WSWS
:செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா
Bomb attack in Kashmir heightens tensions between India and Pakistan
காஷ்மீர் குண்டுத் தாக்குதல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான
பதட்ட நிலையை அதிகரிக்கின்றது
By Peter Symonds
4 October 2001
Use
this version to print
இந்தியக் கட்டுப்பாட்டிலான ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 1ம் திகதி அரச சட்டசபை
கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அழிவுகரமான தாக்குதல் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கத்
தலைமையிலான யுத்தத் தயாரிப்புகளால் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையிலான அரச மற்றும் மேலதிக இன உறவுகளுடனான பதட்ட நிலையை தெளிவாகத் தோற்றுவித்துள்ளது.
இந்தியத் தொடர்பு சாதனங்களின்படி, ஸ்ரீநகரில் பி.ப. 2 மணியளவில் சில துப்பாக்கிதாரர்கள்
அரசாங்க தொலைத் தொடர்புக்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் வெடிபொருட்களை நிரப்பி அதனை கடுமையான
பாதுகாப்பிடப்பட்டிருந்த கட்டிடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தை நோக்கி ஓட்டிச் சென்றனர். சாரதி
வெடிபொருட்களை வெடிக்கச் செய்த அதேவேளை, அதைத் தொடர்ந்து இடம்பெற்ற கிளர்ச்சியின்போது பொலிஸ்
சீருடை அணிந்திருந்த ஏனையவர்கள் தங்களது ஆயுதங்களால் சுட்டுக்கொண்டே உள்ளே விரைந்து கிரணைட்டுகளையும்
வெடிக்கச் செய்தனர். அவர்கள் கட்டிடத்துக்குள் நுழைந்து தாங்களாகவே ஒரு பாதுகாப்புத் தடையை ஏற்படுத்திக்
கொண்டதை அடுத்து இந்திய இராணுவத்துடனும் பொலிசாருடனுமான ஏழு மணித்தியால மோதலின் பின்னர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டோர் தொகை 38 ஆக அதிகரித்ததோடு பெரும்பாலான சடலங்கள்
கட்டித்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் இந்தியப் பாதுகாப்புப் படையின்
உறுப்பினர்களும் சட்டமன்ற ஊழியர்களும் பொதுமக்களும் அடங்குவர். குண்டு வெடிப்பாலும் துப்பாக்கிப் பிரயோகத்தாலும்
குறைந்த பட்சம் 75க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 10 பேர் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் குறியாகக் கருதக்கூடிய பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னதாகவே ஒரு தற்காலிக
கட்டிடத்துக்குச் சென்றிருந்தனர். அவர்கள் சம்பவத்தின் போது அப்பிரதேசத்தில் இருக்கவில்லை. குண்டு வெடிப்பால்
150 கட்டிடங்களும் கடைகளும் சேதத்துக்குள்ளாகின.
இந்தத் தாக்குதல் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் சில காஷ்மீர் பிரிவினைவாத
ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதுதல்களின் ஒரு விஸ்தரிப்பின் மத்தியிலேயே இடம்பெற்றுள்ளது. அக்டோபர் முதலாம்
திகதிக்கு சற்று முந்திய வாரம் இடம்பெற்ற ஒரு தொடர் மோதல்களில் குறைந்த பட்சம் 70 பேர் பலியாகியுள்ளனர்.
காஷ்மீர் அரசுக்கான கடந்த 12 வருடகால போராட்டத்தில் 30,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்
-துணைக்கண்டத்தின் பிளவைத் தொடர்ந்தும் 1947ல் பிரித்தானியக் காலனித்துவத்திடமிருந்து சுதந்திரம் பெற்றதில்
இருந்தும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடுகளின் உண்மையான உள்ளடக்கமாகும்.
ஸ்ரீநகரில் ஒரு தொடர்புசாதனத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், இஸ்லாமிய
தீவிரவாத அமைப்பான ஜைஸ்-ஈ-மொகமட் (Jaish-e-Mohammad)
புதிய தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தது.
இந்தக் குழு, கடந்த 1999ல் ஒரு இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் சென்றதை முடிவுக்குக்
கொண்டுவருவதன் பேரில் இந்திய அரசாங்கம் விடுதலை செய்த மூன்று தீவிரவாதிகளில் ஒருவரான மசூட் அஸாரால்
உருவாக்கப்பட்டது. எவ்வாறெனினும் இந்த அமைப்பு பாகிஸ்தானில் உள்ள ஒரு பேச்சாளர் மூலம் எந்த ஒரு தலையீட்டில்
இருந்தும் தன்னை தொலைவில் வைத்துக்கொள்ளவே இன்னமும் முயற்சிக்கின்றது.
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கத்துக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கான அமெரிக்காவின்
தயாரிப்புகள் காஷ்மீரில் அரசியல் நிலைமைகளை உக்கிரமடையச் செய்துள்ளது. சில காஷ்மீர் பிரிவினைவாத குழுக்கள்
தலிபானுடனும் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடனும் தொடர்புகளைக் கொண்டுள்ள
அதேவேளை, பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர் ஜெனரால் பேர்வஸ் முஷராப் அமெரிக்க இராணுவத்துக்கு வழங்கிவரும்
ஆதரவை கடுமையாக எதிர்த்துள்ளன.
ஜைஸ்-ஈ-மொகமட் இயக்கம் கடந்த செப்டம்பர் 21ம் திகதி பாகிஸ்தானில் முஷராப்புக்கு
எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிப்பதன் பேரில் லஷ்கார்-ஈ-டொய்பாவுடனும்
(Lashkar-e-Toiba) ஹர்கட்-அல்-முஜஹிதீன்
(Harkat-ul-Mujahideen) மற்றும்
ஏனைய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனும் இணைந்து ஜம்மு காஷ்மீரில் ஒரு வேலை நிறுத்தத்தை ஒழுங்கு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீநகரில் அமெரிக்கக் கொடிகளை எரித்ததோடு தலிபானுக்கு ஆதரவான சுலோகங்களையும்
கோஷித்தனர். அல் உமார் முஜாஹிதீன் (Al Umal
Mujahideen) குழு வெளியிட்ட அறிக்கையில்: ஆப்கானிஸ்தான் மீதான எந்த ஒரு அமெரிக்கத் தாக்குதலின்
போதும் "அமெரிக்காவுக்கு எதிராகப் போராட முஸ்லிம் உலகம் ஐக்கியப்பட வேண்டும்" என அழைப்புவிடுத்திருந்தது.
இந்த வேலை நிறுத்தம் காஷ்மீர் குழுக்களுக்கிடையிலான ஆழமான முரண்பாடுகளை வெளியரங்குக்கு
கொணர்ந்துள்ளது. அனைத்துக் கட்சி ஹுரியாத் மாநாடு
(All Parties Hurriyat Conference -APHC) ஜம்மு காஷ்மீர் மக்களை ஆர்ப்பாட்டங்களுக்கு
ஆதரவளிக்க வேண்டாம் எனக் கோரியதோடு முஷராப்பின் "யதார்த்தமானதும், துணிச்சலானதும் தடையற்றதுமான நிலைப்பாட்டுக்கு"
தமது ஏகமனதான ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தது. ஏ.பீ.எச்.சீ. தலைவர் அப்துல் கானி பாட்
(Abdul Ghani Bhat), நியூயோர்க்
மற்றும் வாஷிங்கடன் மீதான செப்டம்பர் 11ம் திகதிய தாக்குதலை ஏற்கனவே கண்டனம் செய்திருந்தார்.
அரச சட்டமன்றம் மீதான இந்த வாரக் குண்டுத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள
இந்திய அரசாங்கத்துக்கு எதிராக குறிவைக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் காஷ்மீரின் அரசியல் நிலைமைகள்
தொடர்பாக புதுடில்லியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த, தற்போது முஷராப்பின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு
வழங்கி வரும் ஏ.பீ.எச்.சீ. போன்ற காஷ்மீர் இயக்கங்களுக்கு எதிராகவும் குறிவைக்கப்பட்டதாக தோன்றுகின்றது.
செப்டம்பர் 21ம் திகதிய வேலை நிறுத்தத்தை பாட் எதிர்த்ததை அடுத்து அவருக்கு இஸ்லாமியக் குழுக்களின் கூட்டமைப்பு
ஒன்று "ஒரு பெரும் விலையைக் கொடுக்க தயாராகுமாறு" எச்சரிக்கை செய்துள்ளது.
கடந்த வாரம் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை
(Islamic Students Movement of India-
SIMI) தடை செய்து, நாடுமுழுவதிலும் ஒரு பொலிஸ் நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசாங்கத்தின்
-இந்து அடிப்படைவாத பாரதீய ஜனதா கட்சியின் (BJP)
தலைமையிலான ஒரு கூட்டரசாங்கம்- இன ரீதியான நடவடிக்கைகளால் பதட்ட நிலைமைகள் அதிகரித்துள்ளன. குறைந்த
பட்சம் எஸ்.ஐ.எம்.ஐ. தலைவர் ஷாகிப் படார் (Shahib
Badar) உட்பட 240 நடவடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திரப் பிரதேசத்தில்
தடையை எதிர்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் நான்கு பேர் பொலிசாரால்
கொல்லப்பட்டனர்.
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசாங்கம் எஸ்.ஐ.எம்.ஐ. "இனவாதத்தைத்
தூண்டுவதாகவும்" ஒசாமா பின் லேடனின் அல்-குவாடா இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் குற்றம்
சாட்டிய போதிலும் ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை. இந்தத் தடையை, காங்கிரஸ் கட்சி, சமாஜவாதி கட்சி
மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட்ட இந்திய எதிர்க் கட்சிகள், அடுத்து வரும் மாநிலத் தேர்தலில்
இந்து வாக்காளர்களைத் திசை திருப்பவும் பி.ஜே.பி. க்கான ஆதரவை தக்கவைத்துக்கொள்ளவும் உபாயமாக்கிக்
கொண்டுள்ளதாக விமர்சித்தன.
வாஜ்பாய்க்கு ஒரு வரம்
ஜைஸ்-ஈ-மொகமட் பொறுப்பாளியாக இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி
இந்த வாரம் ஸ்ரீநகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு நிச்சயமாக வாஜ்பாய்க்கு உற்சாகமானதாகும். இந்திய அரசாங்கம்,
ஜம்மு-காஷ்மீரில் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை திணிக்கும் அதே வேளை, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கான
பாகிஸ்தானின் ஆதரவை கண்டனம் செய்வதற்காக தாக்குதலை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமது போட்டியாளரை "பயங்கரவாதத்துக்கு
ஆதரவளிக்கும் ஒரு நாடாக" முத்திரை குத்த அமெரிக்காவை வலியுறுத்துகின்றது.
புதுடில்லி, செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்கா மீதான தாக்குதலைத் தொடர்ந்து புஷ்
நிர்வாகம் எதிர்பாராத விதமாக தமது நிலைப்பாட்டை பாகிஸ்தான் பக்கம் நகர்த்தியதை அடுத்து மீண்டும் வாஷிங்டனில்
இடம்பிடிக்கும் ஒரு அவநம்பிகையான தேடலில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா
தமது குளிர் யுத்தகால கூட்டாளியான பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த ஆதரவை புத்திசாலித்தனமாக விலக்கிக்
கொண்டதோடு இந்தியாவுடன் நெருக்கமான மூலோபாய பொருளாதார உறவுகளை ஸ்தாபிதம் செய்து கொண்டது
-இந்த நகர்வுகள் வாஜ்பாய் அரசாங்கத்தால் திறந்த மனதுடன் வரவேற்கப்பட்டன. எவ்வாறெனினும் சில வார
இடைவெளியில், வாஷிங்டன் பாகிஸ்தானில் உள்ள இராணுவ ஜூன்டா மீதான தமது விமர்சனத்தை கைவிட்டதோடு ஆப்கானிஸ்தானுக்கு
எதிரான அமெரிக்காவின் யுத்த நடவடிக்கைகளுக்கு முஷராப் வழங்கி வரும் ஆதரவுக்கு கைமாறாக -இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு
எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பையும் கடந்து- நாட்டுக்கு மிகவும் அவசியமான பொருளாதார உதவிகளை
வழங்கியது.
இந்திய ஆளும் வட்டாரங்களில், இஸ்லாமாபாத் நோக்கிய அமெரிக்காவின் நகர்வுகள்
சம்பந்தமான அவதானங்கள் அதிகரித்துள்ளன. புதுடில்லி வெளியிட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்கா அன்மையில் காஷ்மீர்
இயக்கமான ஹர்கட்-அல்-முஜஹிதீன் (Harkat-Ul-Mujahiddin)
உட்பட்ட பின் லேடனுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக சொல்லப்படும் குழுக்களின் சொத்துக்களை முடக்கி வைக்க
எடுத்த தீர்மானத்தை வரவேற்றுள்ள போதிலும், மேலதிக ஆரம்பிப்புகளுக்கும் அழைப்புவிடுத்துள்ளது. "நாம் அமெரிக்கா
தமது வலையை அகல விரிக்கும்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பாரிய பொருளாதார இணைப்புக்களைக்
கொண்டுள்ளதாகவும் கருதப்படும் இயக்கங்கள் குறிவைக்கப்படுவதை காண்போம் என எதிர்பார்ப்பதாக" ஒரு
பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்தியா, ஸ்ரீநகர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பாளி என பாகிஸ்தானை மொட்டையாக
குற்றம் சாட்டியதோடு தமது மண்ணில் காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும் கோரியது.
இந்திய வெளிவிவகார அமைச்சு அக்டோபர் 1ம் திகதி வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் "தீவிரவாதத்துக்கும்
தீவிரவாத இணைப்பு நடவடிக்கைகளுக்கும் உதவுவதிலும் துணைபோவதிலும் அனுசரனை வழங்குவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு
வரும் ஒரு நாடு" என வலியுறுத்தியது. "ஜனநாயக உலகம் சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக பரந்ததும்
உறுதியானதுமான ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ள ஒரு சந்தர்ப்பத்தில், இந்தியா தமது எல்லைகளில் பகைமையினதும்
பயங்கரத்தினதும் உருவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது" என அது எச்சரிக்கை செய்துள்ளது.
கடந்த வாரம் இரண்டு இந்திய உயர் மட்ட அமைச்சர்கள் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பிரஜேஷ் மிஷ்ரா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங்க்- புஷ் நிர்வாகத்துக்கு புதுடில்லியுடன் ஒரு நெருங்கிய
உறவு இன்னமும் அவசியமாகியுள்ளதா என்பதை மீள உறுதிப்படுத்திக்கொள்ளவும் தமது "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின்"
பாகமாக காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு எதிரான மேலும் ஒரு அமெரிக்க நடவடிக்கைக்காக அழுத்தம் கொடுக்கவும்
வாஷிங்டன் சென்றிருந்தனர்.
அக்டோர் 1ம் திகதி சிங், புஷ்சுக்கு நேரடியாகக் கையளித்த ஒரு விசேட கடிதத்தில்
வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மெல்லிய திறைமறைவிலான பழிவாங்கும் எச்சரிக்கையை விடுத்திருந்தார். இந்தியப்
பிரதமர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கான அமெரிக்கத் தயாரிப்புகளைப் பற்றி
ஆலோசிக்கும் போது, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் வாஷிங்டனுக்குள்ள "மையப் பொறுப்பைப்" பற்றி தாம்
விளங்கிக்கொண்டுள்ளதாக சுட்டிக் காட்டியிருந்தார். "இந்த வன்முறையின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கையால் நாட்டினுள்
புரிந்துணர்வுடனான வெறுப்பு இருந்து கொண்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் எங்களுடைய பாதுகாப்புக்கு கேள்வி
எழுப்புகின்றன. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் தலைவர் என்ற வகையில் நான் எங்களுடைய
உயர்ந்த தேசிய அக்கறையை செலுத்த வேண்டும். பாகிஸ்தான், இந்திய மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு
என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஒரு இந்து அதிதீவிரவாதியான இந்தியாவின் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி ஒரு
படி மேலே சென்றுள்ளார். அக்டோபர் 2ம் திகதி, அவர் மீண்டும் பாகிஸ்தானை ஒரு "பயங்கரவாத நாடாக" முத்திரை
குத்தியதோடு, "இந்தத் திட்டத்தின் மீது (தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல்) தாம் அக்கறை கொண்டிருப்பதாக
நிரூபிக்க வேண்டுமானால்... அது ஜைஸ்-ஈ-மொகமட் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" எனவும்
கோரியிருந்தார். இது தலிபான் பின் லேடனையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்
எனும் அமெரிக்காவின் கோரிக்கையோடு எந்த வகையிலும் வேறுபட்டதல்ல -பாகிஸ்தான் அப்படிச் செய்யாவிட்டால்
இந்தியா அதற்கு இராணுவ ரீதியில் பதிலளிக்கும். அத்வானியும் இந்தியாவின் கோரிக்கையை மீள உச்சரிக்கும் போது,
அமெரிக்கா ஆப்கானிஸ்தானைப் பற்றி மாத்திரம் அக்கறைகொள்ளக் கூடாது, எல்லா பயங்கரவாத முகாம்களுக்கும்,
பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் கொடுத்துவரும் அனுசரனையாளர்கள் மற்றும் நாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி உள்துறை அமைச்சர் ஒமார் அப்துல்லா நேற்று பீ.பீ.சீ.யின் கேள்வி நேரம் இந்தியாவில்
(Question Time India) "பயங்கரவாதிகளின்
பயிற்சி முகாம்களை" அழிக்க இந்தியா தமது துருப்புக்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
"அது வெளிப்படையாக இருக்கக் கூடாது," எனவும் அவர் குறிப்பிட்டார். "உங்களால் அதை இரகசியமாக செய்யவும்,
முகாம்களை அழிக்கவும் முடியும். இல்லையெனில் ஆயிரக்கணக்கானவர்களின் இரத்தக் கசிவுகளில் அதைப் பற்றி சிந்திப்பது
உண்மையான வலியாகாது." பிரதி வீடமைப்பு அமைச்சர் ஐ.டி.சுவாமி அந்தச் செய்தியை மேலும் பலப்படுத்தும்போது,
"பொக்கில் (Pakistan-occupied
Kashmir-PoK) பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்குவது எப்பொழுதும் சாத்தியமானதாகவே
இருந்து வந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.
புஷ் நிர்வாகம் ஸ்ரீநகர் தாக்குதலை கண்டனம் செய்ததோடு, பொதுவில் தமது "பயங்கரவாதத்துக்கு
எதிரான யுத்தம்" "பல பாதைகளைக்" கொண்டதல்ல எனவும் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானைத் தவிர்ந்த ஏனையவைகளுக்கும்
குறிவைக்கப்படும் எனவும் மீள உறுதியளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் சிங்குக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் கொண்டோலீசா ரைசுக்கும் (Condoleezza
Rice) இடையிலான சந்திப்பை மூடிமறைத்த புஷ், இந்திய வெளியுறவு அமைச்சருடன் ஒரு உத்தியோகபூர்வமற்ற
பேச்சுவார்த்தையை நடாத்தினார். ஆனால் அமெரிக்கா ஏற்கனவே ஆட்டம் கண்டுபோயுள்ள பாகிஸ்தான் அரசாங்கதை
தளைக்கச் செய்யும் அக்கறையின் பேரில், புதுடில்லயின் கைக்கு எட்டும் எதனையும் வழங்கவில்லை என இந்திய தொடர்புசாதனங்கள்
மேலும் கருத்து தெரிவித்திருந்தன.
பாகிஸ்தான் தன்பங்குக்கு ஸ்ரீநகர் தாக்குதலை கண்டனம் செய்ததோடு எந்த ஒரு தலையீட்டையும்
நிராகரித்தது. பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சின் ஒரு அறிக்கை, "தங்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான காஷ்மீர்
மக்களின் நியாயமான போராட்டத்துக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலான இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது"
எனக் குறிப்பிட்டுள்ளது. ஏனைய பாகிஸ்தானிய உயர் அதிகாரிகள் இந்தியா, காஷ்மீர் குழுக்களுக்கு எதிராக அமெரிக்காவின்
ஆதரவை பெற்றுக்கொள்வதன் பேரில் இத்தாக்குதலைத் தயார்செய்துள்ளதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார்கள்.
எவ்வாறெனினும் முஷராப் ஒரு சிறந்த வழியில் நடந்து செல்கின்றார். அவர் 1998ல்
முன்னால் பிரதமர் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பிரதேசத்தில் காஷ்மீர் பிரிவினைவாத போராளிகளுக்கு கடிவாளமிடும்
அமெரிக்காவின் கோரிக்கைக்கு அடிபணிந்ததை அடுத்து, இராணுவ உயர் அதிகாரிகளதும் முஸ்லிம் கட்சிகளதும் ஆதரவுடன்
நவாஷ் ஷெரீப்பை வெளியேற்றினார். தற்போது அவர் பாகிஸ்தானுக்குள் தலிபானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத்
தயாரிப்புகளுக்கான தமது ஆதரவின் பேரில் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா ஹர்கட்-அல்-முஜஹிதீனின் சொத்துக்களை முடக்கியதை அடுத்து, பாகிஸ்தான்
அந்த அமைப்பின் காரியாலயத்தையும் மூடத் தள்ளப்பட்டது. முஷராப் காஷ்மீர் குழுக்களுக்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள்
எதையும் எடுக்கத் தள்ளப்பட்டால், அவரால் முன்னையவரைப் போலவே அதே அரசியல் தலைவிதிக்கு இலகுவாக முகம்
கொடுக்க முடியும்.
கடந்த அரைநூற்றாண்டில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டு யுத்தங்களின்
தூண்டுகோலாக விளங்கிய காஷமீர், ஏற்கனவே ஒரு தீப்பற்றும் பெட்டி என்பதையே கடந்த வார சம்பவங்கள்
சுட்டிக்காட்டுகின்றன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எந்த ஒரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும், இந்திய துணைக்
கண்டத்தின் இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான வெளிப்படையான முரண்பாடுகளின் அபாயத்தின் ஒரு
திருப்புமுனையாக உள்ள காஷ்மீருக்குள், உடனடியான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும்.
|