World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
Sri Lankan Attorney General stalls on bail application for Tamil detainees இலங்கை சட்ட மா அதிபர் தமிழ் கைதிகளுக்கான பிணை மனுவை ஒத்திவைத்துள்ளார் By Vilani Peiris இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு தமிழ் தொழிலாளர்களின் பிணை மனுவை ஏற்றுக்கொள்ள இன்னமும் மறுத்து வருகின்றது. இந்த அறுவரும் எந்த ஒரு சட்டவிரோத நடவடிக்கையின் பேரிலும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களது விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த பெப்பிரவரி மாதத்தில், இது 2002 ஜனவரி 16ம் திகதி வரை மேலும் 11 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்பிரல் 25ம் திகதி, எதிரி தரப்பு சட்டத்தரணிகளான மெவன் பலல்லவும் எச்.எம்.மொகமட் பாயிசும் ஆறு தனித் தனியான பிணை மனுக்களை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச வழக்கறிஞர் அதுல லிவேராவிடம் கையளித்தனர். இந்த ஆறுவருக்கும் எதிராக தொடரப்பட்டிருக்கும் நான்கு வழக்குகளில் ஒரே ஒரு வழக்கை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதையும் அதுவும் கூட இழுபட்டுச் செல்வதையும் ஆவணங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. தடுத்து வைக்கப்பட்டு இருந்தபோது பெற்றுக் கொள்ளப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மாத்திரமே இக்கைதிகளுக்கு எதிரான சாட்சியங்களாகும். சட்ட மா அதிபர் திணைக்களம் ஒரு மாதத்தின் பின்னர் -மே 22ம் திகதி பதிலளிக்கையில் பிணை வழங்க மறுத்தது. வழக்கு விசாரணை செய்யப்பட்டு வரும் மேல் நீதி மன்றத்துக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் கிடையாது என அது கோரியது. அந்த வாதத்தை நிராகரித்த சட்டத்தரணி பாயிஸ் அதே நாளன்று சட்ட மா அதிபர் கே.சி.கமலசபேசனைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, வழக்கின் பிரதான சட்சி -ஒப்புதல் வாக்குமூலங்களை மொழிபெயர்த்த பொலிஸ் உப அத்தியட்சகரான முகாதீஸ்- நீதிமன்றத்திலிருந்து தலைமறைவாகி, பொலிஸ் சேவையை விட்டு விலகியதோடு, இலங்கையில் இருந்தும் வெளியேறி விட்டதை பாயீஸ் சுட்டிக் காட்டினார். இந்த நிலைமைகளின் கீழ் வழக்குத் தொடுநர் தரப்பினர் வழக்கை முடிவின்றி தாமதிக்கச் செய்யக்கூடும். இதன் பெறுபேறாக -பெரிதும் அவர்களது அடிப்படை உரிமை மறுப்பாக- ஆறு கைதிகளும் முடிவின்றி சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும். விடயங்களை கவனத்தில் கொள்வதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். சுப்பு உதயகுமார், பிச்சமுத்து சந்திரன், அருணாசலம் லோகேஸ்வரன், சோலமலை லோகநாதன், பொன்னையா சரவணக்குமார் சாமிமுத்து பெனடிக்ட் ஆகிய இந்த அருவரும் இலங்கையின் மத்திய பிரதேசத்தின் ஹட்டனுக்கு அறுகாமையில் உள்ள தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் முதலில் 1998 மே மாதம் ஷனன் தேயிலை பக்டரியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். குற்றச்சாட்டுகளின்றி ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் 1999 ஜூன் மாதம் இந்த ஆறு பேருக்கும் எதிராக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) உறுப்பினர்களாக இருந்தமை, பெற்றோல் தாங்கிகளுக்கு குண்டு வைத்து தகர்த்தமை, மின் மாற்றிகளை நாசம் செய்தது என்பவை உட்பட நான்கு புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. பொலிஸ், முதலில் சுமத்தப்பட்ட ஷெனன் தேயிலை பக்டரி தொடர்பான குற்றச்சாட்டை எந்தவித விளக்கமும் இன்றி விலக்கிக் கொண்டது. இப்போது வழக்கு அரச தரப்பினராலோ ஒன்று வழக்கின் மூலமாகவோ அல்லது நீதிபதி சமூகமளிக்காத காரணத்தாலோ ஏழுமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்குத் தினமான ஜனவரிவரை இந்த கைதிகள் சிறையில் வாடத் தள்ளப்படுவார்களேயானால், அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் பூர்த்தியாகும். மேலும், சட்ட நடவடிக்கைகள் மீண்டும் தாமதப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஹட்டன் அறுவருக்கும் எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை அகற்றவும் அவர்களின் நிபந்தனையற்ற உடனடி விடுதலைக்காகவும் தொடர்ச்சியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. பிரச்சாரம் தொடர்பான உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) கட்டுரைகள் யாஹூவில் (Yahoo) வெளியாகியுள்ள அதே வேளை, தமிழ் கனேடியன் செய்தி வலைத் தளத்தில் மீள வெளிப்பட்டுள்ளன. மே மாத முதற்பகுதியில் இலங்கையின் முன்னணி தமிழ் நாளிதழான வீரகேசரி "இலங்கையின் தமிழ் கைதிகள் தமது விடுதலைக்கு கரம் நீட்டுமாறு கோருகின்றனர்" எனும் தலைப்பிலான உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கைதிகள், கட்சி வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும் தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் உட்பட்ட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் காட்டும் பாகுபாட்டை சுட்டிக் காட்டியும் சோ.ச.க.வுக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தின் சில பகுதிகளை பத்திரிகை சேர்த்துக் கொண்டிருந்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்துக்கு பெருகிவரும் ஆதரவும் கட்டுரையும் பலரின் உணர்வுகளை தூண்டிவிட்டுள்ளதாக கட்டுரை குறிப்பிட்டது. மூன்று வருடங்களாக ஹட்டன் அறுவர் தொடர்பாகவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுத்த தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற் சங்கத் தலைமைகளும் ஏனைய அமைப்புகளும் இப்போது சில நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுத்து சட்ட மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (CWC) தலைவர் ஆறுமுகம் தொண்டமான் (Arumugam Thondaman) ஏப்பிரல் 25ம் திகதி சொற்களை மிகக் கவனமாக பயன்படுத்தி எழுதியதாவது: "தோட்டப்புற இளைஞர்களை விடுதலை செய்வதற்காக உடனடியானதும் உறுதியானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோருகின்றேன்." கைதுசெய்த பின் தொண்டமானை தொடர்பு கொண்டபோது அவர் எதையுமே செய்யவில்லை என, பல கைதிகளின் பெற்றோர்கள் சோ.ச.க.விடம் குறிப்பிட்டனர். அவர் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா இல்லையா எனக் கூறுவதற்கு வழியில்லை என அவர்களில் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார். மலையக தேசிய கூட்டணியின் தலைவர் பீ.ஏ.காதர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் "இவர்களுக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் அவர்களது வழக்கை துரிதப்படுத்துமாறும் அல்லது உடனடியாக விடுதலை செய்யுமாறும்" கெளரவத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் பல வாக்குறுதிகளை வழங்கிய பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த மலையக மக்கள் முன்னணியின் (UPF) தலைவர் பி.சந்திரசேகரன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேகரனுக்கு அவரது செயலின்மையின் மீதான தமது வெறுப்பை வெளிப்படுத்தி மே 4ம் திகதி எழுதிய கடிதத்தில் கைதிகள் விளக்கியதாவது: "நாங்கள் உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளோம். எங்களது குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது." அவஸ்தை நிலையின் ஒரு நடவடிக்கையாக, அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரவுள்ளதாக அச்சுறுத்தியிருந்தனர். பொலிசாராலும் சிறைச்சாலை அதிகாரிகளாலும் விதிக்கப்பட்டுள்ள தடைகளால், கைதிகளைப் பார்வையிடுவது கூட உறவினர்களுக்கு மிகவும் சிரமமானதாகும். உள்ளூர் பொலிசில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிக் கடிதமொன்று அவசிமாகும். ஆனால் அதைப் பெற்றுக் கொள்வது பெரிதும் சங்கடமானது. லோகேஸ்வரனின் தந்தையான முனியாண்டி அருணாச்சலம், அத்தகைய ஒரு கடிதத்தை பெற்றுக் கொள்ள ஒரு மாதமாகியது. ஏப்பிரல் 21ம் திகதி வழங்கப்பட்ட அவரது முதலாவது விண்ணப்பத்தை, தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, ஹட்டன் பொலிஸ் அதிகாரி திருப்பி அனுப்பி விட்டார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, ஏப்பிரல் 24ம் திகதியும் அவர் அதை நிராகரித்தார். அவரது உயர் அதிகாரியினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னரும், மீண்டும் அவர் விண்ணப்பத்தை இடையூறு செய்தார். சோ.ச.க.வின் விண்ணப்பத்தின் பேரில், மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் பின்னர் மே 23ம் திகதியே கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அண்மையில் லோகநாதனின் சகோதரரான சங்கர் சோசலிச சமத்துவக் கட்சி பிரதிநிதியுடன் சேர்ந்து சிறைச்சாலைக்கு விஜயம் செய்ய முற்படுகையில், பொலிஸ் கடிதம் புதுப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர் அடுத்த நாள் திரும்பிச் செல்லத் தள்ளப்பட்டார். போக்குவரத்துகள் வழங்கப்படாத நிலையில், ஒவ்வொரு முறையும் கடைசி நான்கு கிலோ மீட்டர்கள் சோதனைச் சாவடிகளூடாகச் செல்ல வேண்டும். சோதனைச் சாவடிகளில் உள்ள இராணுவத்தினர் மிகவும் இனவாத முறையில் கைதிகளின் உறவினர்களை தூற்றுவார்கள். சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்துக்கான ஆதரவு சட்ட மா அதிபருக்கு எழுதியதன் மூலம் தொழிலாளர்களும், புத்திஜீவிகளும் மற்றும் சில அமைப்புகளும் இந்தக் கைதிகளை விடுதலை செய்வதற்கான சோ.ச.க.வின் பிரச்சாரத்துக்கு ஆதரவளித்தனர். தமிழ் கவிஞரான சு.வில்வரத்னம் -1980களின் கடைப் பகுதியில் இவரது இனவாதக் கலகத்தின் மூலம் தீ மூட்டப்பட்டது- திருகோணமலையில் இருந்து எழுதியதாவது: "கடந்த 30 ஆண்டுகளாக நான் தமிழ் கவிதை எழுதி வருகின்றேன். நானும் ஒரு மனிதாபிமானி. எனது இளமைப் பருவத்தில் இருந்து எனக்கு சோ.ச.க.வைத் தெரியும்... அவர்கள் எப்போதும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடி வந்துள்ளார்கள். அவர்கள் பயங்கரவாதத்தையும் பயங்கரவாத அரசியலையும் எதிர்த்து வந்துள்ளார்கள்... கைது செய்யப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும். வழக்கு மேலும் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது." சோ.ச.க. பிரச்சாரத்துக்கு ஆதரவளித்த கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்ட பீட வெளிக்கள விரிவுரையாளரான ஆர்.ஜே.ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதாவது: "அரசாங்கம் எத்தனையோ மனித உரிமைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. வைத்திய அறிக்கைகளின்படி, இந்த இளைஞர்கள் பொலிஸ் காவலில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வைத்திய மற்றும் சுகாதார வசதிகள் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சகல தமிழ் இளைஞர்களும் இதே தலைவிதிக்கு முகம் கொடுக்கின்றனர்." கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் விரிவுரையாளரான, கே.எஸ்.கீர்த்தி ஆரியதாச எழுதியதாவது: "சோ.ச.க.வின் ஆதரவாளரான உதயகுமார் உட்பட்ட ஆறு தமிழ் தோட்டப்புற இளைஞர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தெளிவான வழக்குகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்படுவது அடிப்படை ஜனநாயக உரிமையையும் மனித உரிமை மீதான மோசமான வன்முறையாகும்." ஒரு இளம் பட்டதாரியான, சம்பத் விஜேசிங்க அறுவரின் பொய் சோடனை வழக்கையும் சவால் செய்து குறிப்பிட்டதாவது: "கொடூரமான சித்திரவதைகளின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களைத் (சிங்களத்தில் எழுதப்பட்ட) தவிர எந்தவொரு சாட்சியையும் அவர்களுக்கு எதிராக முன் வைப்பதில் நீங்கள் தோல்வி கண்டுள்ளீர்கள். ஆனால் அவர்களில் எவருக்கும் சிங்களம் வாசிக்கவோ எழுதவோ தெரியாது. ஆகவே இந்த சட்டவிரோத ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒரு சொல்லும் செல்லுபடியானதல்ல." இலங்கை துறைமுக அதிகார சபையின் (SLPA) கடற்துறை அதிகாரிகள் தொழிற் சங்கத்தின் உறுப்பினரான டி.ஏ.ஜோதிபால, குறிப்பிட்டதாவது: "பொதுவில் இந்த இளைஞர்களை விடுதலை செய்வதற்காக உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுத்துள்ள உலக ரீதியிலான பிரச்சாரத்திற்கு எனது ஆதரவை விரிவுபடுத்தும் வகையில் இ.து.அ.ச.வின் மெரிடைம் ஊழியர் தொழிற் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையிலும் ஒரு தொழிலாளி என்ற முறையிலும் நான் இதை என் கடமையாக்கிக் கொள்கின்றேன். நீதிபதி இல்லாமை, விசாரணைக்கு நேரம் இல்லாமை, விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் இல்லாமை போன்ற பல காரணங்களின் பேரில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது." மாத இதழான தியச சிங்கள சஞ்சிகையை வெளியிடும் தியச கல்வி வட்டம், அஞ்சல் செய்த கடிதத்தில் சுட்டிக் காட்டியதாவது: "குறைந்த பட்சம் அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஷெனன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கூட குற்றவாளிகளாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்பது எமக்கு அதிர்ச்சியைத் தருகின்றது. கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி இந்த வழக்கும் கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் திட்டமிட்டு நடாத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாகவே தோன்றுகின்றது." வெலிசரயில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை அபிவிருத்தி சந்தைப்படுத்தல் நிலையத்தின் ஊழியரான ஏ.ஏ.சிரில் அன்டனி, பண்டாரவளை கொல்மன் தோட்டத்தைச் சேர்ந்த பி.வடிவேல், பண்டாரவளை ஐஸ்லபி தோட்டத்தில் இருந்து கே.சுப்பிரமணியம் மற்றும் பண்டாரவளை ஊவா ஹைலன்ட் தோட்டத்தில் இருந்து க.கமலம் ஆகியோரும் சட்ட மா அதிபருக்கு ஆட்சேபனைக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். ருமேனியாவில் இருந்து கொன்டன்டின் மிஹாய் கிரிகோர்சு எழுதியதாவது: "பொதுவில் உள்நாட்டு யுத்தத்தின் இயல்பு மற்றும் விசேஷமாக இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இனவாத இயல்பு, விசேஷமாக தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களினதும், மனித உரிமைகள் பெரிதும் மீறப்படும் பிரச்சினையை எழுப்பும். இலங்கை தொழிலாளர் உரிமைகள் மீதான அடி, உலக ரீதியில் தொழிலாளர்களின் நிலைமைகளையும் உரிமைகளையும் மூழ்கடிக்க உதவும். இந்த அறுவரது கைதும் தொடர்ச்சியான தடுத்து வைப்பும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஜனநாயக உரிமைக்கு எதிரான தாக்குதலையும் இனவாத யுத்தத்தையும் நிறுத்துவதற்கு நான் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமையிலான பிரச்சாரத்துடன் இணைந்து கொள்கின்றேன். இந்த அப்பாவி ஆறு தொழிலாளர்களையும் விடுதலை செய்வதற்காக சரியான எதையும் உடனடியாக மேற்கொள்ளவும். தகுதி பாராது செய்யவும்." இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை இந்தப் பிரச்சாரத்துடன் இணைவதோடு எல்லா குற்றச்சாட்டுக்களையும் விலக்கிக் கொண்டு இந்த ஆறு கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யக் கோரி இலங்கை அதிகாரிகளுக்கு வேண்டுமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இந்த ஹட்டன் ஆறு இளைஞர்களை விடுதலை செய்யும் சட்ட நடவடிக்கைகளுக்காக 100,000 ரூபாய் அவசர நிதி சேகரிப்பை ஜூன் முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளோம். உங்களது உதவி நிதிகளை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: The Treasurer, ஆட்சேபனைக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி: The Attorney General, தயவுசெய்து உங்களது ஆட்சேபனைக் கடிதங்களின் பிரதிகளை அனுப்பி வையுங்கள்: Socialist Equality Party, |