World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியாBizarre royal murders plunge Nepal into political turmoil திகிலூட்டும் அரச குடும்ப படுகொலைகள் நேபாளத்தை அரசியல் குழப்பத்துள் மூழ்கடித்துள்ளது By Peter Symonds கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மன்னரும் ராணியும் அரச குடும்பத்தின் கணிசமான எண்ணிக்கையினருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்டமை வறிய இமாலய இராசதானியான நேபாளத்தை அரசியல் குழப்ப நிலைமைக்குள் தள்ளியுள்ளது. படுகொலை சந்தேக நபரான இளவரசர் திபேந்திரா தலைநகர் கத்மண்டுவில் உள்ள இராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டு இருக்கும் வேளையில்- சனிக்கிழமை- மன்னராக முடிசூட்டப்பட்டார். நான்கு நாட்களுள் -மூத்த சகோதரர்- ஒரு மூன்றாவது மன்னர் சிம்மாசனம் ஏற வழிவிட்டு திங்கட்கிழமை காலை அவர் மரணமானார். நடைபெற்ற சம்பவங்களுக்கு பூரண விளக்கம் கேட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியதைத் தொடர்ந்து அரசாங்கம் நேற்று ஊரடங்கு சட்டத்தை இரண்டாவது தடவையாக அமுல் செய்தது. துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால் இம்மரணங்கள் இடம்பெற்றன என்ற நம்ப முடியாத அதிகாரபூர்வமான அறிக்கையை எவரும் நம்பவில்லை. புதிய மன்னர் கயனேந்திராவும் அவரது செல்வாக்கிழந்த மகன் பராசும் சம்பந்தப்பட்ட ஒரு அரச குடும்ப சதி பற்றிய வதந்திகள் பெரும் அளவில் பரவின. திங்கட்கிழமை பொலிசார் நடாத்திய அதிரடி தாக்குதலில் குறைந்த பட்சம் இருவர் கொல்லப்பட்டதோடு 19 பேர் காயமடைந்தனர். இந்த முழு விவகாரங்களும் நேபாளத்தில் மட்டுமன்றி அனைத்துலக ஆளும் வட்டாரங்களிலும் ஒரு விநோதமான பதட்ட நிலையை தூண்டி விட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைந்துள்ளதும் ஏற்கனவே அரசியல் ரீதியில் சிதறுண்டு போன நாடுமான நேபாளத்தில் இது மேலும் பதட்ட நிலையை உருவாக்கும் என அரசாங்கங்கள் கணித்துக் கொண்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மத்திய கத்மண்டுவில் உள்ள அரச மாளிகையில் என்ன நடைபெற்றது என்பது பற்றி போதுமான விளக்கங்கள் இன்னமும் தலைநீட்டுவதாக இல்லை. இந்தச் சம்பவம் பற்றிய முதல் செய்திகள், நேபாளத்தில் அன்றி மறுநாள் அனைத்துலக தகவல் சாதனங்கள் ஊடாகவே வெளிவந்தன. அச்செய்திகள் உள்ளூர் செய்தி வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டதாகவும் பின்னர் ஏனைய தகவல் துறைகளால் வெளியிடப்பட்டதாகவும் உள்ளது. இந்த அறிக்கையின் படி அரச குடும்பம் இரவு உணவுக்கான அரச மாளிகையில் விருந்துபசார மண்டபத்தில் கூடியுள்ளது. முடிக்குரிய இளவரசர் 29 வயதான திபேந்திரா ஒரு பிரபுத்துவ ராண குடும்ப உறுப்பினரும் ஒரு முன்னாள் அமைச்சரின் மகளுமான தேவ்யானி ரணாவை திருமணம் செய்து கொள்வதை தனது பெற்றோர் -குறிப்பாக தனது தாயார்- எதிர்த்ததையிட்டு ஆத்திரமடைந்து இருந்ததாக தெரிகிறது. ராணியின் எதிர்ப்புக்கான காரணங்கள் வேறுபட்ட போதிலும் எதிர்கால மணப்பெண்ணின் இந்திய தொடர்புகளையிட்டு அவர் ஆத்திரம் கொண்டிருந்ததே முக்கியமாக சுட்டிக் காட்டப்படுகின்றது. மணப்பெண்ணின் தாயார் இந்தியராக இருந்ததோடு அவர் பல இந்திய முன்னணி அரசியல்வாதிகளுடன் குடும்ப உறவுகளும் வைத்திருந்தார். ஒன்று அல்லது இரண்டு தன்னியக்க துப்பாக்கிகளுடன் சற்று மது போதையில் அறையில் இருந்து வெளியேறிய முடிக்குரிய இளவரசர் மண்டபத்துக்கு திரும்பியதோடு கதவை சாத்திக் கொண்டு குடும்பத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். சில விளக்கங்களின்படி அவர் கைத்துப்பாக்கியால் அவர்களின் தலையில் சுடுவதன் மூலம் தனது பெற்றோரின் மரணத்தை நிச்சயப்படுத்திக் கொண்டார். துப்பாக்கிப் பிரயோகத்தின் போது அரச குடும்ப ஊழியர்களும் காவலர்களும் அரச மாளிகை ஆசாரங்களைக் கடைப்பிடித்ததோடு "குடும்ப விவகாரங்களில்" தலையிடவில்லை. இந்த வெறியாட்டம் இறுதியில் திபேந்திரா எதிர்கொள்ளப்பட்ட போதே ஒரு முடிவுக்கு வந்தது. திபேந்திரா தன்னை தானே சுட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உணர்விழந்த நிலையில் ஒரு இராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்தவர்களுள் மன்னர் பிரேந்திரா பேர் பேர்க்கிரம் ஷா டேவ் (55 வயது) ராணி ஐஸ்வர்யா அவர்களின் இரண்டு பிள்ளைகளான இளவரசர் நிராஷன் (22 வயது) இளவரசி சுருதி (24 வயது) எல்லோரும் அடங்குவர். மன்னரின் இரண்டு சகோதரிகளான இளவரசி சாந்தி, இளவரசி சாரதா ஷாவும் இவரின் கணவர் கட்கா பேர்க்ரம் ஷா, காலம் சென்ற மன்னரின் ஒரு மைத்துனரான ஜயந்தி ஷாவும் இதில் அடங்குவர். குறைந்த பட்சம் மேலும் மூவர் காயமடைந்தனர். இதில் ஒருவரான பிரேந்திராவின் சகோதரர் டிரேந்திரா ஷா அவரின் காயங்கள் காரணமாக திங்கட்கிழமை காலமானார். துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் மன்னர் மாளிகைக்கு வெளியே கேட்டதோடு சம்பவம் பற்றிய செய்திகள் அனைத்துலக செய்தி ஊடகங்களிலும் பரவியது. சனிக்கிழமை மாலை 1 மணிவரை -15 மணித்தியாலங்கள் வரை- எந்த ஒரு உத்தியோகபூர்வமான அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மன்னரின் ஆலோசனைச் சபையாக விளங்கிய அரச சபையின் (State Council) தலைவரான கெஷார் யுங் ராஜிமாஹி அரச தொலைக் காட்சியிலும் வானொலியிலும் மன்னர் இறந்து விட்டதாகவும் "முடிக்குரிய வாரிசு சம்பந்தமாக வழக்கில் உள்ள சட்டம் மரபுகளுக்கு இணங்க" முடிக்குரிய இளவரசரால் வெற்றிடம் பதிலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். தலைவர் தனது பிரகடனத்தில் மேலும் கூறியதாவது: "புதிய மன்னர் தமது கடமைகளை நிறைவேற்ற உடல் ரீதியில் முடியாதவராக இருப்பதாகவும் கத்மண்டு இராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் சிறிய தந்தையான இளவரசர் கயனேந்திரா முடிக்குரியவராக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக" அறிவித்தார். மரணங்கள் ஒரு கொலை அல்லவெனவும் மகிழ்ச்சிகரமான குடும்ப ஒன்றுகூடலில் ஒரு "தன்னியக்க ஆயுதம் திடீரென வெடித்ததால்" ஏற்பட்ட விளைவு எனவும் காட்டும் நம்ப முடியாத பணியை இட்டு நிரப்பும் வேலை கயனேந்திராவுக்கு வழங்கப்பட்டது. இந்த விளக்கம் கணிசமான அளவு ஆத்திரத்தை தூண்டி விட்டது. ஏனெனில் இது அந்தளவுக்கு விநோதமானதாக விளங்கியது. அத்தோடு கயனேந்திராவோ அல்லது அவரது மகன் இளவரசர் பராரூசோ செல்வாக்கு இழந்தவர்களாகவும் விளங்கினர். 1990ல் மன்னர் பிரேந்திராவின் வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியை ஏற்படுத்தும் தீர்மானத்தை எதிர்த்த பதில் ஆளுனர் (Regent) கொடுங்கோலனாக பிரபல்யம் அடைந்து போயிருந்தார். மூன்று தசாப்த காலங்களில் ஒரு தேசிய தேர்தலை நடாத்தும் அனுமதி வழங்கப்பட்டது. 27 வயதான பராஸ் ஒரு தந்திரப் பேர்வழியாகவும் குறைந்த பட்சம் இரண்டு வாகன விபத்து கொலைகளில் சம்பந்தப்பட்டவராகவும் பேர்போனவர். சமீபத்தில் -ஆகஸ்டில்- ஒரு பிரபல நேபால் பாடகரை வாகனத்தினால் மோதிக் கொன்றார். 5 இலட்சம் மக்களின் கையொப்பங்களுடன் கூடிய ஒரு பெட்டிசம் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கையளிக்கப்பட்ட போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு தெளிவான உத்தியோகபூர்வ விளக்கமும் இல்லாத நிலையில் மாளிகை சூழ்ச்சியை பற்றிய வதந்திகள் கத்மண்டுவில் பரவின. கயனேந்திரா தொடக்கம் நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவரும் பிரதமருமான கிரிஜா பிரஷாத் கொயிராளை வரை சகலரும் இக்கொலைக்குப் பொறுப்பாளிகளாக குற்றம் சாட்டப்பட்டனர். கொயிராளவும் ஒரு செல்வாக்கிழந்த பேர்வழி. 1996ல் இருந்து பொலிசையும் இராணுவத்தையும் எதிர்த்து போராடி வரும் மாவோ வாத கெரில்லா குழுவின் ஒரு இரகசிய அங்கத்தவராக முடிக்குரிய இளவரசரின் பெயரும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்தக் கதைகளில் ஏதேனும் உண்மையின் மூலகங்கள் உண்டா என இக்கட்டத்தில் தீர்மானம் செய்வது கஷ்டம். புதிய தகவல்கள் எதுவும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இல்லை. குறிப்பாக அரச மண்டபத்தில் அச்சமயத்தில் இருந்தவர்கள் பகிரங்க அறிக்கை வடிவில் வெளியிட்ட எதுவும் வெளிச்சம் பாய்ச்சுவதாக இல்லை. இந்த வதந்திகள் சில ஊகங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தன. உதாரணமாக அவர் இந்த சோகமயமான இராப்போசன விருந்தில் இருந்து நழுவிக்கொண்டிருந்தமை கயனேந்திராவின் "குற்றத்துக்கு" பலம் சேர்க்கிறது. மாவோவாத கெரில்லா குழு இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது உத்தியோகபூர்வமான முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிரதமர் கொயிரால விடுத்த அறிவித்தலில் இச்சம்பவங்கள் பற்றி ஒரு உத்தியோகபூர்வமான விசாரணை நடாத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் அத்தகைய ஒரு விசாரணை தோற்றுவிக்கக் கூடிய அரசியலமைப்புப் பிரச்சினைகள் காரணமாக அது ஒரு துணிச்சலான சிபார்சாக கணிக்கப்படுகின்றது. இந்நாடு ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாக -பிரித்தானியாவைப் போன்ற- வருணிக்கப்படுவது வழக்கம். ஆனால் மன்னராட்சி முறையானது சட்டத்துக்கு மேலாக மன்னரைக் கொள்ளும் ஒரு அரசியலமைப்புச் சட்ட சரத்தின் நலன்கள் உட்பட கணிசமான அதிகாரங்களை தன்வசம் கொண்டுள்ளது. அவரின் எந்த ஒரு நடவடிக்கையையும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது. அத்தோடு அரச குடும்ப விவகாரங்களை பாராளுமன்றம் விவாதிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. நினைவற்ற நிலையில் உள்ள புதிய மன்னர் திபேந்திரா இராணுவ ஆஸ்பத்திரியில் உயிர் நீடித்திருக்கச் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு அரசியலமைப்பு பிரச்சினையை தோற்றுவித்துள்ளார். ஒரு திறந்ததும் மூடியதுமான வழக்கு நிரூபிக்கப்பட்டாலும் கூட திபேந்திரா மீது கொலைக் குற்றத்தின் பேரில் வழக்குத்தாக்கல் செய்ய முடியாது. திபேந்திரா மரணமைடைந்து அவரது இடத்துக்கு அவரின் சிறிய தகப்பனாரான கயனேந்திரா நியமிக்கப்பட்டதோடு இந்ச சட்ட புதிர் திங்கட்கிழமை காலை இலகுவாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைச் செய்திகளின்படி புதிய மன்னர் குதிரை வண்டியில் இராணுவ பாண்டு வாத்தியத்துடனும் குதிரைப் படையுடனும் வீதி வலம் வருவதைக் காண கூடிய ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வம் அற்றவர்களாக காணப்பட்டனர். பின்னர் திங்கட்கிழமை வீதிகளில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் "திபேந்திரா அப்பாவி" "நிஜ கொலைகாரர்களுக்கு தண்டனை கொடு" "எமக்கு வேண்டாம் கயனேந்திரா" என்ற கோஷங்களை கோஷித்தனர். பொலிசாரும் இராணுவத்தினரும் குண்டாந்தடிகளையும் கண்ணீர்ப் புகையையும் பாவித்ததோடு ஆர்ப்பாட்டத்தை உடைக்க எச்சரிக்கை குண்டுகளையும் வெடிக்க வைத்தனர். நள்ளிரவு ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தோடு கண்ட இடத்தில் சுடும் உத்தரவையும் பிறப்பித்தனர். இது நேற்று நண்பகலில் இருந்து புதுப்பிக்கப்பட்டது. திங்கள் இரவு நிகழ்த்திய உரையில் கயனேந்திரா சந்தேகத்துக்கு இடமற்ற விதத்தில் கணிசமான அளவு நெருக்குவாரத்துக்கு உள்ளாகியதோடு தேசிய ஐக்கியத்துக்கும் அழைப்பு விடுத்தார். இந்த மரணங்களையிட்டு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரும் பாராளுமன்ற சபாநாயகரும் எதிர்க் கட்சித் தலைவர் மாதவ் குமார் நேபாலும் ஒரு உத்தியோகபூர்வமான விசாரணையை நடாத்துவார் எனவும் அறிவித்தார். எவ்வாறெனினும் எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் (UML) அங்கத்தவரும் இதில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்ததை தொடர்ந்து விசாரணையினால் ஏற்படக் கூடிய நம்பிக்கை விரைவில் மங்கிப் போயிற்று. வரலாற்று ரீதியில் காலத்துக்கு ஒவ்வாதது இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த விசித்திரமான நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களின் உளவியல் ஊக்கிகளை விளக்க முயற்சிப்பது அல்ல. மொத்தத்தில் முழு நாடும் பொருளாதார பின்னடைவினாலும் வறுமையினாலும் நாசம் கண்டு போகையில் அரச குடும்ப அங்கத்தவர்கள் நேபாள மக்களில் பெரும்பான்மையினர் முகம் கொடுத்துள்ள கசப்பான சமூக யதார்த்தங்களில் இருந்து இழுத்து மூடப்பட்ட ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர் எனக் கூறுவது மட்டும் போதுமானது. அத்தகைய ஒரு சூழ்நிலையானது அதற்கேயுரிய விசித்திரமான பதட்டங்களை சந்தேகத்துக்கு இடமற்ற விதத்தில் சிருஷ்டிக்கின்றது. ஒருவர் அங்ஙனம் அறியாது போனால் இதில் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் -கோர்கி (Corgeis) நாயை ஊட்டி வளர்க்கும், வாட்டார் கலரினால் சித்திரம் தீட்டும், பரசூட்டில் இறங்கும் மன்னர்; செல்லம் கொடுத்து வளர்த்து, ஈடன் (Eton) கல்லூரியில் கல்வி கற்று கவர்ச்சியான மனைவியின் பின்னால் அலையும் மகன்; எல்லா விதத்திலும் திட்டமிடும் ராணி இந்து பாரம்பரியத்தில் நின்று முடிக்குரிய இளவரசருக்கு பேசி செய்யப்பட்ட ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்தல் ஆகியன- ஒரு நூற்றாண்டுக்கு அல்லது அதற்கும் முன்னதாக வாழ்க்கைச் சம்பாத்தியத்தின் பண்புகள் போல் தோன்றும். பூகோளத்தின் இப்பிராந்தியத்தில் முதலாளித்துவத்தின் அரசியல் அவசியங்களுக்காக இது இல்லாது போனால் இந்த நூதனமான ஜாதி நீண்ட காலத்துக்கும் முன்னரே எந்த ஒரு நியாயாதிக்கத்தையும் இழந்து மறைந்து போய் இருக்கும். அரச குடும்பம் தொடர்ந்தும் நேபாளத்தில் இருந்து வருவதோடு அது கணிசமான அளவு அதிகாரத்தையும் கொண்டுள்ளது. அனைத்துலக பிரதிபலிப்புகள் நடுக்கமூட்டுவதாக உள்ளது. அரச குடும்ப கொலைகளின் ஈடாட்டம் அளிக்கும் தாக்கங்களின் பேரில் அச்சத்தை ஊட்டுகிறது. உதாரணமாக அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் அலக்சாண்டர் டவுணர் வார இறுதியில் ஒரு அசாதாரணமான அறிக்கையை வெளியிட்டார். மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விவரங்களை தமது அரசாங்கம் "மதிப்பதாகவும்" குறிப்பிட்டது. "இவை எல்லாம் நேபாளத்தின் ஸ்திரப்பாட்டுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களையிட்டு" கவலை தெரிவித்தது. அவுஸ்திரேலியா போலல்லாது அமெரிக்க நிர்வாகம் "துப்பாக்கி சடுதியாக வெடித்தது" என்ற கோட்பாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அது நாட்டின் ஸ்திரப்பாட்டின் பேரிலான தனது கவலையை வெளியிட்டது. பீபீசி வெப் தளத்தில் வெளியான ஒரு கட்டுரை ஒரு பெரிதும் சாதகமான குறிப்பை வெளியிட்டது. புதிய மன்னர் கயனேந்திரா "பொது மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஒரு பெரும் கஷ்டத்தை" முகம் கொடுத்த போதிலும் "ஒரு பாதுகாப்பான சோடி கரங்களாக கருதப்பட்டவர்" என வாசகர்கள் அங்கீகரிக்கச் செய்ய முயல்கிறார். பீ.பீ.சி.யின் படி அப்பதவிக்கான கயனேந்திராவின் முக்கிய தகுதிகள், பாதுகாப்பு வேலையிலான அவரின் ஈடுபாடும் நேபாள உல்லாசப் பயணத்தை அபிவிருத்தி செய்வதில் அவரின் பங்குமேயாகும். கத்மண்டுவில் உள்ள பல ஹோட்டல்களின் சொந்தக்காரராக விளங்குவதோடு அவர் தனிப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட நலன்களை கொண்டுள்ளார். அவரது ஏனைய வர்த்தகங்கள் கிழக்கு நேபாளத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தையும் ஒரு சிகரட் பக்டரியையும் உள்ளடக்குகின்றது. அனைத்துலகத் தொடர்பு சாதனங்கள் கயனேந்திராவின் குணாதிசயங்கள் பற்றி ஒரு சில மறைமுகமான தாக்குதல்களைத் தொடுத்துள்ள போதிலும் இறந்த மன்னரைப் பற்றிய இவற்றின் விவரங்கள் முகத்துதி செய்வதாகவும் விளங்கியது. பல செய்திகள் பிரேந்திரா "மக்களின் பெருவிருப்புக்கு உரியவராகவும் இந்து தெய்வமான விஷ்ணுவின் அவதாரமாகவும் கணிக்கப்பட்டவர்" என வருணித்தன. இந்திய பத்திரிகையான இந்துவில் வெளியான ஆசிரியத் தலையங்கம் இன்னும் பெரிதும் ஊதாரித் தனமானது. அது கூறியதாவது: "உண்மையில் படுகொலை செய்யப்பட்ட மன்னர் சாதாரண நேபாள பிரஜைகளிடையே பெருமளவிலான அங்கீகாரத்தைக் கொண்டிருந்தார். அவரது நீண்ட ஆட்சியின் விசித்திரமான உச்சப் புள்ளி 1990ல் நேபாளத்தை ஒரு அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி முறையைக் கொண்ட ஜனநாயக நாடாக மாற்ற அவர் ஆற்றிய மக்கள்-நட்புறவு பாத்திரமாகும்." இந்த ஆசிரியத் தலையங்கம் வடக்குப்புற அயல் நாட்டில் இந்தியாவின் மூலோபாய நலன்கள் பற்றி குறிப்பிட்ட போது இந்த புகழ்ச்சிக்கான காரணங்கள் தெளிவாகியது. கத்மண்டு, புதுடில்லி, பீகிங் சம்பந்தமான தமது வெளிநாட்டு கொள்கைகளை சமப்படுத்துவதில் பெரிதும் அக்கறை காட்டுகின்றது. நேபாளத்தின் உள்வாரி நிகழ்ச்சி நிரல்கள் அதனது பெரும் அயலவர்களால் ஏற்படக் கூடிய பாதுகாப்பு பிரச்சினைகளை தவிர்த்துக் கொண்டவை அல்ல." கடந்த காலத்தில் இந்தியா நேபாளத்திலான சீன செல்வாக்கையிட்டு கவலை தெரிவித்து வந்துள்ளது. பீகிங் மாவோவாத கெரில்லாக்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி வந்துள்ளது. சீனா அதன் புறத்தில் நேபாளத்தில் வசித்து வரும் 30000 தீபெத்திய புலம் பெயர்ந்த மக்கள் தீபெத் மீதான தனது பிடியை அரசியல் ரீதியில் அச்சுறுத்தும் என எண்ணியது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சமப்படுத்தும் நேபாளத்தின் நடவடிக்கையானது எப்போதும் நிச்சயமற்றதாக விளங்கியது. இந்து பத்திரிகை அதனது ஆய்வில் நேர்மையானதாக விளங்கியிருக்குமானல் 1990ல் ஒரு புதிய அரசியலமைப்பை பிரகடனம் செய்யும் பிரேந்திராவின் தீர்மானம் ஒரு தருமசிந்தை படைத்த மன்னனின் நடவடிக்கை அல்ல; ஆனால் அவரின் ஆட்சிக்கு எதிரான பரந்த அளவிலான எதிர்ப்புக்களினால் அவர் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 500க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு புறத்தில் 1989 ஆண்டின் கடைப் பகுதியில் நேபாளத்தின் சீன ஆதரவு நடவடிக்கைகளாக தோன்றியவற்றுக்கு எதிராக ஒரு வர்த்தகத் தடையை திணிக்க இந்திய அரசாங்கம் திணித்த தீர்மானத்தினால் உருவான மோசமான சமூக, அரசியல் நெருக்கடியின் பெறுபேறாக ஏற்பட்டவையாகும். இந்நடவடிக்கை விரைவில் எரிபொருள் உப்பு சமையல் எண்ணெய் மற்றும் அடிப்படை பொருட்களில் கட்டுப்பாட்டை உண்டுபண்ணியது. இது நேபாள உல்லாசப் பயணக் கைத்தொழிலில் வீழ்ச்சியை உண்டுபண்ணியதோடு சமூக பதட்ட நிலையையும் உக்கிரம் காணச் செய்தது. 1990 அரசியலமைப்பு எந்த விதத்திலும் ஜனநாயகத்தின் ஒரு மாதிரியாக இருக்கவில்லை. மன்னர் சட்டத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் மேலாக வைக்கப்பட்டார். மன்னரின் வருமானமும் சொத்துக்களும் வருமான வரிக்கு அப்பாற்பட்டதாகவும் தீண்ட முடியாததாகவும் விளங்கியது. அரசியலமைப்புச் சட்டம் மன்னர் அரச பீடம் ஏறுவது சம்பந்தமாக சட்டம் இயற்றுவது, சட்டத்தை திருத்துவது, சட்டத்தை நீக்குவது உட்பட ஒரு தொகை ஏகபோக அதிகாரங்களை உள்ளடக்கி இருந்தது. அத்தோடு அவர் யுத்தம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுத கிளர்ச்சி அல்லது தீவிரமான பொருளாதார அவசரகால நிலையில் பரந்த அவசரகால அதிகாரங்களை பிரயோகிக்கும் உரிமையை கொண்டிருந்தார். அவசரகால நிலைப் பிரகடனம் ஒன்றில் பாராளுமன்றத்தின் கீழ் சபையால் அல்லது அது இடம்பெறாத போது மேற் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே ஒரே பாதுகாப்பாகும். ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத்துடன் ஆட்சி செய்யும் பெரிதும் விருப்புக்குரிய ஒரு மன்னர் என தொடர்புச் சாதனங்கள் தீட்டிய சித்திரத்துக்கு முரணாக ஜனநாயக உரிமைகளின்மையும் பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் இடையேயான பெரு வளைகுடாவும் அமைதியின்மைக்கான முக்கிய மூலமாக விளங்கி வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக ஒரு மாஓவாத கெரில்லா ஆயுதக் கிளர்ச்சி குழு நாட்டின் மேற்கு பாகத்தில் செல்வாக்கு பெற்றது. மோதுதல்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 30க்கும் அதிகமான மாவட்டங்களுக்கு பரவியதைத் தொடர்ந்து மரணங்களின் எண்ணிக்கை 1600க்கும் மேற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. ஏப்பிரல் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் கெரில்லாக்கள் ஒரு மாவட்ட பொலிஸ் தகவல் நிலையத்தை கைப்பற்றியதோடு 29 பொலிசார் உட்பட 47 மக்கள் கொல்லப்பட்டனர். கெரில்லாக்கள் தமது அணிக்கு ஆட்திரட்டும் சக்தியை விளக்குவது கஷ்டமானது அல்ல. வறிய இந்தியத் துணைக் கண்டத்தில் நேபாளம் ஒரு ஏழை நாடாகும். வருடாந்த தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 210 டாலர்களாகும். இதனது 22 மில்லியன் மக்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் விவசாயத்தின் மூலமே வாழ்க்கையை கொண்டு நடாத்துகின்றனர். வெளிநாட்டுச் செலாவணியின் முக்கிய மூலகமாக உல்லாசப் பயணமும், கம்பளம், ஆடை ஏற்றுமதிகளும் உள்ளன. நாட்டின் அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்தில் பாதி வெளிநாட்டு உதவி மூலம் கிடைக்கிறது. கைத்தொழில் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் என கூறிக் கொள்பவற்றின் கூட்டரசாங்கம் உட்பட கடந்த ஒரு தசாப்தமாக ஆட்சி நடாத்திய அரசாங்கங்கள் நாட்டின் உயர்மட்ட வேலையின்மை, வறுமையினுள் எந்த ஒரு கணிசமான ஊடுருவலையும் நடாத்த தவறிவிட்டன. உண்மையில் 1991ல் இருந்து நாடு பொருளாதாரத்தை வெளிநாட்டு மூலதனத்துக்கு திறந்து விட முயற்சித்தது. முன்னைய அரச நிறுவனங்களை விற்றுத் தள்ளியது. ஏற்கனவே ஆழம் கண்டு போயிருந்த சமூகப் பிரச்சினைகளை மோசமடையச் செய்தது. தூரக் கிராமங்களில் வீதிகள், ஆரம்பக் கல்வி, சுகாதார வசதிகள் கூட கிடையாது. படிப்பறிவின்மை இன்னமும் பரந்து போய் உள்ளது. 15 வயதுக்கும் மேற்பட்டவர்களிடையே இது 72 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கை காலம் ஆண்களிடையே 58.47 வருடங்களாகவும் பெண்களிடையே 58.36 ஆண்டுகளாகவும் உள்ளது. இந்த நிலைமைகளில் அரசாங்கங்கள் படுமோசமான பொலிஸ் அடக்குமுறைகளை மாஓவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மட்டுமன்றி எந்த வடிவிலான எதிர்ப்புக்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிராக கையாண்டனர். கடந்த ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட நேபாளம் பற்றிய அறிக்கையில் மனித உரிமைகளின் நிலைமையையிட்டு பின்வருமாறு எச்சரிக்கை செய்தது: "அரசாங்கம் பொதுவாக பிரஜைகளின் மனித உரிமைகளை பல துறைகளில் மதித்துள்ளது. எவ்வாறெனினும் பிரச்சினைகள் இருந்து கொண்டுள்ளன. பொலிசார் பல தடவைகளில் உயிராபத்தான வன்முறையை கையாண்டனர். ஒருவர் சித்திரவதை காரணமாக சிறைக் காவலில் மரணமானார். பொலிஸ் கைதிகளை தொடர்ந்தும் அவமானம் செய்கிறது. பொலிசார் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற சித்திரவதையை தண்டனையாகப் பயன்படுத்தியுள்ளது. பொலிசார் மாஓவாதிகளுடன் தொடர்பு கொண்ட புதினபத்திரிகை சந்தேக நபர்கள் மீது பாய்ந்து விழுகிறது. அரசாங்கம் பொலிஸ் காட்டுமிராண்டித் தனங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறைவு. அப்படி சட்டங்களை மீறும் பொலிஸ் அதிகாரிகளை தண்டிப்பது கிடையாது. "சிறைச்சாலை நிலைமைகள் மோசமாக உள்ளது. அதிகாரிகள் நினைத்த மாத்திரத்தில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கின்றனர். வழக்கு விசாரணைக்கு முன்னைய நீண்ட தடுப்புக் காவல், அரசியல் நெருக்குவாரங்களுக்கும் ஊழல்களுக்கும் நீதித்துறை கீழ்படிந்து போதல், நீதி விசாரணைக்கு முன்னைய நீண்ட தாமதம் என்பன பிரச்சினைகளாக இருந்து கொண்டுள்ளன. அரசாங்கம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அரசாங்கம் மதச் சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை திணிக்கிறது. பெண்களும் வலது குறைந்தோரும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் பரந்த அளவிலான பாகுபாடுகளுக்கு உள்ளாகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறையும் பெண் கடத்தலும் சிறுவர் விபசாரமும் கட்டாய ஊழியமும் சிறுவர் ஊழியமும் பெரும் பிரச்சினைகளாக இருந்து கொண்டுள்ளன. கட்டாய சிறுவர் உழைப்பு பற்றிய சம்பவங்களும் வெளிவந்துள்ளன. "1996ல் பாராளுமன்றம் மனித உரிமை மீறல்களை பற்றி விசாரணை செய்யும் அதிகாரத்துடன் கொண்ட ஒரு நிலையான மனித உரிமைகள் ஆணைக்குழுவை நிறுவும் ஒரு மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றியது. எவ்வாறெனினும் ஆணைக்குழு இன்னமும் ஸ்தாபிதம் செய்யப்படவில்லை." சதி வரலாறு 1990ல் இருந்து மன்னர் நேபாளத்தின் அரசியல், சமூக பிரச்சினைகளுக்கான பொறுப்பை அரசாங்கத்தின் மீது கட்டியடித்துவிட முயற்சித்து வந்தார் என்பதில் சந்தேகம் கிடையாது. எவ்வாறெனினும் இன்றைய நிலைமை, முன்னைய காலப் பகுதியிலான மன்னர் ஆட்சி முறையின் வரலாற்றில் நீண்டதும் அருவருக்கத்தக்கதுமான நேரடி விளைவாகும். ஷா குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டதும் நேபாளத்திலுமான மன்னராட்சி ஒப்பீட்டளவில் ஒரு சமீபகால தோற்றப்பாடாகும். 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஒரு இந்து இராஜ்யத் பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட கூர்க்கா பரம்பரை முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களால் இந்தியாவில் இருந்து கலைக்கப்பட்டதாகும். இவர்கள் ஒரு சிறிய மலைநாட்டு அரசில் ஆட்சி புரிந்தனர். இது கிட்டத்தட்ட நேபாளத்தின் தற்போதைய 75 மாவட்டங்களின் விஸ்தீரணத்துக்கு சமமானது. பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பனியுடனான (British East India company) தனது தொடர்புகள் மூலம் பெற்றுக் கொண்ட முன்னேற்றமான துப்பாக்கிகளையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி கூர்க்கா ஆட்சியாளர் பிரித்வீ நாராயண் ஷா தனது இராணுவத்தை மீளமைத்ததோடு 1769ல் இன்றைய நேபாளத்தின் பெரும்பகுதியை கைப்பற்றுவதில் வெற்றி கண்டனர். எவ்வாறெனினும் இந்த நிலைமையில் நேபாளம் மீதான கூர்க்காக்களின் பிடி தொடர்ந்தும் மென்மையானதாகவே விளங்கியது. மன்னர்கள் பெரும் வல்லரசுகளால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர்- -முதலில் 18ம் நூற்றாண்டில் சீனாவிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பனியின் இராணுவத்தினாலும் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர்- சலுகைகளை வழங்கும்படி நெருக்கப்பட்டனர். உள்வாரியாக இது அடிக்கடி குழு மோதுதல்களாலும் அரச குடும்ப ஆட்சிக்கான போராட்டத்தினாலும் பாதிக்கப்பட்டது. இது 1846ம் ஆண்டில் ஒரு நாள் இரவு உச்சக் கட்டத்தை அடைந்தது. கொட் படுகொலைகள் (Kot Massacre) எனப் பேர் பெற்ற ஒரு அரச குடும்ப கூட்டம் ஒரு புகழ் பெற்ற அரச வமிசத்தவர் இரத்தம் தோய்ந்த சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை கலந்துரையாடக் கூட்டப்பட்டது. இதில் டசின் கணக்கான நேபாள பிரபுக்கள் ஒன்றில் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். இந்தப் படுகொலையினால் பெரும் நன்மை கண்டவர் பிரதமர் ஜாங் பகதூர். இவர் மறுநாள் ஒரு துடைத்துக் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால் இவரது பல பிரபுத்துவ போட்டியாளர்கள் கொல்லப்பட்டதோடு 6000 மக்களை இந்தியாவுக்கு தப்பியோடச் செய்தது. ஜாங் பகதூர் -இவர் பின்னர் றனா என்ற பட்டத்தைப் பெற்றதோடு பிரதமர் மரபுரிமையையும் ஸ்தாபித்துக் கொண்டார். இது அரசுடமையை அடியோடு வீட்டுக் காவலில் வைத்ததோடு, ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலம் நேபாளத்திலும் மேலாதிக்கம் செலுத்தியது. றனா பிரபுத்துவம் நாட்டின் ஈடாட்டம் கண்ட அரசியல் காலநிலையை தொடர்ந்தும் பராமரிக்க முடிந்ததற்குக் காரணம் அது பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளே. 1857ல் ஜாங் பகதூர் முற்றுகையிடப்பட்ட பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பனி (BEIC) படைகள் பரந்த அளவிலான இந்திய படைக் கலகத்தை அடக்குவதற்கு பெரிதும் அவசியப்பட்ட இராணுவ உதவியை வழங்கினார். இந்த கலகத்தின் பின்னர் பிரித்தானியா ஜாங் பகதூருக்கு ஒரு பெருமளவு நிலத்தை நன்கொடையாக வழங்கியதோடு நேபாள அரச குடும்பத்தை ஒரு விசுவாசமான இராணுவக் கூட்டாகவும் பிரித்தானிய இராணுவத்துக்கு ஆட்திரட்டுவதற்கான ஒரு மூலமாகவும் கொண்டிருந்தது. றணாஸ் நேபாளத்தின் மீது கொண்டிருந்த பிடியை இந்தியத் துணைக் கண்டம் பூராவும் தேசிய இயக்கம் உண்டுபண்ணிய தாக்கத்தின் கீழே மட்டுமே தழுவத் தொடங்கியது. 1930பதுகளில் இந்தியாவில் இருந்து வந்த நேபாளக்காரர்களால் ஒரு தொகை முதலாளித்துவ அரசியல் கட்சிகள் அமைக்கப்பட்டன. அவை றணாஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும்படி கோரியதோடு ஒரு வரையறுக்கப்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்களையும் வேண்டி நின்றன. இறுதியில் நேபாள தேசிய காங்கிரஸ் எனப்பட்ட இந்த நாடுகடத்தப்பட்ட நேபாளிகள் றணா பிரபுத்துவத்தின் கீழ்த் தட்டினரோடும் இராணுவத்தோடும் 1950ன் கடைப்பகுதியில் மாளிகையில் இருந்து தப்பியோடிய திரிபுவன் பிர் பிக்ராம் ஷாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். 1951ம் ஆண்டின் முற்பகுதியில் றணாஸ் இறுதியாக இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்ட போது நேபாள காங்கிரஸ் கட்சியினால் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டுக்களின் பெறுபேறாக கணிசமான அளவு அதிகாரங்களைக் கொண்ட அரசியல் சக்தியாக மன்னர் அரசின் தலைவராக மீளஸ்தாபிதம் செய்யப்பட்டார். அவரும் 1955ல் மன்னனான அவரது மகன் மகேந்திராவும் அரசியலமைப்பை வழங்குவதையும் தேர்தல்களை நடாத்துவதையும் நிறுத்தினர். நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர்களால் பிரேரிக்கபட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கும் குறுக்கே நின்று கொண்டிருந்தனர். 1959ல் அரசியலமைப்புச் சட்டம் இறுதியாக அறிவிக்கப்பட்ட போது இது ஒரு வெறும் கண்துடைப்பாகவே இருந்தது. மேற்சபை அரச குடும்ப அங்கத்தவர்களின் மேலாதிக்கத்தை கொண்டிருந்தது. மன்னர் பிரதமரை கலந்தாலோசிக்காது செயல்படும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டார். இராணுவத்தையும் வெளிநாட்டுக் கொள்கையையும் கட்டுப்படுத்தினார். அமைச்சரவை உறுப்பினர்களை வெளியேற்ற அதிகாரம் இருந்ததோடு அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யவும் முடிந்தது. ஜனநாயக வண்டி ஓட்டமும் ஒரு ஆண்டுக்கு சற்று மேலாக நின்று பிடித்தது. 1960 டிசம்பரில் மன்னர் எச்சரிக்கை செய்யாமலும் இராணுவத்தின் ஆதரவுடனும் ஒரு அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. அரசாங்கத்தை தள்ளுபடி செய்ததோடு அதன் தலைவர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் பராமரிக்கத் தவறி விட்டதாகக் கூறி அவர்களை கைது செய்தது. மூன்று தசாப்தங்களுக்கு மன்னர் மகேந்திராவும் 1972ன் பின்னர் அவரின் மகன் -சமீபத்தில் மரணமான பிரேந்திராவும் உலகில் எஞ்சியுள்ள ஒரு சில பூரண மன்னராட்சியில் ஒன்றை பராமரித்தனர். உள்ளூராட்சி சபைகளுக்கான கட்சிகளற்ற தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நான்கு கட்ட பஞ்சாயத்து முறை மாவட்டத்துக்கும் பிராந்தியத்துக்கும் தேசிய சபைகளுக்குமான அங்கத்தவர்களை நியமித்தது. இது மட்டுமே ஜனநாயக உணர்வுகளுக்கு வழங்கப்பட்டும் ஒரே சலுகையாகும். தேசிய பஞ்சாயத்து சபைகளுக்கு மன்னரை விமர்சனம் செய்யும் உரிமை இல்லாத போதிலும் ஒரு சுயாதீனமான தீர்மானத்தை எடுக்க முடியும். நேபாளக் காங்கிரசும் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த அரசியல் முறைக்கு தம்மை சீர்செய்து கொண்டன. அத்தகைய ஒரு வரலாற்று ரீதியில் காலத்திற்கு ஒவ்வாத ஒன்று பல தசாப்தங்களுக்கு தொடர்ந்து இருந்துவ வருவதானது வெறுமனே பல்வேறு நேபாள அரசியல் கட்சிகளது சந்தர்ப்பவாதத்தினது பெறுபேறு அல்ல. அமெரிக்காவும் மற்றும் பெரும் வல்லரசுகளும் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் எதிரான நடவடிக்கைகளின் பேரில் நேபாள மன்னருடன் நெருக்கமான உறவுகளை பெற்றுக் கொண்டிருந்தனர். பூகோளத்தின் மூலோபாய முக்கியத்துவமான பிராந்தியத்தில் இந்த உறவை வைத்துக் கொண்டிருந்தனர். இந்திய அரசாங்கம் குறிப்பாக 1962 இந்திய-சீன எல்லை யுத்தத்தின் போது மன்னருடனான உறவுகளை பலப்படுத்திக் கொண்டது. புதுடில்லி இந்தியாவில் இருந்து இயங்கி வந்த நேபாள எதிர்க்கட்சி குழுக்களுக்கான தனது ஆதரவை இரத்துச் செய்தது. அத்தோடு நேபாளத்துக்கு பல சலுகைகளை வழங்கும் வர்த்தக, இராணுவ உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் ஒரு தடவை நேபாள முடியாட்சியின் திகிலூட்டும் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எவ்வாறெனினும் இதன் நிலைப்பாடு அப்படி ஒன்றும் புதுமையானது அல்ல. 1950பதுகளின் ஷா முடியாட்சியின் விடயத்தில் போன்று வரலாற்று நினைவுச் சின்னத்தின் ஒரு தீவிரமான அங்கமாகும். 20பதாம் நூற்றாண்டில் மறக்கப்பட்டு போனவற்றில் இருந்து உயிர்த்தெழச் செய்யப்பட்டு ஆசியாவிலும் வேறு இடங்களிலும் முதலாளித்துவ ஆட்சிக்கான அரசியல் ஆதரவுக்கான தீர்க்கமான அம்சமாகப் பயன்படுத்தப்படுகின்றது. |