World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைReferendum on constitution postponed Big business pushes for national unity government in Sri Lanka அரசியலமைப்பு மீதான சர்வஜனவாக்கெடுப்பு ஒத்திவைப்பு பெரு வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு நெருக்குவாரம் By K. Ratnayake இலங்கையின் ஆழமான அரசியல் நெருக்கடியின் மற்றொரு திருப்பமாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகஸ்டு 21ம் திகதி இடம்பெற இருந்த அரசியலமைப்புச் சட்டம் மீதான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை கடந்த செவ்வாய்க் கிழமை ஒத்திவைத்தார். இம்முடிவு கொழும்பு தொடர்பு சாதனங்களாலும் எதிர்க் கட்சிகளாலும் "மக்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக" கொண்டாடப்பட்டது. இந்நடவடிக்கை ஒரு பக்கச் சார்பாக அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும் குமாரதுங்கவின் திட்டங்களை ஒத்திவைக்கச் செய்துள்ளதேயன்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியல்ல. அத்தோடு பெரு வர்த்தக நிறுவனங்கள் கோரி வந்துள்ளபடி ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கதவுகளையும் திறந்துவிட்டுள்ளது. இன்றைய அரசியல் ஸ்தம்பித நிலைக்கான உடனடி மூலகாரணி பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கும் குமாரதுங்கவின் ஜூலை தீர்மானத்தில் தங்கியுள்ளது. இது அவரது சிறுபான்மை அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தவிர்க்கும் ஒரு துணிச்சலான முயற்சியாக விளங்கியது. அதே சமயம் அவள் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டம் அவசியமா இல்லையா என வாக்காளர்களிடம் கோரும் ஒரு தெளிவற்ற கருத்துக் கணிப்பை நடாத்தப் போவதாகவும் அறிவித்தார். உத்தேச அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் பற்றி அல்லது ஜனாதிபதி "ஆம்" என்ற வாக்கினை எவ்வாறு பயன்படுத்த கோருகின்றார் என்பது தொடர்பாகத் தன்னும் எதுவிதமான விபரங்களும் வெளியிடப்படவில்லை. இன்றைய இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்துக்கான மாற்றமும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதோடு அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும் வேண்டும். குமாரதுங்க ஒரு பொனபாட்டிச ஆட்சி வடிவங்களை அதிகரித்த அளவில் கொண்ட ஆட்சி முறையை சட்டரீதியானதாக்கும் பொருட்டு சிலவேளை ஒரு மோசடி நிறைந்த அரசியலமைப்பு நிர்ணய சபையைக் கூட்டுவதன் மூலம் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பையும் தாண்டிச் செல்வதை உள் நோக்கமாகக் கொண்டு இருந்திருக்கலாம். எவ்வாறெனினும் இந்நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் (UNP) ஏனைய எதிர்க் கட்சிகளுடனுமான மோதுதல்களை ஆழமாக்கியுள்ளது. ஜூலை 19ம் திகதி அரசாங்கம் ஐ.தே.க. தலைமையிலான எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பை தடை செய்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நசுக்க பொலிசாரை அணிதிரட்டியபோது எதிர்ப்பு பரந்துபட்டது. இதன் பெறுபேறாக இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதோடு சுமார் 100 பேர் காயமடைந்தனர். அதிகரித்த அளவிலான அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு முகம் கொடுத்த நிலையில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி கருத்துக்கணிப்பை கைவிட வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய அரசாங்கம் எனப்படுவதை அமைக்க தொழிற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தின. கடந்த வாரம் இலங்கை வர்த்தக கழகத்தின் (Chamber of Commerce) ஒரு அவசரக் கூட்டத்தின் பின்னர் அதன் தலைவர் சந்திரா ஜயரத்ன ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இன்று உடன்பாடு கொண்ட அரசியல் அவசியம். அது கடந்த காலப் பகுதியில் நாம் ஒரு தேசம் என்ற முறையில் ஏற்படுத்திக் கொண்ட ஆழமான வடுக்களை சுகப்படுத்த முடியும்" என்றார். குமாரதுங்க செவ்வாய்க் கிழமை இந்த அறிவித்தலை விடுப்பதற்கு முன்னதாக பங்குமுதற் சந்தை விலைகள் 416 புள்ளிகளில் இருந்து 411 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டதோடு மிலங்கா விலைச் சுட்டெண்கள் (Blue chip stock index) 618ல் இருந்து 604 ஆக வீழ்ச்சி கண்டது. ஆளும் பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் இடையே ஒரு கூட்டரசாங்கத்தை ஏற்படுத்த பெரும் நிறுவனங்கள் கொடுத்து வந்த நெருக்குவாரம், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) நாட்டின் முக்கியமான சர்வதேச விமான நிலையத்தின் மீதும் நாட்டின் முக்கிய விமானப்படைத் தளத்தின் மீதும் நடாத்திய தாக்குதலின் பின்னர் உக்கிரம் கண்டுள்ளது. யூலை 24ம் திகதி தமிழீழ விடுதலைப் போராளிகளின் ஒரு குழுவினர் இவற்றைச் சுற்றிப் போடப்பட்டிருந்த கடும் பாதுகாப்புகளையும் தாண்டி, ஆறு யுத்த விமானங்களையும் இரண்டு இராணுவ ஹெலிகொப்டர்களையும் அத்தோடு இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான வாணிப விமானங்களில் அரைவாசியையும் அழித்தொழித்தனர். இந்தத் தாக்குதல் இராணுவத்தின் சிறிய விமானப் படைக்கு மட்டுமன்றி அரசாங்கத்தின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்துக்கும் அத்தோடு மொத்தத்தில் முழுப் பொருளாதாரத்துக்குமே ஒரு பேரடியாக விளங்கியது. சண்டே டைம்ஸ் பத்திரிகை "இருண்ட காலம்" என்ற தலைப்பில் எழுதிய ஆசிரியத் தலையங்கத்தில் கூறியதாவது: "உல்லாசப் பயணக் கைத்தொழில் கூட்டாக குழம்பிப் போயுள்ளது. தலைமைக் கைத்தொழில்கள் ஏதோ ஒரு வகையான ஆறுதலுக்காக ஒருவரின் தோழில் மற்றவர் முகம் புதைத்து தேம்பி அழுகின்றன" எனத் தெரிவித்தது. மேலும் லண்டனை தளமாகக் கொண்ட லொயிட்ஸ் இன்சூரன்ஸ் கட்டண நிறுவனங்கள் இலங்கையை "ஒரு யுத்த ஆபத்தான நாடு" எனப் பிரகடனம் செய்ய எடுத்த தீர்மானம் காப்புறுதி கட்டணங்களை அதிகரிக்கச் செய்வதோடு ஏற்றுமதிகளையும் ஆபத்துக்குள்ளாக்கும். இந்த அதிகரித்த செலவீனங்கள் இட்டுநிரப்பப்படாது போனால் இலங்கையில் இருந்து இறக்குமதி மூலம் கிடைக்கும் தனது கம்பனியின் 100 மில்லியன் டாலர்கள் இல்லாது போகும் என ஒரு அமெரிக்க வர்த்தகர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியான நடீம் உல் ஹக் நிதியத்தின் அவசர கடன் வசதிகள் மீளாய்வுக்கு உள்ளாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். "நாம் முடிந்த மட்டும் பொருளாதாரங்களுக்கு ஒத்துப்போக பெரிதும் முயற்சிப்போம்" என்றார். "ஆனால் இரண்டு காரணிகள் இடம்பெற்றுவிட்டன -அரசியல் நிகழ்வுகளும் விமான நிலைய தாக்குதலும்- ஆதலால் நாம் இவற்றின் அர்த்தம் என்ன என்பதை நோக்க வேண்டியுள்ளது" என்றுள்ளார். ரொயிட்டரினால் மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒரு பெயர் குறிப்பிடப்படாத இராஜதந்திரி நிலைமையை அப்பட்டமாகத் தொகுத்துக் கூறியுள்ளார். அவர் கூறுவதாவது: "இவை பற்றிப் பேச அரசியல் தலைமை அடியோடு கிடையாது. பொருளாதாரம் எங்கும் செல்வதாக இல்லை. சமூக துணி கிளியுண்டு போய்க் கிடக்கிறது. அவர்கள் எங்கே செல்கிறார்கள்?" கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ரத்துச் செய்யும்படி குமாரதுங்வை வேண்டும் நெருக்குவாரம் கடந்த வாரம் அதிகரித்தது. அத்தோடு பெரும் வர்த்தக நிறுவனங்களும் உயர் பெளத்த குருமாரும் அனைத்து தனியார் தொடர்புச் சாதனங்களும் அவரை எதிர்த்தன. அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தினுள்ளும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பாக பிளவுக்கான அறிகுறிகளும் தென்பட்டுள்ளன. இத்தகைய ஒரு நிலைமையில் குமாரதுங்கவுக்கு கருத்துக் கணிப்பை ஒத்திவைத்து எதிர்க் கட்சியினருடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதைத் தவிர வேறு மாற்றுவழி இருக்கவில்லை. "இன்றைய நிலைமையில் கருத்துக் கணிப்புடன் தொடர்ந்து செல்வதானது அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு வழி சமைப்பதற்கு மாறாக பல்வேறு மட்டங்களிலும் மோதுதல்களை உண்டுபன்னும்" என்பதை அவர் ஒப்புக் கொண்டார். செப்டம்பர் 7ம் திகதி பாராளுமன்றம் மீளக் கூட்டப்பட உள்ளமையால் ஜனாதிபதி கருத்துக் கணிப்பை ஒத்திவைத்தமை அதை பலம் வாய்ந்த முறையில் கைவிட்டு விட்டமையாகும். எதிர்க் கட்சியினருடன் ஒரு கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளாமல் அவரது அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இன்னமும் ஒரு தோல்விக்கு முகம் கொடுத்துக் கொண்டுள்ளது. தேசிய ஐக்கிய அரசாங்கம் யூ.என்.பி.யின் உடனடிப் பிரதிபலிப்புக்கள் இதற்கு எதிராக எதிர் நடவடிக்கைகளில் இறங்குவதாக விளங்கியது. புதன் கிழமை ரீ.என்.எல் (TNL) தனியார் தொலைக் காட்சியில் பேசிய யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க: "மக்கள், ஜனாதிபதி மீதும் பாராளுமன்றம் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிராத ஒரு நிலைமையில் அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும். பாராளுமன்றத்தில் நம்பிக்கையைக் கொண்டுள்ள எதிர்க் கட்சி ஒரு அரசாங்கத்தை அமைக்க இடமளிக்கும்" எனக் கூறினார். எதிர்க் கட்சித் தலைவர்கள் அதே நாளில் கூடி, ஜனாதிபதி உடனடியாகப் பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டும் எனவும் கருத்துக் கணிப்பை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரினர். இந்த உக்கிரமான பகிரங்க நடிப்புக்களுக்கு மத்தியிலும் ஒரு கூட்டரசாங்கத்தை அமைப்பதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள், பொதுஜன முன்னணிக்கும் எதிர்க் கட்சிகளுக்கு இடையேயும் இடம்பெற்றன. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னரே இதற்கான பேச்சுவார்தைதகள் பெரிதும் முன்னேற்றம் கண்டிருந்ததோடு விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்காக வலியுறுத்தி வந்ததே இது இழுபட்டுச் செல்லக் காரணமாகியதாக தோன்றுகின்றது. ஒரு அறிக்கையின்படி, பிரபல யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினரான ருக்மன் சேனநாயக்க குமாரதுங்க கருத்துக் கணிப்புக்காக பாராளுமன்றத்தை செவ்வாய்க் கிழமை ஒத்திவைத்ததுக்கு முன்பே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. அவர் யூ.என்.பி. தலைவருக்கு, பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க பிரதி பிரதமர் பதவியையும் அத்தோடு 12 அமைச்சர் பதவிகளையும் யூ.என்.பி.க்கு வழங்க தயாராக உள்ளதாக அறிவித்து இருந்தார். ஜனாதிபதியின் இந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்புக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாக பிரதமர் நான்கு யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்ததாக த ஐலண்ட் (The Island) பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. வியாழக்கிழமை 680 முன்னணி வர்த்தக பிரமுகர்களைக் கொண்ட ஒரு கலந்துரையாடலில் உரை நிகழ்த்திய குமாரதுங்க அரசாங்கம் கொன்சர்வேட்டிவ் யூ.என்.பி.யுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளைக் காட்டிலும் சிங்கள தீவிரவாதிகளான ஜே.வி.பி.யுடன் (JVP) நடாத்திய பேச்சுவார்த்தைகளில் பெரும் வெற்றி கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்: "நாம் யூ.என்.பி.யின் மூன்று குழுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தினோம். ஆனால் நாம் ஒரு தீர்வுக்கு சமீபமாக சென்று கொண்டு இருக்கவில்லை எனக் கூறுவதில் நான் மனவருத்தம் அடைகின்றேன். யூ.என்.பி. ஒரு பொதுவானதும் தெளிவானதுமான வேலைத்திட்டத்தையிட்டு அக்கறை காட்டுவதாக இல்லை... ஆதலால் தயவு செய்து அவர்கள் தேசத்தை முதலாவதாகக் கொள்ளவும் நாட்டினதும் பொருளாதாரத்தினதும் நலனுக்காக இந்த முட்டுச் சந்தில் இருந்து வெளியேறச் செய்யவும் செல்வாக்குச் செலுத்தவும்" வேண்டும் என்றார். ஆளும் பொதுஜன முன்னணியின் முக்கிய பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் குமாரதுங்கவையும் யூ.என்.பி.யுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரும்படி செய்யும் கொடுக்கல் வாங்கல்கள் உக்கிரம் கண்டுள்ளன. 10 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜே.வி.பி.யுடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவது சாத்தியமாக இருந்தாலும் அத்தகைய ஒரு கூட்டரசாங்கம் பெரும் வர்த்தகர்களின் முக்கிய பகுதியினரின் பிரதான கோரிக்க்ைகளில் ஒன்றான யுத்தத்தை முடிவுக்கு கொணர தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் கோரிக்கையை இட்டு நிரப்ப இலாயக்கற்றது. ஏனெனில் ஜே.வி.பி. பேச்சுவார்த்தைகள் நடாத்தும் திசையில் செல்வதை எதிர்க்கின்றது. ஜே.வி.பி. ஏனைய சிங்கள சோவினிச கட்சிகளைப் போலவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் உக்கிரமாக்கப்பட வேண்டும் எனக் கோரிக் கொண்டுள்ளது. கடந்த வாரம் ஜே.வி.பி. பொதுஜன முன்னணிக்கு ஒரு வருடகால நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க முன்வந்தது. அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அழிக்க வேண்டும் அரசாங்கத்தின் ஒரு தொகை தொழிற்பாடுகளை நிர்வகிக்க சுதந்திர ஆணைக்குழுக்களை அமைத்தல் வேண்டும் என்பனவும் இந்நிபந்தனைகளுள் அடங்கும். இதில் பொலிஸ் தேர்தல் திணைக்களங்களும் அடங்கும். அத்தோடு அடுத்த தேர்தலை ஒரு காபந்து அரசாங்கத்தின் கீழ் நடாத்த வேண்டும். குமாரதுங்க ஜே.வி.பி.யின் பிரேரணைகள் பலவற்றுக்கும் இணக்கம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் வெகுஜனத் தொடர்புசாதனங்களை கண்காணிக ஒரு ஆணைக்குழு அமைத்தல், அமைச்சரவையின் எண்ணிக்கையை 21 ஆகக் குறைத்தல் ஆகிய பிரேரணையைத் தவிர ஏனையவற்றுக்கு இணக்கம் தெரிவித்தார். குமாரதுங்க ஜே.வி.பி.க்கு கதவுகளைத் திறந்து வைத்த அதே சமயம் தான் யூ.என்.பி.யுடன் கொடுக்கல் வாங்கல் நடாத்த விரும்புவதாகவும் அடுத்த வாரம் யூ.என்.பி. தலைவர் விக்கிரமசிங்கவை சந்திக்க தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். ஜே.வி.பி.யுடனான பேச்சுவார்த்தை, யூ.என்.பி.க்கும் ஜே.வி.பி.க்கும் இடையே ஒரு பிளவை உண்டுபண்ணுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்குவதற்கான நிபந்தனைகளை பற்றி பேச்சுவார்த்தை நடக்கையிலேயே இது இடம்பெற்றது. அரசாங்கம் யூ.என்.பி.யுடனோ அல்லது ஜே.வி.பி.யுடனோ ஒரு ஒழுங்கைச் செய்து கொள்ளாது போகுமிடத்து அது செப்டம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் தோல்விக்கு முகம் கொடுப்பதோடு குமாரதுங்க ஒரு அரசியல் குற்றவியல் பிரேரணைக்கும் முகம் கொடுக்க வேண்டி நேரிடும். எவ்வாறெனினும் யூ.என்.பி.யுடனும் ஏனைய எதிர்க் கட்சிகளுடனும் அமைக்கப்படும் எந்த ஒரு நிர்வாகமும் இன்றைய பொதுஜன முன்னணி ஆட்சியைப் போலவே ஒரு ஈடாட்டம் கொண்டதாக மிளிரும். எனவேதான் ஆளும் வர்க்கம் அதனது நிகழ்ச்சி நிரலை அமுல் செய்யும் பொருட்டு ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்தி வருகின்றது. தேசிய தொலைக் காட்சியில் புதன்கிழமை தோன்றிய இலங்கை வர்த்தக கழக தலைவர் (Chamber of commerce) ஜயரத்ன ஒரு ஆத்திரமூட்டும் அறிக்கையை வெளியிட்டார்: "கட்சிகள் ஒன்றிணைந்து, யுத்தத்தை நிறுத்தி இனக்குழு பிரச்சினைக்கு தீர்வு காணாது போனால் மக்களுக்கும் தனியார் துறைக்கும் எதிர்காலம் கிடையாது" என்றார். இது 18 வருடகால உள்நாட்டு யுத்தத்தை ஆதரித்து வந்த வேளையில் பெரு வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்த அளவில் பொருளாதாரத்தின் மீதும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் இலங்கையின் வல்லமையையிட்டும் இவை அதிர்ச்சி கண்டுள்ளன. கடந்த ஆண்டில் பிரமாண்டமான இராணுவச் செலவீனமும் எண்ணெய் விலை உயர்வும் செலாவணி பற்றாக்குறை நெருக்கடியை உண்டுபண்ணின. உடனடிக் கடன்களுக்கான விலையாக சர்வதேச நாணய நிதியம் (IMF) சிக்கன நடவடிக்கைகளைத் திணித்தது. இது அரசாங்கத் துறையின் தனியார்மயமாக்கம் மறு சீரமைப்பு என்பவற்றை உள்ளடக்கியது. வறுமை எதிர்ப்பு வேலைத்திட்ட நிவாரணங்கள் வெட்டப்பட்டதோடு தொழிலாளர்களின் விடுமுறை எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றது. தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் வேலைநீக்கவும் வழிசெய்யும் விதத்தில் நிர்வாகத்துக்கு பெரும் அதிகாரங்கள் வழங்க தொழிற் சட்ட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றது. பெரு வர்த்தக நிறுவனங்கள், அரசாங்கம் கடன் வசதிகளைப் பெறவும் முதலீடுகளைக் கவரவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியம் என்பதை நன்கு அறியும். சர்வதேச நாணய நிதியம் ஒரு புறத்தில் ஏற்கனவே கடன்களைப் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளது; மறுபுறத்தில் இலங்கைப் பொருளாதாரங்களின் வீழ்ச்சியினால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. இதனால் இந்த விவகாரம் பெரிதும் அவசரமான ஒன்றாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை அமுல் செய்ய எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் -இது கொழும்பு துறைமுகத்திலும் அரசுடமை வங்கிகளிலும் பெருமளவு வேலையிழப்பை உள்ளடக்கி உள்ளதால் பெருமளவு மக்கள் குமுறலை உண்டுபண்ணும் சாத்தியம் உள்ளது. பொதுஜன முன்னணி அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தில் தொழிலாளர்களை பெருமளவில் வேலை நீக்கம் செய்யவும் பொதுஜன பாதுகாப்பு சட்டத்தை பாவித்து எதிர்ப்புக்களை நசுக்கவும் ஏற்கனவே முயன்று கொண்டுள்ளது. ஆனால் இன்றைய அரசியல் நெருக்கடி காரணமாக இதனை தற்காலிகமாக ஒத்திப் போடத் தள்ளப்பட்டுள்ளது. பெரு வர்த்தக நிறுவனங்களில் ஒரு பகுதியினர் யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே ஒரு பொதுக் கூட்டை விரும்புகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு மட்டுமல்லாது ச.நா.நி. நிகழ்ச்சித் திட்டத்தை அமுல் செய்யவும் உழைக்கும் மக்களிடையே வெடிக்கும் எந்த ஒரு எதிர்ப்பையும் நசுக்கவும் அவசியம் என இவர்கள் காண்கின்றனர். |