World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

"The most hateful thing they could do to us"

September 11 widow condemns US war plans

''அவர்கள் எமக்கு செய்யும் மிகவும் வெறுக்கத்தக்க செயல்''

செப்டம்பர் 11ல் விதவையானவர் அமெரிக்க போர் திட்டங்களை கண்டிக்கிறார்

By Bill Vann
2 December 2002

Back to screen version

உலக வர்த்தக மைய கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் அவரது கணவர் கொல்லப்பட்டு ஓராண்டு முடியும் தறுவாயில், ஜெசிக்கா மூர்ரோ (Jessica Murrow) உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொண்டார். செப்டம்பர் 11ன் துயர நிகழ்ச்சிகளை புஷ் அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதை கண்டிக்கும் எமது கட்டுரை ஒன்றிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். ''மிக கடுமையான இழப்பிற்கு உள்ளானவள் என்ற முறையில் எனது குரல் ஏதாவது பயன்படுமென்றால், அந்தக் குரலை ஈராக்கிற்கு எதிராக போர் தொடுக்கும் முயற்சிக்கு எதிராக எனது குரலை ஓங்கி ஒலிக்க விரும்புகிறேன் என ஜெசிக்கா மூர்ரோ குறிப்பிட்டார்.''

அவரது கணவர் ஸ்டீவ் ஆதம் (Steve Adams), முதலாவது விமானம் உலக வர்த்தக மைய வடக்கு கோபுரப் பகுதியில் மோதியபோது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு உணவு விடுதியில் குடிபானங்கள் தயாரிப்பு மேலாளராக அண்மையில் பதவி உயர்வு கிடைத்திருந்தது. எனவே தனது கூடுதல் பொறுப்புக்களை கருத்தில் கொண்டு அவர் பணிக்கு வரவேண்டிய நேரத்திற்கு முன்னரே அங்கு சென்றுவிட்டார். ''அவர் காலை 9 மணிக்கு முன்னர் அவரது அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் கடமையுணர்வு காரணமாக காலை 8 மணிக்கே, துரதிஷ்டவசமாக அங்கு இருந்தார்'' என்று ஜெசிக்கா மூர்ரோ குறிப்பிட்டார். அவரை பொறுத்தவரை உறவினையும், சில கொள்கையையும் மிகவும் உணர்வோடு பற்றி நிற்பார், பணத்தை தேடுவது, பதவி உயர்வை பெறுவது இரண்டாம் பட்சம்தான் என அவரின் மனைவி கூறினார்.

செப்டம்பர் 10ம் திகதி அந்த ஜோடியின் திருமண ஆண்டு விழா, நீண்ட பிரிவிற்குப் பின்னர் அண்மையில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். ''நீண்ட இடைவெளிக்கு பின்னர் நான், அவரை மீண்டும் நேசிக்கத் தொடங்கினேன் என உணர்ந்தேன், அதை நான் வெளிப்படையாக வெளியிட விரும்பினேன், ஆனால் அதை அவரிடம் கூறவில்லை. அதற்கு நாட்கள் இன்னும் இருப்பதாக எனக்கு நானே கூறிக்கொண்டேன்'' என்று ஜெசிக்கா நினைவுகூர்ந்தார்.

அடுத்த நாள் காலை அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் முன்னரே ஸ்டீவ் பணிக்குச் சென்றுவிட்டார். அவரது மைத்துனர், தொலைபேசியில் அவசரமாக அழைப்பு விடுத்தார், அப்போது ஜெசிக்கா எழுந்து தொலைபேசியை எடுத்ததும், ஸ்டீவ் வேலைக்குச் சென்றுவிட்டாரா என்று மைத்துனர் கேட்டார். அவர் தொலைக்காட்சியை பார்க்குமாறு ஜெசிக்காவை கேட்டுக்கொண்டார். ஜெசிக்கா உலக வர்த்தக மைய கட்டிடம் அதில் எரிவதை பார்த்தார்.

''எனது கணவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், தொடர்பு கிடைக்கவில்லை, தொலைபேசி இணைப்புக்கள் எல்லாம் பழுதாகிவிட்டன. இப்போது ஸ்டீவிற்கு நல்ல வேலை ஒன்று கிடைத்திருக்கிறது. அவர் இறந்துவிடுவார் என்று நான் நினைக்கவில்லை'' என்று ஜெசிக்கா குறிப்பிட்டார்.

அவரது சகோதரர் வந்தார். அவர்கள் இருவரும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து இரட்டைக் கோபுரங்கள் இடிந்து விழுவதை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கூட தனது கணவர் எப்படியாவது உயிர்தப்பியிருப்பார் என்று நம்பினார். ஜெசிக்கா பொறியாளராக பணியாற்றும் தொலைக்காட்சி நிலையத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு, உலக வர்த்தக மைய இடிபாடுகள் தொடர்பாக, நிகழ்ச்சி தயாரிக்கும் வண்டியில் தானும் செல்ல முடியுமா என்று முயன்றார்.

''ஒரு மணிக்குப்பின்னர் எனது வீட்டு கதவு மணி ஒலித்தது. அப்போது வந்தது எனது கணவர் அல்ல, எனது கணவர் இறந்துவிட்டார் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. அவரது அழுக்குத் துணிகளை, அவரது உடலை எடுத்துப்போட்டதைப் போல் வெளியில் போட்டேன். அந்தத் துணிகளுக்கு அருகில் அமர்ந்துகொண்டு நான் கதறியழுதேன், எவ்வளவு நேரம் கதறிக்கொண்டிருந்தேன் என்பது எனக்கே தெரியாது'' இவ்வாறு ஜெசிக்கா அந்த துயர சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

தனது கணவனுடன் வாழ்ந்த மன்ஹார்டன் மாடி குடியிருப்பில் அமர்ந்து, உலக சோசலிச வலைத்தத்திற்கு பேட்டியளித்தார். அந்த பயங்கரமான துயர தினத்தையும், அதற்குப் பின்னர் அவரது அனுபவத்தையும் எடுத்துரைத்தார். அவர் வீட்டின் சுவர்களில் கணவரும், அவரது நண்பர்களும் அழகான உடையணிந்து ஆங்கில நடனங்களை ஆடிய புகைப்படங்கள் காட்சியளித்தன, இருவரும் அந்த நடனங்களை விரும்பினர்.

ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிப்பதிவு பொறியாளராக பணியாற்றும் ஜெசிக்கா, செப்டம்பர் 11ம் திகதிக்கு பின்னர், தனது தொலைக்காட்சி நிலையம் சங்கிலித்தொடர்மேல் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை பார்த்தார். அவரது தொலைக்காட்சி நிலைய தயாரிப்பாளர்களையே அணுகினார். தன்னையே பேட்டி காணுமாறு கேட்டுக்கொண்டார். ''நான் இங்கேயே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், என்னை ஏன் நீங்கள், அதைப்பற்றி கேட்கக்கூடாது?'' என்று அவர் அவர்களை கேட்டார்.

தனது கணவரும், மற்றவர்களும், இறந்துவிட்டதை ஒரு சாக்காகக்கொண்டு, செய்திஸ்தாபனங்களின் ஆதரவோடு, புஷ் நிர்வாகம் போருக்கு தயாராவதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க ஜெசிக்கா முயன்றார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.

அந்த துயர சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் ஸ்டீம் உட்பட 73 ஊழியர்கள் பலியான விண்டோஸ் அலுவலகம் (Windows on the World) பற்றிய நிகழ்ச்சியை அவர் பணியாற்றிய தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பியது.

பேட்டி காணப்பட்டவர்களில் பலியானவர்களது உறவினர்கள், எப்படியாவது தங்களது உறவினர்கள் உயிரோடு தப்பி பிழைத்து வந்துவிடமாட்டார்களா? என்ற நம்பிக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்துடன் பேட்டியளித்தனர். அவர்களை கண்டவர்கள் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டனர். நியூயோர்க் நகரத்து உழைக்கும் வர்க்கத்தைப் போல் பல பகுதிகளிலிருந்தும் பிழைப்பை நாடி வந்தவர்களான தெற்காசியா, தென் அமெரிக்கா, மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்தப் புகைப்படங்களில் இடம் பெற்றிருந்தனர். ஜெசிக்கா தனது கணவரது புகைப்படத்தை காட்டவில்லை. ஏனென்றால் அவர் இறந்துவிட்டார் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை.

தனது சாவிற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் இராணுவ நடவடிக்கைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது என்பதை, எனது கணவர் அறிந்திருப்பாரானால் அவர் அதற்காக இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு தேடிக்கொண்டிருப்பார் என்று ஜெசிக்கா பேட்டியளித்தார். ''எனது கணவர் இறந்துவிட்டார் என்பதற்காக, நீங்கள் வேறு ஒருவரை கொல்லப்போகிறீர்களா?'' என்று ஜெசிக்கா கேட்டார். தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கானா நாட்டைச் சார்ந்தவர் மற்றவர்கள் இதர நாடுகளைச் சார்ந்தவர்கள், ஆனால் அனைவரும் அதே துன்பத்தில் பங்கு கொண்டவர்கள்தான் என்பதையும் ஜெசிக்கா குறிப்பிட்டார்.

அவரது அடுத்த வாக்கியத்தை தொலைக்காட்சி நிறுவனத்தினர் நீக்கிவிட்டார்கள். ''மற்றொரு நாட்டைச் சார்ந்த மக்கள் இங்கு வந்து இதை செய்கிற அளவிற்கு நாம், என்ன தீமையை உருவாக்கினோம்? நாம் நமது செயல்களை ஆராயவேண்டாமா?'' என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது.

அதற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் தொலைக்காட்சி நிலைய ஊழியர்களின் செப்டம்பர் 11ன் அனுபவங்கள் ஒளிபரப்பப்பட்டன. அப்போது ஜெசிக்காவை பேட்டி கண்டார்கள். அந்த தாக்குதலில் நேரடியாக இழப்பைச் சந்தித்தவர் ஜெசிக்கா. அவரது பேட்டியை நேரடியாக ஒளிபரப்ப முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இதற்கு முன்னர் அவர் அளித்த பேட்டியை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் வேறுவிதமாக முடிவு செய்துவிட்டனர்.

''அந்த வாரம் மிகப்பெரிய நிகழ்ச்சி ஆப்கானிஸ்தான் போர். அந்த பேட்டியில் ஆப்கானிஸ்தான் கிராம மக்கள் அவலக்குரல்களையும், குண்டு வீசி கிராம மக்கள் அழிக்கப்பட்டதை பார்த்து இதுபோன்ற தாக்குதல்கள், யாருக்கு உதவும்?'' என்று நான் கேட்டதை நீக்கிவிட்டார்கள் என அவர் கூறினார்.

''என்னுடைய பேட்டி முழுவதும் எனது கணவருடன் உறவுகளை பற்றியதாகவே அமைந்திருந்தது. அது இனிமையானது, உண்மையானது, ஆனால் நான் அக்காரணத்தால் இப்பேட்டியளிக்க சம்மதிக்கவில்லை. அரசாங்கத்தை பற்றியும், அரசின் போர் நடவடிக்கை பற்றியும் நான் கூறிய கருத்துக்களை நீக்கிவிட்டார்கள். அதில் முதல் 15நிமிடங்கள் புஷ் பற்றியும், அவரது செல்வாக்கு மக்களிடம் உயர்ந்து வருவது பற்றியும் அமைந்திருந்தது. அதையே நானும் சொல்லக்கூடும் என்று, அவர்கள் எதிர்பார்த்திருக்கவேண்டும்'' என்று ஜெசிக்கா குறிப்பிட்டார்.

தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டால், எனது தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என் மீது அன்பு கொண்டவர்கள், அவர்களுக்கு நாட்டு நடப்பு என்ன என்பதில், எந்தவிதமான கவலையும் இல்லை, என்பதை நான் சற்று தாமதமாகவே புரிந்துகொண்டேன். செப்டம்பர் 11ன் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் இடைவிடாது, தொலைக்காட்சிகள், நிகழ்ச்சிகளை தந்து கொண்டு இருந்தனவே தவிர ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட ''ஏன் அந்த நிகழ்ச்சி நடந்தது? அதன் பொருள் என்ன?'' என்பதை குறிப்பிடவே இல்லை.

பணம் சம்பாதிப்பதற்கும் பொருள்களை விற்கும் விளம்பரங்களை வெளியிடுவதற்குத்தான் தொலைக்காட்சிகள் உள்ளன. எந்த தொலைக்காட்சியும் உண்மையான செய்தியை தொடவில்லை. பொழுதுபோக்கிற்காக மட்டுமே அவை பயன்படுகின்றன. ஒரு காட்சிக்குப் பின்னர் இன்னொரு காட்சி என்று பொழுதுபோக்கு அம்சங்களையே தொடர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான், இதுபோன்ற காட்சிகளில் தன்னால் பங்குபெற இயலவில்லை என ஜெசிக்கா கூறுகிறார்.

ஜெசிக்கா, தனது சகோதரர் உதவியுடன் மருத்துவமனைகளைச் சுற்றிப்பார்த்தார். தனது கணவர் இறந்துவிட்டார் என்பதில் தனக்குச் சந்தேகம் இல்லை என்று அவர் கூறுகிறார். இறப்புச்சான்றிதழ் கோரி மனுச் செய்த முதல் குழுவில் இடம் பெற்றவர் ஜெசிக்கா. பலியானோர் இழப்பீட்டு நிதி குழுவிலும் ஜெசிக்கா இடம்பெற்றிருந்தார். விமானத் தொழிலை சட்டபூர்வமாக இழப்பீட்டு பொறுப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்காக, செப்டம்பர் 11ம் திகதிக்குப் பின்னர் 10 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோர், காப்பீட்டு நிதி அமைப்பை அமெரிக்க நாடாளுமன்றம் நிறுவியது.

''ஆரம்பத்தில் நான் விமான நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர விரும்பவில்லை, அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், அவரது தந்தை, அமெரிக்க உளவு அமைப்பான CIA மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI ஆகியவற்றின் மீதே வழக்குத் தொடரவே விரும்பினேன். ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை இந்த நான்கு தரப்பினரும்தான், செப்டம்பர் 11ன் நிகழ்வுகளுக்கு பொறுப்பானவர்கள்'' என ஜெசிக்கா விளக்கம் தந்தார்.

செப்டம்பர் 11ன் நிகழ்வுகள் குறித்து சுதந்திரமான புலனாய்வு நடத்துவதற்கு புஷ் நிர்வாகம் தடைக்கல்லாக செயல்பட்டு வருகிறது. இது செப்டம்பர் 11ன் நிகழ்வை பற்றிய எனது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. தாக்குதல் நடைபெறப்போகிறது என்பதை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்தும், அதை தடுக்க எதுவும் செய்யவில்லை. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், விமானத்தை கடத்தியதாக குற்றம்சாட்டிய பலர், கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்ற, தகவல் வெளிவந்ததை ஜெசிக்கா சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்ல, விமானங்கள் இலக்குகளை தாக்கும் முன்னர் அவற்றை வழிமறிக்க தவறிவிட்டார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"CIA இற்கும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்குமிடையே (FBI) தகவல் தொடர்புகளில் ஒரு சில பிரச்சனைகள் உள்ளன என என்னிடம் சொல்லவேண்டாம். 19 வெறியர்களும், விமானத்தில் நுழைந்து, எவருக்கும் தெரியாமல் இவ்வளவு பெரிய பேரழிவை உருவாக்கிவிட்டார்கள் என்பதை நான் நம்பவில்லை'' என ஜெசிக்கா தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இழப்பீடு சம்மந்தமான விதிமுறைகள் கூட அமெரிக்க சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஏற்றத்தாழ்வுகளையும், அநீதிகளையும், எதிரொலிப்பதாகவும், உறுதி செய்வதாகவும் அமைந்திருப்பது குறித்து ஜெசிக்கா கவலை தெரிவித்திருக்கிறார். ஆண்டிற்கு ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் டாலர்களை சம்பாதிக்கின்ற 25 வயதான முதலீட்டு வங்கியாளர் ஒருவரது குழந்தையில்லா விதவை அதே தாக்குதலில் உயிர் நீத்த சாதாரண மாத ஊதியம் பெறுகின்ற குழந்தைகளை வைத்திருக்கின்ற தொழிலாளர்களின் மனைவியரைவிட நான்கு முதல் ஐந்து மடங்கு கூடுதலாக இழப்பீடு பெறுவார் என, இப்போது தெரியவருகிறது. தொழிலாளியின் ஆண்டு வருவாய் கணக்கு அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. ''அனைவருக்கும், ஒரே சீரான தொகையை ஏன் வழங்கக்கூடாது?'' என நான் ஆரம்பத்தில் நினைத்தேன் என்று ஜெசிக்கா குறிப்பிட்டார்.

இந்த நிதிக்கு பொறுப்பான சிறப்பு அதிகாரி கென்னத் ஃபைன்பேர்க் (Kenneth Feinberg) நடவடிக்கைகள் வேதனையளிப்பதாகயிருக்கின்றன. நிதி கூட்டம் ஒன்றில் ஜெசிக்காவும் கலந்து கொண்டார். நிதியின் சிக்கலான நடைமுறைகள் பற்றிய கேள்விகளுக்கு, அந்த அதிகாரி அலட்சியமாகவும் அகங்காரத்துடனும் பதிலளித்தார். அப்போது ஒரு கட்டத்தில் வயதான ஒருவர் எழுந்து நின்று ''உங்களது பேச்சின் தோரணை எனக்குப் பிடிக்கவில்லை, இந்த அறை முழுவதும் நிரம்பி இருப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். கணவன்மார்களை இழந்தவர்கள், குழந்தைகளை இழந்தவர்கள், மனைவிகளை இழந்தவர்கள் கூடியிருக்கிறோம்'' என தெளிவாக குறிப்பிட்டார்.

இழப்பீடு சம்மந்தமான, மனுக்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு தனக்கு ஆறு மாதம் ஆனதாக ஜெசிக்கா குறிப்பிடுகிறார். இழப்பீடு கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்வதற்கு வந்தவர்களில் ஆங்கிலமே பேசத் தெரியாத, வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறிவர்களும் உண்டு. அவர்களுக்கு இழப்பீட்டு மனுக்களை பூர்த்தி செய்யவே தெரியவில்லை. எனவே, அப்படிப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு எதுவுமே கிடைத்திருக்காது என்று அஞ்சுகிறேன் என தெரிவித்தார்.

''உண்மையைச் சொல்வதென்றால், தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இழந்துவிட்ட பெரும்பாலான மக்களுக்கு தேச பக்தி பெருக்கெடுத்து ஓடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய சில கூட்டங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அவர்களும், தேசப்பக்தியால் உந்தப்பட்டவர்கள் அல்ல, உயிர் பலியானவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் நகரத்தில் ஒன்று திரட்டி அவர்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கவேண்டும். அந்த பொதுக்கருத்து அரசியலில், நமது குரல், எதுவாக இருக்கவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். செப்டம்பர் 11ன் நிகழ்வுகளில் பலியானவர்களது குடும்பங்களைச் சார்ந்த நாம் ஈராக்குடன் போரை விரும்பவில்லை என்பதை ஓங்கி ஒலிக்க வேண்டும்'' என ஜெசிக்கா குறிப்பிட்டார்.

''புஷ் நிர்வாகம் இந்த சாவுகளை சாக்காகக் கொண்டு போருக்கு ஆயத்தம் செய்வது நமக்கு ஏற்பட்ட மிக வெறுக்கத்தக்க உணர்வை உருவாக்கும் செயலாகும். இதில் எனது கணவரது அணுகுமுறையும் போக்கும் எதுவாக இருந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை'' என்கிறார் ஜெசிக்கா.

2000 ஆண்டு பொதுத்தேர்தலில் தனது கணவரது கருத்துக்களை அவர் நினைவுப்படுத்தினார். ''இரவு முழுவதும் அறையில் குறுக்கும், நெருக்குமாக நடந்து கொண்டேயிருந்தார். தேர்தலைப் பற்றி தொடர்ந்து கதைத்துக் கொண்டேயிருந்தார். இது ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிக்கும் தேர்தல் என்றார். அமெரிக்காவின் பெரிய கம்பெனிகள் பல ஆண்டுகள் அமெரிக்காவின் தேர்தல் முறையை கைப்பற்றி, அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டார்கள் என தனது கணவர் குறிப்பிட்டதாக கூறினார்.

மசாசூசட் பகுதியைச் சேர்ந்த எனது கணவரின் நண்பர், எனது கணவரின் இதே அரசியல் கருத்தை எதிரொலித்தார். ''சாதாரண மனிதனை வீழ்த்திவிட்டு, பணத்திலும் உல்லாசத்திலும் புரள்வதற்காக செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அமெரிக்க ஜனநாயகத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்'' என எனது கணவர் கருதியதாக அந்த நண்பர் குறிப்பிட்டார். ''அடிப்படையிலேயே இந்த நாட்டை கெட்ட மனிதர்கள், பிடித்துக்கொண்டார்கள். கென்னடி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் இத்தகைய தீயவர்களது ஆதிக்கம் துவங்கியது. சாதாரண மனிதனைப் பற்றி மிகுந்த நல்லெண்ணத்தோடு, சிந்தித்து, செயல்படத்துவங்கிய இளம் தலைவர் கென்னடிக்கு எதிராக சாதாரண மனிதனுக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பு புரட்சி செய்த இந்த கெட்ட மனிதர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜோர்ஜ். புஷ் ஒரு தேர்தலையே திருடுகின்ற அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்'' என தனது கணவர் கருதினார் என அவர் குறிப்பிட்டார்.

''எனது கணவர் உயிர் தப்பி, அவரது நண்பர்களும் சக ஊழியர்களும், இறந்திருப்பார்களானால் இப்போது அவர் செயல்படவே முடியாத ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்கும் என்று ஜெசிக்கா கருதுகிறார். செப்டம்பர் 11ன் நிகழ்ச்சிகளை ஈராக்குடன் போர் தொடுப்பதற்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதை கண்டு எனது கணவருக்கு பைத்தியம் பிடித்திருக்கும், எப்படி இத்தகைய போரை தடுக்கலாம் என்பதிலேயே அவர் கவனம் செலுத்தி அதற்காக ஏதாவது செய்திருப்பார்'' என்று ஜெசிக்கா கூறியிருக்கிறார்.

ஒரு நண்பர் சென்ற ஆண்டு உலக சோசலிச வலைத் தளத்திலிருந்து ஜெசிக்காவிற்கு கட்டுரைகளை அனுப்பத் தொடங்கினார். அதற்குப் பின்னர், அவரது கையெழுத்திட்டு தினசரி கட்டுரைகளை எலெக்ட்ரானிக் மெயிலில் பெற்றுக்கொண்டார். ''அதில் நான் இவ் வலைத் தளத்தை படிக்கத் தொடங்கியதும், ஓர் உண்மை எனக்கு பளிச்சென்று கருத்தில் தோன்றியது. நியூயோர்க் டைம்ஸ் நடுநிலை நாளேடு என நினைத்தேன். ஆனால் அது வலதுசாரி பக்கம் சாய்ந்துவிட்டது. எனவே, நமது சொந்தக்குரலை, செய்திஸ்தாபனங்கள் எதிலும் எதிரொலிப்பது மிகக் கடினமாகயிருக்கிறது. உங்களது தகவல் தளம் ஒன்றுதான் அதற்கு இடம் தருகிறது. செப்டம்பர் 11ன் சம்பவங்களை புஷ் நிர்வாகம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறது என்பது தொடர்பாக நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் என்னைப்போன்ற மக்களுக்கு அறிவை தட்டி எழுப்பியிருக்கிறது'' என்று ஜெசிக்கா மூர்ரோ விளக்கம் தந்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved