World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்Bangladesh's "crime" crackdown results in the deaths of 24 detainees பங்களாதேஷின் ''குற்ற'' ஒடுக்குமுறை விளைவாக காவலில் வைக்கப்பட்டிருந்த 24கைதிகள் மரணம் By Wimal Perera and Sarath Kumara குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் என்ற பெயரில், அக்டோபர் 17 அன்று தொடங்கிய நாடுதழுவிய அளவிலான பெரிய வலைவீச்சை செயல்படுத்த, பங்களாதேஷ் அரசாங்கம் போலீஸையும் சேர்த்து, சுமார் 40,000 படைவீரர்களை திரட்டி இருக்கின்றது இதன் விளைவாக, 5700 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுள் தொழிற்சங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அடங்குவர். கொலை, கற்பழிப்பு, கடத்தல், கோஷ்டி மோதல்கள் போன்ற பெருகிவரும் வன்முறைகளை எதிர்த்து வருவதாய், பிரதமர் கலீதா ஜியாவின் ஆளும் பங்காளாதேஷ் தேசிய கட்சி கூறுகின்றது. உண்மையில் இராணுவம் நடாத்தும் ''இதய சுத்திகரிப்பு நடவடிக்கை'' யின் நோக்கம், நாட்டில் வளர்ந்து வரும் அறிகுறிகள் காட்டும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அரசியல் எதிர்ப்புகளுக்கான பதிலில், அச்சுறுத்தல் செய்யவும் அச்சத்திற்கான சூழலை பரவவிடவும் ஆகும். சென்றவார இறுதியில், இராணுவம் அல்லது போலீஸ் பாதுகாப்பிலிருந்த 24கைதிகள் இறந்தும் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். குறுக்கு விசாரணையின் போது ''இந்த இறப்புகள் எல்லாம் பயத்தில் மாரடைப்பால் ஏற்பட்ட மரணங்கள்தான்'' என அபத்தமாகக் கூறுகிறார்கள் இராணுவ அதிகாரிகள். ஆனால் இவையெல்லாம் இராணுவத்தின் சித்திரவதையால் நிகழ்ந்தவை என பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனித உரிமை கழகங்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பத்திரிகை செய்திகளின்படி, சந்தேகத்தின் பேரில் கைதானவர்களை படைவீரர்கள், அவர்களின் கண்களைக்கட்டி, கைகளை பின்புறமாய் சேர்த்துக்கட்டியும், ஆண், பெண் பாகுபாடின்றி, வயது வித்தியாசமின்றி கண்மூடித்தனமாய் தாக்கியுள்ளனர். ஷகத்துனீசா என்ற 85 வயது மூதாட்டி செய்தியாளரிடம் சொல்கையில், ''தன் மகளை இழுத்துக்கொண்டு போன அவர்களை தடுக்க முயற்சித்தபோது தன் வயிற்றில் எட்டி உதைத்து பலமாகத்தாக்கினர்'' என்றார். நியூநேஷன் என்ற பத்திரிகை, ஜெனிஃபர் சையத் கிங் மற்றும் அவர் நண்பன் லிட்டன்னுக்கு நேர்ந்த சித்ரவதைகளை விவரிக்கிறது. அக்டோபர் 29 அன்று காவலில் வைக்க கைதுசெய்து அழைத்துச்சென்ற பின்னர், கிங், அவர்களின் கொடுமை தாங்காமல் இறந்துபோக, அவர் நண்பர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இரு உள்ளூர் வியாபாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அந்த நபர்களை கைதுசெய்ததாய் இராணுவம் கூறுகிறது. ஆனால் இந்த இருவரும் புகார் ஏதும் கொடுக்கவில்லை என்று திட்டவட்டமாய் மறுத்துள்ளனர். எதிர்க்கட்சியான அவாமி லீக்தான் இவர்களுக்கு இலக்கு. காவலில் வைக்கப்பட்டவர்களில், அவாமி லீக் தலைவரான ஷேக் ஹசீனாவின் அரசியல் செயலாளர் சாபர் ஹூசைன் செளத்ரியும், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான ஷேக் ஃபஸ்லுல் கரீம் சலீமும் ஆவார்கள். இராணுவம் பல உள்ளூர் கட்சி தலைவர்களை கைது செய்ததோடு அந்த கட்சியின் ஆவணங்கள் மையத்தையும் சோதனையிட்டனர். அக்டோபர் இறுதியில், உள்ளூர் அவாமி லீக்கின் இளைஞர் அணி தலைவர் மசூம் பிஸ்வாஸின் இல்லத்தில் இராணுவம் அதிகாலையில் முற்றுகையிட்டனர், அவரிடம் ''சட்டவிரோதமான ஆயுதங்கள்'' இருந்தால் ஒப்படைக்குமாறு வற்புறுத்தினர். அவர் கண்கள் கட்டப்பட்டு, அடித்து இராணுவ கூடாரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டார். அவர் வீடு சூறையாடப்பட்டது, ஆனால் ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை. பின்னர் மசூம் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்டு இறந்து போனார். அவர் உடலின் கீழ்பகுதியில் கொடுமையான சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன காவலில் வைக்கப்பட்ட கைதிகளுக்கு சட்டரீதியான உதவிகூட அளிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை துவங்குவதற்கு முன்பே, எல்லா வழக்குகளையும் விரைவாக முடிக்கவேண்டும் என அரசாங்கம் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த புதிய சட்டத்தின் படி, எந்த ஒரு வழக்கையும் 125 நாட்களுக்குள் முடித்து தீர்வுகாண வேண்டும். பகிரங்கமாகவே ஜனநாயக அத்துமீறல்கள் நடப்பதை மனித உரிமை கழகங்கள் கண்டு அதிருப்தி தெரிவித்துள்ளன. பங்களாதேஷ் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், இறப்பு சம்பவம் குறித்து ஆராய ஒரு நீதி விசாரணைக்கு கோரியுள்ளது. எனினும் பிரதமர் கலீதா ஜியா, இராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்க்காமல் ஆதரித்துள்ளார். தொழில் விருதுகள் 2002விழாவில் பேசிய ஜியா, ''சமூக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும்'' என்றார். எதிர்கட்சிகளை சாடும் போது, ''முந்தைய அவாமி லீக் அரசு ஊக்குவித்த தீவிரவாதத்தை'' அரசாங்கம் அடக்கி வருகிறது என்றார். இராணுவத்தின் இச்செயலை பெரிய தொழில் வட்டாரங்களும் ஆதரித்துள்ளன. பங்களாதேஷ் தொழில் மற்றும் வர்த்தக சபை வெளியிட்ட அறிக்கையில், சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை, இயல்புக்குக் கொண்டுவர படைவீரர்களை அனுப்பிய செயல், ''தொழில் வர்த்தக வட்டாரங்களில் நம்பிக்கையை ஊட்டியுள்ளது'' என்றது. அவாமி லீக்கின் அங்கத்தினர்களின் கைதும், உயிரிழப்பும் இருக்க, இராணுவ அடக்குமுறை பற்றி விமர்சிக்க முடியாமல் ஷேக் ஹசீனா மெளனமாக்கப்படடுள்ளார். குற்றங்களை எதிர்த்து போராடும் வகையில் இத்திட்டம் இருக்குமானால் அது தொடரட்டும் என்றார். இந்த இராணுவ செயல்பாடு குறித்து எந்த எதிர்ப்புக்காகவும் குரல், எழுப்பவில்லை, ஆனால் பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளுக்கு இது குறுக்கே வரலாம் என்று அச்சப்பட்டார். ஜியாவுக்கு அதிக எதிர்ப்புகள் வளர்ந்து வருவது குறித்து டாக்காவில் ஆளும் கட்சி வட்டாரங்களில் கவலை எழுந்துள்ளது. அக்டோபர் 2001 தேர்தலில் பெருவாரியான அளவில் வெற்றி பெற்று அரசு அமைத்த பின்பும், அதன் முந்தைய அரசங்கமான அவாமி லீகுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளே --பன்னாட்டு நாணய நிதியமும் தொழில்தலைவர்களும் கேட்டுக்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்ப்புகள் பரந்து பரவிவரும் சூழலில் எவ்வாறு வழிநடத்திச்செல்வது என்பதே ப.தே. அரசாங்கத்திற்கும் பீடித்துள்ளது. அரசாங்கம் பதவி ஏற்று ஒரு மாதத்திற்குள்ளாகவே, ஜியா அரசாங்கம் நாடுதழுவிய பொதுவேலை நிறுத்தத்தை சந்தித்தது. இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை எதிர்த்து, அனைத்து எதிர்கட்சிகளாலும் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டது. அதன் பின்னர் இருந்து ஒன்பது வேலை நிறுத்தமும் ஹர்த்தால்களும் (கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடல்) அரசாங்க கொள்கைகளை எதிர்த்து நடந்துள்ளன. மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் 2001-02கல்வியாண்டில் பல்கலைக்கழகங்கள் 77 நாட்கள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களின் ஆர்பாட்டங்களை சமாளிக்க முடியாமல் போவதால், மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருக்க தடைச்சட்டம் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சணல் ஆலை மூடப்பட்டு 25,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது உள்பட, மூடப்பட்டுவரும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்வதால், தொழிலாளர்களின் போராட்டங்களும் அதிகரித்து வருகிறது. சிட்டகாங் துறைமுகத்தில் ஒரு தனியார் பெட்டக முனையம் வரவிருந்த திட்டத்தை எதிர்த்து துறைமுகத் தொழிலாளர்கள் ஜூலையில் வேலையிறுத்தத்தில் இறங்கினர். இத்திட்டம் குறித்து அமெரிக்கக் கம்பெனி ஒன்றிடம் நடத்தும் பேச்சுவார்த்தையை தற்காலிகமாய் நிறுத்தும்படி அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. மேலும் கொந்தளிப்புகள் நாட்டில் தவிர்க்கமுடியாதது. பங்களாதேஷ் அரசாங்கமானது, பங்களாதேஷ் விவசாய வளர்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் 1604 ஊழியர்களையும், 9500 அரசு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. தொழிலாளர்களின் ஊதியம் உயராமல் தேக்கமாக இருக்கும்போது, அத்தியாவசிய பொருட்களின் விலை மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. ஏற்றுமதி வளாகங்களில் பயிற்சியில் இருக்கும் தொழிலாளிக்கு மாதாந்திர சம்பளமாக 22 அமெரிக்க டாலர்களும், தேர்ச்சிபெற்ற தொழிலாளிக்கு 63 டாலர்கள் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 50சதவிகித வங்கதேச மக்கள் தொகையினர் நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவான வருவாய் பெற்று வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். அங்கே கணக்கிட்டதில் 1.6 மில்லியன் தெருவோர சிறுவர்கள் வாழ்வதாகவும், அதில் 40சதவிகிதம் 10வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது. அங்கே கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் மிகக்குறைவு. ஒரு ஆண்டில் சுமார் 20,000 பெண்கள் கர்ப்பகால மற்றும் பிரசவத்தின் போதும் ஏற்படும் பிரச்சனைகளால் இறக்கிறார்கள். 15 சதவிகித குழந்தைகள் பள்ளிக்கே சென்றதில்லை, பள்ளிக்கல்வி பயிலும் 7 சதவீத மாணவர்களே மேல்நிலைப்பள்ளி கல்வியை முடிக்கிறார்கள். ''இதய - சுத்திகரிப்பு நடவடிக்கை" பெயரளவில் குற்றங்களுக்கு எதிரானதாக
இருந்தாலும், எதிர்காலத்தில் கடுமையான சமுதாயப் பிரச்சனைகளைக் கண்டித்து தொழிலாளர்கள், மாணவர்கள் அல்லது
எவரும் எதிர்த்துப் போராடினால் அவர்கள் மீது போலீசும்-இராணுவமும் எப்படிப்பட்ட முறைகளைக் கையாளும்
என்பதையே எச்சரிக்கிறது. அத்தகைய கடும் சமூகப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமோ எதிர்கட்சியிடமோ எந்த ஒரு
பதிலும் இல்லை. |