World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைPolice crackdown on opposition protest in Sri Lanka leaves two dead இலங்கையில் எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற பொலிஸ் தாக்குதலில் இருவர் கொலை By K. Ratnayake இலங்கையின் தலைநகரமான கொழும்பில் கடந்த ஜூலை 19ம் திகதி இடம்பெற்ற எதிர்க் கட்சிகளின் ஊர்வலத்தின் மீது பொலிசார் பாரதூரமான முறையில் பாய்ந்து விழுந்ததைத் தொடர்ந்து இருவர் கொல்லப்பட்டும், டசின் கணக்கானவர்கள் காயமடைந்தும், சிலர் கவலைக்கிடமான நிலையிலும் உள்ளனர். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமது சிறுபான்மை அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தடுப்பதன் பேரில் ஜூலை 10ம் திகதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததற்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஏனைய எதிர்க் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் ஆறு, வெவ்வேறு நுழைவாயில்கள் மூலம் நகரின் மத்திய பகுதிக்குள் விரைய முயற்சித்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிசார் பயங்கரமாக மோதிக் கொண்ட விதத்தை ஒளிபரப்பின. பொலிசார் இரும்பு வேலிகளை நாட்டி வைத்ததோடு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப் புகையையும், குண்டாந் தடிகளையும், றப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர். கொலையுண்ட இருவரதும் உடல்களைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி அவர்களைக் கொலைசெய்யும் போது பொலிசார் துப்பாக்கித் தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளதை ஊர்ஜிதம் செய்தார். படுகொலைகள் சம்பந்தமாக பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, அரசாங்கம் உத்தியோகபூர்வ விசாரணைக்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் உரையாற்ற முற்பட்டபோது பொலிசார் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டினார். பொலிசாருடன் ஜனாதிபதிப் பாதுகாப்பு பிரிவும் ஊர்வலத்தைத் தாக்குவதில் ஈடுபட்டிருந்ததாகவும் யூ.என்.பி. மேலும் குற்றம்சாட்டியது. கிட்டத்தட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொலிசார் இறக்கிவிடப்பட்டிருந்ததோடு இராணுவத்தினரும உசார் நிலையில் இருத்தப்பட்டிருந்தனர். பொலிஸ் தலைமையகம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாரை 'ஆத்திரமூட்டியதாக' கூறி பொலிசாரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. எவ்வாறெனினும் குமாரதுங்க ஆர்ப்பாட்டக்காரர்களை 'கலைப்பதற்காக' இறப்பர் தோட்டாக்களையும் கண்ணீர் புகையையும் பாவிப்பதற்கு ஏற்கனவே தனிப்பட்ட முறையில் அதிகாரம் வழங்கியிருந்ததை அரச தொலைக்காட்சி ஊர்ஜிதம் செய்தது. மேலும், கருத்துக் கணிப்பு சம்பந்தமான சட்டவிதி முறையின் கீழ் ஆர்ப்பாட்டங்கள் செய்வது சட்டவிரோதமானது என, முதல் நாளே பொலிசார் அறிவித்திருந்தனர். குமாரதுங்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்த அதே தினம் நாட்டின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்படாத மாற்றங்களைச் செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 21ம் திகதிக்கு ஒரு கருத்துக்கணிப்பையும் அறிவித்தார். யூ.என்.பி. பலவித தமிழ்க் கட்சிகளதும், சிங்கள சோவினிச சிங்கள உறுமய (SU), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), தோட்டப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட மலையக மக்கள் முன்னணி (UPF), மற்றும் இந்தக் கட்சிகளோடு இணைந்த தொழிற்சங்கங்கள் ஆகியவற்றினதும் ஆதரவுடன் ஆர்ப்பாட்டத்தை பலப்படுத்தியிருந்தது. அடுத்த சிங்கள சோவினிச அமைப்பான மக்கள் விடுதலை முன்னணி (JVP), தான் ஒரு தனியான அரசியல் அடையாளத்தை காக்க வேண்டும் எனவும் யூ.என்.பி.யால் ஒழுங்குசெய்யப்படும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளவும் அல்லது கலந்துகொள்ளாது இருக்கவுமான உரிமையை கொண்டுள்ளதாக கூறி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. யூ.என்.பி. குறைந்த பட்சம் 400,000 பேரை அணிதிரட்டுவதாக அறிவித்திருந்த போதிலும், நகர்ப்புற நுழைவாயில்களில் 25,000 பேர் மாத்திரம் சமூகமளித்திருந்த அதே வேளை பொதுக் கூட்டத்துக்கு சுமார் 10,000 பேர் வரையே கூடியிருந்தனர். யூ.என்.பி. நகரிலும் சுற்றுப்புறத்திலும் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் தொழிலாளர்கள் அதைக் கவனத்தில் கொள்ளவில்லை. நாட்டின் மத்திய மலைநாட்டு மாவட்டங்களில் எதிர்க் கட்சிகளோடு இணைந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றனர். யூ.என்.பி. குமாரதுங்கவின் நடவடிக்கைகளை ஜனநாயகமற்றது என வன்மையாகக் கண்டனம் செய்ததோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்களிப்பதற்காக பாராளுமன்றத்தை மீண்டும் திறக்க அழைப்பு விடுத்தது. யூ.என்.பி. தலைவர்கள் பிலிப்பைனில் ஜோசப் எஸ்ராடாவை தூக்கியெறிந்து கொலோரியா அரோயோவை ஜனாதிபதியாகப் பதிலீடு செய்த பெரும் வியாபாரிகளின் ஆதரவைக் கொண்ட ஆர்ப்பாட்ட வழியில் ஒரு "மக்கள் சக்தி" இயக்கத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தனர். ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற அடுத்த நாள் ஜே.வி.பி. உட்பட்ட ஏனைய எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன், ஜனாதிபதி தன்னுடைய "அதிகாரங்களை துஷ்பிரயோகம்" செய்வதன் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒரு அரசியல் குற்றச்சாட்டுப் பிரேரணையை (Impeachment) தயார் செய்து கொண்டுள்ளதாக யூ.என்.பி. அறிவித்தது. யூ.என்.பி. கருத்துக் கணிப்புக்கு பணம் பங்கிடுவதை தடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் சுட்டிக் காட்டியது. அதன் ஆதரவாளர்கள் திறைசேரி செயலாளருக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் எதிராக வழக்குத் தொடர மனுத்தாக்கல் செய்ய ஆராய்வதாக குறிப்பிட்டனர். விக்கிரமசிங்க "இந்த நாட்டில் ஜனநாயகம் மீள்நிர்மாணம் செய்யப்படும் வரை ஆர்ப்பாட்டத்தைத் தொடர்வதாக" கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னிலையில் தெரிவித்தார். அரசாங்கத்தை மிகவும் நெருக்கி வரும் யூ.என்.பி. பாராளுமன்றக் குழுவின் ஒரு அங்கத்தவரும் யூ.என்.பி. துணைச் செயலாளருமான ஜி.அத்துகோரள கூட்டத்தினர் முன்னிலையில் குறிப்பிட்டதாவது: "நாங்கள் இந்த ஜனநாயக விரோத அரசாங்கம் கவிழும் வரை வேலை நிறுத்தங்களையும், சிவில் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏனைய கிளர்ச்சி வடிவங்களையும் ஈட்டிமுனையாகப் பயன்படுத்துவோம்." ஆனால் யூ.என்.பி. குமாரதுங்கவையும் அவரது பொதுஜன முன்னணியையும் விட அடிப்படை ஜனநாயக உரிமைகளை காப்பதில் ஒன்றும் மேலதிக திறமையானது அல்ல. 1991ல் முன்னால் யூ.என்.பி. தலைவரான ஜனாதிபதி பிரேமதாச குற்றப் பிரேரணைகளை தடுப்பதன் பேரில் ஒத்தி வைக்க அதிகப்படியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைப் பயன்படுத்திக் கொண்டார். யூ.என்.பி. குண்டர்களையும் அடாவடித்தனங்களையும் ஏனைய தாக்குதல்களையும், ஜனநாயக விரோத நடவடிக்க்ைகளை பயன்படுத்தி அபகீர்த்திக்குள்ளாகி இருந்ததும் அது 1994ல் பொதுஜன முன்னணியிடம் தோல்வியடைந்ததற்கு ஒரு காரணமாகும். பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் எந்த ஒரு அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் யூ.என்.பி.யைப் போலவே தானும் இலாயக்கற்றது என்பதை நிரூபித்தது. குமாரதுங்க, இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் வாழ்க்கை தரத்தை அபிவிருத்தி செய்வதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதற்குப் பதிலாக இராணுவ நடவடிக்கைகளை உக்கிரமாக்கியதோடு உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் உத்தரவுகளை திணித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம், அவர் அதிகளவிலான ஜனநாயக விரோத விதிமுறைகளை கையாண்டுள்ளார். பெரும் வியாபாரிகளின் பகுதியினர் தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொணரும் வகையில் தேசிய ஐக்கியத்தின் பேரிலான ஒரு அரசாங்கத்தை அமைக்க பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் அழைப்பு விடுத்துக்கொண்டுள்ளனர். கடந்த வார பொலிஸ் தாக்குதலையிட்டு அவர்கள் திகைப்படைந்தனர். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சந்திரா ஜயரத்ன குறிப்பிட்டதாவது: "அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமையிலான ஒரு தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கத்தின் மூலமான ஒரு சிறந்த தேசம் தொடர்பான எமது எண்ணம், கடந்த வியாழக்கிழமை சம்பவத்தால் பறிபோய்விட்டதையிட்டு நாம் மிகவும் கவலையடைகின்றோம்." அரசியல் முரண்பாடுகளின் பெறுபேறாக "அடுத்த ஆறுமாதங்களுக்கு நிச்சயமற்ற வர்த்தகமே தொடர்வதோடு, பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்" என மேலும் ஒரு வர்த்தகர் எச்சரிக்கை செய்தார். குமாரதுங்கா பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னர் குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றிய ஒரு இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்ற விடயத்தை ஜூலை 15ம் திகதி சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளிப்படுத்தியிருந்தது. செய்திப் பத்திரிகையின்படி, விக்கிரமசிங்க 26 பேரைக் கொண்ட மிகவும் சுருக்கமான ஒரு அமைச்சரவையில் பிரதமர் பதவியும் 10 அமைச்சர் பதவிகளும் உள்ளடங்கலாக அதிகாரத்தில் ஒரு கணிசமான பங்கைக் கோரினார். குமாரதுங்க விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மறுத்ததோடு, அவரது சொந்த பொதுஜன முன்னணி கூட்டணி உறுப்பினர்களுக்கே கொடுப்பதற்கு பதவிகள் பற்றாக்குறையாக இருப்பதாக கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஸ்தம்பித்தது. எவ்வாறெனினும் யூ.என்.பி. இப் பிரச்சினையின் பேரில் பிளவுபட்டுள்ளது. யூ.என்.பி. தலைவர்களில் ஒருவரும் குமாரதுங்கவுடன் பிரிந்த சகோதரருமான, பாராளுமன்ற சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க யூ.என்.பி.யின் கடும் போக்காளர்கள் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பேரிலான மேலும் ஒரு கலந்துரையாடலுக்கு செல்வதை தடுப்பதற்கு குறுக்கே நிற்பதாகத் தோன்றுகின்றது. கடந்த வாரம், ஜனாதிபதிக்கு அடிபணியாமல் பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தபோது தான் தனது அதிகாரங்களைக் கடந்து "மேலே செல்ல முடியாது" எனக் கூறி மறுத்துவிட்டார். பண்டாரநாயக்க ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு நடவடிக்கைகள் தலைகுப்புற விழும் விதத்தில் வெளிநாட்டு பயணத்தை ஒத்திப் போடவும் கூட மறுத்துவிட்டார். எதிர்க் கட்சியினர் பாராளுமன்றத்தில் ஒரு சாதாரண பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு அரசியல் குற்றச்சாட்டு பிரேரணைக்கு சபாநாயகரின் உடன்பாடும் தேவை. கடந்த இரண்டு வார சம்பவங்கள் ஆளும் வர்க்கம் பெரிதும் அதிகாரங்கள் நிறைந்த ஆட்சி
வடிவங்களை நோக்கிச் சென்று கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு
கோரிக்கைகளை முன்னெடுக்கவும் பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தும் உள்நாட்டு யுத்தத்துக்கு தீர்வு காணவும் இது
அவசியமாக உள்ளது. கடந்த வார ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பொலிசை கட்டவிழ்த்துவிடும் குமாரதுங்கவின் விருப்பு,
அரசாங்கம் தனது களஞ்சியத்தில் தொழிலாளர்களுக்கும் அதனது அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரலை எதிர்ப்போருக்கும்
எதைக் கொண்டுள்ளது என்பதற்கு ஒரு ஆழமான எச்சரிக்கையாகும். |