World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Socialist Equality Party in Sri Lanka opposes moves to authoritarian rule

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் அதிகாரக் குவிப்பு ஆட்சியை எதிர்க்கின்றது

31 July 2001

Use this version to print

பின்வரும் பேச்சு எதிர்வரும் இலங்கை கருத்துக் கணிப்பை முன்னிட்டு சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினரும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு அங்கத்தவருமான கே.ரத்னாயக்கவினால் அரசுடமை தொலைக் காட்சியில் ஜூலை 30ம் திகதி நிகழ்த்தப்பட்டதாகும். சோசலிச சமத்துவக் கட்சிக்கு மேலும் இரண்டு 15 நிமிட உரைகளை நிகழ்த்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று தமிழாகும்.

ஜூலை மாத தொடக்கத்தில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கருத்துக் கணிப்பை நடாத்துவது பற்றி அறிவித்ததோடு அவளின் சிறுபான்மை அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிர்ப்புக்கு முகம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு பாராளுமன்ற கூட்டத் தொடரையும் ஒத்தி வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்திலான திருத்தங்கள் என்ன என்பது பற்றி திட்டவட்டமாக எதுவும் குறிப்பிடப்படாது இந்தக் கருத்துக் கணிப்பு அரசியலமைப்புக்கு வாக்காளர் ஆதரவா என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் இப்பேச்சு அரசாங்கத்தின் தணிக்கை விதிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒலிபரப்பு தொடர்பான கண்டிப்பான விதிமுறைகளுக்கும் அமைவானது. எந்த ஒரு தனி நபரதோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினதோ பெயர் குறிப்பிடப்படலாகாது என்பதும் இதில் அடங்கும். தொலைக் காட்சி நிலைய முகாமைத்துவம் எந்த ஒரு பேச்சையும் நிராகரிக்கும் அல்லது வெட்டும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. பேச்சில் இடம்பெறும் விடயம் "பொதுஜன நலனை கொண்டதாக விளங்க வேண்டும்." "உள் அன்புக்கு அல்லது நாகரீகத்துக்கு தீங்கு விளைவிப்பதாக அல்லது குற்றங்களில் ஈடுபடத் தூண்டுவதாக அல்லது குழப்பத்துக்கு இட்டுச் செல்வதாக அல்லது எந்த ஒரு இன, மத போக்குகளையும் அல்லது பொதுஜன உணர்வுகளையும் தூண்டிவிடுவதாக" விளங்காததாக இருக்க வேண்டும் என்கிறது.

பேச்சில் குறிப்பிடப்பட்ட கட்சிகள் எவை என்பதை காட்ட குறிப்புக்கள் அடியில் தரப்பட்டுள்ளன. இரண்டு சமீபத்திய கட்டுரைகள் பேச்சின் அரசியல் உள்ளடக்கத்தை விளக்குகின்றன.

அவையாவன:

இலங்கை ஜனாதிபதி நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பைத் தவிர்க்க பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்

(ஜூலை 18, 2001)

கூட்டரசாங்க முக்கிய பங்காளி விலகியதால் இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சிறுபான்மையாகியுள்ளது

(ஜூலை 13, 2001)


எதிர்வரும் கருத்துக் கணிப்பில் இந்நாட்டு உழைக்கும் மக்களின் எதிரில் திட்டவட்டமான முறையில் தலையெடுத்துள்ள பிரச்சினைகள் பின்வருபவைதான்:

ஜனாதிபதி இந்தக் கருத்துக் கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது ஏன்? ஆட்சியில் உள்ள அரசாங்கம் தயாராகுவது எந்த வகையான ஆட்சி முறைக்கு? இந்நிலைமையினுள் தொழிலாளர் வர்க்கத்துக்குள்ள பதிலீடு என்ன?

கருத்துக் கணிப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள விடயம் வருமாறு: "தேசிய முக்கியத்துவமும் அவசியமும் கொண்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் நாட்டுக்கு அவசியமா?."

பிரச்சினை சாதாரணமான ஒன்றாகத் தோன்றுகின்றது. எனினும் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கருத்துக் கணிப்பின் பின்னணியில் ஆளும் வர்க்கம் எந்த விதத்திலான ஆட்சி முறைக்கு தயாராகின்றது என்பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளன. அவசரகால சட்டத்தை நிறைவேற்ற முடியாது போனதும் பயங்கரவாத தடைச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம் உள்ளடங்கலான பொதுஜன பாதுகாப்புச் சட்டம் விதிக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு பாராளுமன்றம் இரண்டுமாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. கருத்துக் கணிப்பின் பேரால் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டன. தமது தேவைகளின் பேரில் எதிர்க் கட்சி ஊர்வலத் தடையை மீறிச் சென்ற வேளையில் ஊர்வலத்துக்கு எதிராக பொலிசாரைப் பாவித்து கண்ணீர் புகை பாவித்ததோடு துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத் தளத்துக்கும் விமானப் படை முகாமுக்கும் தாக்குதல் தொடுத்ததைத் தொடர்ந்து தெற்கை 'நிலைகுலையச்' செய்யக் கூடாது எனவும் அவசரகாலச் சட்ட ஆட்சி அவசியம் எனவும் கூறும் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துக் கணிப்புக்கு அழைப்பு விடுத்ததோடு சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி நாட்டுக்கு "உறுதியான அரசாங்கம்" அவசியம் என வலியுறுத்தினார். பெரும் வர்த்தகர்களுக்கும் அரசாங்கத்துக்கும் உறுதியான அரசாங்கம் அவசியப்படுவது மேற்கத்தைய வல்லரசுகளும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் பெரும் வர்த்தகர்களும் உத்தரவிட்டுள்ள அரசியல்- பொருளாதார நிகழ்ச்சி நிரலை நடைமுறைக்கு இடுவதற்கே தவிர வேறொன்றுக்காகவும் அல்ல.

வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளத் துடிக்கும் அரசாங்கத்துக்கு கடன் பெறுவதற்காக உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி, ஒத்திவைக்க முடியாது இருந்த கடன்களின் நிபந்தனைகளில் அரச துறையை இழுத்து மூடுவது, தனியார்மயமாக்கம், தொழில் வெட்டு, சமுர்தி (சுபீட்சம்) போன்ற அற்பசொற்ப நலன்புரி உதவிகளுக்கு முடிவு கட்டுதல், இலவசக் கல்வி, சுகாதார சேவைகளை மேலும் வெட்டுதல் தொழிற் சட்டங்களை திருத்தி, தடையின்றி சுரண்டலை ஊர்ஜிதம் செய்தல், விடுமுறை நாட்களை வெட்டுதல் என்பனவும் உள்ளடங்கி உள்ளன. பிரமாண்டமான இராணுவச் செலவீனங்களாலும் அவ்வாறே அதிகரித்துவரும் உலக நெருக்கடி காரணமாக பொருளாதாரம் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையிலும் ஆளும் கட்சி இந்நிபந்தனைகளை அமுல் செய்வதில் பெரும் வேகம் காட்டுகிறது.

முழு நாட்டையும் பீடித்துக் கொண்டுள்ள பெரும் பிரச்சினை யுத்தமாகும். ஆளும் வர்க்கமே யுத்தத்தை உருவாக்கியது. இலங்கையின் பலவீனமான ஆளும் வர்க்கம் இனவாத பாகுபாடுகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் சிங்கள, தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்தை இனவாதக் கோட்டின் ஊடாக பிளவுபடுத்துவதன் மூலம் தமது ஆட்சியை கட்டிக் காக்கும் பிற்போக்குமுயற்சியில் ஈடுபட்டது. இந்த இனவாத விதிமுறை 1983ல் யுத்தமாக பரிணாமம் கண்டது, வெளிநாட்டு மூலதனத்துக்கான கதவுகளைத் திறந்து, தொழிலாளர்களதும் ஏழைகளதும் உரிமைகளை தாக்குவதற்கே.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினால் பிரமாண்டமான இராணுவச் செலவீனங்களையும் சரி யுத்தத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரசியல் ஈடாட்டம் கண்ட நிலைமையையும் சரி இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது போயுள்ளது. மேற்கத்தையவல்லரசுகளும் இந்தியாவும் முக்கிய இரண்டு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் மற்றும் தமிழ்க் கட்சிகளுடனும் சமரசத்துக்கு செல்ல வேண்டும் என சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளன. இந்தத் தீர்வு அவர்களுக்கு அவசியமாய் இருப்பது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிதம் செய்வதற்கோ அல்லது பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமைகளை குறைப்பதற்கோ அல்ல. இலங்கை இந்தியத் துணைக் கண்டத்தை ஆட்டம் காண வைக்கும் ஒரு காரணியாக மாறி, தம்மை அச்சுறுத்தும் ஒரு நிலைமை தோன்றுவதை தவிர்ப்பதற்கேயாகும்.

எவ்வாறெனினும் ஆட்சி செய்யும் அரசாங்கம் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பும் போது அல்லது அவற்றுக்கு சிறிய அளவிலான சலுகைகளை வழங்க முயற்சிக்கும போது சிங்கள இனவாதச் சக்திகள் அதற்கு எதிராக வீதியில் இறங்குகின்றன. இந்த இனவாதச் சக்திகளை பாலூட்டி போஷித்து வளர்த்ததும் முக்கிய இரண்டு முதலாளித்துவ அரசியல் கட்சிகளே. அதனை தமது சமூக அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் வர்கக்த்தை நசுக்க எண்ணுகிறார்கள். இந்தச் சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக இவை உரிய தீர்வுகளை காண முடியாமல் ஆளும் வர்க்கம் அரசியல் ரீதியில் பாரிசவாதத்தினால் பீடிக்கப்பட்ட ஒரு நிலைமை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக ஆளும் வர்க்கம் இதிலிருந்து விடுபடுவதற்கன ஒரு வழியை தேடும் அவல நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பெரும் வர்த்தகர்கள் பெரும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய நெருக்கடிக்கு தீர்வுகாண உறுதியான ஒரு ஆட்சி முறையை- (அதாவது அதிகாரம் நிறைந்த ஆட்சி முறையை) உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இப்போது இக்கட்சிகள் இரண்டும் அத்தகைய ஒரு அதிகாரம் நிறைந்த ஆட்சி முறையை உருவாக்க முயற்சிக்கின்றன. ஆளும் அரசாங்கம்(2) எதிர்க் கட்சியுடன் சேர்ந்து(1) அத்தகைய ஒரு ஆட்சியை அமைக்க முயற்சித்தது; இன்னமும் முயற்சித்துக் கொண்டுள்ளது. அத்தகைய ஒருகொடுக்கல் வாங்கல்களைச் செய்ய முடியாது போனால் தாமே நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைப் பாவித்து அரச இயந்திரத்தில் குந்திக் கொள்ளும் பொனபாட்டிச முறையில் செயற்படும் ஒரு ஆட்சி முறைக்கு மாறிச் செல்ல ஆளும் வர்க்கம் முயற்சிக்கின்றது. ஆளும் கட்சி எதிர்க்கட்சியுடன் சேர்ந்து அமைக்கும் ஆட்சி என்றாலும் சரி அல்லது வேறு விதத்தில் அமைக்கும் பொனபாட்டிச ஆட்சி என்றாலும் சரி -அந்த இரண்டுமே ஜனநாயக எதிர்ப்பு, பொதுஜன உரிமைகளைத் தாக்கும் அதிகாரம் கொண்ட ஆட்சியாகவே விளங்கும். இப்போது தமிழ், சிங்களம் பேசும் உழைக்கும் மக்களின் எதிரில் வளர்ச்சி காண்பது, இந்த ஆபத்துக்களை உள்ளடக்கிய செயற்பாடேயாகும்.

முக்கிய முதலாளித்துவ எதிர்க்கட்சிக்கு உள்ளதும் இதே நிகழ்ச்சித் திட்டமே. ஜனநாயக உரிமைகளைப் பற்றிய அக்கட்சியின் வாய்வீச்சுக்கள் முற்றிலும் மோசடியானவை. இக்கட்சியின் 17 வருட ஆட்சிக்காலம் யுத்தத்தை தொடக்கி வைத்ததனாலும் அவசரகால சட்ட ஆட்சியுடனும் ஜனநாயக உரிமைகளுக்கு முடிவின்றி அடி கொடுப்பதுடனும் இளைஞர்களை துடிக்கத் துடிக்கக் கொலை செய்வதனாலும் நிரம்பிப் போய்க் கிடந்தது. இந்த முதலாளித்துவக் கட்சி ஆட்சியில் தொங்கிக் கொள்வதற்காக பாராளுமன்றத்தை ஒத்திவைத்தது. இன்றுவரை எதிர்க்கட்சி அரசாங்கத்துடன் அதிகாரம் நிறைந்த ஒரு அரசாங்கத்தை திணிக்கும் பேச்சுவார்த்தைகளில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் ஈடுபட்டது. இப்போது அது வர்த்தகர்களின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேறு வழிகளில் அதிகாரம் நிறைந்த ஒரு அரசாங்கத்தை திணிக்க முடியுமா என முயன்று வருகிறது.

இந்நாட்டின் 50 வருட ஆட்சிக் காலமும் இன்றைய அரசியல் குழப்ப நிலையும் எந்த ஒரு ஜனநாயக பிரச்சினைக்கோ அல்லதுசமூகப் பிரச்சினைக்கோ தீர்வு காணமுடியாத இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் வங்குரோத்து பிற்போக்குத் தன்மையை சுட்டிக்காட்டுகின்றது. பெரும் வர்த்தகர்களின் கட்சிகள் இரண்டும், இரண்டு தடவைகள் அரசியலமைப்பை மாற்றின. ஜனநாயக உரிமைகளை வழங்குவதாகக் கூறிக் கொண்டே இதைச் செய்தன. நடந்ததோ பெரிதும் அடக்குமுறைகளும் இனவாதப் பிளவுகளும் கொண்ட அழிவுகளுக்குள் பொதுமக்களை தள்ளும் அரசியலமைப்பு சட்டத் தயாரிப்பே.

கடந்த ஆண்டில் இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்க் கட்சியின் ஆதரவோடு யுத்தத்துக்கு தீர்வு காண்பதாகக் கூறிக் கொண்டு தயாரித்த அரசியலமைப்பு சட்ட யோசனைகள் பேரினவாதிகளின் இரத்தம் தோய்ந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கதவுகளை அகலத் திறந்துவிட்டதோடு இனவாத பிளவுகளை மேலும் மேலும் ஆழமாக்கச் செய்தனர். தற்சமயம் பிரேரிக்கும் உத்தேச அரசியலமைப்புச் சட்ட யோசனைகள் அதைக் காட்டிலும் பிற்போக்கானவை என்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. அது பெளத்த குருமாரின் யோசனைகளுக்கு இணங்கவே தயாரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஆளும் கட்சி வழங்கியுள்ளது.

தமிழ் மக்கள் யுத்தத்தின் அழிவுகள் நிறைந்த நிலைமைகளுக்கிடையே உயிர் வாழ்ந்து கொண்டுள்ளனர். இரண்டு இனக் குழுக்களும் யுத்தச் செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதனால் வாழ்க்கை நிலைமைகளும் நலன்புரி சேவைகளும அடியுண்டு போய், நசுங்குண்டு கிடப்பதோடு மட்டுமன்றி, அவர்கள் பல்லாயிரக் கணக்கில் இறந்தும் காயமடைந்தும் போயுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி பிரமாண்டமான மனித நஷ்டஈட்டின் சுமையில் உயிர்வாழ்ந்து கொண்டுள்ளனர். பெரும்பான்மையான மக்கள் உயிர்வாழ்வது தினசரி வருமானமாக ரூபா.100 க்கும் குறைவான வருமானம் பேணும் வறுமையில் தலைமூழ்கிக் கொண்டாகும். இளைஞர்கள் யுத்தத்தின் தோட்டாக்களாக மாறுவதைத் தவிர வேறு எதிர்காலம் இந்த சமூக அமைப்பினுள் கிடையாது. பெரும் வர்த்தகர்களுக்கு கிராம்ப் புறங்க்ளைத் திறந்து விடுவதன் மூலம் விவசாயிகள் தமது வாழ்க்கை வழி நாசமாகிப் போகும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ஆளும் கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டுள்ள பழைய இடதுசாரிக் கட்சிகள்(3) ஆட்சியாளர்களின் சகல பிற்போக்கு சட்டங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும், வாழ்க்கை உரிமைகளுக்கும் தாக்குதல் தொடுப்பதற்கும் பங்காளிகளாக நின்று கொண்டுள்ளனர். கருத்துக் கணிப்புக்கு ஆதரவளிப்பதன் மூலம் அவர்கள் செய்வது, ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் நிறைந்த ஆட்சிக்கு வழி திறக்கும் தாக்குதலைப் பலப்படுத்துவதேயாகும். அவர்கள் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் விதிக்கும்படி கேட்கின்றனர். சமீபத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

தம்மை சோசலிஸ்டுகள் எனக் கூறிக் கொண்டு சில காலம் தீவிரவாத முகமூடி அணிந்து கொண்ட சிங்கள இனவாத முன்னணியினர்(4) இப்போது இந்த அரசியல் நெருக்கடியின் மத்தியில் ஆளும் கட்சியுடனும் எதிர்க் கட்சியுடனும் பெரும் வர்த்தகர்கள், பொலிசாருடனும் இரகசியமாகவும் வெளிவெளியாகவும் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் இந்த அமைப்புக்கு ஆளும் கட்சிகளுடன் கூடி தொழிற்பட்ட, பாசிச தாக்குதல்கள் நடாத்திய இத்தகைய பிற்போக்கு வரலாறு இருந்தது. இக்கட்சி, பெரும் முதலாளி வர்க்கத்துக்கு மீண்டும் சேவையாற்ற தாம் தயாராகி உள்ளதை காட்டிக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு யுத்தத்தை உக்கிரமாக்குவதற்கு ஆதரவு காட்டியுள்ளனர். இப்போது இந்த அமைப்பு ஏனைய தீவிரவாத சிங்கள அமைப்புக்களுடன் சேர்ந்து கருத்துக் கணிப்பை இனவாதத்தை தூண்டிவிடுவதற்கான ஒரு மேடையாக்கிக் கொண்டுள்ளனர்.

பெரிதும் கடைகெட்ட நடவடிக்கையில் இறங்கியிருப்போர் பப்லோவாத குழுக்கள் உட்பட்ட மாஜி.தீவிரவாதிகள் ஆவர். இவர்களது முக்கிய கட்சி(5) ஆளும் கட்சியுடன் அணிதிரண்டு கருத்துக் கணிப்பை, பொதுமக்களின் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு ஊடாக "இடதுசாரி சமாதான அரசாங்கத்துக்கு" வழியமைக்க தருணமாகும் எனக் கூறிக் கொள்கின்றனர். கடந்த காலத்தில் பெரும் வர்த்தகர்களின் கட்சிகள் இரண்டுக்கும் முண்டு கொடுத்த வரலாற்றைக் கொண்ட இக்கட்சி கருத்துக் கணிப்பு யோசனைக்கு 'ஆம்' என வாக்களித்து அரசாங்கத்துடன் பொதுமக்களைப் பிணைத்துப் போட தோள்கொடுத்துக் கொண்டுள்ளனர். இதிலிருந்து பிரிந்த ஏனைய குழு(6) முக்கிய முதலாளித்துவ எதிர்க் கட்சியுடன் சேர்ந்து கொண்டுள்ளது. இந்தக் குழுக்கள் இரண்டும் இரு தரப்பில் இருந்து ஆளும் வர்க்கத்துக்கு ஜனநாயக சோடனை போடுவதன் மூலம் தொழிலாளர்களை பொறியில் மாட்டி வைக்க தொழிற்படுகின்றனர். இந்தச் சகல தீவிரவாத அமைப்புகளும் 1994ல் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர முண்டு கொடுத்தவை. இவை படுகொடூரமான யுத்தத்துக்கும் பொதுமக்கள் மீது தொடுக்கப்படும் சகல தாக்குதல்களுக்கும் பொறுப்புச் சொல்லியாக வேண்டும். ஆரம்பம் முதலே அரசாங்கத்தின் தாக்குதல்களையிட்டு எச்சரிக்கை செய்ததோடு சுயாதீனமான தொழிலாளர் வர்க்க பதிலீட்டிற்காக போராடுமாறு கூறியது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

இன்றைய கடும் அரசியல் நெருக்கடியினுள் கையாலாகாத்தனமான முறையில் பிற்போக்கு ஆளும் வர்க்கமும், அவர்களின் எடுபிடிகளும் தமது தீர்வுகளைத் திணிக்க இடமளித்து, தொழிலாளர் வர்க்கம் ஒரு புறத்தில் ஒதுங்கிக் கொண்டிருக்க முடியாது. இந்தப் பிற்போக்காளர்களின் தீர்வு தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் உயிராபத்தானது. தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான முறையில் தமது தீர்வுகளைக் காண ஒரு பாதை இருக்க வேண்டும். கருத்துக் கணிப்பு அதிகாரம் குவிந்த ஆட்சி முறைக்கு மாறிச் செல்லும் ஒரு தோற்றப்பாடு மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சி கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு "இல்லை" என குறிப்பிட வேண்டும் என உழைக்கும் மக்களுக்கு கூறுகின்றது. தொழிலாளர் வர்க்கம் தமிழ், சிங்களம் பேசும் மக்களை அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுதிரட்ட தொழிற்பட வேண்டும். இந்த முன்நோக்கின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கம் சகல தீர்க்கப்படாத ஜனநாயக பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு உழைக்கும் மக்களின் அப்பட்டமானதும் நேரடியானதுமான வாக்கின் மூலம் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் அரசியலமைப்பு நிர்ணய சபையை கூட்ட முன்நிற்க வேண்டும் என நாம் கூறுகின்றோம். இனவாரி, மதவாரி பாகுபாடுகளை ஒழித்தல், அரச மதமாக பெளத்த மதத்தை கொண்டிருப்பதையும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டுள்ள அரச சிறப்புரிமை நிலைமைகளையும் ஒழித்தல், அடக்குமுறைச் சட்டங்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகளை ஊர்ஜிதம் செய்வது அத்தகைய ஒரு அரசியலமைப்பு மூலம் இடம்பெறும்.

அரசாங்கம் சைகை காட்டியுள்ள அரசியலமைப்பு நிர்ணய சபை என்பது மீண்டும் ஒரு தடவை மக்களின் முதுகுகளுக்கு புறத்தே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நிழலை பலப்படுத்துவதாகும்.

யுத்தத்துக்கு ஒரு முற்போக்கு தீர்வு வழங்கி, சமாதானத்தை உதயமாகச் செய்வது என்பது யுத்தத்தை சிருஷ்டித்த ஆளும்வர்க்கத்தினால் அல்லாது ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவை அணிதிரட்டிக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தினாலேயே முடியும். வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் முழுமனே வாபஸ்பெறவும் யுத்தத்துக்கு ஒரு ஆளோ அல்லது ஒரு சதமோ கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டின் பேரிலும் சோசலிச சமத்துவக் கட்சி நின்றுவருகின்றது. ஏகாதிபத்தியவாதிகளின் பக்கபலத்துடன் தீர்வுகாண பார்த்து நிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத பிளவுமிக்க வேலைத்திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம்.

சிங்களம், தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்தின் இத்தகைய ஒரு ஐக்கியத்தின் மூலம் பிரமாண்டமான பலம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதன் மூலம் இலாபத்தை எதிர்பார்த்து செயற்படும் பெரும் வர்த்தகர்களின் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடவும் அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தின் -சிறப்பாக இந்தியத் துணைக்கண்ட தொழிலாளர்களின் ஆதரவுடன் உழைக்கும் மக்களின் அவசியங்களுக்கு ஏற்ற முறையில் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு முறையை ஆரம்பிக்கப் போராடவும் சந்தர்ப்பம் கிட்டும். இது உயிர்ப் பிடிப்பான முறையில் சோசலிச சமத்துவக் கட்சியை இந்தியத் துணைக் கண்டத்தில்சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாக இலங்கை-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்கும் முன்நோக்கை முன்வைக்கின்றது.

முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் அவசியங்களுக்காக ட்ரொட்ஸ்கிச தலைமையின்(7) கீழ் போராடுவதற்கு சுயாதீனமாக தலைமை தாங்கும் வரலாறு 1940பதுகளிலும் 1950பதுகளிலும் இலங்கை தொழிலாளர் வர்க்கத்துக்கு இருந்து வந்தது. பின்னர் குழிபறிந்து போன இத்தலைமை 1964ல் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து, தொழிலாளர்வர்க்க ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை காட்டிக் கொடுத்தது. ஆளும் வர்க்கம் சுதந்திரமாக தாக்குதல் தொடுக்க வாய்ப்பு கிடைத்தது இந்தத் துரோகத்தினாலேயேயாகும். இந்த துரோகங்களை தாண்டி தொழிலாளர் வர்க்கம் தமது வரலாற்று பாரம்பரியங்களுக்கு மீளப் புத்துயிரூட்ட வேண்டும்.

சோசலிச சமத்துவ கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பகுதியாகும். அது இந்த சுயாதீனமான தொழிலாளர் வர்க்க வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆளுமை நிறைந்த மார்க்சிச குரலான உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) மூலம் சோசலிச சமத்துவக் கட்சி அனைத்துலக வாத வழிமுறைகளுக்கு போராட ஒன்றிணைந்து நிற்கின்றது. இப்போராட்டம் மார்க்சிச கலாச்சாரத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கச் செய்வதாகும். இந்த முன்நோக்குடன் இணைந்து கொள்ளும்படி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகளை வேண்டுகின்றோம்.

குறிப்புகள்:

1. இன்றைய முக்கிய எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 1991ல் ஐ.தே.க. ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச தமக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை தடுப்பதற்காக பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

2 .ஆளும் கட்சி பொதுஜன முன்னணி கூட்டரசாங்கம். இதனது பெரும் பங்காளி ஜனாதிபதி குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இது லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CPSL) இன்னும் பல தமிழ் கட்சிகள், மக்கள் ஐக்கிய முன்னணி (MEP).

3. லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸட் கட்சி

4. ஜனதா விமுக்தி பெரமுன (JVP) 1960பதுகளில் சிங்கள பேரினவாதத்தினதும் மாஓவாதத்தினதும் கலவையாக அமைக்கப்பட்டது. 1980பதுகளின் கடைப்பகுதியில் இது இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு சமாதானத் தீர்வை திணிக்க முயற்சித்த இந்திய படைகளை - இந்திய- இலங்கை உடன்படிக்கையை எதிர்த்தது. இதனை எதிர்த்த தொழிலாளர், தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை படுகொலை செய்தது. ஜே.வி.பி. 1994ல் பாராளுமன்றவாத அரசியலினுள் நுழைந்தது.

5. நவசமசமாஜக் கட்சி (NSSP)

6. ஐக்கிய சோசலிசக் கட்சி -மாஜி. ந.ச.ச.க. தலைவர் வாசுதேவ நாணயக்காரவுடன் நவசமசமாஜக் கட்சியில் இருந்து பிளவுபட்டது.