World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lanka government in a minority as key coalition partner quits

கூட்டரசாங்க முக்கிய பங்காளி விலகியதால் இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சிறுபான்மையாகியுள்ளது

By K. Ratnayake
26 June 2001

Use this version to print

ஆளும் பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் முக்கிய கட்சிகளில் ஒன்று விலகியதால் இலங்கை அரசாங்கம் பெரும் குழப்பநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மொத்தமாக உள்ள 225 ஆசனங்களில் அது 109 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் தமது பலத்தைக் காட்டுவதற்கான தருணமாக விளங்கியதால் பல கிழமைக் கணக்கான அரசியல் குத்து வெட்டுக்களுக்கும் சூழ்ச்சிகளுக்குமான களமாக விளங்கியது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடந்த புதன்கிழமை அரசாங்க தரப்பிலான அரசியல் நெருக்கடியை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) தலைவரான ரவூப் ஹக்கீமை தமது அமைச்சரவையில் இருந்து விலக்கியதன் மூலம் ஒரு உச்சக் கட்டத்துக்கு கொணர்ந்தார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசினதும் அதனது முன்னணி அமைப்பான தேசிய ஐக்கிய முன்னணி (NUA) அங்கத்தவர்களும் கட்சியும் தலைவரும் அவமானம் செய்யப்பட்டு விட்டதாகக் கூறி, உடனடியாக சகல அரசாங்க பதவிகளில் இருந்தும் இராஜினாமாச் செய்தனர். அதே நாளன்று ஹக்கீமும் ஸ்ரீ.ல.சு.க.வின் வேறு ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க் கட்சி ஆசனங்களில் சென்று அமர்ந்து கொண்டனர். அத்தோடு யூ.என்.பி.யுடன் ஒரு உடன்படிக்கையும் செய்து கொண்டுள்ளனர்.

தேசிய ஐக்கிய முன்னணியின் (NUA) தலைவியான பேரியல் அஷ்ரப் தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து கொண்ட போதிலும் அவர் எதிர்க் கட்சி ஆசனங்களில் சென்று அமர்ந்து கொள்வதில் ஹக்கீமுடன் சேரவில்லை. "அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இது தருணம் அல்ல" என அவர் கூறிக் கொண்டார். பேரியல் அஷ்ரபும் அவரது ஆதரவாளர்களும் ஆளும் அரசாங்கத்தின் ஒரு பாகமாகத் தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் ஸ்ரீ.ல.மு.கா.வில் ஒரு பிளவை உண்டுபண்ணியுள்ளனர். ஸ்ரீ.ல.மு.கா. தலைமை கடந்த சனிக்கிழமை திருமதி அஷ்ரபுக்கு ஒரு 72 மணித்தியால காலக்கெடு விதித்தது. அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

குமாரதுங்க, ஹக்கீமை அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஒரு நாளின் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் அவர் "கூட்டுப் பொறுப்பை" மீறிவிட்டதாகவும் அவரின் "நடவடிக்கைகளும் மனப்பாங்கும் அரசாங்கத்தையும் நாட்டையும் தேசிய ஐக்கியத்தையும் பாதிப்பதாகவும்" குற்றம் சாட்டினார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (SLFP) இடையேயான உறவுகள் கடந்த பல வாரங்களாக பாதிக்கப்பட்டு வந்தது.

ஏப்பிரல் கடைப்பகுதியில் மாவனெல்லை நகரில் ஒரு அரசாங்க அமைச்சரான மகிபால ஹேரத்தும் அவரது குண்டர்களும் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டதன் பின்னர் இந்தப் பதட்ட நிலை உச்சக் கட்டத்தை அடைந்தது. அன்றில் இருந்து ஹக்கீம் எதிர்க்கட்சியான யூ.என்.பி.யை வெளிவெளியாகச் சந்தித்ததோடு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான புதிய ஒரு நிர்வாக மாவட்டத்துக்கான முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கைக்காக நெருக்கியும் வந்தார்.

1948ல் இலங்கை சுதந்திரம் கண்டதில் இருந்து ஹக்கீமும் அவரது ஆதரவாளர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது இலங்கையை இரண்டாவது தடவையாக ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இன்றைய நெருக்கடியில் இருந்து என்ன தலையெடுக்கும் என்பது தெளிவாக இல்லை. பொதுஜன முன்னணி தொடர்ந்தும் பாராளுமன்றத்தில ஒரு பெரும்பான்மை அல்ல. ஆனால் 89 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ள யூ.என்.பி. தனது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றப் போதிய ஆதரவை வெற்றி கொள்ளுமா என்பது தெளிவாக இல்லை.

யூ.என்.பி.க்கு மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் -தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), தமிழீழ விடுதலை கழகம் (TELO), அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (ACTC)- ஆதரவு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு கிடைக்கிறது. இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் சேர்த்து யூ.என்.பி. மொத்தத்தில் 97 ஆசனங்களையே கொண்டுள்ளது. ஆனால் பொதுஜன முன்னணி இன்னமும் பாராளுமன்றத்தில் 109 ஆசனங்களை கொண்டுள்ளது. இதே சமயம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரான ஹக்கீம் எதிர்க் கட்சியுடன் சேர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் தற்போதைக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் சாத்தியத்தை நிராகரித்துள்ளார்.

விடயங்களை மேலும் சிக்கலாக்கும் விதத்தில் அரசாங்கம் மாவனெல்லை வன்முறையில் அமைச்சர் ஹேரத்தின் பாத்திரத்துக்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முகம் கொடுக்கின்றது. அத்தோடு ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவரான பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் பதவி நீக்க பிரேரணையும் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஆனால் ஜனாதிபதி குமாரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை திடமனதை காட்டும் விதத்தில் "நாம் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கு இன்னமும் பலமான பதிலீட்டு வழிவகைகளை கொண்டுள்ளோம்" எனக் கூறினார். ஆனால் அவர் இந்த "பதிலீட்டு" விதிமுறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை.

குமாரதுங்க இரண்டு சிரேஷ்ட ஸ்ரீ.ல.சு.க. (SLFP) தலைவர்களை- நகர அபிவிருத்தி அமைச்சர் மங்கள சமரவீரவும் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்கவும்- இந்த அரசியல் குதிரை வியாபாரத்தில் தமக்கு உதவும் பொருட்டு வெளிநாட்டில் இருந்து திருப்பி அழைத்துள்ளார். அவர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் அவர் அதில் கலந்து கொள்ள மறுத்து விட்டார்.

ஜே.வி.பி.யுடன் பேச்சு

இதன் பெறுபேறாக பாராளுமன்றத்தில் நேர்த்தியான சமமான அங்கத்தவர்களைக் கொண்ட சிங்கள தீவிரவாதிகளான ஜே.வி.பி.யின் -10 எம்.பீ.க்களைக் கொண்டுள்ளது- பாத்திரம் தீர்க்கமாகியுள்ளது. பொதுஜன முன்னணி பொதுச் செயலாளர் டீ.எம்.ஜயரத்ன கடந்த வாரம் ஜே.வி.பி.யை "தற்போதைய அரசியல் நிலைமை பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு" அழைத்தார். யூ.என்.பி. தலைவர்களும் ஜே.வி.பி. தலைவர்களைச் சந்தித்த போதும் பேச்சுவார்த்தை முற்றுப் பெறவில்லை.

ஸ்ரீ.ல.சு.க.வும் யூ.என்.பி.யும் அத்தகைய அரசியல் முட்டுக்கட்டை நிலைமைகளுக்கு எதிர்கொண்டுள்ளனர். ஒரு புறத்தில் இரு கட்சிகளும் பெரும் வல்லரசுகளிடம் இருந்தும் பெரும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தும் நாட்டின் நீண்டு வரும் உள்நாட்டு யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் வழிவகைகளை காணும்படி நெருக்கப்பட்டு வருகின்றன. இந்த யுத்தம் தீவில் ஆழமான பொருளாதார, சமூக நெருக்கடியை உண்டுபண்ணியுள்ளது. மறுபுறத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) அல்லது ஏனைய சிறுபான்மை கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு (TULF) வழங்கும் எந்தவொரு சலுகைக்கான சமிக்கைகளும் சிங்கள தீவிரவாதிகளிடையே எதிர்ப்பைத் தூண்டுவதோடு ஜே.வி.பி. போன்ற தீவிரவாதக் கட்சிகளின் சொந்த அங்கத்தவர்களிடம் இருந்தும் எதிர்ப்பைத் தூண்டிவிடும்.

யூ.என்.பி. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எம்.பீ.க்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதோடு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது என்ற உண்மை ஜே.வி.பி.யினுள் பிளவை உண்டுபண்ணியுள்ளது. கடந்த வார இறுதியில் ஜே.வி.பி. நம்பிக்கையில்லாத் தீர்மானம் சம்பந்தமான அதனது மனோபாவத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு நீண்ட மத்திய குழுக் கூட்டத்தை நடாத்தியது. இக்கூட்டம் பற்றி கலந்துரையாடும் விதத்தில் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறியதாவது: யூ.என்.பி. சிறுபான்மை கட்சிகளுக்கு எந்தளவில் "விட்டுக் கொடுக்கின்றது" என்பதை கணக்கில் எடுக்கின்றது. தீர்மானம் எடுக்கும் விடயம் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் கன்னையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அது அறிவித்தது.

அரச கட்டுப்பாட்டிலான தொடர்புச் சாதனங்கள் மூலம் அரசாங்கம், யூ.என்.பி. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க ரெலோவுக்கு (TELO) வாக்குறுதி அளித்துள்ளது என்ற விடயத்தை ஜே.வி.பி.யை எட்டுவதற்கான திட்டவட்டமான களமாக்கிக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான விடுதலைப் புலிகளின் தொடக்க கோரிக்கையாக விளங்கிய விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்க மறுத்தது. இதை வைத்துக் கொண்டு அரசாங்கத் தொடர்பு சாதனங்கள் உடனடியாக யூ.என்.பி. ஒரு "மாபெரும் காட்டிக் கொடுப்பில்" ஈடுபட்டுள்ளதாக கண்டனம் செய்யத் தொடங்கின.

நீதி அமைச்சரும் சந்தர்ப்பவாத லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) தலைவருமான பற்றி வீரக் கோன் கடந்த வாரம் தேசிய தொலைக் காட்சியில் தோன்றி இதே தொனியில் பேச்சு நடாத்தினார். எதிர்க் கட்சிகள் தமது எண்ணிக்கையை பாவித்து அரசாங்கத்தின் நீண்டு வரும் அவசரகாலச் சட்டத்தை தடுக்க முயற்சிக்கலாம் என எச்சரிக்கை செய்தார். இச்சட்டம் மாதா மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சிகள் அத்தகைய ஒரு நடவடிக்கை எடுக்குமேயானால் அது விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு சமமானதாக விளங்கும் என வீரக்கோன் கூறினார்.

ஜே.வி.பி.யில் தங்கி நிற்கச் செய்யும் குமாரதுங்கவின் எந்த ஒரு முயற்சியும் அதற்கேயுரிய பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. அந்த ஆதரவுக்கான விலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பெரிதும் உக்கிரமான முறையில் முன்னெடுக்க வேண்டி நேரிடும். இது இன்றைய அரசியல் முட்டுக்கட்டை நிலையினால் ஏற்கனவே குழப்பம் அடைந்து போயுள்ள ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதியினரை அன்நியப்பட்டுப் போக வைக்கும்.

விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை அமுல் செய்தல் என்பவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் ஸ்ரீ.ல.சு.க.-யூ.என்.பி. யைக் கொண்ட ஒரு தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கத்தை அமைக்கும்படி பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு தரப்பினர் நெருக்கி வருகின்றனர். ஐலண்ட் பத்திரிகை கடந்த சனிக்கிழமை எழுதிய ஆசிரியத் தலையங்கத்தில் அத்தகைய ஒரு அரசாங்கத்துக்கான அவசியத்தை அல்லது பெரும் கட்சிகளின் உடன்பாட்டை வலியுறுத்தியது.

ஒரு சிரேஷ்ட அரசாங்க அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அரசாங்கமும் எதிர்க் கட்சியும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ளார். "இந்த நாட்டில் கொதிக்கும் பிரச்சினைகள் இருந்து கொண்டுள்ள வேளையில் பெரும் கட்சிகள் ஒன்று கூடி, பிரிந்து நின்று மோதிக் கொள்ளும் பாரம்பரியங்களில் இருந்து ஏன் விடுபட முடியாது" என தொழில்சார் நிபுணர்கள் அடிக்கடி தம்மைக் கேட்பதாக அவர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை குமாரதுங்கவும் யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு இரண்டு மணித்தியால கலந்துரையாடலை நடாத்தினார். இதற்கான தரகராக பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க விளங்கியதோடு வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரும் இதில் பங்குபற்றினார். இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளையிட்டு யூ.என்.பி.யின் ஆதரவை பெறுவதாக வெளியில் கூறிக் கொள்ளப்பட்டது. இதில் விக்கிரமசிங்க கட்சி அரசியலுக்கு "அப்பாற்பட்டு" உதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்பட்டது. ஆனால் 'டெயிலி மிறர்' பத்திரிகை அறிக்கையின்படி இங்கு ஒரு "தேசிய அரசாங்கம்" பற்றிய விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடி மாதக் கணக்கில் இல்லாது போனாலும் வாரக் கணக்கில் இழுபட்டுச் செல்லும். யூ.என்.பி. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்க முயற்சித்தாலும் கூட அது அடுத்த மாதம் வரை விவாதிக்கப்பட மாட்டாது. அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டாலும் கூட தெளிவான தீர்வு தென்படுவதாக இல்லை. யூ.என்.பி, தனியாக தெரிவு செய்யப்பட்டவரும் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்டவருமான குமாரதுங்கவுடன் பகைமை கொண்ட விதத்தில் தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கலாம்.

யூ.என்.பி யினால் ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாது போனால் ஜனாதிபதி ஒரு புதிய தேர்தலை நடாத்த தள்ளப்படுவார். ஆனால் பாராளுமன்றத் தேர்தல்கள் கடந்த அக்டோபரிலேயே நடைபெற்றுள்ளதால் குமாரதுங்க பாராளுமன்றத்தை இந்த அக்டோபருக்கு முன்னர் கலைக்க முடியாது. ஒரு தேர்தலுக்கு அடுத்த ஜனவரி வரை காத்திருக்க வேண்டும். அத்தகைய ஒரு அரசியல் பாரிசவாத நிலையை ஆளும் வர்க்கத்தால் சகித்துக் கொள்ள முடியாது.