WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
Socialist Equality Party campaign frees two Tamil detainees in Sri Lanka
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் இலங்கையில் இரண்டு தமிழ் கைதிகளை விடுதலை
செய்தது
By Vilani Peiris
19 March 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA)
கீழ் விசாரணையின்றி மூன்று வருடங்களும் ஏழு மாதங்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் கைதிகளான
பொன்னையா சரவணகுமாரும் அருணாசலம் யோகேஸ்வரனும் இறுதியாக கடந்த மார்ச் 7ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் 1998ல் நாட்டின் மத்திய மலையக தோட்டப் பிரதேசமான அட்டனில் வைத்து போலிக் குற்றச்சாட்டுக்களின்
பேரில் கைது செய்யப்பட்ட ஆறு இளம் தமிழர்களை விடுதலை செய்து கொள்ளும் சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்ட
பிரச்சாரத்தை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர். ஏனைய நால்வரும் கடந்த ஜூலை மாதம் விடுதலையானார்கள்.
கண்டி உயர் நீதிமன்றம், சரவணகுமாருக்கும் யோகேஸ்வரனுக்கும் எதிரான
குற்றச்சாட்டுக்களை அரச திணைக்களம் (State Council)
விலக்கிக் கொண்டதை அடுத்து பெப்பிரவரி 21ம் திகதி அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. சோ.ச.க.வின்
வழக்கறிஞர் இந்த இருவருக்கும் எதிரான ஒரே ஆதாரம் பலாத்காரமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள்
மாத்திரமே என்பதை சுட்டிக்காட்டினார். அவர்களுடைய வைத்திய அறிக்கைகள் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை
அம்பலப்படுத்தியிருந்தது. பொதுவான சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சிறைஅதிகாரிகளின் இனவாத அடிப்படையிலான
நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் விடுதலையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் கடந்தன.
பொலிசார், இந்த ஆறு தமிழர்களையும் 1998 ஜூன் மாதம் அட்டனுக்கு அருகாமையில்
உள்ள ஷெனன் தேயிலைத் தொழிற்சாலை மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் (LTTE) தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும்
குற்றம் சாட்டி கைது செய்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படையினருக்கு "பயங்கரவாத"
சந்தேக நபர்களை மூன்று மாதங்களுக்கு நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருக்க முடியும். இக் காலப்பகுதியில்
அட்டன் அறுவரும் போலி ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதன் பேரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
பொலிசார் இந்த அறுவரையும் குற்றச்சாட்டுக்கள் அல்லது விசாரணைகளின்றி ஒரு வருடம்
தடுத்து வைத்திருந்த பின்னர், 1999 ஜூலை மாதம் ஆரம்ப குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொண்டதோடு புதிதாக
திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கண்டி உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தனர். அவர்கள் அட்டன் மற்றும் தலவாக்கலை
பிரதேசங்களில் பல மின்மாற்றிகளுக்கும் எண்ணெய்த் தாங்கிகளுக்கும் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் விடுதலைப் புலிகளுடன்
தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த அறுவருக்கும் எதிரான ஒரே ஆதாரம், அவர்களால்
எழுதவோ வாசிக்கவோ முடியாத சிங்கள மொழியில் தட்டச்சு செய்யப்பட்டு கையொப்பம் பெறப்பட்ட "ஒப்புதல்
வாக்குமூலங்கள்" மாத்திரமேயாகும்.
இந்த வழக்கு, குற்றம் சாட்டியவர்களால் அல்லது நீதிபதியின் ஆணையின் பேரில்
எட்டுமுறை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் கடைசியாக 2000 ஆண்டின் கடைப்பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது. மீண்டும் 2001 ஜனவரியில் இந்த வழக்கு 2002 பெப்பிரவரி மாதம் வரை மேலும் ஒரு வருடத்துக்கு
ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் சோ.ச.க. முன்னெடுத்த பிரச்சாரத்தின் விளைவாக வளர்ச்சி கண்ட கண்டனங்களின்
பெறுபேறாக சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைத் திகதியை கடந்த வருடம் ஜூலை மாதத்துக்கு முன்தள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது.
ஏனைய நான்கு கைதிகளான சுப்பு உதயகுமார், பிச்சமுத்து சந்திரன், சோலமலை
லோகநாதன், சாமிமுத்து பெனடிக்ட் ஆகியோர், அவர்களின் சட்ட வைத்திய அறிக்கை அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதை
தெளிவுபடுத்தியதை அடுத்து ஜூலை 3ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறெனினும் சட்டமா அதிபர்
மனம்போன போக்கில் சரவணகுமாரதும் யோகேஸ்வரனதும் வைத்திய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு
அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய மறுத்தார். சட்டமா அதிபர் திணைக்களம் தமது வைத்திய அறிக்கையை
வாசிக்கும் பொறுப்பை முன்னெடுத்துச் சென்ற அதேவேளை, இந்த இருவரும் மேலும் எட்டு மாதங்கள் சிறையில் வாடினர்.
அட்டன் அறுவரும் விடுதலை செய்யப்பட்டமையானது அவர்களின் வழக்கை பரந்தளவில்
அம்பலப்படுத்திய சோ.ச.க.வுக்கும் உலக சோசலிச வலைத் தளத்துக்கும்
(World Socialist Web Site-WSWS)
ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இலங்கையிலிருந்தும் மற்றும் அமெரிக்கா பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ரோமானியா
போன்ற நாடுகளில் இருந்தும் தனிப்பட்டவர்களும் அமைப்புக்களும் இந்த வெளிப்படையான அடிப்படை ஜனநாயக உரிமை
மீறலை எதிர்த்தும் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலையைக் கோரியும் கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் காரியாலயத்துக்கு
கடிதங்கள் எழுதியிருந்தனர். இவற்றில் இலங்கையில் பிரசித்தி பெற்றத் திரைப்படத் தயாரிப்பாளரான தர்மசிரி பண்டாரநாயக்க,
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்ஜ் குரே, மத்திய வங்கி ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர்
சங்கம் ஆகியோரது கடிதங்களும் அடங்கும்.
நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக தமிழ் சிறுபான்மையினரை தொடர்ச்சியான
பலாத்காரத்துக்கும் தொந்தரவுக்கும் உள்ளாக்குவதன் ஒரு பாகமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் "விடுதலைப் புலி
சந்தேக நபர்கள்" என்ற பொதுவான அற்ப காரணங்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ
அறிக்கைகளின்படி 2000 ஆண்டில் மாத்திரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும்
13,514 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதே காலப்பகுதியில் கிட்டத்தட்ட 2,500 பேர் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 1,600 வரையிலான தமிழர்கள் இன்னமும் களுத்துறை, பூசா, கொழும்பு,
போகம்பர, நீர்கொழும்பு, பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புச் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் தீர்ப்பு வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுளள்னர். சிலர் ஏழு அல்லது எட்டு வருடங்களாகவும்
வைக்கப்பட்டுள்ளனர். சில அரசியல் கைதிகள், இனவாத சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து கொண்ட
சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் சிறைச்சாலை காவல் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கு
இலக்கானார்கள்.
தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் எந்த ஒரு கட்சியோ
அல்லது அமைப்போ இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அல்லது இந்தக் கொடூரமான தடுத்து வைப்புகளுக்கு
எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது கிடையாது. அவ்வாறான ஒரு நடவடிக்கை, யுத்தத்தை தொடர்வதற்கும்
தமிழர்களுக்கு எதிரான முறையான பாரபட்சங்களுக்கும் பொறுப்பாளிகளான ஐக்கிய தேசியக் கட்சி
(UNP) மற்றும் பொதுஜன முன்னணி
(PA) ஆகிய இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளுடனான
கொடுக்கல் வாங்கல்களுக்கு பாதகமாக அமையும்.
தற்போதைய யூ.என்.பி. அரசாங்கம் யுத்தத்துக்கு ஒரு முடிவுகாணும் பேச்சுவார்த்தைக்கான
முன்னோடி நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மிகவும் அண்மையில் ஒரு நிரந்தர யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக்
கைச்சாத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) அனைத்து தமிழ்
கட்சிகளும் அவ்வாறே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC)
மலையக மக்கள் முன்னணி (UPF) போன்ற பெருந்தோட்டத்
தொழிலாளர்களின் அரசியல் ஸ்தாபனங்களும் வரவேற்றுள்ளன. யூ.என்.பி. நிர்வாகத்துக்கு ஆதரவளிக்கும் இந்தக்
கட்சிகளும் சரி அல்லது விடுதலைப் புலிகளும் சரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து
செய்வதையும் மற்றும் இலங்கை சிறைச்சாலைகளில் வாழும் நூற்றுக் கணக்கான தமிழர்களை விடுதலை செய்வதையும் உள்ளடக்க
வேண்டும் என்பதை சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் கீழான மேலதிக கைதுகளை
நிறுத்துவதாக மாத்திரமே ஒப்புக்கொண்டுள்ளது.
கைதிகளின் உண்ணாவிரதத்தை அடுத்து மார்ச் 7ம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்கு
விஜயம் செய்த அகதிகள், புணர்வாழ்வு அமைச்சர் ஜயலத் ஜயவர்தன, சட்ட மா அதிபர் குற்றச்சாட்டுக்களை அற்ற
அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்ய உடன்பட்டுள்ளதாக தெரிவித்தார். உண்ணா விரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட
போதிலும், பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட குழு, களுத்துறை, பூசா, சிறைச்சாலைகளில் உள்ள
தமிழ் கைதிகளை அவர்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு மட்டுமே தீர்மானித்தது.
இந்த நடவடிக்கை கைதிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக போராட்டத்தை தகர்ப்பதே பிரதான நோக்கமாக
கொண்டிருந்தது.
விடுதலை செய்யப்பட்ட கைதிகள் சோ.ச.க. வுக்கு நன்றி தெரிவித்தனர்
விடுதலை செய்யப்பட்ட கைதிகளும் அவர்களின் பெற்றோர்களும் சோசலிச சமத்துவக்
கட்சி அவர்கள் சார்பாக முன்னெடுத்த பிரச்சாரத்துக்கு தங்களின் பாராட்டுக்களை வெளிப்படுத்தினர். சரவணகுமாரும்
யோகேஸ்வரனும் பத்திரிகையாளர்களுடன் பேசுகையில்: "எங்களுடைய விடுதலைக்காகப் போராடிய அரசியல் கட்சி
சோ.ச.க.வாகும். நாங்கள் விசேடமாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு நன்றி தெறிவிக்கின்றோம்.
அது இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அதேவேளை கைதிகள் முகம்
கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை முழுமையாக அம்பலப்படுத்தியது."
இந்த இரு கைதிகளும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும்
தங்களது விசாரணைகளையிட்டு தலையீடு செய்யுமாறு கோரி பலதடவைகள் கடிதம் எழுதியிருந்த போதிலும் நடைமுறையில்
எந்த பயனும் கிடைக்கவில்லை. சரவணகுமார் ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன் சம்பந்தமாக வெறுப்படைந்திருந்ததோடு
"அவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அரசாங்க அமைச்சரான சந்திரசேகரன்
அண்மையில் களுத்துறை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார். கைதிகளின் விடுதலைக்காக அழைப்புவிடுக்கும் அதேவேளை,
கைதிகளால் திட்டமிடப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோருவதே அவரது முக்கிய நோக்கமாகும்.
அவர் இனவாதிகள் இதனைப் பயன்படுத்தக் கூடும் எனவும் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க
முடியும் எனவும் தெரிவித்தார்."
சரவணகுமாரும் யோகேஸ்வரனும் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF),
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ACTC), தமிழீழ மக்கள்
விடுதலை கழகம் (PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)
ஆகியவை உட்பட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF)
ஒரு குழுவையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA)
அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக குறிப்பிட்டார்.
"சில கைதிகள் ஏழு அல்லது எட்டு வருடங்களாக எந்த விசாரணையும் இன்றி தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்த இயக்கங்கள் எதையுமே செய்திருக்கவில்லை. ரெலோ தலைவர் செல்வம்
அடைக்கலநாதனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினரான தங்கவடிவேலும் எங்களை பார்வையிட்டனர். ஆனால்
அவர்கள் தங்களின் சொந்த எதிர்காலத்தை அபிவிருத்தி செய்துகொள்வதற்காகவே அங்கு வந்திருந்தனர்."கைதிகள் ஏனைய
அரசியல் கைதிகள் சார்பாகவும் சோ.ச.க. தமது பிரச்சாரத்தை இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டும் என கைதிகள்
கோரினார்கள்.
கடந்த வாரம் விசாரணை செய்யப்பட்ட உதயகுமார் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
தலைவர் விநாயகமூர்த்தியின் நடவடிக்கைகளையிட்டு வெறுப்படைந்திருந்தார்." அவர் நாட்டின் முன்னணி சட்டத்தரணிகளில்
ஒருவராகவும் ஒரு தமிழ் கட்சியின் தலைவராகவும் இருக்கும் அதேவேளை பல தமிழ் இளைஞர்களுக்காக வாதாடியும்
உள்ளார். ஆனால் அவர் எப்பொழுதும் குறைந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்காக இளைஞர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு
நெருக்கி வந்துள்ளார். இதன் மூலம் அவர் அதிகாரிகளின் கைது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக உதவி செய்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணித் தலைவர்கள் தமது
சொந்த செயலின்மையை மூடி மறைப்பதற்காக சோ.ச.க.வின் பிரச்சாரத்தை சிறுமைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதையிட்டு
ஒரு தோட்டத் தொழிலாளியும் யோகேஸ்வரனின் தந்தையுமான அருனாசலம் அவர்களை விமர்சித்தார். "எனது மகனும்
சரவணகுமாரும் விடுதலை செய்யப்பட்டது அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்டுக் கொண்ட புரிந்துணர்வு
உடன்படிக்கையின் ஒரு பெறுபேறு என சிலர் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் ஏன் ஏனைய கைதிகளை விடுதலை செய்யவில்லை?
எங்களது பிள்ளைகளின் விடுதலையைக் கோரி சோ.ச.க, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS)
ஊடாக முன்னெடுத்த பிரச்சாரத்தின் காரணமாகவே இந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அந்தப் பிரச்சாரம்
அவர்களுக்கு எதிரான போலி வழக்கையும் அந்த ஆறு பேர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த சித்திரவதைகளையும் அம்பலப்படுத்தியது."
"நான் ம.ம.மு. தலைவர் சந்திரசேகரனை எனது மக்களின் கைது தொடர்பாக பல
தடவை நாடினேன். அவர் எதுவும் செய்யவில்லை. அவர் இதுவரைக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கூட எதையும்
செய்ததில்லை. இப்பொழுது அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ளதோடு விடுதலைப் புலிகளின் தலைவரை இலங்கை
வாழ் தமிழர்களின் ஏக பிரதிநிதி என புகழ்ந்துரைத்தார். அவர் அவ்வாறு பேசியது மக்களுக்கு எதுவும்
பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல மாறாக அவர்களின் சொந்த தேவைகளுக்காகவாகும். நான் எனது மகனை சோ.ச.க.வில்
இணையுமாறு தூண்டும் அதே வேளை இந்தக் கட்சியை பலப்படுத்துவதற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்."
கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்ட சந்திரன் சோ.ச.க.வின் பிரச்சாரம் யூ.என்.பி.யைப்
பற்றியும் மற்றும் ஏனைய அரசாங்கங்களைப் பற்றியும் அத்தோடு இ.தொ.கா, ம.ம.மு. அமைப்புக்களின் பாத்திரங்களைப்
பற்றியும் தனக்கு படிப்பினைகளைப் பெற்றுத் தந்ததாக தெரிவித்தார்: "உண்மையில் அந்த நாட்களில் யூ.என்.பி.க்கும்
பொதுஜன முன்னணிக்கு இடையிலும் இ.தொ.கா. ம.ம.மு. வுக்கு இடையிலும் வித்தியாசம் இருப்பதாக நினைத்துக்
கொண்டிருந்தோம். ஆனால் நான் இப்போது அப்படி நினைக்கவில்லை. எங்களுடைய இந்த விடுதலைக்கான பிரச்சாரம்
ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்கு எங்களுக்கு படிப்பினைகளைப் பெற்றுத் தந்துள்ளது. நான் சோ.ச.க.வை கட்டியெழுப்ப
வேண்டியது எனது கடமை என உணர்கின்றேன்" எனக் குறிப்பிட்டார்.
சோ.ச.க.வின் பிரச்சாரம் அட்டன் அறுவரை விடுதலை செய்வதில் வெற்றி கண்ட
அதேவேளை நூற்றுக் கணக்கான அரசியல் கைதிகள் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சோ.ச.க. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் மற்றும் ஏனைய அவசரகால சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள
அரசியல் கைதிகளை உடனடியாகவும் நிபந்தனைகளின்றியும் விடுதலை செய்துகொள்ள அழைப்பு விடுக்கின்றது.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 கைதிகள் தங்கள் சார்பாக
தலையீடு செய்யுமாறு கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதம் மூலம் கோரியுள்ளனர். சோ.ச.க. அவர்களுக்கான சட்ட
ஆலோசனைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள அதே வேளை அவர்களின் வழக்குகள் தொடர்பான
விபரங்களை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடும். நாம் இலங்கையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்
ஜனநாயக விரோத அவசர கால சட்டத்தை தூக்கி வீசவும் தற்போது இடம்பெற்றுவரும் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு
இலங்கையிலும் அனைத்துலக ரீதியிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் புத்தி ஜீவிகளுக்கும் அழைப்பு
விடுக்கின்றோம்.
|