World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

A political quagmire

Sri Lankan government faces two no-confidence motions and an impeachment

ஒரு அரசியல் சிக்கல்நிலை

இலங்கை அரசாங்கம் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கும் ஒரு குற்றச்சாட்டுக்கும் முகம் கொடுக்கின்றது

By K. Ratnayake
20 June 2001

Back to screen version

இலங்கையின் ஆளும் பொதுஜன முன்னணி (PA) அரசாங்கம், கடந்த அக்டோபரில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன்னரே ஒரு இறுதிநிலையை அடையும் அரசியல் நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளது. அடுத்துவரும் வாரங்களில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்கும் அதேவேளை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான எதிர்க் கட்சியினரின் நகர்வுகள் நாட்டை ஒரு அரசியலமைப்பு நெருக்கடிக்குள் மூழ்கடிக்கும் நிலைமைகளைக் கொண்டுள்ளது.

குமாரதுங்கவைப் போலவே ஆளும் கூட்டரசாங்கத்தின் பிரதான கட்சியான அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP), அரசியல் ஆதரவைத் திரட்டும் பெரும் முயற்சிகளை செய்துவரும் ஒரு நிலைமையில், இக்கூட்டணி தானாகவே பல பகுதிகளாக உடைந்துபோவதற்கான அபாயம் வளர்ச்சி கண்டுள்ளது. அரசியல் திட்டங்கள் அடிக்கடி சிக்கலானதும் சில சந்தர்ப்பங்களில் ஆச்சரியமானவையாக இருந்த போதிலும், இன்றைய அடிப்படைப் பிரச்சினைகளான நீண்டுசெல்லும் உள்நாட்டு யுத்ததையும், பொருளாதார நெருக்கடியையும், மக்களின் சமூக நிலைமைகளின் சீர்கேட்டினையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் இலாயக்கற்றதாக இருப்பதே இந்த நெருக்கடிகளுக்கான அடிப்படையாகும்-

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இவ் அரசியல் நிலைமைகளை தனது சொந்த அபிவிருத்திக்காக சாதகமாக பயன்படுத்திக்கொள்வதில் தெளிவான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அது அரசியல் ஐக்கியத்துக்கான ஒரு மாதிரி அல்ல. எவ்வாறு முன்செல்வது என்பது தொடர்பாக முரண்பாடான யூ.என்.பி. கோஷ்டிகளுக்கிடையில் சிறிய ஒப்பந்தத்தைக் காணலாம். அரசாங்கத்தை கவிழ்ப்பது சில யூ.என்.பி. தலைவர்களின் தேவையாகும்; ஏனையவர்கள் ஸ்ரீ.ல.சு.க.வுடன் கூட்டணி சேரும் முன்நோக்கால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். நெருக்குவாரங்களைக் கொணரும் யுத்தத்துடனோ அல்லது நாட்டின் பொருளாதார சமூகப் பிரச்சினைகளுடனோ செயலாற்றுவது எப்படி என்பது தொடர்பாக அரசாங்கத்தைப் போல் எதிர்க் கட்சியிடம் எவ்வித உடன்பாடுகளும் கிடையாது.

அரசியல் சூழ்ச்சிகளின் அடுத்த கட்டம் அடுத்த சில நாட்களில் தலைக்கு மேல் வருவதாக தோன்றுகிறது.

* யூ.என்.பி. நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதன் மூலம், அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பான ஒரு பாராளுமன்ற விவாதத்தை துரிதப்படுத்துகின்றது. பிரேரணையின் நிபந்தனைகள் இன்னமும் தெரியவராத நிலைமையில், யூ.என்.பி. பேச்சாளரான கே. கொடித்துவக்கு கடந்த வியாழக்கிழமை தொடர்புச் சாதனங்களுக்கு அது அரசாங்கத்தின் "பொருளாதார நிர்வாக முறைகேட்டை" அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனத் தெரிவித்தார். பிரேரணையின் வெற்றிக்காக, யு.என்.பி. ஏனைய எதிர்க் கட்சிகளான சிங்கள சோவினிச மக்கள் விடுதலை முன்னணி (JVP), தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) இடமும், ஆளும் கூட்டணியின் சில உறுப்பினர்களிடமும் கூட ஆதரவை கோரிவருகின்றது.

* அதை கணக்கில் கொண்டு, அரசாங்க அமைச்சரான மகிபால ஹேரத்துக்கு எதிரான மேலும் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை யூ.என்.பி. ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இவரது மெய்காவலர்களும் ஆதரவாளர்களும் கடந்த ஏப்பிரல் மாதத்தில் மாவனல்லை நகரில் இடம்பெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலை தூண்டிவிடுவதில் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தும், 150 கடைகள் நாசம் செய்யப்பட்டதோடு, முஸ்லீம் சிறுபான்மையினரின் பரந்த எதிரப்பையும் தூண்டிவிட்டது.

யூ.என்.பி., பொதுஜன முன்னணியின் முக்கியமான பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் (SLMC) ஆதரவை வெற்றிகொள்வதற்காக மே மாதம் ஹேரத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தந்திரமாக நகர்த்தியது. கடந்த வாரம் குமாரதுங்காவுடனான ஒரு கலந்துரையாடலில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கட்சி அமைச்சருக்கு எதிரான எதிர்க் கட்சியின் பிரேரணையை ஆதரிப்பதாக எச்சரிக்கை விடுத்ததாகவும் "எப்படியும் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஆதரவு கிடைத்துவிடும் என நினைக்கவேண்டாம்" எனவும் சுட்டிக் காட்டியிருந்தார். அக்டோபரில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் பொதுஜன முன்னணியுடன் தாமதித்து இணைந்த ஸ்ரீ.ல.மு.கா. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு இதைக் காரணம் காட்டும் என யூ.என்.பி. தெளிவாக கணக்கிட்டுக்கொண்டுள்ளது.

* 1999ல் குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட அவரது நம்பிக்கைக்குரியவராக கூறப்படும் உயர் நீதிமன்ற நீதிபதி சரத் என். சில்வாவை குற்றம் சாட்டுவதற்காக கடந்த ஜூன் 6ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை எதிர்க் கட்சியின் மூன்றாவது தாக்குதலாகும். யூ.என்.பி.யின் பிரேரணை முறைகேடான தொடர்புடன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதற்கு தனது மனைவியை கைவிட்டதாகவும், பாரபட்ஷமான தீர்வுகளை வழங்கும் அதே வேளை தகாத முறையில் நீதிபதிகளை வெளியேற்றுவதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதியை குற்றம் சாட்டுகிறது. யூ.என்.பி. இந்த பிரேரணைக்கான ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஏற்கனவே தன்வசம் கொண்டுள்ளதோடு ஏனையோரின் ஆதரவைத் திரட்டி வருகின்றது.

எவ்வாறெனினும் பொதுஜன முன்னணியும் உயர் நீதிமன்றமும் புறந்தள்ளப்பட்டுள்ளன. ஜூன் 6ம் திகதி பொதுஜன முன்னணியுடன் சேர்ந்து முன்னணி சட்டத்தரணிகள் தாக்கல் செய்த வழக்கில், குற்றப்பிரேரணை தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்வதில் இருந்து தவிர்க்கும் பொருட்டு மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் ஒரு தடை உத்தரவை பிரப்பித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியைத் தோற்றுவிப்பதாக அச்சுறுத்தியது: தடை உத்தரவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம் நீதிமன்றத்துக்குரிய அதிகாரங்களை அபகரிப்பதாக குற்றம் சாட்டினர்; அதன் எதிரிகள் உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்தின் மேலதிகாரத்தை பலவீனப்படுத்துவதாக குறிப்பிட்டனர்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பதன் பேரில், தடை உத்தரவு மீதான விவாதம் பொதுஜன முன்னணியின் அரசாங்க மட்டத்திலான பொதுஜன முன்னணி பொதுச் செயலாளர் டி.எம். ஜயரத்ன உட்பட மகிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன போன்ற அமைச்சர்கள் மத்தியில் பல பிரிவுகளை தோற்றுவித்தது. யூ.என்.பி. உறுப்பினரும் குமாரதுங்கவின் உடன் பிறந்த சகோதரருமான, சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்க இன்று நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு எதிரான முடிவை எடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது. ஆனால் அரசியல் நிலைமையின் ஏனைய ஒவ்வொரு நிகழ்வும், பண்டாரநாயக்க எதைச் செய்யவுள்ளார் என்பது நிச்சயமற்றதாக உள்ளது.

மிகக் குறைந்த தொகையான நான்கு ஆசனங்களில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள, எட்டு கட்சிகளால் ஆக்கப்பட்டுள்ள ஆளும் கூட்டணி, இந்த எல்லாப் பிரச்சினைகளிலும் ஒரு நிச்சயமில்லாத நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. 225 பாராளுமன்ற ஆசனங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 94 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது. அடுத்த பெரும் பங்காளியான ஸ்ரீ.ல.மு.கா, அதனது முன்னணி அமைப்பான தேசிய ஐக்கிய முன்னணியுடன் (NUA) சேர்த்து 11 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (EPDP), மக்கள் ஐக்கிய முன்னணி (MEP), லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), மற்றும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (CPSL) ஆகியவையே ஏனைய பங்காளிக் கட்சிகளாகும்.

அரசியல் குழறுபடிகள்

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் பொதுஜன முன்னணியின் மிகவும் பலவீனமான பகுதியாக காணப்படுகின்றது. இந்த கூட்டணியைக் பாதுகாக்கும் ஏலத்தில், அரசாங்கம் கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனைக்கு மாநகர சபை அதிகாரத்தை வழங்கியது. கல்முனைக்கு ஒரு தனியான நிர்வாக மாவட்டத்துக்கான ஸ்ரீ.ல.மு.கா.வின் கோரிக்கை விடுத்த சிறிது காலத்தில் இந்நடவடிக்கை தொடர்ந்தும் ஸ்ரீ.ல.மு.கா.வை அரசாங்கத்துக்குள் வைத்திருக்க உதவும் என குமாரதுங்க எண்ணினார். கடந்த வெள்ளிக் கிழமை ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமை குமாரதுங்க சந்தித்த அதே நாள் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது.

எவ்வாறெனினும், அதே நேரம், அரசாங்கம் ஹக்கீமுக்கு எதிராக, ஸ்ரீ.ல.மு.கா.வின் உள்ளே முன்னாள் ஸ்ரீ.ல.மு.கால்கிரஸின் தலைவரின் மனைவியான பேரியல் அஷ்ரப் தலைமையிலான ஒரு குழுவுடன் திரைமறைவில் செயற்பட்டது. இந்தத் தலையீடு பற்றி ஹக்கீம் குமாரதுங்கவிடம் முறையிட்டிருந்தார். கடந்த வெள்ளிக் கிழமையும் சனிக்கிழமையும் மட்டக்களப்பு கிழக்கிலிருந்து வந்த அஷ்ரப்பின் ஆதரவாளர்கள் கொழும்பில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைமையகத்தையும் ஹக்கீமின் இல்லத்தையும் சுற்றிவளைத்திருந்தனர்.

அரசாங்கத்துக்கு ஹக்கீம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவு நிலையானதல்ல. சனிக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தமது கட்சி சபாநாயகருக்கு தடைவிதிக்கும் உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் ஆனால் அதே வேளை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதரவளிக்காது எனக் கூறினார். மஹிபால ஹேரத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, ஹக்கீம் குமாரதுங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் மிகவும் சிக்கலான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக அவரை தொடர்ந்தும் சந்தேகத்திலேயே வைத்துள்ளார். தான் "யூ.என்.பி. யாலோ அல்லது பொதுஜன முன்னணியாலோ நம்பிக்கைக்குள்ளாக்கப்பட முடியும்" என அவர் ஜாடை காட்டியுள்ளார்.

இந்த நிறந்தீட்டல்களுக்கு வெளியில், நாட்டின் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பமாக கருதப்படும் தமிழர்களுக்கு எதிரான 1983 ஜூலை திட்டங்களை ஆராய்வதற்கென, தென் ஆபிரிக்க பாணியிலான ஒரு உண்மை ஆணைக்குழுவை அமைத்துள்ளதாக ஜூன் 13ம் திகதி அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ அறிக்கைகளின் படி 350 தமிழர்கள் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் 18,000 வீடுகளும் கடைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானம் ஆளும் கூட்டணியில் தமிழ்க் கட்சிகளின் ஆதரவை தொடர்ந்தும் பாதுகாப்பதையும், எதிர்க் கட்சியிலிருந்து அவர்களை வெற்றிகொள்வதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

எவ்வாறெனினும், அரசாங்கத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையிலான பேச்சுவார்த்தைக்கு களம் அமைப்பதில் தமிழ்க் கட்சிகள் செல்வாக்கு செலுத்துவது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி கடந்த மாதம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற இருந்த வேளையில், கலந்துரையாடல்களுக்கு தடங்கலை ஏற்படுத்தும் எனக் கூறி எந்த ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் எதிர்த்தது. அதன் பிறகு, எவ்வாறெனினும், த.வி.கூட்டணி தமிழீழ விடுதலை இயக்கத்துடனும் (TELO) அகில இலங்கை தமிழ் காங்கிரசுடனும் (ACT) சேர்ந்து விடுதலைப் புலிகளை சட்டரீதியாக்குவது தொடர்பான அதன் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியதாகவும், இதனால் எதிரணியுடன் இணைந்து வாக்களிக்கலாம் எனவும் விமர்சித்தது.

இந்த அனைத்து நடவடிக்கைகளினதும் மிகவும் சிக்கலான நிலைமைகள் கூட்டணியின் ஸ்திரமற்ற நிலைமையை வெளிக்காட்டுகின்றன. தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினரின் கட்சிகளை ஆகர்சிக்க மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும், நிச்சயமாக, அப்பட்டமான சிங்கள சோவினிச மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) போன்ற அரசாங்கத்தின் ஏனைய பகுதிகளின் அனுதாபத்தை இழக்க வழிவகுக்கும். மாறாக அவற்றுடனான உறவை பாதுகாத்துக்கொள்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும், அல்லது ஆதரவை வெற்றிகொள்வதற்காக சிங்கள அடிப்படைவாதத்துக்கு அழைப்பு விடுப்பது, இரண்டுமே ஸ்ரீ.ல.மு.கா. வினதும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) போன்ற தமிழ் கட்சிகளதும் ஆதரவை இழப்பதாகும்.

கடந்த வாரம் ஒரு பகிரங்கக் கூட்டத்தில், ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க ஒரு தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கத்துக்காக ஸ்ரீ.ல.சு.க.வுடன் இணையுமாறு யூ.என்.பி.க்கு அழைப்பு விடுத்தார். இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் "சிறுபான்மைக் கட்சிகளது நியாயமற்ற, அயோக்கியமான கோரிக்கைகளை" தடுக்க இணையவேண்டும் என அவர் விவாதித்தார். ஸ்ரீ.ல.மு.கா.வினதும் த.வி.கூ.வினதும் வெறுப்பை உடனடியாகத் தூண்டிய திசாநாயக்கவின் அறிக்கை, அந்தப் பிரேரணையை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு குமாரதுங்கவுக்கு அழுத்தம் கொடுக்கச் செய்தது. அது தனிப்பட்டவர்களின் கருத்து என அந்த முன்மொழிவை வர்ணித்த குமாரதுங்க ஸ்ரீ.ல.சு.க.வோ அல்லது அரசாங்கமோ யூ.என்.பி.யுடன் கூட்டு சேர்வது தொடர்பான எந்த ஒரு தீர்மானத்தையும் மறுதளித்தார்.

பொதுஜன முன்னணியிலான பதட்டநிலை நாட்டின் அழிவுகரமான பொருளாதார நிலைமையான அரசாங்கத்தின் பெருந்தொகையான இராணுவ செலவு, உயர்ந்த எண்ணெய் விலை, வெளிநாட்டு முதலீட்டின் பற்றாக்குறை மற்றும் பூகோளப் பொருளாதாரத்தால் தூண்டப்பட்ட ஏற்றுமதி வீழ்ச்சில் பிணைக்கப்பட்டுள்ளது. 253 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பொருளாதார மறுசீரமைப்பு கோரிக்கைளை ஏற்றுக்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) அரசாங்கத்தை நெருக்கியமை கடந்த மாதம் முதல் முறையாக வெளியரங்குக்கு வந்தோடு பல ஆர்ப்பாட்டங்களையும் துண்டிவிட்டது.

குமாரதுங்க அரசாங்கம் ச.நா.நிதியத்தின் திட்டங்களை ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்து விட்டது. இந்தக் கோரிக்கைளில் பல கடந்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்டத்துள் அடங்கியிருந்த அதேவேளை தொழிலாளர்களதும் மாணவர்கள் மற்றும் ஏனையவர்களதும் கண்டனங்களையும் தூண்டியது. கடந்த பல வருடங்களுக்கு மேலாக தனியார் மயத்துக்கும் வேலை இழப்புகளுக்கும் முகம் கொடுத்துவரும் துறைமுக மற்றும் காப்புறுதி ஊழியர்களின் வேலை நிறுத்தங்களும் மறியல் போராட்டங்களும் இடம்பெற்றன. சம்பளப் பிரச்சினைகளால் தனியார் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். மூன்றாம் நிலைக் கல்வியை வெட்டித் தள்ளுவதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர். தண்ணீர் கட்டணங்களைத் திணிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக சிறு விவசாயிகள் மத்தியில் பரந்த அதிருப்தி காணப்படுகின்றது.

இருந்த போதிலும் அரசாங்கத்துக்கு ச.நா.நி. திட்டத்துடன் முன்செல்வதைத் தவிர வேறு தேர்வுகள் கிடையாது. ச.நா.நிதியத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதி, நடீம் உல் ஹக், ஜூன் 10ம் திகதி சன்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்ததைப் போல்: "திட்டத்தை அது ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் வகையில் அரசாங்கம் முழுப் பலத்துடனும் திணிக்க வேண்டும்... திட்டத்தில் ஏதாவது தீவிரமான மாற்றங்கள் இருக்குமானால், அது (கடன் திட்டங்கள்) காலாவதியாகிவிடும்."

ஒரு சிதறுண்ட எதிர்க் கட்சி

யூ.என்.பி. ஐக்கியமின்றி பிளவுண்டுள்ளது. உண்மையில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனத்தை விமர்சித்து வந்த யூ.என்.பி. பிரிவுகளே முதலில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை திட்டமிட்டனர். இந்தக் கருத்து வேறுபாடு கொண்டவர்களில் கட்சியின் உப தலைவர் கரு ஜயசூரிய, எதிர்க் கன்னையின் பிரதானியான டபிள்யூ.ஜே.எம்.லொகுபண்டார மற்றும் கட்சியின் துணைச் செயலாளர் ஜி.அதுகோரல ஆகியோர் முக்கியமானவர்களாகும். ஆரம்பத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த, பின்னர் அதைக் கைவிட்டவர்களான, சிங்கள வார இதழான றாவய ஆசிரியர் விக்டர் ஐவன் மற்றும் இலங்கைக்கான ராய்டர் நிருபரான வருன கருணாதிலக ஆகியோரின் போக்கை இவர்கள் ஆதரித்தனர்.

யூ.என்.பி. கருத்து வேறுபாட்டாளர்கள் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிட்ட போதும், உயர் நீதிமன்ற நீதிபதியை குற்றஞ்சாட்ட மேற்கொண்ட முயற்சியைத் தடுத்த விக்கிரமசிங்க இதையும் எதிர்த்தார். இன்னமும் தம்மை ஒரு மீளமைப்புக் குழுவாக அழைத்துக் கொள்ளும் இந்தக் குழு, ஏப்பிரல் நடுப்பகுதியில் விக்கிரமசிங்க வெளிநாட்டில் இருந்த போது அவரை நீக்குவதற்கு திட்டமிட்டிருந்தது. நேரத்துக்கு இலங்கை திரும்பியிருந்த சபாநாயகர் அணுர பண்டாரநாயக்க மூலம் யூ.என்.பி. தலைவருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து திட்டம் முழுமையாக கவிழ்ந்தது. அரசாங்கத்துக்கு எதிரான புதிய நகர்வுகள் விக்கிரமசிங்கவுக்கும் அவரது உட்கட்சி எதிரிகளுக்கும் இடையிலான உறுதியற்ற தற்காலிக உடன்பாட்டின் பெறுபேறுகளாகும்.

தேசிய ஐக்கியத்தின் பேரிலான அரசாங்கத்துக்கு ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க அழைப்பை அடுத்து யூ.என்.பி.யின் உள்ளேயான வேறுபாடுகள் மீண்டும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளன. விக்கிரமசிங்கவின் விசுவாசியான டிரோன் பெர்னான்டோ ஒரு யூ.என்.பி-ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி தொடர்பான ஒரு சமரசத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் குறிப்பிட்டதாவது: "ஒரு இடம் எரிந்து கொண்டிருக்கும் போது நீங்கள் அரசியல் சூதாட்டம் விளையாடமாட்டீர்கள். முதலில் நீங்கள் அனைவரும் சேர்ந்து நெருப்பை வெளியில் தள்ளவேண்டும்."

எவ்வாறெனினும் "பொதுஜன முன்னணிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது." அரசியல் அதிகாரத்தை கையில் எடுப்பதற்காக "நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதே சிறந்த நடவடிக்கையாகும்" என யூ.என்.பி. அதிருப்தியாளர் காமினி அதுகோரல குறிப்பிட்டுள்ளார். விடயத்தை மேலும் சிக்கலாக்குவதற்காக, யூ.என்.பி.யின் இன்னுமொரு குழுவின் தலைவர் மிலிந்த மொரகொட, ஒரு மூன்றாவது மார்க்கத்தை உருவாக்க முயற்சித்தார். யூ.என்.பி. நம்பிக்கையில்லாப் பிரேரணையுடன் முன் செல்லவேண்டும், என அவர் முன்மொழிந்தார், ஆனால் தேசிய ஐக்கியத்துக்கான எந்த ஒரு அரசிலும் பொதுஜன முன்னணியுடன் பேரம் பேசுவதற்கான சக்தியைப் பலப்படுத்திக் கொள்வதற்கு மாத்திரமே.

அதோடு இணைந்தவாறு, அரசாங்கமும் எதிர்க் கட்சியும் ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொன்றுக்குள் விழும் ஒரு அரசியல் சீர்குலைவு சித்திரத்தையும் முன்வைத்தனர். அரசியல் ஸ்தம்பித நிலை தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவோ அல்லது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கவோ இலாயக்கற்ற அதன் கட்சிகள் தொடர்பாகவும் பெரும் வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். அவ்வாறே, சமாதான நடவடிக்கைகள் தொடர்பாகவும் பெரும் சக்திகள் நம்பிக்கையிழந்துள்ளன. மேற்பார்வையிடும் ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் குழுவின் தலைவி லிக்கா ஊசிட்டாலோ, "துரதிஸ்டவசமாக இந்த விடயம் தொடர்பாக பெருமளவிலான சலுகைகளும் கண்காணிப்புகளும் உள்ளன" ஏன கடந்தவாரம் குறிப்பிட்டார்.

ஒரு குறுகிய காலத்தில், அரசியல் ஸ்திரமற்ற நிலை நிச்சயமாகத் தொடரவுள்ளது. அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளிலிருந்து தப்பிக்கொண்டாலும் கூட, இந்தப் பலவீனமான ஆளும் கூட்டணி இலகுவாக பிளவுபட்டு சிதறிப்போகக் கூடும். யூ.என்.பி. பாராளுமன்றப் பெரும்பான்மயை வெற்றி கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றியடையுமானால், அது பாராளுமன்றத்துக்கும், தனியாகத் தேர்வுசெய்யப்பட்டு நிறைவேற்று அதிகாரங்களை விரிவுபடுத்திக் கொண்ட, ஜனாதிபதி குமாரதுங்கவுக்கும் இடையிலான மோதல்களுக்கு களம் அமைக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved