World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: ஆசியா
:
இலங்கை
Protests in Sri Lanka against the rape and torture of Tamil women இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் சித்திரவதை செய்வதற்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் By Vijitha Silva கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தமிழ் பெண்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதை எதிர்த்து இலங்கை முழுவதும் இடம்பெற்ற கண்டனப் பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்குபற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு மத்தியில் உள்ள ஒரு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் ஒரு இளம் தாய் சமீபத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளானதைச் சுட்டிக் காட்டுவதாக விளங்கியதோடு தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் அதிகரிப்பினை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இருந்தது. யுத்தப் பிராந்தியமான வடக்கிலும் கிழக்கின் சில பகுதிகளிலும் கடைகள், காரியாலங்கள், பாடசாலைகள் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்தது. வெள்ளிக்கிழமை காலை மத்திய கொழும்பில் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் அடைக்கப்பட்டன. மாலை நூற்றுக்கணக்கான மக்கள் "தமிழ் பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்து!" "குற்றவாளிகளுக்கு தண்டனை கொடு," "எமக்கு நீதி வேண்டும்" என கோஷித்து பிரதான ரயில் நிலையத்தின் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நாட்டின் மத்திய மலையக மாவட்டங்களின் தோட்டங்களில் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். சில தோட்டங்களில் வேலைக்குச் சமூகமளிக்காதவர்களின் எண்ணிக்கை 60 வீதமாக உயர்ந்திருந்தது. ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய சம்பவம் நடைபெற்றது ஜூன் 24ம் திகதியாகும். முதல் நாள் இரவு ஒரு இளம் தமிழ் பெண் வேலைமுடிந்து தன் கணவனுடன் வீடு திரும்பிகொண்டிருந்த போது மத்திய கொழும்பு மருதானை பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் பொலிசாரும் இராணுவத்தினரும் அவர்களை நிறுத்தியுள்ளனர். பொலிசார் அவளது விலாசத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் மறு நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) ஏதும் தொடர்புகள் உள்ளதா என விசாரணை செய்யும் சாட்டில் அப்பெண்ணிடம் சென்றுள்ளனர். அப்பெண் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள தனிமையான ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆறு பொலிசாராலும் இராணுவத்தாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளானாள். அவர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வார பிரச்சாரம் இந்த வருடத்தில் இடம்பெற்றிருந்த ஒரு தொகை சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவித்தது. * மார்ச் 28ம் திகதி, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய யோகலிங்கம் விஜிதாவுக்கு உயர் நீதி மன்றம் அனுமதி வழங்கியது. கடந்த வருடம் ஜூன் 21ம் திகதி திருகோணமலையில் கைதுசெய்யப்பட்ட 27 வயதான விஜிதா, விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையாளி என குற்றம் சாட்டப்பட்டு நீர்கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். செப்டம்பர் 20ம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படுவதற்கு முன்னதாக அவர் ஜூன் 26ம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுத் துறையிடம் கையளிக்கப்பட்டார் (TID). பொலிசாரும் டீ.ஐ.டி நபர்களும் கையாண்ட சித்திரவதைகள் தொடர்பான தெளிவான விபரங்களை விஜிதா வழங்கியுள்ளார். பெற்றோலில் கலக்கப்பட்ட மிளகாய் தூள் நிரப்பி பொலித்தீன் பாக்கினால் அவளின் முகத்தை மூடிக் கட்டினர். வயராலும் தடியாலும் அவளைத் தாக்கினர். விரல்களிலும் நகங்களிலும் குண்டூசிகளை ஏற்றினர். மிளகாய்த் தூளில் தோய்த்தெடுக்கப்பட்ட வாழைப் பொத்தியை அவளது மர்ம உறுப்புக்குள் திணித்தனர். ஒரு விடுதலைப் புலி அங்கத்தவர் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதி அதில் கையெழுத்திடுமாறு பொலிசார் தன்னை பலவந்தப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார். கடந்த செப்டம்பர் மாதம் இந்த இளம் பெண் வைத்திய சிகிச்சைக்காக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது ஒரு துணை சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது கதையைக் கூறியுள்ளாள். நீர்கொழும்பு பொலிசாரின் தனிப்பட்ட நண்பர் ஒருவர் செய்து கொண்ட பொய் முறைப்பாட்டின் பேரில் பொலிசார் செயற்பட்டதாக அப்பெண் குற்றம்சாட்டினர். அவரது மனு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தையும் டீ.ஐ.டி.யையும் சேர்ந்த முக்கிய உத்தியோகத்தர்கள் உட்பட எட்டுபேரை பேர் குறிப்பிட்டுள்ளது. அவரது முறைப்பாடுகள் சம்பந்தமாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புகள் எதுவித கவனமும் செலுத்தவில்லை எனவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளர். அப்பெண்ணின் வழக்கு பரந்தளவில் பகிரங்கப்படுத்தப்பட்டதை அடுத்தும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ள உத்தரவிடுமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நெருக்கியதன் பின்னரே அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். * ஏப்பிரலில், மன்னாரிலும் மட்டக்களப்பிலும் இரண்டு தமிழ் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சித்திரவதை செய்யப்பட்டது சம்பந்தமாக -வீரக்கோன் சிவமணி (24 வயது), நந்தகுமார் விஜிகலா (22 வயது)- ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். மன்னாரில் உள்ள தனியார் விடுதிகளில் மேற்கொண்ட சோதனைகளை அடுத்து அவர்கள் விஜிகலாவின் கணவனோடும் சிவமணியின் ஆறுவயது மகனுடனும் மார்ச் 10ம் திகதி கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் மன்னாரில் உள்ள நாசகார செயல்கள் தடுப்புப் பிரிவிற்கு (CSU) வான் மூலம் கொணரப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதோடு பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும் குண்டுகளை வைத்திருந்ததாகவும் சிங்களத்தில் எழுதப்பட்ட -விளங்காத பாஷையில்- "ஒப்புதல் வாக்குமூலத்தில்" கையொப்பமிடுமாறு நெருக்கப்பட்டுள்ளனர். சிவமணியும் விஜிகலாவும் ஏப்பிரல் 9ம் திகதி மன்னார் மாவட்ட நீதிபதியினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்பினதும் சர்வதேச மன்னிப்புச் சபையினதும் விசாரணைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு விசேட விசாரணைக் குழுவை நியமிக்கத் தள்ளப்பட்டார். ஏப்பிரல் 9ம் திகதி, சந்தேக நபர்களை கைதுசெய்ய ஒரு அடையாள அணிவகுப்பை நடாத்துமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டார். பாலியல் வன்முறைக்கும் சித்திரவதைகளில் சம்பந்தப்பட்டவர்கள் என 12 பொலிசாரையும் இரண்டு கடற்படை அதிகாரிகளையும் இந்த இரு பெண்களும் அடையாளம் காட்டினர். சிங்கள அடிப்படைவாதிகள் இந்த வழக்கின் மூலம் தமிழர் விரோத உணர்வுகளை தூண்டிவிடும் நோக்கம் கொண்டிருந்தனர் என்பதற்கு பல சாட்சியங்கள் உள. சோவினிசக் கட்சியான சிங்கள உறுமயவில் இருந்து பிரிந்த, சிங்கள ஜாதிக சங்கத்தின் தலைவரான, எஸ்.எல்.குணசேகர கடற்படை அதிகாரிகளையும் பொலிசாரையும் பாதுகாக்கும் சட்டத்தரணியாக ஆஜரானார். பெண்களை அவமானப்படுத்தும் அநாகரிகமான முயற்சி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டது. முன்னாள் சீ.எஸ்.யூ. உத்தியோகத்தர் என்.பீ.என்.சுரவீர, மன்னார் ரோமன் கத்தோலிக்க ஆயரான, ராயப்பு ஜோசப், இந்த இரண்டு பெண்களையும் அவர்களது குற்றச்சாட்டுக்களை பகிரங்கப்படுத்துமாறு தூண்டியதாக கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு எதிர்ப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். ஆயர் "விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதாக" இந்த உத்தியோகத்தர் குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறெனினும் இந்த இருவரும் பாலியல் ரீதியில் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதை பரிசோதித்து உறுதிப்படுத்திய மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, இந்தப் பெண்களின் குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி சுட்டிக் காட்டியுள்ளார். * மே மாதத்தில் இரண்டு தமிழ் யுவதிகள் பொலிசாரால் பாலியல் வன்முறைக்கு உள்ளானது பற்றிய மேலும் ஒரு வழக்கு அம்பலத்துக்கு வந்துள்ளது. கொழும்பு- பம்பலப்பிட்டி விடுதியொன்றில் தங்கியிருந்த இந்த இரண்டு பெண்களும் இன்னமும் பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தன்னைப் பொலிசார் பாலியல் ரீதியில் தாக்கியதாக குற்றம் சாட்டி அடிப்படை உரிமைகள் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். தன்னால் வாசிக்க முடியாத சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு ஆவணத்தில் தன்னைக் கையொப்பமிடுமாறு பொலிசார் பலவந்தப்படுத்தியதாக குற்றம் சாட்டும் அவர் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார். முதலில் பொதுஜன முன்னணி (PA) அரசாங்கம் பாலியில் துஷ்பிரயோகங்கள் சித்திரவதைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை பாதுகாப்புப் படையில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிறிய "கெட்ட கும்பல்" "புத்தி மாறாட்டத்தால்" செய்தவை போல ஒதுக்கித் தள்ளியது. ஆனால் அண்மைய குற்றச்சாட்டுக்கள் ஒப்பீட்டளவில் விரிவடைந்துள்ளதையும் தொடர்பு சாதனங்களின் அனுதாபத்தைப் பெற்றுள்ளதையும் வழக்குகள் பிரசித்தி அடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் எழுந்துள்ள அழுத்தங்களும் ஆளும் கும்பலின் அவதானத்தைத் தூண்டியுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் டெயிலி மிரர் பத்திரிகை "ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்" எனும் தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டதாவது: "கடந்த மூன்று வருட காலத்துக்குள், 200க்கும் அதிகமான பெண்கள், அதிகளவில் சிறுபான்மை தமிழர்கள், பொலிசாராலும் ஆயுதப் படை அதிகாரிகளாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று விடுத்த பயங்கரமான குற்றச்சாட்டு, கவலையை இரட்டிப்பாக்குகிறது." அந்தக் கட்டுரை சிறப்பியல்பற்றவகையில் சுட்டிக்காட்டியதாவது: "தமிழர்கள் ஏனைய பிரஜைகளுடன் ஒற்றுமையானவர்கள், சம உரிமை கொண்டவர்கள். சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக ஒரு சாதாரணத் தமிழராக இருப்பது குற்றமாகவே தெரிகிறது." மேலும் முதலில் கண்டன அறிக்கைகளை வெளியிடுவதை தாமாகவே மட்டுப்படுத்திக் கொண்டிருந்த சில தமிழ் கட்சிகள், தமிழர்கள் நடாத்தப்படும் விதம் சம்பந்தமாக வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கு பிரதிபலிக்கத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளதோடு ஆழமான ஒரு அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நிலைமையின் கீழ், தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) போன்ற எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல ஆளும் கூட்டரசாங்கத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் (CWC) அண்மைய ஆர்ப்பாட்டங்களுக்கு தமது ஆதரவை வழங்கியது. இந்த மாதத்தின் கடைப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக தற்போது இந்த சகல கட்சிகளும் பொதுஜன முன்னணியுடனோ அல்லது எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனோ (UNP) கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோசமான நீண்ட யுத்தம் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கும், பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் மேலதிக அதிகாரங்களை வழங்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திணிப்பதற்கும், மற்றும் தமிழர் எதிர்ப்பு நிலைமையை தூண்டிவிடுவதற்கும் பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யுமே பொறுப்பாளிகளாகும். ஆகவே தமிழ் பெண்கள் சித்திரவதை செய்யப்படவும் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படவும் ஒரு நிலைமையை சிருஷ்டித்தமைக்கு அவர்களே பொறுப்புச் சொல்லியாக வேண்டும். |