WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
Sri Lankan government to privatise remaining factories in
the war-torn north
இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் சின்னாபின்னமான
வடக்கில் எஞ்சியுள்ள பக்டரிகளையும் தனியார்மயமாக்குகிறது
By S. Rajendran
3 May 2001
Back to screen version
இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் சின்னாபின்னமான
வட மாகாணத்தில் எஞ்சிக் கிடக்கும் அரசுடமை நிறுவனங்களான
இரண்டு சீநோர் தொழிற்சாலைகளை நோர்த் சீ (North
Sea Ltd) என்ற தனியார் கம்பனிக்கு விற்றுத்தள்ள
ஆயத்தமாகி வருவதாக ஏப்பிரல் 11ம் திகதி அறிவித்துள்ளது. இந்த
தனியார்மயமாக்கம் ஒரு நீண்டகால போக்கின் பெறுபேறாகும்.
இக்காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொழிற்சங்கங்களின்
உதவியோடு தொழிலாளர்களின் எதிர்ப்புக்களுக்கு குழிபறித்ததோடு,
தொழில்களை வெட்டி பக்டரிகளையும் இழுத்து மூடின.
வடமாகாண புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சரும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP)
தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இந்த அறிவித்தலை விடுத்து
இருந்தார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக
இன்று இடம்பெறும் யுத்தத்தின் மத்தியில் அவரது ஏனைய "புனர்வாழ்வு"
நடவடிக்கைகளுள் பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஆனையிறவு
உப்பளங்களை தனியார் கம்பனிகளிடம் கையளிப்பதும் அடங்கும்.
இந்த நிறுவனங்களுள் எதுவும் மீண்டும் திறக்குமா
இல்லையா என்பது இந்த தனியார் கம்பனிகள் இலாபம் சம்பாதிக்குமா
என்பதிலேயே தங்கியுள்ளது. அங்கு சந்தேகத்துக்கு இடமற்ற விதத்தில்
சில தொழில்களும் மோசமான சேவை நிலைமைகளுமே இருந்து
கொண்டுள்ளன. மேலும் இரசாயன தொழிற்சாலையும், உப்பு உற்பத்தி
வளங்களும் ஆனையிறவுக்குச் சமீபமாகவே உள்ளன. கடந்த ஆண்டில்
இராணுவம் இதைப் பறிகொடுத்ததன் பின்னர் இது விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
இந்த தொழிற்சாலைகளின் தனியார்மயம், சர்வதேச
நாணய நிதியமும் உலக வங்கியும் வலியுறுத்தி வரும் பொருளாதார
மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாகும். பிரமாண்டமான
இராணுவச் செலவீனங்கள், எண்ணெய் விலைகளின் அதிகரிப்பின் காரணமாகப்
பெரும் வரவு செலவுத்திட்ட, நிதி நெருக்கடிகளுக்கு முகம்
கொடுத்துள்ள அரசாங்கம் இப்போது சென்மதி நிலுவை நெருக்கடியைத்
தவிர்க்கும் பொருட்டு கடன்களை பெருமளவில் பெற முயற்சிக்கின்றது.
இரண்டு சீ-நோர் தொழிற்சாலைகளும் இராணுவத்தினால்
காரைநகரிலும் (பெரும் கடற்படைத் தளம்) குருநகரிலும் "உயர்
பாதுகாப்பு வலயம்" ஆகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள
பகுதிகளில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரின் வெளிப்புறத்தில் உள்ள
குருநகர் தொழிற்சாலை மீன்வலை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த
அதே சமயம் காரைநகர் தொழிற்சாலை பைபர் கிளாஸ் (Fibre
Glass) மீன்பிடி படகு உற்பத்தியில் ஈடுபட்டு
இருந்தது. 1960பதுகளிலும் 1970பதுகளிலும் நோர்வே அமைப்பான
'நொராட்டின்' (NORAD)
நிதி உதவியோடு இவை அமைக்கப்பட்டன.
1983ல் யுத்தம் வெடிப்பதற்கு முன்னர் சீ-நோர்
தொழிற்சாலையில் சுமார் 800 தொழிலாளர் வேலைக்கு அமர்த்தப்பட்டு
இருந்தார்கள். ஆனால் இந்த மோதுதல் படிப்படியாக உக்கிரம்
கண்டதைத் தொடர்ந்து நிர்வாகம் உற்பத்தியை வெட்டியதோடு,
ஊழியர்களில் பெரும்பாலானோரை வேலை நீக்கமும் செய்தது.
இதில் பெரும்பாலானோர் அமைய ஊழியர்களாக விளங்கினர். 1991ல்
யூ.என்.பி. அரசாங்கம் இத் தொழிற்சாலைகளை இழுத்து மூடும்
தனது திட்டத்தை அறிவித்தபோது ஊழியப் படையின் எண்ணிக்கை சுமார்
100 ஆக வெட்டிக் குறைக்கப்பட்டது.
தொழிற்சாலை நிர்வாகம் ஒரு சுயவிருப்பு ஓய்வூதியத்
திட்டத்தின் அடிப்படையில் ஒரு சிறிய தொகையை -ரூபா 20,000- நஷ்ட
ஈடாக வழங்கி, எஞ்சிய தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய
ஆயத்தமாகியது. இதற்கு பாலா தம்பு தலைமையிலான இலங்கை வர்த்தக
ஊழியர் சங்கமும் (CMU)
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இலங்கை பொறியியல் தொழிலாளர்
சங்கமும் ஆதரவு வழங்கின.
யுத்தத்தின் காரணமாக தொழிற்சாலை இழுத்து
மூடப்பட்ட போது தொழிலாளர்களில் பலரும் நஷ்ட ஈட்டுப் பணத்தை
ஏற்றுக் கொண்டனர். ஆனால் சீ.எம்.யூ. வின் 26 அங்கத்தவர்கள்
தலைமையின் ஆலோசனையை நிராகரித்து, புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் (இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) பக்கம்
திரும்பினர். தொழில் உரிமையைக் காக்கும் போராட்டத்தைத்
தொடுக்க உதவி கோரினர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு
வந்த ஒரு தொழிற்சங்கத் தூதுக் குழு சீ.எம்.யூ. தலைமைப் பீடத்துடன்
பேச்சுவார்த்தை நடாத்தியது. தொழில் உரிமை மீதான தாக்குதல்,
யுத்தம், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
பொருளாதார மறுசீரமைப்பு போன்ற பரந்த அளவிலான பிரச்சினைகளுடன்
பிணைந்த விடயம் என அவர்கள் சுட்டிக் காட்டினர்.
பாலா தம்புவும் சீ.எம்.யூ. தலைமைப் பீடமும்
தொழில்களைக் காக்கும் எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடுவதை
எதிர்க்கின்றது. ஏனெனில் அப்போராட்டம் அரசாங்கத்தின்
பொருளாதாரக் கொள்கைகளையும் தமிழ் சிறுபான்மையினரின்
ஜனநாயக உரிமைகளை நசுக்கும் காட்டுமிராண்டி யுத்தத்திற்கும்
எதிராக அதைச் சவால் செய்வதாகவும் அது அமைந்து விடலாம்
என்பதே. யுத்தம் காரணமாக தொழிலாளர்கள் அப்பிராந்தியத்தில்
இருந்து வெளியேறத் தள்ளப்பட்டனர்.
இறுதியாக 1998ல் சீ.எம்.யூ. 26 தொழிலாளர்களுக்கும்
1991ல் இருந்து 1998 வரைக்கான காலப் பகுதிக்கு அரைமாதச்
சம்பளப் பாக்கியும் மீள சேவையில் அமர்த்தப்படும் வரை அரைச்சம்பளமும்
செலுத்தும் ஒரு உடன்படிக்கையை நிர்வாகத்துடன் முடைந்து
கொண்டது. இந்த 26 பேரில் 8 பேர் முழுச் சம்பளத்தில் மீளச்
சேவைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர்.
இரண்டு வருடங்களின் பின்னர் அரசாங்கம் 'வடக்கை
புனர்நிர்மாணம் செய்யும்" பேரில் தொழிற்சாலையை மீளத்
திறக்காமல் அதை விற்றுத் தள்ளியுள்ளது. அமைச்சர் தேவானந்தா
இந்த 26 ஊழியர்களது தலைவிதியைப் பற்றி எதுவும் கூறவில்லை. இவர்கள்
சகலரும் அவர்களது தொழில்களை இழக்கும் பெரும் சாத்தியம்
இருந்து கொண்டுள்ளது.
சீ.எம்.யூ. அதனது மூல மனப்பாங்குக்கு இணங்க
அரசாங்கத் தீர்மானத்தையும் தொழில் இழப்பையும் ஏற்கனவே
ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு சீ-நோர் சீ.எம்.யூ. அங்கத்தவர் சங்கச்
செயலாளர் ஜெகநாதனிடம் இதைப் பற்றிக் கேட்டபோது:
"சீ.எம்.யூ. தனியார்மயத்தை நிறுத்த எதுவும் செய்ய முடியாது.
இது அரசாங்கத்தின் ஒரு அரசியல் தீர்மானம். அத்தோடு ஒரு
அரசியல் விடயமாகும்." அவர் நஷ்ட ஈட்டுக்காகப் பேரம்
பேசத் தயாராக இருப்பதாக கூறிக் கொண்டார்.
எந்த ஒரு தொழிற்சங்க நடவடிக்கையும் பல
தொழிலாளர்களையும் சிறப்பாக வழக்கத்துக்கு மாறாகப் பாதிக்கப்
போவதில்லை. கடந்த இரண்டு தசாப்த காலங்களாக தொழிற்சங்கங்கள்
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை கட்டிக் காக்க மறுத்தமையின்
பேரில் பிரபல்யம் அடைந்து விட்டன. அவை பூகோள ரீதியில்
அலையும் மூலதனத்தின் கட்டளைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது
திணிப்பதில் அரசாங்கங்களுடனும் கூட்டுத்தாபனங்களுடனும் கலந்துரையாடுகின்றன.
இந்த விடயம் சீரழிவின் பரிமாணத்தை எடுத்துக் காட்டிக்
கொண்டுள்ளது. சீ.எம்.யூ. 1928ல் வர்த்தகத் துறையில் ஒரு வெண்ணிற
ஆடை (white-collar) தரித்த
ஊழியர் தொழிற்சங்கமாக ஸ்தாபிக்கப்பட்டது. 1948ல் பெப்பிரவரியில்
பாலா தம்பு இதனது பொதுச் செயலாளரான பின்பு இது லங்கா
சமசமாஜக் கட்சியின் (LSSP)
செல்வாக்கின் கீழ் வந்தது. அப்போது அக்கட்சி ட்ரொட்ஸ்கிசக்
கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1950பதுகளிலும்
1960பதுகளிலும் தம்பு அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின்
அரசியல் தீர்மானங்களை போர்க்குணம் மிக்க முறையில் சவால்
செய்தமைக்கு புகழ் பெற்று விளங்கினார். 1963ல் அவர் கொழும்புத்
துறைமுக வேலைநிறுத்தத்துக்கு தலைமை தாங்கியதோடு அது ஒரு
நாடளாவிய ரீதியிலான பொது வேலை நிறுத்தமாக பரந்துபட்டது.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் அவசரகால சட்ட
அதிகாரங்களை பிறப்பித்த போது அதை மீறிச் செயற்பட்டது.
1964ல் லங்கா சமசமாஜக் கட்சி தனது சோசலிசக்
கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தில்
சேர்ந்த போது, தம்பு சமசமாஜக் கட்சியில் இருந்து விலகினார்.
ஆனால் அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பில்
இருந்து அவசியமான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளத் தவறினார்.
இதனால் ஒரு தேசியவாத பார்வையையே அரவணைத்துக் கொண்டார்.
தம்பு இலங்கையின் உள்ளும் அனைத்துலகிலும் பல்வேறு தீவிரவாதக்
குழுக்களாலும் ஒரு போராளியாகவும் ஒரு சோசலிஸ்ட் ஆகவும்
அது மட்டுமன்றி ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் ஆகவும் கூட பொறுக்கி எடுக்கப்பட்டு
வந்துள்ளார்.
இன்று தனது 79 வயதிலும் கூட தம்பு சீ.எம்.யூ.வின்
பொதுச் செயலாளராக விளங்குவதோடு அரசாங்கத்துடனும், முதலாளிமார்களுடனுமான
பெரும் பேரம் பேசல்களிலும் உசாராகவும் பங்கு கொள்கின்றார்.
ஆனால் சீ-நோர் தனியார்மயமாக்கம் தொடர்பான அதன் மனப்பாங்கு
காட்டிக் கொண்டுள்ளது போல் சீ.எம்.யூ. தலைமையில் ஒரு துளி
புரட்சிகர சோசலிசமும் எஞ்சியில்லை. அது இலங்கை முதலாளித்துவத்தினதும்
அரசாங்கத்தினதும் நலன்களுக்கு முற்றிலும் அடிபணிந்து போயுள்ளது.
இதனது நேரடி விளைவுகளை தாங்கிக் கொள்ளப்
போகிறவர்கள் சீ-நோரின் 26 தொழிலாளர்கள் மட்டுமல்ல. அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் வலியுறுத்தலின்
பேரில் பாரதூரமான விளைவுகளைக் கொண்ட மறுசீரமைப்பு திட்டத்தை
திணிக்கத் தயாராகி வருகின்றது. இதனால் சீ.எம்.யூ. வின் முக்கிய தளங்களில்
ஒன்றான கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சுமார் 14,000
தொழில்கள் ஒழிக்கப்படும். காலம் செல்லச் செல்ல சினம்
கொண்ட அங்கத்தவர்களைச் சமாளிக்க சீ.எம்.யூ. தலைமை
போர்க்குணம் கொண்ட வாய்வீச்சுக்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு
என ஒருவர் அனுமானிக்க முடியும். ஆனால் அதை வழிப்படுத்தும்
கொள்கைகள் ஒன்றாகவே விளங்கும்: "இது அரசாங்கத்தின்
ஒரு அரசியல் தீர்மானம். இதைத் தடுக்க நாம் எதுவும் செய்ய
முடியாது."
சீ.நோரில் சோசலிச சமத்துவக் கட்சியின் உதவியுடன்
26 தொழிலாளர்களும் தமது தொழில் உரிமை காக்கும் போராட்டத்தில்
ஈடுபடுவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டுள்ளனர்.
|