World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் :உலகப் பொருளாதாரம்When the Bretton Woods system collapsed பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு முறை வீழ்ச்சி அடைந்தபொழுது By Nick Beams நேற்றைய தினமானது போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமான திருப்பு முனைகளுள் ஒன்றான பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு முறையின் வீழ்ச்சியின் முப்பதாவது ஆண்டு நிறைவை குறிக்கின்றது. 1971 ஆகஸ்ட் 15 அன்று ஏனைய பிரதான முதலாளித்துவ அரசுகளின் தலைவர்களுக்கு முன்கூட்டி எச்சரிக்கை செய்யாமல், அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ஞாயிறு மாலை நாட்டு மக்களுக்கு வழங்கிய தொலைக்காட்சி உரையில், டொலருக்கு தங்க ஆதாரம் என்பதை அகற்றுவதாகக் குறிப்பிட்டார். 35 டொலர்களுக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்ற வீதத்தில் சர்வதேச டொலர் தங்க மீட்புக்கு அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு, 1944ல் பிரெட்டன் வூட்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் அமைக்கப்பட்ட போருக்குப் பிந்தைய சர்வதேச நிதி அமைப்பிற்கான பிரதான அடித்தளமாக அமைந்திருந்தது. நிக்சனின் ஒருதலைப்பட்சமான முடிவு அதற்கு மரண அடியாக இருந்தது. நிக்சனின் முடிவினது தாக்கம் மற்றும் அதனைப் பின்தொடர்ந்து வந்த முக்கியத்துவம் பற்றி துல்லியமாக அளவிடுவதற்கு பிரெட்டன் வூட்ஸ் அமைப்புக்கான வரலாற்றுப் பின்புலத்தைப்பற்றி எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியமானது. 1944 கோடையில் நியூஹாம்ப்ஷேயர் [New Hampshire] நகரில் ஏற்பட்ட உடன்பாடு அதற்கு முந்திய மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் உள்ள பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்களுக்கு இடையில் நடைபெற்ற நீண்ட வரிசைக்கிரமமான கலந்துரையாடல்களினதும், விவாதங்களினதும் விளைபயனாக இருந்தது. ருஸ்வெல்ட் [Roosevelt] நிர்வாகத்துக்குள்ளே குறிப்பாக கோர்டெல் ஹல் [Cordell Hull] இன் உள்நாட்டமைச்சின் கீழ், 1930களின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் பூகோள பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக இயங்குதலின் செலவில் தேசிய அரசாங்கங்கள் தங்களின் உடனடி உள்நாட்டு நலன்களை பாதுகாத்துக்கொள்ள நாடும் தற்காப்புவாதத்தின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்ற கருத்து அபிவிருத்தி அடைந்தது. இன்னும் இந்தக் குழப்பத்திற்குப் பங்களிக்கும் காரணிகளுள் ஒன்று உலகம் முழுவதுமான மூலதனத்தின் சுதந்திரமான இயக்கம் என்று உணரப்பட்டது. மேலும் அது தேசிய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுடன் தேசிய பணங்களை போட்டி மிக்க வகையில் மதிப்பிறக்கம் செய்யும் இயக்கத்தை அமைத்தது, அது சர்வதேச வர்த்தகத்துடன் அத்தகைய சூறையாடலைச் செய்தது எனக்கூறப்பட்டது. 1941ல் ருஸ்வெல்ட், கடன்விடல் குத்தகை [Terms of Lend Lease] பற்றிய விதிமுறைகள் (இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஊடாக அமெரிக்கா பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு நிதி மற்றும் சடரீதியான உதவிகளை வழங்கியது) பற்றி விவாதிக்க வின்ஸ்டன் சேர்ச்சிலை சந்தித்த பொழுது போருக்குப்பிந்திய சர்வதேச பொருளாதாரத்தின் வடிவத்தைப்பற்றி எண்ணிப்பார்ப்பது முன்னனியில் இருந்தது. எவ்வாறிருந்தபோதிலும், பிரிட்டிஷ் பக்கத்தினரை ஆச்சரியப்படுத்தும் முகமாக, அமெரிக்காவானது சுதந்திர வாணிகத்திற்கு மற்றும் சந்தைகளை பெறக்கூடியதாக இருத்தலுக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அட்லாண்டிக் சாசனத்தில் ஒரு சரத்தினை செருகுவதற்கு வலியுறுத்தியது. "பெரியதோ அல்லது சிறியதோ, வெற்றி பெற்றதோ அல்லது முறியடிக்கப்பட்டதோ எல்லா அரசாங்கத்தாலும் உலகின் மூலப்பொருட்களையும் வர்த்தகத்தையும் சமமான முறைகளில், பெறக்கூடியதாக மேலும் அனுபவித்தலுக்கு" இரண்டு நாடுகளும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டன. தனது பழைய பேரரசின் அடிப்படையில் பிரிட்டன் அமைத்திருந்த வர்த்தகக் கூட்டு போருக்குப்பிந்திய உலகில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. பிரெட்டன் வூட்ஸில் தலைமை பேரம் பேசுபவராக விளங்கிய ஜோன் மேனார்ட் கெயின்சின்[John Maynard Keynes] சுயசரிதையில் றொபேர்ட் ஸ்கைடெல்ஸ்கி [Robert Skidelsky] பின்வருமாறு கூறுகின்றார்: "சிக்கலான விஷயத்தைக் கெட்டிப்படுத்துவதற்காக, ஸ்டேர்லிங் பகுதி மற்றும் பிரிட்டிஷ் பேரரசின் வணிக முக்கியத்துவம் இவற்றினை அடிப்படையாகக் கொண்ட, பிரிட்டனின் போருக்கு முந்திய நிதி மற்றும் வர்த்தக அமைப்பினை அழிப்பதற்கு ஒரு நெம்புகோலாக அமெரிக்கர்கள் கடன் குத்தகையைப் பயன்படுத்தினர்". அதேவேளை பிரிட்டனைப் பொருத்தவரை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் பிரதான இலக்கு கெய்ன்சின் வார்த்தைகளில், "சுதந்திரமான நடவடிக்கை எடுக்க ஆற்றல்தர போதுமான சொத்துக்களைப் பேணிக்கொள்வதாகும்." பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை எந்த பிரச்சினைகள் பிரித்தாலும், அவர்கள் உலகம் முழுவதும் மூலதனம் சுதந்திரமாக இயங்கி வந்த முதலாம் உலகப்போருக்கு முந்திய நிலைக்கு திரும்பமுடியாது என்ற ஒரு விஷயத்தில் ஒன்றாக இருந்தார்கள். 1930களில் உலகப் பொருளாதாரத்தில் பேயாட்டம் போட்ட நெருக்குதல்கள் இல்லாத சர்வதேச வர்த்தகம் இடம் பெற வேண்டும், வர்த்தகத்தையும் பண உறவுகளையும் இடையூறு செய்ய மூலதனம் அனுமதிக்கப்படாத பொழுதுதான் இது இடம்பெற முடியும் எனபதே அவர்களின் விருப்பாகும். இன்றைய வழக்கில் இருக்கும் மரபிலிருந்து அந்த நேரத்து கொள்கை வகுப்பாளர்கள் எவ்வளவு தூரம் விலகி இருந்தார்கள் என்பதை பிரெட்டன் வூட்ஸூக்கான அமெரிக்க கருவூல செயலாளர் ஹென்றி மோர்கெந்தாவின் [Henry Morgenthau] குறிப்புரைகளில் பார்க்க முடியும். 45 நாடுகளில் இருந்து வந்து கூடியிருந்த பிரதிநிதிகளிடம், உடன்பாட்டின் நோக்கம் "சர்வதேச நிதிக்கோவிலில் இருந்து கடும் வட்டி வசூலிக்கும் பணம் கடன் கொடுப்பவர்களை விரட்டுவது" என்று கூறினார். சுதந்திரமான மூலதன இயக்கத்தை அனுமதித்தால் புதிய உடன்பாடு நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவகை ஒழுங்கு படுத்தப்பட்ட முதலாளித்துவ அமைப்பை ஏற்படுத்துதல் சாத்தியமில்லை என்று கெய்ன்ஸ் தெளிவாக கூறினார். "மூலதன இயக்கத்தின் சுதந்திரம் பழைய தலையிடாக்கொள்கையின் அத்தியாவசியமான பகுதி ஆகும். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வட்டி வீதங்களைக் கொண்டிருப்பது சரி என்று ஊகித்துக்கொள்ளும் என்று அவர் வலியுறுத்தினார். மற்றும் எனது கண்ணோட்டத்தில் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் முழு நிர்வாகமும் உலகில் எங்கும் வழக்கில் இருக்கும் வட்டிவீதங்களை கருத்தில் கொள்ளாமல், பொருத்தமான வட்டிவீதத்தைப் பெற சுதந்திரமாய் இருத்தல் மீது சார்ந்துள்ளது. மூலதனக்கட்டுப்பாடு இதற்கு எதிரான பக்கமாகும்." மூலதனக் கட்டுப்பாடு பற்றிய விஷயம் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் முதலாளித்துவ வர்க்கத்தால் எதிர்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்நிலையுடன் நேரடித் தொடர்புடையதாக இருந்தது. முதலாம் உலக யுத்த வெடிப்பு 1917 ரஷ்யப்புரட்சியை கொண்டு வந்ததுடன், 1918- 23 காலகட்டப்பகுதியில் ஐரோப்பாவை நடுநடுங்கவைத்த வரிசைக்கிரமமான புரட்சிகர எழுச்சிகளையும் கொண்டு வந்தது. யுத்தம் விரைவில் முடிவுக்கு வருவதாக தோன்றுவதுடன், 1930களின் நிலைமைகளுக்குத் திரும்புதல் வெடித்தெழும் போராட்டங்களை அதிகம் கொண்டுவரும் என்பதை இட்டு எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் எச்சரிக்கையுடன் இருந்தன. இந்த பின்புலத்தில்தான் கெய்ன்ஸ் மூலதனக் கட்டுப்பாடுகளுக்கான அத்தியாவசியம் பற்றி விளக்கினார். அவற்றை கட்டுப்படுத்தாவிட்டால், வேலையின்மை மற்றும் சமூகநல நடவடிக்கைககள் என்ற வடிவத்தில் சமூக சீர்திருத்தங்கள் செய்ய நினைக்கும் எந்த அரசாங்கமும், "செல்வந்த வர்க்கத்தினரால்" ஏற்பாடு செய்யப்படும் மூலதன வெளியேற்றத்ததினால் அதன் வேலைத்திட்டங்கள் உடனடியாக பயனற்றதாக ஆக்கப்படுவதைக் கண்டு கொள்ளும். வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு சலுகைகளை வழங்க, உருவாக்க மற்றும் ஒட்டுப்போட அரசாங்கங்களை அனுமதிக்க வேண்டி, மூலதனத்தின் புறப்பாட்டால் உண்டு பண்ணப்பட்ட சீர்குலைக்கும் பாதிப்புக்களில் இருந்து அது பாதுகாக்கப்பட வேண்டி இருக்கிறது. யுத்தத்திற்கு பின்னைய காலகட்டத்திற்கான அடித்தளம் 1944 ன் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கை, அதனுடன் நாணயங்களுக்கு இடையிலான நிலையான மாற்று விகித முறை மற்றும் செலுத்துகை சமநிலை கஷ்டங்களுக்குள் ஓடும் நாடுகளுக்கு ஆதரவு, அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவை பொருளாதார ரீதியாக மீளக் கட்டி எழுப்புதற்கான மார்ஷல் திட்டத்துடன் [Marshall Plan-1947-50] சேர்த்து முன்னொருபோதும் இல்லாதவாறான கால் நூற்றாண்டிற்கு முதலாளித்துவ விரிவாக்கத்திற்கான அடித்தளங்களை இட்டது. பூகோளப் பொருளாதாரம் விரைந்து வளர்ந்த மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள், குறைந்தபட்சம் பிரதான முதலாளித்துவ நாடுகளில் அந்த அளவுக்கு முன்னேற்றகரமாக இருந்த காலகட்டம் முன்னரும் சரி அதற்குப்பின்னரும் இருந்ததில்லை. முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை முரண்பாடுகளை பிரெட்டன் வூட்ஸ் அமைப்பால் தீர்க்க முடியவில்லை. உண்மையில், அது உருவாக்க உதவிய அதே பொருளாதார விரிவாக்கம் அம்முரண்பாடுகளை மேலே கொண்டு வந்ததுடன் இறுதியில் போருக்குப் பிந்திய ஒழுங்கை இல்லாமற் செய்வதற்கு வழிவகுத்தது. கெயின்சிய ஒழுங்கமைப்பிற்கு [Keynesian regulation] வக்காலத்து வாங்குபவர்களின் வாதங்களான, மீண்டும் உயிரூட்டப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கை மீது ஏதாவது ஒருவிதமான உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே போருக்குப் பிந்திய ஸ்திரத்தன்மைக்கும் அதனோடு சேர்ந்த சமூக சீர்திருத்தக் கொள்கைக்கும் திரும்பமுடியும் என்ற இந்தப் புள்ளியை வலியுறுத்துவது அவசியமானது. இருப்பினும், இந்த வேலைத்திட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் அம் மூலத்திட்டம் ஏன் பொறிந்து போனது என்று ஒருபோதும் ஆராய்வதில்லை. இந்த நிலை முறிவின் வரலாறு ஒன்றுக்கொன்று உட்தொடர்புடைய இரு நிகழ்ச்சிப்போக்குகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது. முதலாவதாக, உற்பத்தி மற்றும் நிதியின் பூகோள முறையின் அதிகரித்து வரும் அபிவிருத்தி மற்றும் பிரெட்டன் வூட்ஸ் ஒழுங்குக்குள்ளே அமெரிக்காவின் ஒப்பீட்டுரீதியான வீழ்ச்சி மற்றும் தனது பூகோள மேலாதிக்க நிலையைப் பராமரிக்க வேண்டி மூலதனத்தின் சுதந்திரமான இயக்கத்தின் அடிப்படையிலான புதிய அரசாங்கத்தினை நோக்கிய அதன் நகர்வு ஆகியன ஆகும். பொருளாதார ஒழுங்கில் ஏற்பட்ட முதலாவது விரிசல் சிறியதுதான், 1950களின் முடிவில் யூரோ டொலர் சந்தை [Euro Dollar Market] என்று அழைக்கப்பட்டதன் தோற்றத்தில் இருந்து இது எழுந்தது. நாணய மதிப்புக்களின் மீதான ஆரம்ப உடன்பாடு சுதந்திரமான மாற்றுக்கு [Free Convertibility] வழி வழங்கி இருந்தது. ஆனால் 1958 வரை அது இயலாததாயிருந்தது. சுதந்திரமான நாணயமாற்றுக்கான அணுகுமுறைக்கான காலக்கெடு 1957ல் ஸ்டேர்லிங் நெருக்கடியில் உருவாகியது. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கமானது, பிரெட்டன் வூட்ஸ் அமைப்பில் உரிமை அளித்திருந்தாற்போல் மூலதன இயக்கங்களின் மீது கட்டுப்பாடுகள் மூலம் பதிலளித்தது. எவ்வாறிருந்தபோதும் இந்த முடிவானது, பிரிட்டிஷ் வங்கிகளின் நடவடிக்கைகள் முழுவதும் ஊடுருவிச் சென்றது. அவர்களின் அட்லாண்டிக் போட்டியாளர்களின் அரசாங்கம் சர்வதேச கடன் வழங்குதல்களை வெட்டுமாறு நிர்ப்பந்தப்படுத்தினால் அவர்களால் ஒளிமங்கச்செய்யும் நிலையை எண்ணிப் பயந்து, அவர்கள் கட்டுப்பாடுகளை வளைத்துச் செல்வதற்கு நகர்ந்தனர். சர்வதேச நடவடிக்கைகளுக்கு நிதி அளிக்க ஸ்டேர்லிங்கைப் பயன்படுத்துதற்குப் பதிலாக, அவர்கள் வைப்பில் இடப்பட்டிருந்த டொலரைப் பயன்படுத்தி, ஸ்டேர்லிங் கட்டுப்பாடு இருந்த போதிலும் அவர்களின் சர்வதேச நடவடிக்கைகளை தொடர்வதற்கு வழி கண்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பங்கைப் பொறுத்தமட்டில் இந்த புதிய நிதிச் சந்தை அபிவிருத்தியின் பால் இருமுகப் போக்கைக் கொண்டிருந்தது. ஒருபுறம் தேசியக் கொள்கையானது நிதிக் கட்டுப்பாடுகளுக்கான தேவையை ஆணையிட்டது, அதேவேளை மறுபுறம் லண்டன் சர்வதேச நிதியின் மையமாக தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்துவதில் குறியாய் இருந்தது. இதேநேரம் இந்த அமைப்பின் இதே கட்டமைப்புக்குள்ளே வேரூன்றி இருந்த, இன்னொரு முரண்பாடு வெளிப்பட இருந்தது. 1944 உடன்படிக்கைகளின் கீழ் அமெரிக்க டொலரானது உண்மையான உலக நாணயமாக தொழிற்பட்டது. இது அமெரிக்காவுக்கு, எதிர் எதிராக இருக்கும் ஏனைய முதலாளித்துவ அரசுகளைவிட பெரும் சாதகங்களை வழங்கியது. இந்த சாதகங்கள் மட்டுப்பாடு கொண்டவை, குறைந்தபட்சம் தத்துவத்தின் படி, விதிமுறைப்படி 35 டொலர்களுக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்ற வீதத்தில் அமெரிக்க டொலர்களுக்கு தங்க மாற்றீடு செய்ய முடியும். நிதி ஏற்பாடுகளின் வழமையின்படி, தங்க ஆதாரத் திட்டம் உண்மையில் அது பரிசோதனை செய்யப்படாதவரைக்கும் நன்றாக தொழிற்பட்டது. ஆனால் அது முரண்பாட்டைக் கண்டது. இந்த முறையானது தொடர்ந்து இயங்குகின்ற அதேவேளை, உலகின் ஏனைய பகுதியில் பெரும் அளவில் அமெரிக்க டொலர்கள் சுழன்று கொண்டிருப்பது அமெரிக்காவில் வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆதாரத்தினால்தான். ஆனால் சர்வதேசப் பொருளாதாரத்தின் அதே விரிவாக்கம் அமெரிக்க டொலர்கள் வடிவத்தில் சர்வதேசரீதியில் டொலர்கள் அதிகம் புழங்குவதற்கான தேவையை அதிகப்படுத்துவதை நாடி இயங்குகின்றது. அதாவது, பூகோளப்பொருளாதாரம் விரிவடைய விரிவடைய டொலருக்கும் தங்கத்துக்குமான உறவு ஆட்டம் உடையதாக இருக்கும். 1960களில் டொலர் அதற்கேற்ற தங்க இருப்பு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச சுழற்சியில் உள்ள டொலர்களுக்கும் க்னோக்ஸ் கோட்டையில் [Fort Knox- அமெரிக்காவில் தங்கம் வைத்திருக்கப்படும் இடம்] வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆதாரத்தின் மதிப்பிற்கும் இடையிலான வேறுபாடு --வெளிநாட்டில் அமெரிக்க முதலீடு மற்றும் இராணுவச் செலவு ஆகியவற்றின் காரணமாக வளரத் தொடங்கியது. அமெரிக்க நிர்வாகமானது மூலதன நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட கொள்கைகளைத் திணித்ததுடன், மற்றும் அவர்களது பிரிட்டிஷ் எதிர்த்தரப்பினரைப்போல, அமெரிக்க நிதி நலன்கள் தங்களின் சொந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்கான உபயோககரமான சாதனமாக யூரோ டொலர் சந்தையைக் கண்டு கொண்டது. யூரோ டொலர் சந்தை தொடர்பாக அமெரிக்க நிர்வாகமும் இருமுகப்போக்கைக் கொண்டிருந்தது. செலுத்துகைச் சமநிலையின் பற்றாக்குறைக்கு எதிராக மூலதனம் வெளியேறுவதைக்கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதேவேளை, யூரோ டொலர் சந்தை இருத்தலின் அர்த்தமானது, வெளிநாட்டவர்கள் தங்களின் இருப்பினை டொலர்களில்தான் வைத்திருக்க விரும்புவர், அதன் மூலம் அமெரிக்க பணத்தின் மீதான அழுத்தத்தைத் தணிக்கும் என கருதியது. இருப்பினும், யூரோ டொலர் சந்தையின் வளர்ச்சியானது, பிரெட்டன் வூட்ஸில் அமெரிக்க தலைமை பேரம்பேசுபவராக இருந்த ஹாரி டெக்ஸ்டர் வைட் [Harry Dexter White] மற்றும் கெய்ன்ஸ் [Keynes] ஆகியோர் முன்கணித்த பாதிப்பை சரியாகக் கொண்டிருந்தது. நிதி மூலதனத்தின் அதிகரித்துவரும் தொகைகள் இப்பொழுது அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளுக்கு வெளியே உலகைச்சுற்றிலும் நகரக்கூடியதாக ஆகி உள்ளது. நிலையான மாற்றுவீத முறையைத் தக்கவைக்க முடியாதிருந்தது. 1967ல் பவுண்டு அழுத்தத்திற்கு ஆளானது, அதனைத் தொடர்ந்து 1968ல் டொலர் அழுத்தத்தின் கீழ் வந்தது. 1971ல், ஒரு பண்பியல் மாற்றம் இடம் பெறும் வகையில், முதலாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் முதன் முறையாக அமெரிக்கா வர்த்தக சமநிலைப் பற்றாக்குறையை அனுபவித்தது, அது ஆகஸ்டில் நிக்சனின் அறிவிப்புக்கு வழிவகுத்தது. அந்த முடிவிற்குப் பிறகு உடனடியாக ஜப்பான் மற்றும் அதேபோல் ஐரோப்பிய அரசுகளால், பிரெட்டன் வூட்ஸ் திட்டத்தை, சில வடிவத்தில் மூலதனக் கட்டுப்பாடு செயல்முறைகளூடாக, உயிர்த்தெழப்பண்ணுவதற்கான முயற்சிகள் இருந்தன. அவை சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்பதால் அமெரிக்கா அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எதிர்த்தது. ஏனெனில் அதனது சர்வதேச நிலைப்பாட்டில் சமநிலை இன்மையை நிவர்த்தி செய்ய அமெரிக்காவானது, பிரெட்டன் வூட்ஸ் அல்லது வேறு எந்த ஒழுங்கு முறை அமைப்பின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க இருந்தது. அதன் ஒரு வழிமுறை இராணுவச் செலவில், குறிப்பாக வியட்னாம் யுத்த செலவில் வெட்டுவதாக இருந்தது. இதன் அர்த்தம் ஏனைய பிரதான அரசுகளுக்கு எதிராக அமெரிக்க நிலையைப் பலவீனப்படுத்தும். 1971ல் போல் வோக்கரின் [Paul Volcker- அமெரிக்க மத்திய ரிசர்வ் போர்டின் தலைவராக பின்னர் இருந்தவர்] தலைமையின் கீழான நிர்வாகக்குழு அமெரிக்க நிதிப்பற்றாக்குறைக்கு நிதி அளிப்பது "ஐக்கிய அமெரிக்கா வெளிநாடுகளில் அதிக இராணுவச்செலவுகளைச் செய்யவும் மற்றைய அந்நிய கடப்பாடுகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கின்றது" மற்றும் அதன் முக்கியமான இலக்கு "நிதி அமைப்பு முறையில் உள்ள பலவீனங்களால் திணிக்கப்பட்ட இக்கட்டான நிலைமைகளில் இருந்து வெளிவிவகாரக் கொள்கையை... விடுவிக்க" என்று முடித்திருந்தது. 1990களைத் திரும்பிப்பார்த்து வோல்க்கர் குறிப்பிட்டார்: "ஜனாதிபதிகள் --ஜோன்சனும் நிக்சனும் உறுதியாக-- அவர்களது விருப்பத்தேர்வு டொலரின் பலவீனத்தால் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது என்பதைக் கேட்க விரும்பவில்லை." செலுத்துகைச் சமநிலையின் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான இன்னொரு வழி, டொலர் மீதான அழுத்ததைத் தணித்தல் மற்றும் இதன்மூலம் ஐக்கிய அமெரிக்காவில் செலவினங்களை வெட்டக்கூடியதாக ஒழுங்கு முறையைப்பராமரித்தல் ஆகும். ஆனால் அதன் விளைபயன்கள் கடும் பொருளாதார தளர்ச்சியைத் தூண்டிவிடக்கூடும். தொழிலாள வர்க்கத்தில் போர்க்குண எழுச்சி அலை, வியட்னாம் யுத்தத்தால் உண்டுபண்ணப்பட்ட மாணவர்கள் தீவிரவாதமயப்படல் மற்றும் மாநகர்களில் கறுப்பு இளைஞர்களின் கிளர்ச்சி எழுச்சி ஆகியவற்றை எதிர் கொள்கையில், இது விருப்பத்திற்குரிய தேர்வு ஒன்றாக கருதப்படவில்லை. மேலும், மூலதன இயக்கங்கள் மீதான கட்டுப்பாட்டுமுறை நீக்கப்பட்டால் உலகப் பொருளாதாரத்தின் உள்ளே அதன் செல்வாக்கின் காரணமாக அமெரிக்கா அதன் மேலாதிக்க நிலையைப் பராமரிக்க முடியும், சர்வதேச நிதி அமைப்பில் அமெரிக்கா ஆற்றிய பாத்திரத்தின் காரணமாக மற்றைய நாடுகள் டொலர்களை வைத்திருக்க விரும்பும் என்ற கருத்துக்கு ஆளும் வட்டத்தில் கணிசமான ஆதரவு இருந்தது. இந்தக் கண்ணோட்டமானது நிக்சன் நிர்வாகத்தில் இருந்த கருவூல செயலாளர் ஜோன் கொன்னாலி [John Connally] ஆல் ஐரோப்பிய பார்வையாளருக்கான குறிப்புரையில் பின்வருமாறு தொகுக்கப்பட்டது: "டொலர் எங்களது பணமாக இருக்கலாம் ஆனால் அது உங்களது பிரச்சினை." அல்லது அவர் அமெரிக்க பார்வையாளர்களுக்கு கூறியவாறு, "வெளிநாட்டவர்கள் எங்களை வலிந்து இணங்கச் செய்விக்க முடியவில்லை. எமது வேலை முதலில் அவர்களை வலிந்து இணங்கச் செய்விக்க வேண்டும்." பூகோள நிதிச் சந்தைகளின் ஆதிக்கத்தால் விளையும் பொருளாதார மற்றும் சமூக சீரழிவுகளுக்கு மாற்று மருந்தாக உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை ஒழுங்கு படுத்தலுக்கு மற்றும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும், என்று வக்காலத்து வாங்குபவர்கள் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் பொறிவானது கொள்கை முடிவுகளின் விளைபொருள் என்று வாதிடுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. பிரெட்டன்வூட்ஸ் அமைப்பு முறைக்கு திரும்பமுடியாது ஒருவேளை வேறு கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நிகழ்ச்சிகள் வேறு போக்குகளை எடுக்கும். ஆனால் மாற்றுக் கொள்கைகள் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் அழிவைத் தடுத்திருக்க முடியாது. அதன் பொறிவானது அபிவிருத்தியின் புறநிலைப் போக்குகளில் வேரூன்றி உள்ளது. அண்மைய முக்கியமான ஆய்வு ஒன்று குறிப்பிட்டது போல: "தேசிய கொள்கைகளின் ஒத்துழைப்பு என்ற முறைகளில் அதற்கு அளவுக்கு அதிகமாகத் தேவைப்பட்டது. நாடுகள் உள்நாட்டு வளர்ச்சிக்கு மேலும் மேலும் அர்ப்பணித்திருந்தன, அதேவேளை பொருளாதார வளர்ச்சியை இயக்கும் தொழில் நுட்ப சக்திகளுக்கு, சரக்குகளுக்கான சந்தைகள், மற்றும் மூலதனத்தையும் கூட சர்வதேச மயப்படுத்தல் தேவையானதாக இருந்தது. பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் நெருக்கடி குறிப்பாகவும் மற்றும் சிறப்பாகவும் சர்வதேசிய தர்க்கத்துடன் தேசிய பொருளாதார ஒத்துழைப்பின் மோதலின் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்பட முடியும். 1971 சூழ்நிலைமைகளில், இந்த அமைப்பின் இடையூறானது ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைகளில் இருந்தே நேரடியாகவும் மிக உண்மையாகவும் பின் தொடர்ந்தது." (ஹரோல்ட் ஜேம்ஸ், பிரெட்டன் வூட்ஸ்க்குப் பின்னர் சர்வதேச பண ஒத்துழைப்பு, Harold James, International Monetary Cooperation Since Bretton Woods பக்கம்207) பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் பொறிவானது பூகோள அளவில் அபிவிருத்தி அடையும் உற்பத்தி சக்திகளின் உள்ளார்ந்த போக்கிற்கும் தேசிய அரசு அமைப்புக்கும் இடையில் ஆழமடைந்து வரும் முரண்பாட்டின் ஆரம்ப வெளிப்பாடாக இருந்தது. அமெரிக்க டொலருக்கு தங்க ஆதாரம் கொண்டதை அகற்றலைத் தொடர்ந்து, விரைந்தே நிலையான பண உறவுகள் ரத்துச் செய்யப்பட்டது மற்றும் 1980கள் முழுவதும் மூலதனத்தின் நடமாட்டம் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன, இதனால் சர்வதேச சந்தைகளின் அழுத்தத்தின் காரணமாக ஒன்றின் பின் ஒன்றாக நாடுகள் தேசிய கட்டுப்பாடுகளைக் கைவிடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டன. இதன் விளைவு சர்வதேச நிதி அமைப்பின் உள்ளே புயல் அதிர்வுகளின் அலை வீச்சுக்களைக் கூட்டியது. 1987ல் வட்டி வீதக் கொள்கைகள் மீதான அமெரிக்கா மற்றும் ஜேர்மன் பொறுப்பாளர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் நேரடியாக அக்டோபர் பங்குச்சந்தைப் பொறிவிற்கு பங்களித்தது. பூகோள பொறிவினைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, அமெரிக்க மத்திய ரிசேர்வினால் [US Federal Reserve] வழிநடத்தப்படும் நிதிப்பொறுப்பாளர்கள் சர்வதேச நிதி அமைப்பிற்குள் பணப்புழக்கம் அதிகமாகும் வண்ணம் பணத்தைக் கொட்டினார்கள். இந் நடவடிக்கைகள் நிதி சீர்குலைவைத்தடுத்தன. ஆனால் அவை ஜப்பானில் நிதிக் குமிழிகளை பெரிதாக்க உதவியது. அது இறுதியில் 1990களின் தொடக்கத்தில் பொரிந்து, பொருளாதாரத்தை கடன் சுமை எனும் கடலில் என்றுமில்லா ஆழத்திற்கு இழுத்துச் சென்றது. 1990களின் தசாப்தம் 1992ன் ஸ்டேர்லிங் நெருக்கடியைக் கண்டது, அது 1994 பங்குப்பத்திர சந்தையில் குழப்பத்தாலும் 1994-95 ல் மெக்சிகோவைப் பிணை எடுத்ததிலும் தொடரப்பட்டது. அடுத்து 1997ன் ஆசிய நெருக்கடி வந்தது. அதனைத் தொடர்ந்து 1998 ரஷ்ய பணம் செலுத்தத் தவறியது தொடர்ந்தது மற்றும் 1998 செப்டம்பரில் நீண்டகால மூலதன நிர்வாகம் [Long Term Capital Management] பொறிவின்பொழுது முறையே அமெரிக்க நிதி அமைப்புக்கு அச்சுறுத்தல் வந்தது. அந்த அச்சுறுத்தல் 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக ஆபத்தான நிதி நெருக்கடி என்று ஜனாதிபதி கிளிண்டனால் விவரிக்கப்பட்டது. இந்த ஆபத்துக்கள் "புதிய பொருளாதாரத்தின்" ஆரவாரத்தின் பின்னால் மறைந்திருப்பதாகத் தெரியலாம் ஆனால் நீண்டகாலத்திற்கு அல்ல. பூகோள பொருளாதாரத்தின் பின்னால் உள்ள போக்குகள் அமெரிக்காவில் உயர் தொழில் நுட்பத் தொழிலில் நிதிக்குமிழிகள் பொறிதலுடனும் உலக ரீதியான சரிவின் வளர்ந்துவரும் அறிகுறிகளுடனும் மீண்டும் வெளிப்பட்டிருக்கின்றது. உலகப் பொருளாதாரத்தின் முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதறகாகவும் சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும் நோக்கம்கொண்ட பிரதான முதலாளித்துவ அரசுகளின் தேசிய ஒழுங்கமைப்பு வேலைத்திட்டமாக, 1944ல் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1971ல் அதன் அழிவானது புதிய கட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. அது பூகோளரீதியான உற்பத்தியின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச நிதி சந்தையின் மேலாதிக்கம் இவற்றால் பண்பிட்டு காட்டப்பட்டிருக்கின்றது. புதிய பொருளாதார ஒழுங்கில் அதன் பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக முந்தைய அமைப்பின் அடி ஆதாரத்தை, அமெரிக்கா வாரிவிட்டது, அது அவ்வாறு செய்யமுடிந்தது. அது தற்போது வெளிப்படத் தொடங்கி உள்ளது. ஆனால் அதற்கு பெரும் விலை கொடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக அந்த அளவு விடாமுயற்சியுடன் அது முன்னெடுத்துவரும் சுதந்திர சந்தை வேலைத்திட்டமானது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அனைத்து முரண்பாடுகளையும் உக்கிரப்படுத்தி இருக்கின்றது. அதே நேரத்தில், பிரதான முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான
அடிப்படை குறுகலாகிவருவது 1971 ஆகஸ்ட் 15ன் ஒருதலைப்பட்சமான முடிவுடன் ஆரம்பித்தது. இந்த இரு நிகழ்ச்சிப்போக்குகளின்
இணைந்த விளைவானது, உடனடியாக அடுத்து முன்னுள்ள காலப்பகுதியில், உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பெரும்
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் எழுச்சிகளுக்கான சூழ்நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றது. |