WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
பாகிஸ்தான்
Pakistan parliament convened but no government formed
பாகிஸ்தான் பாராளுமன்றம் கூடியது ஆனால் அரசு அமையவில்லை
By Vilani Peiris
19 November 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
அக்டோபர் 10ம் தேதி நடந்து முடிந்த தேசிய அளவிலான தேர்தலுக்குப் பின் கடந்த
வாரக் கடைசியில், பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷராப், தேசிய பாராளுமன்றத்தைக் கூட்டினார். புதியதாக
தேர்ந்தெடுக்கபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். வருட ஆரம்பத்தில், கள்ளத்தனமாக
தயார் செய்யப்பட்ட பொது ஜன வாக்கெடுப்பு மூலம் ஆதரவினைத் தேடிக்கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட முஷராஷப்
மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் எல்லாமே, பாகிஸ்தான்
மக்களாட்சிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும், வெறும் வார்த்தை விளையாட்டு என்பதை அர்த்தப்படுத்துகிறது.
தேர்தலுக்கு முன் முஷராப் அரசியல் சாசனத்தை திருத்திட விரிவான உத்தரவுகளை செயல்படுத்தி,
தன்னுடைய கைகளிலேயே முழு அதிகாரமும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். சட்ட அமைப்பு ஆணை
(LFO) என்று அழைக்கப்படும்
இந்த மாற்றம் மூலம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைத்திடும் அதிகாரமும், பிரதம மந்திரி மற்றும்
மாகாண முதலமைச்சர்களை பதவியிலிருந்து விலக்கும் அதிகாரமும் உண்டு. அரசின் முடிவுகளை தடுக்கும் வீட்டோ அதிகாரம்
கொண்ட இராணுவத்தின் தலைமை அலுவலர்கள் நிறைந்திருக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அவர் தலைமைப் பொறுப்பில்
இருப்பார். 1999ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது முஷராப் அரசியல்
சாசனத்தை தற்காலிகமாக முடக்கி வைத்தார்.
இந்த பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரின் முக்கிய அம்சம் என்னவென்றால் இன்னும் அரசு
உருவாகவில்லை. பாராளுமன்றக் கூட்டத் தொடர் முதலில் நவம்பர் 8ஆம் தேதி கூட்டப்படுவதாக இருந்தது. ஆனால்,
முஷராப்பின் பாகிஸ்தானி முஸ்லிம் லீக் காயித் ஈ ஆசம் (PML-Q)
மற்ற கட்சிகளுடன் மேற்கொண்டு பேச்சு வார்த்தை நடத்திட வசதியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும்
உறுதியான கூட்டணி உருவாகவில்லை. பாராளுமன்ற சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்படும் தேர்தல் இன்று
வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுப்பதற்கும் தேதி இன்னும் நிச்சயமாக்கப்படவில்லை.
எதிர்க் கட்சிகள் பாகிஸ்தானிய மக்கள் கட்சி (PPP),
இஸ்லாமிய அடிப்படைவாத முக்தாஹித மஜ்லிஸ் அமால் (MMA)
மற்றும் முன்னாள் பிரதம மந்திரி நாவாஸ் ஷெரிப்பின் (PMLN)
பாகிஸ்தானி முஸ்லீம் லிக் உட்பட, அனைவரும் மக்களாட்சிக்கு திரும்ப வேண்டுமென்றும் 1973 அரசியல் அமைப்புக்குத்
திரும்பவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆயினும், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, அனைவரும் இராணுவ
ஆட்சியினருடன் ஒரு ஒப்பந்தம் செய்திட, முஷராப்புடன் திட்டமிட்டு வருகின்றனர்.
கள்ள வாக்குகள் மற்றும் கையூட்டுகள் பக்கபலமாக இருந்த போதும், அக்டோபர்
10ஆம் தேதி தேர்தலில், இராணுவத்தின் ஆதரவு பெற்ற PML-Q,
342 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் வெறும் 118 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. 81 இடம்
வென்ற பெனாசீர் பூட்டோவின் PPP கட்சியுடன் பேச்சு வார்த்தையினைத்
துவக்கியது. PPP கட்சி எந்த நிலையிலும் பெனாசீர்
பூட்டோவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை நீக்கவும், தடையின்றி தாய் நாட்டிற்கு திரும்பிடுவதையும் வலியுறுத்தியது.
முன்னாள் பிரதம மந்திரி பூட்டோவினை ஆபத்தான அரசியல் எதிரியாக கருதும் முஷராப், அதற்கு மறுத்துவிட்டார்.
அடுத்தாக 59 இடம் வென்ற MMA
(இஸ்லாமிய குழுக்களின் கூட்டமைப்பு) கட்சியினை PML-Q
கட்சியினர் அணுகினர். ஆப்கானிஸ்தானில் நடத்திய அமெரிக்க போருக்கு ஆதரவளித்த முஷராப்பிற்கு எதிராகவும் பாகிஸ்தானில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைகள், போலீஸ் மற்றும் CIA
ஏஜெண்டுகளுக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சாரம் செய்தே, MMA
கட்சியினர் அதிக ஆதரவினைப் பெற முடிந்தது. பிரதம மந்திரி பதவிக்கான கோரிக்கை மற்றும் அரசியல் சாசனத்தில்
செய்யப்பட்டுள்ள மாற்றத்தினை நீக்குவது ஆகியவற்றை வலியுறுத்தும் MMAன்
கோரிக்கையை நிச்சயமாக PML-Q ஆமோதிக்காது.
நவம்பர் 8ஆம் தேதி நடப்பதாக இருந்த பாராளுமன்ற கூட்டத்தை முஷராப் நிறுத்தி வைத்தார்.
ஜனநாயக மீட்டமைப்புக்கான கூட்டணி கட்சி (ARD),
PPP, PML-N மற்றும் இதர 13 கட்சிகள், அடிப்படைவாத
MMA கட்சியுடன் தம்முடைய வேற்றுமையை மறந்து இணைந்து
செயல்படக்கூடும் என்று உணர்ந்த வேளையில் அதை நிறுத்தி வைத்தார்.
PML-Q கட்சியினை ஓரம் கட்ட நினைத்திடும் எதிர்க்கட்சிகளின் ஒரு அரசாங்கத்தைப் பொறுத்துக்கொள்ள
இராணுவம் தயாராக இல்லை.
ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலையீடுகளுக்கு முக்கிய ஆதாரமாக முஷராப்பினைக் கருதும்
புஷ் நிர்வாகம், திரைக்கு பின்னாலிருந்து ஈடுபடுகிறது. பாகிஸ்தானை அடிப்படையாக்க் கொண்டு வரும் நாளிதழான
``தி நியூஸ்``, நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அரசு துணை செயலாளர் கிரிஸ்டினா
ரோக்கா வாஷிங்டனில் பூட்டோவுடன் நடந்த சந்திப்பில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி, பிரதம மந்திரி பதவிக்கு
கடுங்கோட்பாளர் MMA வேட்பாளருக்கு ஆதரவு
அளித்திடுவதற்கு புஷ் நிர்வாகத்தின் "அதிருப்தியை" தெரிவித்தவர், அக் கட்சி முஷராப்பினை ஆதரிக்குமாறு வேண்டினார்.
அமெரிக்காவின் பொருளாதார வியாபார மற்றும் விவசாய விவகாரத்தின் அரசு உதவி
செயலாளர், அலன் லார்சன், முஷராப்பிற்கான வாஷிங்டனின் ஆதரவினை உறுதி செய்திட பாகிஸ்தானிற்கு நவம்பர்
6ஆம் தேதி அன்று வருகை தந்திருந்தார். முஷராப்பினை சந்தித்த அவர் நாட்டில் நடந்த ``ஜனநாயக வழிமுறைகளை``
பாராட்டினார். இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்காவின் பொருளாதார உதவிகளை
உறுதிப்படுத்தியதுடன் மேலும் ``1 பில்லியன் டாலர் கடனை தள்ளுபடி செய்யும் விவகாரம்`` ``நடப்பில் உள்ளது``
என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி MMA
கட்சியுடன் கூட்டு சேராமல் இருப்பதற்காகவும், இராணுவம் அத்து மீறி நடந்து கொண்டது. பாக்கிஸ்தான் மக்கள்
கட்சியின் செயலர் ஜெனரல் ரஸா ராபானி ``தி நியூஸ்`` செய்தித்தாளில், கட்சி உறுப்பினர்கள் பலர் தம்மை "நடு
இரவில் போலீஸார், பொது நிர்வாகத்தினர் மற்றும் இரகசிய ஏஜென்சிக்களும், கட்சியை விட்டு வெளியேறி முஷராப்பின்
கட்சியை ஆதரிக்குமாறு தொந்தரவு தந்ததாகப் புகார்கூறியதாக" கூறியுள்ளார். அக்டோபர் மாத தேர்தலுக்கு முன்னர்
தான், பாகிஸ்தான் முஸ்லீம் லிக்கில் பிரிவினையை ஏற்படுத்தி, முஷராப்பும் இராணுவமும்
PML-Qவினை உருவாக்கினர்.
முஷராப் மற்றும் அமெரிக்காவின் நிர்பந்தத்தினால், பாக்கிஸ்தான் மக்கள் கட்சியினைச்
சேர்ந்த பார்வார்ட் ப்ளாக் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள், பூட்டோ தெளிவான
போக்கில் இல்லை என்று குற்றம் சாட்டி கட்சியிலிருந்து பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களது தலைவர் மாக்டூம் பாசில்
சாலெ, பத்திரிக்கை நிருபர்களிடம் கூறுகையில், அரசியல் சாசன மாற்றத்தினை ஆமோதித்து தேர்தலில் போட்டியிட்டபின்,
முஷராப்பினை எதிர்ப்பது தவறு என்றும் அவருடைய கட்சி PML-Qவினை
ஆதரிக்கும் என்றார்.
எதிர்க்கட்சிகளால் அரசு உருவாகிடுவதை தடுக்க,
PML-Q கூட்டணி ஒன்றை உருவாக்குதற்கான பேச்சு வார்த்தையை தீவிரமாக்கி உள்ளது. ``தி டான்`` செய்தித்தாள்
சென்ற வாரத்தில் MMA கட்சி அல்லது அதில் ஒரு பகுதியினை
வெற்றி கொள்ள, அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ள சீர் திருத்தத்தினை தகுந்த மாற்றத்துடன் கொண்டு வரவும்
புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் பற்றி செய்தி வெளியிட்டது. சென்ற வாரத்தில்
MMA உதவி செயலர் ஹபீஸ் ஹுசேன் அகமது கூறுகையில் ``சில உறுதியான முடிவுகள்`` விரைவில் அறிவிக்கப்படும்
என்றார்.
இத்தகைய இழுபடலிலும் பேரங்களிலும் வெளிவருவது என்ன தான் இறுதி முடிவாக
இருந்தாலும், அடுத்ததாக வரும் அரசாங்கம், பாகிஸ்தான் நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழலை எதிர்
நோக்க வேண்டியிருக்கும், ``பிஸினஸ் வீக்``கில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை ``பாகிஸ்தான்
பொருளாதாரம் அந்நாட்டு பண மதிப்பிறக்கத்தையும், வட்டி விகிதத்தில் ஏற்றத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்று
எச்சரித்துள்ளது. 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து உதவியாக தரப்பட்ட, 600 மில்லியன் டாலர் இந்த வருடம்
200 மில்லியன் டாலராகக் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம்
தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்.
தொடர்ந்து இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு படைகள், ஈராக்கிற்கு எதிராக போர்
தொடுக்க அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும் அமெரிக்காவிற்கு எதிரான எண்ணத்தையே உருவாக்கி
வருகின்றது. கடந்த வாரம் அமெரிக்காவில், 1999ஆம் ஆண்டு வெர்ஜினியாவில் சிஐஏ தலைமை அலுவலகம் அருகில் நடந்த
இரண்டு சிஐஏ பணியாளர்களின் கொலைக்காக பாகிஸ்தானியர் பீர் அமீல் கான்சிக்கு மரணதண்டனை வளங்கப்பட்டதை
எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பாராளுமன்ற கூட்டம் வரும் வார இறுதியில் கூட்டப்படக்கூடும் என்ற நிலையில் பாகிஸ்தானிய
போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் முறைகேடு மற்றும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்திய பின்பும், முஷராப்பினால்
அரசினை அமைக்க முடியவில்லை, என்பது இராணுவ ஆட்சி எத்தகைய குறுகலான பலமற்ற சமுதாய அடித்தளத்தில்
அமைந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இத்தேர்தல் முஷராப்பின் நிலையை மேலும் பலமுள்ளதாக ஆக்குவதற்குப் பதிலாக
அவருடைய அரசியல் பிரச்சனைகளை கூடுதலாக்குவதாகவே தெரிகிறது.
Top of page
|