World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

SEP member in Sri Lanka victimised and sacked

சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர் பழிவாங்கப்பட்டு வேலை நீக்கம்

By Deepal Jayasekara
2 April 2001

Back to screen version

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அதனது அங்கத்தவர் பீ.ஏ.சரத்குமார எலாஸ்டோமெரிக் ஏன்சினியர்ஸ் கம்பனியில் (Elastomeric Engineering Company) இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஒரு பிரச்சார இயக்கத்தை தொடுக்கவும் ஆயத்தம் செய்து வருகின்றது. நிர்வாகம் சரத்தை கடந்த அக்டோபரில் ஒரு தொகை பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்து, ஒரு விசாரணையையும் ஆரம்பித்து வைத்தது. பெப்பிரவரி முற்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட காலத்தில் இருந்து அவர் சேவை நீக்கம் செய்யப்படுவதாகக் கூறும் கடிதம் கிடைத்தது. மூன்று வாரங்களின் பின்னர், பாக்கிப் பணம் ஏதும் இருப்பின் அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்கும் இன்னொரு கடிதம் அவருக்கு வந்தது.

சரத்தின் வேலை நீக்கம் கம்பனியின் மறுசீரமைப்புத் திட்டங்களை எதிர்க்கும் எந்த ஒரு தொழிலாளியையும் கிண்டிவிட்டுப் பழிவாங்கும் ஒரு அப்பட்டமான நடவடிக்கையாக விளங்கியது. சரத் தமக்கு எதிராக சகல குற்றச்சாட்டுக்களையும் மறுத்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தொழிலாளர்கள் மத்தியில் விநியோகித்தமை, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, கம்பனி உடமைகளை அவரின் பெட்டகத்தில் வைத்தமை என்பனவே அக்குற்றச்சாட்டுகள். அவர் தனது பாக்கிப் பணங்களை திரட்டிக் கொள்ள மறுத்து, ஒரு சட்ட நடவடிக்கையில் ஈடுபட தயார் செய்து வருகின்றார்.

சரத், பக்டரி வேலை நேரத்தின் போது பக்டரியினுள் சோ.ச.க. தேர்தல் அறிக்கை பிரதிகளை விநியோகித்தார் என ஒப்புக் கொண்டு எழுத்து மூலமான அறிக்கை வழங்க மறுத்ததை தொடர்ந்தே அவர் அக்டோபர் 4ம் திகதி சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டார். அவரின் இந்த மறுப்பு 'நிர்வாகத்துக்கு" கீழ்ப்படிய மறுத்தார் என்பதற்கான அடிப்படையாகியது. ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெறுவதில் தோல்வி கண்ட நிர்வாகம், அவரது பெட்டகத்தை உடைத்து சோ.ச.க. தேர்தல் விஞ்ஞாபன பிரதிகளையும் கட்சிப் பத்திரிகையான 'கம்கறு மாவத்த' பிரதிகளையும் எடுத்தது. அத்தோடு அவர்கள் கருவிகள் பக்டரிக்குச் சொந்தமானவை எனக் கூறி இரண்டு 'அலன்' திறப்புகளையும் எடுத்தனர்.

இருப்பினும் சரத்தினது பெட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை தனது தனிப்பட்ட சொத்துக்கள் எனக் குறிப்பிட்டு ஒரு வழக்காறான குற்றச்சாட்டு பத்திரத்தை அக்டோபர் 17ம் திகதி நிர்வாகம் அனுப்பியது. துண்டுப்பிரசுர விநியோகம் "சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும்" நடவடிக்கையாக விழங்கியது என அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. வேலைத் தளத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, நிர்வாகத்துக்கு கீழ்ப்படிய மறுத்தமை, 'அலன்' திறப்புக்களை திருடியமை என்பனவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாக விளங்கின.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி எனவும் அது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது எனவும் சரத் சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து நிர்வாகம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது என்ற குற்றச்சாட்டை மாற்றிக் கொண்டது. இது ஒரு "சட்டவிரோதமான அறிக்கையை" விநியோகித்து என்ற ஒரு பாரதூரமான குற்றச்சாட்டாக மாற்றிக் கொள்ளப்பட்டது. கம்பனி நவம்பர் 4ம் திகதி ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்ததோடு தனது ஆள் ஒருவரையும் அதற்கே நியமனம் செய்தது. சரத் தனக்கென ஒரு சட்டத்தரணியை அமர்த்திக் கொள்ளவோ அல்லது தொழிற்சங்க பிரதிநிதி அவருடன் கூட்டாக விசாரணைக்கு சமூகம் அளிக்கவோ இடம் அளிக்கப்படவில்லை. அவர் ஒரு பார்வையாளரை கூட்டி வர மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விசாரணை பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு இழுபட்டுச் சென்றது. மொத்தத்தில் நான்கு தடவைகள் கூடியது. நிர்வாகம் 6 சாட்சிகளை அழைத்தது: துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாக கூறும் இரண்டு தொழிலாளர்கள், ஒரு பாதுகாப்பு அதிகாரி, ஒரு மேற்பார்வையாளர், பக்டரி பராமரிப்பு முகாமையாளர், கம்பனியின் நிதி முகாமையாளர். இவர்தான் இந்த முழு விவகாரத்திற்குமான ஏற்பாடுகளைச் செய்தவர்.

சரத், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்த வேளையில் குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டது என்பது தெளிவாகியது. இரண்டு பெண் ஊழியர்கள் பக்டரிக்கு வெளியில் தமக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டனர். நிதி முகாமையாளர், சரத்தின் அங்கீகாரம் இல்லாமல் அவரின் பெட்டகத்தை உடைத்தார் என்பதை ஒப்புக்கொண்டார். பாதுகாப்பு அதிகாரி அந்த பாய்ச்சல் சட்டவிரோதமானது என்பதை ஒப்புக்கொண்டார். எந்த ஒரு தொழிலாளியும் கருவிகளையும் பொருட்களையும் பெட்டகத்துக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இவை பக்டரி கதவுக்கு வெளியே உள்ளன. 'அலன்' திறப்பை இழந்து போனதாகக் கூறிய மேற்பார்வையாளர் இந்த விசாரணை இடம்பெறுவதற்கு முன்னர் எதுவும் தொலைந்து போனதை கவனிக்கவில்லை எனக் கூறினார்.

குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியான ஊக்கிகளால் தூண்டப்பட்டவை என்பது தெளிவு. இந்தக் களவுக் குற்றச்சாட்டு சரத்தின் நல்லொழுக்கத்துக்கு கரிபூச என்றே செய்யப்பட்டவை. சரத் சகல குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்ததோடு, தமது சொந்த நேர காலத்தின் போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலாளர்களின் உரிமையையும் வலியுறுத்தியுள்ளார். நிர்வாகம் அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அவர் விசாரணையின் போது தெரிவித்தார். தமக்கு எதிரான சாட்சியங்கள் இல்லாமல் விசாரணை அதிகாரி, தமக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளையும்- சட்டவிரோதமான அறிக்கையை" விநியோகித்தது என்பதைத் தவிர- ஊர்ஜிதம் செய்தார்.

சரத் தொழில் ஆணையாளர் அலுவலக்துக்கு இந்த சேவை இடைநிறுத்த பிரச்சினையை எடுத்துச் சென்ற சமயம் ஒரு உதவி தொழில் ஆணையாளர் நாட்டின் இன்றைய கடுமையான அவசரகால விதிகளின் கீழ் எந்த ஒரு தொழிலாளியையும் வேலைநீக்கம் செய்ய முடியும் என ஆலோசனை கூறினார். கடந்த மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இராணுவம் ஆனையிறவை இழந்ததைத் தொடர்ந்து பொதுஜன முன்னணி அரசாங்கம் சகல வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், பகிரங்க கூட்டங்களை சட்டவிரோதமாக்கும் புதிய விதிகளை அமுல் செய்தது.

உதவி ஆணையாளர் டபிள்யூ.ஏ.பிரேமலதா, சரத்திடம் ஒரு தொழிலின் "பெறுமதியை" விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும், நிர்வாகத்துக்கு கீழ்ப்படிவதன் மூலம் அதைப் பாதுகாக்க சாத்தியமான சகலதையும் செய்ய வேண்டும் எனவும், பக்டரியை சீர்குலைக்க கூடாது எனவும் தெரிவித்தார். தன்னால் இந்த இடை நிறுத்தம் சம்பந்தமாக எதுவும் செய்ய முடியாது எனவும், விடயத்தை தொழில் ஆணையாளருக்கு அனுப்புவதாகவும் கூறினார்.

இந்தப் பக்டரியில் தொழிற்படும் ஒரே தொழிற்சங்கம் சிங்கள சோவினிச ஜே.வி.பி. சார்பான அனைத்து கம்பனி தொழிலாளர் சங்கம் என்பதேயாகும். இச்சங்கப் பிரதிநிதிகள் சரத் பழிவாங்கப்பட்டதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அவர்களைப் பல தடவை சவால் செய்ததன் பின்னரே அவர்கள் சரத் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும் எனக் கோரும் சோசலிச சமத்துவக் கட்சி பெட்டிசத்தில் கையொப்பமிட இணங்கினர்.

ß.ß.Y.âTM. (EECL) கம்பனி சுவிஸ் நிறுவனமான கிஸ்வேல்ட் குமி ஏபி (Gisvaled Gummi AB) என்பதுடன் இணைந்த ஒன்றாகும். இது ஐரோப்பிய மோட்டார் சந்தைக்கான இறப்பர் கருவிகளை உற்பத்தி செய்கிறது. தனது போட்டியை தொடர்ந்து பராமரிக்கும் முறையில் கம்பனி பக்டரியில் ஒரு தொகை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. வேலைநீக்கங்கள், வேலை துரிதப்படுத்தல் என்பவை இதில் அடங்கும். இவற்றை சரத்தும் ஏனைய சோ.ச.க. அங்கத்தவர்களும் எதிர்த்து வந்துள்ளனர்.

1997ல் சோ.ச.க. இப்பக்டரி மூடப்படுவதை எதிர்த்து ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அது எலாஸ்ட் ரோமெரிக் ஐக்கிய நடவடிக்கை கமிட்டி ஒன்றையும் அமைத்தது. தொழிலாளர்களிடமிருந்து அதற்கு கணிசமான ஆதரவு கிடைத்தது. உள்ளூர் வேலையற்றோர், இளைஞர்கள் ஆகியோரும் இதற்கு ஆதரவு நல்கினர்.

இதற்கு முன்னர் சரத் "மேலதிக நேர வேலை செய்ய மறுத்தார்" என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். அப்போது சோ.ச.க. மேற்கொண்ட ஒரு கையெழுத்து பிரச்சாரத்தின் நெருக்குவாரம் காரணமாக நிர்வாகம் அவரை மீண்டும் சேவையில் சேர்க்கத் தள்ளப்பட்டது. அத்தோடு கம்பனி மற்றொரு சோ.ச.க. அங்கத்தவரான கிறிசாந்த ஜயசிங்கவுக்கு எதிரான வேலை இடைநிறுத்த உத்தரவை நீக்கிக் கொண்டது. இவர் பக்டரி கருவிகளை சேதமாக்கினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சரத்தின் வேலை நீக்கம் கம்பனி வேலைகள், சேவை நிலைமைகளுக்கு எதிரான தாக்குதல்களை உக்கிரமாக்கவும் இதே விதிமுறைகளை ஏனைய ஊழியர்களுக்கு எதிராகக் கையாள்வதற்குமான ஒரு தயாரிப்பாகும். மேலும் "அரசியல் நடவடிக்கைகள்" தாக்குதலுக்கு உள்ளானமை முதலாளிகள் தொழிலாளர்கள் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை பிரயோகிப்பதை தன்னும் சகித்துக் கொள்ள தயார் இல்லை என்பதற்கான ஒரு அறிகுறி ஆகும்.

வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் திறைசேரி அதிகாரிகளையும் சந்தித்து, சேவைக்கு அமர்த்துவது, வேலை நீக்கம் செய்வது தொடர்பான தொழில் சட்டங்களைப் புதுப்பிக்கும்படி வலியுறுத்தினர். கம்பனி பிரதிநிதிகள், 1000 ஊழியர்களுக்கு குறைவான கம்பனிகள் அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லாமலே தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதை அங்கீகரிக்கும் சமீபத்திய இந்திய வரவு செலவுத் திட்டத்துக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, தொழிலாளர் வேலை நீக்கம் என்பனவற்றுக்கு எதிரான பதட்டம் ஏற்கனவே வளர்ச்சி கண்டு வருகின்றது. கடந்த பெப்பிரவரியில் பொலிசார் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிரான பல கடும் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இதில் பதுளை ஏசியன் கிரேட் யூனிகோன் காமன்ட் பக்டரி, கொழும்பு தெற்கு டெயின்ரீ இனிப்பு (Daintee Sweet) பக்டரி என்பன அடங்கும் டெயின்ரீயில் ஒரு கிளைச்சங்க அலுவலர் உட்பட ஆறு தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

அத்துள்கோட்டையில் உள்ள வொண்டர் லைட் சோப் பக்டரியில் 15 தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கள் கிளையை அமைக்க முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனவரியில் இருந்து சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved