World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: மத்திய கிழக்கு : ஈராக்American public left in dark on US war aims in Iraq ஈராக்கில் அமெரிக்க யுத்த நோக்கங்கள் குறித்து அமெரிக்க மக்கள் அறியாது மறைக்கப்பட்டுள்ளனர்By Patrick Martin ஈராக்குடன் எப்பொழுது மற்றும் எப்படி போருக்குச் செல்வது என்பது தொடர்பாக உத்தியோகரீதியான வாஷிங்டனில் வெடித்திருக்கும் விவாதம் எந்த அர்த்தத்திலும் ஒரு பகிரங்க விவாதம் அல்ல. புஷ் நிர்வாக அதிகாரிகள், குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைவர்கள், இராணுவ புலனாய்வுத் துறை உள்ளடங்கலான ஆளும்தட்டின் பல்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகள் இதனை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க மக்கள் இதிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கலந்துரையாடல்களில் உண்மையான ஜனநாயகப் பூர்வமான உள்ளடக்கம் இல்லாததோடு, அதில் உள்ள ஏனைய விடயங்கள் பொதுமக்கள் கருத்தை எப்படி சாதுர்யமாக கையாளுவது என்ற தீவிரமான எண்ணிப்பார்த்தலுமாகும். ஜூலை 31 லிருந்து ஆகஸ்டு 1 வரை நடந்த செனெட் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் உண்மையான அர்த்தமானது காங்கிரஸ் நடவடிக்கைகளின் சிடு மூஞ்சித்தனமான மற்றும் ஆத்திரமூட்டல் பண்பை வெளிப்படுத்துகிறது. ஈராக்கை ஆள்பவர் என்ற வகையில் சதாம் ஹூசைன் அகற்றப்பட வேண்டும் மற்றும் உலகின் மறு பக்கத்தில் உள்ள நாட்டில் "ஆட்சி மாற்ற" கொள்கையை நிறைவேற்ற ஐக்கிய அமெரிக்க அரசுகள் உரிமை கொண்டிருக்கிறது என்பதில் பேச்சாளருக்குப் பின் பேச்சாளர் உடன்பட்டனர். இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழிமுறைகள் பற்றியதில், அதாவது அத்தகைய போரை அமெரிக்க மக்களுக்கு "விற்பனை" செய்வதற்கான சிறந்த வழிமுறைகள் பற்றியதில் மட்டும்தான் வேறுபாடுகள் வெளிப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பூர்வ அமெரிக்க விவாதம் இத்தாலிய நாவல் ஆசிரியரான பிரான்டெல்லோவுக்கு( Pirandello) வக்காலத்து வாங்குவதாக குறிப்பிடகூடியதாக இருப்பதுடன்," ஒரு சாக்குப்போக்கைத் தேடுவதில் ஆறு போர்கள்" என்று தலைப்பிடப்படலாம். ஈராக்குடனான போரின் இலக்கு மீது முழு அரசியல் நிறுவனமும் செய்தி ஊடக நிறுவனமும் உடன்படுகின்றன.சிலர் ஆப்கான் மாதிரியான, பெரும் ஆகாய பலத்துடன் இணைந்து, தரையில் அமெரிக்கத் துருப்புக்களின் சிறு படைப்பிரிவும் சி.ஐ.ஏ உளவாளிகளும், உயர் தொழில் நுட்ப ஆயுதத்தளவாடத்தைப் பயன்படுத்தும் யுத்தத்தை ஆதரித்தனர். ஏனையோர், குறிப்பாக பெண்டகனில் உள்ளோர் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு , ஒருவேளை 250,000 கொண்ட அரைவாசி துருப்புக்களுடன், 1991 பாரசீக வளைகுடாப் போருடன் அதிகமாய் ஒத்த இயல்பானதாக பார்க்கின்றனர். இன்னொரு முன்மொழிவு, சதாம் ஹூசைனுக்காக ஈராக்கின் வழமையான துருப்புக்கள் போராடமாட்டாது என்ற நம்பிக்கையில் ஈராக்கிய குடியரசுக் காவலர்களை மட்டும் குறிவைத்து குவைத்திலிருந்து பாக்தாத்வரை டாங்குகளை நகர்த்தும் அணிவரிசையாகும். நான்காவது வேறுபட்ட விளக்கம், ஈராக் ஜனாதிபதியைக் கொல்வதன் மூலம் ஆட்சியைத் துண்டிப்பதை நோக்கமாக்கொண்ட ஈராக் தலைநகரத்தின் மீதான விமானத்தாக்குதலாகும். இராணுவச்சதி மற்றும் ஹூசைன் படுகொலை சம்பந்தப்பட்ட ஒரு காட்சி கூட ஆதரைவை கொண்டதாக இருக்கின்றது. புஷ் நிர்வாகம் விரும்புகிறவாறு, அதன் போர்த் திட்டங்களின் பின்னால் பொதுமக்களை அணிதிரட்டி செல்லக் கூடிய ஒரு சாக்குப்போக்கைக் கண்டுபிடிப்பதில் இதுவரை வெற்றிபெறாது, ஈராக்குடனான குரோதங்களுக்கான அரசியல் சாக்குப் போக்கு மாறியபடி உள்ளது. 1998லிருந்து ஐ.நா ஆயுத பரிசோதனையாளர்கள் வருகை தராது இருப்பதுடன், பாக்தாத் இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களின் அபிவிருத்தியை புதுப்பித்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது என்பதன் காரணமாக ஈராக்கிற்கு எதிரான போர் ஒருநாள் தேவைப்படுகிறது. (எவ்வாறிருப்பினும், கடந்த வாரம் ஈராக் பரிசோதனையாளர்களை மீண்டும் அனுமதிப்பதற்கு முன்வந்தபோதும் புஷ் நிர்வாகமானது உடனடியாக அம்முன்மொழிவை நிராகரித்தது.) அல்கொய்தாவின் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் ஹூசைனின் பாத்திச ஆட்சியின் மதச்சார்பற்ற தேசியவாதத்திற்கும் இடையிலான பகைமை ஏற்கெனவே நன்கு நிலைநாட்டப்பட்டிருந்தபோதும் ஈராக்கிய ஆட்சியாளர்கள் பரந்த அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை ஏற்கெனவே கொண்டிருக்கிறார்கள் மற்றும் அவற்றை அவர்கள் அல்கொய்தாவுக்கு வழங்கலாம் என்பதன் காரணமாக அடுத்த நாள் ஹூசைனை ஆட்சியிலிருந்து அகற்றல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஒருநாள் கழித்து அது, ஹூசைன் அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக பரந்த அழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் (அது அவரது ஆட்சிக்கு தற்கொலையாக அமையலாம் என்ற போதினும்) அல்லது (200 அணு ஆயுதங்களக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படும் )இஸ்ரேலுக்கு எதிராக பரந்த அழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்பதன் காரணமாக அவர் கட்டாயம் அகற்றப்பட வேண்டும் எனத் திரும்பியது. முஸ்லீம் நாடு மீதான அனைத்து உரிமை கோரல்களையும் கைவிடுவதாக ஈராக் குவைத்துடன் எல்லைப்புற உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருப்பினும், மற்றும் பாக்தாதின் மீது அமெரிக்கத் தாக்குதலை வளைகுடா நாடுகள் பகிரங்கமாக எதிர்ப்பினும் மறுநாளன்று ஹூசைன் அவரது அரபு அண்டை அயலாருக்கு அச்சுறுத்தல் எனவும் மற்றும் பாரசீக வளைகுடாவிலிருந்து உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கலுக்கும் அச்சுறுத்தல் எனவும் அறிவிக்கப்பட்டார். வார இறுதியில் பதிலடிப் போரை நியாயப்படுத்தி, உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் ஆகியவற்றின் மீதான செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கான சதாம்ஹூசைன் பொறுப்பு என அறிவிக்கப்பட்டார். போர்க் காரணத்தை உற்பத்தி செய்யும் இந்த அண்மைய மற்றும் மிகவும் ஆற்றொணா முயற்சியானது ஆகஸ்டு 2ல் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸால் (Los Angeles Times) வெளியிடப்பட்டது. ஏற்கனவே செக் அறிக்கையை நிரூப்பிக்கப்படாதது மற்றும் அடிப்படை இல்லாதது என்று சி.ஐ.ஏ(CIA) மற்றும் எப்.பி.ஐ ( FBI ) இரண்டும் தள்ளுபடி செய்திருந்த போதிலும், செப்டம்பர்11க்கு பல மாதங்களுக்கு முன்னர் செக் குடியரசில் தற்கொலை விமானக் கடத்தல்காரர் முகமது அட்டா ஈராக்கிய அதிகாரி ஒருவரை சந்தித்தார் என்ற கூற்றை அங்கீகரிக்க வெள்ளை மாளிகையும் பெண்டகனும் முடிவு செய்திருந்தன என்று அந்த செய்தித்தாள் எழுதியது. லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸின் முன்பக்க செய்தி தெளிவாக்குகிறவாறு, புஷ் நிர்வாகம் தனது முடிவை செய்தது புதிய உளவுத் தகவல் கிடைத்த்தன் விளைவாக அல்ல, மாறாக அதனுடைய போர்த் திட்டங்களுக்கான ஆதரவை உருவாக்குதற்கு செப்டம்பர் 11 தொடர்புக்கான தேவையை அது உணர்ந்ததால் ஆகும். போருக்கான சாக்குப்போக்கைத் தேடலில் மீண்டும் மீண்டும் அலைவதற்குக் காரணம் உண்மையான நோக்கங்கள் அமெரிக்க மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதாகும். போருக்கான தயாரிப்புக்கள் இரண்டு விளைவைக் கொண்டிருக்கின்றன: அவையாவன உலகில் மிக முக்கியமான மூலோபாய பரிசான பாரசீக வளைகுடா எண்ணெய் மீதான சவால் செய்யமுடியாத கட்டுப்பாட்டை நிறுவுதற்கு அமெரிக்க ஆளும் தட்டினது ஓட்டம், மற்றும் நிறுவனங்களின் ஊழல்களிலும் பங்குமுதல் சந்தை வீழ்ச்சியிலும் தெளிவாக வெளிப்படுத்தப்படும், உள்நாட்டில் பெருகிவரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கான புஷ் நிர்வாகத்தின் ஆசை ஆகியனவாகும். செனெட் விசாரணையில், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரும், புஷ் நிர்வாகமானது இராணுவ நடவடிக்கைகளுக்கான நடைமுறைப்படுத்தத்தக்க திட்டத்தை வகுக்கவும், சர்வதேச ரீதியாக அணிதிரட்ட அல்லது சதாம்ஹூசைனைத் தூக்கி எறிவதற்கான ஆக்கிரமிப்பின் பின்னால் அமெரிக்க மக்களின் கருத்தைத் திரட்ட தவறிவிட்டது என்று கவலையை வெளிப்படுத்தினர். நெப்ரஸ்காவின்(Nebraska) குடியரசுக் கட்சி செனெட்டர் சக் ஹாகெல்(Chuck Hage) "நாம் அவருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தால் முழு மத்தியகிழக்கிலும் மேலும் நாம் அமைதி குலைவிப்போமா? யார் எமது கூட்டாளிகளாக இருப்பார்கள்? மற்றும் ஈராக்கினுள் எந்தவிதமான ஆதரவு இருக்கும்?என கேட்டாதுடன், இந்தவிதமான கேள்விகள் தீர்க்கமானவை. நீங்கள் ஈரானையும் சேர்த்து மத்திய கிழக்கு முழுவதையும் பற்றி எரியச்செய்யக்கூடும்" என கூறினார். திலாவேரின்(Delaware) ஜனநாயகக் கட்சியாளரான குழுத் தலைவர் ஜோசப் பிடேன்(Joseph Biden) 2003 வருட ஆரம்பம் வரைக்கும் ஈராக்கிற்கு எதிரான புஷ் நிர்வாகத்தின் வெளிப்படையான இராணுவ நகர்வு இருக்காது என்ற உறுதியில் நம்பிக்கை தெரிவித்தார். " எப்பொழுது மற்றும் எங்கு என்ற கடும் முடிவை அண்மையில் எங்கும்" ஜனாதிபதி செய்யவில்லை என்று மேலும் குறிப்பிட்டு, தான் "மிக, மிக ஆச்சரியம்" அடைவேன் என்றார். ஆனால் ஆகஸ்டு4 அன்று பத்திரிக்கை சந்திப்பு(Meet the Press) என்ற என்.பி.சி(NBC) நிகழ்ச்சியில் அடுத்துத் தோன்றுகையில், இறுதியில் முடிவு போராக இருக்கும் மற்றும் புஷ் அதனை காங்கிரசுக்கும் பொதுமக்களுக்கும் பொருத்தமான விஷயமாக்க முடியும் என்று பிடேன் கூறினார். குழுவின் உறுப்பினராக உள்ள குடியரசுக்கட்சியாளரான இண்டியானாவின்(Indiana) ரிச்சர்ட் லுகர் (Richard Lugar) தனது தொடக்கப் பேச்சில் பாரசீக வளைகுடாவில் போரின் விளைவுகளைப் பற்றிய தெளிவற்ற படத்தை வரைந்தார்." இது அமெரிக்க மக்கள் மத்தியில் வெளிப்படக் கூடிய நடவடிக்கை அல்ல" என்றார் அவர். " நாம் கட்டாயம் போர்த் திட்டங்கள் மற்றும் போருக்குப் பிந்தைய திட்டங்களின் மனித மற்றும் பொருளாதார செலவுகளைப் பற்றி மிகைப்படுத்தாத மதிப்பீட்டைச் செய்ய வேண்டும்" என்றார். செனெட் விசாரணைகள் ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைக்கப்பட்டது மற்றும் நிர்வாகத்தின் அதிகாரிகளிடமிருந்து பெறும் வாக்குமூலங்களுடன் அது செப்டம்பரில் புதுப்பிக்கப்படும். அதேபோன்ற சபையின் சர்வதேச விவகாரக் குழுவின் விசாரணைகள் ஜனாதிபதி கிளிண்டனுக்கு எதிரான விசாரணைக்கு தலைமை தாங்கிய பழமைவாத குடியரசுக்கட்சியாளர் இல்லினாய்சின்(Illinois) ஹென்றி ஹைட்(Henry Hyde) இன் தலைமையில் ஆரம்பமாகும். ஈராக் மீதான முழு அளவிலான ஆக்கிரமிப்பு "நடவடிக்கையின் சிறந்த போக்காக இருக்காது" என்று ஹைட் கூறினார், மற்றும் வெள்ளை மாளிகையால் இறுதியில் முன்மொழியப்படுவது என்ன திட்டமாக இருந்தாலும் அதன் மீது "அக்கறையுடன் கூடிய விவாதத்தை" அவர் வற்புறுத்தினார். அமெரிக்க பத்திரிக்கைகள் போர்த் திட்டங்கள் தொடர்பாக புஷ் நிர்வாகத்திற்குள்ளே ஆழமான பிளவுகள் பற்றி மேற்கோள் காட்டுவதைத் தொடர்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) ஆகஸ்டு 1ஆம் திகதி அன்று, உதவி ஜனாதிபதி செனியும் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்டும் " ஹூசைன் ஆபத்தான அச்சுறுத்தலை முன்வைக்கிறார் மற்றும் காலம் அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பக்கம் இல்லை என்று வாதித்துக் கொண்டு, ஹூசைனுடன் கடுமையாக மோதுவதற்காக மிகவும் பலவந்தமாகத் தள்ளுகின்றனர்". அதேவேளை அரசு செயலாளர் கொலின் பெளல் மற்றும் சி.ஐ.ஏ இயக்குநர் ஜோர்ஜ் டெனெட் ஆகியோர் "இராணுவத் தாக்குதல் பற்றி குறிப்பாக நிர்வாகத்தில் பெரும்பாலோர் நம்பும் ஒரு விரைந்த வெற்றியின் பின்னர் இருக்கும் நிலை பற்றி ஐயுறவாதக் கேள்விகளைக் கேட்கின்றனர்". பெரும்பாலான தரைப்படை மற்றும் கடற்படை ஆணையகத்தின் மூத்த அதிகாரிகள், "வெளிவிவகாரக் கொள்கை விவாதங்களில் மிக அடிக்கடி ஒருவரை ஒருவர் எதிர்ப்பதாகத் தெரிகின்ற அரசாங்க சக்திகளான வெளிநாட்டு திணைக்களத்திற்கும் பெண்டகனின் உத்தியோபூர்வமான உடைதரித்தவர்களுக்கும் இடையாலான ஒரு வழமைக்கு மாறான ஒரு கூட்டணியில்" முன்னாள் கூட்டுத்தளபதிகளின் தலைமைத் தளபதி பெளலுடன் சேர்ந்து, ஈராக்கில் உடனடித் தாக்குதலை நடைமுறைப் பிரச்சினைகளின் அடிப்படையில் எதிர்த்துள்ளனர். பாதுகாப்புக் கொள்கை வாரியம் ஜூலை 10 கூட்டத்தில், குடிமக்கள் ஆலோசனைக் குழு ஒன்று எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு விரைவில் போருக்கான ஓட்டத்தை முன்னெடுக்கவும், அதிகாரிகள் இராணுவ எதிர்ப்புடன் விரக்தியைத் தெரிவித்துள்ளனர் எனவும் அவர்கள் இராணுவ ஆணையகத்தில் " ஒரு சில தலைகளை உருட்டுதற்கு" அழைப்பு விடுத்தனர் என்று வாஷிங்டன் போஸ்ட் கணக்கீடு கூறியது. இராணுவ தளபதிகள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் தாராண்மைவாதிகள் குரல் எழுப்பும் ஈராக் தொடர்பான புஷ்-ன் கொள்கை மீதான விமர்சனமானது ஈராக்குடன் அமெரிக்கா வலுச்சண்டைக்குப் போதலுக்கு எதிரானதல்ல. இன்னும் சொல்லப்போனால், காலம் கடத்தும் மற்றும் இரத்தம் தோய்ந்த போராட்டத்திற்கான தேவையான தயாரிப்புக்களைச் செய்யாமல் மற்றும் அத்தகைய போரின் சர்வதேச எதிர்ப்பினையும் போதுமான அளவில் கருத்தில் கொள்ளாமல், புஸ் நிர்வாகமானது விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் மேற்செல்கிறது என்பது பற்றிய கவலையாகவே அது இருக்கிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளால் மற்றும் மத்திய கிழக்கிலேயே உள்ள நீண்ட கால அமெரிக்கக் கூட்டாளிகளால் மற்றும் அதன் அடிவருடிகளால் வெளிப்படுத்தப்படும் கடும் எதிர்ப்பு மீதாக அங்கு குறிப்பிட்ட கவலை இருக்கின்றது. ஜூலை 30 அன்று பிரிட்டனைத் தவிர்ந்த, ஐரோப்பிய அரசாங்கங்களின் பொதுக்கருத்தைக் கூறும், பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக்கொஸ் சிராக் மற்றும் ஜெர்மன் பிரதமரான ஹெகார்ட் ஷ்ரோடர் ஆகியோர், ஐ.நா பாதுகாப்புச் சபையால் அங்கீகாரம் அளிக்கப்பட்டால் மட்டுமே தாம் ஈராக்கிற்கெதிரான போரை ஆதரிக்கப் போவதாகக் குறிப்பிட்டனர். ஒரு விரும்பத்தாக விடயம் அங்கு பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா அனைத்தும் ரத்து(வீட்டோ) அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகும். ஆகஸ்டு 1 அன்று ஜோர்டானின் மன்னர் அப்துல்லா வாஷிங்டனுக்கு விஜயம் செய்து வெள்ளை மாளிகையில் புஷ்ஷை சந்தித்தார். பேச்சுவார்த்தைக்கு செல்லும் வழியில் லண்டனில் இடைநின்ற போது, ஈராக்கை ஆக்கிரமிப்பது தொடர்பான சர்வதேச எதிர்ப்பை அவர்கள் அலட்சியம் செய்தார்கள் என்றால் " அமெரிக்க அதிகாரிகள் " பெரும் தவறை" செய்தவர்கள் ஆவார்கள் என்று பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்." அனைவருமே இது ஒரு தவறான யோசனை என்கின்றனர்" என அவர் கூறினார். " அது நாங்கள் பாக்தாதைத் தாக்க விரும்புகிறோம் என்று அமெரிக்கா கூறுவதாக தெரிந்தால், ஜோர்டானியர்கள் அல்லது பிரிட்டீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ரஷ்யர்கள் மற்றும் ஒவ்வொருவரும் நினைப்பது அதுவல்ல." ஈராக்கிற்குள் துருப்புக்களை நகர்த்துதற்கான மற்றும் அதன் மீது வான் தாக்குதலை நடத்துதற்கான தளப் பகுதியாக ஜோர்டானை பயன்படுத்துவோம் என்று அமெரிக்க அதிகாரிகளால் கூறப்படும் கூற்றுக்களை அப்துல்லா மறுதலித்தார். ஜோர்டானிய வெளியுறவு அமைச்சர் மர்வான் முவாஷர், "ஜோர்டான் ஏவுதளமாகப் பயன்படுத்தப்பட முடியாது என்பதை அது தெளிவுபடுத்திவிட்டது " என்று கூறினார், "எங்களிடம் கேட்கப்படவில்லை" என்று மேலும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 1 அன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியிடப்பட்ட பத்தியில், கிளிண்டன் நிர்வாகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த , சாமுவேல் பெர்ஜர், "பாரசீக வளைகுடாவில் ஒரு பிக்ஸ் விரிகுடா(Bay of Pigs- கியூபாவிலுள்ள ஒரு வளைகுடா)"வின் ஆபத்து பற்றி,அதாவது சரியாகத் தயாரிக்கப்படாத தாக்குதல் இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை விளைவித்ததைப் பற்றி எச்சரித்தார். "நாம் ஹூசைன் ஆட்சியை சாதாரணமாய் அகற்றுவதைக் காட்டிலும் மிகப் பரந்த அளவில் தேவையான குறியிலக்கு பற்றி நாம் கட்டாயம் வரையறை செய்ய வேண்டும். நாம் அதனை அமெரிக்காவின் ஒட்டு மொத்தப் பாதுகாப்பை - குறைக்கும் வண்ணம் அல்லாமல்- மேம்படுத்தும் வண்ணம் - சாதிக்க வேண்டும்" என்று பெர்கர் எழுதினார். கிளிண்டனின் இந்த முன்னாள் உதவியாளர் இந்தப் பிராந்தியத்தில் ஏனைய ஆட்சிகள் சீர்குலைவது பற்றி கவலையைத் தெரிவித்தார். முடிக்கும் பொழுது, " அது பெரு முயற்சி சிறு வெற்றியாக இருக்க முடியும், எடுத்துக்காட்டாக, நாம் சதாம் ஹூசைனிடமிருந்து விடுபட்டால் பாக்கிஸ்தானில் ஆயத்த அணு ஆயுதங்களுடனான தீவிரவாத அரசாங்கத்தையே எதிர்கொள்வோம்."என எழுதினார். ஆகஸ்டு 3 , நியூயோர்க் டைம்ஸ்் ஆசிரிய தலையங்கத்தில் அதேமாதிரியான அக்கறை எழுப்பப்பட்டது, புஷ்ஷூக்கு "ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஏன் அவசரமாகத் தேவைப்படுகிறது, மற்றும் இலக்குகள் என்ன , செலவுகள் என்ன மற்றும் போரின் உள்ளுறை ரீதியான விளைபயன்கள் என்னவாக இருக்கக் கூடும்" என அவர் உணர்கிறார் என்று கபடமில்லாமல் பேச" அது வேண்டுகோள் விடுத்தது. வெற்றிகரமான போர் கூட ஏற்படுத்தும் அச்சத்தை வெளிப்படுத்தி, டைம்ஸ் குறிப்பிட்டது, "ஈராக்கில் இராணுவ வெற்றியானது மத்திய கிழக்கில் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தலுக்கு வாஷிங்டனை பொறுப்பாக தற்காலியமாக விட்டு விடும். முதல் சவால் ஈராக்கின் கலைப்பை தடுத்தலாக இருக்கும். துண்டுதுண்டாகும் ஈராக் ஈரானைத் ஆத்திரமூட்டலாம், துருக்கியை அச்சுறுத்தி மற்றும் ஒருவேளை பிராந்திய போருக்கு வழிவகுக்கும். ஈராக் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான தாக்குதல் " ஜனநாயகப் பூர்வமான விவாதம் மற்றும் முடிவெடுப்பை அறிவிக்கப்படல் போன்றவை கட்டாயம் முன்நிகழ்ந்திருக்கவேண்டும் " என்று டைம்ஸ் ஒருவிதப் புனிதப் பகட்டாரவாரத்துடன் முடித்தது." இருப்பினும், புஷ் நிர்வாகமானது இராணுவ நடவடிக்கைக்கான சம்பிரதாயப்பூர்வமான காங்கிரஸ் அனுமதியைக் கூட நாடும் என்பதற்கு அங்கு உத்தரவாதம் இல்லை. பிடன் மற்றும் லுகார் இருவரும், பாரசீகவளைகுடாவில் முதலாவது அமெரிக்க போருக்கு முன்னர் அவரது தந்தை 1990ல் செய்தது போல, புஷ் அவ்வாறு செய்வார் என அவர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினர். கலிபோர்னியாவின் டயான் பெய்ன்ஸ்டின் (Dianne Feinstein ) மற்றும் வெர்மோன்டின் (Vermont) பாட்ரிக் லெஹி(Patrick Leahy)ஆகிய செனெட் ஜனநாயகக் கட்சியினர் ஜூலை 30 அன்று, காங்கிரசின் ஒப்புதல் இன்றி நிர்வாகம் ஈராக்குடனான போரை முன்னெடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர். குடியரசுக்கட்சியாளர் அர்லென் ஸ்பெக்டர் (Arlen Specter) அதேவிதமான தீர்மானத்தை இரு வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தினார், ஆனால் குடியரசுக்கட்சி சிறுபான்மைத் தலைவர் டிரென்ட் லோட்(Trent Lott) வெள்ளைமாளிகை தனது சொந்த அதிகாரத்தின் கீழ் ஈராக் மீது போர் தொடுக்க முடியும் என்று கூறினார். அமெரிக்க அரசியற்சட்டம் போரை அறிவிப்பதற்கான
அதிகாரத்தை ஐயத்திற்கிடமற்ற வகையில் காங்கிரசுக்கே ஒதுக்கி
இருக்கிறது, ஆனால் இந்த சட்ட விதியானது அமெரிக்க ஜனாதிபதிகளால்,
பனிப்போர் காலத்திலும் அதற்குப் பிறகும் பெரும்பாலும் அலட்சியம்
செய்யப்பட்டு வந்திருக்கிறது. காங்கிரஸால் பிரகடனம் செய்யப்பட்ட
கடைசிப் போர் இரண்டாம் உலகப் போர் ஆகும். அமெரிக்க
அரசாங்கங்கள் முழுவதுமாய் காங்கிரசின் வாக்கெடுப்பு இன்றியோ
அல்லது உடனடியாய் போரைப் பிரகடனம் செய்ய அரைகுறைத் தீர்மானங்களுடனோ
கொரியா, வியட்நாம், பாரசீக வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தான்
ஆகியவற்றில் போர்களைத் தொடுத்திருக்கின்றன. மற்றும் டஜன்
கணக்கான ஏனைய நாடுகளில் சிறிய சண்டைகளுக்காக துருப்புக்களை
அனுப்பி இருக்கின்றன. |