World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan authorities forced to release two more of the Hatton Six இலங்கை அதிகாரிகள் அட்டன் அறுவரில் மேலும் இருவரை விடுதலை செய்யத் தள்ளப்பட்டனர் By Vilani Peiris கண்டி உயர் நீதிமன்றம் விடுதலைக்கான உத்தரவை பிறப்பித்த ஆறு வாரங்களின் பின்னர், சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) அரசியல் மற்றும் சட்டரீதியான போராட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை சிறை அதிகாரிகள் அட்டன் அறுவரில் மேலும் இருவரை -சுப்பு உதயகுமார், சோலமலை லோகநாதன்- இறுதியாக விடுதலை செய்யத் தள்ளப்பட்டனர். நாட்டின் மத்திய பெருந்தோட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு கைதிகளில் இந்த இரு இளைஞர்களும் 1998 ஜூன் மாதம் முதல் எந்தவித விசாரணையும் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சட்டமா அதிபர் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொண்டதை அடுத்து, ஜூலை 3ம் திகதி கண்டி உயர் நீதிமன்றம் அட்டன் அறுவரில் நால்வரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தது. இவர்கள் கைதுசெய்யப்பட்ட போது அட்டனுக்கு அருகாமையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடாத்தியதாக குற்றம்சாட்டப்பட்டனர். சிறையிலிடப்பட்டு சில மாதங்களின் பின்னர், முதலாவது குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டு மின்மாற்றிகளுக்கும் எண்ணெய்த் தாங்கி ஒன்றின் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. சித்திரவதையின் மூலம் கறந்துகொள்ளப்பட்ட "ஒப்புதல் வாக்குமூலங்கள்" மாத்திரமே இந்த அறுவருக்கும் எதிரான ஒரே சாட்சியாகும் -சட்டமா அதிபர் குற்றச்சாட்டுக்களை நிபந்தனையின்றி விலக்கிக் கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் அறுவரையும் போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று வருடங்கள் தடுத்து வைத்திருந்த போதிலும் சிறை அதிகாரிகள் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்தனர். களுத்துறை சிறைச்சாலை, பலவித நிர்வாகக் காரணங்களை சுட்டிக்காட்டி இரண்டு வாரங்களின் பின்னர் இருவரை மாத்திரமே விடுதலை செய்தது. உதயகுமாரும் லோகநாதனும் நுவரெலிய நீதிமன்றத்தில் உள்ள வேறு குற்றச்சாட்டுக்களுக்கு தேவைப்படுகின்றனர் என்ற நொண்டி சாட்டுக்களின் பேரில் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். சோ.ச.க. சட்டத்தரணியின் மனுவின் பேரில் மாவட்ட நீதவான் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். சிறை அதிகாரிகள் மஜிஸ்திரேட்டிடமிருந்து ஒரு புதிய உத்தரவை கோரிய அதேவேளை முதற்தடவை கைதிகளை நுவரெலிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யத் தவறினர். இறுதியாக ஆகஸ்ட் 13ம் திகதி, உதயகுமாரும் லோகநாதனும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதவான் தனது பிணை தீர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். அப்போதும் கூட சிறை நிர்வாகம் மேலும் சில காரணங்களை மேற்கோள் காட்டி தாமதித்ததோடு அவர்களை பதுளையில் உள்ள ஒரு சிறைச்சாலைக்கு கொண்டு சென்றது. ஆனால் இறுதியாக ஆகஸ்ட் 15ம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஆட்சேபனைக் கடிதங்கள் நிறைந்த ஒரு நிலைமையிலும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சோ.ச.க.வின் அச்சுறுத்தல் காரணமாகவும் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறை அதிகாரிகள் அவர்களை உறவினர்களுக்கோ அல்லது சோ.ச.க.வின் சட்டத்தரணிக்கோ கூட அறிவிக்காமல் ஒரு இரவுப் புகையிரதத்தில் திணித்து அனுப்பினர் -இது இலங்கையின் நிலைமையைப் பொறுத்தமட்டில் அவர்களை அபாயத்தில் போடும் ஒரு நடவடிக்கையாகும். அட்டன் அறுவரில் இருவரான அருணாசலம் லோகேஸ்வரனும் பொன்னையா சரவணகுமாரும் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதே வழக்கில் குற்றவாளிகளாக இருக்கும் அதே வேளை அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதை அவர்களின் வைத்திய அறிக்கைகள் அம்பலப்படுத்திய போதிலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் விலக்கிக் கொள்ளவில்லை. சோ.ச.க. சட்டத்தரணி அவர்களின் உடனடி விடுதலையைக் கோரி சட்டமா அதிபரிடம் வைத்திய அறிக்கைகள் உட்பட ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஆகஸ்ட் 29ம் திகதி யோகேஸ்வரனும் சரவணகுமாரும் கண்டி உயர் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்ட போதிலும் அரச தரப்பு சட்டத்தரணி மனுக்கள் தொடர்பாக தனது மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு "மேலதிக நேரம்" அவசியப்படுவதாக குறிப்பிட்டார். அடுத்த விசாரணை அக்டோபர் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது மேலும் இரண்டு மாதங்கள் சிறைக்குள் தள்ளப்படும் அதே வேளை அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படுவது நிச்சயமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. சோ.ச.க. தொழிலாளர், இளைஞர்கள் புத்திஜீவிகளை அவர்களின் நிபந்தனையற்ற உடனடி விடுதலைக்காக பிரச்சாரத்தை தீவிரமாக்க அழைப்பு விடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிராக 18 வருடகாலமாக தொடுத்துவரும் யுத்தத்தின் காரணமாக தமிழ் சிறுபான்மையினர் மீதான அரச ஒடுக்குமுறையின் ஒரு பாகமாக நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீதும் விமானப் படைத்தளத்தின் மீதும் அண்மையில் விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலை அடுத்து பொலிசாரும் இராணுவத்தினரும் நீர்கொழும்பிலும் கொழும்பிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களை -விசேடமாக இளைஞர்களை- சுற்றிவளைத்தனர். டசின் கணக்கானவர்கள் "மேலதிக விசாரணைகளுக்காக" தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட நான்கு கைதிகளும் ஆகஸ்ட் 20ம் திகதி சோ.ச.க. கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அரசாங்கக் கட்டுப்பாட்டு பத்திரிகையான டெயிலி நியூஸ் உட்பட வீரகேசரி, தினக்குரல் ஆகிய தமிழ் பத்திரிகைகளில் இருந்தும் நிருபர்கள் வருகை தந்திருந்தனர். தமிழ் வானொலிச் சேவையான சூரியன் திவி பத்திரிகையாளர்கள் வருகைதராதிருந்த போதிலும், சோ.ச.க.வின் பிரச்சாரத்தைப் பற்றியும் நான்கு கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் தெளிவான அறிக்கையை ஒலிபரப்பியது. உலக சோசலிச வலைத் தளத்தின் பிரச்சாரம் இறுதியாக அட்டன் அறுவருக்கும் எதிரான வழக்கு சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளதை சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்துள்ளது என சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் விலானி பீரிஸ் சுட்டிக் காட்டினார். இடம்பெற்றது என்ன என்பதைப் பற்றி எல்லா நிறுவனங்களும் அறிந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். இது ஒரு திட்டமிட்ட ஒடுக்குமுறையாக இருந்தது. மனித உரிமை அமைப்புகள் இதுபோன்ற அநேக வழக்குகள் பற்றி தகவல்களை சேகரித்துக்கொண்ட போதிலும் எந்தவிதப் பெறுபேறுகளும் கிடையாது எனக் குறிப்பிட்ட கைதிகள் சோ.ச.க.வின் பிரச்சாரத்தைப் பாராட்டினர். கடந்த மாதம் சோ.ச.க. பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்கியவர்களில் ஒருவரான ஆர்னல்ட் கோஸ்டெலோ அவுஸ்திரேலியாவில் இருந்து சட்டமா அதிபருக்கு அனுப்பிய பக்ஸில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "நான் இக்கடிதம் மூலம் சுப்பு உதயகுமாரையும் சோலமலை லோகநாதனையும் போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதை ஆட்சேபிக்கும் அதேவேளை அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யும்படியும், பொன்னையா சரவணகுமாருக்கும் அருணாசலம் யோகேஸ்வரனுக்கும் எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விலக்கிக்கொள்ளும்படியும் கோருகிறேன். நான் அட்டன் ஆறுவர் தொடர்பாக இலங்கை சோ.ச.க.வினதும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் பிரச்சாரத்தில் முழு அக்கறைகொண்டவனாகும்." நுவரெலியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் கவிஞனான கே.எஸ்.சந்திரசேகர் எழுதியதாவது: "நான் இந்த இரண்டு இளைஞர்களையும் -பொன்னையா சரவணகுமார், அருணாசலம் யோகேஸ்வரன்-தொடர்ச்சியாகத் தடுத்து வைத்திருப்பதை ஆட்சேபிக்கின்றேன். இந்த தடுத்துவைப்பு அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும். இது இலங்கையின் இனவாத யுத்தத்தின் ஒரு பகுதியாவதோடு தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களின் ஒரு பகுதியுமாகும். அதுமட்டுமல்லாமல் இது தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையுமாகும். ஆகவே நான் இந்த இரண்டு இளைஞர்களையும் நிபந்தனையின்றியும் உடனடியாகவும் விடுதலை செய்யுமாறு கோருகிறேன்." மேலும் அட்டனில் இயங்கிவரும் சமூக சேவைகளுக்கான நிலையத்தின் அதிகாரியான தந்தை. மரி அந்தோனி, ஒரு பெருந்தோட்டப் பாடசாலையின் ஆசிரியரான தேவராஜ், மற்றும் ஒரு கடைத் தொழிலாளியான வி.ஜீவராஜா ஆகியோரும் சட்டமா அதிபருக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர். சோ.ச.க. யோகேஸ்வரனதும் சரவணகுமாரதும் நிபந்தனையற்றதும் உடனடியானதுமான விடுதலையைக் கோரி மேலும் கடிதங்களை அனுப்பி வைக்குமாறு அழைப்பு விடுப்பதோடு பிரச்சார நிதியான 100,000 ரூபாவுக்கு ஆதரவு வழங்குமாறும் கோருகின்றது. உங்களுடைய நிதி உதவிகளை அனுப்பவேண்டிய முகவரி: The Treasurer, உங்களது ஆட்சேபனைக் கடிதங்களை அனுப்பவேண்டிய முகவரி: The Attorney General, உங்களது சகல ஆட்சேபனைக் கடிதங்களதும் பிரதிகளை தயவுசெய்து அனுப்பி வையுங்கள்: Socialist Equality Party, உலக சோசலிச வலைத் தளத்தின் மின் அஞ்சல்:
editor@wsws.org |