:
ஆசியா
: இந்தியா
Attack on Indian parliament heightens danger of Indo-Pakistan war
இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் இந்தோ-பாக்கிஸ்தான் யுத்தத்திற்கான
அபாயத்தை கூட்டியுள்ளது
By Peter Symonds
20 December 2001
Use this version to
print |
Send this link by email
| Email the author
புதுதில்லியில் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான டிசம்பர் 13 தாக்குதல், அதனைத்
தொடர்ந்து இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களை விரைந்து அதிகரிக்கச் செய்துள்ளது. தானியங்கித்துப்பாக்கிகள்,
கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியவற்றால் ஆயுதபாணியாக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய ஐந்து பேர்கள்,
பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியில் பாதுகாப்புப்படையினருடன் 45 நிமிடங்களாக நடந்த சண்டையில், தாங்கள் சாவதற்கு
முன்னர் ஒன்பது பேர்களைச் சுட்டுக் கொன்றனர் மற்றும் மற்றவர்களைக் காயப்படுத்தினர்.
செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பேசியபொழுது, இந்திய உள்துறை அமைச்சர்
எல்.கே.அத்வானி ஜெய்ஷ்-இ-மொகம்மது மற்றும் லஷ்கர்-இ-தய்பா எனும் இரு காஷ்மீரீ பிரிவினைவாத குழுக்களையும்
பாக்கிஸ்தானின் (Inter-Services) ஐ.எஸ்.ஐ-ம்
தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். அவர் "இந்தியாவின் முழு அரசியல் தலைமையையும் துடைத்துக்
கட்ட" முயற்சிக்கும் "பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆலோசகர்களை" குற்றம்சாட்டி, இந்த நிகழ்ச்சியை "இந்தியாவில்
பாக்கிஸ்தான் ஆதரவினாலான பயங்கரவாதத்தின் இரு தசாப்த கால வரலாற்றில் மிகவும்எச்சரிக்கையான செயல்"
என விவரித்தார்.
இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக்கட்சியின் தீவிர உறுப்பினரான அத்வானி இந்தியாவின்
பதிலைப்பற்றிக் குறிப்பிடவில்லை ஆனால் அவரது போர்நாட்டமுடைய குறிப்புக்கள் நிச்சயமாக இராணுவம் திருப்பித்தாக்குதலை
நியாயப்படுத்துவதாக உள்ளது. கடந்தவாரம் தாக்குதலை அடுத்து உடனடியாக, அத்வானி பின்வருமாறு அறிவித்தார்:
"யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும் பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் நாம் அழிப்போம்"
பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத பயிற்சி முகாம்கள்
மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது சம்பந்தமாக ஆளும் வட்டங்களில் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அத்தகைய இந்தியத் தாக்குதல்--அந்தவகையான முதலாவது தாக்குதல்--நிச்சயமாக பாக்கிஸ்தானை கடுமையாக பதிலடி
கொடுப்பதற்கு தூண்டும், இது இவ்விரு அணுவாயுத வல்லரசுகளுக்கும் இடையில் யுத்த அபாயத்தை முன்னிறுத்துகிறது. இந்தியாவும்
பாக்கிஸ்தானும் 1947 சுதந்திரத்திற்குப் பின்னர், ஏற்கனவே மூன்று யுத்தங்களை நடத்தி உள்ளன. அதில் இரண்டு சர்ச்சைக்குரிய
காஷ்மீர் எல்லைப் பகுதி பற்றியதாகும். 1998ல் இரு நாடுகளும் அணு ஆயுத சோதனைகளை நடத்தின மற்றும்
1999ல் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கார்கில் பகுதியில் ஆயுதம் ஏந்திய காஷ்மீரி பிரிவினைவாதிகள் ஊடுருவியது
தொடர்பாக யுத்தத்தின் விளிம்புக்குச் சென்றன.
பாக்கிஸ்தானிய இராணுக் குழுவின் தலைவர், ஜெனரல் பர்வெஸ் முஷாரப் இந்தியப்
பாராளுமன்றம் மீதான தாக்குதலைக் கண்டித்தார் ஆனால் "பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்படும்
எந்தவிதமான திடீர் நடவடிக்கைக்கும் எதிராக எச்சரித்தார். இது மிக ஆபத்தான எதிரெதிர் தாக்குதலுக்கு வழிவகுக்கும்"
எனவும் கூறினார். இந்தத் தாக்குதலில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பில்லை என மறுத்தார். அவர் ஆரம்பத்தில் இதனை
இந்தியா அதன் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக "ஒத்திகை பார்க்கிறது" என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
ஜெய்ஷ்-இ-மொகம்மது மற்றும் லஷ்கர்-இ-தய்பா குழுக்களின் அலுவலகங்களை மூடிவிடுமாறும்
அவர்களின் தலைவர்களைக் கைது செய்து சொத்துக்களை முடக்குமாறும் இந்தியா சம்பிரதாயப்பூர்வமாக பாக்கிஸ்தானைக்
கோரியது. கடந்த வார இறுதியில் அத்வானி, "இந்தியா சில நாட்கள் கவனிக்கும்", அதன் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்
பாக்கிஸ்தானுக்கு எதிரான திருப்பித் தாக்குதல் விரைந்து செயல்படுத்தப்படும் என மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
காஷ்மீரி குழுக்களுக்கு எதிராக பாக்கிஸ்தான் எந்த நடவடிக்கையையும் எடுக்கு முன்னர் இந்தியா
அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று முஷாரப் வலியுறுத்தினார். ஆயுதம் ஏந்திய காஷ்மீரி
குழுக்களில் பல பாக்கிஸ்தான் இராணுவத்துடன் நெருக்கமான தொடர்பை வைத்திருக்கின்றன ஆனால் ஒன்று கூட இத்
தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.
செவ்வாயன்று நடந்த பிஜேபி பாராளுமன்றக் குழு கூட்டத்தில், "இந்த கோழைத்தனமான
குற்றத்தை" விசாரணை செய்த பிறகு இந்தியா தண்டனையை நிறைவேற்றும் என பிரமதமர் அடல் பிகாரி வாஜ்பாயி
எச்சரித்தார். மேலும் "குற்றத்தைப் போலவே தண்டனையும் பெரிதாக இருக்கும்" என்றார். நேற்று பாராளுமன்றத்தில்
பேசுகையில், அவர் வெளிப்படையாகக் கூறினார்: "கலந்துரையாடலுக்கான தலைப்பு யுத்தம் நடைபெறவேண்டுமா கூடாதா
மற்றும் எந்தச் சூழ்நிலைகளின் கீழ் என்பது பற்றியதாக இருக்க வேண்டும்". இந்தியா ராஜதந்திர உறவை ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்தும், "ஆனால் மற்ற தேர்வுகள் வெளிப்படையானதாக இருக்கின்றன" என்றார் அவர்.
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரும் அழுத்தத்தில் வாஜ்பாயி இருக்கிறார். இதற்கு
இராணுவ அமைப்புக்களில் குறிப்பிடத்தக்க பகுதியினரிடமிருந்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த
வாரம் பிஜேபி யும் அதனோடு தொடர்புடைய இந்து தீவிரவாத அமைப்புக்களும் பாக்கிஸ்தானுக்கு எதிராக இராணுவத்
தாக்குதல் நடத்துவதற்காக கூச்சலிட்டார்கள். பிஜேபி பேசுச்சாளர் விஜய்குமார் மல்ஹோத்ரா கடந்த வெள்ளி அன்று
பிரதமரைச் சந்தித்து ஆப்கானிஸ்தானில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் நடத்திய யுத்தத்தைப் போல் அரசாங்கம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வேண்டினார். "அரசாங்கம் சூட்டோடு பின்தொடர்வதற்கு செயல் சார்புடன் இருப்பது பற்றி
சிந்திக்கவேண்டும் என்றும் பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை குறி
வைக்க வேண்டும்" அவர் என்றும் கூறினார்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமான, பாசிச சிவசேனையின் தலைவர் பால்
தாக்கரே பயங்கரவாதிகளின் தீய திட்டங்களை இந்திய அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு தாக்க வேண்டும் என்று
கூறினார். பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் பயங்கரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் துடைத்தழிக்க
வேணடும் என்று முன்னரே அரசாங்கத்துக்கு அழைப்புவிடுத்த ராஷ்டிரிய சுயசேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்)
பேச்சாளர், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் "அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று
வேண்டுகோள் விடுத்தார். அத்வானி, வாஜ்பாய் இருவருமே ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்ட கால உறுப்பினர்கள் ஆவர்.
குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்(ஐ), இந்தியா கட்டுப்பாட்டில் உள்ள
காஷ்மீரையும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத்
தாண்டி இந்திய இராணுவத் தாக்குதலுக்கு எச்சரிக்கையுடன் பச்சை விளக்கு காட்டியது. காங்கிரஸ் பேச்சாளர் ஜெய்பால்
ரெட்டி கட்சி "நன்றாக எண்ணிப்பார்த்து எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கை" யையும் கட்சி ஆதரிக்கும் என்றார்.
மேலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இயங்கும் பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட வேண்டுமா
என்பது மீதான "மூலோபாய முடிவை" எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார் அவர்.
கடுமையான இராணுவ பதிலடி கொடுப்பதற்கான ஆதரவு இந்திய ஆளும் வட்டங்களுக்குள்
ஒருமித்ததாக இல்லை. எடுத்துக்காட்டாக, இந்து நாளிதழின் தலையங்கம் ஒரேயடியான யுத்தம் நிகழக்கூடிய ஆபத்து
பற்றி எச்சரித்தது: "வாஜ்பாயி நிர்வாகம் மூலோபாய தேர்வினை வளர்த்தெடுக்கும் முன்னர், இந்தியமக்கள் 'சூடான
பின்தொடர்தலுடன்' அதிகரித்துள்ள பயங்கரம்-குறித்த யுத்தம் மற்றும் அது மேற்கொள்ளும் எல்லை தாண்டிய தாக்குதல்கள்
பாக்கிஸ்தானுடனான முழு அளவிலான யுத்தத்திற்கு திரும்பும் ஆபத்தைக் கொண்டுள்ளன என்ற சூழ்நிலை நெருக்கடி பற்றிய
தொலைநோக்குப் பார்வையை இழந்து விடக் கூடாது."
பாராளுமன்றத்தின் மீதான டிசம்பர் 13 தாக்குதலுடன் இரு காஷ்மீரி பிரிவினைவாத
குழுக்களுக்கு தொடர்பு இருப்பதற்கான சான்று பற்றி சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நியூயோர்க் டைம்ஸிடம்
இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாவது: "லஷ்கர்-இ-தொய்பாவை இதனோடு இனம் காண்பதற்கு
அவர்கள் மிக அவசரப்பட்டார்கள் என நான் நினைக்கிறேன். "அவர் ஜெய்ஷ்-இ- மொகம்மது சம்பந்தப்பட்டிருப்பதாக
நம்புகிறார் ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு குழுக்களுக்கிடையிலான வானொலி செய்தித்தொடர்புகளை இடைமறித்துக்
கேட்டதிலிருந்து லஷ்கர் முகாமுக்கு எதிரான சான்றைப்பற்றி விளக்கினார். லஷ்கர் வலைப் பின்னல்கள் உரிமை கோரக்கூடாது
என சொல்லப்பட்டிருப்பதன் அடிப்படையில், இந்திய உளவுத்துறை அதுதான் சம்பந்தப்பட்டிருப்பதாக முடிவுக்கு வந்தது.
இவ் ஆதாரங்களுள் ஒன்று கூட பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.
இந்து செய்திகள் நடப்பு நாள் சேவையில் உள்ள செய்தியின்படி, முன்னாள் இந்தியப்
பிரதமர் வி.பி.சிங் தலைநகரில் தாக்குதல் பற்றிய முன்கூட்டிய தகவலைப் பெற்றிருந்தும் வாஜ்பாயி செயல்படத்
தவறிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டினார். உளவு அமைப்புக்களிடமிருந்து குறிப்பிட்ட தகவல் பெறப்பட்டிருக்கிறது
மற்றும் மும்பாய் போலீஸ் கமிஷனர் விசேட செய்தியையும் கூட கொடுத்திருக்கிறார். இவ்வனைத்துத் தகவலும் பிரதமருக்கு
செல்கிறது. பயங்கரவாதத் தடுப்பு மேலாணையைக் கொண்டும், அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை" என்று அவர்
குறிப்பிட்டார்.
அமெரிக்க எதிர்வினை
இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் முழுஅளவிலான யுத்தத்தின் உண்மையான அபாயங்கள்
இருந்தபோதும், வாஜ்பாயி அரசாங்கம் இந்து தீவிரவாத அமைப்புக்களான சிவ சேனை, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களைப்
பற்றிக் கொண்டிருக்கிறது. அவை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இராணுவத் தாக்குதலுக்காக குரைத்துக்
கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானில், ,ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க
ஐக்கிய அரசுகளால் நெருக்கப்பட்ட முஷாரப், இந்தியாவிற்கு சலுகை காட்டக்கூடாது என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்
அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். இருநாடுகளிலும், வளர்ந்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து
அதிகரித்துவரும் சமூகப் பதட்டங்களில் இருந்தும் திசைதிருப்புவதற்காக வகுப்புவாத உணர்வானது சுரண்டப்பட்டு வருகிறது.
அதிகமாய் விரைந்து மாறுகிற அரசியல் சூழ்நிலையில், மிகவும் சீர்குலைக்கும் காரணியாக
புஷ் நிர்வாகம் இருக்கிறது. அதனை ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக, ஐக்கிய அமெரிக்க
அரசுகள் முழுப் பிராந்தியத்தையும் குழப்பத்தில்தள்ளி விட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, ஆப்கானிஸ்தானிலோ
அல்லது துணைக் கண்டத்திலோ ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல், மத்திய ஆசியாவில் வாஷிங்டன் அதன்மூலோபாய
மற்றும் பொருளாதார நலன்களை முரட்டுத்தனமாக பின்பற்றி வருகின்றது. "பயங்கர வாதத்தை" மற்றும் "பயங்கரவாதத்தை
ஆதரிக்கும் அரசுகளை" தோற்கடித்தல் என்ற பெயரில் அழைக்கப்படும் புஷ்ஷின் கோட்பாடு, இந்தியா போன்ற நாடுகள்
தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து அவற்றின் சொந்த இராணுவ சாகசங்களில் ஈடுபடவும் இப்பொழுது ஒரு முன்னோடி
நிகழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
இந்தியப் பாராளுமன்றத்திலும் செய்தி ஊடகத்திலும் இராணுவ நடவடிக்கைக்காக
நெருக்குகின்ற அனைவரும் அமெரிக்கா தலைமையிலான "பயங்கரவாதத்தின் மீதான பூகோள யுத்தம்" மற்றும் பாலஸ்தீனியர்கள்
மீதான ஷெரோன் அரசாங்கத்திற்கான வாஷிங்டனின் ஆதரவு இவற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தங்களின் கோரிக்கைகளை
நியாயப்படுத்துகிறார்கள். கடந்த வாரம் பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர் சிறீசந்த்கிரி பளானி குறிப்பிட்டதாவது: "அரசாங்கம்
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்ததை மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்துவருகின்றதை செய்யவேண்டும். பாக்கிஸ்தான்
சம்பந்தப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டால் பாக்கிஸ்தானை தாக்குவதற்கு வெட்கப்படக்கூடாது."
இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான டிசம்பர் 13 தாக்குதலுக்கு ஆரம்ப அமெரிக்க
எதிர்வினைகள் பாக்கிஸ்தானுக்குள் இந்திய இராணுவ தாக்குதலுக்கான தந்திரோபாய ஆதரவு கொடுப்பதாக புது தில்லியில்
பார்க்கப்பட்டன. "பயங்கரசெயல்களுக்கு" பொறுப்பானவர்களை உறுதி செய்தபிறகு, இந்தியா "தகுந்த நடவடிக்கை"
எடுப்பதைத் தாம் எதிர்பார்ப்பதாக கடந்த வெள்ளி அன்று புஷ் நிர்வாகம் அறிவித்தது. டைம்ஸ் ஆப் இந்தியா
குறிப்பிட்டவாறு, அறிக்கை "இந்தியா மீதான முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களை சேர்த்துக் கொள்வது பற்றி
தடைசெய்வதற்கான அழைப்பை" கொண்டிருக்கவில்லை.
முக்கியமாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர், றொபர்ட் பிளாக்வில், இந்தியா
மற்றும் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு இடையில் நேரடி ஒப்பீட்டை செய்தார்: "நேற்று நடந்த துன்ப நிகழ்ச்சி
மற்றும் பயங்கரவாதிகளால் அது தயாரிக்கப்பட்டமையும் நடைமுறையில் செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடந்த
தாக்குலில் இருந்து புறநிலைரீதியாக வேறுபடவில்லை." இந்தக் கூற்றுக்களில் இருந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க
யுத்தத்துடன் பொருந்துகின்றவாறு இருக்கும் நடவடிக்கைக்கு வாஷிங்டன் பச்சை விளக்கு காட்டியதாக மட்டுமே புதுதில்லியால்
முடிவுக்கு வர முடியும்.
பின்னர் கூறிய கூற்றுக்களில், அமெரிக்க அரசுசெயலாளர் கொலின் பாவெல், ஒருவிதமாக
பின்னே இழுத்துக் கொண்டு, இந்தியா கட்டுப்படுத்துவதை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி "சூழ்நிலை
திருகுப்புரிபோல் கட்டுப்படுத்த முடியாது போகக்கூடும்" என்று எச்சரித்தார். அதே தொனியில், வெள்ளை மாளிகைப்
பேச்சாளர் அரி பிளெய்ச்சர் இந்தியாவும் பாக்கிஸ்தானும் பின்னுக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
"இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒருவருக்கு எதிராக ஒருவர் மோதிக்கொள்வதற்கு இது ஒரு சரியான காரணமல்ல"
என்றார் அவர்." "இந்தியாவும் பாக்கிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான
தருணம் என்றார்."
பாக்கிஸ்தான் இப்பொழுது வரை "விடுதலைப் போராளிகள்" எனப் பாதுகாத்துவரும்
குழுக்களுக்கு எதிராக செயல்படும் கடமையை பாக்கிஸ்தானுக்கு வைக்கும் விதமாக, புஷ் நிர்வாகம் இப் பிரச்சினையை
அதே பாணியிலேயே முன்வைத்தது. மத்திய கிழக்கில் அல்லதுஆப்கானிஸ்தானில் போலவே வாஷிங்டனானது
வேண்டுமென்றே காஷ்மீர் மற்றும் துணைக்கண்டத்தின் வரலாற்றை அதேபோல ஜெய்ஷ்-இ-மொகம்மது
மற்றும் லஷ்கர்-இ-தொய்்பா போன்ற ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதக் குழுக்களைத் தோன்ற
வைத்த அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை புறக்கணிக்கின்றது.
காஷ்மீர் மீதான தகராறு அதன் வேர்களை 1947ல் வகுப்புவாத வழிகளிலான இந்தியத்
துணைக்கண்டத்தின் பிற்போக்கு பிரிவினையில் கொண்டிருக்கிறது. பிரிவினை உண்மையில் காஷ்மீர் மீதான மோதலை
உத்திரவாதப்படுத்துகிறது. காஷ்மீர் இந்து ஆட்சியாளரையும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகவும் கொண்ட சமஸ்தான
அரசாக இருந்தது. சுதந்திரத்தை அடுத்து விரைவிலேயே இந்து மகாராஜா தனது ஆட்சிக்கு எதிரான பாக்கிஸ்தான்
ஆதரவு கிளர்ச்சிக்கு மத்தியில் இந்தியாவுடன் ஒட்டிக் கொண்ட பொழுது, இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான
முதல் யுத்தம் வெடித்தது. எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு வழியான தற்போதைய பிரிவு அந்த நேரத்திலிருந்து தோன்றியதாகும்.
சுதந்திரத்தையோ அல்லது பாக்கிஸ்தானுடன் இணைவதற்கோ கோரும் காஷ்மீரி போராளிக்குழுக்கள், இந்தியாவின் நீடித்த
வளர்ச்சியில்லா காஷ்மீர் நிலை மற்றும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரண்டிலும் வகுப்புவாத இயக்கங்களின் உதயம்
இவற்றினது எதிர்வினையாகவே 1980களில் தோன்ற ஆரம்பித்தன.
தீர்வு காணப்படாத அரசியல் பிரச்சினைகளைப் பற்றி குறிப்பிடாமல், பாக்கிஸ்தான் காஷ்மீரி
பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாக்கிஸ்தானை வற்புறுத்துவதன் மூலம் புஷ் நிர்வாகம்
தந்திரோபாயமாக வலதுசாரி வாஜ்பாயி அரசாங்கத்தின் கரத்தைப் பலப்படுத்தி வருகின்றது. அது முறையே முரட்டுத்தனமான
இராணுவ சாகசத்தை பொறுப்பெடுக்க ஊக்கப்படுத்த மட்டுமேசெய்யும்.
கூட்டணியில் இடப் பெயர்வு
இந்தியாவிற்கான வாஷிங்டனின் ஆதரவானது அதன் குளிர் யுத்த கூட்டாளி பாக்கிஸ்தானிடமிருந்து
இருந்து எடுத்த பரந்த விலகலின் ஒருபாகமாகவே இருந்தது. அது கிளிண்டன் நிர்வாகத்தில் ஆரம்பமானது மற்றும் புஷ்
-ஐ நியமித்ததுடன் அது பலப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 11 ஐ அடுத்து உடனடியாக, புஷ் நிர்வாகத்திற்கு பாக்கிஸ்தானின்
உதவிதேவைப்பட்ட போதிலும், அது அதனைச்செய்தது. தலிபான் ஆட்சியை கைவிடவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின்
யுத்தத்துக்கு இராணுவ உதவியை அளிக்கும்படியும் வாஷிங்டன் முஷாரப் ஆட்சியை நிர்ப்பந்தித்தது.
இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்காவின் திடீர்த்திருப்பமானது வாஷிங்டன் இந்தியாவுடனான--
உறவுகளில் இருந்து பின்வாங்கிக் கொண்டதாக புதுதில்லி கவலைப்பட்டது. அக்டோபர் 1ல் காஷ்மீர் சட்டமன்ற கட்டிடத்தின்
மீதுகுண்டு வீச்சைத் தொடர்ந்து உடனடியாக, அப்பொழுது அவ்வச்சங்கள் அதிகரித்தபொழுது, வாஷிங்டன் இந்தியா பதிலடித்
தாக்குதலைச்செய்யக் கூடாது என்று வலியுறுத்தியது. அந்நேரம் வாஜ்பாய் வழக்கத்திற்குமாறான முறையில், "இந்திய
மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று பாக்கிஸ்தான் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று எச்சரித்து,
புஷ்க்கு நேரடியாக எழுதினார்.
தலிபான் ஆட்சி இப்பொழுது சீர்குலைந்தது, முஷாரப் ஆட்சியை அமெரிக்கா ஊக்கி
வருவது தேய்ந்து வருவதாகக்காணப்படுகிறது. புஷ் நிர்வாகமானது பாக்கிஸ்தானின் போட்டியாளரான இந்தியாவுடன்
உறவுகளைப் பலப்படுத்தி வரும் அதேவேளையில், பாக்கிஸ்தானிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவைக் கறந்து எடுப்பதில்
மிக விருப்பம் உடையதாகக் காணப்படுகிறது. பாக்கிஸ்தானுக்கான நிதி உதவி பற்றிய அதன் உறுதிமொழிகளில் சிலவற்றில்
அமெரிக்கா விலகி இருக்கின்ற போதிலும்கூட, முஷாரப் தன்னை வாஷிங்டனுக்கு உகந்தவராகக் காட்டுவதில் விருப்புடையவராக
இருக்கிறார். கடந்த வாரம் பாக்கிஸ்தானிய தலைவர் ஜாகோபாத் இராணுவ விமானதளத்தை அமெரிக்காவுக்கு நீண்டகால
அடிப்படையில் கொடுக்கவும் பாக்கிஸ்தானிய மேற்பார்வையைக் குறைக்கவும் அனுமதிவழங்கினார்.
இருப்பினும், கடந்த மாதத்தில், ஐக்கிய அமெரிக்க அரசுகளானது, வரிசையான உயர்மட்ட
விஜயங்கள் மற்றும் சந்திப்புக்களின் மூலம் இந்தியாவுடனான அதன் உளவுமற்றும் இராணுவ ஒத்துழைப்பை அதிகமாக
நீட்டித்து வருகிறது. நவம்பர் இறுதியில், அமெரிக்க பசிபிக் ஆணையகத்தின் அட்மிரல் டென்னிஸ் பிளேர், " நமது இருதரப்பு
வரலாற்றில் முன் என்றுமில்லாத வகையான உறுதியான அமெரிக்க- இந்தோ பாதுகாப்பு உறவு ஒன்றை" வாஷிங்டன்
நாடியது என்று புது தில்லியில் குறிப்பிட்டார். இராணுவ ஒத்துழைப்பு இணைந்த சிறப்பு நடவடிக்கைகள், கூட்டு இராணுவ
பயிற்சி, சிறிய அளவிலான மைதானத்தில் பயிற்சி மற்றும் வான் பயிற்சிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பரிமாற்றம்
ஆகியனவற்றை உள்ளடக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
டிசம்பர் தொடக்கத்தில், ஆப்கானிஸ்தானில் கொள்கை ஒருங்கிணைக்கும் அமெரிக்க அதிகாரி
ரிச்சர்ட் அஹாஸ், பாதுகாப்பு விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து இந்திய உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.
"ஆப்கானிஸ்தான் என்று வரும்பொழுது இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களால் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளுக்கு
இடையில் இடைவெளி எதுவும் இல்லை" என்று அவர் முடித்தார். கடந்த வாரம், இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்புக்
குழு, இரு நாடுகளும்" ஆசியாவில் மூலோபாய நலன்களை பகிர்ந்துகொள்ளும்" மற்றும் கூட்டு பயங்கரவாத-எதிர்ப்பு
முன் முயற்சிகளில் ஈடுபடும் என்று இறுதியில் கூறி முடித்தன.
இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரண்ட் லைன் இதழில் உள்ள கட்டுரை குறிப்பிட்டது:
"உள்துறை அமைச்சக வட்டாரங்கள், 'இராணுவ உளவு பரிவர்த்தனையை....' உள்ளடக்குவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும்
தங்களின் உளவுத்துறை பரிமாற்ற ஏற்பாடுகளை நவீனப்படுத்துவதற்கு உடன்பட்டன" என்று உறுதிப்படுத்தின. அமெரிக்க
செய்தி ஊடகத்தில் உள்ள அறிக்கைகளின்படி, மத்திய உளவுத் துறை நிறுவனம் (சி.ஐ.ஏ) கட்டளையின்படி அமெரிக்காவிற்கு
உளவுத் தகவல்களை வழங்கும் 50 நாடுகளின் மத்தியில் இந்தியாவும் இருக்கிறது."
இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் இடையில் அபிவிருத்தி அடைந்து வரும்
கூட்டு, வாஜ்பாயியை பாக்கிஸ்தான் தொடர்பாக கூடுதலாய் போருக்குரிய நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு ஊக்கப்படுத்துகிறது.
மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்கிஸ்தானின் பதில் ஆட்சி --தலிபான்ஆட்சி-- யின் வீழ்ச்சி மற்றும் அது புதுதில்லியின்
ஆதரவைப்பெற்றுள்ள, வடக்குக் கூட்டணியால் மேலாதிக்கம் செய்யப்படும் இடைக்கால அரசாங்கத்தால் பதிலீடு செய்யப்படுவது
கூட இந்தியாவின் நிலையைப் பலப்படுத்துகிறது. மூன்று ஆப்கானிய உயர்மட்ட அமைச்சர்கள் இந்தியாவுக்கு அவர்களின் முதலாவது
விஜயத்தை மேற்கொண்டது வாஜ்பாயி அரசாங்கத்தை உண்மையில் மகிழ்ச்சிப்படுத்தியது.
பாக்கிஸ்தான் வாதிடுகிறவாறு, இந்தியா பாராளுமன்றக் கட்டிடத்தின் மீதான
தாக்குதலை ஒத்திகை பார்க்காதிருக்கலாம். ஆனால் வலதுசாரி வாஜ்பாயி அரசாங்கம், புஷ் நிர்வாகத்தின் வெளிப்படையான
ஆதரவைப் பெற்றோ அல்லது பெறாமலோ, மற்றும் தனது நடவடிக்கைகளின் உள்ளுறைந்த அழிவுகரமான விளைவுகளைப்
பற்றிப் பொருட்படுத்தாமல், தனது போட்டியாளரான பாக்கிஸ்தானுக்கு எதிராக உள்நாட்டை தனக்கு சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்வதற்கான நேரம் இதுதான் என்று தெளிவாகவே கணக்குப் போடுகிறது.
|