WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
Bush administration to track Iraqis living in the US
ஐக்கிய அமெரிக்க அரசுகளில் வாழும் ஈராக்கியர்களை கண்காணிக்கும் புஷ் நிர்வாகம்
By Kate Randall
25 November 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ஈராக் தொடர்பான அதிருப்தியாளரை
கண்காணிக்க, புஷ் ஆட்சி தொடங்கியுள்ளது. அமெரிக்க பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் துறையில் வேலைசெய்யும்
ஈராக்கியக் குடிமக்கள் மற்றும் ஈராக்-அமெரிக்க இரட்டைக் குடியுரிமையுடையோர் உளவுத் திட்டத்தால் கண்காணிக்கப்படுவதாக,
அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் நிகழுமானால், அபாயகரமானவராயிருப்பாரோ
என தனிநபர்கள் குறிவைக்கப்படுவதாய் பெயர் கூற விரும்பாத மூத்த அரசாங்க அலுவலர்கள் கூறியுள்ளனர். தேசிய
பாதுகாப்பு கைதாணைகளின் அடிப்படையில், சிலர் மின்னணுவியல் முறைகளால் கண்காணிக்கப்பட, அதேவேளை
மற்றவர்கள் ஈராக்கிய அரசுக்கெதிராக, தகவலாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கின் மீது அமெரிக்கா ஒரு தாக்குதல் செய்தால், அரசு பயங்கரவாத நடவடிக்கைகளைத்
திட்டமிடுவோரென ஐயுறவுப்படும் ஈராக்கியர் மற்றும் ஈராக்கிய - அமெரிக்கரைக் கைது செய்தல், காவலில் வைத்தல்
மூலமாக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. செப்.11 தேதிய பயங்கரத்
தாக்குதல்கள அடுத்துப் பின்தொடர்ந்து, அரபு மற்றும் முஸ்லிம்களுக்கான வலைவிரிப்பில், அரசாங்க முகவர்கள், கைது
ஆணைகளைப் பெற பயங்கரவாத நடவடிக்கைக்கான ஆதாரம் காட்ட வேண்டிய தேவை இல்லை; ஆனால் -பயங்கரவாதத்தில்
ஈடுபடுபவர் என ஒருவரை ஐயுற்றாலே போதும்.
பென்டகன், எஃப்பிஐ, சி.ஐ.ஏ, குடிவரவு மற்றும் நாட்டுக் குடிமகனாக்கல் (ஐ.என்.எஸ்),
அரசுத் துறை, தேசிய பாதுகாப்பு நிறுவனம் உள்பட அரசாங்க பரந்த அணி ஒன்று இந்நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளது.
உளவு நடவடிக்கையில் தங்கட்குக் கிடைத்த எந்த ஆதாரத்தையும் பரிமாற இவ்வளவு அமைப்புக்கள் அனுமதிக்கப்படுவதால்,
பின்னர், எதிர்கால குற்றவியல் விசாரணைக்கு அது பயன்படுத்தப்படக் கூடும்.
2001ம் ஆண்டு மே மாதம், அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்கிராஃப்ட், எஃப்பிஐக்குப்
பெருவாரியாக, அரசியல் அமைப்புக்கள், சமயக் குழுக்கள் மற்றும் தனிநபர்க்கெதிராக உள்நாட்டு உளவறியும், அதிகாரத்தை
அளித்துள்ளார். செயலாக்கத் தெரிவுகளால் அறிவிக்கப்பட்டபடி இப்புதிய அளவீடுகளின் அடிப்படையில், காங்கிரசின்
அனுமதியின்றி -அரசாங்கத்தால் `நாசகாரர்` 'நிலைகுலைவிப்பவர்', எனக் கட்டம் கட்டப்பட்டமையாலேயே, எந்த
ஒருவரும் குழுக்களும் கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
தங்களது அரசியல் நம்பிக்கைகள் காரணமாகவே, குடிமக்களும் குடிமக்கள்
அல்லாதோரும் கூடக் குறிவைக்கப்பட்டனர். அரசியற் சட்டத்தின் பாதுகாப்பை அத்துமீறி, அமெரிக்க வாழ் ஈராக்கியரைக்
கண்டறிவதற்கான புதிய திட்டத்தின்படி, தனிநபர்கள் அவர்களது தேசிய மூலத்தை வைத்து, தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இம்மாதம், மத்திய நிர்வாகத்தினர், ஈராக் தொடர்பாக ஏதும் "ஐயத்திற்குரிய"
நடவடிக்கை இருப்பின் தெரிவிக்கக்கோரி, ஈராக்கிலிருந்து வந்து வசிப்பவர்களிடம் பேட்டி காண்பதைத் தொடங்குவதற்குத்
திட்டமிடுகின்றனர். முந்தைய அரபு -அமெரிக்கரது பேட்டிகளைப் போல, அரசாங்கமானது அவை முற்றிலும் "தன்னார்வமாகத்",
தரப்பட்டதாகக் கூறுகிறது. ஆயினும் குடிமையுரிமைகள் மற்றும் அராபிய -அமெரிக்க வழக்குரைஞர்கள் பெரும்பாலும் இப்பேட்டிகள்,
விசாரிக்கப்பட வேண்டியவரின் வீட்டுக் கதவை மத்திய உளவுத்துறையினர் தட்டுவதில் தொடங்குவதாகக் கூறுகின்றனர்.
சட்டப்படி ஒருவர், வழக்குரைஞரை உடன் வைத்துக்கொண்டு பேட்டியளிக்க உரிமையுண்டு மற்றும் ஒரு அல்லது அனைத்துக்
கேள்விகட்கும் பதிலளிக்க மறுக்கும் உரிமையுண்டு என்பதுடன், பலரும் இவ்வுரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான சட்ட அறிவோ
அல்லது நிதி வளமோ இன்றி உள்ளனர்.
அமெரிக்கக் குடியுரிமைகள் கழகம் (ACLU),
செப்.11, 2001க்குப் பின் 8,000 க்கும் மேலானோர் மத்திய உளவு முகவர், அரசு மற்றும் நிர்வாகத்தின் கீழ்
வேலைசெய்யும் உள்ளூரதிகாரிகளால் கேள்வி கேட்கப்பட்டனரெனக் கூறுகிறது. கடந்த ஜூலையில் நீதித்துறையின் அறிக்கையின்படி,
கடத்தல் - குண்டு வெடிப்புக்குப் பின் கைது செய்யப்பட்ட 611 பேர் இன்னமும் காவலில் உள்ளனர். அரசாங்கம்,
அவர்களின் பெயர்களையோ எங்குளர் என்பதையோ, குற்றமேதும் சாட்டப்பட்டிருந்தால் அது என்ன என்பதையும் வெளியிட
மறுக்கிறது. மிகப் பலரும், குடியேற்றம் தொடர்பான குற்றங்களாலேயே நாடு கடத்தப்பட்டுள்ளனரேயன்றி, இந்நாள்
வரை, உலக வணிக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதலின் பொருட்டு குற்றம் சாட்டப் பெறவில்லை.
1991ம் ஆண்டு நடந்த பாரசீக வளைகுடாப்போரின்போது, எஃப்பிஐயும் ஐஎன்எஸ்ஸும்,
அரபு அமெரிக்கர் மற்றும் பார்வையாளர்க்கான விசா தீர்ந்த பின்னும் அமெரிக்காவை விட்டு நீங்காதவர்,
அதேபோல ஈராக்கியர் என ஆயிரக்கணக்கானவரிடம் விசாரித்தது. இம்முறை அமெரிக்க அரசு, ஈராக்கினின்று வந்த
அமெரிக்கக் குடிமக்களையும் விசாரணைக்குட்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. இவருள், அமெரிக்காவில் பிறந்த இரட்டைக்
குடியுரிமை உடையவரும் அடங்கக்கூடும்.
அண்மைய ஜூலையில், புஷ்-ஆல் நியமிக்கப்பட்ட அமெரிக்க குடியுரிமை ஆணையத்தின்
உறுப்பினர் பீட்டர் கிர்ஸனோவ் இரண்டாம் உலகப் பேரின்போது ஜப்பானிய அமெரிக்கர் பேரளவில் காவல் வைக்கப்பட்டது
போல், அமெரிக்காவின் மீது மற்றொரு தாக்குதல் நடந்தால், அரபு அமெரிக்கர்களுக்கான அத்தகைய முகாம்கள்
அமைக்கப்படுமென எச்சரித்தார். டெட்ரொய்ட் கூட்டத்தில் பேசுகையில் அத்தகைய தாக்குதலுக்குப்பின், "உங்கள்
குடியுரிமைகளைப் பற்றி மறந்துவிட வேண்டியதுதான்", என்றார்.
புஷ் நிர்வாகம் அமெரிக்க வாழ் ஈராக்கியர் மீது பரந்த ஐய வலையைப் பரப்பியிருப்பினும்,
ஈராக்கிய விஞ்ஞானிகட்கு -சதாம் வைத்திருப்பதாகக் கூறப்படும் பேரழிவு ஆயுதங்கள் பற்றி- உண்மையான அல்லது
பொய்யான --தகவல் தருபவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்க அவசரப்படுகிறது. ஈராக்கிய விஞ்ஞானிகள்
குடியேற்றச் சட்டம் 2002-ன் படி, அரசாங்கத்துக்கு இந்தத் தகவல்களைத் தருவதற்காக 500 விஞ்ஞானிகள்
வரைக்கும் கிரீன் கார்டுகள் வழங்கப்படக் கூடும்.
Top of page
|