World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா :  சீனா

Rural revolts in China reveal widespread disaffection over tax burdens.

சீனாவில் கிராமப்புறக் கிளர்ச்சிகள் அதிக வரிச்சுமைகளால் ஏற்பட்ட பரந்த அளவிலான அரசியல் அமைதிக்கேட்டை வெளிப்படுத்துகின்றன.

By John Chan
25 May 2001

Use this version to print

கடந்த மாதத்தின் பொழுது வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றிலிருந்து வந்த செய்திகள் சீனாவில் பரவிவரும் கிராமப்புற அமைதியின்மையை பற்றிய புதிய விவரங்களை வழங்குகின்றன. சீனாவின் மக்கள் நெருக்கமுள்ள மற்றும் பின்தங்கிய மத்திய மாகாணங்களில் விவசாயிகளும் உள்ளூர் சமூகங்களும், உள்ளூர் அதிகாரிகளால் அமல்படுத்தப்பட்ட அதிக வரிச்சுமைகளுக்கு எதிராக எதிர்ப்புக்கள், மனுச்செய்தல், சட்டரீதியாக வழக்குத் தொடுத்தல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்தனர். அதிருப்தி அலையினை போலீசாரால் முறியடிக்க முடியாமை, பெய்ஜிங்கில் முழு அளவிலான விவசாயக் கலவரங்கள் எழலாம் எனும் அச்சங்களை எழுப்பி உள்ளது.

ஜியாங்க்சி மாகாணத்தில் உள்ள யுண்டாங்கில் இருந்து வந்த 1400 கிராம வாசிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் கடந்தமாதத்தில் ஏற்பட்ட வன்முறை மோதல்களின் பதிலாகவே, இவ்விரு அமெரிக்கப் பத்திரிகைகளாலும் வழங்கப்பட்ட கிராமப்புற சீனா மீதான குவிமையம் இருந்தது. இதில் இரு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 20 கிராமவாசிகளும் 23 போலீசாரும் காயமடைந்ததாகவும் சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அரசபடைகள் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றிருக்கிறது என்று அரசாங்கமே ஒப்புக்கொள்ளும் அரிதான நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகும்.

ஆயிரக்கணக்கான ஏனைய சமூகங்களைப் போல யுண்டாங்கும் 1998ல் யாங்ட்சி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அழிவுக்கு ஆளாகியது. அழிவுக்குள்ளான அரிசி சேமிப்பு தளங்களைத் திரும்பக் கட்டி எழுப்ப ஒதுக்கப்பட்ட வெள்ளநிவாரண பணத்தை அரசாங்க அதிகாரிகள் திருடினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கிராமவாசிகள் மீது வரி விதிக்க முயற்சித்தனர். யுண்டாங் வாசிகளோ வரி கொடுக்க மறுத்தனர். 1999 பிப்ரவரியிலும் மறுபடி ஜூலை 2000 லும் கிராமத்தினர் ஒன்றுதிரண்டு போலீசாரும் வரிவசூலிப்போரும் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் முகமாக சாலைத் தடுப்புக்களை ஏற்படுத்தினர்.

கடந்த மாதம் அதிகாரிகள் அக் கிராமத்தை "குற்றக் கும்பல்" என்று அறிவித்ததோடு, ஏப்ரல் அதிகாலையில் 600 கலவரப் போலீசாரையும் ஆயுதம் தாங்கிய காவல் படையினரையும் கிராமத்திற்கு அனுப்பினர். நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் அவர்களின் நுழைவைத் தடுக்கப் போராடுகையில் போலீசார் அவர்கள் மீது சுட்டனர். வாஷிங்டன் போஸ்டால் மேற்கோள் காட்டப்பட்ட சாட்சியங்களின்படி, 1000 போலீசார் வரை அப்பகுதியை ஆக்கிரமித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரைக் கைது செய்திருக்கின்றனர்.

ஜியாங்க்சி மாகாணம் முழுவதும் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் பொதுவான ஒன்றாய் ஆகிவிட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்டில், உள்ளூர் விவசாயிகள் மீது அதிகரித்த வரி விதிப்புக்கள் சம்பந்தமாக ஐந்து கிராமங்களில் இருந்து வந்த 20,000 விவசாயிகள் போலீசாருடன் மோதினர். அந்த எதிர்ப்பில் மூவர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

மே 8 அன்று வாஷிங்டன் போஸ்ட், யாங்ட்சி நதியின் கழிமுகத்துவாரப் பகுதி மாகாணங்கள் முழுவதும் விவசாயிகளின் அமைதியின்மை நிலவுவதாகக் கூறியது. தொழில்த்துறை நகரான சோங்கிற்கும் சிச்சுவான் மாகாணத் தலைநகரான செங்துவிற்கும் இடையில் அமைந்துள்ள ஹேபியனில் கிளர்ச்சியாளர்கள், "வரி விலக்கிற்காக விவசாயிகளின் ஐந்து வருட யுத்தத்தினை" வழிநடத்தி வருகின்றனர். உள்ளூர் பத்திரிக்கைகளால், "விவசாயிகளின் நாயகர்கள்" என்று சூட்டப்படும் மிக முனைப்பானவர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர் அல்லது அதிகாரிகளால் ஓடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

மேலதிக வரிவிதிப்பிற்கு எதிரான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ததில் முக்கிய பாத்திரம் ஆற்றிய ழாவோ ஷுலான் என்ற மழலையர் பள்ளி ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக செங்துவில் தலைமறைவாக இருந்து வருகிறார். உள்ளூர் போலீசாராலும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்களாலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

1996ல் தொடங்கிய ழாவோவின் வரி எதிர்ப்பு கிளர்ச்சிப் பிரச்சாரம் உள்ளூர் விவசாய மக்களின் பெரும் ஆதரவை வென்றெடுத்தது. சராசரி விவசாயி ஆண்டிற்கு 100 அமெரிக்க டாலர்களுக்கு மேல் வருவாய் ஈட்டமுடியாத பொழுது, அவரது விவசாயக் குடும்பம் 40 அமெரிக்க டாலர்களை வரியாகச் செலுத்தக் கடன்பட்டிருக்கிறது. 1996 டிசம்பர் 30 அன்று, உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்களும் அவரது வீட்டிற்கு வந்து பணத்தை செலுத்துமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுத்தபொழுது, அவரது வீட்டில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டியையும் ஏனைய பொருட்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

ஏனைய குடும்பங்களும் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதை அறிந்த ழாவோவும் ஏனையோரும் உள்ளூர் அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க 2,164 குடும்பங்களை அணிதிரட்டினர். 1985க்குப் பின்னர் நடந்த பெரிய கூட்டான வழக்குத் தொடுப்பு இதுதான். 1985ல் தேசிய சட்டம் இயற்றும் அவை, சாதாரண மக்களும் பொறுப்புக்களில் உள்ளோரை வழக்குத் தொடுக்க அனுமதிப்பதாகக் கூறப்படும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், விவசாயிகளது வழக்கறிஞர்களை நீதி மன்றத்துக்கு வரவிடாமற் செய்வதைப் பயன்படுத்தி, வழக்கு மேற்கொண்டு செல்வதைத் தடுத்துவிட்டனர். இந்த வழக்கை நடத்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான வு டியான்க்சியாங், தடை செய்யப்பட்ட பாலன் கோங் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் சரீரரீதியாக அச்சுறுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

பெய்ஜிங்கின் பதில்

எதிர்ப்பில் சம்பந்தப்பட்டுள்ள ழாவோவும் மற்றைய விவசாயிகள் தலைவர்களும் பெய்ஜிங்கில் உள்ள அரசாங்கம் தங்களுக்கு சார்பாக தலையிடும் என பிரமைகளைக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற சீனாவில் உள்ள இந்தக் கண்ணோட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அங்கு விவசாய வர்க்கம் ஊழல் அல்லது சுரண்டும் உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராக குறை நீக்குவதற்கு பாரம்பரியமாகவே மத்திய பொறுப்பில் உள்ளோரை அல்லது பேரரசரை தங்களின் ஒரே நம்பிக்கையாகப் பார்க்கும். இந்த உணர்வானது 1949 புரட்சிக்குப் பின்னர் மாவோவின் அரசாங்கத்துக்கு மாற்றப்பட்டது.

வு டியாங்க்சியாங் வாஷிங்டன் போஸ்டிடம் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் இங்கு மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம். மக்கள் ஆதரவைப் பெறுவதுதான் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த அதிகாரிகள் கம்யூனிசத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்கள் அதிகாரத்தையும் பணத்தையும் மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் பெய்ஜிங் புரிந்துகொள்ளும், பெய்ஜிங்கின் செவிகளில் எங்கள் குரல்கள் விழும்வரை தொடர்ந்து போராடுவோம்".

இருப்பினும், செய்திகள் கூறுகிறபடி, ழாவோவும் ஏனைய தலைவர்களும் மத்திய அரசாங்கத்துக்கு தங்களின் எதிர்ப்பை, முறையீட்டைப் பதிவு செய்வதற்கு பெய்ஜிங் பயணம் செய்திருக்கின்றனர், ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

விவசாயி வர்க்கத்தின் கூட்டாளியாக இருப்பதற்கும் அப்பால், பெய்ஜிங்கில் உள்ள ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிதான் கிராமப்புறங்களில் உயர் வரிவீத விளைவுக்கு முதன்மையான காரணமாகும். 1994-95ல், சுதந்திர சந்தை நிகழ்ச்சி நிரலின் பாகமாகவும் அதன் சொந்த பட்ஜெட்டை வெட்டும் முகமாகவும், பெய்ஜிங் நலசேவை, கல்வி மற்றும் ஏனைய சேவைகளுக்கான பொறுப்பினை மாவட்ட மற்றும் நகராண்மைக் கழக அதிகாரிகளுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டது.

பெய்ஜிங்கிலிருந்து வரும் பற்றாக்குறையான நிதிகளுடன், உள்ளூர் அதிகாரிகள் நிதி நெருக்கடியில் மூழ்கினர். மாகாண அரசாங்கம் மூலதனத்தை ஈர்க்கும் முயற்சியாக அந்நிய மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு சலுகைகளையும் மானியங்களையும் அளிக்கத் தொடங்கியது, அதன்மூலம் தங்களின் வருமான வரியைக் குறைத்தது, மற்றும் அது முன்னர் உள்ளூர் மாவட்டங்களுக்கும் நகராண்மைக் கழகங்களுக்கும் வழங்கிய ஆதரவைக் குறைத்துவிட்டது. வரிவிதிப்பின் முழுச்சுமையும் கிராமப்புற சீனாவில் உள்ள விவசாய வர்க்கத்துக்கு மாற்றப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளால் வசூலிக்கப்படும் வரி வருவாயில் அறுபது சதவீதம் வரை, கட்டாய ஆரம்பக் கல்விமுறைக்கு நிதியூட்ட மட்டுமே இப்போது தேவைப்படுகிறது.

செங் மிங் மே இதழின்படி, 1983க்குப் பின்னர் ஹேனான் மாகாணத்தில், சில மாவட்டங்களில் வரிச்சுமையானது 700% அளவில் அதிகரித்திருக்கிறது. 1978க்குப் பிறகு சீனா முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் நகராண்மைக் கழக அதிகாரிகள் எண்ணிக்கை 500% அளவில் அதிகரித்திருக்கிறது. இந்த ஒப்பீட்டளவிலான சமூகத்தட்டு அவர்கள் உயர்த்தும் வரிவிதிப்பில் இருந்து சம்பளம் பெறுகிறது.

விவசாய வருமானங்கள் ஸ்தம்பிதம் அல்லது வீழ்ச்சி அடைந்திருக்கும் சூழ்நிலையின் கீழ், உள்ளூர் அதிகாரிகளுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையில் கடுமையாகி வரும் போராட்டம் வெளிப்பட்டு வருகிறது. வாஷிங்டன் போஸ்டால் மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, ஹேபியன் நகராண்மைக் கழகத்தில் உள்ள சராசரி விவசாயி பயிர்களில் இருந்து வருடத்திற்கு 125 அமெரிக்க டாலர்களைப் பெறுகிறார், ஆனால் உரத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்திற்கு மற்றும் விதைக்கு என 81 டாலர்கள் செலவழித்த பிறகு, நிகர வருவாயாக 44 டாலர்களை மட்டுமே பெறுகிறார். 1996-97ல் வரி கிளர்ச்சி அபிவிருத்தி அடைந்தபோது, விவசாயக் குடும்பங்கள் வரியாக ஆண்டுக்கு 36 டாலர்களை செலுத்தின-- இது அவர்களின் உண்மையான வருமானத்தில் 80% ஆகும்.

வாஷிங்டன் போஸ்டிடம் ஒரு ஆய்வாளர் கூறினார்: "இந்த பகுதிகளுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலை செய்ய ஏனைய பணிகள் தேவைப்பட்டால், அவர்கள் விவசாயிகளை மேலும் மேலும் கடுமையாக கசக்கிப் பிழிய இருக்கிறார்கள், ஒரு கட்டத்தில் விவசாயி பொறுமை இழந்து விடுவார்."

கடந்த ஜூலை 29 அன்று, ஜியாங்க்சியில் அரசு நடத்தும் அச்சகம் ஒன்று கிராமப்புற வரிகள் பற்றிய கையேடு ஒன்றை அச்சிட்டது. அதில் சட்டரீதியான வரி வகைகள் மற்றும் வரி மட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் உள்ளடங்கி இருந்தன. அதிகாரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், அக் கையேடானது வெளியிட்ட இரு வாரங்களுக்குள் 12,000 படிகள் விற்று விட்டன, அதன் பட படிகள் (photo copies) மாகாணம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுவிட்டன. பத்து நாட்களுக்குப் பிறகு, மாகாண அரசாங்கமானது சமூக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று கூறி கையேட்டை தடை செய்தது. கடந்த செப்டம்பரில் ஜியாங்க்சியில் வரி எதிர்ப்புக் கிளர்ச்சி எழுச்சி வெடித்தபொழுது, விவசாயிகள் பல வரிகளை சட்ட விரோதமானவை என்று நிரூபிக்க மத்திய அரசின் இப்பத்திரங்களைப் பயன்படுத்தினர்.

தனது கொள்கைகளின் விளைபயன்களை எதிர்கொண்டு, பெய்ஜிங், விவசாயிகளை சாந்தப்படுத்த முயற்சிக்கிறது.

மார்ச்சில், தேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்தக் கூட்டத்தில், முதல்வர் ழு ரோங்ஜி மாவட்ட மற்றும் கிராம சபைகளால் விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் ரத்துச் செய்வதாகவும் அதற்குப் பதிலாக தேசிய வரியை வைப்பதாகவும், அது விவசாய குடும்ப வருவாயில் ஐந்த சதவீதத்திற்கு மேல் போகாது என்றும் அறிவித்தார். வரிவசூலுக்குப் பொறுப்பாக உள்ள மாவட்ட அரசாங்கங்கள், பின்னர் அதனை நகராண்மைக் கழகங்களுக்கும் கிராமங்களுக்கும் மறு விநியோகம் செய்யும். கிராமங்கள் மற்றும் நகராண்மைக் கழகங்களின் சாலை மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான கட்டுமானப்பணிகளின் மீதமுள்ள பணிகளுக்காகவும் கல்வியிலும் சுகாதார வசதியிலும் உள்ள இடைவெளிகளை நிரப்பவும் உதவியாக, குறுகிய கால நடவடிக்கையாக மத்திய அரசாங்கம் 2.5 பில்லியன் டாலர்களையும் கூட ஒதுக்கி உள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கைகள், கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் பதட்டங்கள் மத்தியில் ஏட்டளவிலேயே இருக்கின்றன. சீன நகராண்மைக் கழகங்கள் தற்போது கடன் கொடுப்பதாகவும் செலுத்தவேண்டிய கடனாகவும் 36.5 பில்லியன் டாலர்களுக்கு பொறுப்புடையதாக இருக்கின்றன. மத்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய நிதிகள் வராமல், அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கவும், வட்டி செலுத்தவும் மற்றும் ஓரளவிற்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பராமரிக்கவும் உள்ளூர் சபைகளில் போதிய நிதிகள் இல்லை. யுண்டாங்கில் அண்மைய நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறவாறு, விவசாய வர்ககம் மிகவும் போர்க்குணத்துடனும் கட்டுப்பாட்டை மீறுவதிலும் வளர்ந்து வருகின்ற அதேவேளையில், உள்ளூர் அரசாங்கங்கள் வரிகளைக் கறந்தெடுக்க வன்முறையையும் ஆத்திர மூட்டல்களையும் தொடர்ச்சியான போக்கிடமாகக் கொண்டிருக்கின்றது.