World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lankan President suspends parliament to avoid no-confidence vote

இலங்கை ஜனாதிபதி நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பைத் தவிர்க்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்

By K. Ratnayake
14 July 2001

back to screen version

ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனது சிறுபான்மை அரசாங்கம் தோல்வி கண்டு போவதை தடுத்து நிறுத்தும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து பாராளுமன்றத்தை 60 நாட்களுக்கு ஒத்திவைக்கவும் ஒரு புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக மக்களுடன் "ஆலோசிக்க" ஆகஸ்ட் 21ம் திகதி ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தவும் போவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) அரசாங்கத் தரப்பில் இருந்து எதிர்க் கட்சிக்கு மாறிச் சென்றதை தொடர்ந்து ஜூன் 22ம் திகதி ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கம் பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மேலதிகமாக அரசாங்கம் ஏப்பிரல் கடைப் பகுதியில் அமைச்சர் மஹிபால ஹே ரத் மாவெனெல்லையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடாத்திய இனவாத தாக்குதல், ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவரான பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பிரேரணை என்பவற்றுக்கும் முகம் கொடுத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குமாரதுங்க கடந்த சில வாரங்களாக "பாராளுமன்றத்தில் இருந்து வரும் ஸ்திரமற்ற நிலையை" சுட்டிக் காட்டி தனது தீர்மானத்தை நியாயப்படுத்த முயன்றுள்ளார். அவர் பாராளுமன்ற கூட்டத் தொடரை இடைநிறுத்தியதற்கு இரண்டு காரணங்களை வழங்கினார். முதலாவது, "சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தமது வேறுபாடுகளுக்கு ஒரு தீர்வு காண" உதவுவது. இரண்டாவது, ஏனைய விடயங்களோடு ஒரு உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவும் விதத்தில் தேர்தல் முறையை மாற்றும் ஒரு புதிய அரசியலமைப்பு முறையை கொணர்வது.

பொதுஜன முன்னணி அரசியல்வாதிகள் இன்றைய தேர்தல் முறை சிறிய அரசியல் கட்சிகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பதற்காக அதை இடைவிடாது விமர்சனம் செய்து வந்துள்ளனர். எவ்வாறெனினும் அந்த அரசியலமைப்பு எந்த விதத்தில் மாற்றப்பட வேண்டும் என்ற விடயம் அடியோடு மூடுமந்திரமாகவே உள்ளது. கருத்துக் கணிப்பில் கேட்கப்பட வேண்டிய விடயம் திட்டவட்டமான அரசியல் அமைப்பு மாற்றங்களை பிரேரிப்பதற்கு பதிலாக வெறுமனே பின்வரும் விதத்தில் குறிப்பிட்டுக் கொண்டுள்ளது. "ஒரு தேசிய ரீதியில் முக்கியத்துவமானதும் அத்தியாவசியமானதுமான தேவையாகியுள்ள ஒரு புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமாகியுள்ளது என்ற பிரேரணையுடன் நீங்கள் இணக்கம் காண்கிறீர்களா?"

எதிர்க் கட்சிகளும் அரச சார்பு தொடர்புச் சாதனங்களை தவிர்ந்த ஏனைய சகல தொடர்புச் சாதனங்களும் இந்த தீர்மானத்தை "சர்வாதிகாரமானதும்" "ஜனநாயக விரோதமானதும்" என பெயர் சூட்டின. பெரிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தான் ஒரு பரந்த அளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பாராளுமன்ற ஒத்தி வைப்புக்கு எதிராக நடாத்தப் போவதாக அறிவித்தது. பிரதான எதிர்க் கட்சி கொறடாவான டபிள்யூ.ஜே.எம்.லொகுபண்டார குமாரதுங்கவின் முடிவை எதிர்த்து நிற்பதற்கான விதிமுறைகளை கலந்துரையாடுவதற்கு எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மிகவும் சிக்கலான அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை தோற்றுவிக்கும் விதத்தில் எதிர்க் கட்சி, பாராளுமன்ற சபாநாயகரை ஜனாதிபதியை புறக்கணிக்கும்படியும், பாராளுமன்றத்தை மீளக் கூட்டும் படியும் அழைப்பு விடுத்துள்ளது.

பொதுஜன முன்னணியின் கூட்டினுள்ளேயும் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டுள்ளன. ஜீ.எல்.பீரிஸ், மகிந்த இராஜபக்ச, மகிந்த விஜேசேகர உள்ளடங்களான சிரேஷ்ட அமைச்சர்கள் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் விடயத்தை அறிவிக்கத் தவிறியதற்காகவும் அதையிட்டு கலந்தாலோசிக்க தவறியமைக்காவும் குமாரதுங்கவை விமர்சனம் செய்துள்ளனர். அரசாங்கப் பேச்சாளர்கள் மறுத்த போதிலும் தனிப்பட்ட தொடர்பு சாதனங்களும் மின்னியல் தொடர்பு சாதனங்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க புதன்கிழமை இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் இருந்து ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தன.

குமாரதுங்கவின் இந்த தீர்மானம் முதலாவதாக பாராளுமன்றத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பொதுஜன முன்னணியின் பல்வேறு நிலைப்பாடுகளுக்கும் முண்டு கொடுக்கும் முயற்சிகள் தோல்வி கண்டு போனதை தொடர்ந்தே எடுக்கப்பட்டது.

10 எம்.பீ.க்களை கொண்டுள்ள சிங்கள தீவிரவாதிகளான ஜே.வி.பி.க்கு அரசாங்கம் ஒரு திட்டவட்டமான அழைப்பு விடுத்தது. பெரிதும் மென்மையான முறையில் பிளவுபட்டுப் போயுள்ள பாராளுமன்றத்தில் இந்த எண்ணிக்கை தீர்க்கமானதாகியுள்ளது. சில அமைச்சர்கள் ஜே.வி.பி.யை அதன் "கொள்கைப் பிடிப்பான தன்மை" க்காக பாராட்டியுள்ளனர். யூ.என்.பி. முன்னர் ஜே.வி.பி.யை தடை செய்ததையும் அவர்கள் ஜே.வி.பி. தலைவர்களுக்கு நினைவூட்டினர்.

யூன் 30ம் திகதி பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தளங்கள் மீது ஒரு கணிசமான அளவு விமானத் தாக்குதல்களை நடாத்த எடுத்த முடிவு ஜே.வி.பி. உட்பட்ட சோவினிச கும்பல்களின் ஆதரவுகளை தம்பக்கம் திரட்டிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. இக்கட்சிகள் நீண்டுவரும் உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டும் பொருட்டு குமாரதுங்க அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதையிட்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

அதே சமயம் ஆளும் கூட்டரசாங்கத்தில் முக்கிய பங்காளியான ஸ்ரீ.ல.சு.க.(SLFP) ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க யூ.என்.பி.யுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது. இதன் மூலம் சிறிய கட்சிகளின் -சிங்கள தீவிரவாதிகளதும் (JVP)- பல்வேறு தமிழ் கட்சிகளதும் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஒரு வழிவகையாகவே இது கையாளப்பட்டது. எவ்வாறெனினும் இந்த இரு பெரும் கட்சிகளுள் இருப்பவர்களில் கணிசமான தொகையினர் இத்தகைய ஒரு மாபெரும் கூட்டரசாங்கத்துக்கு எதிர்ப்புக் காட்டுகின்றனர்.

அவசரகால அதிகாரங்கள்

ஜூலை 6ம் திகதி நாட்டின் அவசர காலச் சட்ட விதிகளை புதுப்பிப்பதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சிகள் அறிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அம்மணக் கோலம் அம்பலமாகியது. யூ.என்.பி.யும் சரி ஏனைய கட்சிகளும் கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கொள்கை அடிப்படையில் எதிர்த்ததே கிடையாது. மாத மாதம் அவை அவசரகால நிலைக்கு வழக்காறான முறையில் முத்திரை குத்தி வந்தன. இத்தடவை யூ.என்.பி. பாராளுமன்றத்தில் அதன் எண்ணிக்கையை பரீட்சிக்கவும் அரசாங்கத்தின் நெருக்கடியை ஆழமாக்கவும் முயற்சிக்கின்றது.

பொதுஜன முன்னணி, பேரினவாத அர்த்தத்தில் யூ.என்.பி.யையும் ஜே.வி.பி.யையும் திட்டித் தீர்ப்பதன் மூலம் இதற்கு பதிலளித்தது. அவசரகாலச் சட்டத்தின் முடிவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான தடையை நீக்குவதற்கு இட்டுச் செல்லும் என எச்சரிக்கை செய்தது. யூ.என்.பி.யும் ஜே.வி.பி.யும் இதற்கு அன்புடன் பதிலளிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதை நாம் ஆதரிக்கவில்லை எனவும் ஜனாதிபதி தமிழ் பிரிவினைவாதிகளை தடை செய்வதற்கு வேறு சட்ட விதிமுறைகளை கொண்டுள்ளதாகவும் வலியுறுத்தியது.

குமாரதுங்க யூலை 4ம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் (PTA) பொதுஜன பாதுகாப்பு சட்டத்தையும் (PSO) தாங்கிப் பிடிக்க பாராளுமன்றத்தில் குறுக்குவழியைக் கண்டுபிடித்தார். குமாரதுங்க, பயங்கரவாத தடைச் சட்டத்தையும் பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தையும் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் திணித்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாவித்தார். மறுநாள் ஜனாதிபதி கொழும்பு நகரத்தை ஒரு "பெரிதும் பாதுகாப்பு பிராந்தியம்" ஆகப் பிரகடனம் செய்தார்.

இந்நடவடிக்கைகள் குறிப்பாக தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளன. பொலிசாருக்கும் இராணுவத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்யும் கணிசமான அளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பொதுஜன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (PSO) மின்சாரம், நீர் விநியோகங்கள் உணவு, போக்குவரத்து, தபால், தந்தி, ஒலிபரப்புடன் தொடர்புபட்ட சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் குமாரதுங்கவின் மாற்றுத் திட்டங்கள் காய்ந்து போயின. ஜே.வி.பி.யுடனும் யூ.என்.பி. தலைவர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது திட்டவட்டமான எதுவும் தலைநீட்டவில்லை. மேலும் எதிர்க் கட்சிகள் தாம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தன. அரசாங்கத்தை இராஜினாமாச் செய்யக் கோரி யூ.என்.பி.யும் மற்றும் எதிர்க் கட்சிகளும் பொதுக் கூட்டங்களை நடாத்தி வருகின்றன. பொதுஜன முன்னணி, "அரசாங்கத்ததை வீழ்த்த விடுதலைப் புலிகளுடன் யூ.என்.பி. சதி" என்ற தலைப்பில் கூட்டங்கள் நடாத்தியது.

ஜூலை 6ம் திகதி அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழந்ததைத் தொடர்ந்து யூ.என்.பி. எதிர்க்கட்சிக்கு சார்பாக பாராளுமன்ற கமிட்டிகளை மாற்றி அமைக்கும்படி கோரியது. பொதுஜன முன்னணி தலைதப்பியதற்கு காரணம், பாராளுமன்ற சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க பிரேரணை ஒழுங்கற்றது எனக் கூறி பாராளுமன்றத்தை யூலை 16ம் திகதி வரை ஒத்தி வைத்ததேயாகும். குமாரதுங்கவின் உறவு அறுத்த தம்பியான அனுரா பண்டாரநாயக்க யூ.என்.பி. தலைவர்களில் ஒருவராவார். இவர் ஸ்ரீ.ல.சு.க- யூ.என்.பி. கூட்டரசாங்கத்துக்காக இடைவிடாது வக்காலத்து வாங்கிவந்துள்ளார்.

பொதுஜன முன்னணி அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆகஸ்ட் 7க்கு ஒத்திவைக்க தீர்மானித்ததைத் தொடர்ந்து அரசியல் மோதுதல் உச்சக் கட்டத்தை அடைந்த்தது. அரசாங்கத்துக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயன பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் விதத்திலேயே இங்ஙனம் செய்யப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் தேர்தலை முன்கூட்டியே நடாத்த அழைப்பு விடுக்கும் வாய்ப்பை உண்டுபண்ணியது. கடந்த தேசிய பொதுத் தேர்தல் அக்டோபரில் இடம்பெற்றது. அத்தோடு அதில் இருந்து ஒரு ஆண்டு கடந்து செல்லாத வரையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு புதிய தேர்தலை நடாத்த முடியாது. பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆகஸ்டு மாதம் வரை தடுத்து வைத்திருந்தால் குமாரதுங்க பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு நீடிக்க முடியும் எனவும் பின்னர் தேர்தல்களை நடாத்த முடியும் எனவும் கணித்துக் கொண்டுள்ளனர்.

யூ.என்.பி.யும் எதிர்க் கட்சிகளும் உடனடியாக சபாநாயகரை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு யூலை 18ஐ நாள் குறிக்கும்படி கோரியதன் மூலம் இதற்கு குழிபறித்தனர். அந்த திகதியில் விவாதம் இடம்பெறுவதை ஊர்ஜிதம் செய்யும்படி கோரி சகல 115 எதிர்க் கட்சி எம்.பீ.க்களும் -பாராளுமன்றப் பெரும்பான்மையினர்- ஒரு மகஜரை கையளித்தனர். சபாநாயகரால் உண்மை அறிவிக்கப்பட்ட ஒரு நிலையில் குமாரதுங்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

பெருவர்த்தகர்கள் நெருக்குவாரம்

இலங்கையில் நீண்டுவரும் அரசியல் பாரிசவாதத்தின் பின்னணியில் நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தமும் ஆழமான பொருளாதார நோய்களும் முக்கியமாக பிரமாண்டமான இராணுவச் செலவீனங்களும் இருந்து கொண்டுள்ளன. பெருவர்த்தக நிறுவனங்களின் கணிசமான பகுதியினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் வேண்டிக் கொண்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களை அமுல் செய்யுமாறும் அரசாங்கத்தை நெருக்கி வருகின்றனர். ஆளும் பிரமுகர்களிடையே உள்ளவர்களில் பொருளாதார முன்னேற்ற குறைபாட்டினாலும் இன்றைய அரசியல் ஸ்தம்பித நிலையாலும் மனவிரக்தி அடைந்து போனவர்கள் பெரிதும் எதேச்சதிகாரமான ஆட்சி முறைகளை ஏற்படுத்துவதன் அவசியத்தையிட்டு கலந்துரையாடல்கள் நடாத்துவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் நெருக்கடி ஒன்றின் மேல் ஒன்றாக தொடர்ந்து இடம்பெறுவதால் ஆளும் வட்டாரங்களிலான மனோபாவம் பெரிதும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. கடந்த வார இறுதியில் 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான ஆசிரியத் தலையங்கம் கூறியதாவது: "அதிகார சமன்பாடுகள் அந்தளவுக்கு திரவமாக உள்ளன. அந்தளவுக்கு ஆட்டம் கண்டதாய் உள்ளது. நாடு சகல விதத்திலும் அரசியல் அராஜக நிலைமைக்குள் சென்று கொண்டுள்ளது தெரிகின்றது. குறைந்த பட்சம் நாடு, ஆட்சி செய்ய முடியாத ஒன்றாக வேகமாக மாறி வருகின்றது. சகல அரசியல் முகாம்களிலும் பதட்ட நிலை சுவிச்சுக்கள் அழுத்தப்படுகின்றன. நாடு இரு பெரும் கோஷ்டிகளுக்கு இடையேயான ஒரு அரசியல் குமுறல் நிலையின் விளிம்பில் இருந்து கொண்டுள்ளது தெரிகின்றது. மறுவார்த்தையில் சொன்னால் ஏற்கனவே தேசிய அரசியல் அரங்கில் ஏற்கனவே தீர்க்கப்படாத சகல நகரங்களும் இழகத் திறந்துவிடப்படப் போகின்றன.

"அரசியல் பிரச்சாரங்கள் ஏற்கனவே ஒன்றில் நேரடியாகவோ அல்லது மோசடியாகவோ பதுங்கி ஒதுங்கியோ தொடுக்கப்பட்டுள்ளன. மதரீதியான நிந்தனை அரசியல் முறையானது சமூக திரையை கிழித்து எறிந்து கொண்டுள்ளது. அதிகாரத்துக்கான அடங்காத ஆசையும் அதன் பலனாக அதிகாரத்திலும் சலுகைகளிலும் ஒட்டிக் கொள்ளும் முயற்சியும் பேய்பிடித்த வழியில் இட்டுச் சென்றுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை சுருட்டிக் கொள்ளவும் அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்கவும் முயற்சிக்கிறார்களே தவிர வேறொன்றும் கிடையாது என்பது பளிச்சிட்டு தெரிகின்றது. நரக ஆட்சியும் நரக பொருளாதாரமும் யுத்தமும் சட்ட சபையின் தொடர்ச்சியான அரசியல் வாழ்வுமே விடயமாகும்."

கொழும்பு பங்குமுதல் சந்தை கடந்த புதன்கிழமை குமாரதுங்கவின் பிரகடனத்துக்கு பாதகமான முறையில் பிரதிபலித்தது. அரசியல் ஸ்திரமற்ற நிலையின் மேலாய சாத்தியத்தை எடுத்துக் காட்டியது. சகல பங்கு விலைச் சுட்டெண்களும் 430ல் இருந்து 421 ஆக வீழ்ச்சி கண்டது. மிலங்கா (Milanka) விலைச் சுட்டெண் 646ல் இருந்து 627 ஆக வீழ்ச்சி கண்டது. இந்த வீழ்ச்சியானது ஏற்கனவே மோசமடைந்து செல்லும் பொருளதாராத்திற்கு எதிராக இடம்பெற்றுள்ளது. மத்திய வங்கி முதலாவது காலாண்டுக்கான வளர்ச்சி வீதம் 1.3 சதவீதம் என அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 6 சதவீதமாக இருந்துள்ளது.

பெரு வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் கடந்த வாரம் கூடி, இரு பெரும் அரசியல் கட்சிகளையும் இணையும்படி அழைப்பு விடுத்தனர். இலங்கையின் பெரும் வர்த்தக கூட்டுக்களில் ஒன்றான ஹே லீசின் மாஜி. பிரதி தலைவர் மகேந்திர அமரசூரிய ஸ்ரீ.ல.சு.க. யூ.என்.பி. (SLFP,UNP) மீது அதிகரித்த அளவிலான நெருக்குவாரத்தை பிரயோகிக்க வேண்டும் என வேண்டினார். அவர் கூறியதாவது: நிலைமை பெரிதும் பாரதூரமானது. எனது கருத்தின்படி தனியார் துறை அரசாங்கத்தின் மீதும் அரசியல் கட்சிகள் மீதும் செல்வாக்கு செலுத்துவதில் காத்திரமானதாக இல்லை." மற்றொரு வர்த்தகத் துறை தலைவர் கூறியதாவது: "நாம் பதாகைகளைக் காவிக் கொண்டு தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்" என்றுள்ளார்.

இந்த இரு பெரும் அரசியல் கட்சிகளிடையே ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்படாது விட்டால் அதனது நிகழ்ச்சி நிரலில் எதுவுமே அமுல் செய்யப்படமாட்டாது என்பதை ஆளும் வர்க்கம் நன்கு அறியும். யுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. யூ.என்.பி.யும் சரி ஸ்ரீ.ல.சு.க.வும் சரி எந்த ஒரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுப்பதாக இல்லை. ஒரு புறத்தில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை நோக்கிய நடவடிக்கைகள் ஜே.வி.பி. போன்ற சிங்கள பேரினவாத அமைப்புக்களால் கண்டனம் செய்யப்பட்டுள்ளன. மறுபுறத்தில் யுத்தத்தின் தொடர்ச்சி பெரிதும் செலவுக்கிடமாகி உள்ளதோடு தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதும் தோல்வி கண்டு போயுள்ளது. இது தமிழ் கட்சிகளை பைத்தியம் பிடிக்கச் செய்துள்ளது.

யூ.என்.பி.-ஸ்ரீ.ல.சு.க. கட்சிகளிடையேயான வசைபாடும் போட்டி பகிரங்கமாகத் தொடர்ந்து இடம் பெற்றாலும் இரண்டு கட்சிகளும் விடயங்களை அந்தரங்கமாகக் கலந்துரையாடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அனுர பண்டாரநாயக்க திங்கட்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ள அதே வேளை குமாரதுங்கவை செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளார். பத்திரிகை செய்திகளின்படி ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும் விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரு தரப்பார் மீதுமான நெருக்குவாரம் அதிகரித்தது. பெரு முதலாளிகள் சம்மேளனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் "ஜொயின்ட் பிசினஸ் போரம்' (Joint Business Forum) அவசரமாக கூடியதோடு ஒரு தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதை இலக்காகக் கொண்டு பாராளுமன்றத்தை மீளக் கூட்டும்படி அழைப்பு வகுத்தது. இக்கூட்டம் ஒரு கருத்துக்கணிப்பு நடாத்தும் தீர்மானத்தையிட்டு "அதிருப்தி" தெரிவித்ததோடு இதன் விளைவுகளை சுட்டிக் காட்டி ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தரும்படி வேண்டியுள்ளது.

சண்டே டைம்ஸ் ஆசிரியத் தலையங்கம் சுட்டிக் காட்டுவது போல் ஆளும் வர்க்கம் இன்னும் பல தெரிவுகளையும் கொண்டுள்ளது. யூ.என்.பி.யையும் ஸ்ரீ.ல.சு.க.வையும் ஒரு கூட்டரசாங்கம் அமைக்க நெருக்க முடியாது போனால் பதிலீடு ஒன்றில் உடைந்த கூட்டரசாங்கத்தை தொடர்தல் அல்லது இராணுவத்தின் ஒரு பிரிவினருடனும் அரச சாதனங்களுடனும் குமாரதுங்காவை ஆதரிக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் சேர்ந்து பெரிதும் எதேச்சதிகார வடிவிலான ஆட்சியை அமைப்பதாக இருந்து கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved