World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Indian government reeling after website exposes high-level arms procurement corruption

உயர்மட்ட ஆயுதபேர ஊழலை வலைத்தளப் பகுதி அம்பலப் படுத்திய பிறகு இந்திய அரசாங்கம் தள்ளாடுகிறது

By Sarath Kumara
24 March 2001

Use this version to print

நாட்டின் ஆயுதக் கொள்வனவில் உயர்மட்ட சுருட்டல் கடந்த வாரம் தெஹெல்க்கா (Tehelka) இணயத்தால் அம்பலப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் இந்திய அரசாங்கம் பெரும் அரசியல் நெருக்கடியில் மூழ்கி உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவரது கட்சியான சமதாக் கட்சி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) முக்கிய அங்கம் வகிக்கிறது. சமதாக் கட்சியின் தலைவர் ஜெயா ஜேட்லி பதவியில் இருந்து வெளியேறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னணிக் கட்சியான பிஜேபி யின் தலைவர் பங்காரு லெக்ஷ்மனும் வெளியேறினார்.

வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஊழலின் விளைவைக் கண்டு அஞ்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இன்னொரு கூட்டாளியும் மேற்கு வங்காளத்தில் தளம் கொண்டிருப்பதுமான திரிணாமுல் காங்கிரஸ், ஆளும் கூட்டணியிலிருந்து விலகி, குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக திடுக்கிட்டுப் போனதை வெளிப்படுத்தியது. பிஜேபியின் ஏனைய பங்குதாரர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் அதேவேளையில், வாஜ்பாயி அரசாங்கத்தை ஒன்றாய் இணைத்து வைத்திருப்பதற்கான பின்னனிக் காவல் நடவடிக்கைக்கு போராடும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஏனைய கூட்டாளிகளிடமிருந்து, குறிப்பாக வெளியிலிருந்து ஆதரவு தந்து வரும் தெலுங்கு தேசம் கட்சியிடமிருந்து வரும் அழுத்தம் பிரதமரை அவரது பாதுகாப்பு அமைச்சரின் ராஜினாமாவுக்கு உத்தரவாதத்தையும் விசாரணைக்கு உறுதியையும் தருமாறு வெளிப்படையாகவே நிர்ப்பந்தித்தது.

இந்த ஊழல் மார்ச் 13ல், தெஹெல்க்கா இணையத்தளம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடு பற்றிய தனது ஏழுமாத விசாரணையின் முடிவை அறிவிக்க செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டிய போது வெடித்தது. அதன் பத்திரிக்கையாளர்கள், போலியான பிரிட்டீஷை அடித்தளமாகக் கொண்ட வ்ஸ்ட் என்ட் என்ற நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும், இதுவரை இல்லாத வெப்ப உருக் காட்டும் பைனாகுலர்களை விற்பதாகவும் காட்டிக் கொண்டு, கீழ்மட்ட இராணுவ அதிகாரிகளிலிலிருந்து மற்றும் அரசாங்கத்தின் மேல் தட்டுவரை, தங்களது வழியில் படிப்படியாக வேலை செய்து, நுண்ணிய நிழற்பட கருவிகளால் அவர்களின் கலந்துரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்தனர்.

நூறு மணிகளுக்கும் மேலாக ஓடும் படச்சுருளில் பங்காரு லக்ஷ்மணன்1,00,000 ரூபாய்களை தமது இல்லத்தில் லஞ்சமாக வாங்கிய காட்சிகள் மற்றும் பெர்ணாண்டஸ் இல்லத்தில் ஜெயா ஜேட்லி ரூபாய் 2,00,000 வாங்கிய காட்சிகள் உள்ளடங்கியுள்ளன. பிஜேபியுடன் தொடர்புடைய இந்து தீவிரவாத அமைப்பான ராஷ்ட்ரிய சுய சேவக் சங்க (ஆர் எஸ் எஸ்) அமைப்பின் காப்பாளர் ஆர். கே.குப்தா காட்சியானது பிரதமருடன் அவருக்கு உள்ள தொடர்பை பெருமையுடன் கூறிக் கொள்வதாக காட்டுகிறது. அவரது மகன் தீபக் பிராக்ஸ் ஆயுத பேரர்கள்/ பத்திரிக்கையாளர்களிடம், " அரசாங்கத்துக்கு என்னென்ன பணம் போகுமோ அது என் மூலம் போகும்" என்றார்.

பட்டியல் இப்படியே போகிறது. பதிவு செய்யப்பட்ட கலந்துரையாடல்களின் போக்கில் குறிப்பிடப்பட்ட பிற முக்கிய நபர்களுள் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த இரு முக்கிய அதிகாரிகள் உள்ளடங்குவர். பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் என்.கே. சிங், பாதுகாப்புச் செயலரும் உள்ளடங்குவர். சுமார் 30 ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரிகளும் மற்றைய அரசியல்வாதிகளும் ஆயுத பேரத்தில் கலந்துரையாடியதிலும் பணத்தை லஞ்சமாகப் பெற்றதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 16 அன்று தேசிய தொலைக்காட்சியில் பாதுகாத்துப் பேசும் வகையில், வாஜ்பாயி குற்றச்சாட்டுக்கள் 50 ஆண்டுகளில் "மிகவும் ஆபத்தானவை" மற்றும் இந்த அமைப்பு "தூய்மைப் படுத்தப்" பட வேண்டும் என்றார். அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்கு முண்டு கொடுக்கும் வகையில், ஊழல் தொடர்பான விசாரணை இந்தியாவின் நீதிபதியுடன் கலந்தாலோசித்து தற்போதிருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நடத்தப்படும் என்று அறிவித்தார். விசாரணை நான்கு மாதங்களுக்குள் முடியும் என்றும் "குற்றவாளி அவரது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்படுவார்" என்றும் உறுதி கூறினார்.

இந்த ஊழலானது காங்கிரஸ் (இ) கட்சிக்கும் மற்றைய எதிர்க்கட்சிகளுக்கும் உயிரைக் கொண்டு வந்தது. பிஜேபி அரசாங்கம் 1998ல் ஆட்சிக்கு வந்ததற்குக் காரணம் பகுதி அளவில் மற்றைய கட்சிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தியதாலும் உத்தமான அரசாங்கத்தைத் தருவது என்ற உறுதியினாலும்தான். உண்மையில் தெஹெல்க்கா ஊழலுக்கும் 1980 களில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ்(இ) அரசாங்கம், ஸ்வீடிஸ் கம்பனியான போ ஃ பார்ஸ் -- லிருந்து பல கோடி டாலர்கள் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் இடையில் தெளிவாக ஒத்த தன்மையதாக இருக்கிறது.

பெங்களூரில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் ராஜீவின் விதவை மணைவியுமான சோனியா காந்தி," அரசாங்கம் ஆளுவதற்கான தார்மீகப் பொறுப்பை இழந்துவிட்டது மற்றும் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வாஜ்பாயியைத் தாக்கினார். கூட்டத்தில் மற்ற கட்சிகளுடன் கூட்டுக்குள் நுழைவதற்கு கட்சிக்கு அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 15 அன்று கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (சி பி ஐ(எம்) ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபி ஐ), சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜனதா தளம் (எஸ்) ஆகியன "மக்கள் முன்னணி" உருவாக்கம் பற்றியும் அது சிபி ஐ(எம்) தலைவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான ஜோதிபாசுவினால் தலைமை வகிக்கப்படும் என்றும் அறிவித்தன. காங்கிரஸ்(இ) உடனும் சேர்த்து பரந்த எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கூட ஆதரவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சி பி ஐ (எம்) தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா கூறினார்: "முதலில் நாம் சந்திப்போம், பின்னர் காங்கிரஸ் உடனான பேச்சு வார்த்தைகள் நடைபெறட்டும்"

அரசியல் தொடர்புகள்

இந்தியாவிலும் சரி மற்ற எந்த நாட்டிலும் சரி, தோற்ற மதிப்பினை மதிப்பாய் ஏற்றுக் கொண்ட ஊழல் எதுவும் இல்லை. ஊழல் என்பது ஆளும் வர்க்கம் தனது சொந்த அணிகளுக்குள் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளவும் அரசின் விவகாரங்களை மறு ஒழுங்கு செய்வதற்குமான முயற்சிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட வழிமுறையாகும்.

மேல் தோற்றத்திற்கு, தெஹெல்க்கா புகழைச் சாதிக்க விரும்பிய இணைதளமாகவும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அதிர்ஷ்டம் குவிந்ததைப் போன்று தோற்றம் அளிக்கிறது. தெஹெல்க்கா அல்லது இந்தியில் "உணர்வு" இணையத்தளம் கடந்த மே மாதம்தான் தொடங்கப்பட்டது. அது இதேவிதமான உத்தியைக் கையாண்டு, கடந்த ஆண்டு இந்தியாவைக் கலக்கிய கிரிக்கெட் விளையாட்டு முடிவு நிர்ணய ஊழலை அம்பலப்படுத்தி விரந்து முக்கியத்துவம் பெற்றது. அண்மைய பத்திரிக்கையாளர் வெற்றி முயற்சி பற்றி தற்பெருமை பாராட்டும் விதமாக, தெஹெல்க்காவின் முதலாளிகளுள் ஒருவரான அனிருத்தா பால் குறிப்பிட்டதாவது: "அது பெரியது. அது என்றென்றைக்குமானதாக எமக்கு முத்திரை குத்திவிட்டது. நியூயார்க் டைம்ஸ்க்கு நூறு ஆண்டுகள் எடுத்ததை நாம் ஒரு வருடத்தில் செய்தோம்". என்றார்.

தெஹெல்க்கா நேரடி அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது என்று வெளித் தோன்றுவதற்கான சாட்சியங்கள் காணப்படவில்லை. ஆனால் கேள்விகள் அப்படியே இருக்கின்றன: அரசியல் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் பகுதிகள், தங்களது சொந்த காரணங்களுக்காக, பத்திரிக்கையாளர்களுக்கு அவர்களை குறிப்பிட்ட திக்கில் செலுத்துவதற்கு தகவல்களும் குறிப்புக்களும் வழங்கினார்களா?

இந்தியாவின் உளவு ஸ்தாபனமான மிஙிக் க்குள் கடும் பதில் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் அறிவித்தது. இல்லாத கருவியை விற்கும் போலிக் கம்பெனியின் பிரதிநிதிகளாக தங்களை சில மாதங்களாகக் காட்டிக் கொண்ட பத்திரிக்கையாளர்களைக் கண்டு பிடிக்க தங்களின் ஏஜண்டுகள் தவறினால், அது உண்மையில் ஒட்டு மொத்த திறமைக் கேடாகும் என்றது.

ஆனால் தெரிந்திருந்தால், IB க்கு அநேகமாகத் தெரிந்திருக்கும். தெஹெல்க்கா பத்திரிக்கையாளர்களின் படி, உளவுத்துறை ஆட்கள் அவர்களை அக்டோபரிலிருந்து பின் தொடர்ந்திருக்கலாம் என நினைக்கின்றனர். ஆகையால் ஏன் ஒருவருக்குக்கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை? இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டது: "அரசியல் ஆதரவுள்ள உளவுத்துறையின் ஒரு பகுதி, அம்பலப்படுத்தல் தொடர்ந்து போகட்டும் என முடிவு செய்ததாக சிலர் நம்புகின்றனர். மற்றவர்கள், தெஹெல்க்கா உளவு அமைப்பின் பகுதியினது மறைமுக ஆதரவு இல்லாமல் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது என்று கூட குறிப்புரைக்கின்றனர்."

தெஹெல்க்கா சிக்கவைக்கும் நடவடிக்கையில் அகப்பட்டோர் யார் அகப்படாதோர் யார் என்பதைக் கவனிப்பது முக்கியமானது. அனைத்து முக்கிய பிரமுகர்களும் வாஜ்பாயிக்கும் அவரது அரசாங்கத்தின் மிதமானது என்று அழைக்கப்படும் பகுதியினருக்கு மிகவும் நெருங்கியவர்கள். பிஜேபி கட்சியின் இந்து இனவாத நிலையை மெனமைப்படுத்துவதற்காக வாஜ்பாயிக்கு ஆதரவாக கடந்த ஆண்டு பிஜேபி தலைவராகக் கொண்டு வரப்பட்டவர்தான் லக்ஷ்மண். ராஜினாமா செய்யும்படியான அழுதத்திற்கு ஆளான பிரஜேஷ் மிஸ்ரா, வாஜ்பாயியின் வலது கரமான ஆட்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் பெர்ணாண்டஸ் வாஜ்பாய் இடத்திற்கு பதிலீடாகக் கருதப்பட்டவர்.

மற்றொரு புறத்தில், அதிவலதுசாரிக் கருத்துக்களுக்குப் பேர்போன உள்துறை அமைச்சர் அத்வானி, ஒப்பீட்டளவில் சிறிதும் தீங்கிழைக்காதவராக வெளித் தோன்றியிருக்கிறார். தெஹெல்க்கா டாட் காம் பற்றிய கட்டுரை ஒன்று குறிப்பிட்டதாவது: ''நாடாவில் பெயர் குறிப்பிடப் படாதவர்கள் என்று கூற முடியுமானால் அது உள்துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர்களாகத்தான் இருக்கும். மாறாக, 1998 டிசம்பருக்குப் பின்னர் அத்வானியின் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுவதில் கருவியாக செயல்பட்டவர்கள் ஏதாவது ஒரு வழியில் நாடாப்பதிவில் இணைக்கப்பட்டிருந்தனர்." வாஜ்பாயி மற்றும் ஏனைய தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அரசியல் பாதிப்பைத் தடுக்க முனையும் ஆற்றொணாநிலையில் இருந்த வேளை, அத்வானி அரசாங்கத்திற்கு ஆதரவுக்கான எந்த உச்சரிப்பையும் செய்வதற்கு முன்னால் நான்கு நாட்களாக அமைதி காத்தார்.

தெஹெல்க்கா டாட் காம் விசாரணை வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதோ அல்லது இல்லையோ, அதன் விளைவுகள் பிஜேபியுடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்ற இந்து அதிதீவிரவாத அமைப்புக்களால், வாஜ்பாயிக்கோ அல்லது அவருக்கு மிக நெருக்கமாக இருப்பவருக்கோ அழுத்தத்தை உக்கிரப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் எழுதுகிறவாறு: "பிரச்சினையின் பகுதியானது வாஜ்பாயியின் உண்மையான எதிர்ப்பு காங்கிரஸ் அல்ல: அது அவரது சொந்த சங்க பரிவார் (இந்து இனவாத அமைப்புக்களின் தொகுப்பு) ஆகும். இப்போதிருந்த கடந்த ஆறு வாரங்களாக பிரதமரும் அவரது உதவியாளர்களும், பிரதமர் அலுவலகத்துக்கு எதிரான நீடித்த பிரச்சாரத்தால் சக்தி இழந்தபோய் இருக்கின்றனர்".

கடந்த வாரம் இறுதியில், அதன் தலைவர்களின் மூன்று நாள் நடைபெற்ற ஆண்டு இறுதிக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் முதலில், ஆர்.கே.குப்தா ஆர்.எஸ்.எஸ் காப்பாளர் இல்லை என்று கூறியதன் மூலம் தன்னை ஊழலிலிருந்த தள்ளி வைத்துக் கொள்ள விழைந்தது. அவரது மிதவாத நிலைப்பாடு மற்றும் தாழ்ந்த சாதி அந்தஸ்து காரணமாக எற்கனவே வெளியில் இருந்த பிஜேபி தலைவர் லக்ஷ்மண் " சுயசேவைக்காக இருக்கத் தவறியவர்" (ஆர்.எஸ்.எஸ் காரியாளர்) என்று கூறியது. ஆனால் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் உள்ள "தகுதிக் குறைவான அலுவலர்களுக்கு" எதிராக வசைமாரி பொழிந்தது. மற்றும் குறிப்பாக மிஸ்ராவின் ராஜினாமாவைக் கோரியது. அது பிஜேபி "காங்கிரஸ் மயமானதாக" ஆகிவிட்டது என்றும் குற்றம் சாட்டியது-- அதாவது காங்கிரஸ்(இ) போல் ஊழலும் சீரழிவுமாகி விட்டது. மிஸ்ரா மற்றும் என்.கே.சிங் ஆகியோரின் ராஜினாமாவைக் கோரும் அழைப்பில் சிவசேனைத் தலைவர் பால்தக்கரே ஆர்.எஸ்.எஸ் உடன் சேர்ந்து கொண்டார்.

வாஜ்பாயி உடனான ஆர்.எஸ்.எஸ் ன் கசப்புணர்வு சில காலமாக வளர்க்கப்பட்டு வந்தள்ளது. ஆளும் கூட்டணியை அமைப்பதில் வாஜ்பாயும் பிஜேபியும், பல சிறிய கட்சிகளின் ஆதரவை ஈட்டுவதற்காக இந்துத்வா அல்லது இந்து தீவிரவாத நிகழ்ச்சி நிரலின் அம்சங்களை நிறுத்தி வைக்குமாறு நிர்ப்நிதிக்கப்பட்டனர். கடந்த வார இறுதிக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைமையானது, அயோத்தியில் இந்துக் கோவில் கட்டுவதற்கு காலவரை அற்ற தாமதத்தை தாம் பொறுக்க முடியாது என்றும் கோவில் கட்டுவதற்கான சட்டத் தடைகளை அகற்ற அரசாங்கத்துக்கு ஒரு வருட காலம் தருவதாகவும் தெளிவாகக் கூறி தீர்மானம் நிறைவேற்றினர். வாஜ்பாயி, அத்வானி மற்றும் ஏனைய பிஜேபி தலைவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மற்றும் அத்வானி உட்பட அநேகர் 1992ல் இந்து வெறிக் கும்பலால் பாபர் மசூதி அழிக்கப்பட்டதில் கலந்த்து கொண்டனர்.

தாக்குதலுக்குள்ளாகும் பொருளாதாரக் கொள்கைகள்

ஆர்.எஸ்.எஸ், சிவசேனா மற்றும் விஷ்வ இந்து பரிஷத் (VHP) அல்லது உலக இந்து சபை ஆகியன அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை இட்டு கடுமையாய் விமர்சனம் செய்கின்றனர். இந்து தீவிரவாத அமைப்புக்கள் சர்வதேச கம்பெனிகளின் ஊடுருவலுக்கும் வெளிநாட்டுக் கலாச்சாரத்திற்கும் எதிராக, இந்திய வர்த்தகத்தைப் பாதுகாக்கும் அடிப்படையில் பாரம்பரியமாக சிறு வணிகத் தட்டினர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இருப்பினும் வாஜ்பாயி சர்வதேச நிதி மூலதனத்தின் அழுத்தத்தின் கீழ், 1990 களில் இந்தியாவை வெளிநாட்டு முதலீட்டாளர்ளுக்கு கதவு திறந்து விட்ட முந்தைய அரசாங்கங்களின் மறு சீரமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்தும், உக்கிரப்படுத்தியும் வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது கூட்டத்தில், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு "விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் சலுகைகள்" அளிப்பதற்காக அரசாங்கத்தின் கொள்கைகளைத் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் மோகன் பக்வத், வாஜ்பாயியை உடனடியாக "சுதேசி" அல்லது தேசியக் கொள்கைகளைப் பின்பற்றுமாறு கோரினார். மற்றும் மறைமுகமான அச்சுறுத்தலில், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடும் என்று அவர் எச்சரித்தார். ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய வி இ ப, வாஜ்பாயி நிர்வாகத்தை நாட்டின் "மோசமான அரசாங்கம் " என்று முத்திரை குத்தியதுடன் "அதன் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு போக" இதுதான் நேரம் என சாடையாகக் குறிப்பிட்டார். வி இ ப -ன் மூத்த தலைவர் அசோக் சிங்கால் தொலைக் காட்சியில் ஆஜ்தக் நிகழ்ச்சியில், இந்தியாவில் "நீங்கள் மோசமான அரசியல்வாதிகளைப் பெற்றிருக்கிறீர்கள்" என்றார்.

பிப்ரவரி 28ல் அளிக்கப்பட்ட இந்திய பட்ஜெட் பதட்டங்களை உச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இது பெரும் வர்த்தகத்தட்டினர் மத்தியில், இந்தியாவிலும் சர்வதேச ரீதியிலும், மேலும் பொருளாதார மறு சீரமைப்பிலும் பொருளாதாரத்தை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விடலிலும் குறிப்பிடத்தக்க அடியைக் குறிப்பதாக பொதுவாக வரவேற்கப்படுகிறது. மானியங்களை அகற்றல் மற்றும் அரசாங்க செலவுகளை வெட்டல் மூலம் பட்ஜெட் ஏழை பணக்காரருக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்த மட்டும் செய்யவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியின் குறிப்பிடத்தக்க சமூகத் தளமாக அமைந்த நடுத்தர வர்க்கத் தட்டினரின் நிலையையும் கூட கீழறுத்துள்ளது.

சில அரசியல்வாதிகளின் நற்பெயர் மீதான வெஸ்ட் என்ட் ஊழலின் உடனடி விளைவுகளைக் காட்டிலும் அதிகமாய் வேறு விஷயம் உள்ளதாக பெரும் வர்த்தகர்கள் ஏற்கனவே மோப்பம் பிடித்துள்ளனர். இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் தலைவர் அருண் பாரத் மற்றும் தொழில் மற்றும் வர்த்தகத்தின் ஒருங்கிணைந்த கழகங்களின் தலைவர் ரகு மோடி ஆகியோர், அரசியல் நெருக்கடி பொருளாதாரத்தின் மீது இருட்டடிப்பு செய்ய அனுமதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தினர்.

ஊழல் பிஜேபியின் தேர்தல் முன்னேற்றங்களுக்கு செய்த பாதிப்பைச் சுட்டிக்காட்டி, இந்துஸ்தான் டைம்ஸில் "ஊழல் பொருளாதாரங்கள்" என்று தலைப்பிடப்பட்ட ஆசிரியத் தலையங்கம் குறிப்பிட்டதாவது: "இந்த அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக, வாஜ்பாயி அரசாங்கக் கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் சின்ஹாவின் பற்றாக்குறை குறைக்கும் பட்ஜெட் நடவடிக்கைகளையும் ஏய்க்கலாம் இது ஆழங்காணமுடியாத சோகமாகும்." நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஊழல் இருந்த போதும் பட்ஜெட்டில் குறிக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையான இடத்தில் இருக்கும் என பெரும் வர்த்தகர்களுக்கு மறு உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

அண்மைய இழிவுக்குரிய செய்தி மற்றும் ஏனையவற்றால் வெளிப்படுத்தப்பட்ட ஊழலின் பரந்து பரவும் தன்மை மீதான மிகவும் அடிப்படை ரீதியான அக்கறை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே இந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கம் புகார் கூறியது: "பொருளாதாரக் கோளத்தில், அந்த அளவு நாசூக்காக செய்யப்படாத சட்டத்துக்குப் புறம்பான பணம் திரட்டல், 1991 பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதான இலக்கைக் கருச்சிதைப்பதை நோக்கி நீண்ட தூரம் போயிருக்கிறது. இது பூகோள அமைப்பு முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியாவை ஆக்குதற்கு விரைந்த நோக்கத்துடன் நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காகும். ஆசியாவில் வெளிநாட்டு முதலீட்டிற்கான மிகவும் தாராண்மையான சட்டங்கள் சிலவற்றை இந்தியா சேர்த்துக் கொண்டிருந்தாலும் இதுவரை, ஒரு பெரிய சர்வதேச கம்பெனியைக்கூட, அதற்கு தன்னை பூகோள உற்பத்தி மேடையாகப் பயன்படுத்துவதற்கு ஈர்ப்பதில் கூட இந்தியா வெற்றி பெற்றிருக்கவில்லை...."

"சிங்கப்பூரில் ஒரு வெளிப்படையான விவாதத்தில், மத்திய மாநில அரசாங்கங்களில் இருந்து அனைத்து வகையான இசைவு சான்றுகளையும் தாங்கள் பெற்றுக்கொண்ட பின்னரும் கூட, பூகோள உற்பத்தித் திட்டங்களில் ஏன் இந்தியாவை ஒன்றிணைக்கத் தயாரிக்கவில்லை என்பதற்கு முதன்மையான காரணம், அவை வட்டார அதிகாரத்துவங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கருணைக்குக் கிடக்க வேண்டி உள்ளது என்று நிதி மேலாளர்களும் கார்ப்பொரேட் நிர்வாகிகளும் வெளிப்படுத்தினர். அவர்களுள் யாரேனும் ஒருவர் அவர்களுக்குப் போதுமான 'ஊக்குவிப்பு' வழங்கப்படவில்லை என்றால் தங்களின் நடவடிக்கைகளை நிறுத்த முடியும் மற்றும் அவ்வாறு செய்யப் போவதாக அச்சுறுத்த முடியும். அரசில் ஒவ்வொரு அரசாங்க மாற்றமும், புதிதாகப் பொறுப்பு ஏற்றுள்ளோருடன் புதிய தொகைப் பேச்சு வார்த்தைகளுக்கும் புதிய வகைக் கோரிக்கைகளுக்கும் இட்டுச் செல்கிறது."

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பெரும் வர்த்தகர்களின் பேச்சாளர் இருவரும் இப்பழிக்கேட்டை தங்களின் சொந்த, திசை திருப்பும் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு தள்ளுவதற்கு எடுத்துக் கொள்கின்றனர். வாஜ்பாயி வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் தனது அரசாங்கத்தை ஒட்டுப் போட்டு சரி செய்வதில் வெற்றி பெறலாம் எனினும் அதேவேளை, இப் பழிக்கேடு ஆளும் பிஜேபி கூட்டணியிலிருந்து கிழித்துக் கொண்டு செல்லும் ஆழமான மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அது சர்வதேச நிதிமூலதனத்தால் குறிக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்துடன் முன்செல்வதைத் தவிர வேறு எதற்கும் அற்ப சந்தர்ப்பமே இருக்கிறது, ஆனால் அவ்வாறு செய்கையில், அரசாங்கம் தனது சொந்த ஆதரவு தளத்தை கீழறுக்கும் மற்றும் அரசியலில் இருந்த இடம் தெரியாமற் போவதை அரவணைக்கும்.