World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

SEP (US) statement: New strategy needed to fight police violence and racism
Statement of the Socialist Equality Party

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை: பொலிஸ் வன்முறைக்கும் இனவாதத்திற்கும் எதிராக போராட புதிய முன்னோக்கு தேவை

6 June 2001

Back to screen version

இவ்வறிக்கை ஏப்பிரல் மாதம் சின்சினாட்டி (Cincinnati) யில் பொலிசாரால் கறுப்பு இன இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக யூன் 2ம்திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் சோசலிச சமத்துவக் கட்சியால் வினியோகிக்கப்பட்டது.

பொலிஸ் வன்முறை ஒரு துன்புறுத்தல் என்றவகையில் சின்சினாட்டிக்கு மட்டும் உரியதல்ல. இது அமெரிக்கா முழுவதும் காணக்கூடியதாக உள்ளது. நியூயோர்க்கிலும், லொஸ்ஏஞ்சல்சிலும், டிட்ரோயிட்டிலும், பிற்ஸ்பேர்க்கிலும் கடந்த வருடத்தில் பொலிசாரின் குண்டுகளுக்கு பலியான முக்கியமாக ஒரு தொகை சிறுபான்மை தொழிலாளர்களையும், இளைஞர்களையும் போல் திமோதி தோமஸ் உம் ஒருவராவார். இப்பிரச்சனையின் தேசிய, இனவாத நோக்கு பல அரசியல்வாதிகளும், தொலைத் தொடர்பு சாதனங்களும், மனித உரிமை அமைப்புகளும் எடுத்துக்காட்டுவது போல் பொலிசாரின் மத்தியில் உள்ள ''ஒரு சில கெட்டவர்களின் நடத்தை'' யால் அல்ல, மாறாக அமெரிக்க சமுதாயத்தின் கட்டமைப்பினுள் ஆழமாக வேர் ஊன்றியுள்ள பிரச்சனையின் வெளிப்பாடாகும்.

பொலிசாரின் முரட்டுத்தன்மைக்கும், இனவாத தோற்றத்திற்குமான புறநிலை ரீதியான பொருளாதார, சமூக வேர்களை விளங்கிக்கொள்ளவது இம்மோசமான நிலைமைக்கு எதிரான முக்கிய போராட்டத்திற்கான முன்நிபந்தனைகளாகும்.

தோமஸின் கொலையின் பின்னர் தோன்றிய எழுச்சி, அமெரிக்க வாழ்க்கையின் ஒரு முக்கிய தன்மையை வெளிக்காட்டுகின்றது. இது தொலைத் தொடர்பு சாதனங்களாலும், அரசியல் வாதிகளாலும், போதகர்களாலும், இவற்றின் பாதுகாவலர்களாலும் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. இது அமெரிக்காவில் பாரியளவில் அதிகரித்துவரும் சமூக, பொருளாதார சமத்துவமின்மையின் வெளிப்பாடாகும். சின்சினாட்டியில் அதிர்ச்சியடையத்தக்க இவ்வன்முறையானது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, சாதாரண அளவில் அமெரிக்காவின் நாளாந்த வாழ்க்கையின் கீழ் அடங்கியுள்ள வெடிக்கும் தன்மை கொண்ட சமூகப்பிளவினையும், கொதிப்பினையும் பிரதிபலிக்கின்றது.

சின்சினாட்டியின் நிகழ்வுகள் 1960 களின் கெட்டோ எழுச்சிகளையும், 1992 லொஸ்ஏஞ்சல்சில் நிகழ்வுகளை பிரதிபலித்தது. ஆனால் இம்முறை நிகழ்ந்த எழுச்சி 'முழு நாடும் பலனடைந்ததாக' கூறப்படும் முன்னொருபோதும் எதிர்பார்த்திராத பொருளாதார செழிப்பினை கொண்ட ஒரு பத்தாண்டின் முடிவில் தோன்றியுள்ளது. சின்சினாட்டி நிகழ்வு இப்பிழையான தோற்றப்பாட்டை கிழித்து எறிந்துள்ளதுடன், இப்புகழ்ந்து கூறப்பட்ட செழிப்பினால் வசதிபடைத்த 5-10% ஆனவர்கள் இலாபமடைந்ததையும், பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஒருவாறு தப்பிப்பிழைக்ககூடியாதாக இருந்ததையும், மிகவும் கஸ்டத்திற்குள்ளான மக்கள் தமது நிலைமை மோசமடைந்துள்ளதாக கண்டுகொண்டுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் முன்னைய காலகட்டத்தின் பொருளாதார வளர்ச்சி வசதிபடைத்த பிரிவினருக்கும் ஏனைய மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறுகச்செய்ததைப்போல் அல்லாது கடந்த பத்தாண்டில் இது எதிர்மாறாக நடைபெற்றுள்ளது.

பொருளாதார வளர்ச்சியினது இலாபங்களின் பாரிய சமத்துவமற்ற பங்கீடானது பரந்துபட்ட மக்களுக்கு நியாயமான சம்பளத்தையும், உத்தரவாதம் மிக்க வேலைத்தலத்தினையும், சுகாதார வசதிகளையும், கல்வியினையும், வீட்டுவசதிகளையும் வழங்க தற்போதைய பொருளாதார, சமூக அமைப்பான முதலாளித்துவ அமைப்பு இலாயக்கற்றதாக இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. சின்சினாட்டியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பொதுச்சேவைகளின் சீரளிவினையும், ஊட்டச்சத்தின்மையையும், குழந்தைகளின் இறப்பின் அதிகரிப்பினையும், வீடின்மையையும், ஏனைய சமூக பிரச்சனைகளையும் காணக்கூடியாதாக உள்ளது.

இவை அனைத்தும் ஜனநாயக் கட்சியினர் வெள்ளை மாளிகையில் இருக்கையில் நடைபெற்றது. குடியரசுக் கட்சியினருக்கு கிளின்டன் நிர்வாகம் விட்டுக்கொடுக்கையில் சமூக சீர்திருத்தத்திற்கான முன்னோக்கினை கைவிட்டிருந்ததுடன், முதலாளித்துவத்தின் பிரிவினரால் கட்டளையிடப்பட்ட சமூக நல எதிர்ப்பு கொள்கைகளை அரவணைத்திருந்தது. கிளின்டனின் பதவிக்காலம் ஒருபக்கத்தில் சமூக நலன்களை இல்லாதொழித்த, வீடற்றவர்களை அதிகரிக்கச் செய்த, சமூகபாதுகாப்பற்றவர்களின் அளவை அதிகரிக்கச் செய்ததும், மறுபக்கத்தில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக்கிய காலகட்டமாக நினைவுகூரப்படும்.

பொலிசாரின் வன்முறைகளுக்கும், இனவாதத்திற்கும் எதிரான போராட்டத்தின் அடிப்படையான இரண்டு அரசியல் காரணங்களை விளங்கிக்கொள்ளவேண்டும். முதலாவதாக அமெரிக்க முதலாளித்துவம் பாரிய உழைக்கும் மக்களின் சமூகத்தேவைகளை பூர்த்தி செய்ய இயலாதுள்ளது. இரண்டாவதாக தாம் தொழிலாளர்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் பிரதுநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஜனநாயக்கட்சி அமெரிக்காவை பிரச்சனைக்கு உள்ளாக்கியிருக்கும் சமூகப்பிரச்சனைகளுக்கு எந்தவித முற்போக்கான தீர்வையும் வழங்க முடியாதிருப்பதுடன், குடியரசுக் கட்சியினரின் வலதுசாரி திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பையும் காட்டவில்லை.

சின்சினாட்டியின் நிகழ்வுகள் ஒவ்வொரு நகரங்களிலும் வர்க்கத் துருவப்படுத்தல் நிகழ்ந்து கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. சின்சினாட்டியில் உள்ள முக்கியத்துவமான பிரதேசத்திலுள்ள 5% ஆன வசதிபடைத்தவர்களுக்கும் ஏழ்மையான 5% ஆனவர்களுக்கும் இடையிலான பொருளாதார வித்தியாசம், நாட்டின் மோசமான பகுதியான Tampa Bay இற்கு இரண்டாவது இடத்திலுள்ளது.

கடந்த பத்துவருடங்களாக அங்கிருக்கும் 500 உள்ளூர் நிறுவனங்களில் ஒன்றான Kroger, Procter & Gamble பாரிய இலாபத்தை அடைந்துள்ளது. இதனூடாக உயர் உத்தியோகத்தர்களும், பாரிய முதலீட்டாளர்களும், மத்தியதர வர்க்கத்தின் வசதிபடைத்த ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினரையும் வசதியடைய செய்துள்ளது. சமுதாயத்தின் மற்றைய முனையில் ஆயிரக்கணக்கான ஏழைகள் சமூகநலக்கொடுப்பனவுகள் வெட்டப்பட்டு, சம்பளம் குறைந்த தற்காலிக வேலைகளுக்கும் வீடற்றவர்கள் தங்கும் நிலையங்களிலும் தஞ்சமடையவும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நகரத்தின் ஜனநாயக்கட்சி நிர்வாகம் முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுத்து, வரிக்குறைப்புகளையும், அவர்களுக்கான வசதிகளையும் உருவாக்கியுள்ளது. அது நகர அபிவிருத்தியின் கீழ் புதிய விளையாட்டு அரங்கம் ஒன்றை நிறுவ 1 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. இந்நகரத்தின் ஏழ்மையான தொழிலாள வர்க்க பிரதேசமான Over-the-Rhine இனை மத்தியதர வர்க்கத்திடம் ஒப்படைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களையும், கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் மலிவான இப்பிரதேசத்தை வாங்கி டொட். கொம் [Dot.com] வியாபாரத்திலும், நகரவீடமைப்பிலும் ஈடுபடுமாறு உள்ளூர் நிர்வாகிகள் ஊக்கமளிக்கின்றனர்.

இதேவேளையில் வருமானம் குறைந்தவர்களுக்கான பொதுவீடமைப்புகள் இடிக்கப்பட்டு, இப்பிரதேசத்தினுள் [Over-the-Rhine] ''விரும்பத்தகாதவர்கள்'' [பிச்சை எடுப்பவர்கள், வீடற்றவர்கள், சிறுபான்மை இளைஞர்கள்] வருவதை தடைசெய்ய தனியார் பாதுகாப்பு பிரிவினரை போல் இயங்க பொலிசாருக்கு உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சின்சினாட்டியிலும், அமெரிக்கா முழுவதுமான பொலிஸ் ஒடுக்குமுறையானது இனவாத பொலிசாரின் தற்செயலான அல்லது சாதாரண விளைவல்ல. இது நிதி உடைமையாளர்களின் ஆட்சியின் விளைவும், மிகமுக்கியமாக வசதிபடைத்த தட்டினருக்கும் சமுதாயத்தின் ஏனைய பிரிவினருக்குமான இடைவெளியினதும் விளைவும், இவ் அதிகாரம் படைத்த தட்டினர் மக்களை அடக்குவதற்காக மோசமான அதிகாரத்திலும், பயங்கரவாதத்திலும் தங்கியிருப்பதன் விளைவாகும். பொலிசாரின் மோசமான நடத்தையை மக்கள் அவதான குழுக்கள் உருவாகுதல், பொலிசாருக்கான வேறுவழியை காட்டும் பயிற்சிகள், பொலிசாரை கூடுதலாக ஈடுபடுத்தல் மூலமாக இல்லாதொழிக்கலாம் என்ற கருத்துக்கள் அனைத்தும் வெறும் கற்பனைகளும், அரசியல் திசைதிருப்பலுமாகும்.

இதேபோல் கறுப்பின நகரசபைத் தலைவர்களையும் அதிகாரிகளையும் தெரிவுசெய்தல், சிறுபான்மையினரின் வர்த்தகங்களை உருவாக்குதல் மூலமாக இப்பிரச்சனையை இல்லாது ஒழிக்கலாம் என்னும் முன்னோக்கிற்கும் மேற்குறிப்பிட்டது பொருந்தும். இப்படியான மூலோபாயம் கடந்த முப்பது வருடங்களாக பெருப்பான்மை ஆங்கிலோ- ஆபிரிக்க மக்களுக்கு எதை வழங்கியது? பெரும்பான்மையான கறுப்பின தொழிலாளர்களின் நிலைமை மிகவும் சீரழிந்ததாகியதுடன், இக்கொள்கையினால் பலனடைந்தவர்கள் வசதிபடைத்த கோடீஸ்வரர்களான Jesse Jackson போன்றவர்களாகும். இப்படியான கறுப்பின அரசியல்வாதிகளும், சிவில் உரிமைக்கான தலைவர்களும் பொலிஸாரின் கொலைகள் மீதான ஆத்திரத்தை திசைதிருப்பி அரசாங்க ஒப்பந்தங்களையும், செல்வத்தையும் பெறும் தமது சொந்த நோக்கங்களை முன்வைக்க முனைகின்றனர். அவர்கள் எவ்வினத்தை சேர்ந்த மக்களினதோ அல்லது இளைஞர்களினதோ சார்பில் பேசவில்லை.

இனத்தினதும், இன வகைப்பட்டதுமான அரசியல் ஒரு ஏமாற்று மட்டுமல்ல, அது ஒரு முட்டுச்சந்தியை நோக்கி செல்கின்றது. இவ் அரசியல் தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்தி இனவாதிகளினதும், வலதுசாரிகளினதும் கரங்களை பலப்படுத்துகின்றது.

கறுப்பு, வெள்ளை, குடியேறிய தொழிலாளர்கள் கட்டாயமாக ஒன்றிணைய வேண்டும், ஒன்றிணைய முடியும். தொழிலாள வர்க்கத்தினுள் உள்ள பிளவுகளை இல்லாதொழிப்பதற்கான புறநிலையான நிலைமைகள் இருக்கின்றன.

சின்சினாட்டியின் எழுச்சிகள் வேலைநீக்கத்திற்கும், சமூகநல திட்டங்கள் மீதான வெட்டிற்கும், ஜனநாயக உரிமை மீதான தாக்குதலுக்கும் எதிரான அதிகரித்துவரும் சமூக அதிருப்தியின் ஒரு சிறிய வெளிப்பாடாகும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டுபோகையில், தமது வேலைத் தலங்களை தொழிலாளர்கள் இழக்கையில், சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் இல்லாதொழிக்கப்படுவதை அவர்கள் கண்டுகொள்வார்கள். வாக்குரிமை மீதான தாக்குதல்களுடனும், ஏமாற்றான, அநீதியான முறையில் பதவிக்கு வந்த அரசாங்கமான புஷ் நிர்வாகத்துடன் தொழிலாள வர்க்கம் மோதலுக்கு செல்லத் தள்ளப்படும்.

ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கான உயிர்ப்பூட்டமான, ஒழுங்கமைக்கப்பட்ட, விழிப்புணர்வான பாதுகாப்பு தொழிலாள வர்க்க இயக்கமாகும். 1930 களில் தொழிற்சாலைகளில் தொழிலாள வர்க்கம் பாரிய போராட்டங்களால் தொழிற்சங்கங்களை கட்டியமைத்ததானது தொழிற்துறை கொடுமைகளுக்கு முடிவுகட்டியது. கொடுமைகளும் துன்புறுத்தல்களும், Jim Crow வின் தனிமைப்படுத்தல்களும் கறுப்பினத்தவர்கள் அவர்களின் கூட்டினருடன் ஒன்றிணைந்து 1960 களில் பாரிய சிவில் உரிமை இயக்கத்தினை கட்டியதன் ஊடாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஒரு புதிய மக்கள் இயக்கம் முன்னைய இயக்கத்தினை போல் ஜனநாயக் கட்சியினதும், இலாப அமைப்பு முறையினதும் எல்லைகளுக்குள் கட்டுப்படக்கூடாது. தொழிலாளர்கள் முதலாளித்துவ ஜனநாயக் கட்சியினுள் கட்டுப்பட்டிருக்கும் வரை தமது நலன்களை பாதுகாக்கும் முன்னோக்கை முன்னெடுக்க முடியாது.

பொலிஸ் ஒடுக்கு முறையும், இனவாதமும் நிறுவனங்களின் உடைமையாளர்களினதும், வங்கிகளினதும் கைகளில் சமூகத்தின் வளங்களும், முடிவெடுக்கும் அதிகாரமும் குவிக்கப்பட்டு இருக்கும் இவ் ஜனநாயகமற்ற, சுரண்டும் முதலாளித்துவ அமைப்பின் தன்மைகளுள் வேர் ஊன்றியுள்ளன. பொலிஸ் ஒடுக்கு முறைக்கும், இனவாதத்திற்கும் எதிரானதும், உண்மையான ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்குமான போராட்டம் அசமத்துவத்தின் அடித்தளத்தை தாக்கும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன கட்சியை கட்டுவதால் மட்டுமே முன்னெடுக்க முடியும்.

பொலிஸ் வன்முறைக்கும், இனவாதத்திற்கும் எதிரான போராட்டத்திற்கான வழி என்ன? இதற்கான ஆரம்பமாக தாக்குதலில் ஈடுபட்ட பொலிசார் அனைவருக்கும் எதிரான முழு அளவிலான சட்டநடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட வேண்டும். ஆனால் இவ்வடிப்படை கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதும் கூட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை கட்டுவதால் மட்டுமே சாத்தியமானது. ஏனெனில் இவ்வொழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அவர்களின் அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் இப்புதிய கட்சியானது பில்லியன் கணக்கான டொலர்கள் செலவில் நகரங்களை திருத்திக்கட்டுவதற்கும், நியாயமான சமபளத்துடனான வேலைகளுக்கும், சுகாதார வசதிகளுக்கும், உயர்வசதியான வீடுகளை வழங்கும் திட்டங்களை கொண்ட ஒரு சோசலிச முன்னோக்கை முன்வைக்கும். சமூகத்தின் வழங்களை செல்வந்தர்களின் வரி ஏமாற்றுகளுக்கும், ஏனைய தேவைகளுக்கும் வழங்குவதற்கு மாறாக இவ் வளங்கள் ஏழ்மையை நீக்கவும், பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார, கலாச்சார மட்டத்தை உயர்த்தவும் பாவிக்கப்படும்.

தொழிலாள வர்க்கமும், முக்கியமாக இளைஞர்களும் எதிர்நோக்கும் முக்கிய கடமை என்னவெனில், அனைத்து தொழிலாள வர்க்கத்தினையும் ஐக்கியப்படுத்தும், ஜனநாயக, புரட்சிகர, சோசலிச முன்னோக்கிற்காக போராடும் ஒரு புதிய தலைமையை கட்டுவதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved