World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: ஆசியா :
இலங்கை
Sri Lanka: Cross infections kill seven children at pediatric hospital இலங்கை: குறுக்குத் தொற்றுதல்கள் சிறுவர் வைத்தியசாலையில் ஏழு குழந்தைகளை பலிகொண்டுள்ளது By a correspondent இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் வைத்தியசாலையிலிருந்து பெற்ற தொற்றுக்களினால் பீடிக்கப்பட்ட ஏழு குழந்தைகள் நாட்டின் ஒரேயொரு உத்தியோகபூர்வ சிறுவர் வைத்தியசாலையான லேடி றிஜ்வே வைத்தியசாலையில் மரணமடைந்தனர். பெரும்பாலான இறப்புக்கள் சாதாரண நோய்எதிர்ப்பு மருந்துகளுக்கு (Antibiotics) எதிர்ப்புத்திறனுடைய நோய்க்கிருமிகளின் தொற்றினால் விளைவானவையாகும். சிறியளவே வெளிப்படையான இந்த துக்கரமான நிகழ்வானது ஏற்கனவே காணப்படும் மிகவும் குறைந்தளவு வசதிகளை மேலும் குழிதோண்டி புதைப்பதுடன் நோயாளிகளின் அதிகரிப்பு, பாரிய ஊழியர் பற்றாக்குறை மற்றும் தரமற்ற சுகாதார நிலைமைகளுக்கு இட்டுச் சென்ற அரசாங்கத்தின் வெட்டுக்களின் ஒரு விளைபயனாகும். ஐந்து குழந்தைகள் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை (ICU) பிரிவில் இருந்தவர்கள். மற்றும் இருவர் வைத்தியசாலையின் வேறொரு பகுதியில் இருந்தவர்கள். மெதிசிலினிற்கு (Methicillin) எதிர்ப்புத் திறனுடைய ஸ்டபைலோகொக்கஸ் ஓரியஸ் (Streptococcus aureas -MRSA) மற்றும் வேறு தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட பின்னர் ஒரு சிறு குழந்தை தற்போது மிகவும் ஆபத்தான நிலைமையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளி ஸ்டெப்ரோகொக்கஸ் நியூமோனியா (Streptococcus pneumonia) மற்றும் வேறுபல தொற்றுக்களாலும் பீடிக்கப்பட்டுள்ளார். இவ்விரு குழந்தைகளும் ஆரம்பத்தில் வேறு சுகவீனங்களுககு சிகிச்சை பெறுமுகமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உலக சோசலிச வலைத் தளமானது ஒரு மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளரை தொடர்பு கொண்டபோது வைத்தியசாலையின் பல பகுதிகளில் நெபியூலைசர்கள்-சுவாசத்திற்கான வாயுவை உருவாக்கும் உபகரணம்- (Nebulisers) ஒட்சிசன் முகமூடிகள், ஒட்சிசனின் ஈரத்தன்மையை அதிகரிக்கும் உபகரணம் (Humidiflex) மற்றும் உறிஞ்சி இயந்திரங்கள் (நோயாளியின் சுவாசப்பாதையை சீராக்கப் பாவிக்கப்படும்) ஆகியவற்றில் சூடோமோனாஸ் (Pseudomonas) மற்றும் ஸ்டெப்ரோகொக்கஸ் (Streptococus) ஆகிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயுண்டாக்கும் மாதிரிகள் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை மேசைகளிலும் மற்றும் கொலோனோஸ்கோபி (பெருங்குடல் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் குழாய்) உபகரணங்களிலுமிருந்தும் எடுக்கப்பட்டன என அவர் தெரிவித்தார். உலக சோசலிச வலைத் தளமானது வைத்தியசாலை தொழிலாளர்களுடன் உரையாடியபோது அவர்கள் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் உள்ள உயிர் காக்கும் உபகரணங்கள் ஏன் உயிர்கொல்லி நோய்க்கிருமிகளின் உற்பத்தி ஸ்தானமாக ஆனது என்பதைப்பற்றியும், சுகாதார வசதிகளின் தற்போதைய நிலைமைகள் எவ்வாறு அவை நோய்களின் பரம்பலுக்கு காரணமானது என்பதையும் தெரிவித்தனர். இந்த வைத்தியசாலையில் 752 படுக்கைகள் மாத்திரமே உள்ளன. ஆனால் இவ் வைத்தியசாலையில் நாளாந்தம் 10,000 உள்நோயாளர்கள், சிலவேளைகளில் இதனிலும் அதிக எண்ணிக்கையானவர்களோ சிகிச்சை பெறுகின்றனர். நோயாளர்கள் தங்கும் பகுதிகளில் உபயோகத்திலுள்ள படுக்கைகளிலும் இரட்டிப்பான நோயாளிகளின் எண்ணிக்கையாலும் மற்றும் பெரும்பாலான தொட்டில்களில் இரண்டு சுகவீனமுற்ற குழந்தைகள் உறங்கவேண்டியதன் மூலமும் சன நெருக்கடி நீடித்து வருகின்றது. பாரிய ஊழியர் பற்றாக்குறை, பல தாய்மார்கள் தம் குழந்தைகளை பராமரிக்கும் முகமாக வைத்திய சாலையிலேயே தங்கி, படுக்கைகளின் அடியிலும் பாதைகளிலும் படுத்து உறங்க வேண்டியுள்ளது என்பதையே தெரிவிக்கின்றது. புதிதாகப் பிறந்த குழுந்தைகள் எப்போதும் குறிப்பாக பக்டீரியாத் தொற்றுகளிற்கு ஆளாகக் கூடியவர்கள். ஆனால் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் இவர்கள் பெரும்பாலும் மற்றைய நோயாளிகளுடனேயே தங்க வைத்திருக்கப்படுகின்றனர். ஒரு தாதி பின்வருமாறு குறிப்பிட்டார்: "எங்களிடம் 60 படுக்கைகள் மாத்திரமே உள்ளன ஆனால் இன்று எம்மிடம் 91 நோயாளிகள் உள்ளனர். வெவ்வேறு நோய்களையுடைய இரு நோயாளிகளை ஒரே படுக்கையில் தங்கவைக்க வேண்டியுள்ளது. இதனால் குறுக்கு தொற்றுகைகள் (எதிரெதிர்த் தொற்றுதல்கள்) பரவுகின்றன. தாய்மார்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது. ஏனெனில் அவர்கள் பலவாரக்கணக்கில் அல்லது பல மாதக்கணக்கில் தம்முடைய குழந்தைகளுடன் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு படுப்பதற்காக வழங்க எம்மிடம் ஒரு பாய் கூட இல்லை. சிலர் தூர இடங்களில் இருந்து வருகின்றபோதிலும் அவர்களுக்கு குளிப்பதற்கோ அல்லது உடைகளை கழுவுவதற்கான வசதிகளோ வழங்கமுடியாதுள்ளது. நோயாளிகளினதும் தாய்மார்களினதும் அடிப்படை சுகாதார தேவைகளை பராமரிக்க முடியாதுள்ளது." மருத்துவ உபகரணங்கள் மற்றும் வேறு வசதிகளின் குறைபாடுகள் பற்றி ஒரு தாதி பின்வருமாறு கருத்து தெரிவித்தார்: "சுவாசம்மூலம் வைத்திய மருந்துகளின் உட்செலுத்துகை அவசியமான நோயாளிகள் டசின் கணக்கில் இருக்கின்ற எம்மிடம் ஒரு மருந்துவழங்கி மாத்திரமே உள்ளது. அவ் இயந்திரம் எந்நேரமும் உபயோகத்தில் இருந்த வண்ணமே உள்ளது. ஒரு நோயாளிக்கு மருந்துகளை உட்செலுத்திய ஒவ்வொரு தடவையும் நாம் முகமூடிகளை சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் சில வேளைகளில் வேலைப்பழு அவ்வாறு செய்வதிலிருந்து எம்மை தடுக்கின்றது அதனால் தொற்றுக்கள் ஒரு நோயாளியிலிருந்து இன்னொருவருக்கு இலகுவில் பரவுகின்றது. "எம்மிடம் ஒட்சிசன் முகமூடிகள் கூட போதுமானளவு இல்லை அத்துடன் மருந்து செலுத்தி, ஊசிகள், உறிஞ்சும் வடிகுழாய்கள் (Suction catheters) மற்றும் கனூலஸ் (Canulas- நரம்பினுள் மருந்துகளை உட்செலுத்துவதற்காக நரம்பினுள் புகுத்தப்படும் ஒரு சிறிய கருவி) போன்ற சிகிச்சையின் பின் அழிக்கப்படும் உபகரணங்களும் தேவையான அளவுகளில் வழங்கப்படவில்லை. உபயோகித்ததன் பின்னர் எறிந்துவிடக்கூடியவற்றையும் நாம் சுடுநீரில் அவித்த பின்னர் மீள உபயோகிக்க வேண்டியுளள்து என்பதையே இது தெரிவிக்கின்றது. இது ஹெப்பரைட்டீஸ் பீ (Hepatitis B) போன்ற உயிர்கொல்லி நோய்களை ஒரு நோயாளியிலிருந்து இன்னொருவருக்கு பரவச்செய்ய வழிவகுக்கின்றது. வயிற்றுளைவு மற்றும் வயிற்றுப் போக்கினால் வருந்தும் பல நோயாளிகள் எம்மிடம் உள்ளனர். அவர்களை கொதித்து ஆறிய நீரைப் பருகுங்கள் என தாதிகள் அறிவுறுத்திய போதும் எமது நோயாளர் தங்கும் பகுதிகளில் ஒரு கொதிகலன் (Boiler) கூட கிடையாது." ஊழியர் பற்றாக்குறைகள், தரமான சிறுவர் பராமரிப்பிற்கு குழிபறிக்கின்றது என அதே நோயாளர் தங்கும் பகுதியை சேர்ந்த மற்றுமொரு தாதி கூறினார்." இந்த நிலைமை பற்றி எமது நிபுணர் ஆழ்ந்த வருத்தப்படுகின்றார்." போதுமானளவு ஊழியர் குறிப்பாக தாதிகளை மற்றும் அடிப்படை தேவைகளை அரசாங்கம் வழங்கும் வரை அவரால் என்ன செய்ய முடியும் என அத்தாதி கூறினார் கைகளைக் கழுவுவது கிருமிகளின் பரம்பலை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான முறையாகும் ஆனால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவு வாஷ்பேசின்களே (Wash Basin) எமது நோயாளர் தங்கும் பகுதிகளில் உள்ளன. போதுமானளவு சவர்க்காரம், அழுக்கு நீக்கிகள் மற்றும் தொற்று நீக்கிகள் எமக்கு வழங்கப்படுவதில்லை. பல்வேறு தொற்றக்கூடிய நோய்களால் வருந்தும் நோயாளிகளாலும் நோயாளர் தங்கும் பகுதிகள் குவிந்துள்ளன. வயிற்றுளைவுடைய 76 குழந்தைகள், ஹெப்பரைடிஸ் ஏயுடன் 39 பேர் மற்றும் ஜூனில் மட்டும் டெங்கு காய்ச்சலுடைய 162 பேர், இது இலங்கையில் பரவலாக பெருமளவில் பெருகிவரும் விகிதத்தை அடைந்துள்ளது. வைத்தியசாலையில் எட்டு நோயாளிகளுக்குரிய வசதிகளை மாத்திரமே கொண்ட ஒரே ஒரு அவசர சிகிச்சைப் பிரிவே உள்ளது. இந்த சிறியதும் மிகவும் குறைந்தளவு சாதனங்களுடனுமான இப்பிரிவால் அவசர சிகிச்சை தேவைளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உள்ளது. அத்துடன் அதிகளவு நோயாளிகள் அவர்களின் நிலைமை ஸ்திரமடைவதற்கு முன்னரேயே நோயாளர் தங்கும் பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றனர். சுகாதார தொழிலாளர்களின்படி பல நோயாளிகள் மிக விரைவில் வெளியேற்றப்பட்டதால் இறந்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் குறிப்பாக பல்வேறு நோய்க்கிருமிகளில் இருந்து குறுக்கு தொற்றுகைகளுக்கு (எதிரெதிர்த் தொற்றுதல்களுக்கு) ஆளாகக் கூடியவர்கள் ஏனெனில் இவர்கள் நிர்ப்பீடணம் (நோய் எதிர்ப்புதன்மை) இல்லாத, ஆபத்தான நிலைமையில் உள்ளதுடன் பாரிய சத்திர சிகிச்சைகளுக்கு உட்பட்டவர்கள். அவசர சிகிச்சைப் பிரிவிலும் கூட தனிமைப்படுத்தி வைத்திருக்கும் வசதிகள் குறைவாக இருப்பது ஒரு பாரிய பிரச்சினையாக இருந்துகொண்டுள்ளதோடு இந்த தொற்றுக்களின் பரம்பலையும் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மீண்டும் எம்.ஆர்.எஸ்.ஏ. (MRSA) தொற்றுக்கள் பலவற்றுடன் வேறுபல தொற்றுக்களின் திடீர் பரம்பல்கள் ஏற்பட்டன என அவசர சிகிச்சைப் பிரிவுத்தாதி உலக சோசலிச வலைத்தளத்திற்கு தெரிவித்தார். "எம்மிடம் எட்டு நோயாளிகளுக்குரிய இட மற்றும் வசதிகள் உள்ளன ஆனால் பெரும்பாலான நேரங்களில் இங்கு 10 இலிருந்து 11 நோயாளிகள் உள்ளனர்" என அவர் கூறினார். "அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் சிகிச்சையின் பின்னர் அழித்துவிடும் உபகரணங்களின் அளவுகளில் எந்தவித அதிகரிப்பும் இடம்பெறவில்லை. இதன் விளைவு மிகவும் பயங்கரமானது. உறிஞ்சும் இயந்திரங்கள், உறிஞ்சு குழாய்கள் மற்றும் படுக்கை வெப்பமேற்றிகள் முதலியவற்றை சரியான முறையில் தொற்று நீக்கம் செய்ய முடியாமலுள்ளது. சில சமயங்களில் பாரிய சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளிகளை முன்னர் ஒரு தொற்றுக்குள்ளான நோயாளியினால் உபயோகிக்கப்பட்ட படுக்கையில் எந்த ஒரு தொற்றுநீக்கமும் செய்யாது இடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். "ஒரு நோயாளியை ஒரு நோயாளர் தங்கும் பகுதிக்கு மாற்றிய பின்னர் உடனடியாக இன்னொருவரை ஏற்க வேண்டியுள்ளது. எம்மிடம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சுத்தமான காற்றை புகுத்தும் சாதன குழாய்களே உள்ளன. எப்படி எம்மால் நோய்க்கிருமிகள் அற்ற ஒரு சூழலை புதிதாக வரும் ஒருவருக்கு ஏற்படுத்த முடியும்? அவற்றை ஒருதடவையே பாவிக்க முடியும் என்றாலும் நாங்கள் அவற்றை மீளப்பாவிக்க வேண்டும். "தொற்றுக்களுக்கு உட்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் அறை உள்ளது ஆனால் இந்த நோயாளிகளுக்கு என தனிப்பட்ட ஊழியர்கள் கிடையாது. அத்துடன் மூன்று நேர வேலைகளையும் சமாளிக்க 29 தாதிகளே எம்மிடம் உள்ளனர். சிலவேளைகளில் ஒரு தாதி கடுமையான சுகயீனம் உள்ள இரு நோயாளிகளை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. குறுக்கு தொற்றுக்களை எவ்வாறு எம்மால் தடுக்க முடியும்? போதியளவு சுகாதார தொழிலாளர்கள் எம்மிடம் இல்லை. "உயிர்கொல்லி தொற்றுக்களை நாம் அனுபவித்துக்கொண்டுள்ள போதும் இவற்றை தடுக்கும் முறைகளைப் பற்றிய விவாதங்கள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். ஆறு மாதங்களுக்க முன்னர் குறுக்குத் தொற்றின் (எதிரெதிர்த் தொற்றுதலின்) திடீர் அதிகரிப்பை வைத்தியசாலை தாக்கப்பட்டதுடன், காலத்துக்கு முந்திய குழந்தைகளை பராமரிக்கும் பகுதிகளின் வசதிகள் 2000 ஆண்டில் ஒரு அதிகரிப்பை அடைந்தது என தொழிலாளர்கள் தெரிவித்தனர். லேடி றிஜ்வே வைத்தியசாலையில் பெற்ற தொற்றுக்களினால் ஏற்பட்ட குழந்தைகளின் இறப்புக்கள் இலங்கை பூராவும் அதிகரித்துச் செல்லும் ஒரு மாதிரியின் பகுதியாகும். 1997 ஜூலை மற்றும் ஆகஸ்டில் காசல் வீதி மகப்பேறு வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பராமரிப்பு பகுதியில் ஒன்பது சிறு குழந்தைகள் தொற்றுக்களினால் மரணமடைந்தனர். அத்துடன் கொழும்பில் பாணந்துறைப் பகுதியில் உள்ள கேதுமதி மகப்பேற்று வைத்தியசாலையிலும் தென் மாகாணத்தின் பிரதான மகப்பேற்று வைத்தியசாலையான மகாமோதர வைத்தியசாலையிலும் உயிர்கொல்லி தொற்றுக்களினால் குழந்தைகள் மரணமடைந்தனர். இந்த வருடம் மே மற்றும் ஜூனில், கொழும்பிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் ஐந்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்புக்களும் அறிவிக்கப்பட்டன. இறப்புக்கான காரணம் வெளிப்படுத்தப்படாத போதிலும் சத்திர சிகிச்சை கூடத்தில் தொற்றுக்களிற்கு ஆளானார்கள் என நம்பப்படுகின்றது. 2000 ஆண்டு டிசெம்பர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய மார்பு பிரிவு (Cardio Thoracic Unit) எம்.ஆர்.எஸ்.ஏ. நோய்க்கிருமிகளின் உயிர்கொல்லி சாதியினால் ஏற்படுத்தப்பட்ட தொற்றுக்களின் பரவலால் தாக்கத்துக்குள்ளானது. இருதய மார்பு பிரிவு, நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவு, எரிகாயங்கள், சிறுநீர்-சனனித் தொகுதி பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் இருந்த நோயாளிகள் இந்த மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறனுடைய நோய்க்கிருமிகளின் தொற்றுக்கு அடிக்கடி உட்பட்டனர். இந்த பிரச்சனைகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் முன்னைய பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) நிர்வாகமும் வருடாந்த சுகாதார செலவுகளை வெட்டுவதன் மூலம் சேவைகளின் தனியார்மயமாக்கலுக்கு ஊக்கமளித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் 1999/2000 ஆண்டுக்கான உலக அபிவிருத்தி அறிக்கையின்படி நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் சுகாதாரத்திற்கான அரச துறை சராசரி செலவீனங்கள் மொத்த தேசிய உற்பத்தியின் 2.4 விகிதமாகும். இதற்கு மாறாக, 2000 ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த சுகாதார செலவீனங்கள் 20,696 மில்லியன் ரூபா அல்லது மொத்த தேசிய உற்பத்தியின் 1.6 விகிதமாகும் என இலங்கை மத்திய வங்கியின் 2001 ஆண்டு வருடாந்த அறிக்கை தெரியப்படுத்தியது. 2001ல் பொதுஜன முன்னணி அரசாங்கம் சுகாதார வரவு செலவுத் திட்டத்தை 18,772மில்லியன் ரூபாயாக அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 1.3 விகிதமாக வெட்டியது. லேடி றிஜ்வே வைத்தியசாலையின் சனநெருக்கடி மிகுந்த, குறைந்தளவு உபகரணவசதிகளுடனான நிலைமைகளுக்கு ஊழியர்கள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளதால் அதிகரிக்கும் குறுக்குத் தொற்றுகைகளின் (எதிரெதிர்த் தொற்றுதல்களின்) அளவிற்கு குறைந்து செல்லும் சுகாதார சேவைக்கான வரவுசெலவுத் திட்டமே நேரடிப் பொறுப்பாகும். இந்த நிலைமைகள் உயர் தொற்றுந் தன்மையுடைய நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புத் திறனுடைய குணப்படுத்த கடினமான நோய்களின் அபிவிருத்தி மற்றும் விரைவான பரம்பல்களுக்கு உத்தரவாதமளிக்கின்றன. தனியார் வசதிகளுடனான உயர்ந்ததரமுடைய சுகாதார பராமரிப்பை விலைகொடுத்து பெறமுடியாத பெற்றோருடைய குழந்தைகளின் கவலைக்கிடமான இறப்பே இதன் விளைவாகும்.
|