WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
The cost of the war in Sri Lanka
Tens of thousands of jobs to go under IMF-World Bank
restructuring plans
இலங்கையில் யுத்தத்தின் விலை
உலக வங்கி -சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு
திட்டத்தின் கீழ் பல்லாயிரம் பேர் வேலையிழப்பு
By Vijitha Silva and W.A. Sunil
7 April 2001
Back to screen version
இலங்கை அரசாங்கம், உலக வங்கியினதும் சர்வதேச
நாணய நிதியத்தினதும் (ச.நா.நி) நெருக்குவாரத்தின் கீழ் ஒரு பெரும்
மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை அமுல் செய்யத் தயாராகி
வருகின்றது. இது இலங்கைத் துறைமுக அதிகார சபையிலும் நாட்டின்
நிதித் துறையிலும் பல்லாயிரக் கணக்கான தொழில்களை துடைத்துக்கட்டப்
போகின்றது. இந்நடவடிக்கைகள் எஞ்சியுள்ள ஊழியப் படையின்
சேவை நிலைமைகளையும் பெருமளவு அரிக்கும்.
இந்த மறுசீரமைப்புத் திட்டம் ஆறு மாதங்களுக்கு
முன்னர் பொதுத் தேர்தலின்போது சோசலிச சமத்துவக் கட்சி (SEP)
விடுத்த எச்சரிக்கையை சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளது. எந்தக்
கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அடுத்த அரசாங்கம் தமிழ் சிறுபான்மையினருக்கு
எதிராக இடம் பெற்றுவரும் இன்றைய யுத்தத்தின் சுமைகளை
தொழிலாளர் வர்க்கத்தின் தலைகளில் கட்டியடிக்கும் என அது எச்சரிக்கை
செய்து இருந்தது.
தேர்தலில் மயிரிழையில் வெற்றி பெற்ற ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கவும் அவரது பொதுஜன முன்னணி அரசாங்கமும் கடந்த
ஏப்பிரல் மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துக்கு
ஏற்படுத்திய ஒரு தொகைத் தோல்விகளைத் தொடர்ந்து இராணுவ
யுத்த தளபாடங்களுக்கான செலவை ஏற்கனவே பிரமாண்டமாக
அதிகரித்துக் கொண்டுள்ளது. புதிய யுத்த விமானங்களையும் பல்குழல்
ஏவுகணைகளையும் மற்றும் நவீனமான யுத்த தளபாடங்களையும்
கொள்வனவு செய்யும் பொருட்டு அரசாங்கம் இராணுவ வரவு
செலவுத் திட்டத்தை 5200 கோடி ரூபாக்களில் இருந்து 8300
கோடி ரூபாக்களாக அதிகரித்தது. அரசாங்கத்தின் ஏனைய செலவீனங்கள்
வெட்டித் தள்ளப்பட்டு, அபிவிருத்தித் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தப் பாதுகாப்புச் செலவுகள் இலங்கையின்
பொருளாதார பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியது. எண்ணெய்
விலை உயர்வுடன் சேர்ந்து இராணுவக் கொள்வனவுகள் வர்த்தக வீழ்ச்சிகளையும்
சென்மதி நிலுவைப் பற்றாக் குறைகளையும் ஏற்படுத்தியது. இது
திரவ நெருக்கடியை ஏற்படுத்தியதோடு வட்டி வீதத்தை 13 சதவீதத்தில்
இருந்து 24 சதவீதமாக அதிகரிக்கச் செய்தது. இறுதியாக கடந்த
ஜனவரியில் இலங்கை மத்திய வங்கி ரூபாவை சுதந்திரமாக மிதக்க
விடப் போவதாக அறிவித்தது. இதனால் நாட்டின் நாணயத்தின் மதிப்பு-
அமெரிக்க டாலர்- சுமார் 85 ரூபாவாகியது.
அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை அதிகரிப்பினால்
பாதிக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் தற்போது பிரமாண்டமான
வேலை இழப்புக்களுக்கு முகம் கொடுக்கின்றது. மோசமடைந்த
நாட்டின் வெளிநாட்டு வைப்புக்கள் காரணமாக கடன்களுக்கு
அவஸ்தைப்பட்டு அலைந்த குமாரதுங்க உலக வங்கியினதும் சர்வதேச
நாணய நிதியத்தினதும் நிபந்தனைகளுக்கு இணங்கினார். இது துறைமுகங்களையும்
நாட்டின் நிதித்துறையையும் மறுசீரமைப்பதையும் உள்ளடக்கிக்
கொண்டுள்ளது. முன்னர் பொதுஜன முன்னணி அரசாங்கம்,
தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்களாலும் வேலைநிறுத்தங்களாலும்
அத்தகைய சீர்திருத்தங்களைத் தள்ளி வைத்திருந்தது.
தற்சமயம் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள
தொழில்கள் முன்னர் நல்ல சம்பளமும் பாதுகாப்பும் நிறைந்தவை
எனக் கருத்தப்பட்டவையாகும். சிறப்பாக அரச வங்கி ஊழியர்கள்
ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது அதிகரித்த சம்பளம்
பெற்று வந்ததோடு, ஓய்வூதியம், வைத்திய வசதிகள், வீடமைப்பு
கடன் உட்பட இன்னும் பல நலன்களையும் பெற்றுவந்தனர்.
உலக வங்கி இலங்கையில் அரச ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில்
உள்ளதாக விமர்சித்து வந்துள்ளதோடு -இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்
ஆயிரத்துக்கு 17 ஆக இருக்கையில் இலங்கையில் இது ஆயிரத்துக்கு 57
ஆக உள்ளது- அரசாங்கம் பல தொழில்களை வெட்ட வேண்டும்
எனவும் வலியுறுத்தி வந்துள்ளது.
திட்டமிடல் பெரிதும் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச்சின் இறுதி வாரத்தில் உலக வங்கித் தூதுக் குழு அதனது இந்நாட்டு
பணிப்பாளர் மாரியானா ரொடோறோவா தலைமையில் இலங்கை
வந்தது. துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரொனி டீ மெல்லுடனும்
உயர் அதிகாரிகளுடனும் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் திட்டங்களின்
"காலம், ஒழுங்கு, அளவு" பற்றி மதிப்பீடு செய்யவே அவர்
இலங்கை வந்தார். அரசாங்கம் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை
உரியமுறையில் நடைமுறைப்படுத்த வில்லை எனக் கூறி, துறைமுக அபிவிருத்திக்காக
ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 மில்லியன் டொலர் கடனை உலக வங்கி
முன்னர் நிறுத்தி இருந்தது.
ஜனவரியில் உலக வங்கி முன்னர் இலங்கைக்கு விஜயம்
செய்தபோது வேலைத்திட்டத்தின் பரிமாணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்தி
இருந்தது. பெப்பிரவரி 7ம் திகதி இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர்
மாநாட்டில் டீமெல் கூறியதாவுது: "கொழும்பு துறைமுகம்
பிரமாண்டமான மேலதிக தொழிலாளர்களைக் கொண்டுள்ளதாக
உலக வங்கித் தூதுக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. இது ஓய்வு பெறச்
செய்வதன் மூலமும் வெற்றிடங்களை நிரப்பாமலும் மீளப்பயிற்சி வழங்குவதன்
மூலமும் முடிந்தால் பொன்னான கைலாகு கொடுத்தும் படிப்படியாகக்
குறைக்கப்பட வேண்டும்" என்றார்.
இதே அமைச்சர் ஒரு தொழிற்சங்கத் தூதுக் குழுவிடம்
கடந்த நவம்பரில் பேசுகையில் நெதர்லாந்தின் ரொட்டர்டாம்
துறைமுகத்தில் இருந்து வந்த ஒரு நிபுணர்கள் தூதுக் குழு தன்னுடன்
பேசுகையில் அது கொழும்பின் "மேலதிக வேலைப்படை"
அதனது (துறைமுகத்தின்) மேலாய அபிவிருத்திக்கான "முக்கிய
தடை" யாக உள்ளதாகக் குறிப்பிட்டதாகக் கூறினார். இந்நிபுணர்கள்
14000 தொழிலாளர்கள் அல்லது 18600 மொத்த தொழிலாளர்களில்
78 சதவீதம் "மேலதிகம்" ஆக உள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளோடு
வேலை வெட்டுக்கள் வேலை துரிதப்படுத்தலையும் செலவுக்
குறைப்பையும் இலக்காகக் கொண்டதோடு தனியார்மயத்துக்கான
ஒரு தயாரிப்புமாகும். கொழும்புத் துறைமுக வசதிகளில் ஒரு பகுதி
ஏற்கனவே சவுத் ஏசியா கேட்வே டேர்மினல்சுக்கு விற்பனை செய்யப்பட்டு
விட்டது. அது சிப்பிங் ட்ரான்ஸ் நாஷனல் பீஅன்ட்ஓ உடன் (Shipping
Transnational P&O) இணைந்ததாகும்.
வங்கி மறுசீரமைப்பு
நிதித்துறையில் அரசாங்கம் இலங்கை மத்திய வங்கியையும்
அரசுடமையான இரண்டு வர்த்தக வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள்
வங்கியையும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தையும் தேசிய
காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தையும் இலக்காக்கிக் கொண்டுள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு உலக வங்கி தூதுக் குழு மத்திய
வங்கியைப் பிளப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்காக
கொழும்பு வந்தது. அவர்கள் அனைத்துலக கணக்காய்வு நிறுவனம்,
பிறைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் போன்றவற்றின் ஆலோசகர்களுடன்
சேர்ந்து தொழில் வெட்டின் அளவை தீர்மானம் செய்வதற்கு வங்கிகளின்
ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர்.
மத்திய வங்கி ஆளுனர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு
பெப்பிரவரியில் கூறுகையில் ஆரம்ப மறுசீரமைப்புச் சிபார்சுகளைச்
செய்வதற்காக வங்கி ஒரு ஆலோசகர் குழுவை சேவைக்கு அமர்த்தியுள்ளதாகத்
தெரிவித்திருந்தார். அந்த அறிக்கை வங்கி முக்கியமாக "விலை,
நிதித் துறை ஸ்திரப்பாடு" பற்றி எடுத்துக் காட்டுவதாகவும்
அதனது ஈடுபாடு கிராமியக் கடன்கள் வழங்குவதோடும் புதிய கிராமிய
வங்கிகளை அபிவிருத்தி செய்வதோடும் முடிவு பெறுவதாகவும் தெரிவித்தது.
பல திணைக்களங்கள் இழுத்து மூடப்பட வேண்டுமென கண்டிக்கப்பட்டதோடு
வங்கியின் சுமார் 2500 ஊழியர் படையில் 1000 க்கும் அதிகமானோர்
சேவை நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை கூடவே மத்திய வங்கி ஊழியர் சேமலாப நிதியையும் (Employees'
Provident Fund) ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும்
(Employees Trust Fund) பராமரிக்கும் எந்த
ஒரு பொறுப்பையும் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
பல மாதங்களுக்கு முன்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட
உத்தியோகத்தர்கள் மத்தியில் பேசிய ஒரு வங்கி உயர் அதிகாரி மத்திய
வங்கி "தேவைக்கு அதிகமான ஊழியர்களை" கொண்டுள்ளது
எனவும் அதன் ஊழியர்கள் "நிறுவனத்துக்கு ஒரு செலவுக்கிடமானது"
எனவும் கூறிக் கொண்டுள்ளார். வாழ்க்கைச் செலவு அலவன்சை
உறைய வைப்பது, உணவு, ஆபத்து அலவன்சுகளை ஒழிப்பது, சைக்கிள்
கடனை வெட்டுவது உட்பட செலவுகளை வெட்டும் பல சிபார்சுகள்
பற்றிக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. சேவைக்கு
புதிதாக திரட்டப்பட்டவர்களுக்கு ஓய்வூதிய உரிமை கிடையாது. நிர்வாகம்
இன்றுள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை ஓரேயடியான
நஷ்டஈட்டினால் பதிலீடு செய்யும் திட்டமும் ஆலோசனையில் இருந்து
கொண்டு உள்ளது.
பிரதம நிதி அதிகாரிகள் -லண்டன் சிட்டி வங்கியின் மாஜி
முகாமையாளர் அன்டனி பார்ணர், கொங்கொங் அன்ட் ஷங்காய்
வங்கியின் மாஜி சர்வதேச முகாமையாளர் டெரிக் கொல்லி -ஏற்கனவே
இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் பெரும் பாகங்களைப்
பிரித்து எடுக்கும் வேலைகளுக்கு முறையே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் வங்கியின் ஒரு "குறுகிய கால நடவடிக்கைத் திட்டம்"
பல மாகாண அலுவலகங்களையும் குறைப்பதோடு பிரதேச
முகாமையாளர் பதவிகளையும் ஒழிக்கவுள்ளது. இலங்கை வங்கி
முகாமை, தனது 9000 ஊழியர்களில் 14 சதவீதத்தை நீக்கப் போவதாகவும்
அவர்கள் 'உபரி' எனவும், அவர்களது தொழில் வெட்டுக்கள் ஒரு
சுயவிருப்பு ஓய்வு திட்டத்தின் மூலம் அமுல் செய்யப்படும் எனவும்
அறிவித்துள்ளது. வங்கியின் சில வேலைகள் தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு
கையளிக்கப்படும்.
காப்புறுதித் துறையில் தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
தனியார்மயமாக்கப்பட உள்ளது. கடந்த பெப்பிரவரியில் இருந்து
இதன் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில்
பெரும் காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்
தாபனமும் ஒரு செலவு வெட்டு திட்டத்தை அமுல் செய்யும். இது
"உபரி ஊழியர்களை" -சுமார் 1000 வேலைகள் அல்லது ஊழியப்
படையின் ஆறில் ஒன்று- வேலை நீக்கம் செய்வதையும் உள்ளடக்கி
கொண்டுள்ளது.
இலங்கை வர்த்தக, கைத்தொழிலாளர், பொது
தொழிலாளர் சங்கம் (CMU)
துறைமுகம் பீ அன்ட் ஓ கூட்டான சவுத் ஏசியா கேட்வே டேர்மினல்சுக்கு
(South Asia GateWay Terminals)
விற்பனை செய்வதை எதிர்த்து 1998ல் ஒரு அடையாள பிரச்சார இயக்கத்தில்
ஈடுபட்டது. 1998ல் சிங்கள சோவினிச ஜே.வி.பி. ஆதரவு அகில இலங்கை
துறைமுகத் தொழிலாளர் சங்கமும் ஐக்கிய தேசியக் கட்சி கட்டுப்பாட்டிலான
ஜாதிக சேவக சங்கமும் (JSS)
துறைமுகம் "பன்னாட்டுக் கம்பனி பீ அன்ட் ஓ" வுக்கு அல்லாமல்
ஜப்பானிய சர்வதேச கூட்டுத்தாபன ஏஜன்சிக்கே விற்பனை செய்யப்பட
வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் இந்தச் சகல தொழிற் சங்கங்களும்
(International Cooperation
Agency) இந்த பல்லாயிரக் கணக்கான
வேலைகளை வெட்டும் திட்டங்களை பற்றி அடியோடு மெளனம்
சாதித்துக் கொண்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியில் மத்திய வங்கி ஊழியர் சங்கம்
இந்த மறுசீரமைப்பு திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கவில்லை.
பல சிறிய தொழிற்சங்கங்கள் அதிக அளவிலான சேவை இழப்பு கொடுப்பனவுகளின்
பேரில் வேலைகளை விற்றுத் தள்ள அவை தயாராக உள்ளதைக்
காட்டிக் கொண்டுள்ளன. இலங்கை வங்கி ஊழியர் சங்கத் தலைவரான
பீ.பண்டார "ஆம் நஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வங்கிகள் வீழ்ச்சி
கண்டு போவதை தடுக்க நாம் இந்தத் திட்டங்களை ஏற்றுக்
கொண்டோம் இங்ஙனம் செயற்படாமல் இன்றைய போட்டியின்
அடிப்படையில் நாம் அரச வங்கிகளைப் பாதுகாக்க
முடியாது" என்றார்.
எந்த ஒரு தொழிற்சங்கத் தலைவரும் சரி உலக
வங்கியினதோ அல்லது சர்வதேச நாணய நிதியத்தினதோ அல்லது நிர்வாகத்தின்
உரிமைகளையோ திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தையின் கட்டளைகளைச்
சவால் செய்யத் தயாராக இல்லை. மேலும் இவர்கள் அனைவரும்
ஏதோ ஒரு வழியில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்க
இடம்பெறும் யுத்தத்தை ஏற்றுக் கொள்ளவும் அடுத்தடுத்து பதவிக்கு
வரும் அரசாங்கங்களின் -பொதுஜன முன்னணி, யூ.என்.பி. -கோரிக்கையான
தொழிலாளர் வர்க்கம் யுத்த நடவடிக்கைகளுக்கு அர்ப்பணம்
செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அங்கீகரிக்கவும்
தயாராக உள்ளனர்.
பொதுஜன முன்னணி, யூ.என்.பி, ஜே.வி.பி, மக்கள் ஐக்கிய
முன்னணியைச் (MEP)
சேர்ந்த தொழிற்சங்கங்கள் வெளிவெளியாக யுத்தத்தையும் அதனது
பிற்போக்கு இலக்குகளையும் பேணுகின்றன. இலங்கை வர்த்தக
ஊழியர் சங்கம் (CMU),
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போன்றவை அரசாங்கத்தை விடுதலைப்
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு சமாதான தீர்வை எட்டும்படி
கோருகின்றன. எவ்வாறெனினும் இவற்றில் எதுவும் வடக்கு-கிழக்கில்
இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக்
கொணரும்படி கோரவில்லை. இதனால் இவை தொழிலாளர்கள்
-சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் ஒரே விதத்தில்- இந்த காட்டுமிராண்டி
மோதுதலின் விளைவுகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து
வலியுறுத்தச் செய்கின்றனர்.
அரசாங்கத்தின் சமீபத்திய மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தின்
பேரிலான தொழிலாளர்களின் அக்கறை, தொழில்களையும் வேலை
நிலைமைகளையும் காப்பது என்பது யுத்தத்துக்கு எதிரான பரந்த
போராட்டத்துடனும் சமுதாயத்தை சோசலிச அடிப்படையில்
புதுக்கி அமைப்பதுடனும் அடியோடு இணைந்து கொண்டுள்ளதைச்
சுட்டிக் காட்டுகின்றது.
|