WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
Execution Day in America
அமெரிக்காவில் மரணதண்டனை நாள்
By Barry Grey
13 June 2001
Back to screen version
திங்கட்கிழமை அமெரிக்காவின் மரணதண்டனை
நாளாகவிருந்தது. ஒக்லகோமா (Oklahoma)
நகரத்திலிருந்தும், இன்டியானாவின் Terre
Haute இல் இருந்தும் ரிமோதி மைக்வேயின்
(Timothy McVeigh) மரணதண்டனையின்
இறுதியினை தொலைக்காட்சி சாதனங்களின் ஒளிபரப்புகளின் சிரிக்கும்
முகங்களை பார்த்தவண்ணம் நாடு விழித்தெழுந்தது. காலை வணக்கம்
அமெரிக்கா!
90 நிமிடங்கள் நீடித்த அந்த பரிதாபகரமான காட்சியை
விபரிக்க முயற்சிக்கையில் வார்த்தைகள் இல்லாது போகின்றன.
ஒரு பயங்கர நிகழ்வான, அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட மனிதவாழ்க்கையின்
உயிர் அழிப்பை தொலைத்தொடர்பு சாதனங்கள் வெற்றிகரமாக
ஒளிபரப்பின. இது ஒரு தேசிய ரீதியான வெட்கக்கேடான, அவமரியாதையான
நாளாகும்.
கொலையின் எந்தவொரு விடயமும் தவிர்க்கப்படவில்லை.
தொழில்நுட்பம் இதனை உயர்தரத்திலான நிகழ்வாகக் காட்டுவதில்
திறமையான பங்குவகித்ததுடன், பார்வையாளர்களை அதில் கலந்துகொள்ளாவிட்டாலும்
கண்ணால் கண்டவர்களாக உணர்ந்துகொள்ளுமளவிற்கு மாற்றியது.
கனவில் மட்டும் காணக்கூடிய இவ்வாறான சூழ்நிலை மிகைப்படுத்தப்பட்டமைக்கு
காரணம் Terre Haute
இன் தூக்குமேடையின் எல்லைக்குள்ளும், ஒக்லகோமாவில் பலியானவர்களின்
உறவினர்கள் பார்க்க அனுமதித்திருந்த மூடிய எல்லைகளுக்குள்ளும்
புகைப்படக்கருவிகள் அனுமதிக்கப்படாததாலாகும். இக்கட்டுப்பாடு
தகவல் வெளியிடுவோருக்கு தெளிவாக வழங்கப்பட்டதாகும்.
சிறையின் சுவருக்குள் நடைபெற்றுக்கொண்டிருந்தவற்றை
விபரிக்கும் மரணதண்டனை நிறைவேற்றுவோரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பட்டன.
நிருபர்களால் ''மனிதனைக் கொலைசெய்வது எப்படி இருக்கும்?''
என்ற ''மனிதாபமான'' ரீதியிலான கேள்விகள் கேட்கப்பட்டன. இதைவிட
உடலினுள் நஞ்சு செலுத்தப்படும்போது ரிமோதி மைக்வேயின் உணர்வுகள்
எப்படி இருந்திருக்கும்?, அவர் எதைப்பற்றி சிந்திப்பது சாத்தியம்?,
மரணதண்டனையை பார்த்தவர்கள் எவ்வாறு பிரதிபலித்திருப்பர்?,
மரணம் நிகழ்ந்த சரியான நேரத்தை அவர்களால் உணரக்கூடியதாக
இருந்திருக்குமா?, இந்நிகழ்வினால் உருவாகிய மனஉழைச்சலை எப்படி
சமாளிக்கமுடியும்?, உளவியல் ஆலோசனையாளர்கள் அங்கிருந்தார்களா?,
அதனை பார்த்தவர்கள் தமது வாழ்வின் எஞ்சியிருக்கும் நாளை
அனுபவிக்க முடியுமா?, அத்துடன் கட்டாயமாக அவர்கள் ''இறுதிநிலையை''
அடையமுடியுமா? போன்ற கேள்விகளும் எழுந்தன.
பார்வையாளர்களுக்கு உயிராபத்தான நஞ்சு (Lethal
Drug) தொடர்பான விபரங்கள் அதற்குரிய
வல்லுனர்களால் வழங்கப்பட்டன. CNN
இன்
Susan Candiotti மக்வேயை கொல்ல
பயன்படுத்தப்பட்ட நஞ்சு ஒக்லகோமாவிலுள்ள ஒக்லகோமா
பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தால் 1977 இல் தயாரிக்கப்பட்ட
ஒரு இரசாயன கலவைதான் என்ற செய்தித்துறையின் சதியை எடுத்துக்காட்டினார்.
இப்பயங்கர நிகழ்வானது AT&T,
Wal-Mart, Outback Steakhouse, Toyota போன்றவைகளால்
ஆதரிக்கப்பட்ட விளம்பரங்களால் முன்தள்ளப்பட்டது. மரணதண்டனையில்
சிறிது முன்னதாக Ortho Tri-Cyclen நிறுவனத்தின்
குழந்தைக் கட்டுப்பாட்டு மாத்திரைக்கான விளம்பரத்தை CBS
ஒளிபரப்பியது.
இதன் பின்னர், அறிவிப்பாளர்கள் மரணக் காட்சியை
காட்டியதுடன், அதனை பார்த்தவர்கள் மைக்வேயின் ஒவ்வொரு
சமிக்கைகளையும், அவரின் முகமாறுதல்ளையும், நஞ்சுமருந்திற்கு
அவரின் பிரதிபலிப்பையும் விபரித்ததை எடுத்துக்காட்டினர்.
இம் மனிதத்தன்மையற்ற செயலை நியாயப்படுத்துமுகமாக
168 பேரை பலிகொண்டும் பெடரல் கட்டிடத்தை நொருக்கிய
1995 குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஒக்லகோமா நகரத்தை
சேர்ந்தவர்களின் குடும்பத்தவர்களினதும், நண்பர்களினதும் பேட்டிகள்
ஒளிபரப்பப்பட்டன. CBS ரிமோதி
மைக்வேயினால் பலியானவர்களின் பெயர் பட்டியலைக் கொண்ட
நீடித்த ஒலியற்ற செய்திச்சுருள் ஒன்றினை ஒளிபரப்பியது.
இவ் ஒளிபரப்புகளின் அடிப்படையாக இருந்தது மைக்வே
ஒரு நியாயமான, தேவையான தண்டனை ஒன்றினை பெறுகின்றார்
என்பதும், ஒரு பேய் மரணத்திற்குள்ளாக்கப்பட்டது என்பதுமாகும்.
அன்றைய தினம் தொலைத்தொடர்பு சாதனங்களாலோ அல்லது
அரசாங்கத்தாலோ அக்குற்றம் தற்போதைய அமெரிக்காவின்
சமூக நிலைமைகளுடனும், அரசியல் யதார்த்தத்துடனும் ஏதோ
ஒரு வகையில் தொடர்புபட்டிருப்பதை ஒருபோதும் கூறவில்லை.
அந்நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ஜோர்ஜ்.W.புஷ்
செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் இதையே மீண்டும் வலியுறுத்தினார்.
அவர் மைக்வேயின் மரணதண்டனைக்கான பொறுப்பை அரசாங்கத்தின்
காலடிகளில் வைக்காது குண்டிவெடிப்பில் பலியானவர்களின்
காலடியில் வைத்தார். அவர்கள் ''வஞ்சம் தீர்த்துக்கொள்ளவில்லை,
நீதியை வழங்கியுள்ளதாக'' புஷ் குறிப்பிட்டார்.
மனிதாபிமானம், அமைதி தொடர்பான வார்த்தைகள்,
6 வருடங்கள் ரெக்ஸாஸின் ஆளுனராக இருந்து, மனநோயாளர்கள்
அல்லது மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளடங்கலாக 158 பேரின்
மரணதண்டனைக்கு அனுமதி வழங்கிய ஒருவரின் வாயிலிருந்து வருகின்றன.
இறுக்கமான முகத்துடன் புஷ் ''குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகள்
இறுதிவரையும் பாதுகாக்கப்பட்டதுடன், அவதானிக்கப்பட்டதாகவும்''
தெரிவித்தார். அவர், FBI மைக்வேயின்
வழக்கறிஞரின் 4,400 பக்க ஆதார பத்திரங்களை சட்டபூர்வமற்ற
முறையில் தடுத்து வைத்திருந்ததையும், நீதிமன்றம், மரண தண்டனையை
பிற்போட கோரியதை தள்ளுபடி செய்து எதிராளியின் வழக்கறிஞர்கள்
வழக்கு பத்திரங்களை நன்கு படித்து மரணதண்டனைக்கு எதிராக
மறுவிண்ணப்பம் செய்வதற்கான சாத்தியத்தையும் இல்லாது செய்ததையும்
மறைத்தார்.
ஒருவர் தொலைக்காட்சிகளின் விநோதமான
படைப்புகளின் பின்னர், பத்திரிகைகளை பார்த்தால் அதே மாதிரியான
தன்மையையே காணக்கூடியதாக இருந்தது. மிகவும் வழமைக்கு
மாறானதாக இருந்தது New York
Times இன் விமர்சனமாகும். திங்கட்கிழமை
ஆசிரியர் தலையங்கத்தில் அது விசர்த்தனமான முறையில், ஒக்லகோமா
நகர குண்டுவெடிப்பு அமெரிக்க சமுதாயத்தை பிரதிபலிக்கவில்லை
என நிராகரித்தது. ''வரலாறும் ரிமோதி மைக்வேயும்'' என்ற தலையங்கத்தின்
கீழ் வெளிவந்த அக்கட்டுரை ரிமோதி மைக்வேயின் குற்றத்திற்கும்
வரலாற்றுக்கும் தொடர்பு உள்ளதென்பதை நிராகரித்தது.
Times பத்திரிகையின்
கருத்துப்படி, ஒக்லகோமா நகர் குண்டுவைப்புக்கு காரணமானவர்
ஒருவித சீரழிவானதும், மோசமான மனநோய் பீடித்தவரும், மற்றும்
இது தான் அதற்கான அனைத்து காரணமாகும். அது மேலும் ''எங்களுக்கு
அவரின் முகத்தை பார்க்க 6 வருட காலம் கிடைத்து. அவரின் கண்கள்
எங்களுக்கு மீண்டும் மீண்டும் தனது தவறான சொந்த நம்பிக்கைகள்
இழந்த ஒரு மனிதனின் காட்சியை காட்டியது'' என குறிப்பிட்டுள்ளது.
அது மேலும் ''இராணுவம் மைக்வேயை உருவாக்கவில்லை.
வளைகுடா யுத்தம் அவரை விரோதமானவராக மாற்றவில்லை.
அவர் உருக்குலைந்த குடும்பத்தால் உருவாகிய வெற்றிடத்தாலும்,
இராணுவ சுயகட்டுப்பாட்டின் சிந்தனைகளால் வழிதவறச் செய்யப்பட்ட
தனது சொந்த கண்டுபிடிப்பாகும். இது நிச்சயமாக, முற்றாக
தவறான விமர்சனமான காரணம் கற்பித்தலால் வழிநடத்தப்பட்ட
நாட்டுக்கு விரோதமானவரின் மீது ஏற்கெனவே அரசாங்கத்திற்குள்ள
உரிமைகளை மாற்றுவதற்கு காரணமானது'' என குறிப்பிட்டது.
அப்பத்திரிகை தொடர்ந்தும் ''ஒக்லகோமா குண்டுவெடிப்பு
ஒரு போதும் பிழையாக நடாத்தப்படாத ஒரு மனிதனால் செய்யப்பட்ட
பழிவாங்கும் நடவடிக்கையாகும்'' என குறிப்பிடுகின்றது. அது
வாகோ (Waco) வின்
படுகொலையில் அரசாங்கத்தின் பங்கு தொடர்பான விமர்சனம்
ஏதும் இல்லாது மைக்வேயின் வழக்கில் FBI
இல் ''நிர்வாக தடுமாற்றம்'' என்ற
ஒரு சிறுகுறிப்புடன், ஆவணங்களை ஒடுக்கியது அஜாக்கிரதையால்
நடந்தது என்ற அரசாங்கத்தின் கூற்றை பிரதிபலிக்கின்றது.
''நாங்கள் ஆச்சரியப்படும் நிலைக்குள்ளாகினோம்'',
என குறிப்பிட்ட Times பத்திரிகை
ஆசிரியர் குழு ''எந்த அதிஸ்டவசமான சம்பவம் திரு. மைக்வேயை
எங்களில் ஒருவராக மாற்றியிருக்கும்'' என சிந்தித்தது என்றது. சிலவேளை
Times பத்திரிகையை
வெளிவிடும் கோடீஸ்வரர்களான Sulzberger
குடும்பத்தினரால் மைக்வேயின் தலைவிதியை
மாற்றக்கூடியதாக இருந்திருக்கும் என நாம் குறிப்பிடலாம்.
ஒக்லகோமா குண்டுவெடிப்புக்கும் கடந்த 30
வருட அமெரிக்காவின் சமூக அனுபவங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை,
மைக்வேயை அபிவிருத்திக்கும் அவர் வாழ்ந்த சமுதாயத்திற்கும்
ஒருவித தொடர்புமில்லை என்ற Times
பத்திரிகையின் கருத்து அதன் முகத்திலேயே
திருப்பி அடிக்கின்றது.
மைக்வேயை ஒரு மோசமான உருவமாக காட்டமுயல்வதைப்போல்
அவமரியாதையானது வேறொன்றுமில்லை. பயங்கரமான நிகழ்வுகளுக்கு
பயங்கரமான மனிதர்கள் தான் காரணம் என உலகிற்கு விளங்கப்படுத்துவது
சுலபமானதாக இருக்கலாம். மைக்வே ஒரு மோசமான குற்றத்தை
செய்த குற்றவாளி. அதற்காக அவருக்கு கட்டாயமாக ஆயுள்கால
சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும், ஆனால் அவர் ஒரு பேயல்ல.
அதற்குமேலாக இறுதி ஆய்வுகளில் அவரின் தனித்தன்மைகள்,
அவர் வாழ்ந்த சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான
தனிமனிதனாகும். தனிப்பட்ட, உடலியல் ரீதியில் அவர் ஒரு வஞ்சகனல்ல.
அவருடைய குற்றத்தின் பிரச்சனைக்குரிய விடயம் என்னவெனில், அக்குற்றம்
பலவிடயங்களில் இலட்சக்கணக்கான அமெரிக்க மக்களுக்கு
பொதுவான, அதாவது வித்தியாசமான நிலைமைகளின் கீழ் மிகவும் வித்தியாசமாக
மாற்றமடையும் மனிதன் ஒருவரால் செய்யப்பட்டது என்பதாகும்.
இராணுவத்தில் மைக்வேயின் பணியிற்கும்,
வளைகுடாயுத்தத்தில் அவர் பெற்ற அனுபவங்களுக்கும் அவரது
பின்னைய வாழ்க்கைப் பாதைக்கும் தொடர்பில்லை என்ற விவாதம்
ஒரு அர்த்தமற்றதாகும். அவரது சொந்த கருத்தின்படி மைக்வே
பாரசீக வளைகுடாவிற்கு முட்டாள் தனமான ஆர்வத்துடன் சென்றதாக
குறிப்பிடுகின்றார். ஆனால் அங்கு அவர் பெற்ற அனுபவங்கள் அவரை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், அவரை உறுதியாக அவரது சொந்த
அரசாங்கத்திற்கு எதிராக திரும்பச்செய்தது. அமெரிக்க அரசாங்கமும்,
தொலைத்தொடர்பு சாதனங்களும் அமெரிக்க மக்களுக்கு
மறைத்த நிகழ்வான, எவ்வித பாதுகாப்பும் அற்ற ஈராக்கியர்கள்
கொல்லப்பட்டதை அவர் நேரடியாகக் கண்டார்.
இதனை அவர் இரண்டு ஈராக்கிய படைவீரர்களை
கொன்றபின் ஏற்பட்ட குற்ற உணர்வு தொடர்பாக பின்வருமாறு
கூறினார் ''எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வுக்கான காரணம்
என்னவெனில், முதலாவதாக நான் ஒரு தற்பாதுகாப்பு நடவடிக்கையில்
அவர்களை கொல்லவில்லை. நாங்கள் அனைவரும் ஒரே கனவுகளும்,
விருப்புகளும், எமது குடும்பம், குழந்தைகள் தொடர்பான ஒரேமாதிரியான
கவனத்தை கொண்டிருந்தோம். இந்த மக்களும் இதயத்தில்
என்னைப்போலவே மனிதர்களே''.
ரெக்ஸாஸில் உள்ள
Waco வின் Branch
Davidian எல்லைக்குள் எரியூட்டப்பட்டமை
அரசாங்கத்தால் தனது சொந்தமக்கள் மீது செய்யப்பட்ட
சாதாரண, வெளிப்படையான மக்கள் கொலையாகும். அதில் 86
பேர் கொல்லப்பட்டனர். அதில் 25 குழந்தைகளாகும், இது ஒக்லகோமாவில்
கொல்லப்பட்டதைவிட அதிகமானதாகும். தொலைத்தொடர்பு
சாதனங்களின் சதி என்னவெனில் இந்த பெரும் தீயில் இறந்தவர்களின்
உறவினர்களையோ அல்லது காயமுற்றவர்களையோ பேட்டிகாணவில்லை.
மைக்வே துப்பாக்கி மீது பித்துப்பிடித்தவராக மாறினார்
என்றால் அவர் அதனை ஒரு திட்டவட்டமான தத்துவார்த்த சுற்றுச்சூழலுக்குள்தான்
அதனை செய்துள்ளார். முதலாளிகளுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு
சாதனங்களால் பாரிய சந்தைப்படுத்தப்பட்ட றம்போவின் (Rambo)
இலட்சணைகளுடன் அமெரிக்க இளைஞர்கள்
மீது இராணுவ வாதத்தையும், இன வாதத்தையும் பொழிந்ததை
என்னவென்று கூறுவது. இவ் அரசியல் கட்டமைப்பும், தொலைத்
தொடர்பு சாதனங்களும் பல பத்தாண்டுகளாக தொலைக்காட்சி,
வானொலி, எண்ணுக்கணக்கற்ற திரைப்படங்கள் மூலமாக வலதுசாரி
கருத்துக்களையும், சகலவிதமான பிற்போக்கு கருத்துக்களையும்
முன்கொண்டுவரும் புத்தி மங்கச்செய்யும் பிரசாரத்தில் ஈடுபட்டன.
இதற்குமேலாக Times
பத்திரிகைக்கு
நன்கு தெரிந்ததுபோல, குடியரசுக்கட்சி,
வலதுசாரி, பாசிச இயக்கங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி பார்க்கமுடியாத
அரசியல் நோக்கை கொண்ட அதிதீவிர வலதுசாரி பிரிவினரால்
கூடியளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. கிறிஸ்தவ வலதுசாரி சட்டமா
அதிபரான John Ashcroft
இன் கருத்துக்களுக்கும், துப்பாக்கி வெறிபிடித்தவர்களினதும், வெள்ளை
இன மேலாதிக்கவாதிகளினதும், தகுதி உள்ளவர்கள் தப்பிப்பிழைப்பார்கள்
(Survivalists) என்ற
கருத்தை உடையவர்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது?.
குடியரசுக் கட்சியின் வலதுசாரிகளின் முக்கிய பிரச்சார ஏடான Wall
Street Journal மைக்வேயின் கருத்துக்களை
போன்றவற்றையே முன்வைக்கின்றது. ஆனால் அது சற்று திரிக்கப்பட்ட
வார்த்தைகளை பிரயோகிக்கின்றது.
குடியரசுக்கட்சியின் ஜோர்ஜியாவின் Rep.
Bob Barr, மிசிசிப்பியின்
(Mississippi) செனட்டரான
Trent Lott இற்கும் Jim
Crow வின் காலத்தில் இருந்த வெள்ளை
குடிமக்கள் குழுவில் இருந்து தோன்றிய யூத எதிர்ப்பு வெள்ளை மேலாதிக்க
கட்சியான கன்சவேர்ட்டிவ் குடிமக்கள் குழு (Council
of Conservative Citizens) இற்கும் ஆதாரப்படுத்தப்பட்ட
தொடர்புகள் இருக்கின்றன. 1994 இல் தெரிவுசெய்யப்பட்ட குடியரசுக்
கட்சியின் கூடுதலான உறுப்பினர்கள் இனவாதிகளாலும், பாசிசவாதிகளாலும்
தலைமை தாங்கப்படும் militia குழுக்களுடனும்,
துப்பாக்கிக்கு ஆதரவான குழுக்களினதும் ஆதரவை பெற்றிருந்தனர்.
ஒக்லகோமா குண்டுவெடித்தபோது அவர்களில் ஒருவரான Steve
Stockman இற்கு மிக்சிகனில் இருந்து ஒளிபரப்பப்படும்
பாசிச வானொலியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் வெளியான
இக்குண்டுவெடிப்பு தொடர்பான தகவல் ஒன்று தொலைநகல்
மூலம் அனுப்பப்பட்டது. அவர் அதனை அரசாங்க அதிகாரிகளுக்கு
அனுப்பாது தேசிய துப்பாக்கி கழகத்திற்கு அனுப்பியுள்ளார். அத்
தொலைநகலின் நேர பதிப்பு குண்டுவெடிப்பிற்கு ஒரு மணித்தியாலம்
முந்தியதாக இருந்தது.
இறுதியாக மைக்வேயின் அரசாங்க எதிர்ப்பு உணர்வுகளுக்கும்
கார் உற்பத்தியும், உருக்கு உற்பத்தியும் முற்றாக மூடப்பட்டதால்
முற்றாக கைவிடப்பட்ட நியூயோர்க் நகரத்தின் ஒருபகுதியில் அவரின்
குழந்தைப் பருவத்தின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை முற்றாக
மறுப்பது முட்டாள்த் தனமானதாகும். அவரது எதிர்ப்பு மிகவும் பிற்போக்கான
திசையிலிருந்து வந்தாலும், அதற்கு ஒரு உண்மையான அடித்தளம்
உள்ளது.
அமெரிக்காவின் வாழ்க்கையின் ஒரு அடித்தளமான
தன்மை என்னவெனில் 1990 களின் போக்கான அபரிதமான
பொருளாதார வளர்ச்சியின் விளைவிலான திகைப்படைய செய்த
சமூக சமத்துவமின்மையாகும். இரண்டு முக்கிய கட்சிகளினதும்,
நிதிதுறையினரது கொள்கைகளானது பரந்தபட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை
பாரியளவில் அடியோடு அழித்ததுடன், வசதிபடைத்த தட்டினர் தமது
செல்வத்தை மதிப்பிடமுடியாதளவு பெருப்பித்துக்கொள்ள வழிசெய்தது.
இந்த சமூக உண்மையானது பரந்த மக்கள் மத்தியில்
அதிருப்தியும், வெறுப்பும் வளரும் தன்மையை உருவாக்கியது. கிளின்டனின்
ஜனநாயக்கட்சி நிர்வாகமானது அதற்கு முந்திய றேகனினதும் புஷ்
இனதும் பிற்போக்கான சமூக கொள்கைகளை பின்தள்ளும் நோக்குடன்
1992 ம் ஆண்டு பதவிக்கு கொண்டுவரப்பட்டது. இது தனது தேர்தல்
பிரச்சார வாக்குறுதிகளை கைவிட்டதாலும், அதிகரித்த
பொருளாராத சமத்துவமின்மையை கவனமெடுக்காததாலுமான
சமூக நெருக்கடிக்கு உள்ளானது.
மைக்வே போன்ற கசப்படைந்த இளைஞர்கள்
ஏன் தீவிர வலதுசாரிகளினது அரசியல் பிரச்சாரங்களுக்கு இசைந்து
போகின்றார்கள் என்பதற்கு காரணங்கள் உண்டு. அவையாவன தற்போதைய
அரசியல் கட்டமைப்பின் எந்தவொரு பகுதியினரும் உழைக்கும் மக்களின்
தேவைகளை கவனமெடுக்காததும், தொழிலாள வர்க்கம் அதன்
போலியான பாரிய இயக்கங்களாலும், தொழிற்சங்கங்களாலும்
காட்டிக்கொடுக்கப்பட்டமையுமாகும். அவநம்பிக்கையுற்ற
இளைஞர்கள் இதற்கான பதிலை வேறு எங்கோ தேடுகின்றனர். அவர்கள்
இலாப அமைப்பிற்கு ஒரு சாத்தியமான மாற்றீட்டை காணாதவரை
அவர்கள் வலதுசாரி வார்த்தை ஜாலங்களுக்கான மூலப்
பொருளாகின்றனர்.
மைக்வே ஒரு பயங்கரமான குற்றத்தை செய்துள்ளார்
என கூறுவது கடினமானது. சோசலிச சமத்துவக் கட்சியும், சோசலிச
வாதிகள் என்றவகையில் நாங்களும் அவர் செய்த அனைத்தையும்,
அவர் ஆதரித்தவற்றையையும் முற்றாக நிராகரிக்கின்றோம். ஆனால்
தர்மார்த்த ரீதியான துன்பப்படுவது மட்டும் போதது. இது ஒக்லகோமாவின்
குண்டுவெடிப்பு உருவாகுவதற்கான சமூக, அரசியல் நிலைமைகளை
விளங்கிக்கொள்ளவதற்கு பதிலீடாகாது.
குண்டுவெடிப்பின் போது நாம் பின்வருமாறு எழுதியிருந்தது
அதன் பின்னான நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
''ஒக்லகோமாவில் 200 அப்பாவி ஆண்கள், பெண்கள்,
குழந்தைகளின் உயிரை பலியெடுத்த வெறுக்கத்தக்க குற்றமானது
ஐக்கிய அமெரிக்காவில் நீண்டகாலத்திற்கு முன்னரே காணப்பட்ட
அரசியல் நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது. இது அமெரிக்க முதலாளித்துவ
ஜனநாயகத்தின் அதிகரித்துவரும் உறுதியின்மையை வெளிப்படுத்தியுள்ளதுடன்,
அதனது பாரம்பரிய அமைப்புக்கள் எந்தளவிற்கு ஆழமான சமூக
முரண்பாடுகளுக்குள் இட்டுச்செல்லப்பட்டுள்ளன என்பதையும்
எடுத்துக்காட்டியுள்ளது''.
குண்டுவெடிப்பின் சிலமாதத்தின் பின்னர் குடியரசுக்
கட்சியினரால் மாநில அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதும்,
கிளின்டனுக்கு எதிரான பதவிவிலக்கல் சதியும், 2000 இன் ஜனாதிபதி தேர்தல்
கொள்ளையடிக்கப்பட்டதும், திங்கட்கிழமையின் இழிவான நிகழ்வும்
அவ் ஆய்வினது சரியான தன்மையை ஊர்ஜிதம் செய்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக New
York Times ஆசிரியத்
தலையங்கம் அமெரிக்க மக்கள் ஒக்லகோமாவின் நிகழ்வுகளுக்கு
தற்போதுள்ள சமூக அமைப்புத்தான் காரணம் என்று நம்பிவிடுவார்களோ
என்ற விசேடமான பயத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. மிகவும் தாக்கமானதாகவும்,
மிகவும் சாபமிடும் வகையில் ஒக்லகோமா நகர குண்டுவெடிப்பு
போன்ற ஒரு துன்பகரமான நிகழ்விலிருந்து ஒன்றையும் கற்றுக்கொள்ளமுடியாது
என வலியுறுத்துகின்றது. இப்படியான ஒரு நோக்கானது நெருக்கடிக்குள்ளான
அரசியல் பிரிவானது அது தான் எதனை பார்ப்பேன் என்பது தொடர்பாக
பயத்தால், சமூக யதார்த்தத்தை நேர்மையுடன் நோக்க பயப்படுவதை
பிரதிபலிக்கின்றது.
|