:ஆபிரிக்கா
New government established in Burundi
புருண்டியில் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது
By John Farmer and Chris Talbot
28 November 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
இரண்டு மாத பேச்சுவார்த்தைகளின் பின்பு, புருண்டியில் இடைக்கால நிர்வாகம் ஒன்று
இம்மாதத் தொடக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய
ஊக்குவிப்பாளரான நெல்சன் மண்டேலா இப்பேரத்தைப் பற்றிக் கூறுகையில் ''தடைகளைத் தகர்த்து உறுதியான
மற்றும் நிரந்தர அமைதி இதன் மூலம் கொண்டு வரப்படும்'' என்றார். இருந்தபோதிலும், இது நாட்டின் உள்நாட்டு
யுத்தத்தை இன்னும் தீவிரமாக்கும் எனவே தோற்றமளிக்கின்றது.
டுட்சி (Tutsi) மற்றும்
ஹட்டு (Hutu) இனக்குழுக்களின் 17 அரசியல் கட்சிகளினால்
சேர்ந்து வரையப்பட்ட நிர்வாக அதிகாரப் பகிர்வுக்கு 700 பலமான தென்னாபிரிக்கத் துருப்புக்கள்
''பாதுகாப்பு'' என்னும் பேரில் பின் ஆதரவாக உள்ளன. அரசாங்கத்திற்கு உள்ளேயான நியமனங்கள் சகல அரசியல்
கட்சிகளினாலும் குறிப்பாக டுட்சி அல்லது ஹட்டு போன்ற இனக்குழு அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14
அமைச்சரவை பதவிகள் ஹட்டு கொண்டிருப்பதுடன், பாதுகாப்பு மற்றும் நிதி உள்ளடங்கலாக 12 இனை டுட்சி
கொண்டுள்ளார்கள்.
நாடு தற்போது ஜனாதிபதி Pierre
Buyoya வினால் கொண்டு நடாத்தப்படுவதுடன் அதில் டுட்சி இராணுவமே ஆதிக்கம் செலுத்துகின்றது. புதிதாக
நிறுவப்படவுள்ள அரசாங்கத்தில் ஹட்டு இனத்தலைவர்களுக்கு சாத்தியமான பாத்திரத்தை வகிக்கவும், அதிக சம அந்தஸ்தைக்
கொண்டிருப்பதற்குமான சாதகங்கள் உள்ளன. 18 மாதத்திற்கு
பின்பு Buyoya பதவியிலிருந்து விலகிக்கொள்வதற்கான சாத்தியப்பாடு
காணப்படுவதுடன், ஹட்டு இனக் கட்சியான புருண்டி ஜனநாயக முன்னணியின்
(FRODEBU) தலைவரும் உபஜனாதிபதியுமாகிய
Domitien Ndayizeye வினால் அது பதிலீடு செய்யப்படலாம். இதன் பின்பு தேர்தல் மூன்று வருடங்களுக்குள்
நடைபெறும்.
புதிய நிர்வாகத்தை உருவாக்கிய பின்பு, ஹட்டு கிளர்ச்சியாளர்களின் ஜனநாயக
பாதுகாப்பு படைகள் (FDD) மற்றும் தேசிய விடுதலைப்படைகள்
(FNL) என்பன அரசாங்கத்துக்கு எதிராக யுத்தத்தை
தொடுத்துள்ளனர். இந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக, எட்டு வருடங்களுக்கு முன்பு ஹட்டு ஜனாதிபதியான
Melchior Ndadaye என்பவர் டுட்சிப் படைகளினால்
படுகொலை செய்யப்பட்டதிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.
ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 85 வீதமான ஹட்டுக்கள் இருந்தபோதிலும், 30 வருடகால டுட்சி ஆளும்
தட்டினரின் ஒரு கட்சி ஆட்சி முறைக்குப்பின்பு, Ndadaye
முதன்முதலாக தேர்தல் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
Buyoya 1996ல் இராணுவச் சதி மூலம் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
2000 ஆகஸ்ட் மாதம் தன்சானியாவில் நடைபெற்ற சமாதான உடன்படிக்கையில் பங்கெடுக்க
ஜனநாயக பாதுகாப்பு படைகள் (FDD) மற்றும் தேசிய
விடுதலைப்படைகள் (FNL) ஆகியவை மறுத்துவிட்டன. இராணுவத்தை
மறு சீரமைக்கவும் ''சித்திரவதை'' முகாம்களை அகற்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென (அரசாங்கம்
இம்முகாம்களில் ஆயிரக்கணக்கான ஹட்டு இன மக்களை அவர்களின் சொந்த பாதுகாப்பு என்பதன் கீழ் மந்தைகளைப்போல்
அடைத்து வைத்துள்ளது) கோரிக்கை வைத்தார்கள்.
மக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டதில்
FDD பாரிய பொறுப்பை வகித்துள்ளது. அத்துடன் புருண்டியின்
கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பல பகுதிகளில் இராணுவத்துடன் அவர்கள் மோதியுள்ளனர். இது அவர்களது வழமையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தென்கிழக்குப் பிராந்தியத்துக்கு வெளியேயாகும்.
AFP செய்திநிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட
130 பொதுமக்களும், 200 கிளர்ச்சியாளர்களும், 50 அரசாங்கப்படைகளும் இதில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இத்தாக்குல்களினால் 2000 க்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக வடகிழக்குப் மாகாணமான
Muyinga இனை
நோக்கி வெளியேறத்தள்ளப்பட்டார்கள்.
பாடசாலைப் பிள்ளைகளை பிணையாக பிடித்துக்கொண்டு போனதில்
FDD சர்வதேச செய்திகளில் முதலிடத்தை வகித்தது. முதலாவதாக
அங்கு பிடிக்கப்பட்டவர்கள் ஆரம்பப் பாடசாலைப் பிள்ளைகளும், பின்பு பாடசாலை விடுதியியில் தங்கியிருந்த 250
லிருந்து 300 வரையான இளம் சிறுவர்களுமாவர். அதிகமான சிறுவர்கள் தப்பிச் சென்ற போதிலும், அறிக்கைகளின்படி
சில வயது கூடியவர்கள் பலாத்காரமாக கிளர்ச்சிப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
ஹட்டு அரசியல்வாதிகளை இணங்கச் செய்வதில் மண்டேலா நம்பிக்கை கொண்டிருப்பதுடன்,
அவர்களுக்கூடாக FDD மற்றும்
FNL ஆகியவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்த மேற்குலகின்
உதவி என்னும் பேரில் அவர்களுக்கு ஆசைகாட்டுகின்றார். பிரான்சின் ஜனாதிபதி சிராக்குடனான மண்டேலாவின்
தொலைபேசி உரையாடல்களுக்குப் பின்பு, ''வறுமையைக் குறைத்தல்'' மற்றும் உள்ளமைப்புத் திட்டங்களுக்காக
புருண்டிக்கு 65 மில்லியன் ஈரோ (58 மில்லியன் டாலர்கள்) உதவித்தொகையை ஐரோப்பிய ஆணைக்குழு வழங்கியது.
கடந்த வருடம் மேற்குலகின் கொடையாளர்கள் 440 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க உறுதியளித்துள்ள
போதிலும், இதில் சிறியளவே நடைமுறைப்படுத்ததாக தெரிகின்றது. அதிக உதவிகள் 1990 களில் பின்வாங்கிக்
கொள்ளப்பட்டன. புருண்டியின் பொருளாதாரம் குறிப்பாக கோப்பி உற்பத்தியானது உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக
மோசமாக வீழ்ச்சியடைந்தது.
தென்னாபிரிக்கா நேரடியான பேச்சுவார்த்தைகளை
FDD மற்றும்
FNL னுடன் மேற்கொள்ள வெளிப்படையாக வந்தபோதிலும்,
FDD ஆனது தென்னாபிரிக்கா மத்தியஸ்தர்களை எதிர்ப்பதுடன் அவர்கள் பிரான்சை அடித்தளமாகக்கொண்ட
Gabon நாட்டு ஜனாதிபதி
Omar Bongo வினூடாக இதனை மேற்கொள்ளவே
விரும்புகின்றார்கள். இவ்விரு கிளர்ச்சிக் குழுக்களும் தொடர்ச்சியான விஜயங்களை தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்டு
மண்டேலாவினுடைய பிரதிநிதிகளுடனும் மற்றும் முன்னாள் ANC
(ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ்) பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது கேப்டவுன் பல்கலைக்கழகத்தில்
இருப்பவருமான ''முரண்பாட்டை தீர்க்கும் வித்தகர்'' Jan Van
Eck உடனுமே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றனர்.
700 தென்னாபிரிக்கத் துருப்புக்களின் தலையீடானது
ANC அரசாங்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை
சுட்டிக் காட்டுகின்றது. 1994 களில் ANC ஆட்சிக்கு வந்ததிலிருந்து
பலம் வாய்ந்த தென்னாபிரிக்க இராணுவத்தை நாட்டுக்கு வெளியே தற்போது சிறியளவிலேயே ஈடுபடுத்தியுள்ளது.
1998 ல் Lesotho வில் ஏற்பட்ட எதிர்ப்பை அடக்க படைகள்
அனுப்பப்பட்டது. இச்சிறிய அரசு தென்னாபிரிக்காவிலேயே தங்கியுள்ளது. கடந்த வருடம் மொசாம்பிக்கில் ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கின்போதும் தென்னாபிரிக்கத் துருப்புக்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
பலமான ஆயுதங்களைக் கொண்டுள்ள தென்னாபிரிக்கா இராணுவமானது ஹட்டு மீள் வருகையாளர்களை
பாதுகாப்பதற்காகவே உள்ளன என்று பினான்சியல் ரைம்ஸ் (Financial
Times) பத்திரிகை கூறுகையில் இன்டிப்பென்டன் ஒன்லைன் (Independent
Online) பத்திரிகையாளர் Jean Minani,
தென்னாபிரிக்கத் துருப்புக்களை FRODEBU வின் முக்கிய தலைவர்
தனது பாதுகாப்புக்கு பயன்படுத்தவில்லையென தெரிவித்தார். சிலசமயம் இத்துருப்புக்கள் புருண்டியின் ஆளும் தட்டுக்கு
''பாதுகாப்பு படை'' என்னும்பேரில் 1000 பலம் வாய்ந்த அதனது சொந்த இராணுவத்தை எப்படி கட்டுவதென செய்துகாட்டுவதுடன்
ஹட்டுவும் டுட்சியும் சமனாக இருக்கும் வகையில் வெள்ளையர்களும் மற்றும் கருப்பர்களும் இணைந்த
துருப்புக்களைக் கொண்ட தென்னாபிரிக்கா அனுபவத்தை இங்கும் பாவிக்கலாம்.
தீவிரவாத டுட்சி அரசியல்வாதிகள் "ஆக்கிரமிப்பு
இராணுவத்தை புருண்டிக்கு அனுப்பும் முடிவை'' கண்டனம் தெரிவித்து அமைதி நடைமுறையை எதிர்த்து வருவதுடன்,
அவர்கள் அனுப்பியது ''இனக்கொலையை புரிந்தவர்களை பாதுகாக்கவே அனுப்பப்பட்டுள்ளனர்'' என்றும் கூறினார்கள்.
அவர்களில் சிலர் தென்னாபிரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.
எவ்வாறிருந்தபோதிலும், தென்னாபிரிக்கா மேற்கொண்ட விரைவான பாதுகாப்புபடை முயற்சியானது
இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததுடன், இதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மண்டேலா தனது ஆளுமையை
பிரயோகித்தார். ஒரு போர்நிறுத்த உடன்படிக்கை இல்லாத நிலையில் தென்னாபிரிக்காவின் தலையீட்டுக்கு ஐ.நா
சபை ஆதரவு வழங்காதபோதிலும், இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதில் இது அவர்களால் ''வரவேற்கப்பட்டது''.
தென்னாபிரிக்காவுடன் சேர்ந்து மேலதிகமாக சிலசமயம் நைஜீரியா, செனகல், கானா போன்ற நாடுகளின் துருப்புக்களின்
படைப்பிரிவுகள் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் போர்நிறுத்தம் ஒன்று அங்கில்லாதிருப்பது தொடர்பாக அந்நாடுகள்
தமது கவனத்தில் கொண்டுள்ளார்கள்.
இது அமைதிக்கான நடவடிக்கையென வரையறுக்கப்படுகின்றபோதிலும், மத்திய ஆபிரிக்காவில்
தொடரும் இத்தலையீடுகளின் முயற்சியானது ஏகாதிபத்தியவாதிகளின் நலன்கள் இப்பிராந்தியத்தில் அதிகரிக்கின்றன என்ற
கோணத்திலேயே பார்க்கமுடியும். குறிப்பாக புருண்டியினுடைய உள்நாட்டு யுத்தமானது பக்கத்து நாடான கொங்கோ
ஜனநாயகக் குடியரசில் தொடர்ந்து நடைபெற்றுவரும் யுத்தத்திற்கான முக்கிய காரணியாகும்.
தந்தையான கபிலா கொல்லப்பட்ட பின்பு பதவிக்கு கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி
யோசேப் கபிலா நாட்டினுடைய பாரிய கனிவளச் சுரங்கங்களை மேற்கின் கூட்டுத்தாபனங்களுக்கு திறந்துவிட்டுள்ளபோதிலும்,
அவரின் விருப்பத்தின் மத்தியிலும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு தொடர்பான சமாதான நடவடிக்கையானது தற்போது
ஸ்தம்பித நிலையை அடைந்திருப்பதாக தோன்றுகின்றது. தென்னாபிரிக்காவினுடைய இராணுவத் தலையீடானது புருண்டி
கிளர்ச்சிப் படைகள் உட்பட கொங்கோ யுத்தத்தில் தலையீடு செய்யும் அரசுகளுக்கும் படைகளுக்கும் மேலும் அழுத்தங்களைக்
கொடுக்கும். நவம்பர் மத்தியில் மண்டேலாவுக்கும் ஜனாதிபதி புஷ்ஷுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது
இதுபற்றிய கணிப்பீடு சந்தேகத்துக்கு இடமின்றி செய்யப்பட்டிருக்கும் என்பது தெளிவு.
|