி அவற்றால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. 1996-வாக்கில் ஈராக் ஆயுதங்களின் திறன் 90-முதல்-95 சதவிகிதம் இருப்பதாக, மதிப்பீடு செய்தனர். பொதுமக்களை கொன்று குவிக்கின்ற ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் என கணக்கில் எடுத்துக் கொண்ட ஈராக் தொழிற்சாலைகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக, ரிட்டர் விவரித்தார்.

ஈராக்கில் ஆயுதங்களை பறிமுதல் செய்யவேண்டுமென்பதில், புஷ் நிர்வாகத்திற்கு அக்கறை எதுவும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஈராக்கிற்கு எதிராக போர் புரிந்து அந்த நாட்டை ஆக்கிரமித்துக்கொள்ள வேண்டுமென்பதுதான், அமெரிக்காவின் நோக்கம் என்றும் விளக்கினார். தொடர்ந்து ஆயுத சோதனைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு ஈராக்கில் மக்களை கொல்லும் ஆயுதங்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், ஐ.நா. விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். சதாம் ஹூசேன் தலைமையில் சர்வதேச சமுதாயத்தில் ஈராக் மீண்டும் இணைந்துவிடும். "இப்படி சதாம் ஹூசேன் தலைமையில் ஈராக் மீண்டும் சர்வதேச அரங்குகளில் இடம் பெறுவதை புஷ் நிர்வாகம் விரும்பவில்லை. எனவேதான், போருக்கான வழியை தயாரிப்பதற்காக ஆயுத பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன" - என்று ரிட்டர் குறிப்பிட்டார்.

எத்தகைய ஆழமான ஆய்விற்கும் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு ஆகும் என்பதை ரிட்டர் சுட்டிக்காட்டினார். ஆனால் பருவ நிலை காரணமாக, டிசம்பர் மற்றும் மார்ச்சு மாதங்களுக்கிடையில் தான் ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. "எனவேதான், விரைவில் இராணுவ நடவடிக்கை துவக்கப்படுவது அவசியமாகிவிட்டது. டிசம்பர்-8-ந்தேதி ஈராக் தனது பிரகடனத்தை வெளியிட்டதும், டிசம்பர் போர் துவக்கப்படும். அப்போது புஷ் நிர்வாகம், ஈராக் தனது ஆயுதத் திட்டத்தை அறிவிக்க தவறிவிட்டதாக கூறி அது ஒரு முக்கியமான அத்துமீறல் என்று கருதி இராணுவ நடவடிக்கைக்கு சமாதானம் கூறும். அப்போது அமெரிக்கப் படைகள் போரில் இறங்கும்."

போருக்கான திட்டங்கள் பொதுமக்களிடையே, கருத்துப் பரிமாற்றம் அல்லது விவாதங்கள் எதுவுமில்லாமல் நடைபெற்று கொண்டிருப்பதாக ரிட்டர் குறிப்பிட்டார். அமெரிக்க செய்தி ஊடகங்கள் ஈராக் பற்றி அமெரிக்க மக்களுக்கு உண்மையான தகவல் எதையும் தரவில்லை. எந்தவிதமான, கேள்விக்கும் இடம் இல்லாமல் அமெரிக்க வெள்ளை மாளிகையின் கருத்துக்களை அமெரிக்க செய்தி ஊடகங்கள் எதிரொலிக்கின்றன.

பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்கு முன்னர், நிருபர்களுக்கு ரிட்டர் பேட்டியளித்தார். "செய்தி ஊடகங்கள் நிர்வாகத்தோடு முரண்டுபவதற்கு கூட்டாக கோழைத்தனத்தைக் காட்டுகின்றனர்" மற்றும் "உண்மைகளுக்கு மதிப்பு தராமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன" - என்று ரிட்டர் குறிப்பிட்டார். சி.என்.என். (CNN) - செய்தி ஆசிரியர் குழுவினர் தன்னிடம் ஒரு மணி 45-நிமிடங்கள் வரை துருவித்துருவி கேள்வி கேட்டு அதற்குப் பின்னர் தான் நம்பகமான செய்தி ஆதாரம் என்று ஏற்றுக்கொண்டனர்" - என்று ரிட்டர் குறிப்பிட்டார். புஷ், செனி அல்லது ரம்ஸ்பீல்ட்டை நிரூபர்கள் என்னை விசாரித்ததைப்போல், முழுமையாக விசாரிப்பதில்லை அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். "அவர்கள் ஈராக்கினால் ஏற்படும் மிரட்டல்கள் குறித்து அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். எந்த ஒரு நிருபரும் அதைப்பற்றி அப்படி கடுமையான கேள்வி எதுவும் கேட்காமல், அந்த அறிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று ரிட்டர் குறிப்பிட்டார்.

ஒக்லாந்து பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது, முன்னாள் ஆயுத ஆய்வாளரான ரிட்டர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புஷ் நிர்வாகத்திற்கு போர் புரிவதற்கு ஒருதலைப்பட்சமான அதிகாரம் வழங்கும் வகையில் அதுவும் தேர்தல் நேரத்தில் அந்த அதிகாரத்தை வழங்கியதற்காக, ஜனநாயகக் கட்சியினரையும் குடியரசுக்கட்சியினரையும் கண்டித்தார். அமெரிக்க மக்களால் விவாதிக்கவும் முடிவு எடுக்கப்படவும் செய்யாத வகையில், போர் பற்றிய பிரச்சினையை விவாதத்திற்கு வைக்காமல் அவர்கள் எடுத்து விட்டார்கள்.

புஷ் நிர்வாகம் அதன் எதிராளிகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பவர்கள் என்று மிரட்டுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை ரிட்டர் கண்டித்தார். அப்படி எதிர்ப்பு நிர்வாகம் மிரட்டுவதாக ரிட்டர் குறிப்பிட்டார். தேச பக்தி சட்டமும், உள்நாட்டு பாதுகாப்பு விதிகளும், அமெரிக்க அரசியல் சட்ட உரிமைகளுக்கு அச்சுறுத்தலை விடுத்து வருகின்றன மற்றும் "ஒரு சர்வாதிகாரத்தை" உருவாக்க அந்த விதிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றார். மேலும் நிர்வாகமானது "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை, அமெரிக்க தன்னிச்சைவாதம் மற்றும் முன்னரே தாக்குதல் என்ற புஷ்ஷின் கொள்கையைத் திணிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

"இதன் பொருள் என்னவென்றால், தன்னிச்சையாக உலகத்தின் மீது தன்விருப்பை சுமத்துவதற்கு தனது தன்னிகரரில்லாத இராணுவ மற்றும் பொருளாதார வலிமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். நாம் சர்வதேச சட்டத்தைப்பற்றி கவலைப்படவில்லை. அமெரிக்காவிற்கு எது நன்மையோ, அதைப்பற்றி மட்டும் கவலைப்பட்டு அமெரிக்காவிற்கு நலன் பயக்கும் முடிவை உலக நாடுகள் மீது திணிக்க விரும்புகிறோம். இத்தகைய நடவடிக்கைக்கு இன்னொரு சொல் உண்டு. அது ஏகாதிபத்தியம்" - என்று ரிட்டர் விளக்கினார். "இந்த சொல்லை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்வது சிரமம். ஏனென்றால் 220-ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஏகாதிபத்திய அரசிடமிருந்து விடுதலை பெறுவதற்காக, அமெரிக்கர்களாகிய நாம் ஓர் புரட்சிகர போர் புரிந்தோம். அது எப்படியிருந்தாலும் இன்றைய தினம் நாம் ஏகாதிபத்திய சக்தி என்றுதான் உலகில் கருதப்படுகிறோம்" - என்றும் ரிட்டர் குறிப்பிட்டார்.

"நியாயமற்ற ஒரு போரில் நம்மை ஈடுபடுத்துவதற்கு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அனுமதிப்போமானால், ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்வதற்கு தகுதியில்லாதவர்களாக ஆகிவிடுவோம். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிக நெருக்கடியான கட்டம் ஆகும். அமெரிக்க மக்களாகிய நாம் நமது அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமென்று அங்கீகாரம் வழங்குகிறோமோ அதுதான் நாம் சர்வதேச அளவில் மேற்கொள்ளும் உறவுகளை நிர்ணயிக்கும் என்பது மட்டுமல்ல, நாம் ஒரு நாடு என்கிற முறையில் எப்படி நடைபோட வேண்டுமென்பதையும் நிர்ணயிக்கும்" - என்று ரிட்டர் தனது உரையை முடித்தார்.

நிருபர்களுக்கு பேட்டியளித்த ரிட்டர் அமெரிக்க வெள்ளை மாளிகை மேற்கொள்ளும் கொள்கைகள் தொடர்பாக, அமெரிக்க இராணுவத்திற்குள்ளேயே கொந்தளிப்புக்கள் உருவாகி வருவதாகவும், ரொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் அவரது துணை அமைச்சரான போல் வொல்ஃவிற்ஸ், போன்ற சிவிலியன் அதிகாரிகள் மீது அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் பரவலாக ஆத்திர உணர்வுகள் உருவாகி வருவதையும் குறிப்பிட்டார்.

பேட்டியின்போது, இந்த நிருபர் (கட்டுரை ஆசிரியர்) "உங்களுக்கு இராணுவ அல்லது புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஏதாவது ஒரு தரப்பினர் ஆதரவு காட்டுகிறார்களா?" என ஒரு கேள்வி கேட்டார். "பெண்டகனில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இது எனக்குத் தெரியும். பென்டகனின் மத்திய பிரிவைச் சார்ந்த இரண்டு கமாண்டர்கள், ஜெனரல் ஜின்னி உட்பட அண்மையில் ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையில் இராணுவ சீருடையணிந்து போர்க் காலத்தில் நாட்டிற்காக பணியாற்றிய எவரும் இந்தப்போரை எதிர்க்கவே செய்கின்றனர். ஏன்? ஏனென்றால், போர் என்றால் என்ன என்பதை நாம் அறிவோம். போரில் நடைபெறும் சாவுகள் நமக்குத் தெரியும். அழிவுகளை நாம் அறிவோம்" - என ரிட்டர் பதிலளித்தார்.

"ஜோர்ஜ் W. புஷ் வியட்நாம் போரின்போது, ஹூஸ்டனுக்கு மேலே, தி-102-போர் விமானத்தை இயக்கிக்கொண்டு சென்றவர். சினியின் அரசியல் வாழ்விற்கு வியட்நாம் போர் சங்கடமாக அமைந்தது. எனவேதான், அவரை நோக்கி நான் கேட்க விரும்புவது, ஈராக் போர், பல்லாயிரக்கணக்கில் பலியாக இருக்கும் அமெரிக்க இளைஞர்களுக்கு அல்லது லட்சக்கணக்கில் பலியாக இருக்கும் ஈராக் குடிமக்களுக்கு, ஈராக்கில் நடக்கும் போர் எவ்வளவு சங்கடமாகயிருக்கும் என்பதுதான்?"

புஷ் நிர்வாகத்தின் போர் ஆதரவு கொள்கைக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு வளர்ந்து வருவதையும், அதிருப்தி உருவாகி வருவதையும் ஒக்லாந்து பல்கலைக்கழக கூட்டம் எடுத்துக்காட்டியது. ரிட்டர், புஷ்ஷிற்கு வாக்களித்தவர், குடியரசு கட்சியில் பழமைவாதி என்று தன்னைத்தானே அவர் வர்ணித்துக்கொள்பவர். அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் போருக்கு எதிராக வளர்ந்து வரும் உணர்வுகளும் அமெரிக்காவில் அரசியல் சாசனம் உறுதி செய்து தந்திருக்கும் உரிமைகள் துச்சமாக மதிக்கப்படுவது தொடர்பான வேதனைகளும், ரிட்டரையே பாதித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved