World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

Berlusconi wins parliamentary vote

பெர்லுஸ்கோனி பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்

By Ulrich Rippert
15 May 2001

Back to screen version

மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் பாராளுமன்ற தேர்தல்கள் பிரச்சனைக்குரிய தொலைத்தொடர்புச் சாதனங்களின் உரிமையாளரான சில்வியோ பெர்லுஸ்கோனியினதும், அவரால் தலைமை தாங்கப்பட்ட கட்சியான ''சுதந்திரத்திற்கான வீட்டினதும்'' ஓரளவு வாக்கு வெற்றியுடன் முடிவடைந்துள்ளது. தேர்தல் நடந்த இரவின் முதல் கணிப்பீட்டிலேயே பெர்லுஸ்கோனியின் வெற்றி அறிவிக்கப்பட்டது. ''எங்களை வெற்றிபெற அனுமதிக்காவிட்டால் மில்லியன் கணக்கானோர் வீதியில் இறங்குவோம்'' என அவரின் தேர்தல் பொறுப்பாளர் தெரிவித்தார்.

முதலாவது பத்திரிகை அறிக்கையில் வெளிவிடப்பட்ட பெரும்பான்மை, தொடர்ச்சியான எண்ணுதலின் பின்னர் குறைந்துகொண்டு சென்றது. திங்கட்கிழமை தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை வலதுசாரி கூட்டின் தலைவரான பெர்லுஸ்கோனிக்கும், மத்தியவாத-இடது கூட்டான ''ஒலிவ்மரத்தின்'' தலைவரான Francesco Rutelli க்கும் இடையிலான நேரடிப்போட்டியாக இருந்தது. திங்கட்கிழமை மாலைநேரம் தான் பெர்லுஸ்கோனி இத்தாலிய பாராளுமன்றத்தின் இருசபைகளான உறுப்பினர் சபையிலும், செனற்றிலும் புதிய பாராளுமன்றத்தை அமைக்க தேவையான பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர் பெர்லுஸ்கோனி அங்கத்தவர் மன்றத்தில் கிட்டத்தட்ட 45% இனையும், செனற்றில் 42% இனையும் பெற்றுள்ளார். பாராளுமன்ற ஆசனங்களின் பங்கீடு, சிக்கலான இத்தாலிய தேர்தல் முறையால் திங்கள் மாலைவரை வெளிவிடப்படவில்லை. உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளின்படி பெர்லுஸ்கோனியின் ''இத்தாலி முன்னணி'' மட்டும் அங்கத்தவர் மன்றத்தில் 250 இற்கும் அதிகமான நேரடி இடங்களை பெற்றுள்ளது. ''ஒலிவ்மர'' கூட்டணி 160 நேரடி இடங்களை கூட பெற்றுக்கொள்ளவில்லை.

1996 இல் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் ''இத்தாலி முன்னணி'' 20.6% இலிருந்து 29% ஆக 9 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஒரு பத்திரிகை அறிக்கை ''இத்தாலி முன்னணி'' இத்தாலிய கட்சிகளுள் ''குறிப்பிடத்தக்க பலமான கட்சியாக'' எடுத்துக்காட்டியுள்ளது.

பெர்லுஸ்கோனியுடன் கூட்டான பாசிச MSI [Movimento Sociale Italiano] இலிருந்து உருவாகிய தேசிய கூட்டணி 4% வாக்குகளை இழந்து அண்ணளவாக 12% இனை பெற்றுள்ளது. இவ்வலது கூட்டில் முக்கிய தோல்வியை சந்தித்தது பிரிவினைவாத வடக்கு முன்னணியாகும் [Lega Nord]. இதன் தலைவரான Umberto Bossi இன் வெளிநாட்டவருக்கு எதிரான மூர்க்கமான எதிர்ப்பு, ஒஸ்திரியாவின் வலதுசாரியான Jörg Haider இன் இனவாதத்தை மிஞ்சியதாகும். வடக்கு முன்னணி [Lega Nord] 4% வாக்குக்களை பெறவேண்டும் என்ற தேர்தல் விதியை பூர்த்தி செய்யாததால் நேரடி அங்கத்தவரை பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

ஆனால் இம்மோசமான தேர்தல் முடிவை பெற்ற வடக்கு முன்னணி [Lega Nord] வலதுகூட்டை பாரியளவில் பாதிக்காது. இத்தாலிய விஷேடமான தேர்தல் முறையின் 4% வாக்குகளை பெற தவறியவர்களில் தேர்தலுக்கு முன்னர் உருவாக்கிய கூட்டுக்களுக்கு அளிக்கப்படும் வாக்குகளில் 3/4 நேரடி வேட்பாளருக்கும், 1/4 கட்சிக்கும் பிரிக்கப்படும்.

மத்திய- இடது கூட்டில் ஸ்ராலினிச இத்தாலிய கம்யூனிச கட்சியின் இடது கூட்டு பாரிய பின்னடவை பெற்றுள்ளது. 21.2% இருந்து 17% இற்கு வீழ்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வலதுசாரிக்கூட்டின் தேர்தல் வெற்றியானது இத்தாலிய அரசியலில் ஒரு வலது திருப்பத்தை எடுத்துக்காட்டியுள்ளதுடன், எதிர்வரும் காலத்தில் ஐரோப்பிய அபிவிருத்தியிலும் தெளிவான விளைவுகளை கொண்டிருக்கும். றொனால்ட் றேகனையும், மார்கிரட் தாட்சரையும் தனது முன்னோர்களாக கூறிக்கொள்ளும் பெர்லுஸ்கோனி ஒரு மூர்க்கமான புதிய தாராளவாத பொருளாதார கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அவர் ஆக்ககூடிய வரி செலுத்துபவர்களின் வரியை பாரியளவில் குறைக்கவும், அரச தொழிற்துறைகளை விரைவாக தனியார் மயமாக்கவும், நிறுவனங்களுக்கான அரசபாதுகாப்பை பாரியளவில் குறைக்கவும் கோருகின்றார். தேர்தல் பிரசாரத்தின் போது அவரது சொத்துக்கும், பொருளாதார பலத்திற்கும், ஊழல்மிக்க வியாபாரத்திற்கும் எதிரான எந்தவொரு விமர்சனத்தையும் அவர் ''கம்யூனிச'' பிரசாரமென நிராகரிக்கின்றார்.

இத்தாலியின் பிரசித்திபெற்ற மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் உட்பட பாரிய கட்டிட, ஒப்பந்தக்கரரான பெர்லுஸ்கோனி 13 பில்லியன் டொலர் சொத்தை கொண்ட செல்வந்தர் மட்டுமல்லாது, ஐரோப்பாவின் ஊழல்மிக்க அரசியல்வாதியுமாவார். 1994 இல் அவர் முதல் முறை பிரதமராக தெரிவுசெய்யப்பட்டபோது, அதிகாரத்தை தனது சொத்துக்களை பெருப்பித்துக்கொள்ள பயன்படுத்தியமையால் 7 மாதத்தில் பதவிவிலகவேண்டிவந்தது.

முக்கியமாக அப்போது ஓய்வு ஊதியத்தின் மீதான தாக்குதல் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்கியது. 1994 அக்டோபர் மாதம் அரசாங்கத்தில் வெட்டுகளுக்கு எதிராக 18 இலட்சம் தொழிலாளர்கள் பொதுவேலை நிறுத்தத்தில் இறங்கினர். இதன் ஒரு மாதத்தின் பின்னர் ரோமின் அரசு வழக்குதொடுனர் ஊழலுக்கு உதவியதாக பெர்லுஸ்கோனிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

90 களின் ஆரம்பத்தில் ஒரு தொகை வழக்குகள் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் கூடுதலானவை கள்ளகணக்கு, வரிஏய்ப்பு, இலஞ்சம் வழங்கல், மாபியாவுடனான தொடர்பு போன்றவையாகும். இதுவரை பெர்லுஸ்கோனி முதல் தீர்ப்பில் 4 தடவை 6 வருடங்களும் 3மாதங்களும் தண்டணை விதிக்கப்பட்டுள்ளார். இது மேல்முறையிட்டின் மூலமாக பின்னர் நீக்கப்பட்டது. சிசிலியாவின் நகரமான பலார்மோவின் பெர்லுஸ்கோனியின் நிறுவனமான Fininvest இன் தலைவரும் பெர்லுஸ்கோனியின் வலதுகையுமான Pubitalia மாபியாவுடனான தொடர்புக்காக நீதிமன்றத்தின் முன் நிற்கின்றார்.

பிரித்தானிய பத்திரிகையான Economist ஏப்பிரல் மாத இறுதியில் ''பல கடுமையான குற்றச்செயல்களுக்கும், வழக்குகளுக்கும் உள்ளான இந்த மனிதர் அரசாங்கத்திற்கு பொருத்தமற்றவர்'' என குறிப்பிட்டிருந்தது. இக்கட்டுரை மேலும் ''பெர்லுஸ்கோனி பிரதமராக தெரிவுசெய்யப்பட்டமை இத்தாலிய ஜனநாயகத்திற்கும், சட்டரீதியான நாட்டுக்கும் ஒரு கரிநாளாகும்'' என குறிப்பிட்டிருந்தது.

''10 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை'' பெற்ற இந்த மனிதன் இத்தாலியில் இரண்டாவது தடவையாக பதவிக்கு வந்தமைக்கு 5வருடங்களுக்கு முன்னர் ரோமில் பதவியேற்ற மத்திய -இடது கூட்டணியின் முழு அரசியல் வங்குரோத்தின் விளைவாகும்'' என வாராந்த இதழான LÉspresso எழுதியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இவ்வரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினது பொருளாதார முன் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதிலும், இத்தாலியை யூரோவிற்கு [Euro] பொருத்தமானதாக மாற்றுவதையுமே தனது முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது.

இவ் அரசாங்கத்தின் கீழ் சமூகநல கொடுப்பனவுகள் அனைத்தும் பாரிய வெட்டுக்குள்ளானதுடன், மக்களின் நலன்கள் கால்களால் மிதிக்கப்பட்டன. பாரிய வேலையின்மை மீண்டும் அதிகரித்தது. ''அடிமட்ட ஊதியம்'' இல்லாதொழிக்கப்பட்டதால் ஊதியம் வீழ்ச்சியடைந்ததுடன், வழமான தொழிற்துறைமிக்க வடக்கிற்கும் முற்றாக வறுமைக்குள் தள்ளப்பட்ட தெற்கிற்கும் இடையிலான இடைவெளி முன்னொருபோதும் இல்லாதளவு அதிகரித்தது.

பெர்லுஸ்கோனிக்கும் அவரது இத்தாலி முன்னணிக்கும் எதிராக இயங்க, மத்திய-இடது கூட்டுக்கு பல சந்தர்ப்பங்கள் இருந்ததன. ஆனால் அடிமட்டத்திலிருந்து எழும் இயக்கத்தின் மீதான பயம் காரணமாக அவர்கள் எப்போதும் பெர்லுஸ்கோனியுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்குமான சந்தர்ப்பத்தை திறந்து வைத்திருந்தனர்.

தேர்தலுக்கு ஒரு சில நாட்களின் முன்னரே பிரபல இத்தாலிய நாடகாசிரியரும், இயக்குனரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான Dario Fo இவ் அரசாங்கத்தை பற்றி பின்வருமாறு எடுத்துக்காட்டியிருந்தார். ''இடதுசாரிகளும் இதற்கான பொறுப்பை சுமக்கிறார்களா?'' என்ற தலையங்கத்தின் கீழ்'', அவர் பெர்லுஸ்கோனியின் தேர்தல் வெற்றி தொடர்பாக ''இவ்விடயம் தொடர்பாக எனக்கு வெறுப்பை தருவது என்னவெனில் மத்திய-இடது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அடிமைத்தனமான ரீதியில் இவ் இடதுசாரிகள் பெர்லுஸ்கோனியை விளையாட்டில் வைத்திருந்தனர். ஏனெனில் அவர்கள் இதன் மூலம் தமது கலப்புக்கட்சிகள் மத்தியில் தமது நிலைமையை சிறப்படைய செய்யலாம் என நினைத்தனர். இதன் மூலம்தான் நிலைமை இந்த அளவிற்கு வந்தது''. என குறிப்பட்டிருந்தார்.

ரோமின் முன்னாள் நகர தலைவரான Francesco Rutelli ''ஒலிவ்மர'' மத்திய-இடது கூட்டின் தலைவராக தெரிவுசெய்யப்பட முன்னரே அவர் பெர்லுஸ்கோனியின் முன்னான தனது அடிபணிவை காட்டியிருந்தார். பசுமைக்கட்சியிலிருந்து ஜனநாயக கட்சிக்கு சென்று தனது பதவியை பாதுகாத்துக்கொண்ட Francesco Rutelli பெர்லுஸ்கோனியுடனான முக்கியமான அரசியல் மோதல்களை தவிர்த்துக்கொண்டதன் மூலம் இது தெளிவாகின்றது.

இரு தேர்தல் கூட்டுக்களும் தேர்தலுக்கு முன் தமது முன்னோக்கை வெளிவிட்டிருந்தனர். அவற்றிற்கு இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கவில்லை. பாரிய உள்முரண்பாடுகளின் பின்னர் ஒலிவ்மர கூட்டு பெர்லுஸ்கோனியின் வலது பொருளாதார கொள்கைகளுக்கு அடிபணிந்து அதிகூடிய வரியை குறைக்கவும், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், இத்தாலியின் உள்கட்டுமானத்தையும் நிர்வாகத்தையும் ''நவீனமயமாக்க'' போவதாக கூறினர்.

அரசியல் விவாதத்திற்கு பதிலாக தேர்தல் பிரசாரம் வெறும் சேறடிப்பாக இருந்தது. இது தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்டதுடன், இதில் இருபிரிவினரும் மாறிமாறி பொறுப்பின்மையையும் ஊழல்களையும் குற்றம்சாட்டிக்கொண்டனர். மக்களின் நிலைமை அதிருப்திக்கும் ஆவலின்மைக்கும் இடையில் இருந்தது. இத்தாலியில் வாக்களிப்பது கட்டாயமானாலும், வாக்களிக்கபோகாதவர்கள் தண்டனைக்குள்ளாகமாட்டார்கள்.

மத்திய-இடது கூட்டின் முற்றான சீரழிவும், மக்களின் சுயாதீன எழுச்சிகளுக்கு எதிரான அவர்களது பயத்தின் காரணமாகவும் உள்நாட்டமைச்சு ''செலவை கட்டுப்படுத்துமுகமாக'' 1/3 வாக்களிப்பு நிலையங்களை மூடியது. இது தேர்தல் தினத்தன்று குழப்பமான நிலைமையை உருவாக்கியது. எதிர்பார்த்ததற்கு மாறாக 50 மில்லியன் வாக்காளர்களில் 81.5% இனர் வாக்களித்ததன் மூலம் ஆய்வாளர்களையும் அரசியல்வாதிகளையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினர்.

காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களின் முன்னர் கிலோமீற்றர் கணக்கில் வாக்காளர்கள் அணிதிரளத்தொடங்கினர். 30கு வெப்பத்தின் கீழும் 4 மணித்தியாலத்திற்கு அதிகமாக காத்து நிற்கவேண்டியிருந்தது. திட்டமிட்டபடி இரவு 10.00 மணிக்கு வாக்களிப்பு நிலையங்களை மூடமுடியாது போனது. ரோமில் கடைசிவாக்காளர் இரவு 2.15 இற்கும், கலாபிரைனில் அதிகாலை 4.00 மணிக்கும் வாக்களித்தனர்.

ஆகக்கூடிய வேலையின்மையை கொண்ட நகரமான நியாபல் [Neapel] இல் பலமணித்தியாலங்களாக காத்திருந்த ஆத்திரத்தில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்தினுள் புகுந்து அடித்து நொருக்கினர். அவதானிகள் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது முடிவை மாற்றலாம் எனவும் தெரிவிக்கின்றனர். முதல் கணிப்பெடுப்பை தொலைக்காட்சிகள் வெளிவிடுகையில் கூட இன்னும் வாக்களிப்பு நிலையங்கள் திறந்திருந்ததுடன், இன்னும் வாக்காளர்கள் காத்திருந்தனர்.

பெர்லுஸ்கோனியின் தேர்தல் வெற்றிக்கான முதல் வாழ்த்து ஒஸ்திரியாவின் வலது-பழைமைவாத அரசாங்கத்திடம் இருந்து கிடைத்து. அவர்கள் பெர்லுஸ்கோனியின் வெற்றியை ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் ஏதும் விதிக்காது ஏற்றுக்கொள்ளவேண்டும் என கோரினர். ஒஸ்திரியாவின் பிரதி பிரதமரும் வலதுசாரிக்கட்சியின் [FPÖ] தலைவியுமான Susanne Riess-Passer '' இது இத்தாலிய மக்களின் ஜனநாயக முடிவு, ஐரோப்பிய ஒன்றியமும் இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்'' எனவும் தெரிவித்தார். நீண்டகாலமாக FPÖ தலைவரான ஜோர்க் கைடர் எதிர்கால இத்தாலிய பிரமரை வாழ்த்தியதுடன் ''பெர்லுஸ்கோனியின் வெற்றி ஐரோப்பாவிற்கு சாதகமானது'' என தெரிவித்தார்.

ஸ்பானிய வெளிநாட்டமைச்சரான Josep Pique ''ஒரு உறுதியான அரசாங்கம் கட்டப்படும் என நம்புவதாக'' தெரிவித்தார். திங்கட்கிழமை நண்பகல் வாக்குகள் எண்ணப்பட முன்னரேயே ஜேர்மனியின் பழைமைவாத கிறிஸ்தவ சமூக யூனியன் [CSU ] ''ஐரோப்பாவில் சோசலிச ஆதிக்கம் உடைந்து கொட்டுவதாக'' தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ சமூக யூனியன் [CSU] இன் மாகாணங்களுக்கான தலைவரான Michael Glos என்பவர் பெர்லுஸ்கோனிக்கு சாதகமான கணக்கெடுப்பை ''அமெரிக்காவில் புஷ்ஷின் வெற்றிக்குப் பின்னர் ஐரோப்பிய கூட்டமைப்பினுள் முதலாளித்துவ பிரிவினரை ஒரு உற்சாகப்படுத்தும் சைகை'' என விபரித்தார்.

ஜேர்மனியின் சிகப்பு-பச்சை கூட்டரசாங்கம் உத்தியோக பூர்வமான தேர்தல் முடிவு தெரியாதவரை இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்க நிராகரித்துவிட்டது. பிரான்சின் வெளிநாட்டு அமைச்சரான Hubert Védrine "ஐரோப்பிய அரசாங்கங்கள் புதிய இத்தாலிய அரசாங்கத்தை எச்சரிக்கையான கண்களுடன் அவதானிக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved