WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா :
இலங்கை
Sri Lankan president shuts down parliament and calls
early election
இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை மூடி குறித்த காலத்துக்கு முன்னரே தேர்தலுக்கு அழைப்பு
விடுத்துள்ளார்
By K. Ratnayake
15 October 2001
Use
this version to print
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்தநாள் பாராளுமன்றத்தில்
இடம்பெறவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின்போது பொதுஜன முன்னணி தோல்வியடைவதை தவிர்க்கும்
பொருட்டு, அக்டோபர் 10ம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தைக் கலைத்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தல்
முடிவடைந்து ஒரு வருடம் மாத்திரமே பூர்த்தியாகியுள்ள நிலையில் அடுத்த தேர்தல் டிசம்பர் 5ம் திகதி
இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கூட்டரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டதால் தமது
பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் நிலை ஸ்திரமற்றதாகவே இருந்து வந்தது.
குமாரதுங்க ஜூலை 4ம் திகதி பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைத்ததன் பின்னர், எதிர்க் கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு "தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கான" பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து,
செப்டம்பர் மாதம் மக்கள் விடுதலை முன்னணியுடன் (Janatha
Vimukthi Peramuna- JVP) ஒரு கடைசி நிமிட தீர்வை நோக்கி விரைந்தார்.
குமாரதுங்கவுக்கு ஜே.வி.பி.யின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பெயரளவிலான
பாராளுமன்றப் பெரும்பான்மையை வழங்கியபோது, இந்த சிங்களத் தீவிரவாத கட்சியுடனான இணக்கப்பாடு பொதுஜன
முன்னணிக்குள் பிளவுகளை அதிகரிக்கச் செய்தது. கடந்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கான
நடவடிக்கைகளால் அரசாங்கம் பல வெளியேற்றங்களில் பீடிக்கப்பட்டது. அக்டோபர் 9ம் திகதி மக்கள் ஐக்கிய முன்னணியின்
(MEP) பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அரசாங்கம்
ஜே.வி.பி.யின் தாளங்களுக்கு ஆடுவதாக குற்றம் சாட்டி கட்சிமாறி எதிர்க் கட்சியினரின் ஆசனத்தில் அமர்ந்தார்.
அடுத்தநாள் குமாரதுங்கவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்நாள் சிரேஷ்ட
அமைச்சரவை உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஜி.எல்.பீரிஸ் உட்பட எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்
அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டனர். சில நாட்களுக்கு முன்னர், குமாரதுங்க எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்
கட்சியுடன் சேர்ந்து சதி செய்வதாக குற்றம் சாட்டி ஸ்ரீ.ல.சு.க.வின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து
எஸ்.பி.திசாநாயக்கவை விலக்கினார். இந்த வெளியேற்றங்களால் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்
பொதுஜன முன்னணி 110 ஆசனங்களாக வீழ்ச்சியுற்றது.
அக்டோபர் 10ம் திகதி மாலை, இந்த வெளியேற்றங்கள் மேலும் அதிகரிப்பதற்கான
அச்சறுத்தல்கள் காணப்பட்டன. தமிழ் தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையிலிருந்து விலகி, தானும் ஏனைய இரண்டு இ.தொ.கா.
பாராளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக குறிப்பிட்டார். சிரேஷ்ட
ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்கள் உட்பட ஏனைய அரசாங்க உறுப்பினர்களும் கட்சி மாறும் எண்ணம் கொண்டுள்ளதற்கான அறிகுறிகளும்
இருந்து கொண்டுள்ளன.
திரை மறைவில், வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைச் சந்தித்த ஒரு யூ.என்.பி.
பிரதிநிதி, ஒரு தேசிய அரசாங்கத்துக்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
பொதுஜன முன்னணி, ஜே.வி.பி.யுடனான தமது தயாரிப்புகளை நிறுத்தி, திசாநாயக்கவுக்கும் பீரிசுக்கும் அமைச்சர் பதவிகளை
வழங்கும் ஒரு அரசாங்கத்தை அமைக்க யூ.என்.பி. விடுத்த அழைப்பை நிராகரித்தபோது, யூ.என்.பி. தற்போதைய
பிரதமர் ரட்னசிரி விக்கிரமநாயக்கவுக்கு ஒரு உயர் ஸ்தானத்தை வழங்கும் பொதுஜன முன்னணியின் கோரிக்கையை நிராகரித்தது.
பெரும் வியாபாரிகளின் ஒரு பகுதியினர் ஜே.வி.பி.க்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான
இணக்கப்பாட்டுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிரப்புத் தெரிவித்து வந்தனர். ஜே.வி.பி. தாம் அடிப்படையாகக்
கொண்டுள்ள நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு மத்தியில் வெற்று ஜனரஞ்சக அழைப்புக்களுடனும்,
வெளிப்படையான சிங்கள சோவினிசத்துடனும் நாட்டின் உள்நாட்டு யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலமான எந்த ஒரு
முடிவையும் எதிர்ப்பவர்களுடனும் இணைந்து கொண்டுள்ளது. ஜே.வி.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையிலன புரிந்துணர்வு
அறிக்கை (memorandum of Understanding -MoU),
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) பேச்சுவார்த்தை
நடத்துவதற்கான எந்த ஒரு சாத்தியத்தையும், சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சீர்திருத்த யோசனைகளை
நடைமுறைக்கிடுவதையும் -உடனடி அவசியமாகியுள்ள பொருளாதார உதவிகளுக்கான நிலைமைகள்- இல்லாமல் செய்யும்
என்பதே கம்பனி வட்டாரங்களின் கருத்தாக இருந்தது.
இந்த கருத்துக்களைப் பிரதிபலித்த ஐலன்ட் பத்திரிகை அக்டோபர் 3ம் திகதி
குறிப்பிட்டதாவது: "பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்குலைந்துள்ளமையானது, ஜே.வி.பி.யினர்
சுட்டிக்காட்டிய சில திட்டங்களை அமுலுக்கு கொணரும் ஒரு தற்கொலை நடவடிக்கையின் பெறுபேறாகத் தெரிகின்றது.
பொதுஜன முன்னணி அரசாங்கம் பெருமளவில் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி
போன்ற சர்வதேச நிறுவனங்களாலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. புரிந்துணர்வு அறிக்கை இந்த நிறுவனங்கள்
முன்மொழிந்த, தனியார்மயம் போன்ற பல வேலைத்திட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது." சண்டே டைம்ஸ் பத்திரிகையின்
வியாபாரப் பகுதி, இந்த ஒப்பந்தம் "அனைத்துலக தேசிய வியாபார நம்பிக்கைகளுக்கு போதுமானளவு ஆருடம் கூறவில்லை"
எனக் குறிப்பிட்டது.
கடந்த மூன்று வருடங்களாக, பெரும் வியாபார பிரமுகர்கள், விடுதலைப் புலிகளுடனான
பேச்சுவார்த்தைக்கு கதவுகளைத் திறக்கவும் பொருளாதார மீளமைப்புகளுடன் முன் செல்லவும், பொதுஜன முன்னணியையும்
யூ.என்.பி.யையும் இணைந்து செயற்படுமாறு தூண்டி வந்தனர். ஜூன் மாதம் ஆளும் கூட்டரசாங்கம் தமது
பெரும்பனமையை இழந்ததை அடுத்து, தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கான கோரிக்கைகள் பெருமளவில் எழுப்பப்பட்டன.
ஆனால் அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஒரு தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப்
பின்னரும், இந்தப் பழைய போட்டியாளர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாத
நிலையில், குமாரதுங்க செப்டம்பர் 5ம் திகதி ஜே.வி.பி.யுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.
ஆளும் வட்டாரங்களுக்கிடையிலான ஆதரவுகள் எவ்வாறிருந்தபோதும், நியூயோர்க் மற்றும்
வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலை அடுத்து, பொதுஜன முன்னணி-ஜே.வி.பி. ஒப்பந்தம் இரண்டு
காரணங்களின் பேரில் பலவீனமடையத் துவங்கியது. ஏற்கனவே அபாயகரமான நிலையில் இருந்து கொண்டுள்ள இலங்கையின்
பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் சாத்தியமான தாக்கம் பற்றிய கவலை முதலாவது காரணமாகும் -கடந்த ஆண்டின்
20 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இரண்டாவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 0.4 வீதமாக உள்ள
அதே வேளை ஆண்டின் அரைப்பகுதியில் ஏற்றுமதி 1.4 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.
இரண்டாவதாக ஆளும் வர்க்கத்தின் பகுதியினர், புஷ் இன் "பயங்கரவாதத்துக்கு எதிரான
பூகோள யுத்தத்தை" விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து தாம் விரும்பிய முறையில் பேச்சுவார்த்தை மேசைக்கு
கொண்டுவர இதனை ஒரு புத்திசாலித்தனமான சந்தர்ப்பமாகக் கணித்தனர். ஒரு அரசியல் ஆய்வாளர் எழுதியதாவது:
"விடுதலைப் புலிகள் இந்த நிலைமைகளின் கீழ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள்.
ஏனென்றால் எந்த ஒரு பயங்கரவாதமும் தன்னுடைய ஜீவியத்துக்காக கெடுதியானதாக இருக்கும்." கம்பனி பிரமுகர்கள்
தமது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான பிரச்சாரத்தில் "இன்றில்லையென்றால் என்றும் இல்லை" என சுட்டிக்
காட்டியதோடு, இந்த கோரிக்கைக்கு ஆதரவாக நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் "மனித சங்கிலி" ஆர்ப்பாட்டத்துக்கும்
அழைப்பு விடுத்தன.
இலங்கை வர்த்தக சம்மேளனம் செப்டம்பர் 25ம் திகதி குமாரதுங்கவுக்கு எழுதியபோது,
ஆப்கானிஸ்தான் மீதான விமானத் தாக்குதல்கள் சம்பந்தமாக ஒரு "நிச்சயமற்றத் திட்டத்தைப்" பற்றி கலந்துரையாடுவதற்காக
அவசரக் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. சில நாட்களுக்குப் பின்னர் அதை ஞாபகப்படுத்தும் கடிதம்
ஒன்றையும் அனுப்பியிருந்தது. குமாரதுங்க அதைப் பொருட்படுத்தாத பட்சத்தில் ஏமாற்றம் அதிகரித்தது. ஒரு வியாபார
ஆய்வாளர் டெயிலி மிரர் பத்திரிகைக்கு குறிப்பிட்டதாவது: "இவற்றில் (பிரச்சினைகளில்) பெரும்பாலானவற்றை
ஒரு சிறந்த நிர்வாகம் (அரசாங்கம்) திட்டமிட்டிருக்குமானால் தவிர்த்துக் கொண்டிருக்க முடியும் அல்லது அழுத்தங்களைக்
குறைத்துக் கொண்டிருக்க முடியும். அப்படி நடப்பதை நாம் காணவில்லை. ஆனால் மிகவும் ஆபத்தான தேசிய பிரச்சினைகளை
கணக்கில் கொள்ளாமல் அரசியலிலும் அதிகாரத்திலுமே அதிகளவில் கவனம் செலுத்தப்படுகிறது."
பொதுஜன முன்னணி- யூ.என்.பி. இணைந்த தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கம் ஒரு
விரும்பத்தக்க தேர்வாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஜே.வி.பி.
யுத்தத்தை நிறுத்தும் எந்த ஒரு முயற்சிக்கும் தடையாக இருந்து வந்ததோடு வியூகத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது
-பொதுஜன முன்னணியை பிளவுபடச் செய்து யூ.என்.பி.யை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரந்த கூட்டணியை
அமைக்கும் முயற்சி. பெரும் வியாபாரிகளுக்கு மிக விரைவில் இன்னொரு தேர்தலை நடாத்தும் ஆர்வம் இல்லாத
போதிலும் பதிலீடுகள் எதுவும் கிடையாது என்பதை தெளிவாக உணரந்திருந்தனர்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, தொடர்பு சாதனங்களோடு பேசிய இலங்கையின்
மிகப் பெரிய கம்பனியான ஜோன் கீல்ஸின் தலைவர் விவேன்திரா லின்தொடவல "வியாபாரத்தில் இறங்குவதற்கு ஒரு தெளிவான
பெரும்பான்மையும் அரசியல் ஸ்திரமும் ஒரு சக்திவாய்ந்த அரசாங்கமும் தேவை" என்றார். தேசிய வியாபார
சம்மேளனத்தின் தலைவர் பெற்றிக் அமரசிங்க சுட்டிக்காட்டியதாவது: "பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு ஒரே
பதில் பேச்சுவார்த்தை (யுத்தத்துக்கு) மூலமான தீர்வேயாகும்." யூ.என்.பி.க்கான ஆதரவுக்கு, உடனடியாக 4
சதவீதத்தால் உயர்ந்த, பங்குச் சந்தையின் பிரதிபலிப்புகளும் இன்னொரு தெளிவான அறிகுறியாகும்.
யூ.என்.பி.யினதும் பொதுஜன முன்னணியினதும் கருத்து வேறுபாட்டாளர்கள் அரசியல்
காற்று எந்தத் திசையில் வீசுகின்றது என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர். முன்நாள் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர்
திசாநயக்க ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில், அரசாங்கத்திடம் "நாட்டின் பிரதான பிரச்சினையான
இன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பொருத்தமான உபாயங்களும் நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்ய
போதுமான திட்டங்களும் இல்லாததால் தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாக" குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளுடன்
ஒரு தீர்வைக் காண்பதன் அடிப்படையில் அதிகாரத்தைப் பரவலாக்கும் குமாரதுங்கவின் திட்டத்துக்கு மையமாக இருந்த
பீரிசும் இதே கருத்தையே பிரதிபலித்தார்.
அதே பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒரு குடை அமைப்பை -ஐக்கிய தேசிய முன்னணி- ஸ்தாபிப்பதாக அறிவித்தார். அது
திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC),
தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), தமிழ் காங்கிரஸ்,
மற்றும் ஒரு சிறிய சிங்கள சோவினசக் கட்சியான சிங்களயே மகா சம்பத பூமி புத்திரக் கட்சி போன்றை ஏனைய
பொதுஜன முன்னணி கருத்து வேறுபாட்டாளர்களையும் உள்ளடக்கியதாகும். விக்கிரமசிங்க தான் "சமாதானத்தை மீண்டும்
கொண்டுவரவும்" "பொருளாதாரத்துக்கு புத்துயிர்ப்பு அளிக்கவும்" செயற்படுவதாக குறிப்பிட்டார்.
குமாரதுங்க பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்தில் சிங்கள சோவினசத்தினதும்
மனிதநேய வாய்வீச்சுக்களினதும் ஒரு கலவையை அடிப்படையாகக் கொண்டிருப்பார் என சைகை செய்துள்ளார். அவரும்
அவரது பேச்சாளரும் ஜனநாயகத்தை சக்திபடுத்திய "பொதுஜன முன்னணி-ஜே.வி.பி. புரிந்துணர்வை மூழ்கடிப்பதற்காக
திசாநாயக்கவுக்கும் பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கும் "மாபியா வியாபாரிகள்" பணம் செலுத்தியுள்ளதாக இப்பொழுதே
பரப்பிவருகின்றார்கள்." குமாரதுங்க "யூ.என்.பி. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, பிரிவினைவாத விடுதலைப் புலிகளுடன்
சேர்ந்து சதி செய்வதாகவும்" குற்றம் சாட்டினார்.
அதே பாணியைப் பின்பற்றும் ஜே.வி.பி.யும் "அதிகாரத்துக்கான ஒரு மிதமிஞ்சிய
பேராசையையுடன்" எதிர்க் கட்சி ஆசனங்களில் இருந்தபோது நெருக்கமாக செயற்பட்ட யூ.என்.பி.யை குற்றம்
சாட்டியது. ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, கட்சியின் பிரச்சாரம்
"நாட்டைப் பிரிக்கும் யூ.என்.பி- புலி(LTTE) சதிக்கு"
எதிரான போராட்டத்தை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்துக்கு எதிரான பரந்த எதிர்ப்பை தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரவையும்
ஒரு "நிவாரண நடவடிக்கை" பொதியை அறிவித்துள்ளது. இந்த அனாகரிகமான தேர்தல் இலஞ்சங்கள் அரச ஊழியர்களுக்கான
1,200 ($US17) ரூபா இடைக்கால கொடுப்பணவையும்,
ஒய்வுபெற்றவர்களுக்கு 750 ரூபா ஒய்வூதிய அதிகரிப்பையும், டீசல் வரி விலக்கு, சில வங்கிக் கடன்களுக்கான வரி
விலக்கு, சமையல் வாயுவுக்கும் கோதுமை மாவுக்குமான விலைச் சலுகை மற்றும் பாதுகாப்பு வரியில் ஒரு சதவீத
வெட்டு போன்றவற்றையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இவைகள் அரசாங்கத்தின் ஊழல்களை மூடி மறைத்து கூட்டணியைப்
பாதுகாக்கவும் மற்றும் பிளவுகளைத் தவிர்ப்பதற்குமான அவநம்பிக்கையான முயற்சிகளாகும்.
|