World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lankan Muslims protest violent attacks by racist thugs

இலங்கை முஸ்லீம்கள் இனவாதக் குண்டர்களின் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு

By W.A. Sunil
10 May 2001

Back to screen version

மத்திய மலைநாட்டு நகரமான மாவனல்லையில் முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற ஒரு இனவாத தாக்குதல் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் இலங்கை தமிழ் முஸ்லீம் சிறுபான்மையினரின் ஆத்திரம் கொண்ட ஆர்ப்பாட்டங்களை கடந்த வாரம் தூண்டி விட்டது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசாரைப் பாய்ந்து விழும்படி உத்தரவிட்டதோடு கொழும்பிலும் அயல் நகரங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை திணித்தார். ஆர்ப்பாட்டங்கள் முன்னொரு போதும் இல்லாத அளவில் பாரியதாக விளங்கியதோடு நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ள சமூகப் பதட்ட நிலைமைக்கும் மேலும் சாட்சி பகர்கின்றது.

ஆரம்பச் சம்பவம் மாவனல்லையில் இடம் பெற்றது. இது கொழும்பில் இருந்து 90 கி.மீ. அப்பால் கண்டி வீதியில் உள்ளதோடு கணிசமான அளவு சனத்தொகையினர் முஸ்லீம்கள். ஏப்பிரல் 30ம் திகதி மாலை 9.30 மணிக்கு ஒரு குண்டர் கும்பல் முஸ்லீம் ஹோட்டலுக்கு சென்றது. பணம் செலுத்தாமல் சிகரட்டுகளை எடுத்த இவர்கள் காசாளரிடம் பணம் செலுத்த மறுத்து, பயமுறுத்தியுள்ளனர். காசாளர் சம்மதிக்க மறுத்ததும் காசாளரைப் பிடித்து வெளியில் இழுத்தனர். ஒரு இரும்பு வேலியில் அவரைக் கட்டியதோடு அவரது வாயை ஒரு கத்தியினால் வெட்டினர். மூன்று பொலிசார் இதைக் கண்ட போதிலும் எதையும் செய்யாது சும்மா நின்று கொண்டிருந்தனர். காயமடைந்த இளைஞன் குண்டர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய பின்னரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் காலை ஹோட்டல் சொந்தக்காரர்கள் பொலிசுக்கு முறைப்பட்ட போதிலும் குற்றவாளிகளைக் கைது செய்ய பொலிசார் எதுவும் செய்யவில்லை. அன்று மாலை 300 முஸ்லீம்கள் பொலிசாரை நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தினர். ஆளும் பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான லலித் திசாநாயக்க பொலிசார் குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் பொலிசார் இன்னமும் எதுவும் செய்யவில்லை. மே 2ம் திகதி ஆர்ப்பாட்டம் 3000 பேர் கொண்டதாக வளர்ச்சி கண்டது. பொலிசார் இத்தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை கைது செய்வதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்தே இவர்கள் கலைந்து சென்றனர்.

எவ்வாறெனினும் இவர்கள் கலைந்து செல்லும்போது இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பல நூறு சிங்களவர்களைக் கொண்ட ஒரு கும்பல் கலகத்தில் இறங்கியது. முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களுக்கு எல்லாம் தீமூட்டியது. நகரின் முக்கிய முஸ்லீம் பள்ளிவாசல்களுக்குள் நுழைந்த ஒரு கும்பல் இஸ்லாமிய மத குருவை இழுத்து வெளியே போட்டதோடு தளபாடங்கள், சவப்பெட்டி, திருக்குரான் என்பவற்றையும் சுட்டுப் பொசுக்கியது. நேரில் கண்ட சாட்சியின்படி பொலிசார் ஒரு தளபாடக் கடை பூட்டுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதன் மூலம் காடையர்கள் கடைக்குள் நுழைய பெரிதும் உதவினர். பொலிசாரின் நடவடிக்கையினால் கோபமடைந்த ஒரு முஸ்லீம் மக்கள் கூட்டம் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டதோடு சிங்களவர்களுக்குச் சொந்தமான பல கடைகளையும் தாக்கியது. பொலிசார் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததன் மூலம் இதற்குப் பதிலளித்தனர். இதனால் 55 வயதான ஹனிபா மொஹமட் உட்பட இருவர் கொல்லப்பட்டதோடும் மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

மாவனல்லை தாக்குதல் சம்பவச் செய்தியினால் கோபமடைந்த முஸ்லீம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மே 4ம் திகதி வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் கொழும்பு, கண்டி, புத்தளம் அம்பாந்தோட்டை இரத்தினபுரி முதலான இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கொழும்பில் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு வெளியே மோதுதல்கள் இடம்பெற்றன. அங்கு பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்ததோடு, குண்டாந்தடிப் பிரயோகத்திலும் ஈடுபட்டனர். 15 பேர் காயமடைந்தனர். இதில் இருவர் படுகாயமடைந்தனர். கண்கண்ட சாட்சியங்களின்படி விசேட பொலிஸ் கமாண்டோ படைப்பிரிவு முஸ்லீம் பகுதிகளில் இருந்த வீதிகளில் இளைஞர்களைத் தாக்குவதில் ஈடுபட்டது. முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணியின் (Muslim United Liberation Front- MULF) தலைவர் முஜிபூர் ரஹ்மான் உட்பட ஒரு தொகை முஸ்லீம் மக்கள் கைது செய்யப்பட்டனர். இவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அரசாங்கம் கொழும்பிலும் மேற்கு மாகாணத்தின் அயல் பகுதிகளிலும் மே 4-5ம் திகதிகளில் இரவு 12 மணித்தியால ஊரடங்குச் சட்டத்தை அமுலுக்கு கொணர்ந்தது. தலைநகரைக் காவல் செய்ய விசேட அதிரடிப் படைப் பிரிவுகளை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான பொலிசாரும் படையாட்களும் குவிக்கப்பட்டனர்.

மே 6ம் திகதி இரவு இக்குழப்ப நிலை கிழக்கு மாகாணத்துக்கும் பரவியது. இங்கு பெருமளவிலான தமிழ் பேசும் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். திருகோணமலைக்குச் சமீபமாக முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட சிறிய நகரில் சிங்களவருக்குச் சொந்தமான 8 கடைகளுக்கு தீமூட்டப்பட்டது. மட்டக்களப்பில் முஸ்லீம் ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களுக்கு தீமூட்வதன் மூலம் வீதிப் போக்குவரத்தை தடை செய்தனர்.

மாவனல்லையில் சில கண்கண்ட சாட்சியங்களின்படி ஆரம்பத் தாக்குதல்கள் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அரசாங்க அமைச்சரான மகிபால ஹேரத்தின் மெய்க் காவலாளர்களை உள்ளடக்கிய ஒரு தொகை குண்டர் கும்பலினால் தூண்டிவிடப்பட்டதாகத் தெரிகின்றது. ஹேரத், தாம் இதில் சம்பந்தப்படவில்லை என பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசவாசி ஒருவர் இத்தாக்குதல்கள் பற்றி கூறியதாவது: "காடையர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த நிலைமை உருவாகி இருக்காது. ஆனால் இந்த இனவாத மோதுதல்களை தூண்டிவிட பொலிசாரும் அரசியல்வாதிகளும் காடையர்களோடு சேர்ந்து தொழிற்பட்டனர்." ஒரு கண்கண்ட சாட்சி கூறியதாவது: "இந்த காடையர்கள் பொதுஜன முன்னணி அமைச்சருடன் தொடர்புபட்டவர்கள். கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் இவர்கள் வாக்காளர்களை தூண்டி விடுவது வழக்கமாக இருந்தது. வழக்கமாக இவர்கள் கடைகளில் இருந்து 200 அல்லது 500 ரூபாக்கள் -சிங்களக் கடைச் சொந்தக்காரர்களிடம் இருந்தும் கூட- கோருவது வழக்கம். இவர்கள்தான் பொலிசாரை நடாத்தி வந்தனர்." முஸ்லீம்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டமைக்காக அவர் உள்ளூர் பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரியைக் குற்றம் சாட்டினார். இவர்கள் இருவரும் இரண்டு சமூகங்களுக்கும் இந்நகரில் நீண்டகாலமாக சமாதானத்துடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும் ஆனால் உள்ளூர் பொலிசாரும் அரசியல்வாதிகளும் காடையர்களும் சிங்களவரை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டிவிட வேண்டுமென்றே முயற்சிப்பதாக தெரிவித்தனர்.

அரசாங்கம், மாவனல்லையில் சிங்கள, முஸ்லீம் சமூகங்களின் பிரதிநிதிகளையும் அத்தோடு உள்ளூர் பொலிஸ் அதிபரையும் உள்ளடக்கிய ஒரு "சமாதானக் கமிட்டியை" அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு சொத்துக்கள் சேதமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.

பொதுஜன முன்னணி அரசாங்கம் ஒரு பலிக்கடாவை தேடி அலைகின்றது என்பதற்கான பல அறிகுறிகள் இருந்து கொண்டுள்ளன. மே 5ம் திகதி தேசிய தொலைக் காட்சியில் தோன்றிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மாவனல்லை சம்பவமும் கொழும்பு ஆர்ப்பாட்டங்களும் அத்தோடு புகையிர ஊழியர்களின் சமீபத்திய வேலைநிறுத்தமும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பாகமாகும் என்றார். அவர் இதற்கான சாட்சியங்களை வழங்காததோடு எவரின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் முஜிபூர் ரகுமானின் கைது அதற்கான பொறுப்பை சிறிய முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி அல்லது ஏனைய முஸ்லீம் குழுக்கள் மீது கட்டியடிக்கும் முயற்சியைச் சுட்டிக் காட்டுகின்றது.

இனவாத பதட்டத்தை தூண்டுதல்

குமாரதுங்க, முஸ்லீம் ஆர்ப்பாட்டங்களை பெயர் குறிப்பிடாத சதிகாரர்களின் வேலையாகக் குறிப்பிடும்போது கொழும்பு பத்திரிகைகள் ஆரம்ப சம்பவத்தை தனியொரு பொதுஜன முன்னணி அரசியல்வாதியினதும் அவரது மாவனல்லை குண்டர்களதும் வேலையாக குறைத்துக் காட்ட முயன்றன. இரு தரப்பினரும் இம்மோதுதலின் உண்மையான மூலத்தை பூசி மெழுகிவிட முயற்சிக்கின்றன. இது பல தசாப்தங்களாக இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தூண்டி விடப்பட்ட இனவாத, வகுப்புவாத பதட்ட நிலையிலேயே இருந்து கொண்டுள்ளது.

இனவாத அரசியல் சூழ்நிலையை உருவாக்குவதில் முக்கிய குற்றவாளிகளாக அரசாங்கமும் கொழும்புத் தொடர்புச் சாதனங்களும் இருந்து கொண்டுள்ளன. இவை பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இன்றைய யுத்தத்தை நியாயப்படுத்த சிங்கள சோவினிசத்தைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளன. இந்த இனக்குழு, மத குரோதங்கள் நாட்டின் ஆழமான பொருளாதார, அரசியல் நெருக்கடியுடனும் அத்தோடு வளர்ச்சி கண்டு வரும் ஜே.வி.பி, சிங்கள உறுமய கட்சி போன்ற சிங்கள தீவிரவாத அமைப்புக்களின் பிரசித்தியோடும் இணைந்து கொண்டுள்ளன.

முஸ்லீம் சமூகம் இலங்கையில் தமிழ் பேசும் சனத்தொகையில் ஒரு கணிசமான பகுதியாகும். முழுத் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிரான பல தசாப்தகால ஒடுக்குமுறையின் ஒரு பாகமாக முஸ்லீம்கள் தொடர்ச்சியான பாகுபாடுகளுக்கு இலக்காகி வந்தனர். முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் தீவின் கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். 1983 ஆண்டில் யுத்தம் வெடித்ததில் இருந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இனவாத பதட்ட நிலையைத் தூண்டுவதன் மூலம் தமிழ் சனத்தொகையை திட்டமிட்டு பிளவுபடுத்த முயன்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்கள் "தமிழ் நலன்களை காட்டிக் கொடுத்துவிட்டதாக" குற்றம்சாட்டி கொழும்பு ஆட்சியாளர்களின் கைகளுக்குள் விளையாடியது. 1990ல் முஸ்லீம்களை யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேற்றியது. ஒரு தசாப்தத்தின் பின்னர் சுமார் 300,000 முஸ்லீம்கள் அகதி முகாம்களில் இன்னமும் வறுமையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

இனவாதத்தின் தோற்றம் 1986ல் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் (SLMC) ஸ்தாபிதத்துக்கு இட்டுச் சென்றது. சுயாட்சியும் கிழக்கு மாகாணத்துக்கு அதிக வளங்களும் கோரிவந்த முஸ்லீம் பிரமுகர்களில் ஒரு பிரிவினர் இதை நிறுவினர். 1988 தேர்தல்களில் ஆசனங்களை வெற்றி கொண்ட சி.ல.மு.கா. ஆளும் பொதுஜன முன்னணியில் 1994 பொதுத் தேர்தலின் பின்னர் சேர்ந்து கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து ஆட்சி நடாத்த முடியாது என்பது தெளிவாகியதும் இதைச் செய்தது.

ஆளும் முன்னணியில் சி.ல.மு.கா.வைச் சேர்த்துக் கொண்டமை எப்போதும் ஆபத்தான பதட்ட நிலையை ஏற்படுத்துவதாக விளங்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல்வாதிகள் அரசியல் செல்வாக்குக்கும் அந்தஸ்துக்குமாக சி.ல.மு.கா.வுடன் கடும் போட்டியில் ஈடுபட்டு இருந்தனர். கடந்த அக்டோபர் பொதுத் தேர்தல் வரை ஸ்ரீ.ல.மு.கா. தலைவரான எம்.எச்.எம்.அஷ்ரப் தேர்தல் தொகுதி ஒதுக்கீடு சம்பந்தமாக கடும் பேரம்பேசலில் ஈடுபட்டார். பொதுஜன முன்ணியை விட்டு வெளியேறப் போவதாகவும் கூட மிரட்டினார். இத்தகைய துவேசம் நிறைந்த பேச்சுவார்த்தைகளின் மத்தியில் அஷ்ரப் இருள் சூழ்ந்த நிலையில் ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்டதோடு ஸ்ரீ.ல.மு.கா. தலைவர்கள் இதைத் தொடர்ந்து பொதுஜன முன்னணியுடன் ஒரு கொடுக்கல் வாங்கலைச் செய்து கொண்டனர்.

எவ்வாறெனினும் இந்தத் தகராறின் போது பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்கவும் ஸ்ரீ.ல.சு.க. கட்சியினுள் இருந்த ஏனைய சிங்கள சோவினிஸ்டுகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் "சிறுபான்மையினர் அதிகாரத்தை" பயன்படுத்தி அரசாங்கத்தை பயமுறுத்துவதாகவும் முஸ்லீம்களுக்கு அதிக "சலுகைகளை" கறந்து கொள்வதாகவும் நேரடியாகக் குற்றம் சாட்டினர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்ரீ.ல.மு.கா. தலைவர்கள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை முஸ்லீம்கள் வாக்களிப்பதை தடுக்க காடையர்களைப் பயன்படுத்தியதாயும் அதன் மூலம் பாராளுமன்றத்தில் தமது செல்வாக்கை குறைக்க முயன்றதாயும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

தேர்தலைத் தொடர்ந்து சி.ல.மு.கா.வும் தேசிய ஐக்கிய முன்னணியும் 10 ஆசனங்களை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து முஸ்லீம் எதிர்ப்பு கூச்சல்கள் இன்னுமோர் படி அதிகரித்தது. பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது பெரும்பான்மைக்கு பாராளுமன்றத்தில் இதில் தங்கியிருந்ததால் சி.ல.மு.கா. இந்த ஆதரவுக்கான விலையாக பல சலுகைகளையும் கறந்த கொண்டது. சிங்கள உறுமய கட்சியும் ஜே.வி.பி.யும் மற்றும் பெளத்த உயர்பீடங்களும் இதைச் சந்தர்ப்பமாக்கிக் கொண்டு, அரசாங்கம் சிறுபான்மையினரில் தங்கி இருப்பதற்காக அதைக் கண்டனம் செய்ததோடு "முஸ்லீம்களின் அதிகாரத்தை உடைக்கும்" பிரச்சாரத்தில் ஈடுபடவும் சபதம் கொள்ளச் செய்தனர்.

மோசமடைந்த பொருளாதார நிலைமையினால் இனவாத பதட்டங்கள் மேலும் உக்கிரம் கண்டதோடு இது அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவச் செலவீனத்தின் பெறுபேற்றினது ஒரு பாகமாகவும் விளங்கியது. விலைவாசி உயர்வினதும் அதிகரித்த போட்டிக்கும் மத்தியில் -குறிப்பாக சிறிய வர்த்தகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில்- சிங்கள வர்த்தகர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பான சிங்கள உறுமய கட்சியும் அதன் பங்காளியான சிங்கள வீரவிதானவும் (Sinhala Heroes Forum) தமிழ், முஸ்லீம் வியாபாரிகளுக்கு எதிரான தமது சோவினிச பிரச்சாரத்தை உக்கிரம் அடையச் செய்தனர். பல மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு அனாமதேய துண்டுப்பிரசுரம் -இது சிங்கள உறுமய கட்சியின் வேலை என்றே பெரிதும் நம்பப்படுகிறது- முஸ்லீம் வியாபார நிலையங்களைக் கொண்ட இடங்களில் -மாவனல்லை, கேகாலை- சிங்களவர்களை முஸ்லீம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனக் கேட்கும் விதத்தில் விநியோகிக்கப்பட்டது.

மாவனல்லையில் கடந்த வாரம் இடம் பெற்ற தாக்குதலைத் தொடர்ந்தும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்தும் அரசாங்கத்தின் பெரும்பான்மையின் தலைவிதி மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. மே 3ம் திகதி மாவனல்லை பகுதிக்கு விஜயம் செய்த சி.ல.மு.கா. தலைவர் ராவூப் ஹக்கீம் கூறியதாவது: "மாவனல்லையிலும் அதைச் சூழவும் இடம்பெற்ற வன்முறைகள் முஸ்லீம்களின் பொருளாதாரத்துக்கும் பள்ளிவாசல்களுக்கும் எதிராக நெறிப்படுத்தப்பட்டவை" எனக் குறிப்பிட்டதோடு இந்தக் "குழப்பமான போக்கை" கட்டுப்பாட்டுக்குள் கொணருமாறு அரசாங்கத்தையும் வேண்டினார். மே 7ம் திகதி சி.ல.மு.கா. விடுத்த ஒரு அறிக்கையில் அரசாங்கம் ஒரு விசாரணை ஆணைக்குழுவை நிறுவி, தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்கியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்காதும் போனால் ஆளும் கூட்டரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிடப் போவதாக அச்சுறுத்தியது.

மேலும் குமாரதுங்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தில் தொடர்ந்தும் வைத்திருக்க முயன்றாலும் கூட அரசாங்கம் நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தாமதப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் மீண்டும் ஈடுபட தயாராகுவதால் இம்மோதுதல் தலைதூக்குவது நிச்சயமாகிவிட்டது. எந்த ஒரு பேரம்பேசலிலும் முஸ்லீம் பிரமுகர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படும் என்ற பயத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் தனியான அம்பாறை நிர்வாக மாவட்டம் என்ற அதனது கோரிக்கையை கடந்த மார்ச்சில் மீண்டும் வலியுறுத்தியது. அத்தோடும் பேச்சுவார்த்தைகளில் நேரடியான பங்கு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் கட்சிகளும் இதைப் பிரிப்பதை எதிர்ப்பதோடு வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் மற்றும் கட்சிகளும் தமது திட்டங்களின்படி தீவை இனக்குழு ரீதியில் பிளவுபடுத்த சண்டையிடும் போது தமது அந்தஸ்தை வகுப்புவாத, இனவாத உணர்வுகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் நிலைநாட்டப் பார்ப்பது நிச்சயம். மாவனல்லையில் இடம்பெற்ற இனவாத தாக்குதலும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் தொழிலாளர் வர்க்கம் இனவாத நஞ்சை உக்கிரமாக நிராகரித்து. வர்க்க அடிப்படையில் தனது வாழ்க்கைத் தரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் இன, மொழி, மத வேறுபாடுகளை நிராகரித்து ஒன்றிணையாது போனால் என்ன ஏற்படும் என்பதற்கு ஆழமான ஓர் அறிகுறியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved