World Socialist Web Site www.wsws.org |
Growing hostility to the government and the LTTE A first hand report from LTTE-controlled territory in Sri Lanka அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிர்ப்பு அதிகரிக்கின்றது இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசத்தில் இருந்து நேரடி அறிக்கை By a correspondent இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு வன்னியிலிருந்து -பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுள்ள தீவின் வடக்கில் உள்ள பகுதி- கிடைத்த நேரடி அறிக்கையை கீழே காணலாம். இந்த அறிக்கை, தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்யும் அழிவுகரமான 18 வருடகால யுத்தத்தின் தாக்கங்களையும் தொடர்ச்சியான பொருளாதாரத் தடை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் பற்றாக்குறையினாலும் வளர்ச்சி கண்டுள்ள நெருக்கடிகளையும் பற்றிய தெளிவான சித்திரத்தை தருகின்றது. அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அவநம்பிக்கை வளர்ச்சி கண்டு வருவதையும் சுட்டிக் காட்டுகிறது -அதன் பலாத்காரமான வரிவிதிப்பு, சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் வாழ்க்கை நிலை தொடர்பாக அவர்களின் அக்கறையீனம் மற்றும் அவர்களின் ஜனநாயக விரோத நடைமுறைகளையும் விளக்குகின்றது. கொழும்பு அரசாங்கத்தால் நடாத்தப்பட்டு வரும் யுத்தத்தின் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ஏனைய பிரதேசங்களை விட வன்னிப் பிராந்தியத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை பரந்தளவில் முழுமையாக நாசமாக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையே வாழ்கின்றனர்; அவர்கள் ஒரு தற்காலிக வாழ்க்கையை ஓட்டுவதாக ஒருவரால் குறிப்பிட முடியும். அங்கு நிரந்தர வசிப்பிடம் கிடையாது. முறையான உணவு கிடையாது. சிறுவர்களுக்கு கல்வியும் இல்லாததோடு, இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக எப்பொழுதும் ஒவ்வொருவரும் பாதுகாப்புத் தேடி ஓடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி (PA) அரசாங்கத்தால் 1995ல் இருந்து மிக மோசமாக முன்னெடுக்கப்பட்ட இந்த அழிவுகரமான 18 வருடகால யுத்தத்தின் பெறுபேறாக மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். வன்னியில் இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த அகதிகளையும் நீங்கள் காணலாம். பிரதேசத்தில் உள்ள ஏனையவர்கள், இராணுவம் படை நடவடிக்கைகளை வன்னியை நோக்கி விரிவுபடுத்தியபோது தங்கள் சொத்துக்களையும் ஏனையவைகளையும் இழந்தவர்களாகும். பொலித்தீன் விரிப்புக்களாலும் தென்னை ஓலையினாலும் அமைக்கப்பட்ட 2:2 மீட்டர் கூடாரங்களே அவர்களின் வசிப்பிடங்கள். வன்னியில் -வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இணைந்த- யுத்தத்தால் அழிக்கப்பட்ட வீடுகளையும் ஏனைய கட்டிடங்களின் இடிபாடுகளையும் நீங்கள் காணலாம். வன்னியின் ஒரு பகுதி மாத்திரம் -வவுனியா, மன்னார் மாவட்டங்களின் தென்பகுதி எல்லைக்கு அருகாமையில்- தமிழீழ விடுதலைப் புலிகள் ஓய்ந்திருந்த போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அங்கு தொழிற்சாலைகளோ தொழில்களோ கிடையாது. அரசாங்க முகவர் (GA) அல்லது மாவட்ட செயலாளர் (DS) என அழைக்கப்படும் இருவர் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இருந்து செயற்படுகின்றார்கள். சில பாடசாலைகளிலும் ஆஸ்பத்திரிகளிலும் உள்ள ஊழியர்களுக்கு அரசாங்கம் இன்னமும் சம்பளம் வழங்குகின்றது. சம்பளம் வழங்கவும் ஏனைய விவகாரங்களுக்காகவும் கிளிநொச்சியில் ஒரு வங்கிக் கிளை இயங்கி வருகின்றது. பிரதம நிர்வாக அதிகாரியும் ஏனைய அரச ஊழியர்களும் அனைவரும் விடுதலைப் புலிகளின் கண்காணிப்பின் கீழும் அதன் சுய பாணியிலான அரசாங்க முகவர்களாகவும் இயங்குகின்றார்கள். இந்தத் தொழில்கள் தவிர மக்கள் விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் அல்லது வியாபாரிகளாகவும் சேவை செய்கின்றார்கள். இந்தப் பிரதேச மக்களின் முக்கியமான வாழ்க்கையாக உள்ள சிறிய அளவு பயிர்ச்செய்கை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. பண்ணை செய்கையில் ஈடுபடுபவர்களும் புராதன முறைகளையே பின்பற்றத் தள்ளப்பட்டுள்ளார்கள். பயிர் செய்கைக்காக வயலைத் தயார் செய்வதற்கு அவர்களிடம் எருமைகள் மட்டுமே உள்ளன. பொதுஜன முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்ல தடை விதித்துள்ள பொருட்களின் பட்டியலில் விவசாயத்துக்கான இரசாயன பொருட்கள், பசளைகள் மற்றும் விவசாய உபகரணங்களும் கூட சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள் ரூபா 1200 கொடுத்து 50 கிலோகிராம் அமோனியா பொதியை வாங்க வேண்டும் -வவுனியாவில் 800 ரூபா கொழும்பில் 650 ரூபா. 52 வயதான ஒரு கிளிநொச்சி விவசாயி எம்மிடம் குறிப்பிட்டதாவது: "எங்களுக்கு விவசாயத்துக்கு அவசியமான பொருட்கள் அனைத்தையும் தென்பகுதி அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான களஞ்சியங்களில் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க முடியும். உங்களால் ரூபா 2500 கொடுத்து 50 கிலோ யூரியா -அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவற்றில் ஒன்று- பேக் ஒன்றை வாங்க முடியும். கொழும்பில் அதன் சாதாரண விலை 350 ரூபாவாகும். எங்களால் எப்படி வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியும்." "கடந்த பருவ காலத்தின் போது நெற்பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் அதை விற்பனை செய்வதில் பிரச்சினைக்கு முகம் கொடுத்தனர். அரசியை வடக்குக்கு அனுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சு எமக்கு அனுமதி வழங்குவது கிடையாது. கடைசியாக விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் களஞ்சியத்துக்கு எங்கள் உற்பத்தியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும். எங்களுடைய செலவைக் கூட ஈடுசெய்ய போதவில்லை. விவசாயிகள் பொருட்களை வவுனியாவுக்கு அனுப்பி வைக்க அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிப் பெற்றுக் கொடுத்த போதிலும் விவசாயிகளால் போக்குவரத்து செலவைக் கூட வழங்க முடியவில்லை. போக்குவரத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அதே வேளை 70 கிலோகிராம் பேக் ஒன்றுக்கு 300 ரூபாய் அறவிடுவார்கள். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்யும் ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் ஒரு மூடையை விடுதலைப் புலிகள் வரியாக அறவிடுகின்றனர். யுத்தம் மீனவர் சமுதாயத்தை பாழாக்குகின்றது. பாதுகாப்புப் படையினர் ஆழ்கடல் மீன்பிடியைத் தடை செய்துள்ளனர். மீன் பிடியில் ஈடுபடுபவர்கள் அவசியமான வள்ளங்களோ, உபகரணங்களோ இல்லாமல் ஜீவியம் நடாத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் கட்டு மரங்களை பயன்படுத்துகின்றனர். ஒரு முல்லைத்தீவு மீனவர் எம்மிடம் குறிப்பிட்டதாவது: "நாங்கள் கடலுக்கு செல்ல முடியாதவாறு பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளது. நாங்கள் மீன் பிடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பும்போது அங்கு ஒரு விடுதலைப்புலி ஆள் வரி சேகரிப்பதற்காக நிற்பார். அவர்கள் ஒரு கிலோ மீனுக்கு 10 ரூபா வரி எங்களிடம் அறவிடும் அதே வேளை, எங்களது மீனை வாங்கும் வியாபாரியிடமும் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அறவிடுவார்கள்." "எங்களில் சிலர் தமது மீனை விற்பதற்காக 40 கிலோமீட்டர் தூரம் கிளிநொச்சி நோக்கி சைக்கிளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு ஒரு கிலோ மீனை 3 ரூபாவுக்கு கூட விற்க முடியாமல் போகும்." யுத்தத்தின் காரணமாக பாடசாலை செல்வதைக் கைவிட்ட சில சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாக நாச்சிக் குடாவில் உள்ள ஒரு மீன்வர் குறிப்பிட்டார். அகதிகள் முகம் கொடுக்கும் நிலைமை யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை மிகவும் மோசமானது. கொழும்பு அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்படும் அற்ப உணவுப் பொருள் பங்கீட்டிலேயே அவர்கள் முற்றிலும் தங்கியுள்ளனர். இந்த அகதிகள் எப்போதும் அரைப் பட்டினி கிடக்கிறார்கள். ஆனால் சில மாதங்களுக்கு பொருட்கள் வந்து சேராவிட்டால் அவர்கள் முழு பட்டினிக்குள் தள்ளப்படுவார்கள். வீடுகளையும் வாழ்க்கையையும் இழந்து வன்னியில் உள்ள ஏனைய அகதிகளுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. கிளிநொச்சியில் கிட்டத்தட்ட 50,000 அகதிகளும் வன்னிப் பிரதேசத்தில் 400,000 அகதிகளும் உள்ளனர். ஒருவருக்கு ரூபா 368 (US$4) அடிப்படையில் மாதம் இருமுறை வழங்கப்படும் பங்கீடு மூன்று நாளைக்கு சாதாரண தேவைகளைக் பூர்த்தி செய்துகொள்ளக் கூட போதாது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது கொழும்பில் உள்ள ஒரு சாதாரணத் தொழிலாளியின் சம்பளம் கிட்டத் தட்ட 4,000 ரூபாய்கள். இரண்டு பிள்ளைகளின் தாய் எமக்குக் கூறியதாவது: "அந்தக் கணக்கின்படியும் கூட விடுதலைப் புலிகள் எங்களுக்கு 168 ரூபாய்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். அவர்கள் எங்களைப் பற்றி கவனிப்பதில்லை. நாங்கள் மரத்தடியிலேயே வாழ்கிறோம். ஆனால் விடுதலைப் புலிகள் எம்மைப் பற்றி கவலைப்படுவதில்லை. இருப்பினும் கொழும்பு அரசாங்கம் தடை செய்துயப்பட்டுள்ள பல பொருட்களை விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் கடைகளில் அதிக விலையில் வாங்கலாம். தர்மபுரத்தில் உள்ள ஒரு களஞ்சியத்துக்கு நாங்கள் சென்றோம். 13 ரூபா சவர்க்காரம் ஒன்று 20 ரூபாய். தெற்கில் 110 ரூபாய்க்கு உள்ள 450 கிராம் குழந்தை பால்மா பக்கட் இங்கு 150 ரூபா தொடக்கம் 200 ரூபாவாகும். ஒரு பனடோல் (பரசெடமோல்) வில்லை 15 ரூபா -தெற்கில் சாதாரண விலையை விட 12 மடங்கு அதிகம். தாம் விடுதலைப் புலிகளிடம் இருந்து பொருட்களை கொண்டு வருவதாகவும் அவர்களால் விதிக்கப்பட்ட விலையின் அடிப்படையிலேயே விற்க முடியும் எனவும் ஒரு கடைக்காரர் எம்மிடம் குறிப்பிட்டார். அரசாங்க பங்கீட்டின் ஒரு பாகமாக, சில வேளைகளில் ஒரு குடும்பத்தவர் ஒரு லீட்டர் மண்ணெண்ணையை ரூபா 35.00 க்கு வாங்குவார் -தெற்கில் அதன் விலை 19 ரூபா 40 சதமாகும். பங்கீட்டுக்கு வெளியில் விடுதலைப் புலிகள் 4 லீட்டர்களை எடுக்கும் போது எங்களுக்கு ஒரு லீட்டர் மாத்திரமே கிடைக்கும். புலிகள் தமது களஞ்சியத்தில் ஒரு லிட்டர் மண்ணெண்ணையை 120 ரூபாவுக்கு விற்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த சிறுவர்களில் மிகவும் குறைவானவர்களே பாடசாலைக்கு செல்லக் கூடியவர்களாக உள்ளனர். மேலும் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாக இந்தப் "பாடசாலைகளும்" இடம் மாற்றப்பட்டிருந்தன. சில இடங்களில், மரங்களின் கீழும் தற்காலிகக் கூடாரங்களிலும் மாணவர்கள் பாயில் அமர்ந்திருக்க ஆசிரியர்கள் வகுப்பு நடாத்துவதை நீங்கள் காணலாம். கிளிநொச்சியில் உள்ள பாடசாலை உடைக்கப்பட்டதன் பின்பு, அது 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கராயன் குளத்துக்கு இடம் மாற்றப்பட்டது. அங்கு தென்னை ஓலைகளால் வேயப்பட்ட இரண்டு கூடாரங்கள் உள்ளன. சில வகுப்புகள் வெளியிலேயே நடைபெறுகின்றன. அங்கு சுமார் 700 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்களே உள்ளனர். ஒரு மாணவன் எமக்குக் குறிப்பிட்டதாவது: "நாங்கள் பாயில் உட்கார்ந்த வண்ணமே எமது க.பொ.த. சாதாரண தர பரீட்சையை கடந்த டிசம்பரில் எழுதினோம்." அரசாங்கம் தேவையான அளவு பாடப் புத்தகங்களை விநியோகிக்காததால் மூன்று நான்கு மாணவர்கள் ஒரு புத்தகத்தையே பகிர்ந்து கொள்ளவேண்டும். பிரதான ஆஸ்பத்திரி கிளிநொச்சியில் அமைந்துள்ளபோதும் அங்கு சத்திர சிகிச்சைகளுக்கான வசதிகள் கிடையாது. ஒரு டாக்டர் விளக்கியதாவது: "இந்தப் பிரதேசத்தில் தொற்று நோய்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஏனென்றால் மக்கள் காட்டில் வாழ்வதால் நோயாளிகள் மலேரியா, காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 100 நோயாளர்களுக்கு மேல் இருந்த போதும் எங்களால் 25 பேருக்கு மாத்திரமே சிகிச்சையளிக்க முடியும். அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எங்களுக்கு மருந்துகளை வழங்குவதாகக் கூறிக் கொண்ட போதிலும் ஒரு வருடத்துக்கு இரண்டு முறையே கிடைக்கிறது. அதுவும் போதுமான அளவு அல்ல. விசர் நாய் கடி நோயாளிகள் பெருகிவந்த போதிலும் அதற்கு சிகிச்சை செய்ய எம்மிடம் மருந்து கிடையாது." கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு மேலதிகமாக, மாவட்டத்தில் ஒரே ஒரு வைத்தியசாலையே உள்ளது -42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முழங்காவில். பெருந்தொகையான நோயாளர்களுக்கு சேவை புரியும் 14 தொண்டர் தாதிகளின் உதவியுடன் ஒரே ஒரு டாக்டர் இருப்பதை நாம் கண்டோம். குறைந்த பட்சம் ஐந்து டாக்டர்களாவது அவசியமான போதும் அரசாங்கம் ஒருவருக்கு மாத்திரமே பணம் ஒதுக்கியுள்ளது. "இந்த ஆஸ்பத்திரியில் எமது வியாதிகளுக்கு மருந்து எடுக்க முடியாது. ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருந்தகங்களில் அவசியமான மருந்துகளை வாங்கலாம். ஒரு பரசெடமோல் வில்லை 15 ரூபா. இலங்கையில் இந்தளவு பெரும் விலை கொடுத்து அவற்றை வாங்குவதற்கு காசுக்கு எங்கே போவது? என வரிசையில் நின்றிருந்த ஒரு பெண் எம்மிடம் கூறினார். தமிழீழ விடுதலைப் புலி ஆட்சியாளர் இவ்வாறான மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்போரில் சிலர், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் யாழ்ப்பாணம் சென்ற போதிலும் அங்கு அவர்கள் இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். ஏனையவர்கள் இரகசியமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். நீங்கள் அனுமதியின்றி வெளியேற முயற்சித்து, விடுதலைப் புலிகளிடம் பிடிபட்டால் நீங்கள் அவர்களின் ஜெயிலுக்கு அனுப்பப்படுவீர்கள். வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவது தமது நியாயாதிக்கங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் பிரிவினைவாதிகள் அதை விரும்புவதில்லை. வன்னியில் இருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கு செல்ல வேண்டுமானால் மக்கள் விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெறவேண்டும். நீங்கள் முதலில் 20 ரூபாய் கொடுத்து ஒரு விண்ணப்பப் படிவத்தை பெற்று அதில் தமது சொந்த மற்றும் குடும்ப விபரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் நிரப்ப வேண்டும். சில வாரங்களின் பின்னர் அனுமதி கிடைத்ததும் மேலும் 200 ரூபா செலுத்த வேண்டியதோடு நீங்கள் திரும்பி வருவதற்கு ஆதாரமாக உறவினர் ஒருவரையும் சொத்துக்களையும் பிணையாக வளங்க வேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டு எல்லையைக் கடப்பதற்கு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும். வவுனியாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தம்பனையில் உள்ள முதலாவது இராணுவ சோதனைச் சாவடியில் உட்செல்வதற்கு அவசியமான அனுமதியைப் பெற ஒருவர் நாள் கணக்காக காத்திருக்க வேண்டும். ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கிடைப்பது மிகவும் அபூர்வமாகும். வவுனியாவில் ஒரு நாளைக்குத் தங்குவதென்றாலும் கூட வவுனியா பொலிசில் அனுமதி பெற வேண்டும். விடுதலைப் புலிகளின் அதிகாரத்தில் உள்ள வன்னிக்கும் அரசாங்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையே அதிக வித்தியாசம் கிடையாது. வன்னியில் உள்ள மக்கள் ஜனாதிபதி குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்தையும் இராணுவத்தையும் வெறுக்கின்றனர். ஆனால் இப்போது புதிய காரணி வளர்ச்சி காண்கின்றது. மக்கள் விடுதலைப் புலிகள் மீது வேகமாக நம்பிக்கை இழந்து வரும் அதே வேளை அவர்களது ஒடுக்குமுறை அதிகாரம் மீதான தமது வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் எந்தவொரு படைப்பும் எந்த ஒரு அரசியல் குழுவும் அனுமதிக்கப்படமாட்டாது. கிளிநொச்சியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் 1998ல் நியாயமற்ற முறையில் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு அனைத்துலகப் பிரச்சாரத்தின் பின்னரே விடுதலை செய்யப்பட்டனர். அன்று முதல் சோ.ச.க.வின் பத்திரிகையான தொழிலாளர் பாதை கிளிநொச்சி நூலகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது இளைஞர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைவதில் ஆர்வம் காட்டுவதில்லை. முல்லைத்தீவில் உள்ள ஒரு ஆசிரியர் எம்மிடம் குறிப்பிட்டதாவது: "விடுதலைப் புலிகளின் காரியாளர்கள் பாடசாலைக்கு வந்து, (தனித் தமிழ்) ஈழ அரசின் அவசியத்தைப் பற்றி மாணவர்களுக்கு விரிவுரையாற்றுவதோடு அவர்களை இயக்கத்தில் சேருமாறும் கோருவார்கள். அவர்கள் எங்களிடம் அனுமதி கேட்பதில்லை. நாங்கள் அவர்களை எதிர்த்தால் துரோகிகளாக குற்றம் சாட்டப்படுவோம். ஆனால் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே விடுதலைப் புலிகள் அவர்களை திட்டுவார்கள்: சிங்களவர்கள் எங்களது தாய் நாட்டை அழிக்கையில் 'நீங்கள் பாடசாலை சென்று என்ன செய்யப்போகின்றீர்கள்.' விடுதலைப் புலிகள் மாணவர்களை பலாத்காரமாக திரட்டவும் பயமுறுத்துகிறார்கள்." பாடசாலையில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பும் போது, தங்களுடன் இணையுமாறு விடுதலைப் புலிகள் நெருக்குவார்கள். 12 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் மத்தியில் அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சில பெற்றோர்கள் நிதி உதவியை இழக்க வேண்டிவரும் என்பதால் விடுதலைப் புலிகளை எதிர்க்கத் தயங்குவதாகவும் எம்மிடம் குறிப்பிட்டார்கள். தங்களது மகன்களையும் மகள்களையும் பார்ப்பதற்கு விடுதலைப் புலிகள் தடை விதிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். விடுதலைப் புலிகள் கிராம சேவையாளர்களிடம் உதவி கேட்பார்கள். ஆனால் ஒரு கிராம சேவையாளர் எம்மிடம் குறிப்பிட்டவாறு: "படைக்கு ஆள் திரட்டுவதற்காக அவர்கள் எங்களை வீட்டுக்கு வீடு போகச் சொல்கின்றார்கள். நாங்கள் எப்படி அதைச் செய்ய முடியும். மக்கள் எங்களை அடிப்பார்கள்." அதே போல் சிறுவர்கள் ஆர்வம் காட்டாததோடு படையில் சேர்வதைத் தவிர்ப்பதற்காக இடத்துக்கிடம் நகர்ந்து கொண்டுள்ளார்கள். விடுதலைப் புலிகள் இளம் சிறுமிகளையும் கணக்கில் கொண்டுள்ளார்கள். வாழ்க்கைக்கு வழி தேடிக் கொள்வது கஷ்டமானதாலும் வேறு சில பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பதாலும், சில சிறுமிகள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்கின்றனர். இது ஒரு புதிய நிலைமை. விடுதலைப் புலிகள் சம்பந்தமாக பரந்த அளவிலான தவறான எண்ணம் விரிந்து கொண்டுள்ளது. ஏனென்றால் அவர்கள் வரி அறவிடுகின்றார்கள், பொருட்களை உயர்ந்த விலையில் விற்கின்றனர், முரண்பட்ட கருத்துக்களை அனுமதிக்காததோடு ஏனைய கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர், விடுதலைப் புலிகள் தங்கள் அவசியங்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என மக்கள் உணர்கின்றார்கள். விடுதலைப் புலிகள் தாங்கள் கொழும்பு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதாக இப்போது காட்டிக் கொண்டுள்ளார்கள். மேற்கு நாடுகளின் நெருக்குவாரமே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தமிழர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் கூட விடுதலைப் புலிகளை உடன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஒரு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது. தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் இருந்து விடுபட்டு சமாதானத்தை அனுபவிப்பதே மக்களின் தேவையாகும். ஆனால் அது விடுதலைப் புலிகளின் ஊடாகவோ அல்லது கொழும்பு அரசாங்கத்தின் ஊடாகவோ வந்து சேரும் என அம்மக்களில் பலரும் எதிர்பார்க்கவில்லை. |