World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Deepening social crisis underlies Republican loss of US Senate

அமெரிக்க செனட்டினை குடியரசுக் கட்சியினர் இழந்ததன் பின்னணியில் ஆழமான சமூக நெருக்கடி இருக்கின்றது

By Patrick Martin
2 June 2001

Use this version to print

செனட் சபையைக் கட்டுப்படுத்தல் குடியரசுக் கட்சியினரிடமிருந்து ஜனநாயகக் கட்சியினருக்கு மாறியமையானது, வலதுசாரிக் குடியரசு கட்சியினரால் அமெரிக்க அரசாங்கத்தின் மீதான மேலாதிக்கத்தினை திடீரென்று முடிவுக்குக் கொண்டு வந்தது. இது அமெரிக்க அரசியலில் முக்கிய நகர்வாகும்.

ஜனவரி 20ல் புஷ் பதவியேற்றபின், வெள்ளை மாளிகையையும், பிரதிநிதிகள் சபையையும், செனட்டையும் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின் முதல் தடவையாக குடியரசுக் கட்சியினர் கட்டுப்படுத்துகின்றனர். ஒரு நான்கு மாதங்களுக்கு பின்னர், ஐக்கிய அமெரிக்க அரசுகளில் ஒன்றான வெர்மோன்ட் இன் ஒரு செனட்டர் ஜேம்ஸ் ஜெபோர்ட்ஸ் (James Jeffords) இனது செயலால் இவ் அரசியல் மேலாதிக்கம் சிதறிப்போனது. அவர் குடியரசுக் கட்சியை விட்டு வெளியேறியதானது, 50க்கு50 என செனட்டில் இருந்த கட்டுப்படுத்தல் சமநிலையை ஜனநாயகக் கட்சியினருக்கு சாதகமாக்கிவிட்டது.

நேரடி அர்த்தத்தில் இந்த அரசியல் கட்சி மாற்றமானது, புஷ் வெள்ளை மாளிகையின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான பாரிய இயக்கத்தின் பதிலாக இருக்கவில்லை. அத்தகைய இயக்கம் இன்னும் அபிவிருத்தி அடைய வேண்டி இருக்கிறது, ஏனெனில் ஜனநாயகக் கட்சி, தொழிற் சங்கங்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் மக்கள் எதிர்ப்பைத் திரட்டுவதை விட அவற்றை சிதறிப்போகச் செய்யவே பெரிய அளவில் சேவை செய்திருக்கின்றன.

செனட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசியல் நகர்வு, அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்குள் உள்ளேயான வெறிகொண்ட மோதலில் ஒரு புதிய கட்டம் என கட்டாயம் புரிந்து கொள்ளப்படவேண்டும். அது கிளின்டனின் பதவி இறக்க வழக்கு விசாரணை மற்றும் பின்னர் புளோரிடா தேர்தல் நெருக்கடியில் வெடித்தது. அது அமெரிக்க முதலாளித்துவம் ஆழமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினை நோக்கிச்செல்கிறது என்ற பரந்த வெளிப்பாடுகளின் மத்தியில் புதிய நிர்வாகத்தின் மீதான திருத்தும் போக்கை திணிப்பதற்கான முயற்சி ஆகும்.

வாஷிங்டன் விவகாரங்களை கூடுதலாக அறியக்கூடியவர்களில் ஒருவரான, வாஷிங்டன் போஸ்டின் கட்டுரையாளர் டேவிட் இக்னாட்டியஸ் (David Ignatius) மே 27ல் குறிப்பிட்டார்: "ஜெபோர்டின் விலகல் அமெரிக்காவை ஒரு கணம் பாராளுமன்ற ஜனநாயகத்துக்குள் திருப்பியுள்ளது. அது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு சமமாகும் மற்றும் குடியரசுக் கட்சியினர் தங்களைக் கற்பனை செய்துகொண்ட, அதாவது தங்களது வேட்பாளர் கடந்த நவம்பர் தேர்தலில் உண்மையில் மக்கள் ஆதரவு வாக்கை இழந்துள்ளார் என்பதைக் கவனிக்காத நிலையைச் சிதற அடித்துள்ளது.

ஜெபோர்டின் முடிவு ஆளும் வட்டத்துக்குள் புஷ் நிர்வாகம் அதன் முதல் நான்கு மாதங்களின் செயற்பாட்டின் மீதான கவலையை சமிக்ஞை செய்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் மீது தொலைநோக்குடைய பிரதிநிதிகளின் நிலைப்பாட்டிலிருந்து, அந்த அக்கறைக்கு போதிய காரணம் இருக்கிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கை இரண்டிலும் புஷ் நிர்வாகம் முரட்டுத்தனமான மற்றும் குருட்டுத்தனமானவற்றின் சேர்க்கையை முன்னெடுத்துச் செல்கிறது.

புஷ் இன் நூறு நாட்கள்

சர்வதேச ரீதியாக புஷ் நிர்வாகம் அதன் முதலாவது நூறு நாட்களில் முறையே ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் அரபு உலகத்துடனான எதிர்ப்பை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. அது ரஷ்யாவுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மறுதலிக்கும் அதன் உள்நோக்கத்துக்கு சமிக்ஞை செய்தது, அதேவேளை தென்சீனக் கடல் மீதான அமெரிக்க உளவு விமான மோதலைத் தொடர்ந்து சீனா மீதான ஆத்திரமூட்டும் மோதலை தூண்டி விட்டுக் கொண்டு, கிளின்டனின் கொள்கையான வடகொரியாவுடனான நல்லிணக்க நிலையை திருப்பிக் கொண்டமை, ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டுடனும் முகத்தில் அடித்தாற் போன்று இருந்தது.

மத்திய கிழக்கில், பாலஸ்தீனிய எதிர்ப்பிற்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய நடவடிக்கைக்கு புஷ் மெளனமாக ஊக்குவித்தல், பல அரபுத் தலைவர்கள் யுத்தம் பற்றி இப்பிராந்தியத்தில் வெளிப்படையாக பேசுவதுடன், 1967 அல்லது 1973 மட்டத்துக்கு பதட்டங்களை எழுப்பி உள்ளது.

பூகோள வெப்பநிலை அதிகரிப்பது தொடர்பான க்யோட்டோ உடன்படிக்கை (Kyoto protocol) யினை ஒருதலைப்பட்சமாக மறுதலிப்பது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி விசாரணைக்கு அமெரிக்க இராணுவ மற்றும் உளவாளிகளை கீழ்ப்படுத்ததுதற்கு அனுமதி மறுப்பு மற்றும் பொஸ்னியா, கொசோவா மற்றும் ஏனைய அமைதி காக்கும் நடவடிக்கையிலிருந்து அமெரிக்க துருப்புக்களை பின்வாங்குவது பற்றிய கருத்துக்கள் ஆகியனவற்றால் ஐரோப்பாவில் பரந்த அளவு கோபத்தை புஷ் நிர்வாகம் தூண்டிவிட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச ஸ்தானம் விரைவாக மோசமடைதல் மே 3ல் ஐ.நா மனித உரிமைக் குழுவில் அமெரிக்காவுக்கான இருக்கையை மறுத்த வாக்களிப்பில் வெளிப்பட்டது. அமெரிக்காவின் வழமையான கூட்டாளிகளான பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரியா அனைத்தும் தங்களது சொந்த வேட்பாளர்களைக் கைவிட மறுத்ததுடன் அமெரிக்க வேட்பாளரை விட அதிகம் வாக்குகளைப் பெற்றன. இதற்கிடையில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலும் அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலும் அமெரிக்கா மற்றும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையிலும் வர்த்தக மோதல்கள் பெருகுகின்றன.

குடி தண்ணீரில் இரசாயன மூலகங்களை (Arsenic) கலக்கும் மட்டத்தைக் கட்டுப்படுத்தலை தளர்த்தல், வெளிநாடுகளில் குடும்பக்கட்டுப்பாடு பணிகளில் கருக்கலைப்பு மீதான கலந்துரையாடலை தடை செய்தல், நீதித்துறை நியமனங்கள் அதி வலதுசாரி சமஷ்டி சமூகத்தால் தணிக்கை செய்யப்படுவதற்கு சாதகமாக, நீதித்துறை நியமனங்களை அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் ஆய்வு செய்தலை முடிவுக்குக் கொண்டுவரல் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு எதிரான பரந்த அளவிலான எதிர்ப்பை வெளிப்படையாக புறக்கணித்து, புஷ் நிர்வாகம் உள்நாட்டுக் கொள்கையில் அதே மடைத்தனமானவற்றை மேற்கொண்டிருக்கிறது.

சின்சின்னாட்டியில் கடந்தமாதம் இடம் பெற்ற கலவரம் தொடர்பாக புஷ் மெளனம் சாதிப்பது, போலீஸ் வன்முறை மற்றும் இனவாதத்தின் நீண்டகால வரலாற்றின் இறுதி விளைபொருளாகும். மிகவும் ஆழமானது கலிபோர்னியாவில் சக்தி (Energy) நெருக்கடி மீதான நிர்வாகத்தின் அணுகுமுறை, அமெரிக்க மக்களில் 15 சதவீதத்தினர் வாழும், அதேபோல கணனிகள், விண்வெளி, விவசாயம் மற்றும் பொழுது போக்கு போன்ற முக்கிய தொழில் துறைகள் உள்ள மாநிலத்தில் வேண்டுமென்றே வித்தியாசப்படுத்திக் காட்டல் ஆகும்.

புஷ், அலுவலகத்தை பொறுப்பெடுத்த நான்கு மாதங்களில் மிக முக்கியமான அபிவிருத்தி நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தை பெயரளவிலான மதிப்புக்களை இல்லாமற் செய்ததாகும். உயர் தொழில்நுட்ப பங்கு எழுச்சியின் சீர்குலைவு மற்றும் பிரதான பொருளாதார தளர்வின் தெளிவற்ற முன்னேற்றம் ஆகியன முதலாளித்துவ வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. உயர் தொழில் நுட்பத்துறைக்கு வெளியில் பாரிய நிறுவனங்கள் பாரிய வேலைநீக்கங்களையும், மற்றும் புதிய முதலீட்டிற்கான செலவினங்களை வெட்டுவதை அறிவிக்கின்றமை நிதி நெருக்கடியின் அதிர்ச்சிகளை இவையும் உணரத் தொடங்கியுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. ஐந்து மாதங்களில் மத்திய வங்கி எதிர்பார்த்திரா வகையில் நான்கு வட்டிவீத வெட்டுக்களை செய்தபோதும் பொருளாதார வீழ்ச்சி தொடர்கின்றது.

புஷ்ஷின் வரிவெட்டு மசோதா, முழு ஆளும் தட்டிற்குமான நிதி வெகுமானத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளையில், நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய அந்த முதலாளித்துவப் பகுதிகளால் அது பொருளாதார தீரச்செயல் அல்லது சீர்குலைவு எனப் பார்க்கப்படுகிறது. இவ் வரிவெட்டை நியாயப்படுத்த மேற்கோள் காட்டப்பட்ட பெரிதாக திட்டம் வகுக்கப்பட்ட மத்திய நிலுவை (Federal surpluses) எந்த பொருளாதார வீழ்ச்சியிலும் ஆவியாகிவிடும் என்பது வோல்ஸ்ட்ரீட் மற்றும் வாஷிங்டன் இரண்டிலும் பரவலாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

பிசினஸ் வீக் இதழ் அண்மையில் வெளியிட்ட டொட்-கொம்களின் (Dot-coms) நிதி கொழுந்துவிட்டெரிதல் பற்றிய அட்டைப்படக் கட்டுரையில், நாஸ்டாக் சீர்குலைவு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. வரிவெட்டு இறுதியில் காங்கிரசால் மே 26ல் நிறைவேற்றப்பட்டது, இது அதேவிதமான இழிவான கணக்குப் பதிவின் அரசாங்கக் கொள்கையில் மாற்றம் ஆகும். பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட வரி வெட்டுக்கான நடைமுறைப்படுத்தப்படும் தேதியை முன்குறிக்க கடைசி நேரத்தின் பொழுது மசோதா மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் விளைவை சரியீடு செய்ய, முழு மசோதாவையும் 1.35 டிரில்லியன் டாலர்கள் வரம்புக்குள் அமையுமாறு காங்கிரஸ் பட்ஜெட் தீர்மானத்தில் அமைத்தனர். குடியரசுக்கட்சித் தலைமையானது, முழு வரிவெட்டும் 2010ல் மாற்றப்படும், அதாவது அடிப்படையில் 2010 லிருந்து இதற்குள்ளாகுவோரும் வரி வெட்டினை உடனடியாக அனுபவிப்பர் என்று அளவுக்கு மீறிய மிகைப்படுத்தலைச் சேர்த்தது.

பொருளாதாரக் கட்டுரையாளர் போல் க்ருக்மன் (Paul Krugman) நியூயார்க் டைம்ஸ் வலைத்தளப் பதிப்பில் இடம் பெற்ற குறிப்பில் கூர்மையாகக் கவனித்தவாறு, வரி மசோதா சம்பந்தப்பட்டுள்ள "நிதி மோசடி, பகிரங்கமாக வியாபாரம் செய்யும் எந்த கம்பெனியின் நிர்வாகிகளாலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்களை சிறையில் இறக்கிவிடும்.... இது சுத்தமான மற்றும் எளிதான உடலுழைப்பிலாரின் (white-collar) குற்றம். நாம் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனைக் கழகத்தை அழைத்து, செனட்டர் ஹான் புரூக்ஸ் மற்றும் மாக்ஸ் பாகஸ் போன்ற ஜனநாயகக்கட்சியினர் அதேபோல அவர்களின் குற்றத்தில் பங்காளிகளான குடியரசுக் கட்சியினர் ஆகிய முழு பணியாளர்களையும், எங்காவது மகிழ்ச்சி அற்ற குறைந்தபட்ச பாதுகாப்பு உள்ள இடத்திற்கு அனுப்ப வேண்டும்."

கூட்டரசாங்கத்திற்கான திருப்பம்

வாஷிங்டனில் அரசியல் கையாளுமையின் நோக்கம் புஷ் நிர்வாகத்தை அகற்ற அல்ல, மாறாக ஜனநாயகக் கட்சியினருடன் உண்மையில் கூட்டை ஏற்படுத்த ஆகும். அது அதிகாரப்பபூர்வ செய்தி ்ஸ்தாபனங்களின் பரிபாஷையில், "வலதுபுறத்திலிருந்து" ஆள்வதைக் காட்டிலும் "மையத்திலிருந்து" ஆள்வதற்கு புஷ்ஷை நிர்ப்பந்திக்கும். ஜெபோர்ட் விலகலுக்குப் பின்னர் பெரும்பாலான வண்ணனை புஷ் ஆலோசனைக்காகவும் ஆதரவுக்காகவும் முழுமையாய் குறுகிய பிரிவான வலதுசாரி மத அடிப்படைவாதிகள் மற்றும் வரி எதிர்ப்பு வெறியர்கள் ஆகியோரை நம்பி இருப்பதற்காக விமர்சிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியின் தலைமை தானும் மோதலுக்குப் போவதைக் காட்டிலும் வெள்ளை மாளிகையுடன் பங்காளியாவதையே நாடுகின்றது. விரைவில் செனட்டின் பெரும்பான்மைத் தலைவராக வரவுள்ள ரொம் டாஷ்லே (Tom Daschle) யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தீவிரவாதம் பற்றிய குறிப்பு இல்லை அல்லது தாராண்மை வாதம் பற்றிய குறிப்புக்கூட இல்லை. இவர் குடியரசுக் கட்சியாளர் டிரைன்ட் தோட்டை ஜூன் 5ல் பதிலீடு செய்யப்போகிறார். முன்னாள் வான்படை உளவு அதிகாரியும் வாழ்நாள் வாஷிங்டன் பேர்வழியும், காங்கிரசின் உதவியாள் மற்றும் செனட்டரும் ஆகிய ரொம் டாஷ்லே உடனடியாக புஷ் நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார்.

புஷ்ஷின் வெள்ளை மாளிகையுடன் மோதல் ஏற்படலாம் என்று மிகவும் கணிக்கப்படுகின்ற, நீதித்துறை நியமனங்கள் விஷயத்தின் மீது கூட, டாஷ்லே சமரசம் பண்ணினார். CNN க்கு அளித்த பேட்டியில் அவர் "ஜனாதிபதி பழமைவாத நீதிபதிகளை நியமிக்கலாம் அல்லது முன்மொழியலாம் என நாம் எதிர்பார்க்கின்ற அதே வேளை, நாம் எதிர்பார்க்க இருக்கும் பிரதான உள்ளடக்கம் அங்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன்" என குறிப்பிட்டார்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், மற்றொரு அன்டோனின் ஸ்காலியா அல்லது ரொபர்ட் போர்க் எதிர்ப்பை எதிர்நோக்கலாம், ஆனால் வெள்ளை மாளிகையில் புஷ்ஷை இருத்த 5க்கு 4 வாக்குகளை வழங்கிய உயர் பதவி நீதிபதிகள், அன்டோனி கென்னடி மற்றும் சான்ட்ரா டே ஒ' கொனொர் (Sandra Day O'Connor) ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள செனட் வழியாக செல்லலாம் என்பதாகும்.

ஜெபோர்டின் தாக்குதலுக்கு பிறகு ஒருநாள் கூட ஆகவில்லை, டாஷ்லேயும் ஏனைய உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரும் அரசுத் தலைமை வழக்கறிஞராக தியோடர் ஒல்சனின் மனுதாக்கலை நேரடி சபை வாக்கெடுப்பில் விட முடிவு செய்தனர். ஒல்சன் வாஷிங்டனில் மிகவும் வெறுக்கத்தக்கவர்களுள் ஒருவர், கிளின்டன் பதவி இறக்க விசாரணையை வடிவமைக்க வலதுசாரி பிரச்சாரத்தின் மையமாக இருந்தவர் மற்றும் 2000 தேர்தலை சாதகமாகத் திருடிய புஷ் பிரச்சாரத்தின் தலைமை சட்டப் பிரதிநிதியாக இருந்தவர். அவர் 51க்கு 47 என்ற குறைந்த வாக்கு வித்தியாசத்தில் உறுதி செய்யப்பட்டார்.

இந்த செயல் ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து புஷ்க்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. டாஷ்லே, ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டின் முதல் எடுத்துக்காட்டாக மனுத்தாக்கலை எளிதாகத் தடுத்திருக்க முடியும். பதிலாக அவர், இந்த அரசியல் குண்டர் அமெரிக்க அரசாங்கத்திற்கான தலைமை வழக்கறிஞர் பதவியை ஏற்றுக்கொள்ள அனுமதித்தார்.

டாஷ்லே, செனட் ஜனநாயகக் கட்சியினர் அலாஸ்கா தேசிய வனவிலங்கு புகலிடத்தில் எண்ணெய் தோண்ட "ஒருபோதும் அனுமதியார்" என பிரகடனம் செய்து, புஷ்ஷின் இன்னொரு முயற்சிக்கு விட்டுக் கொடுக்காத எதிர்ப்பு நிலையை வீசி அடித்தார். இது ஜனநாயகக் கட்சியினர் போராடத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் அவர்கள் வலிந்து ஏற்றுக் கொள்வதற்கும் ஆன புஷ் முன்முயற்சியின் படிப்பினை தரும் எடுத்துக் காட்டாகும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்த உறுதிப்பாடும் இல்லை. சுதந்திர கவுன்சில் கென்னத் ஸ்டாருக்கும் குடியரசுக் கட்சியில் அதி வலதுசாரி சக்திகளுக்கும் இடையிலான பிணைப்பு தொடர்பாக மட்டுமல்லாது, ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள செனட் புளோரிடா வாக்கு பற்றி விசாரணை நடத்ததாது, ஜனநாயகக் கட்சியினர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை மிக்க தட்டினர் சிறப்பாக அக்கறை கொள்ளும் சுற்றுச்சூழல், கருக்கலைப்பு உரிமைகள் மற்றும் ஒருவேளை HMO க்களை இழிவுபடுத்துவதை தடை செய்தல் பற்றிய பிரச்சினைகளில் மட்டுமே வெள்ளை மாளிகையை எதிர்ப்பர்.

ஏன் ஜனநாயகக் கட்சியினர் புஷ்ஷை எதிர்த்துப் போராடமாட்டார்கள்

ஒல்சன் நியமனத்தை ஏற்றுக் கொள்ளல் எடுத்துக் காட்டுகிறவாறு, ஜனநாயகக் கட்சியினர் தடை சொல்லாமல் உடன்படலை உருவாக்கக் காரணமாக இருந்தது புஷ் நிர்வாகத்தின் பலம் அல்ல மாறாக அதன் எளிதில் உடைகின்ற தன்மை ஆகும். ஒல்சனின் தோல்வி சாத்தியமாக ஆகியிருக்கலாம், ஜனநாயகக் கட்சியினர் தலைமை அது இனியும் விரும்பத்தக்கது அல்ல என முடிவெடுத்தனர்.

புஷ் நிர்வாகமானது பலவீனமானது. மக்கள் வாக்குகளையும் மீறி 5க்கு 4 என்ற தீர்ப்பால் உச்சநீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட விரோத ஜனாதிபதி, ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பை குறிவைப்பதற்கான ஒரு எளிதான இலக்கு ஆகும். ஜனநாயகக் கட்சியினரின் இன்றைய பீதி இயல்புக்கும் இதே சூழ்நிலைமைகளில் குடியரசுக் கட்சியினரின் முரட்டுத் தனத்துக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது.

1993ல் கிளின்டன் சிறுபான்மை ஜனாதிபதியாக பதவிக்கு வந்தபோது --புஷ்போல் தனது போட்டியாளர்களை விட அதிக வாக்குகளை பெறாதிருந்த போதிலும் -- குடியரசுக் கட்சியினர் இடையூறு செய்ய ஓய்வு ஒழிச்சலற்ற பிரச்சாரத்தைக் குவித்தனர். கிளின்டனின் முதலாவது வரவுசெலவுத்திட்டத்திற்கு ஒரு குடியரசுக் கட்சி ஆள் கூட வாக்களிக்கவில்லை; அவரது சுகாதார சேவைத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது; 1994ல் காங்கிரசை குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் அவர்கள் நிர்வாக ஒழுங்கின்மை என்று சொல்லப்படுவதன் விசாரணை என, உச்சக்கட்டமாக லெவின்ஸ்கி பாலியல் ஊழல் மற்றும் பதவியிறக்க வழக்கு என விசாரணைக்கு மேல் விசாரணையை நடத்தினர்.

தாராண்மை ஜனநாயகக் கட்சி வட்டங்களின் வழக்கமான அறிவுடைமை நியூயார்க் டைம்ஸ் மே27 இதழால் குரல் கொடுக்கப்பட்டது. கிளின்டனின் முன்னாள் பிரச்சார உதவியாளர் ஜேம்ஸ் கார்வில்லே மற்றும் போல் பேகாலாவால் எழுதப்பட்டு பத்திரிகை வெளியிட்ட பகுதி, புஷ் ஜனாதிபதி பதவியின் சட்டபூர்வ தன்மையை சவால் செய்யும் வண்ணம், புஷ்ஷின் முழு நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராக அரசியல் எதிர்ப்பு பிரச்சாரத்தை உக்கிரப்படுத்துமாறு வலியுறுத்தியது. டைம்ஸ் இதழ் தலையங்கம், அத்தகைய அணுகுமுறையை வெளிப்படையாக நிராகரித்ததுடன் ஜனநாயகக் கட்சியினர் தங்களது புதிய அதிகாரத்தை "நீதியாக" பயன்படுத்த வேண்டும் என்றும் "திருப்பிக் கொடுத்தல் அரசியலை" நிராகரிக்குமாறும் கூறியது.

குடியரசுக் கட்சியினரினதும், புஷ்ஷின் வலதுசாரி கொள்கைகளுக்கும் எதிரான பரந்துபட்ட வெகுஜன எதிர்ப்பு, தாராண்மைவாதிகளால் ஆதரிக்கப்பட்ட சூடான நடவடிக்கைகளுக்கும் அப்பால் செல்லக்கூடிய ஒரு அரசியல் இயக்கத்துக்கு வழி திறந்துவிடும் எனற அச்சமே அத்தகைய எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கிறது.

புஷ் மற்றும் கூட்டாளிகள் பற்றிய மிகவும் பாதிக்கக்கூடிய விமர்சனங்கள் குடியரசுக் கட்சியினரிடமிருந்து வந்திருக்கின்ற அதேவேளை, அமெரிக்கப் பாராளுமன்ற ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து வந்த பெரும்பாலான விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கவகையில் கட்டுப்படுத்தப் பட்டதாகவும் ஒத்துழைக்கக் கூடியதாகவும் இருந்திருக்கின்றன. தனது மே 24ம் தேதி பேச்சில் ஜெபோர்ட் தாமே, நிர்வாகத்தின் வலதுசாரி தீவிரவாதத்தைப் பற்றி வேறு எந்த ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவரையும் விட பலமாக குற்றம்சாட்டினார்.

அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கெய்ன் பாராளுமன்ற குடியரசுக்கட்சித் தலைமையின் வளைந்து கொடுக்காத தன்மை பற்றி கண்டனம் செய்தார். "கருத்து வேறுபாட்டை சகித்துக் கொள்ளல் பக்குவப்பட்ட கட்சிக்கான அடையாளம் ஆகும். கடந்த காலத்தில் குடியரசுக்கட்சி வளர்வதற்கு நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார். நெப்ராஸ்கா செனட்டர் சக் ஹாகெல் கூறினார்: இங்கு அகந்தை இருக்கிறது அது 1994ல் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்படுத்துவதற்கு வழி அமைத்தது... ஜனாதிபதி அவரது ஆட்சியின் காரணிக்கான ஒரு அடையாளமாக இதனை எடுத்துக்கொள்வார் என நான் நம்புகிறேன்" என்றார்.

ஜெபோர்டின் பிரதிபலிப்புக்கு பதிலாக ஏதேனும் குறிகாட்டல் இருந்தால், எந்த ஒரு அக்கறையான எதிர்ப்பும் புஷ் நிர்வாகத்தை சீர்குலையச் செய்துவிடும் என்பதாகும். ஏப்ரலில் உதவி ஜனாதிபதி செனிக்கு, ஒரு ஆலோசகர், ஜெபோர்டு விலகலாம் என எச்சரித்திருந்ததாகவும் ஆனால் அது அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் பத்திரிகைச் செய்திகள் கருத்துரைக்கின்றன. தேர்தலின் போது அவர் அபரிமிதமான வெற்றியைப் பெறுவார் என அவருக்கு உத்தரவாதம் கொடுத்த புஷ்ஷின் "நம்பிக்கையான மூளையான" அதே அரசியல் சூனியக்காரர்கள், ஜெபோர்டிடமிருந்து அச்சுறுத்தலை குறைத்துமதிப்பிட்டதுடன், இதனை எதிர்கொள்ள அரசியல் பேரம் மற்றும் அச்சுறுத்தும் முறைகளை கருத்துத் தெரிவிக்க, அது குடியரசுக் கட்சியிலிருந்து அவரது புறப்பாட்டுக்குத் தூண்டிவிட்டது.

சீன உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மற்றும் ஐ.நா மனித உரிமைக்குழு வாக்கு விஷயத்தில் போல, எந்த கூடாரத்திலிருந்து எதிர்ப்பு வந்தாலும், சிறிய அரசிலிருந்து வந்த தனி ஒரு செனட்டரின் எதிர்ப்பு வந்தாலும் தடுமாற்றம் அடைவதுபோல் புஷ் நிர்வாகம் காணப்படுகிறது.

இது திறமைக்கேடான விஷயம் பற்றியதல்ல, மாறாக மிகவும் குறுகிய அடித்தளத்தில் தங்கி உள்ள, வலதுசாரி ஆதரவாளர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் வாஷிங்டனில் அதிகாரப்பூர்வமாய் மொய்த்துவரும் செய்தி ஸ்தாபன பண்டிதர்களிடம் மட்டும் பேசும் அரசியல் இயக்கிகளின் கண்டும் காணாததுமான கண்ணோட்டத்தை எதிரொலிக்கிறது.

இங்கு குடியரசுக் கட்சியிலிருந்து வெளியேறுவது பற்றிய ஜெபோர்டின் குறிப்புக்கள் கவனிக்கப்படத்தக்கதாக உள்ளன. அவர் லிங்கன் காலத்து குடியரசுக் கட்சியுடன் இன்றைய குடியரசுக் கட்சியை வேறுபடுத்தினார். 67 வயது ஆன செனட்டர் ஜெபோர்ட்ஸ் பிறப்பதற்கு முந்திய, லிங்கனின் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை குடியரசுக் கட்சி விட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் 1960களில் கூட குடியுரிமை மசோதா நிகழ்வுகளின் போது குடியரசுக் கட்சி ஆதரவு விமர்சன ரீதியாக இருந்தது. மத்திய மேற்கு குடியரசுக் கட்சியின் செனட் சிறுபான்மைத் தலைவர், இலினாய்ஸின் உறுப்பினர் எவரட் டிர்க்சன் மற்றும் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஆன இண்டியானாவின் சார்லஸ் ஹாலெக் போன்றோர் லின்டன் ஜோன்சனை ஆதரித்தனர், அதேவேளையில் ஒவ்வொரு தெற்கத்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தனர்.

அது பெரும்பாலும் விவாதிக்கப்படாத ஆனால் அமெரிக்க அரசியலில் பெரிதும் முக்கிய யதார்த்தம் ஆகும் -- இன்றைய குடியரசுக் கட்சி கிறித்துவ வலதுசாரியில் உள்ள பாசிச சக்திகளுக்கு, துப்பாக்கி வேண்டுவோர்களுக்கு, வரி எதிர்ப்பு குழு மற்றும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு கடமைப்பட்டதாக இருக்கிறது. சிலரைக் குறிப்பிடுவதெனில் செனட்டர் ஜெஸி ஹெல்ம்ஸ் மற்றும் காங்கிரஸ் ஆள் பொப் பார் (Bob Barr) மற்றும் ரொம் டிலே (Tom Delay) உள்ளடங்கலான காங்கிரசில் மிக செல்வாக்குடைய அவர்களுடைய பேச்சாளர்களைக் குறிப்பிடலாம்.

முன்னாள் கனெக்டிகட் செனட்டர் மற்றும் நியூ இங்கிலாந்து குடியரசுக் கட்சியாளாய் இருந்து சுயேட்சையாக மாறியவரும் கவர்னருமான லோவெல் வெய்க்கர் (Lowell Weicker) ஆகியோரின் அண்மைய கருத்துக்களை பல செய்தி விமர்சகர்கள் கடந்தவாரம் குறிப்பிட்டனர். அரிசோனா செனட்டரின் மரணப்படுக்கையில் பரி கோல்ட்வாட்டர் (Barry Goldwater) உடன் தான் நடத்திய கலந்துரையாடலை வெய்க்கர் நினைவு கூர்ந்தார். 1960 களில் குடியரசுக்கட்சி பழமை வாதத்தின் முன்னனிப் பிரதிநிதி 1990 களில் குடியரசுக் கட்சியில் அவர் அதிஇடது பக்கமாக கருதப்பட்டார்.

அரசியல் அமைப்பு நெருக்கடியில்

புஷ் நிர்வாகத்தின் பலவீனத்தின் அடியில் அமெரிக்க சமுதாய நிலை மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடப் பெயர்வு, பொதுவாக குடியரசுக்கட்சியின் வலதுசாரிகளுக்கு மட்டும் சாதகமனதாக இல்லாததோடு, முதலாளித்துவ இரு கட்சி ஆட்சிமுறை முழுவதுக்குமாக சாதகமாக இல்லை. குடியரசுக்கட்சி பலவீனம் ஜனநாயகக் கட்சியின் பலத்தை அர்த்தப்படுத்தவில்லை மாறாக இரு பெரும் முதலாளித்துவ கட்சிகளும் அரசியல் வாழ்வில் தங்கள் ஏகபோகத்தை நடைமுறைப்படுத்தும் முழு அரசியல் அமைப்பும் செல்வாக்கிழப்பதை அர்த்தப்படுத்துகின்றது.

ஒரு காலத்தில் குடியரசுக்கட்சிக்கு பிரதானமான தளமாக இருந்த நியூ இங்கிலாந்திலிருந்து வந்த சிறிதளவான செனட்டர்களில் ஒருவரின் விலகலால் குடியரசுக்கட்சி பெரும்பான்மையை இழந்தது. இது அமெரிக்க அரசியலில் ஆழமான பிராந்திய நெருக்கடியைக் கோடிட்டுக் காட்டுகின்றது. புஷ்ஷால் எடுக்கப்பட்ட (அலாஸ்கா உட்பட) 22 தெற்கு மற்றும் மேற்கு அரசுகளில், செனட் இருக்கைகள் இன்று 32-12 என குடியரசுக்கட்சிக்கு ஆதரவாக பிளவு பட்டுள்ளது, அதேவேளை காங்கிரஸ் இருக்கைகள்(house seats) 89-49 என சாகமாக உள்ளது. இந்தப் பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள - (ஹவாய் உட்பட) மேற்குக் கரை, மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர் எடுத்த 28ல், செனட் இருக்கைகள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக 38-17 எனவும், அதேவேளை காங்கிரஸ் இருக்கைகள் 152-123 எனவும் பிளவு பட்டுள்ளன.

அமெரிக்க அரசுகளைப் போல் பரந்த வேறுபாடுகள் கொண்ட நாட்டில், அத்தகைய பிராந்திய வேறுபாடுகள் மிக முக்கியத்துவம் உடையன.அரசியல் வரைபடம் வேறுபட்ட நாடுகள் இருந்ததைப் போல் காட்டுகின்றது.இந்த இரண்டு பாதிகளும் சமமானதாக இல்லை.ஜனநாயகக் கட்சியினரால் மேலாதிக்கம் செய்யப்படும் பிராந்தியங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் மிக்கதாகவும் அமெரிக்க தொழிற்துறையில் கணிசமானவறுறைக் கொண்டதாகவும் நிதி, தொழில் நுட்பவியல் மற்றும் கல்வி மையங்களைக் கொண்டதாகவும் ஐந்து பெரிய பெருநகர் பகுதிகளைக் கொண்டதாகவும் உள்ளன.

குடியரசுக்கட்சியினர் மேலாதிக்கம் செய்யும் பகுதிகள் கூட, இரு மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளான புளோரிடா மற்றும் டெக்சாஸ் வலதுசாரிகளைப் பலவீனப்படுத்துகிற மக்கள் சமூக மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. ஜனநாயக உரிமைகளின் தன்முனைப்பான அத்து மீறல்களைப் பொறுத்தவரை, புளோரிடா 2000ல் குடியரசுக் கட்சியினருக்கு இழப்பாக இருந்திருக்கும். புஷ்ஷின் சொந்த மாநிலமான டெக்சாஸைப் பொறுத்தவரை, ஒரு குடியரசுக் கட்சி ஆய்வாளர் ''ஹிஸ்பானிக் மக்கள் தொகை விரைவாக வளருவதை காரணம்காட்டி, இது குடியரசுக்கட்சிக்கு சாதகமானதாக இல்லை என்று எச்சரித்ததை'' வாஷிங்டன் போஸ்ட் மேற்கோள்காட்டியது. "சில புள்ளிகளில் நம்மை உதறித்தள்ளிக்கொண்டு இன்னொரு கலிபோர்னியா அமையலாம்" என்று அவர் றீகனின் சொந்த மாநிலத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகையில் கூறினார். அங்கு 1994 க்குப் பின்னர் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை.

குடியரசுக் கட்சியினைக் கீழறுத்துள்ள சமூகப் பொருளாதாரப் போக்குகள் ஜனநாயகக் கட்சியினருக்கு நீண்டகால முன் அறிகுறியான விளைபயன்களாக இருக்கின்றது. அமெரிக்கா மேலும் மேலும் இரு வர்க்க முகாம்களாகப் பிளவுபட்டுள்ளது: அவையாவன இரு கட்சிகளும் ஆதரவிற்காக போட்டிபோடும் 5 அல்லது 10 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட செல்வந்த மற்றும் சலுகை மிக்க தட்டினது பிரிவும், பெரும் முதலாளிகளினது இருகட்சிகளாலும் நலன்கள் புறக்கணிக்கிப்படும் அடிமட்டத்து 90 சதவீத மக்களுமாகும்.

கோர் - லிபர்மான் பிரச்சாரம் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக நடிப்பைச் செய்கிறது. ஆனால் அதன் விளைவு மதிப்பில்லாதது, நேர்மை அற்றது மற்றும் இறுதியில் கைவிடப்பட்டது. பால்டிமோர் சன் பத்திரிக்கையில் அண்மைய செய்தியின்படி, லிபர்மான்" சிறியவர்கள் (எதிர்) செல்வந்தத் தட்டு பற்றிய கோரின் அழைப்பிலிருந்து தன்னைத் தூரப்படுத்திக் கொண்டார்." லிபர்மான் பத்திரிக்கையிடம் பின்வருமாறு கூறினார்: "வர்க்க யுத்தத்திற்கான ஒருவராக ஒரு போதும் நான் இருக்கவில்லை. பிரச்சாரத்தின் சில பகட்டுப் பேச்சான --'மக்கள் (எதிர்) பலம் மிக்கவர்கள்'-- பொது அர்த்தத்தில் நான் அக்கறை கொண்ட அணுகு முறையோ அல்லது நான் திருப்திப்படுவதாக உணர்வதானதோ இல்லை."

துன்பகரமான கோர் பிரச்சாரம் மற்றும் கிளின்டன் - கோர் நிர்வாகம் ஒட்டு மொத்தமாக ஜனநாயகக்கட்சியின் நீண்ட திட்டமிடப்பட்ட வலது விலகலின் முடிவான விளை பொருளாக இருந்தது. அது குடியரசுக் கட்சியின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரே ஒரு அடி மட்டும் பின்னே நிறுத்துகிறது. ஜனநாயகக் கட்சி இப்பொழுது சமூக நீதிக்கான மற்றும் பொருளாதார மறுவிநியோகத்திற்கான கட்சியாக பிரச்சாரம் செய்யவில்லை, மாறாக நிதிப் பொறுப்புக்கான மற்றும் கெடுபிடிக் கொள்கைக்கான கட்சியாக, வோல்ஸ்ட்ரீட் நம்பக்கூடிய கட்சியாக பிரச்சாரம் செய்கின்றது.

இறுதி ஆய்வில் ஒருகட்சியும் உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதத்துவப்படுத்துவதாக இல்லை. அமெரிக்காவில் பெரும் அரசியல் வெற்றிடம் உள்ளது. அது தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகளுக்கு அத்தகைய (யதார்த்தமில்லாத) பொருந்தாத மனநிலையை வழங்குவது, பரந்த பெரும்பான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமையினால் ஆகும். புஷ் நிர்வாகத்திற்கும் அவரது புதிய ஜனநாயகக்கட்சி பங்காளிகளுக்கும் உண்மையான எதிர்ப்பு, உழைக்கும் மக்களின் சுதந்திரமான வடிவத்தையும் மற்றும் நிதி ஆட்சியையும் அதனைத் தக்கவைக்கும் பொருளாதார அமைப்பையும் எதிர்க்கின்ற புதிய அரசியல் கட்சியைக் கட்டி அமைக்கின்ற வடிவத்தையும் எடுக்கும்.