World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Why the Tampa refugees should be free to live in Australia

தம்பா அகதிகள் அவுஸ்திரேலியாவில் ஏன் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (அவுஸ்திரேலியா) அறிக்கை

31 August 2001

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி, நோர்வே சரக்குக் கப்பலான தம்பா வில் பயணம் செய்யும் 460 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் (Christmas Island) இறங்கும் உரிமையையும் அவுஸ்திரேலியாவுக்குள் சுதந்திரமாக நுழையும் உரிமையையும் வழங்க மறுத்தமைக்காக ஹொவாட் அரசாங்கத்தினை வன்மையாகக் கண்டனம் செய்கின்றது.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் முழு ஆதரவு வழங்கப்பட்ட அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான ஒரு கொலைகார நடவடிக்கையாகும்.

இது 1939ம் ஆண்டில் 937 யூத அகதிகள் ஐரோப்பாவில் நாஸி படுகொலைகளில் இருந்து தப்பும் பொருட்டு கியூபாவுக்குள்ளும் அமெரிக்காவினுள்ளும் நுழைய முயன்றபோது அவர்கள் தடுக்கப்பட்டு வெகுவிரைவில் நாஸி படைகளால் ஆக்கிரமிக்கப்படவிருந்த பெல்ஜியத்துக்கு திருப்பி அனுப்பிய அவமானம் நிறைந்த சென்ட் லூயிஸ் (St.Louis) கடற் பயணத்தை நினைவூட்டுகின்றது.

கியூபாவின் அன்றைய ஜனாதிபதியான பெடரிக்கோ புரூ (Federico Bru) அகதிகள் மீதான "மனிதாபிமான கருணையினதும் "பரிதாபமான நிலைமையினதும் பேரில் தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் அவர்கள் ஹிட்லரின் ஜேர்மனிக்குத் திரும்புவது "இரண்டு கெடுதிகளில் குறைவான கெடுதி நிறைந்தது" என்ற அடிப்படையில் கியூபாவினுக்குள் நுழைய அனுமதி மறுத்தார்.

தம்பா அகதிகளுக்கு இடமளிக்க மறுக்கையில் ஹோவாட் (Howard) பெடரிக்கோ புரூட்டின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் தேசிய இறைமையின் பிரமாண்டமான முக்கியத்தை வலியுறுத்துகையில் கூறியதாவது: "இது ஒரு மனிதாபிமானதும் கண்ணியமானதுமான நாடாக விளங்குகையில் நாம் சிறியஅளவிலும் பாதிக்கப்படாதும், நாம் இங்கு வருகை தருவோரின் உரிமைகள் கையாடப்பட இடமளிக்கவிடக்கூடாத ஒரு இறைமை படைத்தநாடு" எனப் பிரகடனம் செய்தார்.

ஹோவாட் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒரு தசாப்த காலமாக அடைக்கலம் கோருவோருக்கு எதிராக இடம்பெறும் அவதூறுகளதும் அடக்குமுறைகளதும் உச்சக்கட்டமாகும். இங்கு வருகை தருவோர்கள் சித்திரவதை முகாம்களில் தள்ளப்பட்டு "சட்டவிரோதிகள்" எனப் பெயர்சூட்டப்பட்டு குற்றச்செயல்களை செய்தவர்களுக்கு சமமானவர்களாக நடாத்துப்படுகின்றனர். மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை எதிர்க்கும் ஒவ்வொரு எதிர்ப்பு நடவடிக்கையும் அதிகரித்த அளவிலான அடக்குமுறைகளைச் சந்திக்கின்றது. இதே சமயம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இவர்களுக்கு எதிராக பொதுஜன அபிப்பிராயத்தை தூண்ட சட்டம், அரசியல், பொருளாதார வளங்கள் ஒவ்வொன்றையும் பயன்படுத்தியுள்ளது.

ஹோவாட் அரசாங்கம் 1996ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொழிற் கட்சியின் (Labour Party) பூரண ஆதரவை அனுபவித்து வந்துள்ளது. தொழிற் கட்சி 1992ல் அடைக்கலம் கோருவோரை பலாத்காரமாக தடுப்பு முகாம்களில் தள்ளும் முறையை அமுல் செய்தது. தொழிற் கட்சியின் தலைவரான கிம் பீஸ்லி (Kim Beazley) தம்பா அகதிகளுக்கு நுழைய அனுமதி மறுப்பதற்கு தனது பூரண ஆதரவை வளங்கினார். இது "பொருத்தமானதும் அனைத்துலகச் சட்டத்தை ஊர்ஜிதம் செய்வதும்" ஆகும் என கூறியுள்ளார்.

அகதிகளுக்கு எதிரான அரசாங்கப் பிரச்சாரம் "தேசிய நலனை" காக்கும் பேரிலேயே இடம்பெற்றதோடு, அது வெள்ளை அவுஸ்திரேலிய கொள்கையையும் (White Australia Policy) தவிர்க்க முடியாத விதத்தில் நினைவுக்கு கொணர்ந்தது. இது 20ம் நூற்றாண்டின் கூடுதலான காலகட்டத்தில் இருபெரும் கட்சிகளின் மத்திய அரசியல் கொள்கையாக இருந்தது.

19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்கனவே ஒரு பலம் வாய்ந்ததும் வளர்ச்சி கண்டு வந்ததுமான ஒரு தொழிலாளர் வர்க்கத்தை எதிர்கொண்ட நிலையில் அவுஸ்திரேலிய முதலாளி வர்க்கம் ஜனநாயக உயர் இலட்சியங்களை பூர்த்திசெய்ய முடியாது போயிற்று. இந்த உயர் இலட்சியங்கள் தனிச்சொத்துடமையின் உரிமையை சவால் செய்யும் ஒரு சமூக இயக்கத்தின் அடிப்படையாக மாறியதால், முதலாளித்துவம் ஒரு சுதந்திர தேசியம் ஒன்றை உருவாக்க முயன்றது. இதற்கு இணங்க இது பயத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசியவாத சித்தாந்தத்தை உருவாக்கியது. அது ஒரு எதிர்ப்பான ஆசிய சுற்றாடலில் ஒரு வெள்ளை சிற்றூரினை பாதுகாப்பதன் அவசியம் என்பதாகும்.

21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரதமர் ஹோவாட் தனது சொந்தக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட பொருளாதார, சமூக பாதுகாப்பின்மைகாக இந் நோக்கினை திரும்ப புதிப்பிக்க முயன்றபோது அவர் அகதிகளுக்கு எதிராக "தேசிய நலனை" தூண்டிவிடுகின்றார்.

அடைக்கலம் தேடுவோருக்கு எதிராக இடம்பெற்றுவரும் பல கட்சி பிரச்சாரமும் அவர்களுக்கு எதிராக ஒரு இனக்கலவரத்துக்கு சமமான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதும் ஒரு அடிப்படைப் கேள்வியை எழுப்புகின்றது: அவர்கள் செய்த குற்றம் என்ன?

அவர்கள் செய்தது எல்லாம் உயிருக்கு ஆபத்தான கொலைகள், அடக்குமுறைகள், பொருளாதார சூறையாடல் வறுமையிலிருந்து உயிர்தப்பவும் தாமும் தமது குடும்பங்களும் ஒரு பாதுகாப்பானதும், ஆபத்தற்றதுமான சூழலுக்குச் செல்வதிலும் இறங்கியதேயாகும். இது நிச்சயமாக எந்த ஒரு தனிமனிதனினதும் மிகவும் அடிப்படையான உரிமையாகும். இதை அவர்கள் பிரயோகிக்க முயன்றபோது அவுஸ்திரேலிய இராணுவத்துடன் அவர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள நேரிட்டது.

ஹோவாட் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து தம்பா அகதிகளின் உடனடி நுழைவு உரிமைக்காக கோருகையில் சோசலிச சமத்துவக்கட்சி (SEP) ஒரு அடிப்படையான கொள்கையில் காலூன்றிக் கொண்டுள்ளது. அவர்களின் பிறந்த இடம் என்னவாக இருந்தாலும் குடியிருக்கவும், வாழவும், தொழில் செய்யவும், படிக்கவும் உலகின் எந்த ஒரு பாகத்திலும் அவர்களுக்குப் விருப்பமான இடத்தில் வாழும் இன்றியமையாத ஜனநாயக உரிமையை சகலமக்களும் கொண்டிருக்க வேண்டும்.

ஹோவாட் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது உலகம் பூராவும் உள்ள சகல அரசாங்கங்களும் மூலதனம் "சுதந்திர சந்தை"யின் தர்க்கீகத்துக்கு அமைய பூகோளம் பூராவும் சுதந்திரமாக நடமாடும் உரிமையை ஒரு அடிப்படைக் கொள்கையாக ஏற்கின்றன. இதனடிப்படையில் அவர்கள் மூலதனம் சுதந்திரமானதாக இருக்க வேண்டும், பணம் எங்கும் இணைந்த "பூகோள பிரஜையாக" (Global Citizen) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கின்றனர். மேலும் செல்வந்தர்கள் தமக்கு பிரியமான இடத்தில் வாழும் உரிமையை கொண்டுள்ளனர். ஆனால் இந்த உரிமை உழைக்கும் மக்களுக்கே மறுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு மத்திய பிரச்சினை தேசிய அரசைப் பாதுகாப்பதே என ஹோவாட் தெளிவுபடுத்தியுள்ளார். "நாம் இறைமை கொண்ட ஒரு நாடு என்ற விதத்தில் எமது எல்லைகளை கட்டுப்படுத்தும் எமது உரிமையை தாரைவார்க்க முடியாது" என அவர் கூறியுள்ளார். "அத்தோடு மக்கள் விரும்பிய போது இங்கு வந்து போகும் ஒரு நிலைமையையும் நாம் கொண்டிருக்க முடியாது." எனவும் குறிப்பிட்டார்.

மூன்றாவது பாதை கிடையாது

இங்கு பிரச்சினை தெளிவாக எழுப்பப்பட்டுள்ளது: அதாவது உலகின் எந்தப் பாகத்திலும் சுதந்திரமாக உலாவும் மக்களின் விலங்கிடப்படாத ஜனநாய உரிமையை காப்பதா அல்லது தேசிய அரசு கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை தள்ளிவைக்கும் உரிமையை காப்பதா என்பதாகும். மூன்றாவது பாதை இங்கு கிடையாது.

இதனை ஹோவாட்டின் சில விமர்சகர்களின் நிலைப்பாடுகளை ஆய்வு செய்வதன் மூலம் கண்டு கொள்ள முடியும். சிறப்பாக பசுமைக் கட்சியினரையும் (Greens) அவுஸ்திரேலிய ஜனநாயக வாதிகளையும் (Australian Democrats) ஆய்வு செய்ய வேண்டும். இக்கட்சிகள் குடிபெயர்ந்தவர்கள் தமது விருப்புக்கு ஏற்ப தமது வாழ்விடத்தை தெரிவு செய்யும் உரிமையை பாதுகாக்க ஊக்குவிக்கப்பட்டவையாக இல்லை. மாறாக அவை ஆளும் வர்க்கப் பகுதியினரின் விருப்பு வெறுப்புகளையிட்டே குரல் கொடுக்கின்றனர். இவை அவுஸ்திரேலியாவின் அனைத்துலக சாயலையும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதனது மூலோபாய நலன்களையும் அரசாங்க நடவடிக்கைகள் பாதிப்பதாக உள்ளதாக குரல் கொடுக்கின்றனர்.

ஜனநாயகவாதிகளின் (Democrats) தலைவரான நட்ஷா ஸ்ரொட் டெஸ்போஷா (Natasha Stott Despoja) அரசாங்க நடவடிக்கைகளை "அவமானம்" எனவும் "மனிதாபிமானமற்றது" எனவும் "பொறுப்பற்றது" எனவும் அழைத்ததோடு அரசாங்கத்தை அதனது தீர்மானத்தை மீளாய்வு செய்யும்படியும் கேட்டார். அகதிகள் குறைந்தபட்சம் "எமது அனைத்துலக கடமையின் கீழ் அடைக்கலம் கோருபவர்களாக மதிப்பிடப்பட வேண்டும்" என அவர் பிரகடனம் செய்தார்.

"எமது கதவோரத்தில் உள்ள பெருங் கடலில் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ள 400 மக்களுக்கு இடமில்லை என இந்த எமது செழிப்பான நாடு, இந்த எமது அதிசயமான நாடு சொல்வதை முழு உலகும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டுள்ளது" என பசுமைக்கட்சியின் செனட்டர் பொப் பிறவுண் (Bob Brown) தெரிவித்தார்.

ஆனால் ஜனநாயகவாதிகளுக்கும் (Democrats) பசுமைக் கட்சியினரும் (Greens) குடிபெயர்வு நிபந்தனைக்குட்பட்டது. இரண்டு கட்சிகளும் சுதந்திரமான பிரவேசத்தை ஒரு கட்டுப்பாடற்ற ஜனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்வதை எதிர்க்கின்றனர். அவுஸ்திரேலியன் ஜனநாயக வாதிகளின் இறுதி கொள்கை விளக்க அறிக்கையின்படி கட்சி "ஒரு பாகுபாடற்ற குடிவரவு வேலைத்திட்டத்துக்காக" நின்று வருகின்றது. இது அகதிகளுக்கும் குடும்ப மீளிணைவுக்கும் முன்னுரிமை கொடுக்கின்றது. அதனது மொத்த எண்ணிக்கை முழு குடிசனப் போக்குடன் சேர்க்கப்படுமிடத்து நாட்டின் இயற்கை வளங்களின் தாக்கிப்பிடிக்கும் தன்மையை தாண்டிச் செல்லலாகாது." என்பதற்கு ஆதரவு தருகின்றது.

பசுமைக்கட்சியினரது கொள்கையும் இதற்குச் சமமானதே. குடிவரவுக் கொள்கையானது "எமது சொந்த சமூக, பொருளாதார சுற்றாடல் தாக்கிப்பிடிக்கும் நிலையை ஈட்டும்" எமது அவசியத்தை கணக்கில் கொண்ட ஒரு பரந்த குடிசனக் கொள்கையினுள் திட்டமிடப்பட வேண்டும் என அவர்கள் வாதிக்கின்றனர். பசுமைக் கட்சியினரின் வேலைத்திட்டம் "அதிகாரமற்ற முறையில் வருகை தந்தவர்கள் அவற்றின் நம்பகமான தன்மையை நிலைட்டும் வரையில் அவர்களை தடுத்து வைக்க அரசாங்கங்கள் சட்டரீதியான உரிமை கொண்டுள்ளதை" கூட அங்கீகரிக்கின்றது.

இந்த விடயத்தில் ஜனநாயகவாதிகளும் பசுமைக் கட்சியினரும் அரசாங்க நடவடிக்கையை எதிர்க்கையில் பெரிதும் "மனிதாபிமான" அகதிகள் கொள்கைக்காக வக்காலத்து வாங்குகின்றனர். இவர்கள் ஒரு காலால் மிதிக்கும் கொள்கையில் ஹோவாட்டுடன் நின்று கொண்டுள்ளனர்: அது என்னவெனில் குடிவருகையின் பாய்ச்சலுக்கு அரசு சில கட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதேயாகும். அவர்களது நிலைப்பாட்டின் பிடிவாதமான தாக்கம் என்னவென்றால் அந்த எல்லைகள் அச்சுறுத்தப்படுமானால் அவற்றை திணிக்க ஆயுதப் படைகள் அழைக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தனது நிலையை இதற்கு முற்றிலும் எதிரான கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உலகம் பூராவும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு உரிமை வேண்டும். இந்த அனைத்துலகவாதக் கொள்கையில் இருந்து பெருக்கெடுக்கும் தவிர்க்க முடியாத முடிவு: தற்போதைய பொருளாதார, சமூக அமைப்பினால் குடிவரவுகாரர்களை உள்ளடக்கிக் கொள்ள முடியாது போகுமிடத்து அது கட்டாயம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே.

ஜனநாயகவாதிகளதும் பசுமைக் கட்சியினரதும் அடிப்படைச் சித்தாந்தம் நுழையும் உரிமை வரையறுக்கப்ட வேண்டும் என்பதாகும். ஏனெனில் இறுதி ஆய்வுகளில் பற்றாக்குறையான வளங்களான பொருளாதார அல்லது இயற்கை வளங்கள் குடிபெயரும் சகலரையும் அடக்கிக் கொள்ள முடியாதனவாக உள்ளன என்பதாலாகும்.

இந்த நிலைப்பாடு முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பு சித்தாந்தத்தின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிக் கொண்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியாவில் வணக்கத்துக்குரிய தோமஸ் மல்துஸ் (Thomas Malthus) மனித முன்னேற்றத்தின் சாத்தியத்தை மறுத்ததோடு அபிவிருத்தி கண்டுவந்த முதலாளித்துவ அமைப்பினால் உருவாக்கப்பட்ட சமூகக் கெடுதிகளுக்கான மூலகாரணங்களை மூடிமறைக்கவும் முயன்றார். "அதிகளவிலான மக்கள்" இருப்பதால் ஏழைகளின் குடும்ப பெருக்கம்" கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது என அவர் வாதிட்டார்.

இன்று வளங்கள் வரையறுக்கப்பட்டதாக உள்ளது என்பதன் அடிப்படையில் குடிவரவோரின் சுதந்திரமான இயக்கத்தின் கட்டுப்படுத்தப்படாத உரிமையை எதிர்ப்போர் இதே வாதத்தை மீண்டும் முன்வைக்கின்றனர். இவர்கள் சமூக பிரச்சினைகளுக்கான அடிப்படை முதலாளித்துவ பொருளாதார ஒழுங்குமுறை அல்ல மேலதிக சனத்தொகையே என்று கூறுகின்றனர்.

அத்தகையவாதங்கள் நிஜ நிலைமையை மூடி மறைக்க முயற்சிக்கின்றன. அனைத்து செல்வங்களதும் சமூக முன்னேற்றத்தினதும் மூலம் உழைக்கும் மக்களின்-உடல், புத்திஜீவி- உழைப்பே.

ஒரு பரந்த பூகோள ரீதியான போக்கு

இந்த தம்பா நெருக்கடி ஒரு பரந்த பூகோள ரீதியான போக்கின் இறுதியான வெளிப்பாடு மட்டுமேயாகும். உலகம் பூராவும் முதலாளித்துவ அரசாங்கங்கள் இடம் இல்லை, பொருளாதார வளங்கள் வரையறுக்கப்பட்டவை என்பதன் அடிப்படையில் அகதிகளும் குடிபுகுவோரின் நுழைவு உரிமையை மறுக்கின்றனர்.

இதன் பலனாக 40 மில்லியன் அகதிகள் பாதுகாப்பாக உறைவிடம் மறுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் மோசமான நிலையிலுள்ள முகாம்களில் அடைந்து போய்க் கிடக்கின்றனர். 150 மில்லியன் உழைக்கும் மக்கள் இப்போது ஒரு அரை சட்ட ரீதியான அரைவாழ்க்கையை நடாத்துகின்றனர். மிகப் பயங்கரமான சுரண்டல்களுக்கும் அரச அடக்கு முறைகளுக்கும் உட்பட்டு இதை நடாத்துகின்றன்னர். இவர்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. பூகோள ரீதியான முதலாளித்துவ அமைப்பின் குற்றச்சாட்டு என்ன!

தொழில்நுட்ப உற்பத்தி சகல துறைகளிலும் பரந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதில் மத்தியில் முதலாளித்துவ வர்க்கங்கள் தேசிய அரசமைப்பு முறைகளுடனும் எல்லைகள், கடவுச்சீட்டுகள், விசாக்களுடனும் (Visa) உலகை கோடானுகோடி மக்களின் ஒரு சிறைக்கூடமாக மாற்றியுள்ளன.

குடிவருகை மீதான கட்டுப்பாடுகள் பொதுவில் ஒரு தரப்பட்ட "வாழ்க்கை உண்மை" யாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எல்லாம் கடந்த நூற்றாண்டின் திருப்பத்தில் இருந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொண்டாக வேண்டும். கடவுச்சீட்டின் உற்பத்தியிடமும், விதிகளும், சட்டங்களும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களின் நகர்வை தடை செய்வதற்காகவே அறிமுகம் செய்யப்பட்டன.இவை அரசியல் அதிகாரத்திலான பிடியை இறுக்கிக் கொள்ள முயலும் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கங்களும் தேசியவாத சித்தாந்தங்களை மீள திணிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 1990ல் ஈராக்குக்கு எதிரான யுத்தத்தை தொடுக்கையில் அது ஒரு "புதிய உலக ஒழுங்கமைப்பை அடைவதை இலக்காகக் கொண்டிருந்தது என தெரிவித்தார். ஒரு தசாப்த காலத்துக்குள் இந்த பூகோள முதலாளித்துவ "புதிய ஒழுங்கமைப்பின்" நிஜ கோலம் அம்பலமாகியுள்ளது.

அகதிகளின் உலகளாவிய நகர்வும் இடம்பெயர்ந்தோரும் "சட்ட விரோத" குடிவருகைகாரர்கள் எனப்படுவோரும் இதனது உற்பத்திகளில் ஒன்றாகும். இவர்கள் எண்ணற்ற யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்கள், இன மோதுதல்கள் பொருளாதார பின்னடைவுகளால் பெருகியுள்ளனர்.

அகதிகள் நெருக்கடியின் இதயத்தில் ஆழமான சமூக, பொருளாதார சமத்துவமின்மை இருந்து கொண்டுள்ளது. இவை புள்ளிவிபரங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளன. பூகோள ரீதியான முதலாளித்துவ அமைப்பின் உச்சியில் இருந்து கொண்டு உலகின் செல்வந்தர்களில் 200 பேர் தமது கூட்டு வருமானத்தை 1994-1998 க்கும் இடையே இரட்டிப்பாக்கிக் கொண்டுள்ளனர். இது ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமானது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாற்பதில் ஒரு பங்குக்குச் சமமானது. உலகின் மூன்று பணக்காரர்கள் 48 வறிய நாடுகளின் மொத்த வெளியீட்டைக் காட்டிலும் பெரிதான சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.

1999ல் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அபிவிருத்தி அறிக்கையின்படி (UN- World Development Report) 40 பில்லியன் டாலர்கள் செலவில்- 200 செல்வந்தர்களின் வருமானத்தில் ஒரு துளியால் அடிப்படை சுகாதாரம், நீர் விநியோகம், கல்வி, போஷாக்கு போன்றவற்றை முழு உலக சனத்தொகைக்கும் வழங்க முடியும்.

இந்த புள்ளி விபரங்களும் இவற்றையொத்த இன்னும் பலவும் பூகோளரீதியான அகதிகள் நெருக்கடியை எடுத்துக் காட்டுகின்றது. தம்பா பகைமை இதனது கடைசிப் பயங்கரமான வெளிப்பாடாகும். இது பூகோளரீதியான உலக முதலாளித்துவத்தின் சிதைந்துவரும் சமூக அமைப்பினுள் உற்பத்தியாகும்.

தமது சமூக அமைப்புகள் உற்பத்தி செய்த நெருக்கடிக்கான ஆளும் வர்க்கங்களின் ஒரே பதில் என்றுமில்லாத பிரமாண்டமான அடக்கு முறைகளை திணிப்பதேயாகும். அவுஸ்திரேலிய அரசாங்கம் "தேசிய நலன்" களுக்கு அழைப்பு விடுக்கையில் தொழிலாளர் வர்க்கம் ஹோவாட்டுடன் அன்றி அகதிகளுடனேயே பொது வர்க்க நலன்கள் கொண்டுள்ளது. அவர்கள் உலகம் பூராவும் அடக்குமுறையில் இருந்தும் சுரண்டலில் இருந்தும் தலைதப்ப முயற்சி செய்பவர்களைப் போலவே அதே அடிப்படை அவசியங்களையும் அபிலாசைகளையும் கண்ணியமான வாழ்க்கைத் தரம் சமூக சேவைகள், ஜனநாயக உரிமைகள். சமூக சமத்துவம் -போன்ற இலக்குகளை கொண்டுள்ளனர்.

தொழிலாளர் வர்க்கம் அனைத்துலக ரீதியில் ஒரு புதிய பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் பூகோளம் சகலரும் பொதுக் கண்ணியத்துடன் வாழவும் வேலை செய்யவும் பொருத்தமான இடமாகச் செய்யப்பட வேண்டும். இது சகல அரசியல், பொருளாதார ஒடுக்குமுறையில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். இன்றைய சமூக அமைப்பு, மூலதனத்தின் நலத்தின் பேரிலான தனியார் இலாபத் திரட்சியையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது தூக்கி வீசப்பட்டு ஒரு புதிய அமைப்பு ஸ்தாபிதம் செய்யப்பட வேண்டும். இதில் உலக உற்பத்தியாளர்களின் உழைப்பினால் சிருஷ்டிக்கப்பட்ட பரந்த உற்பத்தி வளங்கள் மனித அவசியங்களை பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும்.

இந்த முன்நோக்கின் அடிப்படையிலேயே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஹோவாட் அரசாங்கத்தின் காட்டுமிராண்டி நடவடிக்கைகளை எதிர்ப்பதோடு தம்பா அகதிகள் உடனடியாகவும் வரையறையற்ற முறையிலும் நுழைய வேண்டும் எனக் கோருகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved