World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா :இந்தியா

Indian workers speak about the dangers of war

இந்தியத் தொழிலாளர்கள் போர் அபாயங்கள் பற்றி பேசுகின்றனர்

By our correspondents
30 July 2002

Back to screen version

கடந்த ஆறுமாதங்களாக, இந்தியாவும் பாக்கிஸ்தானும் பீரங்கி, ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் பத்து லட்சம் துருப்புக்கள் சம்பந்தப்படும் ஆபத்தான இராணுவ மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளிலும், அரசாங்கங்களும் செய்தி ஊடகமும் அணு ஆயுத வல்லரசுகளால் எடுக்கப்பட்ட ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் நோக்கு கொண்ட பேரினவாத பிரச்சாரத்தின் அரணைத் தொடர்கின்றன.

கடந்த டிசம்பரில் புதுதில்லியில் இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தை ஆயுதம் தாங்கிய காஷ்மீரி பிரிவினைவாதிகள் தாக்கிய பிறகு விரைவான தயாரிப்பு இடம்பெற்றது. ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவ தளத்தின் மீது தாக்குதலை அடுத்து பதட்டங்கள் வெடித்தன. புதுதில்லியானது சர்ச்சைக்குரிய காஷ்மீரின் இந்திய ஆட்சியை எதிர்க்கும் பல்வேறு ஆயுதக் குழுக்களை "பயங்கரவாதிகள்" எனக் கண்டனம் செய்கிறது மற்றும் அவற்றை பாக்கிஸ்தான் தான் ஒழுங்கு செய்கின்றது எனக் குற்றம் சாட்டுகிறது. இஸ்லாமாபாத் தார்மீக ஆதரவை மட்டுமே வழங்குவதாகக் கூறியது, இஸ்லாமிய தீவிரவாத குடிப்படையை அது "விடுதலைப் போராளிகள்" எனக் கருதுகிறது.

இந்தியாவில், ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி (பி.ஜே.பி) யுடன் கூட்டு சேர்ந்த இந்து தீவிரவாத குழுக்கள் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டுவதற்கு இச்சூழ்நிலைமைகளைப் பற்றிக் கொண்டுள்ளன. குஜராத்தில் பி.ஜே.பி தலைமையிலான மாநில அரசாங்கம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் நூற்றுக்கண்க்கானோரைக் கொன்ற மற்றும் ஆயிரக்கணக்கானோரை வீடற்றவர்களாக ஆக்கிய முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களில் உடந்தையாக இருந்ததாய் பரவலாய் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியால் அண்மைய அமைச்சரவை துறைகள் மாற்றி அமைப்பு பல இந்து தீவிரவாதிகளை மேலுக்கு உயர்த்தி இருக்கிறது, மிகவும் குறிப்பிடத்தக்கவாறு உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, துணைப் பிரதமர் பதவியை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூட அரசாங்கத்தின் இராணுவ நிலைப்பாட்டை விமர்சித்திருக்கவில்லை. போர் உடனடியாக நிகழப்போகிறது எனத் தோன்றும் வகையில் "அத்தகைய முக்கியமான பிரச்சனைகளின் மீது நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் தொடர்ந்து நிற்போம்", என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேமாதத்தில் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியன "பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடல்" எனும் பெயரில் அரசாங்கத்தின் பின்னே அணிதிரண்டிருக்கின்றன. போர் அச்சுறுத்தலுக்கு எதிராக எந்தக் கட்சியும் எந்தவித கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்கு செய்திருக்கவில்லை.

எமது செய்தித் தொடர்பாளர்கள் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான, சென்னையில் உள்ள தொழிலாளர்களிடமும் மாணவர்களிடமும் பேசிய பொழுது, போருக்கான ஒருமித்த ஆதரவிற்கு அப்பால் விலகி இருந்ததைக் கண்டனர். எந்தவிதமான இராணுவ மோதலின் விளைவு பற்றியும் அணு ஆயுத மோதல்களின் அபாயங்கள் பற்றியும் தங்களின் அச்சங்களை அவர்கள் வெளியிட்டனர். கலந்துரையாடல்களின் போக்கில் பலர் குழப்பங்களை வெளிப்படுத்திய அதேவேளை, பல தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு வர்க்க எதிர்ப்பை வெளியிட்டார்கள்.பரந்த மக்கள் எதிர் கொள்ளும் அழுத்திக் கொண்டிருக்கும் சமூக நெருக்கடிகளின்பாற் கவனத்தைச் செலுத்தத் தவறியதிலிருந்து கவனத்தைத் திசை திருப்புதற்கு வாஜ்பாயி அரசாங்கம் போர் வெறிக் கூச்சலைப் பயன்படுத்துகிறது என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

நாம் வட சென்னையிலுள்ள வில்லிவாக்கம் பேருந்து பணிமனையில் உள்ள தொழிலாளர்களிடம் பேசினோம். அங்கு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் ஆக மொத்தம் 100 பேர்கள் பணியாற்றுகின்றனர். கலந்துரையாடல் செல்கையில், எம்மைச் சுற்றி சிறு கூட்டம் திரண்டது. ஒரு தொழிலாளி இச்சூழ்நிலைக்கு பாக்கிஸ்தான் காரணம் என குற்றம் சாட்டி, அரசாங்கத்தைப் பாதுகாக்க முயற்சித்தார். "பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளிடமிருந்து திரும்பத் திரும்பத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பொழுது, எவ்வளவு காலம்தான் பொறுமையாக இருக்க முடியும்?" அவர் கூக்குரல் எழுப்பினார். ஆனால் அவரது சகாக்களில் சிலர் மட்டுமே அவரை ஆதரித்தனர். ஏனையோர் சற்று உரத்த குரலில் போரை எதிர்த்தனர்.

"போர் இருக்கக் கூடாது", ஒரு நடத்துனர் கூறினார்." ஒரு அமைதியான தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும். போர் வருகிறபோது, பணவீக்கம் உயரும், இரு பக்கங்களிலும் இராணுவச் செலவுகள் கூட அதிகரிக்கும். போரின் விளைவுகள் சாதாரண மக்களுக்கு அழிவுகரமானதாக இருக்கும்." "ஏசி (குளிர் வசதி செய்யப்பட்ட) அறைகளில் வசதியாக அமர்ந்து கொண்டு ", "அடுத்த தேர்தல் வருகையில் அதிகம் வாக்குகளைப் பெறுவதற்கு" போரைத் தூண்டி விடுகின்றனர் என்று அரசியல் தலைவர்கள் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.

57 வயதான கட்டிடத் தொழிலாளி குசலவன், அதே கருத்தைப் பகிர்ந்து கொண்டார். "வகுப்புவாதத்தைப் பின்நின்று தூண்டி விடுபவர்கள் இதே அரசியல்வாதிகள் தான் மற்றும் இதே ஆட்கள்தான் மக்களின் வரிப்பணத்தில் வாழ்கிறார்கள். போர் வந்தால், நாங்கள் எங்கள் குழந்தைகளைக் கவனிக்க முடியாது மற்றும் பிச்சை எடுக்க வேண்டிதான் வரும்."

பேருந்து ஓட்டுநரான மரிய ஜோசப் , ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பிரச்சினைகள் சமூக நிலைமைகளின் விளைவு என்று கூறினார். " ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களைப் பொறுத்தவரை அங்கு பாதுகாப்பு இல்லை. இளைஞர்களைப் பொறுத்தவரைக்கும் அங்கு வேலைகள் இல்லை. பெரும்பாலும் 20 லிருந்து 30க்கு இடையிலான வயதை உடையவர்கள் தீவிரவாதத்தின் பக்கம் திரும்புகிறார்கள்" என்று அவர் விவரித்தார்.

தனது மகன் கலைப் புலத்தில் பட்டம் பெற்றிருக்கிறார் ஆனால் வேலை கிடைக்காதிருக்கிறார் என்றார் இத்தகைய சூழ்நிலைகள் இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளுகிறது." அவன் அவனை ஒத்த மனநிலை உடைய நண்பர்களுடன் சேர்ந்து வீடுகளை உடைக்கலாம்" என அவர் குறிப்பிட்டார், மேலும் குறிப்பிடுகையில்: "பிறப்பிலேயே எவரும் தீவிரவாதி அல்லர் . ஒருவனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் மற்றும் இருக்க வீடும் வழங்கப்பட்டால் ஏன் அவன் தீவிரவாதி ஆகிறான்?" என்றார்.

கடந்த நவம்பரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அரசாங்கம் அவர்களைக் கைதுசெய்து அவர்களை"தீவிரவாதிகள்" என முத்திரை குத்தியது என்று அவர் விளக்கினார். தொழிலாளர்கள் மிகக் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகக் கூறினார். அவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக போனஸ் பெறவில்லை அல்லது எந்தவிதமான சம்பள உயர்வையும் பெறவில்லை என்றார்.

" வறுமையை ஒழிக்க பணத்தை செலவு செய்ய வேண்டும், போருக்கு அல்ல"

குடிசைமாற்று வாரிய வேலைத் திட்டத்தின் பகுதியாக மாநில அரசாங்கத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, அம்பேத்கார் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்களில் பலருடன் நாம் பேசினோம். அவர்களுள் பலர் சிறிய , மிக வசதி அற்ற, ஒற்றைப் படுக்கை அறை கொண்ட அடுக்ககங்களில் வாழ்கின்றனர் - பெரும்பாலானோர் கட்டிடத் தொழில் துறையில் அல்லது தொழிற்சாலைகளில் தற்காலிக வேலைகளை செய்து வருகின்றனர். சிலர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார்கள் , பலர் வேலை இன்றியும் இருக்கிறார்கள். அவர்களில் வெகு சிலரே போருக்கான நாட்டத்தை ஆதரித்தனர்.

1983 இனக் கலவரங்களில் சிறிலங்காவிலிருந்து அகதியாக இந்தியா வந்த தையற் தொழிலாளி, எம்.சுப்பிரமணி கூறினார்: " நாள்தோறும், பணவீக்கம் உயர்ந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய் இப்பொழுது லிட்டர் 18 ரூபாய்களிலிருந்து 20 ரூபாய்கள் வரை விற்கிறது, அரிசி கிலோ 20 ரூபாய்கள் விற்கிறது. ஏழைமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் கோடிக் கணக்கான ரூபாய்கள் அணு குண்டுகளுக்கு செலவிடப்படுகின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றது. " போர் வெடித்தால் என்ன நடக்கும் , என அவர் கேட்டார்.

தொழிற்சங்கத்தின் உள்ளூர் தலைவர், டி. நாகராஜன் கூறினார்: "(அங்கு ) போர் தேவை இல்லை. அணு குண்டு போடப்பட்டால், நீங்கள் புல் பூண்டுகளைக் கூட விளைவிக்க முடியாது. விவசாயம் பாதிக்கப்படும். பொக்ரானில் முதலாவது அணுகுண்டை இந்தியா சோதனை செய்தது, பின்னர் பாக்கிஸ்தான் அதையே செய்தது. நீங்கள் அந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவிட முடியும். ஒரிசாவில் உணவின்றி வாடும் மக்கள் காய்ந்த மாங்கொட்டைகளைத் தின்கின்றனர். பட்டினியால் அங்கு 48 பேர்கள் இறந்தனர். நீங்கள் இராணுவத்துக்கு பணம் செலவழிக்கக் கூடாது, மாறாக வறுமையை ஒழிக்க செலவு செய்ய வேண்டும்."

குஜராத்தில் முஸ்லிம் விரோத கிளர்ச்சியைக் குறித்து அவர் குறிப்பிட்டதாவது:" நாம் போருக்கும் சரி வகுப்புவாதத்திற்கும் சரி ஆதரவு தரக்கூடாது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒற்றுமை நிலவுவது நாட்டுக்கு நல்லது - நாம் அனைவரும் உற்பத்தியில் ஒன்றாகவே சேர்ந்து ஈடுபடுகிறோம்.அவர்கள் கட்டாயம் பேச வேண்டும் மற்றும் இந்தப் போரைத் தவிர்க்க வேண்டும்."

சென்னையில் அரசு மானிய உதவி பெறும் பழமையான கல்லூரிகளுள் ஒன்றான, பச்சையப்பன் கல்லூரியில் உள்ள மாணவர்கள் மத்தியில் கருத்து வெறுபட்டு இருந்தது.மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய மாணவர் படையின் பகுதியாக காஷ்மீருக்கு சென்றிருந்த ,ஒரு வேதியியல் மாணவர் அரசாங்கத்தை ஆதரித்தார். இருப்பினும், ஏனையோர், எமது கலந்துரையாடலின் போது தங்களின் கருத்துக்களை மாற்றிக் கொண்டனர் மற்றும் சிலர் தங்களின் எதிர்ப்பை உறுதியாகத் தெரிவித்தனர். சதாசிவம் உமாபதி எனும் மாணவர் போர் வெடித்தால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் எனக் கவலைப்பட்டார். அதன் விளைவுகள் " ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நிகழ்ந்ததைவிட மோசமானதாக இருக்கும் ஆகையால் போர் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்" என்றார்.

தனது கலைப் புலத்தில் முதுநிலைப் படிப்பைப் படித்துக் கொண்டிருக்கும் , பி.மணி , போரிடப் போவதும் கொல்லப்படப் போவதும் வாஜ்பாயி, அத்வானி மற்றும் (பாதுகாப்பு அமைச்சர்) ஜோர்ஜ் பெர்ணான்டஸின் மகன்களோ அல்லது மகள்களோ இருக்க மாட்டார்கள் , மாறாக சாதாரண மக்களின் பிள்ளைகளாக இருப்பார்கள், என்றார். " அவர்கள் தங்களின் போர் வெறியைத் தூண்டும் பேச்சுக்களால் இளைஞர்களைத் தூண்டுவார்கள். போரின் சுமையைத் தாங்கும்படி சாதாரண மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள் - பேருந்துக் கட்டணம் முதல் கல்லூரிக் கட்டணம் வரையிலான ஒவ்வொன்றும் அதிகரிக்கும்.

அரசாங்கத்தாலும் மற்றும் செய்தி ஊடகத்திலும் பலர் ஒன்று சேர்ந்து திட்டமிட்ட பிரச்சாரம் இருப்பினும், நேர்காணலானது போரின் பரந்த அளவிலான விளைவு பற்றிய கவலைகளை மற்றும் சிலவற்றில் ஒரேயடியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. அங்கு கணிசமான அளவு குழப்பம் இருக்கிறது, சோசலிஸ்டுகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள் உள்பட, அனைத்து அரசியல் கட்சிகளதும் கருத்தொற்றுமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது வியப்பைத் தரவில்லை. இருப்பினும், தொழிலாளர்கள் அரசாங்கத்தைப் பற்றி ஆழமாய் சந்தேகம் கொண்டுள்ளனர் மற்றும் எந்த விதமான இராணுவ மோதலின் பாரத்தையும் தாங்களே சுமக்க நேரும் , செல்வர்கள் அல்லர் என்று புரிந்துள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved