WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
Sri Lankan government prepares for peace talks with
the LTTE
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்
சமாதான பேச்சுக்களுக்கு தயார் செய்கிறது
By K. Ratnayake
13 April 2001
Use
this version to print
நோர்வேயின் நீண்ட மத்தியஸ்தங்களின் பின்னர் இலங்கை
அரசாங்கமும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளும் (LTTE)
நாட்டின் யுத்தத்துக்கு முடிவுகட்டும் பேச்சுவார்த்தைக்கான
திசையில் சென்று கொண்டுள்ளதாகத் தோன்றுகின்றது. எவ்வாறெனினும்
இரண்டு தரப்பினரும் தமது ஆதரவாளர்களை பகைத்துக் கொள்வதையிட்டு
விழிப்பாக இருந்து கொண்டுள்ளதோடு பேச்சுவார்த்தைகள்
ஆரம்பமாகுவதை இழுபட்டுப் போகச் செய்யும் முன்நிபந்தனைகளை
வலியுறுத்திக் கொண்டுள்ளன.
பல மாதங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு
தலைப்பட்சமான யுத்த நிறுத்தப் பிரகடனத்துக்கு கவனம் செலுத்த
மறுத்து வந்த பொதுஜன முன்னணி அரசாங்கம், இறுதியில் கடந்த
வாரம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக உள்ளதாக அறிவித்தது.
வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஏப்பிரல் 3ம் திகதி
பாராளுமன்றத்தில் பேசுகையில் இன்றைய சமாதானப் பேச்சுப்
போக்கில் "மிகவும் கணிசமான முன்னேற்றம்" காணப்பட்டு
உள்ளதாகவும் இது பேச்சுவார்த்தையில் போய்முடியும்
என்பதையிட்டு "நம்பிக்கை" கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP)
ஒரு கேள்விக்கு சுருக்கமாகப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார். 1995ல் பொதுஜன முன்னணி அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு
எதிரான யுத்தத்தினை புதுப்பித்ததன் பின்னர் விடுதலைப் புலிகளுடன்
பேச்சுவார்த்தை நடாத்துவது பற்றிய மிகவும் திட்டவட்டமான
அறிக்கை இதுவேயாகும். கதிர்காமர் இப்பேச்சுவார்த்தைகளுக்கான
திகதியையும் விபரங்களையும் ஏப்பிரல் மாதக் கடைப் பகுதியில்
அறிவிப்பதாகவும் பாராளுமன்றத்தில் கூறினார். தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கான ஒரு சிறு சலுகையாக அரசாங்கம் விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்
தடையை தளர்த்தப் போவதாகவும் ஒரு சில உணவுப் பொருட்களையும்
மருந்துப் பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்
போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கதிர்காமர் இதை அறிவித்த மூன்று நாட்களின் பின்னர்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட்போக் விடுதலைப்
புலிகளின் தலைவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட
வன்னியில் உள்ள மல்லாவியில் சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தைகளின்
போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவரான எஸ்.தமிழ்ச்செல்வன்
சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதற்கான "அவசிய
நிபந்தனைகள்" சிலவற்றை விதித்ததாக தெரிய வருகின்றது. இதில்
அனைத்து ஆயுத மோதுதல்களையும் நிறுத்த வேண்டும் சீமெந்தையும்
எரி பொருட்களையும் எடுத்துச் செல்ல இடமளிக்கும் வகையில்
பொருளாதாரத் தடைகளை மேலும் தளர்த்த வேண்டும்,
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அரசாங்கத்தின் தடையை நீக்க
வேண்டும் என்பனவும் அடங்கும். தமிழ்செல்வன் விடுதலைப் புலி
ஆதரவு தமிழ் நெட்டில் (Tamil
Net) வெளியான ஒரு அறிக்கையில்
"நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு தடைசெய்யப்பட்ட
அமைப்பாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ள
மாட்டோம்" என்றுள்ளார். அரசாங்கம் தமிழீழ விடுதலைப்
புலிகளை அது 1998ல் கண்டி தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல்
நடாத்தியதைத் தொடர்ந்து வளர்ச்சி கண்ட சிங்கள சோவினிச கும்பல்களின்
கூச்சலின் மத்தியில் தடை செய்தது.
இந்த முன் நிபந்தனைகள் பேச்சுவார்த்தைகளுக்கான
சாத்தியங்களை சீர்குலைப்பதாக இருப்பினும் தமிழ்செல்வனின் கருத்துக்கள்
இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீடித்த
தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த வேளையில் நான்கு மாதங்களுக்கு
ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தில் ஈடுபடத் தள்ளப்பட்ட
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை சாந்தப்படுத்தி தலை தப்புவதற்கான
ஒரு முயற்சிப் பண்பையும் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு
மேலும் உதவும் விதத்தில் விடுதலைப் புலிகள் பல இலங்கை இராணுவத்தின்
படையாட்களையும் மீனவர்களையும் விடுதலை செய்துள்ளது.
சமீப மாத காலங்களில் அரசாங்கம் தனது இராணுவ
நிலைகளை கணிசமான அளவு முன்னேற்றம் அடையச் செய்துள்ள
அதே வேளையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு உதவும்
விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேறு சில சிறிய சலுகைகளையும்
வழங்கியுள்ளது. கடந்த புதன் கிழமை அரசாங்கம் தடுப்புக் காவலில்
இருந்த 10 விடுதலைப் புலிகள் அமைப்புக் கைதிகளை விடுதலை செய்வதாகவும்
ஏப்பிரல் 13ம் திகதியில் இருந்து அரசாங்கப் படைகள் தமிழ், சிங்கள
புத்தாண்டின் போது நான்கு நாட்கள் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கும்
எனவும் அறிவித்தது.
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யுத்தத்துக்கு
பேச்சுவார்த்தை மூலம் முடிவுகட்டும் படி கோரும் கணிசமான
நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஏப்பிரல்
மே மாதங்களில் அரசாங்க இராணுவம் விடுதலைப் புலிகளிடம்
தோல்வி கண்டதைத் தொடர்ந்து இராணுவத் தளபாடங்களுக்குப்
பெருமளவு தொகையை செலவு செய்வதன் காரணமாக
பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
பாதுகாப்புச் செலவீனங்கள் 52 பில்லியன் ரூபாய்களில் இருந்து 83
பில்லியன் ரூபாய்களாக அதிகரித்தது. அரசாங்கம் ஆயுதக் கொள்வனவுக்காக
பெருமளவு பணத்தை கடன்பட்டதால் அது பணத் திரவ நெருக்கடியை
உருவாக்கியது. வட்டி வீதம் 26 சதவீதமாக உயர்ந்தது. இறக்குமதிகளைக்
குறைக்கவும் வெளிநாட்டுச் செலாவணியைச் சேகரிக்கவும் மத்திய
வங்கி ரூபாவை மிதக்கவிட்டது. இது ரூபாவின் பண மதிப்பிறக்கத்துக்கும்
உள்நாட்டு விலைவாசிகள் அதிகரிப்புக்கும் இட்டுச் சென்றது.
குமாரதுங்கவும் கூட கடந்த ஆண்டின் பொதுத்
தேர்தலைத் தொடர்ந்து உடைந்து கொண்டுள்ள ஆட்டங்கண்ட
கூட்டரசாங்கத்தினுள் வளர்ச்சி பெறும் பதட்ட நிலைமைக்கு
முகம் கொடுத்துள்ளார். வரவு செலவு மீதான வாக்கெடுப்பு
புதன்கிழமை இடம்பெறுவதற்கு முன்னதாக அவர் இரண்டு கூட்டரசாங்கப்
பங்காளிக் கட்சிகளான இலங்கை முஸ்லிம் காங்கிரசுடனும் (SLMC)
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும்
(CWC) அவசர பேச்சுவார்த்தைகளை
நடாத்த நேரிட்டது. இது அந்த மசோதாவுக்கான வாக்குகளை
உறுதி செய்யும் நடவடிக்கையாக விளங்கியது. ஜனாதிபதி இவ்விரண்டு
கட்சிகளுக்கும் மேலதிக அமைச்சர் பதவிகளை வழங்க இணக்கம்
தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் இத்தகைய சன்மானங்களின்
காரணமாக இலங்கை அமைச்சரவை ஏற்கனவே உலகிலேயே
பெரும் அமைச்சரவையாகப் புகழ் பெற்றுள்ளது.
நாட்டின் அரசியல், பொருளாதார ஈடாட்ட
நிலையானது வெளிநாட்டு முதலீடுகளை நாட்டில் இருந்து வெளியேறச்
செய்துள்ளது. இதே சமயம் உள்ளூர் வர்த்தகர்கள் புதிய முதலீடுகளில்
ஈடுபட அக்கறை காட்டுவதாக இல்லை. இதன் பெறுபேறாக
பங்கு முதல் சந்தை சுட்டெண்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு
வருகின்றது. கடந்த வாரம் இந்தச் சுட்டெண் 419 ஆக விளங்கியது.
கடந்த ஜனவரியில் இது 450 ஆகவும் ஒரு ஆண்டுக்கு முன்னர் 550
ஆகவும் விளங்கியது. அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள்
திரும்பவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு
வருவதை ஊக்குவிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பெரும் வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத்
தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இலங்கை வர்த்தக
சங்கத் (CCC)
தலைவர் சந்திரா ஜயரத்ன சமீபத்தில் விடுத்த ஒரு அறிக்கையில்
பொதுஜன முன்னணியும் சரி எதிர்க் கட்சியான யூ.என்.பி.யும் சரி
மார்ச் 22ம் திகதிய ஒரு வர்த்தக மன்றக் கூட்டத்தின் வேலைத் திட்டத்தில்
குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை கடைப்பிடிக்காது போனால்
பெரும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து எந்த ஒரு தேர்தல்
நிதியையும் எதிர்பார்க்க முடியாது என எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகளின் பட்டியலில் முதலிடத்தில் யுத்தத்துக்கு
முடிவு கட்டும் விடயம் இருந்து கொண்டுள்ளது.
குமாரதுங்கவும் விடுதலைப் புலிகளும் ஒரு உடன்பாட்டுக்கு
வர வேண்டுமென பெரும் வல்லரசுகள் நெருக்கிக் கொண்டுள்ளன.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நாம் விடுதலைப் புலிகளின்
வடக்கு-கிழக்கில் தனிநாட்டை அமைக்கும் கோரிக்கையை எதிர்ப்பதாக
இடைவிடாது கூறி வருவதோடு, கொழும்பு அரசாங்கத்தை ஒரு
பேச்சுவார்த்தை பக்கம் தள்ளியும் வருகின்றன. அவர்களது கவலை
எல்லாம் வடக்கில் இடம்பெறும் இந்த யுத்தம் இந்தியத்
துணைக் கண்டத்தை ஈடாட்டம் காணச் செய்யும் வல்லமையைக்
கொண்டுள்ளது என்பதேயாகும். அத்தோடு அது
பொருளாதார மூலோபாய நலன்களுக்கான முக்கிய அம்சங்களாகவும்
மாறிக் கொண்டுள்ளது.
பெரும் வல்லரசுகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தொடர்பாக கரட்டும் தடியும் அணுகுமுறையையே கடைப்பிடிக்கின்றன.
பிரித்தானியர் சமீபத்தில் அதைத் தடைசெய்வதில் அமெரிக்கா, இலங்கை,
இந்தியா, மலேசியாவுடன் சேர்ந்து கொண்டுள்ளது. இந்நடவடிக்கை
லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் அனைத்துலக தலைமைக் காரியாலயத்துக்கு
ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்திய அரசாங்கம் இந்தியாவில்
உள்ள விடுதலைப் புலிகள் அங்கத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில்
ஈடுபடவும் கடற்படை ரோந்தை விஸ்தரிக்கவும் இதன் மூலம்
விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோக மார்க்கங்களை அடைக்கவும்
போவதாகக் கடும் ஜாடை காட்டிக் கொண்டுள்ளது. எவ்வாறெனினும்
இதே சமயம் விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளில்
ஒரு ஆசனம் வழங்கப்படுவதோடு எந்தவொரு தீர்விலும் ஒரு
பாத்திரம் வகிக்கவும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னொரு போதும் இல்லாத முறையில் இலங்கைக்கான
அமெரிக்கத் தூதுவர் ஆஸ்பி வில்ஸ் மார்ச் முற்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு
விஜயம் செய்ததோடு யாழ்ப்பாண நூல் நிலைய மண்டபத்தில்
தமிழ் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியும் உள்ளார். அவர் அங்கு
அமெரிக்காவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை மீண்டும்
குறிப்பிட்டதோடு, விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து
கொள்ள தயாரானால் அதற்கு எதிரான தடையை நீக்கிக் கொள்ள
அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் ஜாடை காட்டினார். வில்ஸ்
தனது அழகான அணிநடையில் கேள்வி எழுப்பி கூறியதாவது: "தமிழீழ
விடுதலைப் புலிகள் ஒரு ஜனநாயக, அரசியல், வன்முறையற்ற அமைப்பாக
பரிணாமம் செய்யப்பட முடியுமா"? எனக் கேட்டு கூறுகையில்
"அவ்வாறு செய்ய முடிந்தால் அதனை அசிங்கமாக கண்டவர்களும்
-அமெரிக்கா உட்பட- அவர்கள் எவ்வாறு விடுதலைப் புலிகளை கணிக்கிறார்கள்
என்பதை மறுபரிசீலனை செய்யக் கடமைப்படுவர்" என்றுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சமீபத்திய கோரிக்கைகள்
குமாரதுங்க அரசாங்கத்தை ஒரு சங்கடமான நிலைக்குள் தள்ளியுள்ளது.
எந்த ஒரு பெரிய சலுகைகளும் சிங்கள உறுமய கட்சி(SUP)
போன்ற சிங்கள தீவிரவாதக் கட்சிகளின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
கிண்டிவிடும் அச்சுறுத்தல் இருந்து கொண்டுள்ளது. அது எந்தவிதமான
சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வன்மையாக எதிர்ப்பதோடு
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் துடைத்துக் கட்டப்பட வேண்டும்
எனவும் வலியுறுத்திக் கொண்டுள்ளது. கொழும்பில் உள்ள முழு
அரசியல் அமைப்பும் சிங்கள சோவினிச சித்தாந்தத்தை (Sinhala
Chauvinism) அடிப்படையாக பற்றி நிற்கின்றன.
பொதுஜன முன்னணி, யூ.என்.பி. இரண்டும் கணிசமான அளவு எதிர்ப்புக்கள்
தமது சொந்த அணிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றன.
தீவிரவாதிகளின் விமர்சனங்களை ஓரங்கட்டும் ஒரு
பாகமாக குமாரதுங்க சமீப மாத காலங்களில் இராணுவ நடவடிக்கைகளில்
ஈடுபட்டதோடு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு
தொகை நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது. அத்தோடு
அவர் ஒரு இராஜதந்திர பிரச்சார சுற்றுலாவிலும ஈடுபட்டுள்ளார்.
ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், உட்பட்ட ஒரு
தொகை ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள அவர் விடுதலைப்
புலிகளை தடை செய்வதில் அவை பிரித்தானியாவின் முன்மாதிரியைப் பின்பற்ற
வேண்டும் என நெருக்கிக் கொண்டுள்ளார். இதன் மூலம் புலம்பெயர்ந்து
வாழும் தமிழர்களிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கும்
ஆதரவையும் நிதிகளையும் தடுக்கலாம் என எண்ணியுள்ளார்.
ஜனாதிபதி எல்லாவற்றுடனும் சேர்த்து முன் நிபந்தனையற்ற
பேச்சுவார்த்தைகளையே தாம் வலியுறுத்துவதாகக் கூறியதோடு
யுத்த நிறுத்தத்தை கணக்கில் எடுக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
விடுதலைப் புலிகள் அதை தமது இராணுவப் பலத்தை ஸ்திரப்படுத்த
சாதகமாக்கிக் கொள்வதற்கு சுரண்டிக் கொள்ளும் எனக்
கூறியே மறுத்துள்ளார். கடந்த வருடம் அவர் தனது வரையறுக்கப்பட்ட
அதிகாரப் பகிர்வு திட்டங்களை வாபஸ் பெற்றுக் கொள்ள நேரிட்டது.
இது பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை ஸ்தாபிதம் செய்வதை
நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்ட போதிலும் சிங்கள
தீவிரவாதிகள் நடாத்திய பிரச்சாரம் யூ.என்.பி.யை இதற்கு ஆதரவு
வழங்குவதில் இருந்து பின்வாங்கச் செய்தது.
ஒரு சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக
அத்தகைய ஒரு சீர்குலைவு ஏற்படுவதைத் தவிர்க்க யூ.என்.பி.யையும்
எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் சேர்த்துக் கொள்ளும் முயற்சிகள்
இடம்பெற்று வருகின்றன. யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க
ஏப்பிரல் 11ம் திகதி நோர்வே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
நடாத்த ஒஸ்லோ பயணமாக உள்ளார். இந்த விஜயத்தின் நோக்கம்
பகிரங்கமாகத் தெரிவிக்கப்படாத போதிலும் இப்பேச்சுவார்த்தைகள்
அதன் ஆதரவை பெறுவதை -சிலவேளை அதன் நேரடி ஈடுபாட்டை
இலக்காகக் கொண்டவை என்பது தெளிவு. நோர்வேயின் சிறப்புத்
தூதுவர் எறிக் சொல்ஹெயிம் 'லங்கா அக்கடமிக்' என்ற வெளியீட்டுக்கு
சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில்: "இலங்கை நிலைமை இலங்கை
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பொதுஜன முன்னணி -யூ.என்.பி.
ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டுள்ளது" என்றுள்ளார்.
சமாதான நடவடிக்கைகளுக்கு இலங்கையில்
ஆதரவு திரட்டும் முயற்சியாக இந்திய உயர் ஸ்தானிகர் ஏப்பிரல் 4ம்
திகதி ஒரு யூ.என்.பி. பாராளுமன்ற தூதுக்குழுவிடம் பேசுகையில்
நோர்வேயின் ஆரம்பிப்புகளுக்கு இந்தியா பக்கபலமாக இருப்பதாகத்
தெரிவித்துள்ளார். ஏப்பிரல் 12ம் திகதிய டெயிலி மிரர் பத்திரிகையின்
ஆசிரியத் தலையங்கம் யூ.என்.பி. அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதன்
அவசியத்தை வலியுறுத்தி எழுதுகையில் "ஒரு பேச்சுவார்த்தை
மூலமான தீர்வின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொணர்வதில் உள்ள
பெரும் தடையாக நாம் காண்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல.
ஆனால் எமது இரு பெரும் கட்சிகளின் நம்பகமற்ற
தன்மையே" என்றுள்ளது.
நோர்வே தூதுவர் தனது வன்னி விஜயம் பற்றி ஜனாதிபதி
குமாரதுங்கவுக்குக் கூறியுள்ள போதிலும் ஜனாதிபதி விடுதலைப் புலிகளின்
கோரிக்கை பற்றி உத்தியோகபூர்வமாக கருத்து வெளியிடவில்லை.
எவ்வாறெனினும் ஜனாதிபதி குறிப்பாக அந்த வாய் வீச்சினால் அந்தளவுக்கு
குழம்பியதாக தோன்றவில்லை. ஒரு பெயர் குறிப்பிடாத அரசாங்க
அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட அசோசியேட்டட்
பிறஸ் (Associated Press),
ஜனாதிபதி 'இந்த விடயத்தை திறந்த மனதுடன் கலந்துரையாடியதாகவும்"
"பல்வேறுபட்ட அபிப்பிராயங்களும் கொண்ட நிபுணர் குழுக்களது"
கருத்துக்ளை வேண்டியதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள்
இருந்து கொண்டுள்ள அதே வேளையில் யுத்தத்தை முடிவுக்குக்
கொணர்வதற்கான உடன்பாடு பெரிதும் கஷ்டமானதாக விளங்கும்.
மேலும் தமிழ் சிங்கள பிரமுகர்களுக்கு இடையேயான கொடுக்கல்
வாங்கல்கள் பெரிதும் ஆட்டங்கண்டவையாகும். அவை தீவு பூராவும்
உள்ள தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும்
ஜனநாயக உரிமைகளதும் வாழ்க்கைத் தரங்களதும் தவிர்க்க
முடியாத இழப்புக்களின் பேரிலேயே செய்து கொள்ளப்படும்.
|