World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US union leaders seek closer ties to Bush

அமெரிக்க தொழிற்சங்க தலைவர்கள் புஷ் உடனும் குடியரசு கட்சியினருடனும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றனர்

By Shannon Jones
2 July 2001

back to screen version

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் மிக வெளிப்படையான மற்றும் வெட்கப்படாத பெரு முதலாளிகளது ஆதரவு நிர்வாகமான புஷ் நிர்வாகம் புதிய கூட்டாளிகளைக் கண்டுள்ளது. அண்மைய வாரங்களில் AFL-CIO தொழிற்சங்க தலைமையின் கணிசமான பகுதியினர் வெள்ளை மாளிகையுடனும் காங்கிரசின் குடியரசுக் கட்சியினருடனும் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்வதற்கான அவர்களின் ஆவலைக் காட்டியிருக்கின்றனர்.

கடந்த மாதம் AFL-CIO தலைவர் ஜோன் ஸ்வீனி (John Sweeney) 17 குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர்களுக்கும் டஜன் தொழிற் சங்கத் தலைவர்களுக்கும் இரவு விருந்து ஒன்றினை நடத்தினார். AFL-CIO ன் அரசியல் நடவடிக்கைக் குழு கடந்த மாதங்களில் எட்டு காங்கிரசின் குடியரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு நன்கொடை அளித்ததுடன், மேலும் பத்து பேருக்கு நன்கொடை அளிக்க திட்டமிட்டிருக்கிறது.

"தொழிற் சங்கத்தினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் ஒருவேளை அதிக கலந்துரையாடல்கள் வரலாற்றில் எந்த நேரத்திலும் நிகழ்ந்ததைவிட இப்பொழுதுதான் நடைபெறுகின்றன என்று சொன்னால் அது நியாயமானதுதான்" என்று சேவைப்பணியாளர்களின் சர்வதேச தொழிற் சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ரென் கூறினார். "குறிப்பிட்ட விஷயங்களில் கூட்டணியை அமைத்துக்கொள்ள விரும்பும், விஷயங்களுக்காய் இயங்குகின்றவர்களாக ஆகிவிட்ட தொழிற்சங்க ஆட்கள் இருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியின் அங்கமாக இருப்பது எமது உறுப்பினர்களுக்கு ஒன்றும் வேலை செய்யவில்லை என்று அநேகர் கூறுகின்றனர்."

புஷ் நிர்வாகம் AFL-CIO க்கு நேசஉறவு தொடர்பு முயற்சிகள் பலவற்றைச் செய்திருக்கிறது. ஜூன் 18ஐக் கொண்ட அந்த வாரத்தில் வெள்ளை மாளிகை தொழிலாளர் துறையினில் 21ம் நூற்றாண்டு தொழிலகத்தின் அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளதாக அறிவித்தது. 12 பேர்களைக் கொண்ட இவ் அங்கத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் அதேபோல கல்விமான்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளடங்குவர்.

மே மாதம் புஷ் நிர்வாகம் சக்தி பற்றிய கொள்கை (Energy Policy) யினை விவாதிப்பதற்காக 12 தொழிற்சங்கத் தலைவர்களை வெள்ளைமாளிகைக்கு அழைத்தது. அது உண்மையில் எண்ணெய் கம்பனிகளாலும் சக்தி தொழிற்துறையாலும் ஆணையிடப்பட்டிருந்தது. சில ஆயிரம் கட்டுமான வேலைகள் கையளிக்க உறுதியளித்தது, பெரும் லாறி ஓட்டுனர் மற்றும் கட்டிடத்துறை தொழிற்சங்கங்களின் தலைமை நிர்வாகிகளை இதயங்கனிந்து துதிபாட போதுமானதாக இருந்தது. அதிகாரத்துவங்கள் இம்மி அளவு வெட்கத்தைக்கூட காட்டவில்லை, அலாஸ்காவின் ஆர்ட்டிக் பகுதி தேசிய வனவிலங்கு புகலிடத்தில் எண்ணெய் தோண்டுவதற்கு அனுமதிக்கும் பொதுமக்களால் மிகவும் விரும்பப்படாத புஷ் நிர்வாகத்தின் முன்மொழிவை பாராட்டவும் கூட செய்தனர்.

புஷ் இன் சக்திக் கொள்கை கூட ஐக்கிய சுரங்கத் தொழிலாளர் சங்கத்திடமிருந்து புகழ்தலைத்தூண்டி விட்டது. சக்தி ஏகபோகங்களின் நிலையை எதிரொலிக்கும் விதமாக, ஐக்கிய சுரங்கத் தொழிலாளர் சங்க தலைவர் செசில் றொபேர்ட்ஸ் சுற்றுச் சூழல் விதிமுறைகளை ஒதுக்கித் தள்ளும் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். நிலக்கரியை எடுப்பவர்களின் அதிக விற்பனையும் இலாபங்களும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு அதிக வேலைகளுக்கும் கூடுதல் சம்பளத்திற்கும் வழி வகுக்கும் என்று அவர் கூறினார்." நமக்கு இப்பொழுது மிக சாதகமான நேரம்" என்று றொபேர்ட்ஸ் கூறினார்.

புஷ் நிர்வாகத்தால் முன் மொழியப்பட்ட, நிலக்கரி மற்றும் அணுசக்தி நிலையங்களைக் கட்டுதல் மற்றும் இயக்குதல் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச் சூழல் விதிமுறைகளை இடித்துத்தரை மட்டமாக்குதல், இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் சுகாதாரத்தையும் அச்சுறுத்தும். மேலும், சக்தித்துறையின் ஏகபோகங்களின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றல் அப்பலாச்சியன் சுரங்கப் பகுதிகளிலும் அமெரிக்காவின் ஏனைய அழுத்தப்பட்ட பகுதிகளிலும் பொருளாதார புத்துயிர்ப்பை அரிதாகவே நிகழ்த்தும்.

AFL-CIO அதிகாரத்துவத்துக்கான இன்னொரு நேச உறவு தொடர்பு முயற்சியில், வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராக அமெரிக்க எஃகு இரும்பு தொழிற்துறையைப் பாதுகாத்தல் தொடர்பாக விவாதிப்பதற்கு புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஐக்கிய எஃகு இரும்பு தொழிலாளர்கள் சங்கத் தலைவர் லியோ ஜெராடை சந்தித்தனர். இச் சந்திப்பினைத் தொடர்ந்து, அமெரிக்க எஃகு இரும்பு தொழில் உரிமையாளர்களது கூற்றாகிய, வெளிநாட்டுப் போட்டியாளர்களின் "நியாயம் அற்ற" வர்த்தக நடைமுறைகளை விசாரணை செய்வதாக புஷ் உறுதி அளித்தார். அது எஃகு இரும்பு இறக்குமதி தடைகளுக்கு வழி வகுக்கும்.

2000 ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது AFL-CIO ஜனாதிபதி பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அல்கோரை ஆதரித்து பல லட்சக்கணக்கான டாலர்கள் செலவழித்ததுடன், புஷ் வெற்றி அடைவது தொழிலாளர்களுக்கும் அவரது குடும்பங்களுக்கும் துன்பகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என கூறினார். தொழிறசங்க அதிகாரத்துவத்தைப் பொறுத்த மட்டில் இது சுத்தமான வாய்ச்சவடால். கிளிண்டன்-கோர் நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகள் ஆட்சியின் பொழுது தொழிலாளர்கள் உரிமைகள் மீது வரிசையாகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பெருமளவில் அதிகரித்த சமூக சமத்துவமின்மையினைப் பொருட்படுத்தாமல், அவர்கள் கிளிண்டன்-கோர் நிர்வாகத்தினை ஆதரித்தனர்.

ஆயினும் புஷ் நிர்வாகத்துடனான AFL-CIO அதிகாரத்துவத்தின் மறு நல்லிணக்க நாட்டத்தில் வேகம் கவனிக்கத்தக்கது, மற்றும் தொழிற் சங்க அதிகாரத்துவத்தின் படிநிலை அடுக்குகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பிற்போக்கு சமூக அக்கறையைப்பற்றி அது நிறையவே கூறுகின்றது. அது தொழிலாள வர்க்கத்திற்காக பேசவில்லை, மாறாக கோர்ப்பொரேட் அமெரிக்காவின் நலன்களுடன் இணைந்துள்ள சலுகைமிக்க மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திற்காக பேசுகிறது.

AFL-CIO செல்வந்த கோர்ப்பொரேட் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதி தீவிரவலதுசாரி சக்திகள் மற்றும் புதிய பாசிஸ்டுகளின் ஆதரவை வெளிப்படையாக தனது தளமாகக்கொண்டிருக்கும் நிர்வாகத்துடன் தன்னை அணி சேர்த்துக் கொண்டுள்ளது. புஷ் ஊழல் மிக்க தேர்தல் வழிமுறையினூடாக அதிகாரத்தைக் கைப்பற்றினார். குடியரசுக் கட்சியின் தேர்தல் திருட்டு மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் புஷ் ஜனநாயகமற்ற வழியில் நியமனம் ஆகியவற்றுக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் வெறுப்பையும் கோபத்தையும் காட்டினர்.

மற்றெந்த அதிகாரத்துவ அமைப்பு போலவே, AFL-CIO வும் புஷ் வெள்ளை மாளிகையில் அமர்ந்ததும் எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரத்தையும் புஷ்ஷையும் வழிபடுகின்றனர், இது ஆதாயநோக்கம் உடையது. தொழிற்சங்க பணித்துறை மனப்பான்மை 2000ம் ஆண்டு தேர்தலால் எழுப்பப்பட்ட ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகளுக்கு நடுநிலைமை காட்டுவதாகும். புளோரிடாவில் புஷ்ஷின் ஊழல்மிக்க வெற்றியானது, தொழிற்சங்க அதிகாரத்துவ தட்டுக்கள் தொழிலாளர்களின் கீழ்மட்ட அணியினர் தமது ஜனநாயக விருப்பங்களை உணர்த்துவதற்கு வாய்ப்பளிக்காமையை உறுதிப்படுத்துதற்கு, தேர்தலை, சங்க மாநாடுகளை மற்றும் ஒப்பந்த வாக்குகளை மோசடி செய்ய தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அமர்த்தப்பட்ட பழக்கப்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இருந்து அளவில் மட்டுமே வேறுபடும்.

ஆட்சிக்கு வந்த பின்னர், "மையத்திலிருந்து ஆளுதல்" என்பதை ஒதுக்கித்தள்ளிவிட்டு தனது அமைச்சரவையை கோர்பொரேட் லட்சாதிபதிகளாலும் வலதுசாரி சிந்தனையாளர்களாலும் நிரப்பினார். வெள்ளை மாளிகை இறுக்கவிசை திரும்பத்திரும்ப காயங்களை ஏற்படுத்துவதிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட எர்கோனாமிக்ஸ் (Ergonomics) விதிமுறைகளை நீக்கியது பின்னர் குடிநீரில் உள்ள இரசாயனப் பொருளின் குறைந்த பட்ச அளவை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை அகற்றியது. நோர்த்வெஸ்ட் விமான சேவை தொழில்நுட்பவியலார்களின் வேலை நிறுத்தத்தையும் அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தையும் ஜனாதிபதி தலையிட்டு தடுத்தார்.

காங்கிரசில் சட்டமியற்றப்பட்டு புஷ்ஷால் கையெழுத்திடப்படும் வரி விலக்கு மிக செல்வம்படைத்த ஒரு சதவீதத்தினரை இலக்காகக்கொண்டது. அது மைய அரசாங்கத்தை நிதியில்லாமல் ஆக்கவும் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பராமரிப்புகள் மீதுதாக்குதல் தொடுப்பதற்கு அடிப்படையை அமைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புஷ் நிர்வாகம் இராணுவமயம் மற்றும் ஒரு சார்பியம் (Unilateralism) இவற்றினை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையை ஏற்றிருக்கிறது. பூகோள வெப்பநிலை தொடர்பான க்யோட்டா உடன்பாட்டை நிராகரித்ததன் மூலம் வெள்ளை மாளிகை உலகை அதிர்ச்சி அடைய வைத்தது. அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட, ஏனைய பிரதான அரசுகளிடமிருந்து வரும் எதிர்ப்புக்களை தன்முனைப்பாக ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இப்போது இருக்கும் ஒப்பந்தங்களை மீறி ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை அமைப்பதற்கான அதன் நோக்கத்தை அறிவித்தது.

AFL-CIO தலைமையின் பெரும்பாலான பகுதிகள் புஷ் நிர்வாகத்தை ஆரத் தழுவிக்கொள்வதை இவற்றுள் ஒன்று கூட தடுக்கவில்லை. தொழிலாளர் அதிகாரத்துவமானது அதனது உடனடி சடரீதியான நலன்களுக்கான குறுகிய அக்கறையினால் வழி நடத்தப்படுகிறது. சில சலுகைகளுக்காக அரசாங்கத்துடன் பொது உடன்பாடுகொள்ளவிரும்புவதானது,தொழிலாளவர்க்கம் சம்பந்தமான அதன் வெறுப்பைமறைப்பதற்கு கூட முயற்சி செய்யாதிருக்கிறது.

மேலும், வெள்ளை மாளிகையின் முதலாளித்துவ ஆதரவு மற்றும் இனவாத கொள்கைகள் தொழிலாளர் அதிகாரத்துவங்களால் ஒலி பெருக்கிக் காட்டப்படுகிறது. நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம், எஃகு இரும்பு தொழிலாளர்கள் சங்கம், மோட்டார் தொழிற்துறை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய பிரதான தொழிற்சங்கங்கள் ஆகியன, அமெரிக்க பெருமுதலாளிகளது வெளிநாட்டு போட்டியாளர்களைக் கண்டனம் செய்வதில் கடந்த இரு தசாப்தங்களை செலவழித்தன. AFL-CIO ன் அமெரிக்கப் பொருட்களை வாங்கு பிரச்சார முன்னெடுப்பும், மெக்சிகன் டிரக் ஓட்டுநர்களைத் தடுக்கும் டீம்ஸ்டர் தொழிற்சங்கத்தின் பிரச்சாரம் போன்ற, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும், அமெரிக்க தொழிற்சங்கத்தின் அரசியலை பல அம்சங்களில் குடியரசுக்கட்சியின் அதிவலதுசாரி மற்றும் இனவாத சக்திகளுக்கு அருகாமையில் கொண்டு வருகின்றது.

AFL-CIO வும் புஷ் உம் ஒன்றிணைந்து வருவதற்கு மேலும் காரணம் இருக்கிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சமூக மற்றும் அரசியல் உறவுகள் எதிர்பார்த்திராத மட்டத்துக்கு பதட்டமாக இருப்பதை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உணர்கின்றன. புஷ் நிர்வாகம் பரவலாக சட்டத்துக்கு முரணானதாக பார்க்கப்படுகிறது மற்றும் அது மிகக்குறுகிய சமூக அடித்தளத்தின் மீது தங்கி இருக்கிறது. கதவடைப்புகள் பெருகுகின்றன மற்றும் பொருளாதார தளர்வை நோக்கிய அதிகரிப்பை அடையாளங்கள் காட்டுகின்றன. இத்தகைய சூழ்நிலைமைகளின் கீழ் தொழிற்சங்க அதிகாரத்துவமானது, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான இயக்கம் கீழிருந்து வெடித்து எழுவதிலிருந்து புஷ் நிர்வாகத்தைக் காக்கமுண்டு கொடுத்து உதவ விரும்புகின்றது. அத்தகைய இயக்கம் புஷ் ஆல் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமெரிக்க பெரு முதலாளிகளது நலன்களுக்கு அச்சுறுத்தலாக மட்டும் அல்ல, மாறாக அமெரிக்க கோர்ப்பொரேட் கம்பெனிகளை பாதுகாப்பதிலிருந்து தங்களது வருமானத்தையும் சலுகைகளையும் பெறுகின்ற AFL-CIO அதிகாரத்துவத்தின் நலன்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved