World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காArab-Americans and Muslims attacked in the US ஐக்கிய அமெரிக்க அரசுகளில் அரபு-அமெரிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் By Jerry White நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அரசாங்கத்தாலும் செய்தி ஊடகங்களாலும் தட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இனவெறிப் பதட்டத்தின் மத்தியில் அரபு- அமெரிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எண்ணுக்கணக்கான வன்முறை சம்பவங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அராபிய புலம் பெயர்ந்தோர் மற்றும் அவர்களது ஜனசமூக நிலையங்கள், மசூதிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன, பெட்ரோல் நிரப்பிய புட்டிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் செங்கற்களால் தாக்கப்பட்டிருக்கின்றன. கட்டிடங்களில் தகாத மொழிகள் எழுதப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு பல்வேறு வெடிகுண்டு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. லோங் ஐலாண்ட் கார் நிறுத்துமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் 75 வயது நிரம்பப் பெற்ற குடிகார கிழவர் ஒருவர், "நீங்கள் எனது நாட்டை அழிக்கிறீர்கள்" எனக் கத்திக் கொண்டே, பாக்கிஸ்தானியப் பெண்ணை காரால் இடித்துத் தள்ள முயற்சித்தார். செப்டம்பர் 11க்குப் பின்னர் அரபு- அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இவ்வகையான இழிவுபடுத்தும் சம்பவங்கள் 200க்கும் மேற்பட்டவை பற்றி, அரபு வேற்றுமை எதிர்ப்புக் குழு (ADC) மற்றும் அரபு அமெரிக்க நிலையம் (AAI) ஆகியன அறிவித்துள்ளன. அமெரிக்க- இஸ்லாமிய உறவுகள் சபையின் இப்ராஹிம் ஹூப்பர் என்பவர், "இந்த நாட்டில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை சூழ்நிலை மிகப் பதட்டமாக உள்ளது" என்றார். வன்முறைக்கு அஞ்சி சில குடும்பங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் வைத்துள்ளதுடன் பல மசூதிகளும் இஸ்லாமிய கல்வி நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. சிக்காகோ புறநகர்ப் பகுதியான பிரிட்ஜீவியூ (Bridgeview) வில் புதன் கிழமை அன்று, வட்டார மசூதி ஒன்றை நோக்கி "USA USA" என்று கத்திக் கொண்டு வந்த 300 பேர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். அருகில் பாலோ கைட்ஸில் ஒரு எரி வாயு நிலைய ஊழியர் ஒருவரை அராபியர் என நினைத்துக் கொண்டு ஒருவர் அவரைத் தாக்குவதற்கு இரண்டடி நீளமுள்ள வெட்டுக் கத்தியைப் பயன்படுத்தினார். நகரின் குற்றவெறுப்பு பிரிவால் விசாரிக்கப்பட்டு வரும் அரை டஜன் சம்பவங்களுள், சிக்காகோவில் அரபு-அமெரிக்க சமூக மையம் மீது யாரோ ஒருவர் பெட்ரோல் நிரப்பிய புட்டியை வெடிகுண்டாக வீசிய சம்பவமும் ஒன்றாகும். டல்லாஸ் புறநகர் முஸ்லிம் மையத்தில் ஆறு ரவைகள் சுடப்பட்டன, நாட்டின் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் வர்ஜீனியாவில் அழிவுகாரர்கள் கெட்ட வார்த்தைகளை கிறுக்கி எழுதிவைத்து மசூதியை இழிவுபடுத்தினர். வடக்கு இண்டியானாவில் துப்பாக்கி ஏந்தியவர்கள், அராபியர் ஒருவருக்குச் சொந்தமான எரிவாயு நிலையத்தை நோக்கிச் சுட்டனர் மற்றும் ஜோர்டானியர் ஒருவரின் சிற்றுண்டிச்சாலையை சேதப்படுத்தினர். சான்பிரான்சிஸ்கோவில் யாரோ ஒருவர் இஸ்லாமிய மையத்தின் வாசற்படி அருகில் பன்றி இரத்தத்தால் நிரப்பப்பட்ட பை ஒன்றை விட்டுச் சென்றார். அலபாமாவில் பாரம்பரிய இஸ்லாமிய உடையில் சென்ற பெண்கள் காறி உமிழப்பட்டு வசைபாடப்பட்டனர். அரபு- அமெரிக்கர்கள் கூட்டமாக செறிந்து வாழும் டெட்ராயிட் பகுதியில் வேய்ன் மாநில பல்கலைக் கழகத்தில் உள்ள முஸ்லிம் மாணவர் மன்றத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன மற்றும் பல வர்த்தக நிலையங்களும் பாடசாலைகளும் வெடி குண்டு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின. அரபு எதிர்ப்பு தாக்குதல்கள் அமெரிக்காவுடன் மட்டும் மட்டுப்படுத்தப் பட்டிருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் முஸ்லிம் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று கற்கள் மற்றும் கண்ணாடிப் புட்டிகள் வீசித் தாக்கப்பட்டது. அராபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்களில் அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லை எனக் காட்டும் முயற்சியாக, ஜனாதிபதி புஷ்ஷூம் ஏனைய அதிகாரிகளும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் பகிரங்க அறிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் இந்த மறுப்புக்கள் வெற்று ஒலியாகப் போய்விட்டன. அரசாங்க அதிகாரிகளும் செய்தி ஊடக நிர்வாகிகளும், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான தேசிய வெறியை உருவாக்குதற்கான முயற்சிகள் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் அரபு மற்றும் முஸ்லிம் மக்கட்தொகையினர் மீதான தாக்குதல்களை உற்பத்தி செய்துள்ளன என்பதை நன்கு அறிவார்கள். உலக வர்த்தக மையத்தின் மீதான 1993 குண்டு வெடிப்புக்குப் பின்னர், அதேபோல 1995 ஒக்லகாமா நகர குண்டு வெடிப்புக்குப் பின்னர், அதேபோன்ற நூற்றுக் கணக்கான தாக்குதல்கள் நடைபெற்ற பொழுது நிலைமை இதுபோல்தான் இருந்தது. மேலும் அரபு -அமெரிக்கர்களும் ஏனைய புலம் பெயர்ந்தோரும், வெறுமனே அவர்களின் தோற்றம் மற்றும் தேசிய இனம் இவற்றின் காரணமாக, மத்திய மற்றும் உள்ளூர் போலீசாரால் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்காகத் தனிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். எந்த ஆதாரமும் இன்றி, கைது செய்யப்பட்டோர் உலக வர்த்தக மையத்தின் மீதும் பென்டகன் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புள்ளவர்கள் எனக் எண்ணுக் கணக்கான விஷயங்களில் தேசிய செய்தி ஊடகங்கள் கூறின. வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி வலைப்பின்னல்கள், FBI உளவு நிறுவனம் நியூயோர்க்கின் ஜோன் எப். கெனடி மற்றும் லாகுவார்டியா விமான நிலையங்களில் டஜனுக்கும் மேலான தனி நபர்களை கைது செய்திருந்ததாக அச்சமூட்டும் அறிக்கைகளை ஒளிபரப்பின. அந்தக் கைதுகள், செவ்வாய்க்கிழமை பென்டகனை சேதப்படுத்திய மற்றும் உலக வர்த்தக மையத்தினை அழித்தமை போன்ற புதிய தற்கொலை விமானக் கடத்தலை முன்கூட்டி முறியடித்ததாக அவை கூறின. தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் மூச்சுவிடாமல், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மத்திய கிழக்கை பாரம்பர்யமாய்க் கொண்டவர்கள், அவர்கள் கத்திகளை, போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தார்கள் மற்றும் செவ்வாய் விமானக் கடத்தல்களில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிலரால் பங்கேற்கப்பட்ட புளோரிடா விமானப் பயிற்சிப் பாடசாலையிலிருந்து பெற்ற சான்றிதழ்களையும் வைத்திருந்ததாகக் கூறினர். கைது செய்யப்பட்ட சிலர் போலீசாரால் வழி நடத்திக் கொண்டு செல்லப்பட்ட காட்சி ஒளிபரப்பப்பட்டது. இக் கைதுகள், பயங்கரவாதத்தின் மீதாக புதிதாகத் தொடுக்கப்பட்ட யுத்தத்தில் வெற்றி என்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் முழுவதும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வெற்றியுற நிரூபிப்பதாயும் வாழ்த்தி வரவேற்கப்பட்டன. இருப்பினும், வெள்ளிக்கிழமை காலை அளவில், FBI பேச்சாளர் அச்செய்தி அறிக்கைகள் பொய்யானவை என்றும் கைது செய்யப்பட்ட எவரும் ஆயுதங்களையோ போலி அடையாள அட்டைகளையோ வைத்திருக்கவில்லை என்றும் அறிவித்த பின்னர், தொலைக்காட்சி வலைப்பின்னல்கள் முந்தைய நாள் மாலை கூறிய தங்களின் அறிக்கைகள் தொடர்பாக மறுப்புக் கூறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்தகால அல்லது எதிர்கால பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவர்களை எந்தவிதத்திலும் இணைக்கும் ஆதாரங்கள் காணப்படவில்லை, மற்றும் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டிருந்தனர், அவரும் கூட அதோடு சம்பந்தமில்லாத விஷயத்திற்காக வைக்கப்பட்டிருந்தார். மத்திய அதிகாரி "பயங்கரவாதத்தின் இரண்டாவது அலை அங்கு இல்லை" என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், இக்கைதுகள் அதிகாரிகளின் அளவுக்கு அதிகமான நடவடிக்கையின் விளைவு என கூறினர். கைதுகளை நேரில் பார்த்தோரின் கூற்றுப்படி, கெனடி விமான நிலையத்தில் போலீசார் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடுதிடுவெனப் புகுந்து, அந்நியர் போல் தோற்றமளிக்கும் பயணிகளை விசாரிப்பதற்காகத் தனிமைப்படுத்தினர். "கறுப்புத் தோலுடைய எவரும் அல்லது ஒரு வேறுபட்ட மொழிநடையில் பேசும் எவரும் ஒரு புறமாகக் கொண்டு செல்லப்பட்டு சோதனை இடப்பட்டார்கள்" எனவும், மற்றும் அவர்கள் எந்த ஆண்களின் முகத்தில் அளவுக்கு அதிமாய் மயிர் வளர்த்திருந்தால் அவரிடம் சென்றனர்" என சியாட்டிலைச் சேர்ந்த 43 வயதான மைக் கிளாஸ் எனும் பயணி தெரிவித்தார். இந்தவார தொடக்கத்தில் செய்தி ஊடகங்கள் போஸ்டனிலிருந்து ரோடி ஐலாண்ட் மாகாணத்திற்கு செல்லும் அம்ட்ராக் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த, விமானக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாய் இருப்பவர் என சந்தேகிக்கப்படுபவர் கைது செய்யப்பட்டதாக பரந்த அளவில் செய்தி பரப்பின. அந்த மனிதன் பச்சைத் தலைப்பாகையுடன் பிரத்தியேகமாக தெரிந்ததால் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவர் இந்திய சீக்கியர் ஆக இருந்ததால் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவங்கள், அரபுகள் மற்றும் ஏனைய புலம் பெயர்ந்தோருக்கு எதிரான வேட்டையாடும் சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதில் மற்றும் குடியுரிமை சுதந்திரங்களை வெட்டிக் குறுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதில், செய்தி ஊடகங்களுக்கு உள்ள குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் பொறுப்பைக் கோடிட்டுக் காட்டுகிறது. நியூயோர்க் விமான நிலைய நிகழ்ச்சியின் அப்பட்டமான பொய்ச் செய்தி அறிவிப்பு, குறிப்பாக, கடந்த செவ்வாய்க்குப் பின்னர் இருந்து காட்டப்பட்ட செய்தி ஊடக சேகரிப்பு அனைத்தையும் பண்பிட்டுக்காட்டும் துல்லியம் மற்றும் சகலவிதமான பத்திரிகை தராதர உண்மையையும் அவமதிப்புச் செய்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. செய்தி ஊடகங்களானது உண்மைகளைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் அங்கங்களாக அரசாங்கத்தின் கொள்கையை பிரச்சார நிலைப்பாட்டிலிருந்து அவற்றை பரப்பி வருகின்றன. செய்தி வலைப்பின்னல்கள் மற்றும் பத்திரிகைகளில் இருந்து வெளிப்படும் "செய்திகள்" எதுவும்
விமானக் கடத்தல் முயற்சிகளின் புதிய அலை பற்றிய வியாழக்கிழமை மாலை செய்திகளை விடவும் அதிக நம்பகத்தன்மை
வாய்ந்தது என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. சிறப்பாக பொதுமக்களை ஒரு யுத்தவெறிக்குள் முண்டியடித்துத்
தள்ளுவதற்காக உக்கிரப்படுத்தப்பட்ட பிரச்சார சூழ்நிலைமைகளின் கீழே, நிறுவனங்களால் கட்டுப்படுத்தும் செய்தி
ஊடகங்களில் இருந்து பரிமாறப்படும் எதையும் எடுத்த எடுப்பில் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. |