WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: ஆசியா
: இந்தியா
India prepares another anti-democratic election in Kashmir
இந்தியா காஷ்மீரில் ஜனநாயக விரோத தேர்தலை
தயார் செய்கிறது
By Deepal
Jayasekera
6 August 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தேர்தல் செப்டம்பர்
மற்றும் அக்டோபர் தொடக்கத்தில் கட்டம் கட்டமாக
நடைபெறும் என்று இந்தியா கடந்த வாரம் பெயரளவில் அறிவித்தது.
அந்தத் தேர்தலை மாநில மற்றும் தேசிய அரசாங்கங்கள் ஜனநாயகத்தை
நடைமுறைப்படுத்துவதாக காட்ட முயற்சிக்கும் அதேவேளை,
அந்த நிகழ்வுப் போக்கானது முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்
கொண்ட மாநிலத்தில் இந்திய ஆட்சியின் ஒடுக்குமுறைத்
தன்மையை சாதாரணமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அங்கே ஒரு பத்தாண்டாக நீடிக்கும் கிளர்ச்சியில் குறைந்த பட்சம்
35, 000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மிகப்பலமாக
ஆயுதம்தரித்த இந்திய மற்றும் பாக்கிஸ்தான் துருப்புக்கள் எல்லைக்கு
குறுக்கே ஒருவரை ஒருவர் எதிர்கொள்வது தொடரும் நிலையில்தான்
தேர்தல்கள் நடத்தப்படும். இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில்
உள்ள காஷ்மீரின் பகுதிகளை பிரிக்கும், உலகிலேயே மிக அதிகமாக
இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக்
கோடுகளில் (LOC) இந்திய துருப்புக்களில்
பல நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் இந்திய பாராளுமன்றத்தின்
மீதான தாக்குதலை அடுத்து செய்யப்பட்ட இராணுவ குவிப்பினால்
அது போராக மாறலாம் என்ற அச்சங்களின் மத்தியில் பத்தாயிரக்கணக்கான
மக்கள் அப்பகுதிகளில் இருந்து தப்பி ஓடினார்கள்.
பிரமாண்டமான இராணுவம் மற்றும் போலீஸ் அங்குள்ள
நிலையில்தான் தேர்தல்கள் நடத்தப்பனவுள்ளது. பாதுகாப்புப்
படைகளுக்கு உதவியாக கூடுதலாக 35,000 துணைநிலைப் படைகளுக்கு
மாநில அரசாங்கம் அழைப்பு விடுத்தது, அவற்றுக்கு ஜனநாயக
உரிமைகளை நசுக்கும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. ஆளும் தேசிய
மாநாடு கட்சி (National Conference)
தேர்தல்களில் தில்லு முல்லு செய்து மதிப்பிழந்துள்ளதுடன், அது ஏற்கெனவே
அதன் அரசியல் எதிராளிகளுக்கு எதிராக போலீஸ் மற்றும் துணைநிலைப்
படைகளைப் பயன்படுத்தியது.
அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாடு (APHC)
காஷ்மீரின் சுதந்திரத்துக்கு அல்லது அது பாக்கிஸ்தானுடன்
ஒன்றிணைவதற்கு ஆதரவான 23 கட்சிகளைக் கொண்ட ஒரு தளர்வான
கூட்டணி ஆகும். இதன் பிரதான மூன்று தலைவர்கள் ஏற்கெனவே
கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாடு
ஒரு சட்ட ரீதியான அமைப்பாக இருந்தபோதிலும் கூட, அவர்களை
விடுவித்தால் அவர்கள் தேர்தலுக்கு "இடையூறு" செய்வார்கள்
என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களைத் தொடர்ந்து தடுப்புக்
காவலில் வைத்திருக்க மாநில அரசாங்கம் வலியுறுத்தியது. புதுதில்லியிலுள்ள
பாரதீய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான
அரசாங்கம் தடுப்புக் காவல்களுக்கு ஆதரவளிக்கிறது. இந்தியாவின்
துணை உள்நாட்டு அமைச்சர் ஐ.டி.சுவாமி ஜூலை 20ல் இதனை
ஆமோதிக்கும் வகையில் " அவர்களைத் தடுப்புக் காவலில்
வைத்திருப்பது மாநில அரசாங்கம்தான். அவர்கள் போட்டியிடுவார்களா
அல்லது இல்லையா என்பது பற்றி மாநில அரசாங்கம் அக்கறை
கொள்ளவில்லை. ஆனால் ஆம் , அவர்கள் பிணையில் வந்தாலோ
அல்லது விடுவிக்கப்பட்டாலோ அமைதியான தேர்தல் நிகழ்வுப்
போக்கிற்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்று மாநில அரசாங்கம்
உணருகின்றது'' என கருத்துத் தெரிவித்தார்.
"அம்மூவரில் ஒருவரான , ஜம்மு காஷ்மீர்
விடுதலை முன்னணி (JKLF) தலைவர்
யாசின் மாலிக் மார்ச் 23ல் இந்தியாவின் கடுமையான பயங்கரவாத
தடுப்புச் சட்டத்தின் (POTA) கீழ் மீண்டும்
கைது செய்யப்பட்டார், அதற்குப் பிறகு சிறப்பு நீதிமன்றத்தினால்
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதும் மீண்டும் ஜூலை 20ல் பொது
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 11 வரையில் பொடா சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரில் 113
பேர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர், அந்த சட்டமானது
, பயங்கரவாத அமைப்புக்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவற்றுடன்
ஏதாவது தொடர்பு யாருக்காவது இருப்பதாகக் காணும் பட்சத்தில்
விசாரணை இன்றி அவரை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரங்களை
வழங்குகிறது.
ஜம்முவில் குடியேறிய இந்து தொழிலாளர்கள்
கொல்லப்பட்டதற்கு எதிராக அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாட்டினால்
ஜூலை 20ல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு
பதிலாக அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாட்டின் தலைவர் ஜாவிட்
மீர் உட்பட 150 பேர்களை போலீசார் கைது செய்தனர். அந்த
எதிர்ப்பை உடைப்பதற்கு போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும்,
குண்டாந்தடிகளையும் பயன்படுத்தினர், இதனால் 15 ஆர்ப்பாட்டக்
காரர்கள் காயமடைந்தனர். மற்றைய இரண்டு அனைத்துக் கட்சி
ஹூரியத்மாநாட்டின் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் உள்ள உணர்வு பற்றி கடந்தவாரம் 'போஸ்ரன்
குளோப்' (Boston Globe) பத்திரிகையின்
செய்தியாளர் ஒருவர் '' இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை
கொண்ட மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரிலுள்ள மக்கள் வாக்கு
மூலமாக அவர்களுக்கு முன்னேற்றம் ஏதாவது ஏற்படுமா என்பதுபற்றி
நம்பிக்கை இன்றி இருக்கின்றனர்" என குறிப்பிட்டார்.
இந்த செய்தித்தாளுக்கு காஷ்மீர் பல்கலைக்
கழகத்தில் அரசியல் விஞ்ஞான மாணவர்களில் ஒருவரான சயீதா
மலீக் என்ற மாணவி '' தேர்தல்கள் ஒரு ஏமாற்றாகும் மற்றும்
அது தேசிய மாநாடு கட்சியின் ஊழல் ராஜ்யத்தை முன்னுக்குக்
கொண்டு வரும். நானும் எனது குடும்பமும் வாக்களிப்பதில்லை
என்று முடிவெடுத்துள்ளோம், ஏனென்றால் இந்தத் தேர்தல்கள்
சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இருக்கப்
போவதில்லை. முடிவு என்னவாக இருக்கும் என்று எல்லோருக்கும்
தெரியும்'' என கூறினார்.
"தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக
அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாடு ஏற்கெனவே அறிவித்துள்ளது."மக்கள்களின்
கேள்விகளுக்கு தேர்தல்கள் பதில் எதையும் வழங்கப் போவதில்லை"
என்று கடந்த வாரம் அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாட்டு
தலைவர் அப்துல் காணிபட் கூறினார். "முழு தென் ஆசிய பிராந்தியத்தில்
உள்ள மக்களின் நலனுக்காக இந்த சச்சரவுக்கு நாம் நிரந்தரத்
தீர்வை நாடுகிறோம்...... அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம்
மட்டுமே தீர்க்க முடியும்." சர்ச்சைக்குள்ளாகி இருக்கும்
காஷ்மீரின் அந்தஸ்தை தீர்மானிப்பதற்கு ஒரு சர்வஜன வாக்கெடுப்பை
நடத்தக் கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானங்களை
அமுல்படுத்தும்படி அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாடு மீண்டும்
மீண்டும் அழைப்பு விடுத்தது.
தேர்தல்களை நடத்தவிடாமல் குழப்பம் விளைவிக்கப்
போவதாக ஆயுதம் தரித்த இஸ்லாமிய தீவிரவாதப் படைகள் சவால்
விட்டுள்ளன. போலீசாரின் அறிக்கையின்படி கடந்த வாரம் ஒன்பது
தேசியமாநாடு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தக்
குழுக்கள்தான் பொறுப்பாகும்.
முன்னைய தேர்தல்கள்
கடைசியாக 1996ல் நடந்த மாநில தேர்தல்களில்
, தேசிய மாநாடைத் தவிர அனைத்து முக்கியமான உள்ளூர் கட்சிகளும்
தேர்தலைப் புறக்கணித்தன. 15 முதல் 20 சதவீதம் வரையில்தான்
வாக்களித்து இருந்தனர். 1999ல் நடந்த தேசிய தேர்தல்களை
புறக்கணிக்கும்படி அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாடு கூட
அறைகூவல் விடுத்தது. வாக்களிக்கும்படி பாதுகாப்புப் படையினர்
மக்களை வெளிப்படையாகவே விரட்டுவதில் ஈடுபட்ட போதும்
கூட உத்தியோகப் பூர்வமாக வாக்களித்தவர்கள் 32 சதவீதமானவர்கள்
மட்டும்தான். மற்றும் கள்ள வாக்கு பற்றிய குற்றச்சாட்டுக்கள்
பரந்த அளவில் இருந்தன.
அந்த சமயத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ்( Indian
Express) "" கங்கன் -கந்தேர்பால்-
ஸ்ரீநகரின் பட்டணங்களில் ஒரு நல்ல வாக்களிப்பு உருவாவதை
"திணிப்பதற்காக" எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்),
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்), ராஷ்டிரிய படைகள் மற்றும்
இந்தய படைகளின் சிறப்பு நடவடிக்கைக் குழுக்கள் கடுமையான
முயற்சிகளை மேற்கொண்டபோதும் கூட ஒரு மிகச் சிறிய அளவிலான
வாக்களிப்பு தான் நடந்தது. நாளின் இறுதியில் பார்க்கையில்
வாக்களித்தவர்களின் தொகை 25 சதவீதத்திற்கும் குறைவாகத்தான்
இருந்தது" என கருத்துக் கூறியது.
"இதுவும் கூட சந்தேகமானதுதான் ,
ஏனென்றால் ஏ.கே துப்பாக்கிகளை கையில் ஏந்திய இந்திய
போர்வீரர்கள் காஷ்மீரி வாக்காளர்களை துப்பாக்கி முனைகளில்
வாக்குச்சாவடிகளுக்குத் தள்ளிச் செல்லும் எண்ணற்ற சம்பவங்களை
இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டது. மாலை நேரத்தில் இந்த வாக்காளர்கள்
பாதுகாப்புப் படைகளிடம் அவர்களது (வாக்களித்ததற்கான
அடையாளம் இடப்பட்ட) விரல்களைக் காட்டும்படி நிர்பந்திக்கப்படுவார்கள்.
இது ஜனநாயகத்துக்கான அவர்களது அந்தஸ்தை புதுப்பிப்பதற்கு
அத்தாட்சியாக கருதப்படுகிறது. இதனை அவர்கள் ' நக அணிவகுப்பு'
( Nail parade) என்று
அழைப்பார்கள்."
"சுதந்திரமான நியாயமான தேர்தல்களை"
நடத்தும் பெயரில் மாநிலத்தில் நேரடியாக ஜனாதிபதி ஆட்சியை
அவரது அரசாங்கம் திணிக்கலாம் என்று ஜூனில் இந்தியப் பிரதமர்
அடல்பிகாரி வாஜ்பாயி ஜாடையாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரில்
ஜனநாயக தேர்தல்கள் நடத்துவதில் தேசிய மாநாடுக்கு அக்கறை
இல்லாததைப் போலவே வாஜ்பாயிக்கும் அக்கறை இல்லை.
அப்படியான ஒரு நடவடிக்கை இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது
போல் தோன்றுகிறது, அந்த நடவடிக்கை தேர்தல்களின்
போது மேலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதை
நியாயப் படுத்தவும், காஷ்மீரி முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில்
ஒரு தளத்தைக் கொண்டுள்ள வாஜ்பாயியின் இந்து பேரினவாத
பாரதீய ஜனநாயக் கட்சியின் கூட்டாளியான தேசிய மாநாடுக்கு
மேலாக அதன் வாய்ப்புகளை மேல் உயர்த்தவும் ஆகும். பாரதீய
ஜனநாயக் கட்சி காஷ்மீரில் உள்ள அனைத்து 46 சட்டசபை
தொகுதிகளிலும் ஜம்முவிலுள்ள 37 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிடுகிறது,
இது அதனை தேசிய மாநாட்டுடன் நேரடி மோதலுக்குக் கொண்டு
வருகிறது.
தேசிய மாநாடு தனது பங்கிற்கு அதற்கு தேய்ந்து
வரும் ஆதரவை நிரப்பிக் கொள்வதற்காக ஜம்மு காஷ்மீருக்கு
"அதிக அளவிலான சுயாட்சி" வேண்டும் என்று அறைகூவல்
விடுத்துள்ளது, அது நேரடி (ஜனாதிபதி) ஆட்சியை கடுமையாய் எதிர்க்கிறது.
ஒரு புறம் புதுதில்லியில் வாஜ்பாயி அவரது பாராளுமன்ற பெரும்பான்மையைத்
தக்கவைப்பதற்காக தேசிய மாநாட்டை பக்கத்தில் வைத்திருக்க
வேண்டியிருக்கிறது. அதேவேளை காஷ்மீருக்கு எந்தவித சிறப்பு அந்தஸ்தையும்
வழங்குவதை எதிர்க்கும் அவரது பாரதீய ஜனநாயக் கட்சியின் கூட்டாளிகளான
இந்து தீவிரவாதிகளின் அழுத்தத்தின் கீழும் அவர் உள்ளார்.
ஜம்மு காஷ்மீரை மூன்றாகப் பிரிக்கும் அடிப்படையில்
மாநில தேர்தல்களில் பல கட்சி கூட்டணி போட்டியிட வேண்டும்
என்று இந்து பேரினவாத ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்க் (R.S.S-ஆர்.எஸ்.எஸ்)
முன்மொழிந்தது. அதாவது மாநிலத்தை முஸ்லிம், இந்து மற்றும் புத்த
பகுதிகள் என்று வகுப்புவாத ரீதியாகக் கூறு போடுவதாகும். இந்த
முன்மொழிவு மேலும் வன்முறையைத் தூண்டி விடும். வாஜ்பாயியும்
ஏனைய பாரதீய ஜனநாயக் கட்சியின் தலைவர்களும் நீண்டகாலமாக
ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்) இன் உறுப்பினர்களாக
இருந்து வருகின்றனர். இந்து தீவிரவாதத்திற்குப் பேர்போன துணைப்
பிரதமர் எல்.கே. அத்வானி தற்போது "மூன்றாகப் பிரிக்கும்"
திட்டத்துக்கு ஆதரவளிக்க மறுத்துள்ளதுடன், அது மாநிலத்தில் முஸ்லிம்
பகுதிக்கு பாக்கிஸ்தான் உரிமைகோருவதைத்தான் பலப்படுத்தும்
என்றார்.
வாஜ்பாயி அவரது கூட்டணி சகாக்களுக்கும் பாரதீய
ஜனநாயக் கட்சியின் இந்து பேரினவாத தொகுதி பற்றிய கோரிக்கைக்கும்
இடையில் சமநிலைப்படுத்த முயற்சித்தார். மாநிலத்துக்கு பிரதமர்
விஜயம் செய்த போது பொருளாதார நடவடிக்கைகளைக்
கொண்ட ஒரு வரம்புக்குட்பட்ட சலுகைகளை அறிவித்தார்.
ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாட்டை
தேர்தல்களில் பங்கெடுக்க வைப்பதன் மூலமாக தேர்தலுக்கு
கொஞ்சம் மதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம்
அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாட்டுடன் பேச்சுவார்த்தைகள்
செய்வதற்காக ஒரு குழுவை அமைத்த போதும் அதனால் எந்த
பயனும் இல்லை.
அமெரிக்கத்தலையீடு
வாஜ்பாயி அரசாங்கத்துடன் நெருக்கமான
உறவுகளை வளர்த்து வரும் புஷ் நிர்வாகம் இந்தியத் துணைக் கண்டத்தில்
அமெரிக்காவின் ஒரு பெரும் பாத்திரத்தை பரந்த அளவில் முன்னெடுப்பதற்காக
காஷ்மீர் தேர்தலில் நேரடியாகத் தலையிட்டுள்ளது.
ஜூலை28ல் புதுதில்லிக்கு விஜயம் செய்த அமெரிக்க
ராஜாங்க அமைச்சர் கொலின் பெளல் மாநில தேர்தலை மேற்பார்வை
செய்ய சர்வதேச பார்வையாளர்களை அனுப்பப் போவதாகக்
கூறினார்."காஷ்மீரி மக்கள் முகம் கொடுக்கும் துயரங்களுக்கு
தீர்வுக்கு ஒரு பரந்த அளவிலான நிகழ்வுப் போக்கின் முதல்படியாக
தேர்தல்கள் அமையும், அத்துடன் மீண்டும் இந்தியாவுக்கும்
பாக்கிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளுக்கும் அது
வழிவகுக்கும்" என்று கூறினார். காஷ்மீரில் உள்ள அரசியல் கைதிகள்
விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் பெளல் அறைகூவல்
விடுத்தார். "நடுநிலையான சக்திகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட
வேண்டும், அவர்கள் வாக்களிப்பதற்கான திருப்பத்தை ஏற்படுத்துவதில்
சாதகமான பாத்திரத்தை வகிக்க முடியும்" என்றார் அவர்.
புஷ் நிர்வாகம் , காஷ்மீரி மக்களின் ஜனநாயக
உரிமைகள் பற்றி அக்கறை கொள்ளவில்லை. பெளலின் கருத்துக் குறிப்புக்கள்
தெளிவாக்குவது போல் குறைந்த வாக்காளர்களின் திருப்பம்
தேர்தல்களின் மற்றும் அதன் காரணமாக அடுத்த மாநில அரசாங்கத்தின்
சட்டரீதியான நிலையைப் பலவீனப்படுத்தும் என வாஷிங்டன் கவலைப்படுகிறது.
திரைமறைவில் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும்
இடையில் பரந்த அளவில் பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமாக
அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாட்டின் சில பகுதிகளை தேர்தலில்
பங்கெடுக்கும்படி அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது.
ஜூன் கடைசி வாரத்தில், புதுதில்லியில் உள்ள
அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து ஒரு அரசியல் அதிகாரியும்,
ஒரு பாதுகாப்பு அதிகாரியும் ஜம்மு காஷ்மீருக்கு அறிவிக்கப்படாத
ஒரு விஜயத்தை மேற்கொண்டனர். அந்த விஜயத்தை அமெரிக்கத்
தூதரகம் உறுதி செய்த போதிலும் விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
அதன் அதிகாரி அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாடு மற்றும் காஷ்மீரில்
உள்ள ஏனைய அரசியல் கட்சிகளையும் சந்தித்ததை ஏற்றுக்
கொண்டார். காஷ்மீர் ஒப்சேர்வர் (Kashmir
Observer) பத்திரிக்கையின் படி , அமெரிக்க அதிகாரிகள்
அனைத்துக் கட்சி ஹூரியத்மாநாட்டை "தேர்தல்களில் பங்கெடுக்கும்படி"
வெளிப்படையாகவே கூறினார்கள்.
வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகள் இருந்தபோதிலும்
வாஜ்பாயி அரசாங்கமானது , காஷ்மீரில் அமெரிக்காவின் எந்த நேரடித்
தலையீடு தொடர்பாகவும் அதிகபட்சமான கவனம் உடையதாக
இருக்கிறது. காஷ்மீர் ஒரு உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா நீண்டகாலமாகவே
கூறி வருகிறது , அத்துடன் எந்த சர்வதேச ஈடுபாட்டையும்
நடுவர் தலையீட்டையும் நிராகரித்து வருகிறது. சர்வதேசப் பார்வையாளர்களை
அனுப்பப் போவதாக பெளல் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்த
இந்திய வெளிநாட்டு அமைச்சர் யஷ்வந்த சின்ஹா பாக்கிஸ்தானுடன்
பேச்சுவார்த்தைக்கு "அவசியமான நிலைமைகள் தற்போது
இல்லை " என்று சுட்டிக் காட்டினார். பெளலின் கருத்துக்
குறிப்புக்களை "தலையீடு" என்று பாரதீய ஜனநாயக் கட்சியின்
தலைவர் எம். வெங்கையா நாயுடுவும் அதேபோல் எதிர்க்கட்சிகளும்
விமர்சித்தன.
இந்தியாவிலானாலும் அல்லது சர்வதேசரீதியானாலும்
தேர்தலுக்கு முன்னான அரசியல் சூழ்ச்சிகளின் விளைவு எதுவாக
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முழுமையாக ஒரு ஜனநாயக
விரோத நடைமுறையாகத்தான் இருக்கும். காஷ்மீர் தொடர்பாக
நீடிக்கும் சர்ச்சையும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாதிருப்பது
50 வருடங்களுக்கும் முன்னால் துணைக்கண்டத்தை ஒரு முஸ்லிம்
பாக்கிஸ்தானாகவும் ஒரு இந்து ஆதிக்கமுள்ள இந்தியாவாகவும்
பிற்போக்கு பிரிவினை செய்ததில் வேரூன்றி உள்ளது. இப்பிராந்தியம்
இனவாத ரீதியில் பிரிக்கப்பட்ட நிலைக்குள்ளே இம்மோதலுக்கு
எவ்விதமான தீர்வும் கிடையாது.
See Also:
இந்தியத்
தொழிலாளர்கள் போர் அபாயங்கள் பற்றி பேசுகின்றனர்
இந்தியா-பாகிஸ்தான்
முரண்பாடு
Top
of page
|