WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
Two decades after the burning down of the Jaffna library
in Sri Lanka
இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் தீ மூட்டப்பட்டு
இரண்டு தசாப்தங்கள்
By Vilani Peris
30 May 2001
Use
this version to print
ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியாளர்கள் பாமியனில்
உள்ள பிரமாண்டமான புத்தர் சிலையை அழிக்கப் போவதாக
அறிவித்து, அப்படியே செய்தபோது அந்நடவடிக்கை நியாயமான
முறையில் எதிர்ப்பு அலைகளை முழு உலகிலும் தூண்டி விட்டது. எவ்வாறெனினும்
இலங்கையின் ஆளும் வட்டாரங்களிலும் உயர் பெளத்த அதிகார
தரப்பிலும் இருந்தும் போலி நடிப்புக்களின் வெளிப்பாடுகள் பல
தலையெடுத்தன.
கொழும்பில் உள்ள அரசியல் ஆட்சியாளர்கள்
பல தசாப்த காலங்களாக இலங்கை ஒரு பெளத்த, சிங்கள
நாடு எனவும் அங்கு தமிழரும் ஏனைய சிறுபான்மையினர்களும் இரண்டாம்
தரமானவர்கள் எனவும் கூறும் பேரினவாத கருத்துக்களுக்கு எண்ணெய்
வார்த்து வந்துள்ளனர். ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வேண்டுமென்றே
கிண்டி விட்ட இனவாத உணர்வுகள் தமிழர்களுக்கு எதிரான
பாகுபாடான நடவடிக்கைகளை திணிக்கவும், தமிழர் விரோத
கலவரங்களை தூண்டவும், 1983ல் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிராக இடம்பெற்று வரும் யுத்தத்தை முன்னெடுக்கவும் அவற்றை
இட்டுச் சென்றது.
தலிபான்கள் பாமியான், புத்தர் சிலையை உடைத்துத்
தள்ளிய போது அரசியல் பெரும் புள்ளிகள் அதற்கு எதிரான தமது
கசப்பைக் காட்டிக் கொள்ள ஆளுக்காள் முண்டியடித்துக்
கொண்டனர். பெளத்த பிக்குகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டதோடு அச்சிலையைத் திரும்பவும் இலங்கையில் கட்டியெழுப்பவும்
வாக்குறுதியளித்தனர். சிங்கள சோவினிச கருத்துக்களை அள்ளி வீசுவதில்
பிரபல்யமானவரும் பெளத்த குருமாருடன் நெருங்கிய உறவு
கொண்டவருமான பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க உடனடியாக
பாகிஸ்தான் பயணமானதோடு, அந்தச் சிலையைக் காப்பாற்ற
என்னவெல்லாம் செய்யலாம் என்பதையிட்டு மந்திராலோசனைகள்
நடாத்தினார்.
எவ்வாறெனினும் கொழும்பு வெகுஜனத் தொடர்புச்
சாதனங்கள் தலிபான் கலாச்சார அழிபாடுகளுக்குச் சமாந்தரமான
இலங்கைச் சம்பவங்கள் தொடர்பாக மூடுமந்திரத்தைக்
கடைப்பிடித்தன. குறிப்பாக 1981ம் ஆண்டின் யாழ்ப்பாண பொது
நூலக அழிப்பு பற்றி இங்ஙனம் நடந்து கொண்டன. யாழ். நூலகம்
தீவைத்துக் கொழுத்தப்பட்ட இருபது ஆண்டுகளின் பின்னரே அதைப்
பதிலீடு செய்வதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. பொறியியலாளர்களின்
படி இக்கட்டிட நிர்மாண வேலைகள் இவ்வாண்டு டிசம்பரில் பூர்த்தி
செய்யப்படும்.
என்னதான் மீள நிர்மாணிக்கப்படினும் 1981ல் வெந்து
போன விலைமதிப்பற்ற பல்லாயிரக் கணக்கான தமிழ் நூல்களையும்
ஓலைச் சுவடிகளையும் புத்துயிர் பெறச் செய்ய முடியாது. யாழ்ப்பாணம்,
தமிழ் நாகரீகத்தின் முக்கிய ஒரு மையமாக பல நூற்றாண்டுகளாக
இருந்து வந்துள்ளது. யாழ்ப்பாண வைபவமாலை- யாழ்ப்பாண
வரலாறு- போன்ற நூல்களை புத்துயிர் பெறச் செய்ய
முடியாது. இந்நூலகம் மட்டுமே இன்று கிடைக்கக் கூடியதாக
இருந்த இந்நூலின் ஒரே பிரதியை தன்னகத்தே கொண்டிருந்தது.
1841ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகம்
1950ல் கம்பீரமான கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு
தென்னாசியாவில் உள்ள தலைசிறந்த நூலகங்களில் ஒன்று என்ற விதத்தில்
பல தொகை நூல்களையும் கொண்டிருந்தது. இந்நூலகம் புத்திஜீவிகள்,
ஆசிரியர்கள், மாணவர்கள் -சிங்களவர்கள், தமிழர்கள்- இடையே பிரபல்யம்
அடைந்ததோடு சாதாரண உழைக்கும் பாட்டாளி மக்களினாலும்
பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டது. நாட்டின் உள்நாட்டு யுத்தம்
வெடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூலகம் அழிக்கப்பட்டமை
இந்நாட்டின் தமிழ் சிறுபான்மை மக்களின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு
எதிரான ஒரு வெறியாட்டமாகவும் இனவாத உணர்வுகளைத் திட்டமிட்டுத்
தூண்டிவிடுவதாகவும் விளங்கியது.
யூ.என்.பி. அரசாங்கத்தினால் தூண்டிவிடப்பட்ட
ஒரு இனவாதக் காடையர் கும்பல் இந்தத் தீவைப்புக்களில் ஈடுபட்டது.
அன்றைய நேரில் கண்ட சாட்சியங்களின்படி தெற்கில் இருந்து
தருவிக்கப்பட்ட ஒரு கும்பலுடன் சேர்ந்து சீருடை அணிந்த பொலிசாரே
இதில் ஈடுபட்டனர். 1981 மே 31ம் திகதி நள்ளிரவில் ட்ரக் வண்டியில்
வந்திறங்கிய அவர்கள் நூலகக் கட்டிடத்துக்கு தீமூட்டினர்.
இத் தீவைப்பினால் யாழ்ப்பாணத்தில் பரந்த
அளவில் ஆத்திரம் கொதித்ததோடு மூன்று நாள் வன்முறைகளையும்
ஏற்படுத்தியது. நான்கு தமிழர்கள் வீடுகளில் இருந்து பொலிசாரால்
இழுத்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர். சிங்களக் குண்டர்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF)
தலைமை அலுவலகத்துக்கு தீவைத்ததோடு, சுமார் 100 தமிழர்களின்
வீடுகளையும் கடைகளையும் சூறையாடியதோடு அவற்றுக்கும்
தீவைத்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்
வி.யோகேஸ்வரனின் வீடு நாசமாக்கப்பட்டது. தமிழ் தினசரியான
ஈழநாடு பத்திரிகை அலுவலகமும் அச்சகமும் சுட்டெரிக்கப்பட்டன.
நகரின் சந்திகளில் நிறுவப்பட்டிருந்த தமிழ் கலாச்சார, மத
தலைவர்களின் சிலைகளையும் குண்டர்கள் அடித்து உடைத்தனர். இந்த
வெறியாட்டம் எல்லாம் ஜூன் 4ம் திகதி மாவட்ட அபிவிருத்திச்
சபைகளுக்கான (DDC)
தேர்தலின் பின்னரே முற்றுப் பெற்றது.
மே 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்
இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சுட்டுக் கொல்லப்பட்டதே
நூலகத்தை தீமூட்டுவதற்கான உடனடிச் சாக்குப் போக்காகியது.
இக்கொலைகளுக்கு எவரும் உரிமை கோரியிராததோடு தேர்தலின்
பேரில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட யூ.என்.பி.
ஆதரவு குண்டர் கும்பல்கள் சிருஷ்டித்த ஒரு ஆத்திரமூட்டல்
நிலைமையின் கீழேயே இவை இடம்பெற்றன. பொலிசாரும் காடையர்களும்
கூட்டத்தில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களைத்
தாக்கியதோடு பின்னர் அன்றிரவு நூலகத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர்.
காடைத்தனங்களுக்கான பிரச்சாரம்
இந்த துன்புறுத்தல்களுக்கும் காடைத்தனங்களுக்குமான
பிரச்சாரம், வாக்காளர்களை குழப்பியடிக்கவும் ஒரு சில
யூ.என்.பி. வேட்பாளர்கள் தன்னும் இத்தேர்தலில் வெற்றி பெறும்
விதத்தில் வாக்குப் பெட்டிகளை முறைமுறையாக கையாடுவதை
நோக்கமாகக் கொண்டும் இடம்பெற்றது. தமிழர்களின் ஜனநாயக
உரிமைகளுக்கான கோரிக்கைகளை சாந்தப்படுத்தும் ஒரு முயற்சியாக
1980ல் யூ.என்.பி. மாவட்ட அபிவிருத்தி சபை முறையை ஸ்தாபிதம் செய்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மா.அ.ச. யை ஆதரித்த
போதிலும் தமிழ் இளைஞர்கள் இதை எதிர்த்தனர். எதிர்ப்பு வளரத்
தொடங்கியது. யூ.என்.பி. அரசாங்கம் தேர்தல் வாக்குகளின்
பெறுபேறுகளை ஊர்ஜிதம் செய்யும் பெரிதும் ஈவிரக்கமற்ற
விதிமுறைகளில் குதித்தது.
தேர்தல் நடந்து முடியும் வரை அரசாங்கம்
தனது குண்டர்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்திய வெறியாட்டங்கள்
வெளியரங்குக்கு வராவண்ணம் பார்த்துக் கொள்ளும் பொருட்டு
செய்தி இருட்டடிப்புக்களைக் கடைப்பிடித்தது. ஜூன் 3ம் திகதி
ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் யாழ்ப்பாணம்
வரையும் அவசரகால விதிகள் அமுலில் இருப்பதாகவும் தேர்தல்
திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவித்தது. தனது சொந்த
காடைத்தனங்களுக்கு தமிழ் சிறுபான்மையினரை பலிகடாக்கள் ஆக்கும்
ஒரு முயற்சியாக பிரதமர் ஆர்.பிரேமதாச பொலிசாரினதும் யூ.என்.பி.
வேட்பாளரினதும் மரணங்களை விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழு
நியமனம் செய்யப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
ஆனால் யாழ். நூலகம் அழிக்கப்பட்டது சம்பந்தமாக எந்தவிதமான
உத்தியோகபூர்வ விசாரணையும் இடம்பெறவில்லை.
அதே நாளன்று இரண்டு சிரேஷ்ட அமைச்சர்கள்-
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஒரு நெருங்கிய அரசியல் சகாவான
காமினி திசாநாயக்கவும் சிறில் மத்தியூவும்- இன்னும் பல குண்டர்களுடன்
யாழ்ப்பாணத்தில் வந்திறங்கினர். இவர்களின் நடவடிக்கையை நெறிப்படுத்தவே
இவ்விருவரும் வருகை தந்தனர். இவர்கள் இருவரும் வாக்குச் சீட்டுக்களை
கையாடுவதில் பிரமாண்டமான அளவில் ஈடுபட்டதாக குற்றம்
சாட்டப்பட்டது. சில பகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக்
காட்டிலும் அதிகமான வாக்குச் சீட்டுக்கள் இருந்ததாகக்
குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும்
வராததுமாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஏ.அமிர்தலிங்கம்
கைது செய்யப்பட்டார். தேர்தல் தினத்தன்று பொலிசார் மேலும்
மூன்று தலைவர்களை -நவரத்தினம், தர்மரத்தினம், சிவசிதம்பரம்-
தடுப்புக் காவலில் வைத்தனர். இந்த நடவடிக்கைகளுக்கு
இடையேயும் யூ.என்.பி. 23,302 வாக்குகளை மட்டுமே சுருட்டிக்
கொள்ள முடிந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி சகல மாவட்ட
அபிவிருத்தி சபை ஆசனங்களையும் வெற்றி கொள்ளும் விதத்தில்
263,269 வாக்குகளைப் பெற்றது.
யூ.என்.பி. அரசாங்கம் முன்னைய ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி தலைமையிலான கூட்டரசாங்கத்தைப் போலவே சிங்கள
பேரினவாதத்தைத் தூண்டி விடுவதிலேயே நம்பிக்கை கொண்டிருந்தது.
பொருளாதாரத்தின் சீரழிவு காரணமாகவும் திறந்த சந்தையின்
பக்கம் திரும்பும் அதனது சீர்திருத்தங்கள் காரணமாகவும் மக்களிடையே
கசப்புணர்வு வளர்ச்சி கண்டு வருவதை தவிர்க்க இதைச் செய்ய
வேண்டி இருந்தது. அங்ஙனம் செய்வதற்கான அதன் வல்லமைக்கு
அது எல்லாவற்றுக்கும் மேலாக லங்கா சமசமாஜக் கட்சியின்
காட்டிக் கொடுப்பில் சார்ந்து இருந்தது. சமசமாஜக் கட்சி
1964ல் சோசலிச அனைத்துலகவாதம் என்ற தனது முன்நோக்கை
கைவிட்டுவிட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க.
அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டது. 1972ல் ஸ்ரீ.ல.சு.க. கூட்டரசாங்கத்தின்
ஒரு பாகமாக லங்கா சமசமாஜக் கட்சி அமைச்சரான கொல்வின்
ஆர்.டி.சில்வா பெளத்தத்தை அரசாங்க மதமாகவும் தனிச் சிங்கள
சட்டத்தை மொழிக் கொள்கையாகவும் அரசியலமைப்பில் திணிப்பதற்கு
பொறுப்பாக விளங்கினார். கூட்டரசாங்க கொள்கைகளுக்கு
எதிரான பரந்த அளவிலான எதிர்ப்பின் பெறுபேறாக 1977ல் யூ.என்.பி.
பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி கண்டது. இதனால் அது
தனது இனவாத உணர்வுகளுக்கு மேலும் எண்ணெய் வார்த்தது.
யாழ்ப்பாண பொது நூலகம் தீயிடப்பட்டதைத்
தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு
அமைச்சர்களில் ஒருவரான சிறில் மத்தியூ தமிழர் எதிர்ப்பு இனவாத
உணர்வுகளுக்கு பேர் போனவர். அவர் 'சிங்களவர்களே! பெளத்தத்தை
காப்பாற்ற கிளர்ந்து எழுங்கள்' என்ற நூலின் ஆசிரியராவார். 1979ல்
அவர் ஆற்றிய ஒரு தொகை சூடேறிய பேச்சுக்கள் "யார் இந்த
புலி" என்ற பிரசுரமாக வெளியிடப்பட்டது. இப்பிரசுரம் ஆளுக்காள்
கைமாற்றப்பட்டது.
ஏனைய நூல்கள் கொழும்பு அரசியல்வாதிகளாலும்
தொடர்பு சாதனங்களாலும் சிருஷ்டிக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையின்
தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. 1980ல் 'கொடூரமான சதி' (The
Diabolical Conspiracy) என்ற தலைப்பில்
வெளியிடப்பட்ட ஒரு நச்சுத்தனமான பிரசுரம் தமிழ் ஆசிரியர்கள்
சிங்கள மாணவர்களுக்கு மேலாக தமிழ் மாணவர்களுக்கு கூடுதலான
புள்ளிகளை வழங்குவதாகவும் அதன் மூலம் அவர்களை பல்கலைக்
கழகங்களில் அனுமதி பெறச் செய்வதாகவும் குற்றம் சாட்டியது.
இது "சிங்கள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் இதயங்களுள்
கொதித்துக் கொண்டுள்ள ஒரு பிரச்சினையாகும்" எனக் குறிப்பிட்டது.
மற்றொரு பிரசுரம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களை எச்சரித்து
கண்டனம் செய்தது. "சிங்கள கலாச்சாரமும் பெளத்தமும்
மலைநாட்டு கிராமத்தவர்களும் மறைந்து போய்விடுவதை நாம்
காண்கிறோம்" என்றது. தமிழ் வர்த்தகர்களை தொடர்ந்து
தாக்குகையில் இது "மொத்த, சில்லறை வியாபாரம் எல்லாம்
இப்போது அடியோடு இந்திய நாட்டவர்களின் கைகளிலேயே இருந்து
கொண்டுள்ளது" எனவும் பிரகடனம் செய்தது.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே யூ.என்.பி. பெளத்த
பிக்குகளின் ஒரு பகுதியினரின் ஆதரவுடன் வடக்கு, கிழக்கில் உள்ள
தமிழர்களுக்கும் அவர்களின் வீடுகள் கடைகள் மட்டுமன்றி மத்திய
மலைநாட்டிலும் இத்தாக்குதல்களை கட்டவிழ்த்து விட சிங்கள
காடையர்களை கட்டவிழ்த்து விட்டது. யாழ்ப்பாண நூலகம் தீயிட்டுக்
கொழுத்தப்பட்டமை யுத்தத்துக்கு இட்டுச் சென்ற ஒரு போக்கின்
ஒரு திருப்பு முனையை குறித்து நின்றது.
இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கம் காலங்கடந்த
விதத்தில் 1998ல் நூலகத்தை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானத்தை
அறிவித்தது. பெரும் வல்லரசுகளும் இலங்கையின் பெரும் வர்த்தக
நிறுவனங்களில் சில பகுதியினரும் யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை
மூலம் முடிவு காணும்படி கோரியதைத் தொடர்ந்தே இம்முடிவு
எடுக்கப்பட்டது. ஒரு தற்காலிக நூலகத்தை ஸ்தாபிக்க அன்றைய
பொதுஜன முன்னணி தகவல் அமைச்சர் மங்கள சமரவீரவினால் கூட்டப்பட்ட
ஒரு கூட்டத்தில் அவர்: "முன்னைய நூலகம் பேரினவாதத்தினதும்
தவறான அரசியலின் வழிகாட்டலினதும் சக்திகளால் நாசமாக்கப்பட்டதை
இன்றைய அரசாங்கம் ஒரு கெடுதியான செயலாகக்
கருதுகின்றது" என்றார்.
எவ்வாறெனினும் அன்றும் சரி இன்றும் சரி பொதுஜன
முன்னணி அரசாங்கம் ஒன்றில் "பேரினவாத சக்திகளையோ"
அல்லது "தவறான அரசியலின்" தன்மையையோ இனங்காண
முடியவில்லை. அவ்வாறு செய்வதானது யாழ்ப்பாண நூலகத்தின்
தீவைப்புக்கும் யுத்தத்தை வெடிக்கச் செய்த தமிழ் சிறுபான்மையினருக்கு
எதிரான ஏனைய அட்டூழியங்களுக்கும் பின்னணியாக இருந்து கொண்டுள்ள
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பேரினவாத அரசியலை ஊக்குவிக்கும்
பொதுஜன முன்னணியின் ஏனைய சகாக்களதும் பாத்திரத்தை பற்றி
பல கேள்விகளை எழுப்பும்.
|